Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                       
                                பொதுக்காலம்  - 13 ஆம் ஞாயிறு - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
எலிசா புறப்பட்டுப் போய், எலியாவுக்குப் பணிவிடை செய்தார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 16b,19-21

அந்நாள்களில் ஆண்டவர் எலியாவை நோக்கி, "ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்" என்றார்.

எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார்.

எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார். எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து,"நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும்.அதன் பின் உம்மைப் பின்செல்வேன்" என்றார்.

அதற்கு அவர்,"சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!" என்றார். எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற, அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 16: 1-2a, 5. 7-8. 9-10. 11 (பல்லவி: 5a) Mp3
=================================================================================
 பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து. 1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். 2a நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்' என்று சொன்னேன். 5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1,13-18

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை எனும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்.

"உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக" என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது.

ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!

எனவே நான் சொல்கிறேன்: தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது.

இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவதில்லை. நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
1 சாமு 3: 9; யோவா 6: 68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன். நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்பற்றுவேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-62

அக்காலத்தில் இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே, எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள்.

அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார்.

பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.

அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, "நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்றார்.

இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்.

இயேசு மற்றொருவரை நோக்கி, "என்னைப் பின்பற்றி வாரும்" என்றார்.

அவர், "முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்" என்றார்.

இயேசு அவரைப் பார்த்து, "இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்" என்றார்.

வேறொருவரும், "ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்" என்றார்.

இயேசு அவரை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
(1அரசர்கள் 19: 16, 19-21; கலாத்தியர் 5: 13-18; லூக்கா 9: 51-62)

தன்னை முழுவதும் தருவதுதான் உண்மையான சீடத்துவம்


நிகழ்வு

          மெய்யியலாளரான சோரன் கீர்ககார்ட் (Soran Kierkagaard) சொல்லக்கூடிய ஒரு நிகழ்வு. ஒரு சமயம் ஒரு சிறுநகரில் இருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. செய்தி நகரில் இருந்த தீயணைப்புப் படையினர்க்குச் சொல்லப்பட்டது. உடனே அவர்கள் தீவிபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தார்கள்.


அங்கு அவர்கள் வந்தபோது கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காரணம், அங்கிருந்த ஒருசிலர் தங்களுடைய கையில் வைத்திருந்த தண்ணீர் துப்பாக்கிகளைக் கொண்டு தீயை அணைக்க முயன்று கொண்டிருந்தார்கள். இன்னும் ஒருசிலர் தீயணைப்புப் படையினர்க்கு வழிவிடாமல் தங்களுடைய கையில் இருந்த சிறு சிறு வாளிகளைக் கொண்டு தீயை அணைத்துக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்துவிட்டு அந்த தீயணைப்பு படையினரின் தலைவர் அங்கிருந்தவர்களிடம், இந்தத் தீவிபத்தின் விபரீதம் புரியாமலும் எங்களுக்கு வழிவிடாமமலும் இப்படித் தண்ணீர் துப்பாக்கிகளைக் கொண்டும் சிறுசிறு வாளிகளைக் கொண்டும் தீயை அனைத்துக்கொண்டிருக்கின்றீர்களே! இது நன்றாக இருக்கிறதா... தயவுசெய்து எங்கட்க்கு வழிவிடுங்கள்" என்றார்.


அவர் இவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து அங்கிருந்த எல்லாரும் தீயணைப்புப் படையினருக்கு வழிவிட்டனர். இதைத் தொடர்ந்து தீயணைப்பு படையிலிருந்த ஒவ்வொருவரும் முழுமூச்சாக இறங்கி, அடுக்குமாடிக் கட்டிடத்தில் உயிர்க்குப் போராடிக்கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றியும் பற்றியெறிந்துகொண்டிருந்த தீயை அணைத்தும் பெரியஅளவில் சேதம் ஏற்படாத வண்ணம் அங்கிருந்தவர்களைக் காப்பாற்றினர்.


இந்த நிகழ்வைச் சொல்லிவிட்டு சோரன் கீர்ககார்ட் என்ற அந்த மெய்யியலாளர் இவ்வாறு சொல்வார்:"சீடத்துவ வாழ்வு என்றால், பலரும் நினைப்பது போல் நற்செய்திப் பணிக்கு ஓரிரு உதவிகள் செய்வதுவிட்டு திருப்திப்பட்டுக் கொள்வதல்ல. உண்மையான சீடத்துவ வாழ்வு என்பது ஆண்டவர்க்காக நம்மை முற்றிலும் தருவது.


உண்மையான சீடத்துவ வாழ்வு என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலம் பதிமூன்றாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள் இறைவார்த்தை, 'தன்னை முழுவதும் தருவதுதான் உண்மையான சீடத்துவ வாழ்வு' என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


உண்மையான சீடத்துவ வாழ்வு எது என்ற தெரிந்துகொள்வதற்கு முன்னம், எதுவெல்லாம் சீடத்துவ வாழ்வு கிடையாது என்று தெரிந்துகொள்வது நல்லது.

உள்ளத்தில் வெறுப்போடும் தான் என்ற அகந்தையோடு இருப்பதும் சீடத்துவ வாழ்வு கிடையாது

          லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு எருசலேம் செல்லத் தீர்மானித்து, தமக்குமுன் தூதர்களை அதாவது இடியின் மக்கள் எனப்படும் (மாற் 3:17) யோவானையும் அவர் சகோதரான யாக்கோபையும் அனுப்பிவைக்கின்றார். அவர்கள் இருவரும் சமாரியரின் நகர் வழியாகப் போகமுயன்றதால், அங்கிருந்தவர்கள் இவர்கள் இவரையும் தடுத்துநிறுத்துகிறார்கள். இதனால் இவர்கள் இருவரும் இயேசுவிடம்,"ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா?" என்று கேட்க, இயேசு அவர்களைக் கடிந்துகொண்டு வேறொரு வழியாக எருசலேமிற்குப் போகின்றார்.


இயேசுவின் சீடர்களான யோவானும் யாக்கோபும், சமாரியர்கள் தங்கள் ஊர் வழியாகப் போகவிடாமல் தடுத்ததற்காக ஏன் இவ்வாறு பேசவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. யூதர்கட்க்கும் சமாரியர்கட்க்கும் பன்னெடுங்காலமாகப் பகை இருந்துவந்தது (2அர 17: 29-41). இப்பகை இயேசுவின் காலம்வரை (யோவா 4: 9,20) ஏன், அதற்கும் பின்னும் நீடித்தது என்பதுதான் இதிலுள்ள துரதிஸ்டம். இப்படி சமாரியர்கள் யூதர்களோடு பகையாய் இருக்கிறார்கள் என்று தெரிந்தபின்னும் யோவானும் யாக்கோபும் வேறொரு வழியாகப் போயிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாமல், சமாரியர்களின் ஊர்வழியாகச்  சென்றால் வேகமாகச் சென்றுவிடலாம் என்று அந்த வழியைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். இதனால் சமரியார்கள் அவர்களைத் தடுக்கின்றார்கள். சமாரியர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது, இயேசு அவர்கட்க்குப் போதித்தது போன்று (மத் 5: 37-48) பகைவர்களை அன்புசெய்து அல்லது மன்னித்துவிட்டு வேறொரு வழியில் சென்றிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாமல், எலியா இறைவாக்கினரைப் போன்று (2 அர 1:10) வானத்திலிருந்து தீ வந்து அவர்களைச் சுட்டெரிக்கச் செய்யவா? என்று இயேசுவிடம் கேட்கின்றார்கள். இயேசுவோ வெறுப்பை மேலும் வளர்க்காமல். அவர்களைக் கண்டிக்கின்றார்.

இதன்மூலம் இயேசு தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்கள், உள்ளத்தில் வெறுப்புடனோ, பகைமையுடனோ இருக்கக்கூடாது என்ற செய்தியைக் கற்றுத்தருகின்றார். இந்த நிகழ்விற்கு முன்னதாக, சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று விவாதித்துக் கொண்டார்கள். (லூக் 9:46). அப்பொழுது இயேசு அவர்கள் நடுவில் ஒரு குழந்தையை நிறுத்தி,"உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்" என்கின்றார் (லூக் 9:48). இதை வைத்துப் பார்க்கும்போது, இயேசுவின் சீடராக இருக்க விரும்புகின்றவர், உள்ளத்திலிருந்து பகைமையையும் வெறுப்பையும் அகற்றுவதோடு மட்டுமல்லாமல், தாழ்ச்சியோடு வாழ்வது தேவையான ஒன்றாக இருக்கின்றது.

இயேசுவுக்காகத் தன்னை முழுமையாய் அர்ப்பணித்து, சிலுவையைச் சுமக்கத் தயாராக இருப்பதே உண்மையான சீடத்துவ வாழ்வு

          எது சீடத்துவ வாழ்வு கிடையாது என்பதை அறிந்துகொண்ட நாம், உண்மையான சீடத்துவ வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதி சொல்வதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம். இயேசு எருசலேம் நோக்கிப் போகும்போது, இரண்டாவது மனிதரைத் தவிர்த்து, முதலாம் மற்றும் மூன்றாம் மனிதர்கள் அவர்களாகவே இயேசுவிடம் வந்து அவரைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள். இதில் முதலாவதாக வரும் மனிதர் ஒரு மறைநூல் அறிஞர் (மத் 8:9). அவர் சீடத்துவ வாழ்வு என்றால் மிகவும் சொகுசானது என்று நினைத்துகொண்டு வந்து, இயேசுவிடம், நீர் எங்கு போனாலும் நானும் பின்னால் வருவேன் என்று சொல்கிறார். அவரிடம் இயேசு, நரிகட்க்கு பதுங்கிக் குழிகளும் வானத்துப் பறவைகட்க்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலைசாயக்கக்கூட இடமில்லை என்று சொன்னதும், அவர் இயேசுவை விட்டு விலகுகின்றார்.

மூன்றாவது மனிதரோ இயேசுவிடம், நான் உம்மைப் பின்பற்றி வருவேன். ஆயினும் என் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வர என்னை அனுமதியும் என்கின்றார். இவரிடம் இயேசு,"கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" என்கிறார். இதில் இரண்டாவது மனிதர் மிகவும் கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். காரணம், அவரிடம் இயேசுவே தன்னைப் பின்பற்றி வருமாறு சொல்கின்றார். அவரோ, நான் என் தந்தையைப் போய் அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும் என்று மறுத்துவிடுகின்றார். அப்படிப்பட்டவரிடம் இயேசு,"இறந்தோரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். நீர்போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்" என்கின்றார்.

இந்த மூன்று மனிதர்கட்கும் இயேசு அளித்த பதிலைக் கொண்டே உண்மையான சீடத்துவ வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பதை அறிந்துகொள்ளலாம். உண்மையான சீடத்துவ வாழ்வு என்பது முதலாவதாக, சிலுவைகளை ஏற்கத் துணிவது (மத் 16:24), இரண்டாவதாக, மற்ற எல்லாவற்றையும் எல்லாரையும்விட இயேசுவுக்கு முன்னுரிமை தருவது (லூக் 14:26). மூன்றாவதாக, முன்வைத்த காலை பின்வைக்காமல், இயேசுவின்மீது கண்களைப் பதிய வைத்து வாழ்வது. இப்படிப்பட்ட வாழ்வே உண்மையான சீடத்துவ வாழ்வாகும்; இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வோர்க்கு இறைவன் தக்க கைம்மாறு தருவார் (மத்19: 28-29) என்பது உறுதி.

சிந்தனை

'கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தினையே வழங்கியுள்ளார்' (2திமொ 1:7) என்பார் பவுல். ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வல்லமையும் அன்பும்கொண்ட இதயத்தைக் கொண்டு, இறையாட்சிப் பணிக்காக நம்மை முழுவதும் ஒப்புக்கொடுத்து, அன்போடு பணிசெய்வோம். அதவழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
  முறிவுகளே முடிவுகளாக

 ஆண்டின் பொதுக்காலம் 13ம் ஞாயிறு
(ஜூன் 30, 2019)

1 அரசர்கள் 19:16, 19-21
கலாத்தியர் 5:13-18
 லூக்கா 9:51-62

ஓர் உருவகத்தோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம். நாம் ஒரு வீட்டை உரிமையாக்கிக்கொள்ள வேண்டுமானால், அதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, ஓர் வெற்றிடத்தை வாங்கி, அவ்விடத்தின் அளவு மற்றும் பண்பிற்கேற்ப திட்டமிட்டு நிலம் வீணாகாமல் கட்டுவது. இப்படிக் கட்டுவதில் பிரச்சினை என்னவென்றால், நிலத்தை தூய்மைப்படுத்தி ஒழுங்குபடுத்துதல், வானம் தோண்டுதல், அடித்தளம் இடுதல், வரைபடம் உருவாக்குதல், கட்டுதல், பூசுதல், மேற்கூரையிடல், தளமிடல், வர்ணம் பூசுதல், தண்ணீர் மற்றும் மின்சார திட்டமிடல் என எல்லாவற்றையும் நாமே செய்ய வேண்டும். இதற்கு நிறைய உழைப்பும் விடாமுயற்சியும் தேவை. இரண்டு, ஏற்கனவே கட்டப்பட்ட ஒரு வீட்டை விலைக்கு வாங்கி, அதை நம் தேவைக்கு ஏற்ப சிறு மாற்றங்கள் செய்வது. இது ரொம்பவே எளிது. நம்முடைய வேலை வர்ணம் பூசுவதும், இங்கே அங்கே என சிலவற்றை சரி செய்வதும்தான். ஆனால், நாம் ஏன் சொந்தமாக வீடு கட்டுகிறோம்? காரணம் ரொம்ப எளிது. முதல் வழியில் பிரச்சினைகள் நிறைய இருந்தாலும் நம்முடைய படைப்பாற்றலைப் பயன்படுத்தி, நம்முடைய எண்ணத்திற்கு ஏற்ப வீட்டைக் கட்டலாம். ஆனால், இரண்டாம் வழியில் பிரச்சினைகள் குறைவு என்றாலும், நாம் புதிதாக அவ்வீட்டில் எதையும் செய்ய முடியாது. அதன் அமைப்பு பிடிக்கவில்லை என்றால் மாற்ற முடியாது. மேலே மாடி கட்டுவதற்காக அடித்தளத்தை உறுதி செய்ய முடியாது. வீணாக்கப்பட்ட இடத்தை ஒன்றும் செய்ய முடியாது. தண்ணீர் மற்றும் மின்சார அமைப்புக்களை மாற்ற முடியாது. சில நேரங்களில் புது வீட்டைக் கட்டுவதை விட பழைய வீட்டைப் பராமரிப்பதற்கு அதிகம் செலவாகிவிடும். எனவேதான், பழைய வீட்டை வாங்கினாலும் அதைப் பராமரிப்பதற்குப் பதிலாக முற்றிலும் அதை இடித்துவிட்டு புதிதாகக் கட்டுகின்றனர்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு மேற்காணும் உருவகத்தை நேரடிப் பொருளில் சொல்கிறது. எப்படி?

வாழ்க்கை மாற்றம் வேண்டுமென்றால் பழைய வாழ்க்கையோடு உள்ள உறவை முழுமையாக முறிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்க வேண்டும். முறிவுகளே முடிவுகள் என்பது சொல்வதைப் போல அவ்வளவு எளிதல்ல.

'முறிவு' என்ற வார்த்தை நமக்கு பயம் தருகிறது. 'எலும்பு முறிவு,' 'மண முறிவு,' 'நட்பு முறிவு' போன்றவற்றை நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், முறிவு இல்லாமல் வாழ்க்கை இல்லை. எப்படி? நாம் பிறந்தவுடன் நம்மையும் நம் தாயையும் இணைக்கும் தொப்புள் கொடி முறிக்கப்படுகிறது. இந்த முறிவு இல்லை என்றால், நம் வாழ்க்கையும், நம் தாயின் வாழ்க்கையும் ஆபத்தில் முடியும். பள்ளிக்குள் நுழையும்போது வீட்டில் அனுபவித்த நம் சுதந்திரம் முறிக்கப்படுகிறது. கல்லூரிக்குள் நுழையும்போது பள்ளியின் உறவு முறிவுபடுகின்கிறது. படிப்பு முடிந்து திருமணம் என்றவுடன் பல நட்பு உறவுகள் முறிகின்றன. திருமணத்திற்குள் நுழையும்போதும் நாம் பல பேரின் உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இறுதியில், ஒட்டுமொத்தமாக எல்லா உறவுகளையும் முறித்துக்கொண்டு நாம் இவ்வுலகை விட்டுச் செல்கின்றோம். நாம் பேசும்போது பேசுகின்ற முதல் வார்த்தை முறிந்து இரண்டாம் வார்த்தை பிறந்தால்தான் உரையாடல் இனிக்கும். நாம் நடக்கும்போது எடுக்கின்ற முதல் அடி முறிந்து இரண்டாம் அடி பிறந்தால்தான் பயணம் தொடங்கும். நம் உடலின் செல்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய பழைய இயல்பை முறித்தால்தான் உயிர் இருப்பு சாத்தியமாகும். ஆக, முறிவுகள் நம் வாழ்வின் எதார்த்தங்கள்.

இறைவனைப் பின்பற்றுதல் அல்லது இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் கடந்த கால வாழ்க்கையை, கடந்த கால உறவுகளை முறித்துக்கொள்ளும் முடிவு எடுக்க வேண்டும் என்று இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குக் கற்பிக்கிறது. கடந்தகாலத்தோடு இருக்கும் தொடர்பை முறிக்கும்போதுதான் புதிய வாழ்க்கையையும் புதிய பணியையும் தொடங்க முடியும். அருள்பணி நிலையில் இணையும் ஒருவர் தன் குடும்பத்தோடு இணைந்திருக்கும் இணைப்பை முறிக்கிறார். புதிய வாழ்வைத் தொடங்குகிறார். திருமண உடன்படிக்கையில் இணையும் மணமக்கள் தத்தம் குடும்பங்களோடு உள்ள உறவுகளை முறிக்கும்போதுதான் தங்களுக்கிடையே உள்ள குடும்ப உறவைத் தொடங்குகிறார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 அர 19:16,19-21) எலியா தன்னுடைய இறைவாக்குப் பணியை நிறைவு செய்கிறார். பணியின் இறுதியில், நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசராகவும் சாபாற்றின் மகன் எலிசாவை இறைவாக்கினராகவும் அருள்பொழிவு செய்யுமாறு பணிக்கிறார் ஆண்டவராகிய கடவுள். எலிசா ஒரு விவசாயி. கடவுளால் உந்தப்பட்ட எலியா, தன்னுடைய உழவுத்தொழிலில் மூழ்கியிருந்த எலிசாவைச் சந்தித்து அவர்மேல் தன் போர்வையைப் போடுகின்றார். புதிய ஆடையை ஒருவர்மேல் போர்த்துவது என்பது புதிய பணிக்கு ஒருவரை அனுப்பவது என்பது பொருளாகும். ஆகையால்தான், அருள்பணியாளர் திருநிலைப்படுத்தப்படும் நிகழ்விலும் அவருக்கு புதிய திருவுடை அணிவிக்கப்படுகிறது. அந்தத் திருவுடையும் ஏறக்குறைய போர்வையைப் போலத்தான் இருக்கிறது. தன்மேல் போர்வை போர்த்தப்பட்டவுடன் தன் வாழ்வு மாற வேண்டும் என்பதை உடனடியாக உணர்கிறார் எலிசா.

ஆகையால், எலியாவின் அனுமதியின்பேரில் அவர் தன்னுடைய எருதுகளை அப்படியே விட்டுவிட்டு, தன் பெற்றோர்களை முத்தமிட - பிரியாவிடை கொடுக்க - வீட்டிற்குச் செல்கின்றார். அந்தக் காலத்தில் வீடுகளும் தோட்டங்களும் தூரமாக இருந்திருக்க வேண்டும். இவருடைய பிரியாவிடை இவருடைய குடும்பத்தின்மேல் உள்ள உறவை முறிக்கும் நிகழ்வாக அமைகிறது. தன்னுடைய உழவுத் தொழிலுக்கு இன்றியமையாதவையாக இருந்த ஏரை விறகாக்கி, மாடுகளை உணவுப் பொருளாக்கி தன் மக்களுக்கு விருந்து படைக்கின்றார் எலிசா. தன்னுடைய ஏரை உடைப்பதாலும், எருதுகளைக் கொல்வதாலும் தன்னுடை கடந்த காலத்தோடு தான் கொண்டுள்ள உறவை முறிக்கிறார் எலிசா. இனி அவர் நிலத்தை உழப்போவதில்லை. தான் தன்னுடைய ஏர் மற்றும் எருதுகளால் சமைத்த உணவை மக்களுக்குக் கொடுத்ததன் வழியாக, இனி தான் காய்கறிகளும் தானியங்களும் அவர்களுக்குத் தரப் போவதில்லை என்றும், இறைவார்த்தையே இனி அவர்களுக்கு அவர் வழங்கும் உணவாக இருக்கும் என்றும் உருவகமாக முன்னுணர்த்துகின்றார். எலிசாவின் இச்செயல்கள் அவர் தன்னுடைய வாழ்வுப் பாதையை முற்றிலும் மாற்றியதை உருவகங்களாக உணர்த்துகின்றன. இந்த மாற்றத்தின் முதல்படி தன்னுடைய பழைய வாழ்விலிருந்து அவர் தன்னையே முறித்துக்கொண்டதுதான்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கலா 5:13-18), பவுல் தன்னுடைய வாழ்வில் எடுத்த மிகப்பெரிய முடிவின் சூழலைப் பின்புலமாகக் கொண்டுள்ளது. கலாத்தியருக்கு எழுதும் திருமுகத்தில் பவுல், ஒருவர் கடவுள் முன் எப்படி ஏற்புடையவராகிறார் என்பதைப் பற்றி அதிகம் பேசுகிறார் பவுல். இயேசுவைச் சந்திக்குமுன் பவுல் யூதச் சட்டத்தையும், முறைமைகளையும் கடைப்பிடிப்பவராக இருக்கிறார். ஏனெனில், கடவுளுக்கு பணி புரிவதற்கும் அவருக்கு ஏற்புடையவர் ஆவதற்கும் இதுவே சரியான மற்றும் ஒரே வழி என அவர் எண்ணினார். ஆனால், உயிர்த்த கிறிஸ்துவைச் சந்தித்தவுடன் அவருடைய வாழ்க்கை தலைகீழாகிறது. ஒரு காலத்தில் சட்டத்திற்கு மிகவும் பிரமாணிக்கமாக இருந்த பவுல் இயேசுவின் திருத்தூதராகிறார். மேலும், கிறிஸ்துவின்மேல் கொண்ட நம்பிக்கையால் மட்டுமே ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றார் என்று அறிவிக்கத் தொடங்குகிறார். இப்படியாக அவருடைய வாழ்வு முற்றிலும் மாறுகிறது. திருச்சட்டத்தின் மேல் வெறிகொண்ட பரிசேயராக இருந்த பவுல் கிறிஸ்துவின் அர்ப்பணமிக்க பணியாளனாக மாறுகிறார்.

இன்றைய வாசகத்தில் - ஒட்டுமொத்த திருமடலில் குறிப்பிடுவதுபோல - கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொண்டாலும் யூதச் சட்டத்தையும் மரபுகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்ன சில யூத கிறிஸ்தவர்களை எதிர்க்கின்றார். 'கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து - சட்டத்திலிருந்து - நம்மை விடுவித்துள்ளார்' என்று சொல்லும் இடத்தில் 'சட்டத்தை,' 'அடிமைத்தளை எனும் நுகம்' என்கிறார். இச்சுதந்திரத்தில் நம்பிக்கையாளருக்குத் தேவையானதெல்லாம் கிறிஸ்துவின்மேல் கொள்ளும் நம்பிக்கை மட்டுமே. கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒட்டுமொத்த யூதச் சட்டமும், 'உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீது அன்புகூர்வாயாக' என்ற ஒரே கட்டளையில் அடங்கிவிடுகிறது. கிறிஸ்தவ வாழ்வை உந்தித்தள்ளுவது யூதச்சட்டம் அல்ல. மாறாக, தூய ஆவி. கிறிஸ்தவ வாழ்விற்கான அடித்தளங்களின் மேல் அழுத்தம் கொடுக்கும் பவுல், தன்னுடைய பரிசேயக் கடந்த கால வாழ்வோடு தனக்குள்ள உறவை முறித்துக்கொள்வதோடு, கலாத்திய நகர் திருச்சபையும் அவ்வாறே தன்னுடைய யூதச் சட்ட பிரமாணிக்கத்தை முறித்துக்கொள்ள அழைக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 9:51-62), இயேசுவின் வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனை வருகிறது: 'விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தன் பயணத்தைத் தொடங்குகிறார்.' தன்னுடைய இறப்பு அங்கே காத்திருக்கிறது என்றாலும் துணிவுடன் இப்பயணத்தை மேற்கொள்கிறார் இயேசு. இப்படிச் செய்வதன் வழியாக தன்னுடைய அமைதியான, வெற்றிகரமான கலிலேயப் பணியை முறித்து, தன்னுடைய இறப்பு மற்றும் உயிர்ப்பு நோக்கி நகர்கின்றார். இனி இவர் யாருக்கும் நலம் அளிக்கமாட்டார். இறையாட்சி பற்றி அறிவிக்க மாட்டார். மாறாக, சீடத்துவம் பற்றிப் போதித்து, தன்னுடைய இறப்புக்காக தன்னையும் தன் சீடர்களையும் தயாரிப்பார்.

இன்றைய வாசகத்தின் இரண்டாம் பகுதி நோக்கு மாற்றத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. எலியா மற்றும் எலிசா நிகழ்வின் கூறுகள் இங்கேயும் காணப்படுகின்றன. முதலில், இயேசுவின் சீடர்கள் யாக்கோபும் யோவானும், எலியாவைப் போல சமாரிய நகர் மேல் நெருப்பு பொழியப்பட விரும்புகின்றனர் (காண். 2 அர 1:10). ஆனால், எலியாவுக்கு மாறாக, இயேசு, சீடர்களைக் கடிந்துகொள்வதுடன் பகைவர்க்கும் அன்பு என்ற கட்டளையின் அடிப்படையிலேயே அவர்கள் நடக்க வேண்டும் என்று மறைமுகமாக உணர்த்துகின்றார்.

தொடர்ந்து, இயேசு எருசலேம் நோக்கிச் சென்றபோது மூன்று நபர்களைச் சந்திக்கின்றார். முதலாமவர் தானாகவே முன்வந்து இயேசுவைப் பின்பற்ற விரும்புகின்றார். தன்னைப் பின்பற்றுபவர்கள் நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார் இயேசு. இயேசு தன்னுடைய மக்கள் மட்டுமல்ல சமாரியர்களின் நிராகரிப்பையும் அனுபவித்தார். அவருக்கு 'தலை சாய்க்க இடமில்லை.' அவரைப் பின்பற்றுபவர்களும் அதே நிலைக்க ஆளாகத் தயாராக இருக்க வேண்டும். அடுத்ததாக, தன்னைப் பின்பற்றுமாறு ஒருவரை அழைக்கிறார் இயேசு. ஆனால், அவர் தன்னுடைய தந்தையை அடக்கம் செய்ய அனுமதி கோருகின்றார். அவர் எலிசாவைப் போல தன்னுடைய குடும்பத்தின் உறவை முறிக்க நினைக்கின்றார். ஆனால், இது ஒரு சாக்குப்போக்காக இருக்கின்றது. தன்னுடைய தந்தை இருக்கும் அளவு இயேசுவைப் பின்பற்றுதல் சாத்தியம் இல்லை என்று மறைமுகமாகச் சொல்கின்றார் அந்த நபர். இவருடைய பதிலிலிருந்து இவர் தன்னுடைய குடும்பத்தையே முதன்மைப்படுத்துவது தெரிகிறது. எலிசா தன்னுடைய குடும்ப உறவை முறித்ததுபோல இவர் செய்ய மறுத்ததால் இவர் தகுதியற்றவராக மாறுகிறார். மூன்றாம் நபர் இயேசுவைப் பின்பற்றுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார். ஆனாலும், தன் வீட்டாரிடம் பிரியாவிடை பெற அனுமதிக்குமாறு வேண்டுகிறார். 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப்பார்ப்பவர்' உருவகத்தின் வழியாக, இயேசு அவரை முன்நோக்கிப் பார்க்க அழைக்கிறார். இவ்வாறாக, இயேசுவைப் பின்பற்றும் சீடர்கள் தங்களுடைய கடந்த காலத்தை முறித்தவர்களாகவும், தங்களுடைய முதன்மைகளை மறுவரையறை செய்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஆக, இன்றைய இறைவாக்கு வழிபாடு கடினமான சவாலை நமக்குக் கொடுக்கிறது. சீடத்துவத்துடன் இணைந்துவரும் 'முறிவு என்னும் முடிவை' நமக்கு வலியுறுத்துகிறது. தன்னுடைய அமைதியான உழவுத் தொழிலை முறிப்பதால்தான் எலியா இறைவாக்கினராக மாறுகிறார். பவுல் தன்னுடைய பரிசேய பிரமாணிக்கத்தையும், யூத சட்டத்தையும் முறித்தால்தான் இயேசுவின் திருத்தூதராக மாற முடிகிறது. இயேசு தன்னுடைய பணி வாழ்வை முறித்துக்கொண்டதால்தான் அவரால் தன்னுடைய பாடுகள் நோக்கி பயணம் செய்ய முடிகிறது. மேலும், தன்னைப் பின்பற்ற விரும்பும் தன் சீடர்களும் முறித்துக்கொள்ள வேண்டியவை பற்றி அவர்களுக்குக் கற்பிக்கின்றார் இயேசு. கடவுள் நம் வாழ்வைத் தன் கைக்குள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் கைகளை உதறிவிட்டு நம் கைகளை அவரை நோக்கி நீட்டுவது அவசியம். தங்களுடைய கடந்த காலத்தை முறித்துக்கொள்ளும் ஒருவரே புதிய வாழ்க்கை நோக்கி, புதிய பணியை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும். இப்படிப்பட்ட ஒருவரின் மனநிலையைத்தான் இன்றைய பதிலுரைப்பாடலில் ஆசிரியர், 'வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு' (காண். திபா 16:11) என்று பாடுகின்றார்.

நம் வாழ்வில் முறிவுகளை முடிவுகளாக எடுப்பது எப்படி?

1. எலிசா போல நம்முடைய பாதுகாப்பு வளையத்தை உடைக்க வேண்டும் :
எலிசா ஒருவேளை தன்னுடைய ஏரை உடைக்காமல், எருதுகளைக் கொல்லாமல் இருந்திருந்தால் என்ன நடக்கும்? தனக்கு ஒரு ஃபால் பேக் (fallback) வைத்திருப்பார். தன்னுடைய இறைவாக்குப் பணி தோல்வியாக இருந்த நேரத்தில் உழவுத்தொழிலுக்குத் திரும்பியிருப்பார். அல்லது இதைச் செய்து கொண்டே அதைச் செய்யலாமே என்று இரண்டையும் செய்ய முயற்சித்து விரக்தியடைந்திருப்பார். அல்லது இவர் இறைவாக்குப் பணி செய்யும்போது இவருடைய எண்ணமெல்லாம் ஏரின் மேலும் எருதுகள்மேலும்தான் இருக்கும். 'ஆனால் தேவையானது ஒன்றே' என்பது வாழ்வின் பாடமாக இருக்கிறது. தாயின் வயிற்றில் இருப்பது குழந்தைக்கு என்றும் பாதுகாப்பு தான். ஆனால், அந்தப் பாதுகாப்பு வளையம் முறியவில்லை என்றால் அது குழந்தைக்கே ஆபத்தாக முடியும். இன்று அருள்பணி நிலையில் இருக்கும் நான் எனக்கென உருவாக்கி வைத்திருக்கும் ஃபால் பேக் மெக்கானிஸம் (fallback mechanism) எவை? என்னுடைய குடும்பமா? நட்பு வட்டமா? படிப்பா? இன்று இறைப்பணி செய்யும்போது என்னுடைய மனம் எங்கே செல்கிறது? என்னுடைய மனம் செல்லும் இடத்திற்காக நான் என் பணியோடு சமரசம் செய்கிறேனா? என்னுடைய பாதுகாப்பு வளையத்தை நான் உறுதியாக்கிக்கொள்வதில் கருத்தாயிருக்கிறேனா? அல்லது வளையத்திலிருந்து வெளியே வர முயற்சிக்கிறேனா?

2. பவுல் போல துணிச்சல் :
இரண்டு தெரிவுகளுக்கு இடையே நிற்பது நமக்கு மனஉளைச்சலை உண்டாக்குவதோடு, 'ஒன்றுக்கொன்று எதிராக உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய இயலவில்லை' என்கிறார் பவுல். நாம் பழையது ஒன்றை முறித்து முன்னே செல்வதை ஆங்கிலத்தில் 'ப்ரேக் த்ரூ' (break through) என்கிறார்கள். அதாவது, ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற ஒருவர் தன்னுடைய பழைய சாதனையை முறிக்கும்போது 'ப்ரேக் த்ரூ' (break through) அடைகிறார். இதை அவர் அடைவதற்குச் செய்ய வேண்டிய ஒன்று, 'ப்ரேக்கிங் வித்' ('breaking with') தன்னுடைய பழைய பழக்கம், அல்லது பழைய செய்முறையை அவர் விட வேண்டும். 'ப்ரேக்கிங் வித்' ('breaking with') செய்வதற்கு நிறைய துணிச்சல் தேவை.

3. இயேசு போல சமநிலை :
கலிலேயாவில் இயேசுவின் பணி நன்றாக இருக்கிறது. நிறையப் பேர் குணம் பெறுகிறார்கள். அவருடைய புகழ் எங்கும் பரவுகிறது. இதைக் கண்டு தேங்கிவிடவில்லை அவர். தன்னுடைய இலக்கில் அவர் தெளிவாக இருக்கின்றார். சமாரியாவைக் கடந்து செல்லும்போது எதிர்ப்பு வருகிறது. ஆனால், எதிர்ப்பைக் கண்டு அவர் பின்வாங்கவில்லை. கலிலேயர்களைத் திருப்திப்படுத்த அவர்களோடு தங்கவில்லை. சமாரியர்களை எதிர்த்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, பயப்படவில்லை. ஆக, யாரையும் திருப்திப்படுத்த நினைக்காத, யாரையும் கண்டு பயப்படாத ஒருவர் சமநிலை பெற்றிருப்பார். இந்தச் சமநிலை கொண்டு அவர் தன்னுடைய எந்த நிலையிலும் எதையும் முறித்து முன்னேறத் தயாராக இருப்பார்.

இறுதியாக,
ஒரு பழமொழி உண்டு: 'பறக்க நினைக்கின்ற புறா மண்ணிலிருந்து எழும்பி எறும்புப் புற்றில் அமர்ந்தால் அது பறந்தது என்றாகிவிடாது.' மண்ணும் எறும்பும் புற்றும் ஒன்றுதான். இன்று சீடத்துவத்திற்கு மட்டுமல்ல. நான் விட்டுவிடுகின்ற எந்த தீய பழக்கத்திற்கும் முறிவு மிக அவசியம். இன்று நான் இறைவனைப் பின்தொடர்வதிலிருந்து என்னைப் பின்னிழுக்கும் பழக்கம் எது? நான் இவ்வுலகில் மிகவும் மதிப்புக்குரியவர்கள் அல்லது அன்புக்குரியவர்கள் என்று யாரைக் கருதுகிறேன்? நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதிலிருந்து இவர்கள் என்னைப் பின்நோக்கி இழுக்கிறார்களா?

எல்லாரையும் சேர்த்து இழுத்துக்கொண்டு முன்னே செல்ல முடியும் என்கிறது மூளை. இல்லை முறித்துவிடத்தான் வேண்டும் என்கிறது மனம். மூளைக்கும் மனத்திற்குமான போராட்டத்திலேயே நகர்கிறது வாழ்க்கை.

முறிவுகளே முடிவுகள் ஆனால் முன்னேறுவது எளிதாகும்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


===============================================================================
திருப்பலி முன்னுரை    -  பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு
=================================================================================
பணிகளின் மத்தியிலும் படைத்தவருக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து, அவருக்கு முதன்மையான இடத்தைத் தந்து, கவனச் சிதறல்களைக் களைந்து இறைவனை நாட பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.

இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றும் உள்ளம் கொண்ட நமது பாதையில் பல்வேறு கவனச்சிதறல்கள் தடைக்கற்களாக எதிர்படுகின்றன. அவற்றைக் களைந்து கவனத்துடனும் முழு உள்ளத்துடனும் இறைவனை நாடுவோம்.

இன்றைய முதல் வாசகத்தில் தனது பணியினைத் துறந்துவிட்டு எலியாவை பின்பற்றும் எலிசாவைக் காண்கின்றோம். தனது பணியை இறைப்பணியிலும் முதன்மையாகக் கருதாமல் உழுத கலப்பையை நெருப்பு மூட்டி, இறைவனின் வாக்கிற்கு பணிகின்றார். பணியிலும் பகட்டிலும் செலவிடும் நேரத்தை நாம் அதிகமாக்கி இறைவனோடு இணைந்திருக்கும் நேரத்தை எண்ணிப்பார்த்து செலவிடுகின்றோம். அருகில் ஆலயம் இருந்தும் ஆடம்பர கார்கள் வைத்திருந்தும் வாரம் ஒருமுறை ஆலயம் வரவே தாமதிக்கின்றோம், 24 மணி துளிகளை ஒரு நாளுக்கு இறைவன் தந்திருந்தாலும் உடலுக்கும் வேலைக்கும் ஓய்வு கொடுக்காது பயணப்படுகின்றோம். இக்கவனச்சிதறல்களே இறைப் பாதையில் நாம் எதிர்கொள்ளும் தடைக்கற்கள். தடைகளை உடைத்தெறிந்து விட்டு உறுதியோடு நடப்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்க்க வேண்டாம் என்று நம்மை எச்சரிக்கின்றார் இயேசு. திரும்பிப் பார்த்தோம் என்றால் கலப்பை நம்மைக் காயப்படுத்தி விடும். எனவே இயேசுவின் வாழ்வை நற்செய்தியாய் போதிக்கும் குருவுக்கு மட்டுமல்லாமல் இல்லற வாழ்வை மேற் கொள்ளும் அனைவருக்கும் இது பொருந்தும். நாம் அனுபவிக்கும் கவனச்சிதறல்கள் சில நொடிகள் இன்பம் தரும் இவ்வுலக அழைப்புகளே. அவற்றின் பக்கம் நம் பார்வை சாயும்போது நம் நேரமும் ஆற்றலும் வீணாகி, இலக்கு தவறுகிறது. இறைவன் பாதமே இலக்கு என்பதை நம் எண்ணத்தில் கொண்டு இப்பலியில் இணைவோம்.

மன்றாட்டுகள்

1. இவ்வுலக பணியைத் துறந்துவிட்டு இறை பணிக்காக தன்னை ஈடுபடுத்திய எலிசாவைப் போல, இறைப்பணிக்கு அழைக்கப்பட்ட திருஅவை பணியாளர்கள் சீடத்துவத்தின் மகத்துவத்தோடு கவனச் சிதறல்களைக் களைந்து நற்செய்திப் பணியை செய்ய வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. உழைப்பையும் உழவுத் தொழிலையும் நேசிப்பவரே எம் இறைவா!
எம் நாட்டின் நிலைமையை நீர் அறிவீர். இயற்கையைச் சிதைத்து, எதிர்கால சந்ததியை பாதிக்கும் அணுசக்தி திட்டங்களை செயல்படுத்த முனையும் ஆட்சியாளர்களை நீர்தாமே மாற்றி, தேவையான ஞானத்தைத் தந்து ஆசீர்வதிக்கவேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. கற்றுக் கொடுப்பவரே எம் இறைவா!
எங்கள் குழந்தைகளுக்காகவும் இளைஞர் இளம் பெண்களுக்காகவும் மன்றாடுகின்றோம். அவர்கள் சரியான இலக்கை தேர்ந்தெடுக்கவும் அதை அடைய சரியான பாதையில் பயணிக்கவும், இவ்வுலக கலாச்சார சீர்கேட்டிற்கு துணை நிற்காமல் ஆற்றலோடு வழி நடக்க வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. கருணை மழையே எம் இறைவா!
எங்கள் தமிழகம் தண்ணீர் பிரச்சனையால் தவிக்கும் இவ்வேளையில் போதிய பருவ மழையைத் தந்து ஆசீர்வதிக்கவும், வேளாண்மை சிறக்கவும், மழைநீர் தகுந்த முறையில் சேமிக்கும் அறிவை மக்கள் பெற்று செயல்படுத்தவும், குடும்ப அமைதி, மகிழ்ச்சி தர வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

5. நலன்களால் எம்மை நிரப்புபவரே எம் இறைவா!
எம் பகுதியில் போதிய மழையைத் தந்து நீர்நிலைகள் பெருகி, விவசாயம் சிறக்கவும், பொருளாதாரம் உயரவும். குடும்பங்களில் அமைதி, சந்தோசம் நிறையவும், மாணவர்கள் தங்கள் எதிர்கால வாழ்வை சிறப்பாக அமைக்கவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டி காத்திருப்போர் உமதருளால் பெற்றுக் கொள்ளவும் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.

GOD IS LOVE"

Rev. Fr. Amirtha Raj Sundar J.,
amirsundar@gmail.com;
+ 91 944 314 0660; www.arulvakku.com

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!