|
year
B |
|
பொதுக்காலம் 12ம்
- ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!
யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 8-11
ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்: "கருப்பையினின்று
கடல் உடைப்பெடுத்து ஓடிய பொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர்
யார்?
மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதி துணியாக்கி, எல்லைகளை
நான் அதற்குக் குறித்து கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி `இதுவரை
வருவாய், இதற்கு மேல் அல்ல; உன் இறுமாப்பின் அலைகள் இங்கே
நிற்க!' என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?"
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 107: 23-24. 25-26. 28-29. 30-31 (பல்லவி: 1)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
23 சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்; நீர்த்திரள்மீது வாணிகம்
செய்தனர். 24 அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்; ஆழ்கடலில்
அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர். பல்லவி
25 அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல் காற்று எழுந்தது; அது கடலின்
அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது. 26 அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்;
பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்; அவர்கள் உள்ளமோ இக்கட்டால்
நிலைகுலைந்தது. பல்லவி
28 தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற
துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார். 29 புயல்
காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்; கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன.
பல்லவி
30 அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்; அவர்கள்
விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச்
சேர்த்தார். 31 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு
அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி
செலுத்துவார்களாக! பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
பழையன கழிந்து புதியன புகுந்தன.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து
வாசகம் 5: 14-17
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது.
ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர்.
இது நமக்குத் தெரியும்.
வாழ்வோர் இனித் தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக
வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.
ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை;
முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம்.
ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு
இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப் பட்டவராய் இருக்கிறார்.
பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 7: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர்
தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!
இவர் யாரோ?
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
4: 35-41
ஒரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, "அக்கரைக்குச்
செல்வோம், வாருங்கள்" என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு,
படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும்
அவருடன் சென்றன.
அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து
மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது.
அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத்
தூங்கிக்கொண்டிருந்தார்.
அவர்கள், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?"
என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி,
"இரையாதே, அமைதியாயிரு" என்றார். காற்று அடங்கியது; மிகுந்த
அமைதி உண்டாயிற்று.
பின் அவர் அவர்களை நோக்கி, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு
இன்னும் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டார். அவர்கள்
பேரச்சம் கொண்டு, "காற்றும் கடலும் இவருக்குக்
கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?" என்று ஒருவரோடு ஒருவர்
பேசிக்கொண்டார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
அபயம் தரும் இயேசு
ஒரு சமயம் வழிப்போக்கன் ஒருவன் பாக்தாத் நகர் நோக்கி நடந்து
போய்கொண்டிருந்தான். அப்போது அவனைக் கடந்து பிளேக் நோயானது
போய்க்கொண்டிருந்தது. அதைத் தடுத்து நிறுத்திய வழிப்போக்கன்
அதனிடம், "எங்கு போகின்றாய்?, என்ன விஷயமாய் போகின்றாய்?"என்று
கேட்டான். அதற்கு பிளேக் நோய் அவனிடம், "நான் பாக்தாத் நகர்
நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றேன். அங்கே 5000 பேரைக்
கொன்றொழிக்கப் போகிறேன்"என்றது. இதைக் கேட்டு திடுக்கிட்டுப்
போன வழிப்போக்கன் பாக்தாத் நகர் நோக்கி நடப்பதை
நிறுத்திவிட்டு, வேறோர் பக்கமாய் நடக்கத் தொடங்கினான்.
சில நாட்கள் கழித்து அந்த வழிப்போக்கன் பாக்தாத்திலிருந்து வந்த
வேறொரு வழிபோக்கனைச் சந்தித்தான். அப்போது முன்னவன் பின்னவனைப்
பார்த்து, "நீ பாக்தாத்திலிருந்துதானே வருகின்றாய், அங்கே சில
நாட்களுக்கு முன்பாக வந்த பிளேக் நோயினால் எத்தனைப் பேர் இறந்தனர்?"
என்று கேட்டான். அதற்குப் பின்னவன் அவனிடம், "ஐயா! அந்த கொடிய
பிளேக் நோயினால் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துபோனார்கள்"
என்றான். "ஐம்பதாயிரமா?, என்னிடத்தில் ஐயாயிரம் என்றுதானே
பிளேக் நோய் சொல்லிவிட்டுப் போனது"என்று மனதிற்குள்ளே
நினைத்துக்கொண்டான். பின்னர் முதலாவது வழிப்போக்கனிடமிருந்து
இரண்டாமவன் விடைபெற்றுச் சென்றான்.
இன்னும் சில நாட்கள் கழித்து வழிப்போக்கன் ஓர் ஊருக்குப்
போய்க்கொண்டிருக்கும் வழியில், அதே பிளேக் நோயைச் சந்தித்தான்.
உடனே அவன் அதனிடம், "பாக்தாத் நகரில் ஐயாயிரம் பேரைத்தானே கொல்வதாகச்
சொன்னாய், எதற்காக ஐம்பதாயிரம் பேரைக் கொன்றாய்?"என்று
கேட்டான். அதற்கு பிளேக் நோய் அவனிடம், "நான் அங்கு ஐயாயிரம்
பேரைத்தான் கொன்றேன். மீதிப்பேர் பயத்தினாலே இறந்துபோனார்கள்"
என்று சொல்லிவிட்டு வேகமாகப் போனது.
பயம், அதுதான் மனித இனத்தை ஆட்டிப்படைக்கும் மிகக்கொடிய நோய்
என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் இப்படி
பயந்து பயந்து வாழ்ந்து, நம்முடைய வாழ்வையே சீரழித்துக்கொண்டிருக்கும்
இந்தத் தருணத்தில் ஆண்டவர் இயேசு, "அஞ்சாதீர்"என்று சொல்லி நம்மைத்
தேற்றுபவராக இருக்கின்றார்.
பொதுக்காலத்தின் பனிரெண்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட
வாசகங்கள் அச்சத்தை விடுத்து, ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை
கொள்வோம், அபயம் தரும் இயேசு என்னும் உண்மையை நமக்கு எடுத்துக்கூறுவதாக
இருக்கின்றன. நாம் அதனைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப்
பார்த்து நிறைவு செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் கடலில்
போய்க்கொண்டிருக்கின்றார்கள். அப்போது திடிரென்று புயல் அடிக்கின்றது;
காற்று கடுமையாக வீசுகின்றது. இதனால் கடல்தண்ணீர் அவர்கள் பயணம்
செய்த படகிற்குள் புகுந்து அவர்களைப் பயங்கொள்ளச் செய்கிறது.
ஆனால், இவற்றுக்கு மத்தியில் இயேசு கிறிஸ்து படகின் பின்னால்
தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கின்றார். கடல் தண்ணீர் படகிற்குள்
புகுந்ததால் தாங்கள் சாவது உறுதி என நினைத்த சீடர்கள், "போதகரே!,
சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?"என்று சொல்லி அவரை எழுப்புகிறார்கள்.
இயேசுவோ, "இரையாதே, அமைதியாயிரு"என்று சொல்ல அவை அமைதியாகின்றன.
உடனே சீடர்கள், "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்படிகின்றவே,
இவர் யாரோ"என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்கிறார்கள்.
இயேசு காற்றையும் கடலையும் அடக்கிய இந்த நிகழ்வு நமக்கு ஒருசில
உண்மைகளை மிகத் தெளிவாக விளக்குகின்றது. அவை என்னவென்று இப்போது
பார்ப்போம்.
பொதுவாக மாற்கு நற்செய்தியில் இயேசு கிறிஸ்து ஒவ்வொரு அருமடையாளத்தைச்
செய்கின்றபோதும் மக்கள் இயேசுவைக் குறித்து இவர் யார்? என்று
பேசிக்கொள்வார்கள். இன்றைய நற்செய்தியிலும் இயேசு காற்றையும்
கடலையும் அடக்குகின்றபோது, சீடர்கள் இவர் யாரோ என்றுதான்
பேசிக்கொள்கின்றார்கள். மாற்கு நற்செய்தியாளர் இப்படி மக்கள்/சீடர்கள்
இவர் யாரோ என்று கேட்பதாகக் குறிப்பிடும் அதே நேரத்தில், இயேசு
உண்மையில் யார் என்பதையும் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
மாற்கு நற்செய்தியாளர், இயேசு காற்றையும் கடலையும் அடக்குகின்ற
நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதன் வழியாக, அவர் இயற்கையின்மீது/ ஏன்
எல்லாவற்றின்மீது அதிகாரம் கொண்டிருக்கின்றார் என்னும் உண்மையை
நமக்கு மிகத் தெளிவாக விளக்குகின்றார். ஆம், இயேசுவுக்கு
விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் இருக்கின்றது (மத்
28:18). அவர் ஒருவார்த்தை சொல்ல காற்றும் கடலும் ஏன் தீய ஆவியும்
அவருக்கு அடிபணிவது அதனால்தான்; உடல் நலமாற்றோரிடமிருந்து நோய்
நீங்குவது அதனால்தான். ஆகவே, இயேசுவுக்கு எல்லாவற்றின்மீதும்
அதிகாரம் உண்டென்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
யோபு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்
கடவுள் எத்துணை உயர்ந்தவர், அவருக்கு எல்லாமே கட்டுப்படும் என்னும்
உண்மை மிகத் தெளிவாக விளங்குகின்றது. அங்கு நாம் இவ்வாறு படிக்கின்றோம்,
"கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடியபொழுது அதனைக் கதறவிட்டு
அடைத்தார் யார்?"என்று. உடைபெடுத்து ஓடிய கடலை அடைத்தது ஆண்டவர்தானே
அன்றி வேறு யாராக இருக்கமுடியும்?. இங்கே ஆண்டவருக்கு எல்லாமே
கட்டுப்படும் என்பது தெளிவாகின்றது. நற்செய்தியில் எப்படி ஆண்டவர்
இயேசுவுக்கு காற்றும் கடலும் கட்டுப்படுகின்றதோ அதுபோன்று இங்கு
கடலும் அலைகளும் கடவுளுக்குக் கட்டுபடுவதாக இருக்கின்றன. எனவே,
இறைவனுக்கு முன்னால், அவர் மகன் இயேசுவுக்கு முன்னால் காற்றும்
கடலும் ஒன்றுமில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
இயேசு காற்றையும் கடலையும் அடக்குகின்ற நிகழ்வு நமக்கு உணர்த்தும்
இரண்டாவது உண்மை இயேசு/ இறைவன் இயற்கை இடர்களிலிருந்து நம்மை
நிச்சயம் காப்பாற்றுவார் என்பதாகும். கடலில் புயல் அடித்தது,
அலைகள் பொங்கி எழுந்தது. கடல்தண்ணீர் இயேசுவும் அவருடைய சீடர்களும்
பயணம் செய்த படகுக்குள் வந்தது. ஆனால், அவற்றால் சீடர்களுக்கு
ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம் இயேசு அவர்களோடு இருந்தார்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் நாம் துன்பங்களை, சவால்களை,
இடர்களைச் சந்திக்கின்றபோது இறைவன் நம்மைவிட்டுத் தூர விலகி
நிற்காமல், நம்மோடு இருக்கின்றார் என்பதுதான் நிதர்சனம்.
இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்தில் படிக்கின்றோம்,
"நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்;
ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா;
தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்படமாட்டாய்; நெருப்பு உன்மேல்
பற்றி எரியாது. ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் நான்"(எசா
43:2,3). ஆம், நம் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றபோது நமக்கு என்ன
கவலை என்பதை உணர்ந்தவர்களாய் வாழவேண்டும் என்னும் செய்தியைத்
தான் மேலே உள்ள இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.
துன்ப வேளையில் நாம் இறைவனின் பாதுகாப்பையும் பராமரிப்பையும்
உணர்ந்திருக்கின்றோமா? என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக
இருக்கின்றது.
ஒருமுறை லாரன்ஸ் பிரதர்டன் என்பவரும் அவருடைய மனைவியும் நயாகரா
நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தார்கள். அங்கு
சென்ற அவர்கள் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு முன்பாக இருந்த ஒரு பாலத்திலிருந்து,
மிக உயரத்திலிருந்து ஆர்ப்பரித்து விழுந்த நீர்வீழ்ச்சியைக் கண்டு
ரசித்தார்கள். அவர்கள் நின்றுகொண்டிருந்த பாலத்திற்குக் கீழோ
தண்ணீர் மணிக்கு 60 மெயில் வேகத்தில் மிக வேகமாகப் பாய்ந்தோடியது.
யாராவது தப்பித் தவறி உள்ளே விழுந்தால், உயிர் பிழைப்பது கடினம்
என்பதாகவே நிலைமை இருந்தது.
இவ்வாறு நீர்வீழ்ச்சியையும், அதன் வேகத்தையும் கண்டுகழித்துக்
கொண்டிருந்த லாரன்ஸ் பிரதர்டன் கொஞ்ச தூரம் தள்ளி, அவ்வளவு வேகமாகப்
போய்க்கொண்டிருக்கும் தண்ணீருக்குள் வாத்துகள்
நீந்திக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அக்காட்சி அவருடைய சிந்தனையைத்
தூண்டுவதாக இருந்தது. குறிப்பாக அக்காட்சி அவரை, படகில் இயேசு
தன்னுடைய சீடர்களோடு கடலில் பயணம் செய்கின்ற நிகழ்ச்சியை
நினைவூட்டியது. அப்போது அவர், "ஐந்தறிவு படைத்த இந்த
வாத்துக்கூட்டமே (இறைவனின் பாதுகாப்பை உணர்ந்து), வேகமாக ஓடும்
தண்ணீரிலும் அமைதியாக இருக்கும்போது, இயேசு தங்களோடு இருந்தபோதும்
சீடர்களால் மட்டும் எப்படி கடலில் திடிரென்று ஏற்பட்ட புயலில்
அஞ்சி நடுங்கியது முடிந்தது?"என்று நினைத்துக்கொண்டார். இறைவன்
நமக்கு எப்போதும் துணையாக இருக்கின்றார், நாம்தான் அதனை உணராதவர்களாக
இருக்கின்றோம் என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
இயேசு நம்மை ஆபத்திலிருந்தும் எல்லா இடர்களிலிருந்தும்
காப்பாற்றுகின்றார் என்றால் அதற்கு அவர் நம்மீது கொண்ட அன்புதான்
காரணம். அதைத்தான் தூய பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில்,
கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கின்றது"என்கிறார். ஆகவே,
இயேசுவும் அவரது அன்பும் நம்மோடு இருக்கும்போது நாம் எதைக் கண்டும்
அஞ்சத் தேவையில்லை என்ற மனநிலையோடு வாழக் கற்றுகொள்வோம்.
நிறைவாக நற்செய்தி வாசகம் உணர்த்தும் உண்மை நாம் ஆண்டவரிடம் எப்போதும்
நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும் என்பதாகும். சீடர்கள் இயேசு தங்களோடு
இருக்கிறார் என்பதைக் கூட அறியாமல், அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல்
இருந்தார்கள். அதனால்தான் அவர்கள் அப்படி அஞ்சி நடுங்கினார்கள்.
நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டிருக்கும்போது எதற்கும் அஞ்சிடத்
தேவையில்லை. ஏனென்றால் நம்பிக்கை இருக்கும் இடத்தில் அச்சத்திற்கு
இடமில்லை.
ஆகவே, நாம் நம்முடைய வாழ்க்கையில் இறைவனின் பராமரிப்பை எப்போதும்
உணர்ந்தவர்களாய் வாழ்வோம், எல்லா அச்சத்திலிருந்தும் விடுதலை
பெறுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
யோபு 38:1, 811
2 கொரிந்தியர் 5:1417
மாற்கு 4:3541
உன் அலைகள் எங்கே?
'நான் என் சுண்டுவிரலை நகர்த்தும்போது எங்கோ இருக்கின்ற நட்சத்திரத்தை
நகர்த்துகிறேன்' என்பது தாவோ எண்ணம். அதாவது, நானும் பிரபஞ்சமும்
ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றோம். செல்டிக் பண்பாட்டின் புரிதல்படி
நாம் வானில் காண்கின்ற விண்மீன்கள் யாவும் இந்த உலகைக் கடந்து
சென்றவர்கள் ஏற்படுத்திச் சென்ற பிரபஞ்சத் துவாரங்கள். அவற்றின்
வழியே அவ்வுலகின் ஒளி இவ்வுலகை நோக்கிக் கடந்து வருகின்றது.
அவர்கள் அவ்வுலகிற்குச் சென்றாலும் அத்துவாரங்கள் வழியே இவ்வுலகைப்
பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள். நம்முடைய பிரபஞ்சமும்
நாமும் ஏதோ ஓர் ஒருங்கமைவு இணைப்பில் இருக்கிறோம் என்பதை மறுக்க
முடியாது. நாள் விடிகின்றது, நாள் முடிகின்றது. நாம் பிறக்கின்றோம்,
நாம் இறக்கின்றோம். ஏதோ ஒரு பாடலின் இசை போல, ஓவியத்தின் ஒளி-இருள்
போல எல்லாம் அதனதன் நேரத்தில் நடந்துகொண்டிருக்கின்றது.
இந்த ஒருங்கியக்கத்தில் ஏதாவது ஒரு தடை வரும்போது நம் மனம் பதைபதைக்கின்றது.
அப்படி வரும் தடைகளை பதற்றமின்றி நாம் எப்படி எதிர்கொள்வது என்பதை
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குக் கற்றுத் தருகிறது. இந்த
உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் இன்னொருவருடன்
இணைந்திருக்கின்றோம். ஒருவர் மறையும்போது அவரைச் சுற்றி பிண்ணப்பட்ட
வலை கிழிந்து போவதோடு, அதைத் திரும்பப் புதுப்பிக்க முடியாத
நிலையும் உருவாகிவிடுகிறது.
நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் சீடர்களை நோக்கி, 'அக்கரைக்குச்
செல்வோம் வாருங்கள்!' என்றழைத்து, அவர்களோடு இணைந்து படகில் ஏறுகின்றார்.
அந்த நேரத்தில் புயல் அடிக்கின்றது. கெனசரேத்து ஏரி என அழைக்கப்படும்
கலிலேயக் கடல் உண்மையில் ஓர் ஏரி. சுற்றிலும் மலை சூழ்ந்திருப்பதாலும்,
கடல்மட்டத்திற்குக் கீழே இருப்பதாலும் பெருங்காற்று வீசும்போது
இந்நீர்த்தேக்கத்தில் ஏறக்குறைய 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுவதுண்டு.
இயேசுவின் சீடர்களில் பெரும்பாலானவர்கள் மீன்பிடித்தொழில் செய்தவர்கள்,
அல்லது இக்கடலைச் சுற்றி வாழ்ந்தவர்கள். ஆக, அவர்கள் அலைகளை அடிக்கடி
எதிர்கொண்டதுண்டு. இந்த நிகழ்வில், பெரும் புயல் அடித்தது எனச்
சொல்கின்ற மாற்கு, அங்கு நிலவிய இரண்டு சூழல்களை நம்முன்
கொண்டு வருகின்றார்: ஒன்று, அமைதியான சூழல். அந்தச் சூழலில் இயேசு
படகில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கின்றார். அதற்கு எதிர்மாறான
சூழல் இரண்டாவது. பரபரப்பான சூழல். அங்கே சீடர்கள் பரபரப்பாக,
பயந்து போய் இருக்கின்றனர். 'போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக்
கவலையில்லையா?' எனக் கேட்கின்றனர். இவர்கள் இயேசுவை வெறும் போதகராக
(ரபி) பார்க்கின்றனர். மேலும், தங்கள் கவலையில் இயேசுவையும் இணைத்துக்கொள்ள
முயற்சி செய்கின்றனர்.
இயேசு எழுந்து கடலைக் கடிந்துகொள்கின்றார். 'இரையாதே! அமைதியாயிரு!'
என்பது பேயோட்டுவதற்கான வாய்ப்பாடு. அதே வார்த்தைகளைச் சொல்லி
இயேசு கடலை அமைதியாக்குகின்றார். ஏனெனில், யூத மக்களைப் பொருத்தவரையில்
கடல் என்பது பேய்கள் வாழும் இடமாகக் கருதப்பட்டது. தொடர்ந்து
தன் சீடர்களைக் கடிந்துகொள்கின்றார் இயேசு: 'ஏன் அஞ்சுகிறீர்கள்?
உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?' இவ்வார்த்தைகள் வழியாக
அவர்களின் நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. அதாவது,
இயேசு தங்களோடு இருக்கும்போது தங்களுக்கு இறப்பு இல்லை என்பதை
அவர்கள் நம்ப மறுத்தனர். இதுதான் அவர்களின் நம்பிக்கைக்
குறைவான நிலை. இந்தக் கேள்விகள் சீடர்களைப் பார்த்து மட்டும்
கேட்கப்படவில்லை. இந்நிகழ்வை வாசிக்கும் நம் ஒவ்வொருவரையும்
பார்த்துக் கேட்கப்படுகின்றன. இவ்விரண்டு வினாக்களுக்கும்
நானும் நீங்களும் தனித்தனியாக விடை அளிக்க வேண்டும். நாம் அளிக்கும்
விடையைப் பொருத்தே, 'படகில் தூங்குபவரும் காற்றைக் கடிந்துகொள்பவரும்
யார்?' என்ற வினாவுக்கான விடை அமையும்.
தங்களுடைய வாழ்க்கை இயல்பாகக் கடந்து போன போது இரண்டு துன்பங்களை
எதிர்கொள்கின்றனர் சீடர்கள்: ஒன்று, 'அக்கரைக்குச் செல்கின்றனர்.'
இக்கரையில் இருந்த தங்களுடைய பெற்றோர், பிள்ளைகள், உடன்பிறந்தோர்,
உறவினர்கள், நண்பர்கள், தொழில், மக்கள் ஆகிய அனைத்தையும், அனைவரையும்
விடுத்து, முன்பின் தெரியாத அக்கரை நோக்கிச் செல்கின்றனர். இரண்டு,
இயல்பான அமைதியில் இருக்கின்ற கடல் இயல்பு நிலையை இழந்து கொந்தளிக்கிறது.
இவ்விரண்டு துன்பங்களும் அவர்களுக்கு அச்சமும் கவலையும் அளிக்கின்றன.
ஆகையால்தான், 'போதகரே, சாகப்போகிறோமே!' என்கின்றனர்.
முதல் வாசகத்தில், யோபுவுக்கு ஆண்டவராகிய கடவுள் சூறாவளியினின்று
அருளிய பதிலின் ஒரு பகுதியை வாசிக்கின்றோம். 'நேர்மையாளர்
துன்புறுவது ஏன்?' என்ற கேள்வியைக் கேட்டு விடையைத் தேடுகிறது
யோபு நூல். நேர்மையாளர் துன்புறுதலுக்கான விடையை யோபுவின்
மூன்று நண்பர்கள் பாரம்பரிய இறையியலைக் கொண்டு தர முயற்சி
செய்கின்றனர். அவர்களின் விடை யோபுவுக்கு ஏற்புடையதாக இல்லை.
சூறாவளியில் தோன்றுகின்ற ஆண்டவர் யோபுவின் கேள்விக்கு விடையளிக்காமல்
சுற்றி வளைத்து நிறையக் கேள்விகளைத் தொடுக்கின்றார். தானே அனைத்துக்கும்
ஆண்டவர் என்றும், வாழ்வின் மறைபொருள் அனைத்தவர் தான் மட்டுமே
என்றும் யோபுவை உணரச் செய்கின்றார். விளைவு, யோபு சரணடைகின்றார்.
கடல்மேல் ஆண்டவராகிய கடவுள் கொண்டிருக்கின்ற ஆற்றலை இவ்வாசகப்
பகுதியில் காண்கின்றோம்.
யோபுவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது. அவர் தனக்குரியது
அனைத்தையும் அனைவரையும் இழந்து இறந்தவர் போல, அல்லது இறப்புக்குத்
துயரப்படுவது போல சாம்பலில் அமர்ந்திருக்கின்றார். பிரபஞ்சத்திற்கும்
தனக்குமான நெருக்கம் உடைக்கப்பட்டது போல உணர்ந்த அந்த நேரத்திலும்
இறைவனின் உடனிருப்பைக் காண்கின்றார் யோபு.
இரண்டாம் வாசகத்தில், தன்னுடைய நற்செய்தியின் மேன்மை குறித்து
கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல் தான் படுகின்ற
துன்பங்கள் அனைத்தையும் முன்வைக்கின்றார். தான் படுகின்ற துன்பங்கள்
அனைத்தையும் இயேசுவின் உயிர்ப்பின் ஒளி கொண்டு காண்கின்றார் பவுல்.
கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக பழையது மறைந்து புதியது பிறக்கின்றது
என அறிக்கையிடுகின்றார்.
பெருந்தொற்றின் இரண்டாம் அலை மெதுவாக ஓய்ந்துகொண்டிருக்கும் இந்த
நேரத்தில், நம் அன்புக்குரிய பலரை நாம் அன்றாடம் இழந்துகொண்டிருக்கும்
வேளையில், இரண்டாம் அலையைப் பார்த்து, ஆண்டவராகிய கடவுள், 'உன்
இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!' என்று கட்டளையிடுகின்றார்.
நாம் இன்று கேட்க வேண்டிய கேள்வி எல்லாம், 'போதகரே, நாங்கள் சாகப்போகிறோமே!'
என்பதல்ல, மாறாக, 'ஆண்டவரே, நாங்கள் வாழப்போகிறோமே! நாங்கள் என்ன
செய்ய வேண்டும்?' என்பதுதான்.
நமக்கும் கடவுளுக்கும், நமக்கும் ஒருவர் மற்றவருக்கும், நமக்கும்
பிரபஞ்சத்திற்குமான ஒருங்கியக்கம் தடைபடும்போதெல்லாம் இறைவன்
அங்கே இருக்கின்றார் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். சில நேரங்களில்
அவர் யோபுவிடம் பேசியது போல இறங்கிவந்து பேசுகின்றார். சில நேரங்களில்
தலையணை வைத்துத் தூங்குகின்றார்.
திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, 'ஆண்டவருக்கு நன்றி
செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது அவரது
பேரன்பு ... புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார். கடல்
அலைகளும் ஓய்ந்துவிட்டன' (திபா 107) என்று பாடுவோம்.
அக்கரைக்கு நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அவருடைய
உடனிருப்பு நம் இருத்தலையும் இயக்கத்தையும் உறுதி செய்கிறது.
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai |
|