Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                               year B  
                                                         பொதுக்காலம் 13ம் - ஞாயிறு
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 23-24


சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை.

கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் திபா 30: 1,3. 4-5. 10,11a,12b (பல்லவி: 1a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.
1
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
3
ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி

4
இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
5
அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி

10
ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
11a
நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
12b
என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். - பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 7, 9, 13-15

சகோதரர் சகோதரிகளே,

நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபடவேண்டும்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.

மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்கவேண்டும் என்றே சொல்கிறோம். இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும். "மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை" என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43


அக்காலத்தில்

இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, "என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்" என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்.

அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.

உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், "என்னைத் தொட்டவர் யார்?" என்கிறீரே!" என்றார்கள்.

ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" என்றார்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?" என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.

அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, "ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றிய பின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், "தலித்தா கூம்" என்றார். அதற்கு, "சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு" என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். "இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது" என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அல்லது குறுகிய வாசகம்

சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு.


✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-24, 35b-43


அக்காலத்தில்

இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, "என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்" என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்.

தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?" என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.

அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, "ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், "தலித்தா கூம்" என்றார். அதற்கு, "சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு" என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். "இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது" என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

I சாலமோனின் ஞானம் 1: 13-15; 2: 23-24
II 2 கொரிந்தியர் 8: 9, 13-15
III மாற்கு 5: 21-43

"நம்பிக்கையை மட்டும் விடாதீர்"

நிகழ்வு

எதிர்பாராத திருப்பங்களுடன் முடியும் கதைகளை எழுதுவதில் வல்லவரான ஓ. ஹென்றியின் பிரபலமான சிறுகதைகளில் ஒன்று "கடைசி இலை" (Last Leaf). 1907 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தச் சிறுகதை மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தச் சிறுகதையில் வரும் கதாநாயகன் உடல் நலம்குன்றி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பான். மருத்துவமனையில் இவனுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்படும்; ஆனாலும் இவன் "இன்னும் ஒருசில நாள்களில் நான் இறந்துவிடுவேன்!" என்ற அவ ம்பிக்கையோடு இருப்பான். இதனால் இவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பலனில்லாமல் போகும்.

இந்த நேரத்தில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய செவிலிப்பெண் ஒருவர் இவனிடம், நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைச் சொல்லி, "நீ விரைவில் நலமடைவாய்" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இதற்கு நடுவில் இவன் படுத்திருந்த படுக்கைக்கு அருகிலிருந்த சன்னல் வழியாக இவன் வெளியே பார்த்தபொழுது, ஒரு செடி இருக்கக் கண்டான். நன்றாக இருந்த அந்தச்செடி ஏனோ திடீரெனப் பட்டுப்போய், ஓர் இலையைத் தவிர்த்து மற்ற எல்லா இலைகளும் அதிலிருந்து உதிர்ந்தன. இதை இவன் தன்னிடம் அடிக்கடி பேசவரும் செவிலிப்பெண்ணிடம் சுட்டிக்காட்டி, "இந்தச் செடியைப் போன்றவன்தான் நான். இச்செடியில் ஓர் இலையைத் தவிர்த்து, மற்ற எல்லா இலைகளும் உதிர்ந்துவிட்டன. நாளைக்கு, எஞ்சியிருக்கும் இந்த இலையும் உதிர்ந்துவிடும். இந்த இலையைப் போன்று நானும் உதிர்ந்துவிடுவேன்" என்றான்.

இதைப் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த செவிலிப்பெண், "அப்படியெல்லாம் இந்த இலை உதிராது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். மறுநாள் காலையில் இவன் சன்னல்வழியாகச் செடியைப் பார்த்தபொழுது, அந்த செடியில் இருந்த எஞ்சிய இல்லை உதிராமல் அடிப்படியே இருந்தது. இவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. "இந்த இலையைப் போன்று நானும் உயிரோடு இருப்பேன்" என்று இவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். இதற்குப் பிறகு இவன் தனக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சையை நம்பிக்கையோடு பெற்று, விரையில் நலமடைந்தான். மருத்துவமனையில் இவனுக்குச் சிகிச்சை முடிந்ததும், இவனிடம் அடிக்கடி பேசிவந்த செவிலிப்பெண் இவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டுபோனார். போகும்வழியில் செடியில் உதிராமலிருந்த இலைக்கு அருகில் இவனைக் கொண்டுசென்று, அதை உற்றுப்பார்க்கச் சொன்னார். இவன் அதை உற்றுப்பார்த்தபொழுதுதான் தெரிந்தது, அது உண்மையான இலை அல்ல, துணியால் செய்யப்பட்ட இல்லை என்று. அப்பொழுது செவிலிப்பெண் இவனிடம், "உனக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காகவே, நான் ஓர் ஓவியரைக் கொண்டு துணியால் இந்த இலையை செய்து பொருத்தினேன்" என்றார்.

ஆம், நமக்கு நம்பிக்கை இருந்தால், உயிரோடு பல ஆண்டுகள் வாழலாம். அதைத்தான் இந்த நிகழ்வும், இன்றைய இறைவார்த்தையும் உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.

நம்பிக்கையினால் நலம்பெற்ற இருவர்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இருவருக்கு நலமளிக்கின்றார் அல்லது ஒருவரை நலமாக்கி இன்னொருவரை உயிர்த்தெழச் செய்கின்றார். ஒருவர் இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி; இன்னொருவர் தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் மகள்.

இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒருசில ஒற்றுமைகள் இருக்கின்றன. முதலாவதாக, இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தொடுதலாலேயே வல்ல செயல் நடக்கின்றது. இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி, "நான் ஆண்டவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று தொட்டு நலம்பெறுகின்றார். தொழுகைக்கூடத் தலைவரான யாயிர் இயேசுவிடம், "நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்" என்கிறார். இயேசுவும் அவருடைய மகளை கைகளைப் பிடித்துத் தொட்டு உயிர்த்தெழச் செய்கின்றார். இரண்டாவதாக, இரண்டு நிகழ்வுகளிலும் பன்னிரண்டு என்ற எண்ணானது இடம்பெறுகின்றது. இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி பன்னிரண்டு ஆண்டுகளாய்த் துன்புறுகின்றார். யாயிரின் மகளுக்குப் பன்னிரண்டு வயது. மூன்றாவதாக, இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இடம்பெறுகின்றவர்களும் நம்பிக்கையாலேயே நலம் பெறுகின்றார்கள். நான் இயேசுவின் ஆடையைத் தொட்டால் போதும், நலம் பெறுவேன் என்று இரத்தப்போக்கினால் பதிக்கப்பட்ட பெண்மணி நம்பிக்கையோடு தொட்டு நலம்பெறுகின்றார். யாயிரோ இயேசுவின்மீது இறுதிவரை நம்பிக்கையோடு இருந்து, இறந்த தன் மகளை உயிரோடு பெறுகின்றார்.

இவ்வாறு நாம் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழும்பொழுது நலமான வாழ்வினைப் பெறுவோம் என்பதை நற்செய்தி வாசகம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

அழியாமைக்கென்றே கடவுள் மனிதர்களைப் படைத்தார் என்பதை நம்புவோம்

ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்கள் இவ்வுலகில் போர்களும் இயற்கைப் பேரிடர்களும் ஏற்படும்பொழுது, கடவுள் மனிதர்களை அழிப்பதற்காகவே இவற்றையெல்லாம் அனுப்புகின்றார் என்று சொல்வார்கள். நாமும் இக்கூற்றைப் பலமுறை சொல்லியிருக்கலாம். உண்மை அதுவல்ல,

சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம் மேலே உள்ள கூற்றிற்குப் பதில் தருவதாக இருக்கின்றது. ஆம், "இருக்கவேண்டும் என்பதற்காகவே கடவுள் அனைத்தையும் படைத்தார்". மேலும் "கடவுள் மனிதர்களை அழியாமைக்கேன்றே படைத்தார்". அப்படியானால், இவ்வுலகில் சாவும் அழிவும் நேரிடுகின்றன என்றால், அவை மனிதன் செய்த பாவத்தின் விளைவே ஆகும். எனவே, கடவுளின் ஒரே மகனாம் இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, அழியாமல் நிலைவாழ்வு பெறுவோம் (யோவா 3: 16).

நம்பிக்கை என்பது சொல்லல்ல, செயல்

ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டால் நலமான வாழ்வு கிடைக்கும்; அழியாமைக்கென்றே கடவுள் மனிதரைப் படைத்திருக்கின்றார் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் நிலைவாழ்வைப் பெறுவோம் என்பன குறித்து மேலே நாம் சிந்திப்போம். இப்பொழுது நம்பிக்கையின் அடுத்த பரிமாணத்தைக் குறித்துப் புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவதைப் பற்றி சிந்திப்போம்.

இன்றைய இரண்டாம்வாசகத்தில் புனித பவுல் கொரிந்து நகர் மக்களிடம் நம்பிக்கை, நாவன்மை ஆகியவற்றை மிகுதியாகக் கொண்டிருக்கும் நீங்கள், "அறப்பணியிலும் முழுமையாய் ஈடுபட வேண்டும்" என்கிறார். புனித பவுலின் இவ்வார்த்தைகளை புனித யாக்கோபின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், "நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால், தன்னிலேயே அது உயிரற்றது" (யாக் 2: 17) என்று சொல்லலாம். கொரிந்து நகர் மக்கள் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவையில் உள்ள அல்லது வறியநிலையில் உள்ள மக்களுக்கு அறப்பணிகளைச் செய்து, அவர்களது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுக்கச் சொல்கின்றார் புனித பவுல். இதற்கு அவர், செல்வராயிருந்தும் நமக்காக ஏழையான இயேசுவை (பிலி 2: 5-8) எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். ஆகவே, நம்மை அழியாமைக்கென்று படைத்திருக்கும் ஆண்டவரில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.

சிந்தனை

"நம்பிக்கையானது புதிய மற்றும் கற்பனை செய்யமுடியாத சாத்தியங்களைத் திறக்கிறது" என்பார் இராபர்ட் சி. சாலமோன் என்ற அறிஞர். எனவே, நாம் இறைவனிடம் ஆழமான நம்பிக்கைகொண்டு வாழ்வோம். அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 சாலமோனின் ஞானம் 1:1315; 2:2324
2 கொரிந்தியர் 8:7, 9, 1315
 மாற்கு 5:2143

இருவகை வாழ்க்கை

மனித குலம் தோன்றியது முதல் நாம் விடை தேடுகின்ற கேள்விகளில் ஒன்று, 'தீமை எங்கிருந்து வந்தது?' கடவுள் அனைத்தையும் நல்லதெனக் கண்டார் எனில், தீமை எப்படி வந்தது? கடவுள் நல்லவர் என்றால், அவர் தீமையை ஏன் அனுமதிக்கிறார்? தீமை இந்த உலகில் இருக்கிறது என்றால் கடவுள் வலிமை அற்றவரா? - இப்படி நிறைய மெய்யியல் கேள்விகளை மனுக்குலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. தீமைகளில் கொடிய தீமையாகக் கருதப்படுவது இறப்பு.
இறப்பை யாருக்கும் பிடிப்பதில்லை. பிறப்பு நமக்குப் பிடிப்பது போல இறப்பு பிடிப்பதில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்வது போல, 'நீ இறந்தவுடன் விண்ணகத்திற்குச் செல்வாய்' என்று ஒருவரிடம் சொன்னாலும்கூட, அவருக்கு இறப்பதற்குப் பிடிப்பதில்லை. இந்த உலகை விட மறுவுலகம் நன்றாக இருக்கும் என்ற உறுதியைத் தந்தால்கூட இறப்பை யாரும் விரும்புவதில்லை. இந்த இறப்பு எப்படி வந்தது? என்ற கேள்விக்கு நிறைய இலக்கியங்களும் சமயங்களும் தத்தம் முறைகளில் விடை காண முயற்சி செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, கில்கமேஷ் என்ற சுமேரிய அக்காடிய இலக்கியத்தில், 'கடவுள் உலகைப் படைத்தபோதே இறவாமையைத் தனக்கென வைத்துக்கொண்டு இறப்பை நமக்குத் தந்துவிட்டார். ஆக, குறுகிய இந்த வாழ்க்கையில், நன்றாகக் குளி, நல்ல ஆடை அணி, நறுமணத் தைலம் பூசு, காதல் மனையாளைத் தழுவிக்கொள், அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளைப் பேணி வளர். அதுவே இறவாமை' என்று இறவாமைக்கு புதிய பொருள் தரப்படுகின்றது.
இணைத்திருமுறை நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற சாலமோனின் ஞானநூல் இறப்பு எப்படி வந்தது என்பதற்கான விடையைச் சொல்லும் பகுதியே இன்றைய முதல் வாசகம். கிறிஸ்து பிறப்பதற்கு மிகவும் சில மாதங்களுக்கு முன்பு வடிவம் பெற்ற நூல் இது. கிரேக்கமயமாக்கலின் பின்புலத்தில் எழுதப்பட்ட நூல் மனித இறப்பு பற்றி பேசுகின்றது. நூலின் ஆசிரியர் இறப்பு எப்படி வந்தது என்பதை மிக எளிமையாகப் பதிவு செய்கின்றார்: 'சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை. அழிவில் அவர் மகிழ்வதில்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார். அலகையின் பொறாமையால் சாவு உலகில் வந்தது.' அதாவது, படைப்பின் தொடக்கத்தில் ஆதாம்-ஏவாள் பாம்பால் சோதிக்கப்பட்ட நிகழ்வை, அலகையின் பொறாமை என்று மொழிகின்றார் ஆசிரியர். அலகை இருக்கிறதா? என்ற அடுத்த கேள்விக்கு நாம் சென்றுவிட வேண்டாம். மாறாக, அனைத்தும், அனைவரும் வாழ வேண்டும் என விரும்புகின்றார்.
நாம் அனைவரும் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார். இருந்தாலும், நாம் வாழும் இந்த உலகில் வாழ்வை அழிக்கக் கூடிய முதல் காரணியாக அன்று இருந்தது நோய். இன்றும், நோய்தான் முதன்மையான காரணி. அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் நாம் முன்னேறினாலும் இன்று நோய்தான் வெல்ல முடியாத எதிரியாக நம் முன் உள்ளது.
இரு வகை நோய்களால் துன்பப்பட்டவர்கள் எப்படி இயேசுவால் நலம் பெற்றார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். இரத்தப் போக்குடைய பெண் இயேசுவின் ஆடையைத் தொட்டவுடன் நலம் பெறுகின்றார். தொழுகைக் கூடத் தலைவரின் மகள் இயேசு தொட்டவுடன் உயிர் பெறுகின்றார். இரண்டு நிகழ்வுகள் ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட்டது பற்றி நிறையக் கருத்துகள் உள்ளன. இரண்டு நிகழ்வுகளும் மிக நெருங்கிய தொடர்புடையவை. பெண் 12 ஆண்டுகள் நோயினால் வருந்துகிறார். இளவலுக்கு வயது 12. இரத்தம் உயிர் சார்ந்தது. இளவல் உயிர் துறக்கின்றார். இரண்டு இடங்களிலும் கூட்டம் தடையாக இருக்கின்றது. இரண்டு நிகழ்வுகளிலும் நம்பிக்கை வலியுறுத்தப்படுகின்றது. இளவல் இறப்பதற்கான தளத்தை பெண் நிகழ்வு ஏற்படுத்திக்கொடுக்கிறது. தொழுகைக்கூடத் தலைவரின் அவசரத்தைக் குறைப்பதற்காக நிகழ்வு நடக்கிறது. கூட்டம், பெண், இயேசுவின் உரையாடல் என அனைத்தும் இளவல் உயிர் பெறுவாரா? என்ற கேள்வியை வாசகரில் எழுப்புகிறது.
நம் வாழ்க்கையில் துன்பம் உண்டு என்பது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய எதார்த்தம். நோய், முதுமை, இறப்பு போன்ற உடலியல் துன்பங்களாக இருக்கலாம். அல்லது சோர்வு, தயக்கம், பயம், குற்றவுணர்வு, வெறுமை, தனிமை போன்ற உளவியல் துன்பங்களாக இருக்கலாம். அல்லது பாவம், உடனடி இன்பம் போன்ற ஆன்மிகத் துன்பங்களாக இருக்கலாம். துன்பங்களை நாம் தவிர்க்க முடியாது. ஆனால், துன்பங்களை நாம் இரண்டு முறைகளில் எதிர்கொள்ளலாம். அல்லது துன்பம் நிறைந்த இவ்வாழ்க்கையை நாம் இரண்டு முறைகளில் வாழலாம்.
ஒன்று, இரத்தப் போக்குடைய பெண் வாழ்ந்தது போல.
இரண்டு, தொழுகைக் கூடத் தலைவர் வாழ்ந்தது போல.
முதலில், இரத்தப் போக்குடைய பெண் போல எப்படி வாழ்வது?
நிகழ்வில் வரும் இந்தப் பெண் மூன்று நிலைகளில் துன்பம் அனுபவிக்கின்றார்: உடல்சார் துன்பம். உயிர் குடியிருக்கிறது என்று மக்கள் நம்பிய இரத்தம் அன்றாடம் வெளியேறிக்கொண்டிருக்க, இந்தப் பெண் வெளிறிப் போயிருப்பாள். இரண்டாவது, பொருள்சார் துன்பம். மருத்துவரிடம் தன் பணத்தை எல்லாம் செலவிட்டதாக நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். ஆன்மிகம்சார் துன்பம். உடலில் ஒழுக்கு இருப்பது தீட்டு எனக் கருதப்பட்ட நிலையில் இந்தப் பெண் கடவுளிடமிருந்து தான் அந்நியப்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்திருப்பார். உடல் வலி பொறுக்காமல், கையில் காசு இல்லாமல், கடவுளால் கைவிடப்பட்ட உணர்வில், தனக்கிருந்த இறுதி வாய்ப்பாக இயேசுவின் மேலாடையைப் பார்த்தார். தன் இயலாமையில், தன் இல்லாமையில் இயேசுவால் எல்லாம் இயலும் என்றும், அவர் வழியாகவே தன் இருத்தல் சாத்தியம் என்றும் உணர்ந்த அவர் கூட்டத்தை ஊடுருவுகின்றார். கூட்டம் இங்கே ஒரே நேரத்தில் தடையாகவும் வாய்ப்பாகவும் இருக்கிறது. கூட்ட மிகுதியால் இயேசுவை நெருங்க முடியவில்லை. அதே வேளையில் கூட்டம் இருந்ததால் தன் முகத்தை இயேசுவிடமிருந்து மறைத்துக்கொள்ளவும் இவரால் முடிந்தது. இயேசுவின் மேலாடையைத் தொட்ட அந்த நொடியில் தன் உடலில் மாற்றத்தை உணர்கின்றார் பெண். என்னே ஒரு ஞானம்! தன் உடலின் இயக்கத்தைத் தெளிவாக உணர்ந்தவராக இருக்கிறார். உடல் நலம் பெற்ற மகிழ்ச்சி சற்று நேரத்தில் களைகிறது. 'யார் என்னைத் தொட்டது?' என்ற இயேசுவின் கேள்வி இவளுடைய காதுகளில் விழுகிறது. இவ்வளவு நேரம் தன் உடல் போராட்டத்தை மட்டுமே எதிர்கொண்ட அவள், இப்போது, 'மக்கள் என்ன நினைப்பார்கள்?' என்ற உள்ளப் போராட்டம் அனுபவிக்கின்றாள். இருந்தாலும், இயேசுவிடம் சரணடைகின்றார். தனக்கு நடந்தது அனைத்தையும் சொல்கின்றார். 'மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று' என அனுப்புகிறார் இயேசு.
இந்தப் பெண், தன் பார்வையை இயேசுவின்மேல் பதிய வைத்தாள். தனக்கு முன் இருந்த கூட்டம் என்ற தடையை வாய்ப்பு எனப் பயன்படுத்தினார். இயேசுவிடம் சரணாகதி அடைந்தார். இயேசுவின் மேலாடைக்கும் நலமாக்கும் ஆற்றல் உண்டு என உணர்ந்தார். பாதியில் வந்தார். பாதியில் சென்றார். நலமற்று வந்தவர், உடலிலும் உள்ளத்திலும் நலம் பெற்றுச் செல்கின்றார்.
இரண்டாவதாக, தொழுகைக்கூடத் தலைவர் போல எப்படி வாழ்வது?
இயேசுவின் தொடுதல்தான் தன் மகளுக்கு நலம் தரும் என நம்புகிறார் தலைவர். இயேசு உடனடியாக அவருடன் செல்வது நமக்கு ஆச்சர்யம் தருகிறது. ஆனால், வேகம் உடனடியாகக் குறைகிறது. கூட்டம் ஒரு தடையாக மாறுகிறது. பாதியில் வந்து நலம் பெற்ற பெண் தடையாக இருக்கிறார். ஆனாலும், அந்த நிகழ்வைக் கண்டவுடன் தலைவரின் நம்பிக்கை உறுதியாகியிருக்கும். ஆனால், சற்று நேரத்தில் வந்த மகளின் இறப்புச் செய்தி அவருக்குப் பயம் தருகிறது. 'அஞ்சாதீர்! நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!' என அவருக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. வீட்டில் இருந்த கூட்டம் இன்னொரு தடை. அவர்கள் பேசிய கேலிப்பேச்சு மற்றுமொரு தடை. தடைகளைத் தாண்டிச் சென்றவர் தன் மகளை நலமுடன் பெற்றுக்கொள்கின்றார்.
இந்த நிகழ்வில், நம்பிக்கையில் இவர் நிலைத்து நிற்க கடவுளின் துணை தேவைப்படுகிறது. ஆனால், முதல் நிகழ்வில், நம்பிக்கையால் உந்தப்பட்டு அந்தப் பெண் வருகின்றார். அங்கே, நம்பிக்கை பாராட்டப்படுகிறது. தலைவர் நிகழ்வில் நம்பிக்கை அறிவுறுத்தப்படுகின்றது.
ஆக, இரத்தப் போக்குடைய பெண் போல நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வது முதல் வகை.
தலைவர் போல கடவுள் நமக்கு நம்பிக்கை தந்தால்தான் அவருடன் பயணிப்பது இரண்டாவது வகை.
இன்னொரு வகையான வாழ்க்கை முறையும் இருக்கிறது. கூட்டத்தின் மனநிலை. இயேசுவின் உடனிருப்பும் நம்பிக்கை நிறைந்த சொற்களும் அவர்களுக்குக் கேலியாக இருக்கின்றன. வாழ்க்கையின் துன்பத்தைக் கண்டே பழகிப் போனவர்கள் விரக்தியாகச் சிரிக்கிறார்கள்.
இவர்களுக்கு வேலைக்காரர்கள் பரவாயில்லை. 'உம் மகள் இறந்துவிட்டாள். போதகரைத் தொந்தரவு செய்யாதீர்!' என எதார்த்தமாகச் சொல்கின்றனர். 'பால் கொட்டிவிட்டது! இனி அழுது புலம்பி என்ன செய்ய?' என்பது அவர்களுடைய மனநிலை. பல நேரங்களில் இதுதான் நம் மனநிலையாகவும் இருக்கிறது.
ஆக, பெண், தொழுகைக்கூடத் தலைவர், கூட்டம், வேலைக்காரர்கள் என நாம் நம் வாழ்க்கையை நான்கு நிலைகளில் எதிர்கொண்டாலும், நம்பிக்கையின் பாடங்களைக் கற்பிப்பவர்கள் பெண்ணும் தலைவரும். பெண் கொண்டிருந்த நம்பிக்கை போல நம் நம்பிக்கை இருந்தாலும், அங்கே சில சஞ்சலங்கள் எழவே செய்கின்றனர். இறைவனின் உடனிருப்பால் அதைத் தக்கவைக்கின்றார் தலைவர்.
நம்பிக்கை என்பது கொடை. கடவுள் கொடுத்தாலன்றி அதை எவரும் பெற்றுக்கொள்ள இயலாது.
எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளின் உடனிருப்பு மேலோங்கி நிற்கிறது. நாம் நோயுற்றாலும் இருந்தாலும் நாம் தொடும் தூரத்தில் கடவுள் இருக்கிறார், கடவுளின் மேலாடை இருக்கிறது.
இதுவே இயேசு கிறிஸ்துவின் அருள்செயல் என்று கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகின்றார் பவுல்: 'அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்!'
இறுதியாக,
தீமை கண்டும், சாவு கண்டும், நோய் கண்டும் நாம் அஞ்சத் தேவையில்லை. இவை நம்மோடு இருந்தாலும், நமக்கு அருகில் இறைவன் இருக்கின்றார். கையை நீட்டி அவரைத் தொட்டாலோ, அவர் தன் கையை நீட்டி நம்மைத் தொட்டாலும் நாம் நலம் பெறுவோம்!
இதையே திருப்பாடல் ஆசிரியர் (காண். 30), 'நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்!' என்று பாடுகின்றார்.


(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!