Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                               year B  
                                                        பொதுக்காலம் 15ம் - ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு.

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 7: 12-15


அந்நாள்களில்

பெத்தேலின் குருவாகிய அமட்சியா ஆமோசைப் பார்த்து, "காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்" என்று சொன்னான்.

ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: "நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டுபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, "என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு"என்று அனுப்பினார்."

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 85: 8ab,9. 10-11. 12-13 (பல்லவி: 7) Mp3
=================================================================================

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.
8ab
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி

10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-14

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக்கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார்.

இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந் தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச் செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத் திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.

கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்துபாட வேண்டுமென அவர் விரும்பினார். நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள். அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் விளங்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-10

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார்.

இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச் செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத் திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எபே 1: 18-19 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு பன்னிருவரையும் இருவர் இருவராக அனுப்பினார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13

அக்காலத்தில்

இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார்.

அவர்களுக்குத் தீய ஆவிகள்மீது அதிகாரமும் அளித்தார். மேலும், "பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

மேலும் அவர், "நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்" என்று அவர்களுக்குக் கூறினார்.

அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================்சத்திற்கு

I ஆமோஸ் 7: 12-15
II எபேசியர் 1: 3-14
II மாற்கு 6: 7-13

அனுப்பப்படுதலும் அறிவித்தலும்

நிகழ்வு

அன்று இறையழைத்தல் ஞாயிறு என்பதால், அந்தப் பங்கின் பங்குப்பணியாளர், இறைப்பணிக்காக மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கும்மாறு மறையுரையில் குறிப்பிட்டார். திருப்பலி முடிந்ததும், பங்குப் பணியாளரைச் சந்திக்க அந்தப் பங்கில் இருந்த பணக்காரர் ஒருவர் வந்தார். அவர் பங்குப் பணியாளரிடம், "இன்று உங்களுடைய மறையுரையில் இறைப்பணிக்காக மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்குமாறு சொன்னீர்களே! இறைப்பணிக்காக மறைப்பணிக்காகப் பண உதவி அல்லது காசோலையை அனுப்பி வைத்தால் போதாதா! பிள்ளைகளை அனுப்பி வைக்க வேண்டுமா?" என்றார்.

பணக்காரர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பங்குப்பணியாளர், அவர் பேசி முடித்ததும் அவரிடம், "மறைப்பணிக்கு பண உதவியோ அல்லது காசோலையோ அனுப்பி வைத்தால் போதாதா... பிள்ளைகளை ஏன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்கின்றீர்கள். ஒன்றை உங்கள் மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்: கடவுள் தன்னுடைய பணி இம்மண்ணுலகில் நடைபெறக் காசோலையை அனுப்பி வைக்கவில்லை. தன் ஒரே மகனான இயேசுவை அனுப்பி வைத்தார். இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும், நான் ஏன் உங்கள் பிள்ளைகள் இறைப்பணிக்காக அனுப்பி வைக்கவேண்டும் என்று" என்றார். பணக்காரரோ எதுவும் பேசமுடியாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

இறைப்பணி செய்ய மக்கள் முன்வரவேண்டும் என்ற உண்மையை உணர்த்தும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளின் அழைப்பையும், அழைக்கப்பட்டவர்கள் எப்படிப் பணிசெய்தார்கள், நாம் எப்படிப் பணி செய்யவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

கடவுள் யாரையும் தன் பணிக்காக அழைக்கலாம்

இன்று எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், பணியாளர்களைத் தகுதி பார்த்துத் தேர்ந்தெடுக்கின்றது; ஆனால், கடவுளுடைய அழைப்பைப் பொறுத்தளவில் இது முற்றிலும் நேர் எதிராக இருக்கின்றது. இந்த உலகம் மடமை அல்லது "தகுதியில்லாதவர்கள், "வலுவற்றவர்கள்" என்று யாரையெல்லாம் கருதியதோ, அவர்களைக் கடவுள் தம் பணிக்கென அழைக்கின்றார் (1 கொரி 1: 27).

முதல்வாசகத்தில் ஆமோசின் அழைப்பையும், நற்செய்தியில் பன்னிரு திருத்தூதர்களின் அழைப்பையும் குறித்து வாசிக்கிறோம். இறைவாக்கினர் ஆமோஸ் காட்டு அத்திமரத் தோட்டக்காரர், ஆடுகளை ஓட்டிக்கொண்டு இருந்தவர். யூதா நாட்டைச் சார்ந்த அவரைக் கடவுள் வடநாட்டினருக்குத் தன்னுடைய வார்த்தையை அறிவிக்க அழைக்கின்றார். நற்செய்தியில், திருத்தூதர்களாக ஆண்டவர் இயேசு தேர்ந்தெடுத்த பன்னிருவரும் மிகுதியாகப் படித்தவர்கள் கிடையாது. பணக்காரர்களும் கிடையாது. அத்தகையோரை இயேசு தன் பணிக்காக அழைக்கின்றார்.

இதில் நாம் கவனிக்கவேண்டிய செய்தி என்னவெனில், கடவுள் தகுதியில்லாதவர்களைத் தன் பணிக்கென அழைத்தாலும், இறுதிவரைக்கும் அவர்களைத் தகுதியில்லாதவர்களாக வைத்திருக்கவில்லை என்பதுதான். தகுதியில்லாத பன்னிருவரைத் திருத்தூதர்களாகத் தேர்ந்தெடுத்த இயேசு, அவர்களுக்குத் தம் அதிகாரத்தைக் கொடுத்து, அவர்களைத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகின்றார். பழைய ஏற்பாட்டில் வரும் மோசே, இறைவாக்கினர் எசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகியோர் இதற்கு நல்ல சான்றுகள். கடவுள் தகுதியில்லாதவர்களைத் தம் பணிக்கென அழைத்து, அவர்களைத் தகுதியுள்ளவர்களாக மாற்றக் காரணம், இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் சொல்வது போன்று, கடவுள் அவர்களைத் தம் அன்பினால் முன்குறித்து வைத்துள்ளார் என்பதால். எனவே, தம் அன்பினால் முன்குறித்து வைத்தவர்களை அவர்கள் உலகப் பார்வைக்குத் தகுதியில்லாதவர்களாக இருந்தாலும், அழைக்கின்றார் என்பதால், அழைக்கப்பட்டவர்கள் சொல்லும் செய்தியைக் கேட்பது மிகவும் இன்றியமையாதது.

அனுப்பப்பட்டவர் வழியாகக் கிடைக்கும் ஆசியும் தண்டனையும்

ஆண்டவரால் அழைக்கப்பட்டவர் அறிவிக்கும் நற்செய்தியைக் கேட்பது மிகவும் இன்றியமையாதது என்று மேலே குறிப்பிட்டிருந்தோம். ஏனெனில், அழைக்கப்பட்டவர்கள் அறிவிக்கும் செய்தி, ஆண்டவருடைய செய்தியாக இருக்கின்றது. ஆதலால், ஒருவர் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர் அறிவிக்கும் நற்செய்திக்குச் செவிகொடுப்பதைப் பொறுத்தே அவருடைய உயர்வும் தாழ்வும் இருக்கின்றன என்று உறுதியாகச் சொல்லலாம்.

முதல்வாசகத்தில், ஆண்டவரால் அழைக்கப்பட்ட ஆமோஸ், வடநாட்டிச் சென்று ஆண்டவர் தன்னிடம் சொன்னது போன்று இறைவாக்கு உரைக்கின்றார். அவர் உரைத்த இரண்டு செய்திகள் மிகவும் முக்கியமானவை. ஒன்று, வேற்று தெய்வ வழிபாடு நடந்து கொண்டிருந்த பெத்தேல் அழிக்கப்படும் (ஆமோ 5: 5). இரண்டு வேற்று செய்த வழிபாட்டை ஊக்கப்படுத்திய எரொபவாம் கொல்லப்படுவான் (ஆமோ 2: 16). இந்த இரண்டு செய்திகளையும் ஆமோஸ் வடநாடான இஸ்ரயேலில் போய் அறிவிக்கின்றபொழுது, பெத்தேலில் இருந்த அமாட்சியா என்ற குரு, ஆமோஸ் அறிவித்த செய்தியைக் கேளாமல் அவரிடம், "காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்" என்கிறார்.

ஒருவேளை ஆமோஸ் அறிவித்த செய்தியைக் கேட்டு, மன்னனும் மக்களும் உண்மைக் கடவுளை வழிபட்டிருந்தால், அவர்கள்மீது அசீரியர்களின் படையெடுத்து நடக்காமலே இருந்திருக்கும்; ஆனால், அவர்கள் ஆமோஸ் அறிவித்த ஆண்டவரின் செய்தியைக் கேளாததால், அவர்கள்மீது அழிவு வந்தது. நற்செய்தியில் இயேசு பன்னிருவரிடம், எந்த ஊராவது உங்களுக்குச் செவிசாய்க்காமல் போனால், உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் என்கிறார். இப்பகுதியை மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கின்றபொழுது, சீடர்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குச் சோதோம், கொமொராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையைவிடக் கடுமையாக இருக்கும் (மத் 10: 15) என்று வாசிக்கின்றோம். இதன்மூலம் ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்கள் அறிவிக்கும் நற்செய்தியைக் கேட்பதைப் பொறுத்தே ஒருவரின் உயர்வும் தாழ்வும் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அழைக்கப்பட்டோர் கடவுளை நம்பிப் பணிசெய்யவேண்டும்

ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்கள் அறிவிக்கும் நற்செய்திக்கு செவிமடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்த நாம், ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்கள் எத்தகைய மனநிலையோடு பணிசெய்யவேண்டும் என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

இயேசு திருத்தூதர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றபொழுது, அவர்களிடம், "பயணத்திற்குக் கைத்தடி தவிர... எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்" என்கிறார். இயேசு திருத்தூதர்களிடம் இவ்வாறு சொல்வதில் ஒரு முக்கியமான செய்தி அடங்கியிருக்கின்றது. அது என்னவெனில், அவர்கள் அறிவிக்கின்ற நற்செய்திப் பணியானது கடவுளுடைய பணி. அதனால் அவர்கள் தங்களிடம் உள்ள பணம், பொருள் ஆகியவற்றில் நம்பிக்கை வைக்காமல், ஆண்டவரில் நம்பிக்கை வைத்துப் பணி செய்யவேண்டும். அனுப்பப்பட்டவர்கள் தங்கள் சொந்த ஆற்றலில், தங்களிடம் உள்ள பணம், பொருள் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்துப் பணிசெய்தால், அது தோல்வியில்தான் முடியும். அதே நேரத்தில் அவர்கள் ஆண்டவரில் நம்பிக்கை வைத்துப் பணிசெய்தால், புனித பவுல் சொல்வது போன்று எதையும் செய்துவிட முடியும் (பிலி 4: 13). மேலும் தோல்விகள் வந்தாலும், துவண்டு போகாமல் பணி செய்ய முடியும்.

ஆதலால், நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரால் அவரது பணியைச் செய்யச் சிறப்பாக அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணர்ந்து, அவரில் நம்பிக்கை வைத்து, இறைப்பணியைச் செய்ய முன்வருவோம்.

சிந்தனை

"பணம், புகழ், பதவி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாடுபடும் திருஅவைப் பணியாளர்கள் இறைவனின் உண்மையான பணியாளர்கள் அல்ல" என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகையால், நாம் பணத்தின்மீதும் படைத்தவரும், நம்மைத் தன் பணிக்காக அழைத்தவருமான ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவர் பணி செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 
 ஆண்டின் பொதுக்காலம் 15ம் ஞாயிறு

 ஆமோஸ் 7:1215
 எபேசியர் Ephesians 1:314
 மாற்கு 6:713

வியத்தகு மாற்றங்கள்

பழைய பொருள்கள் விற்கக்கூடிய கடை ஒன்றில் வயலின் ஒன்று நெடுநாள்களாகக் கிடந்தது. அதை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்பதற்காக கடை உரிமையாளர் அதன் விலையைக் குறைத்துக்கொண்டே வந்தார். அதை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. ஒரு கட்டத்தில் அதை யாராவது ஒருவருக்கு இலவசமாகக் கொடுத்துவிடவும் நினைத்தார். 'இதை வைத்து அடுப்புதான் எரிக்க முடியும்' என்று பலர் அதை வாங்குவதைத் தவிர்த்தனர். ஒருநாள் வயலின் இசைக்கலைஞர் ஒருவர் அவ்வழியே செல்ல நேரிட்டது. கடையில் ஓரமாகக் கிடந்த வயலின் அவருடைய பார்வையை ஈர்த்தது. 'இதை நான் பார்க்கலாமா?' எனக் கேட்ட அவர், அங்கிருந்த பழைய துணியால் அதை நன்றாகத் துடைத்து, அறுந்துபோன கம்பிகளை இழுத்துக் கட்டி, அந்த வயலினை மீட்டத் தொடங்குகின்றார். வயலின் இசை கேட்ட மக்கள் அப்படியே மெய்மறந்து நிற்கின்றனர். சிறிது நேரம் மீட்டிய அவர் அதை அங்கேயே வைத்துவிட்டுத் தன் வழியே தொடர்கின்றார். 'இந்த வயலின் எனக்கு வேண்டும்' என்று ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக் கொண்டு அதை வாங்க விரும்புகின்றனர். உரிமையாளரோ அதைத் தனக்கென வைத்துக்கொள்ள விரும்பினார்.

அடுப்பெரிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்று சொல்லப்பட்ட வயலின் வியத்தகு இசை எழுப்பும் இசைக்கருவியாக மாறியது எப்படி?
இசைக்கலைஞனின் தொடுதல் அதன் மதிப்பை மாற்றுகிறது.
இறைவனின் தொடுதல் மனிதரில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது எனச் சொல்கிறது இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய முதல் வாசகத்தை அதன் வரலாற்றுப் பின்னணியில் காண்போம். சாலமோனுக்குப் பிறகு ஒருங்கிணைந்து இஸ்ரயேல் பேரரசு, வடக்கே 'இஸ்ரேல்', தெற்கே 'யூதா' என்று இரண்டாக உடைகின்றது. எருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூதாவில் தாவீது அரசரின் தனிப்பெரும் வழிமரபினர் என்றும், உடன்படிக்கையின் பணியாளர்கள் என்றும் தன்னை அழைத்துக்கொண்ட அவருடைய மைந்தர்கள் ஆட்சி செலுத்துகின்றர். வடக்கே சமாரியாவைத் தலைநகரமாகக் கொண்டு தாவீது அரசரின் நேரடி வழிமரபில் வராதவர்கள் ஆட்சி செய்கின்றனர். வடக்கே இருந்த பல முதன்மையான வழிபாட்டுத் தலங்களில் பெத்தேலும் ஒன்று. குலமுதுவர் யாக்கோபின் காலத்திலிருந்து பெத்தேல் ஒரு வழிபாட்டுத் தலமாக இருந்த ுவந்தது.

வடக்கே நிலவிய உடன்படிக்கைப் பிறழ்வுகளையும், கடவுளின் திருச்சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளையும் கண்டிக்கவும், வடக்கே உள்ள அரசர்களையும் தலைவர்களையும் எச்சரிக்கவும் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் ஆமோஸை அனுப்புகின்றார். ஆமோஸ் தெற்கே உள்ள யூதாவைச் சார்ந்தவர். அவருடைய சமகாலத்தவரான ஓசேயா போல அன்று நிலவிய சமூக அநீதியையும் பிறழ்வுகளையும் கண்டிக்கின்றார் ஆமோஸ். தெற்கே இருந்த வந்த ஒருவன் நமக்கு அறிவுரை சொல்வதா என்று நினைக்கின்றனர் வடக்கே உள்ள தலைவர்கள்.

இந்தப் பின்புலத்தில் பெத்தேலின் தலைமைக்குருவான அமட்சியாவுக்கும் ஆண்டவராகிய கடவுளின் இறைவாக்கினரான ஆமோஸூக்கும் இடையே ஏற்படும் முரண்தான் இன்றைய முதல் வாசகம். பெத்தேலின் தலைமைக்குரு என்ற நிலையில் அமட்சியா அதிகாரம் பெற்றிருந்தவராகவும், வடக்கே உள்ள அரசர்களின் ஆலோசகராகவும் இருந்தார். அரச அலுவலர் என்ற அடிப்படையிலும் அதிகாரம் பெற்றிருந்தார். அரசரின் எண்ணங்களை நிறைவேற்றுவதும், அரசருடைய பெயரால் அவ்வழிபாட்டுத் தலத்தை நிர்வாகம் செய்வதும் அவருடைய பணியாக இருந்தது.

ஆனால், அமட்சியாவுடன் ஒப்பிடும் போது ஆமோஸ் ஆடு மேய்ப்பவர், தோட்டக்காரர். இறைவாக்கினர் பணி அல்லது இறைவாக்கினர் குடும்பப் பின்புலம் என்ற எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை. ஆனால், அவருடைய இறைவாக்கினர் அதிகாரத்தின் ஊற்றாக இருந்தது கடவுளின் அழைப்பு. ஆமோஸ் தன் நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என அரசரின் அதிகாரத்தின் பெயரால் ஆணையிடுகின்றார் அமட்சியா. ஆனால், ஆமோஸ் தன் அதிகாரம் தன்னுடையது அல்லது இறைவனுடையது எனத் துணிந்து நிற்கின்றார். மேலும், ஆமோஸ் இறைவாக்கினரின் பணியின் உண்மைத்தன்மையை விளக்குவதாகவும் இப்பகுதி உள்ளது. கடவுளின் குறுக்கீடு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரை அரசருக்குச் சவால்விடும் இறைவாக்கினராக மாற்றுகிறது. ஆற்றல் இல்லாத ஒருவரை ஆற்றல்படுத்துகின்றது.
ஆக, இறைவனின் தொடுதல் வியத்தகு மாற்றத்தை ஆமோஸ் வாழ்வில் ஏற்படுத்துகிறது.
இரண்டாம் வாசகம் எபேசியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற கடிதங்களைப் போல இக்கடிதம் வாழ்த்து மற்றும் முன்னுரையுடன் தொடங்குவதில்லை. இதன் ஆசிரியர், இறைவனை நோக்கி எழுப்பப்படும் புகழாஞ்சலி போல இக்கடிதத்தைத் தொடங்குகின்றார். நம்பிக்கையாளர்கள்மேல் 'கடவுள் பொழிந்துள்ள விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி' அனைத்தையும் அவர் அறிந்து ஏற்றுக்கொள்கின்றார்.
'தூயாராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்' எனச் சொல்கின்றார் ஆசிரியர். ஆக, நம்பிக்கையாளர்கள் தூய்மையாகவும் மாசற்றும் இருந்ததால் கடவுள் அவர்களைத் தேர்ந்துகொள்ளவில்லை. மாறாக, அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் தூய்மையான மற்றும் மாசற்ற நிலையில் அவர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களைத் தேர்ந்துகொள்கின்றார். இந்த நோக்கம் கிறிஸ்து வழியாக நிறைவேறுகிறது. கிறிஸ்துவே தன் இரத்தத்தால் அவர்களை மீட்டுத் தூய்மைப்படுத்துகின்றார். கிறிஸ்துவின் வழியாகக் கடவுளோடு ஒப்புரவான அவர்கள் மேன்மையான எதிர்காலத்தைப் பெறுகின்றனர்.
இரண்டாவதாக, கிறிஸ்து வழியாக அனைத்தும் ஒன்றுசேர்க்கப்பட வேண்டும் என்பது இறைவனின் திருவுளம் என எழுதுகின்றார். ஆக, நம்பிக்கையாளர்கள் வழியாக இறைவனின் திருவுளம் நிறைவேறுகிறது. இறைவனின் மீட்புத் திட்டத்தில் நம்பிக்கையாளர்கள் முதன்மையான பங்காற்றுகின்றனர்.

இறுதியாக, இந்த அழைப்பு அல்லது மேன்மையான நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றார் ஆசிரியர். வேற்று தெய்வங்களை வணங்கி, தாழ்வான வாழ்க்கை நிலையில் இருந்த மக்கள் இப்போது தூய ஆவியால் முத்திரையிடப்பட்டவர்களாக இருக்கின்றனர். 'முத்திரையிடப்படுதல்' என்பது முதன்மையாக தெரிவுசெய்யப்படுதலைக் குறிக்கிறது. அதாவது, அவர்கள் எல்லாரையும் போன்றவர்கள் அல்லது முகமற்றவர்கள் அல்லர். மாறாக, தங்களுக்கென ஒரு மேன்மையான அடையாளத்தைக் கொண்டிருந்தவர்கள். இந்த மேன்மை இறைவனின் அழைப்பால் வருகின்றது.

ஆக, கிறிஸ்துவின் ஒப்புரவுச் செயல் வழியாக புறவினத்து மக்களையும் தன்னோடு ஒப்புரவாக்கிக்கொள்கின்ற கடவுள், நம்பிக்கையாளர்களுக்கு முத்திரையிடப்பட்டவர்கள் என்ற மேன்மையை வழங்குகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம், திருத்தூதர்கள் வாழ்வில் நிகழ்ந்த வியத்தகு மாற்றத்தை நம் கண்முன் கொண்டுவருகின்றது. மாற்கு நற்செய்தியின் இப்பகுதி வரை இயேசுவே நற்செய்தியைப் போதித்துக்கொண்டும், பிணிகளை நீக்கிக்கொண்டும், பேய்களை ஓட்டிக்கொண்டும் இருந்தார். ஆனால், இதுமுதல் அவருடைய சீடர்கள் அப்பணிகளைச் செய்வர். கலிலேயப் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்துகொண்டும், வரி வாங்கிக்கொண்டும், அல்லது தீவிரவாதிகளாகவும் இருந்தவர்களை தான் செய்த அனைத்துப் பணிகளையும் செய்யுமாறு ஆற்றல்படுத்துகின்றார். கடவுளின் ஆற்றல் இவ்வுலகில் செயல்படுகிறது என்பதற்கு அடையாளமாக அவர்கள் பேய்களை ஓட்ட வேண்டும். தங்களுடைய வாழ்வாதாரங்களாக இருக்கின்ற அனைத்தையும் விலக்கிவைத்துவிட்டு இறைவனின் பராமரிப்பை மட்டும் நம்பி அவர்கள் பயணம் செய்ய வேண்டும். அவரைப் போலவே அவர்கள் நிராகரிக்கப்பட்டாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
புறவினத்துப் பகுதிகளுக்குப் பயணம் செய்கின்ற யூதர்கள் புறவினத்து நகரங்களை விட்டு வெளியேறும்போது, தங்கள் கால்களில் ஒட்டியுள்ள தூசியை உதறிவிட்டுத்தான் தங்கள் ஊருக்குள் நுழைவர். இதே செயலைத் தன் சீடர்களும் செய்ய வேண்டும் எனச் சொல்வதன் வழியாக, நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாத அனைவரும் புறவினத்தார் போலக் கருதப்படுவர் என மறைமுகமாகச் சொல்கின்றார் இயேசு.

இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுச் சென்றவர்கள் போதிக்கின்றனர், பேய்களை ஓட்டுகின்றனர், பிணிகளை நீக்குகின்றனர்.
சாதாரண மனிதர்களாக இருந்த திருத்தூதர்கள் இயேசுவின் அதிகாரத்தால் வியத்தகு ஆற்றல் பெற்றவர்களாக மாறுகின்றனர்.

ஆக, இன்றைய இறைவார்த்தை வழிபாடு, இறைவனின் தொடுதல் அல்லது அதிகாரம் சாதாரண மனிதர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் வியத்தகு மாற்றங்களை நம் கண்முன் கொண்டுவருகின்றது. தெக்கோவா நகரத்தின் ஆடு மேய்ப்பவர் இஸ்ரயேலின் இறைவாக்கினராக மாறுகின்றார். சிலைவழிபாட்டிலும் அறநெறிப் பிறழ்விலும் கிடந்த எபேசு நகர மக்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் மாறுகின்றனர். கலிலேய மீனவர்களும் பாவிகள் எனக் கருதப்பட்டவர்களும் இறைவன் மட்டுமே செய்யக்கூடிய நலம் தரும் பணியையும், தீமை அகற்றும் பணியையும் செய்கின்றனர்.

இறைவனின் தொடுதல் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை நாம் விவிலியத்தின் பல இடங்களில் வாசிக்கின்றோம். தன் மாமனாரின் மந்தையைப் பராமரித்து வந்த மோசே மிகப்பெரும் தலைவராக மாறுகின்றார். சக்கேயு அனைத்தையும் இழக்க முன்வருகின்றார். சமாரியப் பெண் முதன்மையான நற்செய்திப் பணியாளர் ஆகின்றார்.
இறைவன் நம் வாழ்வில் எப்படி வியத்தகு மாற்றங்களை நிகழ்த்துகிறார்?

(அ) நம் வாழ்க்கைப் பாதையை மாற்றுவதன் வழியாக
ஆடுமேய்க்கும் பணி செய்துகொண்டிருந்த ஆமோஸின் வாழ்க்கைப் பாதையை மாற்றி வடக்கே இஸ்ரயேலுக்கு இறைவாக்கினராக அனுப்புகின்றார் கடவுள். ஆசிரியப் பணி செய்ய வந்த அன்னை தெரசாவின் பாதையை மாற்றுகின்றார். பேராசிரியப் பணி செய்துகொண்டிருந்த சவேரியாரின் பாதை மாற்றப்படுகிறது. போரில் குண்டடிபட்டுக் கிடந்த இனிகோவின் பாதை மாறுகிறது. ஆக, பாதை தவறுவதில் அல்ல, மாறாக, பாதை மாறுவதில் இறைவனின் அருள்கரம் இருக்கிறது.

(ஆ) புதிய நோக்கு அல்லது இலக்கை நிர்ணயம் செய்வதன் வழியாக
எபேசு நகர மக்களின் வாழ்வியல் நோக்கு அல்லது இலக்கை மாற்றுகின்றார் கடவுள். தங்கள் சிலைகளின்மேல் இருந்த பார்வையை அவர்கள் இனி இயேசுவின் சிலுவை நோக்கித் திருப்ப வேண்டும். நம் வாழ்வின் நோக்கங்களையும் இலக்குகளையும் சில நேரங்களில் இறைவனின் திருப்புகின்றார், அல்லது கூர்மைப்படுத்துகின்றார்.

(இ) நம்மை வெறுமையாக்குவதன் வழியாக
உணவு, பை, செப்புக்காசு, உடை போன்றவற்றால் தங்கள் கைகளை நிரப்பிக்கொண்டனர் திருத்தூதர்கள். வெறுமையான கைகளே இறைவனின் அருளை நிறைவாகக் கொள்ள முடியும் என்பதற்காக, அவர்களின் நிறைந்த கைகளை வெறுமையாக்குமாறு பணிக்கின்றார். 'இது ஏன் இன்று நம்மை விட்டுப் போனது!' என்று நாம் எதையாவது குறித்து ஏங்கி, வெறுமையை உணர்கின்றோம் என்றால், கடவுள் அதைவிட மேன்மையான ஒன்றை நம் கைகளில் கொடுக்கப்போகிறார் என்பது பொருள். ஒரே கையில் செப்புக்காசையும் இறைவனின் அருளையும் பெற்றுக்கொள்ள இயலாது என்பது இயேசுவின் போதனை.

இறுதியாக,
இன்று நாம் பலருடைய வாழ்வில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டுவருகிறோம். பெற்றோர் பிள்ளைகளின் வாழ்வில் மாற்றம் கொண்டுவருகின்றனர். ஆசிரியருடைய உடனிருப்பு மாணவரின் அறிவைப் பெருக்குகிறது. அருள்பணியாளரின் உடனிருப்பு இறைமக்களின் ஆன்மிக மாற்றத்திற்கு உதவுகிறது. மருத்துவரின் இருத்தல் நோய் நீக்குகிறது. இவை அனைத்திற்கும் மேலாக இறைவனின் உடனிருப்பும் தொடுதலும் நம்மை முழுமையாகப் புரட்டிப்போட்டு, வியத்தகு மாற்றத்தைக் கொண்டுவருகிறது.

நாம் பாதை மாறத் தயாராக இருக்கும்போதும், நம் இலக்கு மற்றும் நோக்கைக் கூர்மைப்படுத்தும்போதும், நம் கைகளை வெறுமையாக்கும்போதும் அவரின் தொடுதலை உணர முடியும்.

'ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்!' என்னும் திருப்பாடல் ஆசிரியரின் (காண். திபா 85) விண்ணப்பமே நம் விண்ணப்பமாகவும் இருப்பதாக!
(அருட்தந்தை: யேசு கருணாநிதி)
மதுரை உயர்மறைமாவட்டம்

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!