Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     ஆண்டு A  
                                                          தவக்காலம் 5ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 12-14

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக் கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். "ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்" என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 130: 1-2. 3-4. 5-6. 7b-8 (பல்லவி: திபா 130:7b) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது.
1
ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;
2
ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். - பல்லவி

3
ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?
4
நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். - பல்லவி

5
ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
6
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. - பல்லவி

7b
பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
8
எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! - பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருக்கிறார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 8-11

சகோதரர் சகோதரிகளே,

ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 11: 25a, 26)

"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்" என்கிறார் ஆண்டவர்.
 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-45

அக்காலத்தில்

பெத்தானியாவில் வாழ்ந்துவந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்து வந்தனர். இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத் தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர். இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆள் அனுப்பி, "ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்" என்று தெரிவித்தார்கள். அவர் இதைக் கேட்டு, "இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்" என்றார்.

மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். பின்னர் தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்று கூறினார். அவருடைய சீடர்கள் அவரிடம், "ரபி, இப்போதுதானே யூதர்கள் உம் மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?" என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, "பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது. ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லை" என்றார்.

இவ்வாறு கூறியபின், "நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்" என்றார். அவருடைய சீடர் அவரிடம், "ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்" என்றனர். இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம், "இலாசர் இறந்துவிட்டான்" என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டு, "நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்" என்றார். திதிம் என்னும் தோமா தம் உடன்சீடரிடம், "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார்.

இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது. பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். மார்த்தா இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்" என்றார். இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார். மார்த்தா அவரிடம், "இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்" என்றார். இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார். மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்றார்.

இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், "போதகர் வந்துவிட்டார்; உன்னை அழைக்கிறார்" என்று காதோடு காதாய்ச் சொன்னார். இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார். இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார். வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.

இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, "அவனை எங்கே வைத்தீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். அதைக் கண்ட யூதர்கள், "பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!" என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அவர்களுள் சிலர், "பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?" என்று கேட்டனர்.

இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. "கல்லை அகற்றிவிடுங்கள்" என்றார் இயேசு. இறந்துபோனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், "ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!" என்றார். இயேசு அவரிடம், "நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?" என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, "தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும்பொருட்டே இப்படிச் சொன்னேன்" என்று கூறினார். இவ்வாறு சொன்னபின் இயேசு உரத்த குரலில், "இலாசரே, வெளியே வா" என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" என்று இயேசு அவர்களிடம் கூறினார்.

மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.

அல்லது

குறுகிய வாசகம்


உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 3-7,17,20-27,33b-45

அக்காலத்தில்

இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆள் அனுப்பி, "ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்" என்று தெரிவித்தார்கள். அவர் இதைக் கேட்டு, "இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்" என்றார். மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்டபிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். பின்னர் தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்று கூறினார். இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.

இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். மார்த்தா இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்" என்றார். இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார். மார்த்தா அவரிடம், "இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்" என்றார். இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார். மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்றார்.

இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, "அவனை எங்கே வைத்தீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். அதைக் கண்ட யூதர்கள், "பாருங்கள். இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!" என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் அவர்களுள் சிலர், "பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?" என்று கேட்டனர். இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. "கல்லை அகற்றிவிடுங்கள்" என்றார் இயேசு. இறந்துபோனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், "ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!" என்றார். இயேசு அவரிடம், "நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?" என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, "தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும்பொருட்டே இப்படிச் சொன்னேன்" என்று கூறினார்.

இவ்வாறு சொன்னபின் இயேசு உரத்த குரலில், "இலாசரே, வெளியே வா" என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்" என்று இயேசு அவர்களிடம் கூறினார். மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
I எசேக்கியேல் 37: 12-14
II உரோமையர் 8: 8-11
III யோவா 1: 1-45

"இயேசுவிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்"


நிகழ்வு

பிரான்ஸ் நாட்டிலுள்ள ஸ்ட்ராஸ்பர்க் பேராலயத்தில் ஒரு பெரிய, பழமையான கடிகாரம் இருந்தது. அதை ஒரு மனிதர் மிகுந்த சிரத்தை எடுத்துச் செய்துதந்தார். கடிகாரம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும் நேரத்தை மிகத் துல்லியமாகவும் காட்டியதால், அங்கிருந்து குருவானவர் அதை எல்லாருக்கும் தெரியும்வகையில், கோபுரத்தில் பொருத்தினார்.

பல ஆண்டுகள் அந்தக் கடிகாரம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் அது பழுதடையவே பேராலயத்தில் இருந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த கடிகாரப் பழுதாற்றுநர்களை வரவழைத்துச் சரிசெய்ய முயற்சி செய்தார்கள், முடியவில்லை. இதற்கிடையில் கடிகாரம் பழுதடைந்த செய்தி, அதைச் செய்துகொடுத்த மனிதருக்குத் தெரியவந்தது. அவர் வேலை நிமித்தமாக ஸ்ட்ராஸ்பர்க்கை விட்டுச் சென்று பல ஆண்டுகள் ஆகியிருந்தன. செய்தி கேள்விப்பட்ட அவர் ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள பேராலயத்திற்கு வந்து, கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த கடிகாரத்தின் ஒரு பகுதியைச் சரிசெய்தார். அவ்வளவுதான். கடிகாரம் முன்புபோல் அருமையாக இயங்கத் தொடங்கியது. இதைப் பார்த்த எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

இந்த நிகழ்வில் வருகின்ற கடிகாரம் செய்துதந்த மனிதர், எப்படி இயங்காமல் இருந்த கடிகாரத்தின் ஒரு சிறு பகுதியைச் சரிசெய்ததும், அது இயங்கித் தொடங்கியதோ அப்படி ஆண்டவர் இயேசு, இறந்து நான்கு நாள்களாகியிருந்த இலாசரைப் பார்த்து, "இலாசரே, வெளியே வா" என்று சொன்னதும், அவர் வெளியே வருகின்றார். ஆம், உயிர்த்தெழுதலும் வாழ்வும் இருந்தார். அதனால்தான் இறந்த இலாசரை உயிர்த்தெழச் செய்யமுடிந்தது. தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை "இயேசுவிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத இயேசு

நற்செய்தியில் இயேசுவிடம், பெத்தானியாவைச் சார்ந்த அவருடைய நெருங்கிய நண்பரான இலாசர் நோயுற்றிருந்த செய்தி சொல்லப்படுகின்றது. இயேசுவிடம் இச்செய்தி சொல்லப்பட்டபொழுது அவர் தன்னுடைய சீடர்களோடு யோர்தான் ஆற்றின் மறுகரையில் இருந்தார். செய்தியைக் கேள்விப்பட்டதும், உடனடியாக அவர் பெத்தானியாவிற்குச் சென்றுவிடவில்லை; இரண்டு நாள்கள் கழித்தே அங்கு செல்கின்றார். அவ்வாறு அவர் செல்ல முற்படும்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடம், "இரபி! இப்பொழுதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்கு போகிறீரா?" என்று கேட்கின்றார்கள். யூதர்கள் இயேசுவின்மீது கல்லெறிய முயன்ற நிகழ்வு யோவா 10:31ff இல் இடம்பெறுகின்றது.

யூதர்கள் தன்மீது கல்லெறிவார்கள் என்பதற்காகவோ, கொலை செய்வார்கள் என்பதற்காகவோ அஞ்சி இயேசு பெத்தானியாவிற்குப் போகாமல் இருந்துவிடவில்லை. அவர் பெத்தானிவிற்குப் போகிறார்; தன் நண்பர் இலாசரை உயிர்த்தெழச் செய்கின்றார். இதற்கு முன்பு இன்னொரு நிகழ்விலும்கூட, இயேசு அஞ்சா நெஞ்சத்தினராகத்தான் இருப்பார். பரிசேயர்களில் ஒருசிலர் இயேசுவிடம் இங்கிருந்து போய்விடும் என்று சொல்லும்பொழுது, அவர் அவர்களிடம், இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன். மூன்றாம் நாளில் என்னுடைய பணி நிறைவுபெறும். இதை அந்த நரியிடம் போய்ச் சொல்லுங்கள் என்று துணிச்சலாகக் கூறுவார் (லூக் 13: 31-32). அந்தளவுக்கு இயேசு யாருக்கும் அஞ்சாதவராக இருந்தார்.

இந்த இடத்தில் தோமாவைக் குறித்துச் சொல்லியாகவேண்டும். இயேசுவின் மற்ற சீடர்கள் இயேசுவோடு பெத்தானியாவிற்குச் செல்ல அஞ்சியபொழுது, தோமா, "நாமும் செல்வோம்; அவரோடு இறப்போம்" (யோவா 11: 16) என்று துணிச்சலாகச் சொல்கின்றார். இயேசுவின் உயிர்ப்பில் ஐயம் கொண்டவராகவே அறியப்படும் தோமா, இவ்வளவு துணிச்சலாகவும் அஞ்ச நெஞ்சத்தோடும் பேசுவது, நாம் எப்பொழுதும் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து, அஞ்சாமல் அவர் வழியில் நடக்கவேண்டும் என்ற செய்தியை உணர்த்துவதாக இருக்கின்றது.

நம்பினோருக்கு வாழ்வளிக்கும் இயேசு

பொதுவாக யோவான் நற்செய்தியில் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்வும் அல்லது இயேசு செய்கின்ற ஒவ்வோர் அருமடையாளமும் ஒவ்வொரு செய்தியை எடுத்துச் சொல்லும். இயேசுவுக்கும் சமாரியப் பெண்ணுக்கும் இயேசுவுக்கும் இடையே நடக்கும் உரையாடல் (யோவா 4) இயேசு வாழ்வளிக்கும் தண்ணீரை அளிப்பவர் என்ற செய்தியையும், இயேசு பிறவிலேயே பார்வையற்றிருந்த ஒருவரை நலப்படுத்துகின்ற நிகழ்வு (யோவா 9) அவர் உலகின் ஒளி என்ற செய்தியையும் எடுத்துச் சொல்லும். இன்றைய நற்செய்தியில் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வு, அவர் உயிர்த்தெழுதலும் வாழ்வுமாகவும் இருக்கின்றார் என்ற செய்தியை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது.

இயேசு அளிக்கக்கூடிய வாழ்வினைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றால், நம்பிக்கை என்பது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் வரும் இலாசரின் சகோதரியான மார்த்தாவிடம் அது நிறையவே இருப்பதைக் காணமுடிகின்றது. குறிப்பாக அவர் இயேசுவிடம், நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான் என்று சொல்கின்றபொழுதும், இயேசு அவரிடம், உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். இதை நீ நம்புகிறாயா? என்று கேட்கின்றபொழுது, ஆம் ஆண்டவரே, நீரே மெசியா... என்று பேதுருவைப் போன்று நம்பிக்கை அறிக்கையை வெளிப்படுத்துகின்றபொழுதும் அவருடைய நம்பிக்கை மிகுதியாக இருப்பதைக் காணமுடிகின்றது. இதற்குப் பின்னரே அதாவது, "நம்பினால் கடவுளின் மாட்சியைக் காண்பாய்" (யோவா 11:40) என்று இயேசு சொன்ன பின்னரே, இலாசரை உயிர்த்தெழச் செய்கின்றார்.

இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வு, இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறுகின்ற, "இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளிநின்று மேலே கொண்டு வருவேன்" என்ற இறைவார்த்தையை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது. ஆம், இயேசு உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கின்றார். அதனால்தான் அவர் இலாசரை உயிர்த்தெழச் செய்தார்.

ஊனியல்புக்கு ஏற்ப அல்ல, ஆவிக்குரிய வாழ்வு வாழ்ந்தால் உயிர்த்தெழலாம்

இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்ததும், பின்னாளில் அவரே உயிர்த்தெழுந்ததும் நமக்கொரு செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அந்தச் செய்தியைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் இவ்வாறு கூறுகின்றார்; "இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்த ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால்... அவரே... சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்த்தெழச் செய்வார்." ஆம், நாம் ஊனியல்புக்கு ஏற்ப அல்ல, ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கின்றபொழுது உயிர்த்தெழுவோம் என்று உறுதி.

ஆனால், இன்று பலர் ஆவிக்குரிய வாழ்க்கை வாழாமல், ஊனியல்புக்கு (கலா 5: 9-21) ஏற்ப வாழ்ந்து கடவுள் கொடுக்க இருக்கும் நிலைவாழ்வு என்ற உன்னதக் கொடையை இழந்து நிற்கின்றார்கள். இவர்களைப் போன்று நாம் இருந்துவிடாமல், ஆண்டவரிடம் நம்பிக்கையும் அடுத்திருப்பவரிடம் அன்பும் கொண்டு வாழ்கின்றபோது, ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக நிலைவாழ்வைப் பெறுவோம் என்பது உறுதி. ஆகவே, நாம் ஊனியல்பைக் களைந்துவிட்டு ஆவிக்குரிய வாழ்க்கை வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

"நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்" (அப 2:4) என்பார் இறைவாக்கினர் அபக்கூக்கு. ஆகையால், நாம் இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக அவர் தருகின்ற நிலைவாழ்வையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!