|
Year B |
|
பொதுக்காலம் 10ம் ஞாயிறு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15
ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?"
என்று கேட்டார். "உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன்.
ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன்.
எனவே, நான் ஒளிந்து கொண்டேன்" என்றான் மனிதன்.
"நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ
உண்ணக் கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?"
என்று கேட்டார்.
அப்பொழுது அவன், "என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப்
பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்"
என்றான்.
ஆண்டவராகிய கடவுள், "நீ ஏன் இவ்வாறு செய்தாய்?" என்று
பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், "பாம்பு என்னை ஏமாற்றியது,
நானும் உண்டேன்" என்றாள்.
ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், "நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள்,
காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால்
ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும்
பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.
அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக்
காயப்படுத்துவாய்" என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா: 130: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 7)
=================================================================================
பல்லவி: பேரன்பும் மீட்பும் ஆண்டவரிடமே உள்ளன.
1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;
2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக்
குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி
3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால்,
யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்;
மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி
5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம்
காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன்
காத்திருக்கின்றேன். 6 விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட,
ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம்
என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. பல்லவி
7 இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரி டமே உள்ளது;
மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 8 எல்லாத் தீவினைகளினின்றும்
இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து
வாசகம் 4: 13 - 5: 1
சகோதரர் சகோதரிகளே, "நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்;
ஆகவே பேசினேன்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை
மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம்.
ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு
உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும்
அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும்.
இவையனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள்
பெறுவோரின் தொகை பெருகப் பெருக அவர்கள் கடவுளுக்குச்
செலுத்தும் நன்றியும் பெருகும்.
இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார். எங்கள் உடல் அழிந்து
கொண்டிருந்தாலும் எங்கள் உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள்
புதுப்பிக்கப்பெற்று வருகிறது. எனவே நாங்கள் மனம் தளருவதில்லை.
நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை. அவை
சிறிது காலம்தான் நீடிக்கும். ஆனால் அவை ஈடு இணையற்ற மாட்சியை
விளைவிக்கின்றன. அம்மாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும். நாங்கள்
காண்பவற்றையல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம்.
காண்பவை நிலையற்றவை; காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை.
நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்துபோனாலும்
கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு.
அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத்
தெரியும் அல்லவா!
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 12: 31b-32
அல்லேலூயா, அல்லேலூயா! "இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.
நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்"
என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி
வாசகம்
=================================================================================
பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க
முடியாது.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
3: 20-35
அக்காலத்தில் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள்
கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.
அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்
கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார்
என்று மக்கள் பேசிக்கொண்டனர்.
மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், "இவனைப்
பெயல்செபூல் பிடித்திருக்கிறது" என்றும் "பேய்களின் தலைவனைக்
கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்றும் சொல்லிக்
கொண்டிருந்தனர்.
ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள்
வாயிலாகக் கூறியது: "சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்?
தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க
முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும்
நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று
பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது
அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய
வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட
முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக்
கொள்ளையிட முடியும்.
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர்
எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும்
தீராத பாவத்திற்கு ஆளாவார்.
ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள்
அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்."
"இவனைத் தீய ஆவி
பிடித்திருக்கிறது" என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால்
இயேசு இவ்வாறு கூறினார்.
அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே
நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.
அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. "அதோ, உம்
தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத்
தேடுகிறார்கள்" என்று அவரிடம் சொன்னார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, "என் தாயும் என் சகோதரர்களும்
யார்?" என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச்
சுற்றிலும் பார்த்து, "இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும்
தாயும் ஆவார்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 1
=================================================================================
யார் இயேசுவின் தாய்? யார் இயேசுவின் சகோதர, சகோதரிகள்?
கிறிஸ்மஸ் வருவதற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது. எல்லாரும்
புத்தாடைகள், பரிசுப் பொருட்கள் வாங்குவதுமாக மிக மும்முரமாக
இருந்தார்கள்.
பணக்காரப் பெண்மணி ஒருத்தி எல்லாரையும் போல புத்தாடைகள் வாங்குவதற்காக
ஒரு துணிக்கடைக்குச் சென்றார். துணிக்கடைக்குள் நுழைந்த அவர்,
அங்கிருந்த ஆடைகளைப் பார்த்துக்கொண்டே வந்தார். தற்செயலாக அவர்
கண்ணாடி வழியாக வெளியே பார்த்தபோது சிறுவன் ஒருவன் கண்ணாடி வழியாக
கடைக்குள் பார்ப்பதும் பின்னர் அப்படியே முகத்தைத் திருப்பிக்
கொள்வதுமாக இருந்தான். அவன் அணிந்திருந்த ஆடை மிகவும் அழுக்குப்
படிந்திருந்தது.
உடனே அவர் கடைக்கு வெளியே சென்று, சிறுவனை அழைத்துகொண்டு உள்ளே
வந்தார். பின்னர் அவர் அவனிடம், "தம்பி! இந்தக் கடையில் உனக்குப்
பிடித்த ஆடைகளை எடுத்துக்கொள், பணத்தைப் பற்றிக் கவலைப்படாதே,
அதனை நான் செலுத்திவிடுகின்றேன்" என்றார். அவனும் கடையில் தனக்குப்
பிடித்த இரண்டு ஆடைகளை எடுத்துக்கொண்டார். வந்த வேலை முடிந்ததும்,
அவர் அவருக்காக எடுத்த ஆடைக்கும் சிறுவனுக்காக எடுத்த ஆடைக்கும்
உரிய பணத்தைக் கொடுத்துவிட்டு, வெளியே நடக்கத் தொடங்கினார்.
சிறுவன் அவருக்குப் பின்னாலேயே வந்தான்.
அப்போது சிறுவன் அவரிடம், "உங்களிடத்தில் நான் ஒரு கேள்வியைக்
கேட்கவேண்டும்" என்றான். "என்ன கேள்வி, கேள்" என்று அவர்
சொல்ல, சிறுவன், "நீங்கள்தான் கடவுளா?" என்றான். "இல்லை, நான்
கடவுளுடைய பிள்ளை" என்றார். அதற்குச் சிறுவன் அவரிடம்,
"எனக்குத் தெரியும், ஏதோவொரு வகையில் நீங்கள் கடவுளுக்குச்
சொந்தம்" என்றான்.
கடவுளின் கட்டளையை ஏதோவொரு வகையில் கடைப்பிடிக்கின்ற யாவருமே
அவருக்கு உறவினர்கள்தான் என்னும் உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு
எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலம் பத்தாம் ஞாயிற்றுக்கிழமையான
இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் இயேசுவின் உண்மையான உறவினர்களாவோம்
என்னும் சிந்தனையை நமக்கு வழங்குகின்றது. நாம் எப்படி இயேசுவின்
தாயாக, சகோதர, சகோதரிகளாக மாறுவது என்பதை இன்றைய நாளின் இறைவார்த்தையின்
வழியாக சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்களுக்குப்
போதித்துக்கொண்டிருக்கும்போது, அவருடைய தாய் மரியாவும் அவருடைய
சகோதர, சகோதரிகளும் அவரைப் பார்க்க வருகின்றார்கள். ஆனால்,
கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்களால் இயேசுவை நெருங்க முடியவில்லை.
எனவே, ஆள் அனுப்பி, அவர்கள் தாங்கள் வந்த செய்தியை இயேசுவுக்கு
தெரியப்படுத்துகின்றார்கள். உடனே இயேசு தம்மைச் சூழ்ந்திருந்தவர்களைப்
பார்த்து, "யார் என்னுடைய தாய்?, யார் என்னுடைய சகோதர சகோதரிகள்?"
என்று கேட்டுவிட்டு, "இதோ என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோரே என் சகோதரரும், சகோதரியும்
தாயும் ஆவார்" என்கிறார்.
இயேசுவின் இவ்வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவை மரியாவை
அவமதிப்பது போன்று தோன்றலாம். ஆனால், உண்மை அதுவல்ல. இறையியலாளரான
பால் தில்லிச் (Paul Tillich) இந்த நிகழ்வினைக் குறித்து
குறிப்பிடும்போது, "இயேசு இங்கே மரியாவை அவமதிக்கவில்லை.
மாறாக, தன்னுடைய இறையாட்சிக் குடும்பத்தை இன்னும் விஸ்தரிக்கின்றார்,
மேலும் இயேசு சொன்ன உறவுமுறை, இரத்த உறவுமுறை அல்ல, மாறாக ஆன்மீக
ரீதியான உறவுமுறை. ஆகையால், இயேசுவின் வார்த்தைகள் மரியாவைக்
காயப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது என்று எண்ணாமல், அவ்வார்த்தைகளை
நாம் ஆன்மீக ரீதியாக எடுத்துக்கொள்ளவேண்டும்" என்பார்.
இயேசு கூட்டத்தினைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைகள்,
யாராரெல்லாம் இயேசுவின் உண்மையான உறவினர், யாராரெல்லாம் அவருடைய
உறவினர் கிடையாது என்னும் உண்மையை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
அதனைக் குறித்து இப்போது பார்ப்போம்.
முதலில் யாராரெல்லாம் இயேசுவின் உறவினர் கிடையாது என்று
பார்ப்போம். அதன்பிறகு யாராரெல்லாம் அவருடைய உண்மையான உறவினர்
கிடையாது என்று பார்ப்போம்.
இயேசுவின் விழுமியங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றவர்கள், அவருடைய
பணி இந்தப் புவியில் நடந்தேறுவதற்குத் தடையாய் இருப்போர் ஒருபோதும்
இயேசுவின் உறவினராக இருக்கமுடியாது. இன்றைய நற்செய்தியில் இயேசு
போதித்துக்கொண்டிருக்கும்போது அவரைப் பார்க்க வரும் அவருடைய சகோதர்
சகோதரிகள் இயேசு மதிமயங்கிப் போய்விட்டார் என்று பேசிக்கொண்டதால்தான்
அவரைப் பார்க்க வருகின்றார்கள். ஒருவிதத்தில் இயேசு ஆற்றிவரும்
பணிக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக அவர்கள் வருகின்றார்கள். இத்தகைய
பின்னணியில்தான் இயேசு, "யார் என்னுடைய சகோதர சகோதரிகள்?" என்று
கேட்கின்றார். அப்படியானால், இயேசுவுக்கு ஒருவர் இரத்த சொந்தமாக
இருந்தாலும், அவர் இயேசு ஆற்றிவரும் பணிக்குத் தடையாக இருந்தார்
என்றால், அவரால் இயேசுவின் உறவினராக இருக்கமுடியாது என்பதுதான்
உண்மை.
இந்தப் பின்னணியில் நாம் பரிசேயர்களையும், சதுசேயர்களையும் இணைத்துச்
சிந்தித்துப் பார்க்கவேண்டும். பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும்
தாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்று பெருமை பேசிகொண்டு, இறையாட்சிப்
பணியைச் செய்துவந்த இயேசுவுக்கு முட்டுக்கட்டை போட்டும், அவரைப்
பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார்
என்றும் விமர்சித்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் ஆபிரகாமின்
வழிமரபினர் என்றால், ஒருவிதத்தில் அவர்கள் இயேசுவுக்கு உறவினர்கள்.
ஆனால், அவர்கள் இயேசுவுக்கும் அவருடைய விழுமியங்களுக்கும் எதிராகச்
செயல்பட்டதால், இயேசுவின் உண்மையான உறவினர் ஆகும் பேற்றினைப்
பெறத் தகுதியற்றுப் போய்விடுகின்றார்கள். நாம் இயேசுவுக்கும்
அவருடைய விழுமியங்களுக்கும் எதிராகச் செயல்பட்டோம் என்றால்,
அவருடைய உறவினராக முடியாது என்பதுதான் உண்மை.
அடுத்ததாக கடவுளின் திருவுளத்திற்கு/ அவருடைய வார்த்தைகளுக்கு
எதிராகச் செயல்படுகின்றவரும் அவருடைய உறவினராக முடியாது. தொடக்க
நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய
கடவுள் ஆதாமையும் ஏவாளையும் பார்த்து, "தோட்டத்தில் இருக்கும்
எல்லா மரத்தின் கனிகளையும் உட்கொள்ளுங்கள். ஆனால், தோட்டத்தின்
நடுவே இருக்கின்ற மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணாதீர்கள்"
என்று சொல்லி வைக்கின்றார். ஆனால், அவர்கள் பாம்பின் பசப்பு
மொழிகளில் மயங்கி, விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்கின்றார்கள்.
இப்படியாக அவர்கள் கடவுளின் விருப்பத்திற்கு எதிராக, அவருடைய
வார்த்தைகளுக்கு எதிராகச் செயல்படுகின்றர்கள். இதனால் அவர்கள்
கடவுளின் சினத்திற்கு ஆளாகி, ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றார்கள்.
நாம் இறைவனின் திருவுளத்திற்கு எதிராகவும் அவருடைய
வார்த்தைக்கு எதிராகவும் செயல்படுகின்றபோது அவருடைய உறவினராக
இருக்கவே முடியாது.
பல நேரங்களில் நாம் நம்முடைய மனித பலவீனத்தால் கடவுளின்
வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமல், நம்முடைய விருப்பத்தின்படியே
நடக்கின்றோம். இப்படிச் செய்வதன் வழியாக, நாம் கடவுள் உறவினராக
மாறுகின்ற வாய்ப்பினை இழந்து போய்விடுகின்றோம்.
யாராரெல்லாம் இயேசுவின் உண்மையான உறவினராக முடியாது என்று இதுவரை
சிந்தித்த நாம், அவருடைய உண்மையான உறவினராக மாறுவதற்கு என்ன வழி
என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இயேசுவின் உறவினராக மாறுவதற்கு/ கடவுளின் அன்புப் பிள்ளைகளாக
மாறுவதற்கு இயேசு சொல்லும் வழி கடவுளின் திருவுளத்தை
நிறைவேற்றி வாழ்வதாகும். கடவுளின் திருவுளத்தை வார்த்தைகளால்
நிறைவேற்றினால் போதுமா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஏனென்றால், மத்தேயு நற்செய்தி 7:21 ல் இயேசு கூறுவார், "என்னை
நோக்கி ஆண்டவரே ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள்
செல்வதில்லை" என்று. ஆம், வாய்ச்சொல் வீரர்களால் ஒருபோதும் இயேசுவின்
உறவினராக முடியாது.
ஒரு காதலன் தன்னுடைய காதலிக்கு இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பினான்..
"அன்பே! நான் உன்னை அதிகதிகமாக அன்பு செய்கின்றேன். உனக்காக
நான் நீரிலும் நடப்பேன், நெருப்பிலும் குதிப்பேன், உயர்ந்த மலையிலும்
ஏறுவேன், ஏன் ஆழ்கடலில் கூட நீந்துவேன்".
அவன் இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, கீழே பின்வருவாறு எழுதினான்,
"நாளை மாலை நாம் சந்திப்பதாக முடிவு செய்திருந்தோமே, ஒருவேளை
நாளை மாலை மழை பெய்தால், நம்முடைய சந்திப்பு இரத்து. ஏனென்றால்
மழை என்னுடைய உடலுக்கு ஒத்துக்காது". என்ன ஓர் ஆழமான காதல்!!!
நிறையப் பேர் கடவுளை அன்பு செய்வதும் இப்படித்தான் இருக்கின்றது..
அவர்கள் வார்த்தையில் மட்டுமே கடவுளை அன்புசெய்வதாகச் சொல்வார்கள்.
ஆனால், செயலில் காட்டமார்கள். இவர்கள் எல்லாம் இயேசுவின் உறவினராக
இருக்கமுடியாது. இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் மட்டுமே
இயேசுவின் உறவினராக, அவருடைய தாயாக, சகோதர சகோதரியாக மாறமுடியும்.
இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்ததற்கு நம் கண்முன்னே
இருக்கும் மிகச் சிறந்த முன்னுதாரணம் அன்னை மரியாதான். மரியா
ஆண்டவரின் திருவுளத்தை அனுதினமும் நிறைவேற்றினார், அதற்காக அவர்
கொடுத்த விலை அதிகம். ஆகையால், மரியா இயேசுவைப் பெற்றெடுத்ததனால்
மட்டுமல்ல, இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்ததனாலும் இயேசுவுக்குத்
தாயாகின்ற இரட்டைப் பேறு பெறுகின்றார். இது யாருக்கும் கிடக்கப்பெறாத
பேறு. நாம் இயேசுவின் இரத்த உறவாக மாறும் பேறு கிடைக்காது. ஆனால்,
இறையாட்சிக் குடும்பத்தில் அவருடைய உறவினராக முடியும் (உரோ
8:14).
ஆகையால், இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாக வாழ்வோம்.
அதன்வழியாக இயேசுவின் உண்மையான உறவினராக மாறுகின்ற பேறு
பெறுவோம், இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மாியஅந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 2
=================================================================================
தனக்கு எதிராக
தானே
தொடக்கநூல் 3:9-15
2 கொரிந்தியர்
4:13-5:1
மாற்கு 3:20-35
இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 3:9-15) நாம் வாசிக்கும்
மனுக்குலத்தின் பிதாமகனாம் ஆதாமுக்கும், படைத்தவனுக்கும் இடையே
நடக்கும் உரையாடலோடு இன்றைய சிந்தனையை தொடங்குவோம்:
அவர்: 'நீ எங்கே இருக்கிறாய்?'
அவன்: 'உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால் எனக்கு
அச்சமாக இருந்தது. ஏனெனில் நான் ஆடையின்றி இருந்தேன். எனவே,
நான் ஒளிந்து கொண்டேன்.'
அவர்: 'நீ ஆடையின்றி இருக்கிறாய் என்று உனக்குச் சொன்னது யார்?
நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?'
அவன்: 'என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண் மரத்தின்
கனியை எனக்குக் கொடுத்தாள். நானும் உண்டேன்.'
நிற்க.
'என்னுடன்' - 'நீர்' - 'அந்தப் பெண்'
ஆதாமின் இந்த மூன்று வார்த்தைகளைக் கவனித்தீர்களா?
'ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன்
நாசிகளில் உயிர்மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்' (தொநூ
2:8)
'ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை
ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார். அப்பொழுது
மனிதன், 'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையும் சதையும்
ஆனவள். ஈஷ் (ஆண்)-இடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் ஈஷா
(பெண்) என்று அழைக்கப்படுவாள்' என்றான்.' (தொநூ 2:22-24)
கனியை உண்ணும் நிகழ்வு நடக்கும் முன்பாக ஆதாமும், கடவுளும்
ரொம்ப நெருக்கமாக இருக்கின்றனர். எந்த அளவிற்கு என்றால், அவனின்
நாசிகளில் அவர் உயிர்மூச்சை ஊதுகின்றார். அவனது விலாவைத் திறந்து
அவனது எலும்பை எடுக்கின்றார்.
இந்த அளவிற்கு நெருக்கமான ஆண்டவராகிய கடவுளை ஆதாம் இப்போது எப்படி
அழைக்கின்றார்?
- 'நீர்'
'இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும்' என அழைத்தவளை
கனியை உண்டபின் எப்படி அழைக்கின்றார்?
'அந்தப் பெண்'
நன்மை தீமை அறிவதற்காக ஆதாம் உண்ட கனி நன்மை, தீமையை அறியக்கற்றுக்கொடுத்த
அதே நொடி, அவனை அவரிடமிருந்தும், அவளிடமிருந்தும் பிரித்துவிட்டது
- தனக்கு எதிராக தானே என்று அவன் பிளந்து கிடக்கின்றான்.
'தனக்கு எதிராக தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க
முடியாது.
தனக்கு எதிராக தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க
முடியாது.' என்று இன்றைய நற்செய்திப் பகுதியில் (காண். மாற்
3:20-35) பிளவுபடுதல் கொண்டுவரும் அழிவை முன்னுரைக்கின்றார் இயேசு.
இதையே வேறு வார்த்தைகளில் - அதாவது, 'எங்கள் உடல் அழிந்து
கொண்டிருந்தாலும் எங்கள் உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள்
புதுப்பிக்கப்பெற்று வருகிறது. எனவே நாங்கள் மனம்தளருவதில்லை.'
என்று 'அழிந்து கொண்டிருப்பதற்கும் புதுப்பிக்கப்பெற்றுக்கொண்டிருப்பதற்கும்
இடையேயான போராட்டத்தைக் கொரிந்து நகரத் திருஅவையோடு இன்றைய இரண்டாம்
வாசகத்தில் (காண். 2 கொரி 4:13-5:1) மனம் திறக்கிறார் பவுல்.
'தனக்கு எதிராக தானே பிளவுபடுதல்' என்றால் என்ன?
விலக்கப்பட்ட கனியை உண்பதற்கு முன் ஆதாம் மற்றும் ஏவாளைப் பற்றி
விவிலிய ஆசிரியர் சொல்லும்போது, 'மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும்
ஆடையின்றி இருந்தனர். ஆனால், அவர்கள் வெட்கப்படவில்லை' (தொநூ
2:24) என்று மிகச் சுருக்கமாக எழுதுகின்றார்.
அங்கே வெட்கம் இல்லை.
அங்கே 'நான்-நீ' என்ற பேதம் இல்லை.
அங்கே ஒளிதல் இல்லை.
அங்கே எதிர்பேச்சு இல்லை.
அங்கே குற்றம் சுமத்துதல் இல்லை.
அங்கே எதிர்மறை உணர்வுகள் இல்லை.
ஆனால், கனியை உண்டவுடன்
அவர்கள் வெட்கம் அடைகிறார்கள். வெட்கம் ஆதாமிற்கு அச்சத்தைக்
கொண்டுவருகிறது.
அவன் 'நான்-நீ-அவள்' என்று வேற்றுமை பாராட்டத் தொடங்குகிறான்.
அவனும் அவளும் ஒளிந்துகொள்கின்றனர்.
அவனும் அவளும் அவரிடம் எதிரெதிரே நின்று பேசுகின்றனர்.
அவன் அவளையும் அவள் பாம்பையும் குற்றம் சுமத்துகிறாள்.
அவள் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறாள்.
ஆணின் முதல் உணர்வாக விவிலிய ஆசிரியர் சொல்வது 'அச்சம்' - 'எனக்கு
அச்சமாக இருந்தது' (தொநூ 3:10)
பெண்ணின் முதல் உணர்வாக விவிலிய ஆசிரியர் சொல்வது 'ஏமாற்றம்' -
'பாம்பு என்னை ஏமாற்றியது' (தொநூ 3:13)
(இன்றும் ஆண் தன் உறவுநிலைகளில் பாதிக்கப்படும்போது அவன்
வெளிப்படுத்தும் முதல் உணர்வு - 'எனக்கு பயமாயிருக்கு.' பெண்
தன் உறவுநிலைகளில் பாதிக்கப்படும்போது அவள் வெளிப்படுத்தும் முதல்
உணர்வு - 'நான் ஏமாந்துட்டேன்.')
தனக்குத் தானே ஒருவர் பிளவுபட்டிருக்கிறார் என்றால் அவர்:
1. அச்சம் கொண்டிருப்பார்
2. மற்றவரிடமிருந்து தன்னையே வேறுபடுத்திக்கொண்டிருப்பார்
3. மற்றவரிடமிருந்து தன்னையே இழுத்துக்கொள்வார் - ஒளிந்து
கொள்வார்
4. தனக்கு நிகழ்பவற்றின்மேல் எதிர்மறையாக செயல்பாடுவார்
5. தன் நிலைக்காக அடுத்தவரை குற்றம் சுமத்துவார்
6. தன்னை எல்லாரும் ஏமாற்றுவதாக நினைப்பார்
இந்த நிலைக்கு நம்மை ஆளாக்குவது எது? அல்லது யார் நம்மை 'தனக்கு
எதிராக தானே பிளவுபட' செய்கிறார்?
மறுபடியும் முதல் வாசகத்திற்குச் செல்வோம்: ஆண்டவராகிய கடவுள்
பாம்பிடம், 'நீ இவ்வாறு செய்ததால் ...' என்கிறார். எவ்வாறு
செய்ததால்? - இப்படி அவர்களை பழத்தை உண்ணும்படி செய்ததால்.
பழத்தை உண்ணுதல் என்பது என்றால் என்ன? என்பதை இன்று அருள்திரு.
மரிய அந்தோணி இப்படி விளக்கினார்: 'பழத்தை உண்ணுதல் என்பது நம்
மூளை-சிந்தனை சொல்வதை கேட்டு அதை அப்படியே நம்புவது.' ஆக, முதல்
பாவம் அல்லது தொடக்கப் பாவம் அல்லது ஆதிப்பாவம் என்பது, 'நம்
சிந்தனைகளுக்கு நாம் அடிமையாகிவிடுவது. அல்லது அவை சொல்வதை அப்படியே
நம்பி ஏற்றுக்கொள்வது.'
நல்லா பாருங்களேன். நம்ம பிரச்சினைகளுக்குக் காரணம் நம்மை
மூளைதான். எப்படி? 'அவன் என்னைவிட நல்ல ஆடை அணிந்திருக்கிறான்'
என்று என் மூளை சொல்கிறது என வைத்துக்கொள்வோம்.
'நான் உன்னைவிட நல்ல ஆடை அணிந்திருக்கிறேன்' என்று அவன் என்னிடம்
சொன்னானா? - இல்லை.
'இவன் அணிந்திருப்பது உன் ஆடையைவிட விலையுயர்ந்தது' என கடைக்காரன்
என்னிடம் சொன்னானா? - இல்லை.
பின் நான் எப்படி அப்படி சொல்ல முடியும்? நான் எப்படி அவனோடு
என்னை ஒப்பிட முடியும்? நான் எப்படி அவன்மேல் பொறாமை பட
முடியும்?
இவை எல்லாம் நடப்பது என் மூளைக்குள் - சிந்தனைக்குள். நான் என்
மூளைக்கு அடிமையாகிவிட்டேன் என்றால் அது என்னை ஆட்டிப்படைக்க
ஆரம்பித்துவிடும். என்னையே என்னிடமிருந்து, என்னைக் கடவுளிடமிருந்து,
என்னை மற்றவரிடமிருந்து பிரித்துவிடும்.
இந்த மூளையை இப்படி யோசிக்கச் செய்வது எது? - என்னிடமிருக்கின்ற
பாம்பு - அதாவது, என்னிடமுள்ள தீய இயல்பு.
இன்றைய நற்செய்தியில் இயேசு சாத்தானைக் கொண்டு சாத்தானை ஓட்டுவதாக
மறைநூல் அறிஞர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதற்கு விடைகூறும்
விதமாக இயேசு 'சாத்தான்' என்பதை உவமையாக மாற்றி 'தீய இயல்பு'
பற்றி பேச ஆரம்பிக்கின்றார்.
'தீய இயல்பை தீய இயல்பே அழிக்க முடியாது'
'அழிந்து கொண்டிருக்கும் உடலை பழைய இயல்பு மாற்ற முடியாது'
மறைநூல் அறிஞர்கள் தங்கள் மூளையால் வழிநடத்தப்பட்டதால் இயேசுவின்மேல்
குற்றம் சுமத்துகின்றனர். அதே போல இயேசுவின் தாயும் உறவினர்களும்
இயேசு மதிமயங்கிவிட்டார் என்று மக்கள் பேசியதை தங்கள் மூளைக்கு
அப்படியே கொண்டு சென்றதால் அவரைத் தேடி வருகின்றனர்.
ஆக, ஆதாம் தனக்கு எதிராகத் தானே பிளவுபடுகிறார்.
ஏவாள் தனக்கு எதிராக தானே பிளவுபடுகிறது.
பவுல் பிளவுபட்டுக் கிடக்கிறார்.
மறைநூல் அறிஞர்கள் பிளவுபட்டுக்கிடக்கின்றனர்.
இயேசுவின் உறவினர்கள் பிளவுபட்டுக் கிடக்கின்றனர்.
நானும் நீங்களும் பிளவுபட்டுக்கிடக்கிறோம் -
- நம் மூளையின் வழிகாட்டுதலை அப்படியே ஏற்றுக்கொள்ளும்போது.
இந்தப் பிளவுபட்ட நிலையை எப்படி சரி செய்வது? கனியை உண்பதற்கு
முன் இருந்த ஒருங்குநிலையை நாம் மீண்டும் எப்படி அடைவது?
இன்றைய இறைவாக்கு வழிபாடு மூன்று வழிகளைப் பரிந்துரை செய்கிறது:
1. 'வலியவனைக் கட்டுதல்'
இதை இயேசு உருவகமாகச் சொல்கிறார்: 'முதலில் வலியவரைக் கட்டினால்
அன்றி அவ்வலியவருடைய வீட்டில் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும்
கொள்ளையிட முடியாது. அவரைக் கட்டி வைத்தபின் அவருடைய வீட்டைக்
கொள்ளையிட முடியும்.' நம் உடல்தான் நம்முடைய வீடு என்றால் நம்முடைய
மூளை அல்லது சிந்தனைதான் அந்த வலியவன். இவன் அனுமதிக்காமல்
யாரும் இந்த வீட்டிற்குள் நுழைய முடியாது. நம் உடலை நாம்
வெற்றி கொள்ள வேண்டுமென்றால், நம் உடலில் இருக்கும் தூய ஆவியை
நாம் கொள்ளை கொள்ள வேண்டுமென்றால் இந்த வலியவனை நாம் கட்ட
வேண்டும். மூளையைக் கட்டிவிட்டு, நாம் ஆவியில் - மனிதில் இருந்து
செயலாற்ற வேண்டும்.
அதாவது, 'அறிவுசார்ந்த அடுக்கில்' (intellectual layer) இருந்து
'அனுபவம்-அகம் சார்ந்த அடுக்கிற்கு' (affective layer) நாம்
கடந்து செல்ல வேண்டும். இந்த இரண்டு அடுக்குகளுக்கும் எப்போதும்
போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும். இந்தப் போராட்டத்தை
முதல் வாசகம், 'உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் உள்ள பகை'
என்கிறது. இரண்டாம் வாசகம், 'காண்பவற்றிற்கும்
காணாதவற்றிற்கும் உள்ள போராட்டம்' என்கிறது. நற்செய்தி வாசகம்,
'தீய இயல்புக்கும் தூய ஆவிக்கும் உள்ள போராட்டம்' என்கிறது.
ஆக, எனக்கு நானே பிளவுபட்டுக் கிடக்கும் நிலையை நான்
குணப்படுத்த முதலில் செய்ய வேண்டியது என்ன? என் மூளைக்கு
அடிமையாக இருப்பதை நான் நிறுத்த வேண்டும். பவுல் அழகாக
சொல்கிறார்: 'நாங்கள் காண்பவற்றை அல்ல. நாங்கள் காணாதவற்றை
நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றென்றும்
நிலைத்திருப்பவை.' இவை எவ்வளவு உண்மை! மூளை காண்பவற்றை வைத்து
வாழ்கிறது, முடிவெடுக்கிறது. மனம் காணாதவற்றை வைத்து
வாழ்கிறது, முடிவெடுக்கிறது. நம் உறவுநிலைகளில் உள்ள பிளவுபட்ட
நிலைகளை குணமாக்க எளிதான வழி 'மூளையிலிருந்து வாழ்வதை
விடுத்து, மனத்திலிருந்து வாழ்வது' மட்டும்தான். இதற்கான வழி,
மூளை என்னும் வலியவனைக் கட்டுவது.
2. 'கடவுளின் திருவுளம் நிறைவேற்றுதல்'
இதுதான் 'அகம்' என்னும் அடுக்கிற்கான அடுத்த அடுக்கு:
'அருள்வாழ்வு சார்ந்த அடுக்கு' (spiritual layer). 'என்
திருவுளம் அல்ல. அவரின் திருவுளமே' என்று அவர் எனக்கென
வைத்திருக்கும் வாழ்வின் நோக்கத்தை நான் நிறைவேற்ற முயற்சி
செய்வது. நாம் இயல்பாகவே கடவுளின் சாயலைக் கொண்டிருக்கிறோம்.
அவரின் உறவினராக இருக்கிறோம். ஆனால் நான் என் உளம் (மூளை)
சொல்வதை செய்வதில் மும்முரமாய் இருப்பதால், அவரின் உளத்தை
என்னால் அறிய முடிவதில்லை. அறிந்தாலும் செயல்படுத்த
முடிவதில்லை. நான் ஒருவரோடு சண்டையிட்டு அவரை மன்னிக்க
முடியவில்லை என வைத்துக்கொள்வோம். 'அவர் உனக்கு அப்படிச்
செய்தார். இப்படிச் செய்தார். உன் மனதை நோகடித்தார்' என 100
காரணங்களை - அதுவும் சரியான காரணங்களை - மூளை அடுக்கிக்கொண்டு
போகும். இந்த உளத்தை நான் நிறைவேற்றினால் அவரை என்னால்
இறுதிவரை மன்னிக்க முடியாது. ஆனால், 'அவரும் என் இறைவனின் ஒரு
பகுதியே. ஏதோ ஒரு சூழலில் அப்படிச் செய்துவிட்டார். அவர் என்
அன்புக்குரியவர்' என்று நான் அவரின் திருவுளத்தில்
செயலாற்றும்போது மன்னிப்பது எளிதாகிறது. உறவும்
புதுப்பிக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் நாம் அனைவரையும்
அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என உறவு கொண்டாட முடிகிறது. இந்த
நிலையிதால்தான் நாம் இயேசுவின் தாயாக, சகோதரராக மாறுகின்றோம்.
3. 'உள்ளார்ந்த இயல்பு
புதுப்பிக்கப்படுதல்'
தூய பவுல் தான் இன்னலுற்றாலும் மனம் தளருவதில்லை என்றும், நாம்
அடையும் இன்னல்கள் தாங்கக்கூடியவை என்றும் சொல்கின்றார். இந்த
மனம் தளராத நிலைக்குக் காரணம் இவரிடம் உள்ள எதிர்நோக்கு. இந்த
எதிர்நோக்கால் இவரின் உள்ளார்ந்த இயல்பு - ஆவியின் இயல்பு -
புதுப்பிக்கப்படுகிறது. இதை நாம் செய்வதற்கான ஒரு வழி தியானம்.
தியானம் என்றால் கண்களை மூடி நேராக அமர்ந்துகொள்வது அல்ல.
மாறாக, அவருக்கும் எனக்கும் உள்ள தொப்புள்கொடி உறவை நாளுக்கு
நாள் புதுப்பித்துக்கொண்டே இருப்பது. அந்தத் தொப்புள்கொடியோடு
நான் இணைத்து அவரிடமிருந்து என் ஆற்றலை நான் பெறத்
தொடங்கிவிட்டால் அன்றாடம் என் செல்கள் புத்துயிர்பெறும்.
அவரின் உணவே என் உணவாக, அவரின் சுவாசமே என் சுவாசமாக மாறுவதால்
நான் ஆற்றலின் அணைக்கட்டாக மாறிவிடுவேன். அங்கே சோர்வும்,
மனத்தளர்ச்சியும், கலக்கமும், ஏமாற்றமும், அச்சமும் இருக்காது.
இறுதியாக,
தனக்கு எதிராக தானே பிளவுபடுதல் அழிவு என்றால்,
தீய இயல்பை (மூளையின் செயல்பாட்டை) கட்டிவிடுவதும்,
அவரின் திருவுளம் நிறைவேற்றுவதும்,
உள்ளார்ந்த இயல்பு புதுப்பிக்கப்படுவதும் நமக்கு வாழ்வு.
அந்த வாழ்வை நம்மை படைத்த ஆண்டவராகிய கடவுள் அன்றாடம் நமக்கு
வழங்குவாராக!
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
=================================================================================
மறையுரைச் சிந்தனை
- 3
=================================================================================
|
|