Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                               year B  
                                                          பொதுக்காலம் 14ம் - ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 2: 2-5

அந்நாள்களில்

ஆண்டவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது; அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன். அவர் என்னிடம், "மானிடா! எனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர்" என்றார். "வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என்று சொல். கலக வீட்டாராகிய அவர்கள், செவிசாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்."

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 123: 1. 2. 3-4 (பல்லவி: 2cd) Mp3
=================================================================================

பல்லவி: ஆண்டவரே! எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.
1
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். - பல்லவி

2
பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப் பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பது போல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும். - பல்லவி

3
எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே! எங்களுக்கு இரங்கும்; அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம்.
4
இன்பத்தில் திளைத்திருப்போரின் வசைமொழி போதும். இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும். - பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 7-10

சகோதரர் சகோதரிகளே,

எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப்போல் இருக்கிறது. நான் இறுமாப்பு அடையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், "என் அருள் உனக்குப் போதும், வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" என்றார்.

ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 4: 18-19 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6

அக்காலத்தில்

இயேசு தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வு நாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார்.

அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், "இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?" என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

இயேசு அவர்களிடம், "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலும் உள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================்சத்திற்கு
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
ஓர் இறைவாக்கினராகவோ மெசியாவாகவோ ஏற்க மறுத்தனர்

ஒரு கிராமத்திற்கு அருகில் 'சர்க்கஸ்' நடந்து கொண்டிருந்தது. 'சர்க்கஸ்' கூடாரம் ஒருநாள் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. அந்த 'சர்க்கஸில்' கோமாளியாக நடித்தவன் ஊருக்குள் ஓடி வந்து, தீயை அணைக்கும்படி ஊர் மக்களைக் கெஞ்சிக் கேட்டான். ஆனால் அவ்வூர் மக்கள் அவனை நம்ப மறுத்தனர். அந்தக் குள்ளன் தங்களை ஏமாற்றுவதாக நினைத்தனர். சிறிது நேரத்தில் தீயானது ஊருக்குள் பரவி, ஊரில் பெரும்பகுதியை எரித்துவிட்டது. அவ்வூர் மக்கள் கோமாளியின் வெளித்தோற்றத்தை வைத்து அவனை எடைபோட்டதால் ஏமாந்தனர்.

ஒருவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு அவரை ஏளனம் செய்யலாகாது. ஏனெனில், அவர் மாபெரும் தேரிலே சிறிய அச்சாணி போன்று இருக்கலாம், பிரமாண்டமான தேரும் அச்சாணி இல்லாமல் முச்சாணும் ஓடாது. இது வள்ளுவரின் வாய்மொழி.

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து" (குறள் 667)

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து தம் சொந்த ஊராகிய நாசரேத்தில், ஓய்வு நாளன்று, தொழுகைக் கூடத்தில் மக்களுக்குப் போதிக்கிறார், அவரது போதனையைக் கேட்ட மக்கள் வியப்படைந்த போதிலும், அவர்கள் அவரை ஓர் இறைவாக்கினராகவோ மெசியாவாகவோ ஏற்க மறுத்தனர், ஏனெனில் அவர் ஒரு தச்சர்: அவருக்குப் படிப்போ, பட்டமோ, பதவியோ ஏதுமில்லை, அவரது உறவினர்களும் சாமானிய மக்கள்.

நாசரேத்தூர் இயேசுதான் மெசியா என்று பிலிப்பு நத்தானியேலிடம் கூறியபோது, "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமா?" (யோவா 1:46) அன்று அவர் ஏளனமாகக் கேட்டார். இயேசுவின் ஊரை வைத்து அவரை எடைபோட்டார் நத்தானியேல்.

"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" (குறள் 355)

என்ற உண்மையை மறந்துவிட்டார் அவர்,
கடவுளுடைய எண்ணங்களும் வழிமுறைகளும் மனிதருடைய எண்ணங்களிலிருந்தும் வழிமுறைகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவை (எசா 55:8-9). மேலும், மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; கடவுளோ அகத்தைப் பார்க்கின்றார் (1சாமு 16:13). மக்களுக்கு முன்பாகத் தங்களை நேர்மையாளர்களாகக் காட்டிக் கொண்ட பரிசேயர்கள் கடவுளின் பார்வையில் அருவருப்புக்குரியவர்கள் (லூக் 16:14).

கலக்காரர்களும் வணங்காக்கழுத்தினரும் கடின இதயம் கொண்டவர்களுமான இஸ்ரயேல் மக்களுக்கு, அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும், இறைவாக்கு உரைக்கும்படி கடவுள் எசேக்கியேலை இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறார் (எசே 2:2-5) இறைவன் பெயரால் இறைவாக்குரைப்பது இறைவாக்கினரின் கடமை. அதை ஏற்பதும் ஏற்காதிருப்பதும் மக்களைப் பொறுத்தது. நாற்பது ஆண்டுகளாக இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் கடவுளுடைய குரலைக் கேட்டும் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டனர் (திபா 95:8-10).

இருப்பினும், கடவுள் தாம் பேசுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. முற்காலத்தில் முன்னோர்களிடம் இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய கடவுள், இறுதியாகத் தம் மகன் வாயிலாகப் பேசினார் (எபி 1:1). ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடவுள் மகன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்குரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை " (யோவா 1:11), ஏனெனில், அவர்கள் அவரை ஊனக்கண்கொண்டு. அதாவது, மனித முறையில் பார்த்தனர்; எடைபோட்டனர்: புறக்கணத்தனர்.

நமது பார்வை எத்தகைய பார்வை? நாம் மற்றவர்களை எப்படிப் பார்க்கிறோம்? மதிப்பீடு செய்கிறோம்? மனித முறையிலா? அல்லது நம்பிக்கை அடிப்படையிலா? திருத்தூதர் பவுல் கூறுகிறார். "இனிமேல் தாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை . முன்பு தாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை " (2கொரி 5:16).

நாம் இன்னும் மனித முறைப்படிதான் மற்றவர்களைப் பார்க்கிறோம், ஒருவருடைய பணம், பதவி, பட்டம், ஊர், சாதி ஆகியவற்றைக் கொண்டே அவரை மதிப்பிடுகிறோம். ஏழைகளுக்கு ஒருவிதமான வரவேற்பும் பணக்காரர்களுக்கு ஒருவிதமான வரவேற்பும் கொடுத்து. ஆள் பார்த்துச் செயல்படாதிருக்க நமக்கு அறிவுறுத்துகிறார் யாக்கோபு (யாக். 2:1-4).

திருப்பணியாளர்களையும் நாம் மனித முறையில் தான் காண்கிறோம். ஓர் இளைஞனிடம், "நீ ஏன் பூசைக்குச் செல்வதில்லை" என்று கேட்டதற்கு, அவன் பூசைக்கு எவன் போவான்?' என்றான், அவன் தனது பங்கு குருவை மனித முறையில் பார்த்ததால், அவருடைய குறைகளைத்தான் கண்டான், அந்தப் பங்கு குரு வழியாகக் கடவுள் செயல்படுவதை அவனால் பார்க்க முடியவில்லை.

குருக்களின் தகுதியுடமை அவர்களிடமிருந்து வரவில்லை : அது கடவுளிடமிருந்தே வருகிறது, அவர்களுடைய வலுவின்மையில் கடவுளுடைய வல்லமை நிறைவாய் வெளிப்படுகிறது (2கொரி 12:9). "பேதுரு திருமுழுக்குக் கொடுக்கட்டும்; இயேசுதான் திருமுழுக்குக் கொடுக்கிறார்; யூதாசு திருமுழுக்குக் கொடுக்கட்டும், இயேசுதான் திருமுழுக்குக் கொடுக்கிறார்" என்ற புனித அகுஸ்தீனாரின் கூற்றை நாம் மறந்து விடக்கூடாது.

"முகத்தில் கண் கொண்டு காணும் மூடர்காள், அகத்தில் கண்கொன்டு காண்பதே ஆனந்தம்" என்கிறார் திருமூலர், முகக்கண் கொண்டு பார்ப்பது முட்டாள் தனம்; அகக்கண் கொண்டு. அதாவது. நம்பிக்கைக் கண்கொண்டு காண்பதே அறிவுடமை; அதுவே கடவுளைக் காணும் பேரின்பத்திற்கு வழிவகுக்கும்.

பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் தலைக்கனம் கொண்டவர்களாய், தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதை கொண்டவர்களாய், இயேசுவைத் தச்சனான யோசேப்பின் மகன் என்று ஏளனம் செய்து, அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருளிலே மடிந்தனர். அத்தகைய ஆபத்திற்கு நாம் இலக்காகாமல் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் வாழக் கற்றுக்கொள்வோமாக.

மன்றாட்டு
எல்லா உண்மைகளும் எனக்குத் தெரியும் என்ற தலைக்கனத்திலிருந்தும், புதிய உண்மைகளைக் கண்டு பின் வாங்கும் கோழைத்தனத்திலிருந்தும். அரைகுறை உண்மைகளுடன் திருப்தி கொள்ளும் அசட்னடத் தளத்திலிருந்தும் உண்மையின் இறைவா! எங்களை விடுவித்தருளும்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!