|
ஆண்டு
A |
|
தவக்காலம்
4ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இஸ்ரயேல் மீது அரசனாக தாவீது திருப்பொழிவு செய்யப்பட்டான்.
சாமுவேலின் முதல் நூலிலிருந்து வாசகம் 16: 1b, 6-7, 10-13ab
அந்நாள்களில்
ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக்
கொண்டுபோ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்;
ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்" என்றார்.
ஈசாயின் புதல்வர்கள் வந்தபோது, அவர் எலியாவைப் பார்த்தவுடனே,
"ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்"
என்று எண்ணினார். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், "அவன் தோற்றத்தையும்
உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன்.
மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப்
பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்" என்றார்.
இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து
போகச் செய்தார். "இவர்களையும் ஆண்டவர் தேர்ந்துகொள்ளவில்லை"
என்றார் சாமுவேல். தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, "உன்
பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?" என்று கேட்க, "இன்னொரு சிறுவன்
இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான்" என்று
பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம், "ஆள் அனுப்பி
அவனை அழைத்து வா; ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த
மாட்டேன்" என்றார். ஈசாய் ஆள் அனுப்பி அவனை அழைத்து வந்தார்.
அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன்
இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், "தேர்ந்து கொள்ளப்பட்டவன்
இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!" என்றார்.
உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர்
முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்றுமுதல் ஆண்டவரின்
ஆவி தாவீதின்மேல் நிறைவாக இருந்தது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான
நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3a
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; - பல்லவி
3b
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க
நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;
உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி
5
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு
செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது
பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி
6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும்
என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில்
நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
"இறந்தவனே, உயிர்பெற்றெழு; கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்'.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
5: 8-14
சகோதரர் சகோதரிகளே,
ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து
ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில்,
ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது.
ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். பயனற்ற
இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம்.
அவை குற்றமென எடுத்துக்காட்டுங்கள். அவர்கள் மறைவில் செய்பவற்றைச்
சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. அவர்கள் செய்வதை எல்லாம் குற்றமென
ஒளியானது எடுத்துக்காட்டும்போது அவற்றின் உண்மை நிலை வெளியாகிறது.
அவ்வாறு தெளிவாக்கப்படுவது எல்லாம் ஒளி மயமாகிறது.
ஆதலால், "தூங்குகிறவனே, விழித்தெழு; இறந்தவனே, உயிர்பெற்றெழு;
கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்" என்று கூறப்பட்டுள்ளது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 8: 12b)
"உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு
வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்," என்கிறார் ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அவர் போய்க் கழுவி, பார்வை பெற்றுத்
திரும்பி வந்தார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
9: 1-41
அக்காலத்தில் இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே
பார்வையற்ற ஒருவரைக் கண்டார். "ரபி, இவர் பார்வையற்றவராய்ப்
பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?"
என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாக,
"இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல;
கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்.
பகலாய் இருக்கும்வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்யவேண்டியிருக்கிறது.
இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது. நான் உலகில்
இருக்கும்வரை நானே உலகின் ஒளி" என்றார். இவ்வாறு கூறியபின் அவர்
தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப்
பார்வையற்றவருடைய கண்களில் பூசி, "நீர் சிலோவாம் குளத்துக்குப்
போய்க் கண்களைக் கழுவும்" என்றார். சிலோவாம் என்பதற்கு
"அனுப்பப்பட்டவர்" என்பது பொருள். அவரும் போய்க் கழுவி, பார்வை
பெற்றுத் திரும்பி வந்தார். அக்கம் பக்கத்தாரும், அவர்
பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும்,
"இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?"
என்று பேசிக்கொண்டனர். சிலர், "அவரே" என்றனர்; வேறு சிலர்,
"அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார்" என்றனர். ஆனால்
பார்வை பெற்றவர், "நான்தான் அவன்" என்றார். அவர்கள், "உமக்கு
எப்படிப் பார்வை கிடைத்தது?" என்று அவரிடம் கேட்டார்கள். அவர்
அவர்களைப் பார்த்து, "இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி,
என் கண்களில் பூசி, "சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக்
கழுவும்" என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது"
என்றார். "அவர் எங்கே?" என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை
பெற்றவர், "எனக்குத் தெரியாது" என்றார். முன்பு
பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டி
வந்தார்கள். இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்த
நாள் ஓர் ஓய்வுநாள். எனவே, "எப்படிப் பார்வை பெற்றாய்?"
என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர்,
"இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக்
கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது" என்றார்.
பரிசேயருள் சிலர். "ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த
ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது" என்று
பேசிக்கொண்டனர். ஆனால் வேறு சிலர், "பாவியான ஒரு மனிதரால்
இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?" எனக் கேட்டனர்.
இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. அவர்கள்
பார்வையற்றிருந்தவரிடம், "உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக்
குறித்து நீ என்ன சொல்கிறாய்?" என்று மீண்டும் கேட்டனர்.
"அவர் ஓர் இறைவாக்கினர்" என்றார் பார்வை பெற்றவர். அவர்
பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய
பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை.
"பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள்
மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?"
என்று கேட்டார்கள். அவருடைய பெற்றோர் மறுமொழியாக, "இவன்
எங்களுடைய மகன்தான். இவன் பிறவியிலேயே பார்வையற்றவன்தான்.
ஆனால் இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ யார்
அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது.
அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன்தானே! நடந்ததை அவனே
சொல்லட்டும்" என்றனர். யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய
பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில் இயேசுவை மெசியாவாக
ஏற்றுக்கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிட
வேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு
செய்திருந்தார்கள். அதனால் அவருடைய பெற்றோர், "அவன் வயது
வந்தவன்தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றனர்.
பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு
அவரிடம், "உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து.
இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்" என்றனர்.
பார்வை பெற்றவர் மறுமொழியாக, "அவர் பாவியா இல்லையா என்பது
எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்: நான்
பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன்"
என்றார். அவர்கள் அவரிடம், "அவன் உனக்கு என்ன செய்தான்?
எப்படிப் பார்வை அளித்தான்?" என்று கேட்டார்கள். அவர்
மறுமொழியாக, "ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது
நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க
விரும்புகிறீர்கள்? ஒருவேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக
விரும்புகிறீர்களோ?" என்று கேட்டார். அவர்கள் அவரைப் பழித்து,
"நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள்.
மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன்
எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது" என்றார்கள். அதற்கு
அவர், "இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை
அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர்
எனத் தெரியாது என்கிறீர்களே! பாவிகளுக்குக் கடவுள்
செவிசாய்ப்பதில்லை; இறைப்பற்று உடையவராய்க் கடவுளின்
திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவிசாய்க்கிறார் என்பது
நமக்குத் தெரியும். பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவர்
பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே! இவர் கடவுளிடமிருந்து வராதவர்
என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது" என்றார். அவர்கள்
அவரைப் பார்த்து, "பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக்
கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத்தருகிறாய்?" என்று சொல்லி
அவரை வெளியே தள்ளினர். யூதர்கள் அவரை வெளியே
தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக்
கண்டபோது, "மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?" என்று
கேட்டார். அவர் மறுமொழியாக, "ஐயா, அவர் யார்? சொல்லும்.
அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்" என்றார். இயேசு
அவரிடம், "நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு
பேசிக்கொண்டிருப்பவரே அவர்" என்றார். அவர், "ஆண்டவரே,
நம்பிக்கை கொள்கிறேன்" என்று கூறி அவரை வணங்கினார். அப்போது
இயேசு, "தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்;
பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர்
ஆகவுமே வந்தேன்" என்றார். அவரோடு இருந்த பரிசேயர் இதைக்
கேட்டபோது, "நாங்களுமா பார்வையற்றோர்?" என்று கேட்டனர். இயேசு
அவர்களிடம், "நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால்
உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் "எங்களுக்குக் கண்
தெரிகிறது" என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே
இருக்கிறீர்கள்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
அவர் போய்க் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1, 6-9, 13-17,
34-38
அக்காலத்தில் இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே
பார்வையற்ற ஒருவரைக் கண்டார். அவர் தரையில் உமிழ்ந்து,
உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய
கண்களில் பூசி, "நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக்
கழுவும்" என்றார். சிலோவாம் என்பதற்கு "அனுப்பப்பட்டவர்"
என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத்
திரும்பி வந்தார். அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக்
கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், "இங்கே அமர்ந்து
பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?" என்று
பேசிக்கொண்டனர். சிலர், "அவரே" என்றனர்; வேறு சிலர்,
"அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார்" என்றனர். ஆனால்
பார்வை பெற்றவர், "நான்தான் அவன்" என்றார். முன்பு
பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டி
வந்தார்கள். இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்த
நாள் ஓர் ஓய்வுநாள். எனவே, "எப்படிப் பார்வை பெற்றாய்?"
என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர்,
"இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக்
கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது" என்றார்.
பரிசேயருள் சிலர், "ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த
ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது" என்று
பேசிக்கொண்டனர். ஆனால் வேறு சிலர், "பாவியான ஒரு மனிதரால்
இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?" எனக் கேட்டனர்.
இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. அவர்கள்
பார்வையற்றிருந்தவரிடம், "உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக்
குறித்து நீ என்ன சொல்கிறாய்?" என்று மீண்டும் கேட்டனர்.
"அவர் ஓர் இறைவாக்கினர்" என்றார் பார்வை பெற்றவர். அவர்கள்
அவரைப் பார்த்து, "பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக்
கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத்தருகிறாய்?" என்று சொல்லி
அவரை வெளியே தள்ளினர். யூதர்கள் அவரை வெளியே
தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக்
கண்டபோது, "மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?" என்று
கேட்டார். அவர் மறுமொழியாக, "ஐயா, அவர் யார்? சொல்லும்.
அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்" என்றார். இயேசு
அவரிடம், "நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு
பேசிக்கொண்டிருப்பவரே அவர்" என்றார். அவர், "ஆண்டவரே,
நம்பிக்கை கொள்கிறேன்" என்று கூறி அவரை வணங்கினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
I 1சாமுவேல் 16: 1b, 6-7, 10-13a
II எபேசியர் 5: 8-14
III யோவான் 9: 1-41
உலகின் ஒளியாம் இயேசு
நிகழ்வு
பார்வையற்ற ஒருவர் தன்னுடைய நெருங்கிய நண்பருடைய வீட்டிற்குச்
சென்றிருந்தார். நண்பரின் வீடோ ஊருக்கு வெளியே ஓரமாக இருந்தது.
இருவரும் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்ததால், நேரம்போனதே
தெரியவில்லை. தற்செயலாக பார்வையற்றவரின் நண்பர் வெளியே
பார்த்தபொழுதுதான் தெரிந்தது, நன்றாக இருட்டிவிட்டது என்று.
உடனே அவர் தன்னுடைய நண்பரிடம், "நண்பா! வெளியே நன்றாக
இருட்டிவிட்டது. அதனால் இப்பொழுது நீ உன்னுடைய வீட்டிற்குத்
திரும்பச் செல்வது அவ்வளவு நல்லதல்ல என்று நினைக்கின்றேன்.
அதனால் இன்றிரவு இங்கு தங்கிவிட்டு, நாளைக் காலை வீட்டிற்குச்
செல்" என்றார்.
"என்ன, இருட்டிவிட்டதால் வீட்டிற்குச் செல்லவேண்டாமா...?
எனக்கு எப்பொழுதும் ஒரே இருட்டாகத்தானே இருக்கின்றது. அதனால்
நான் இப்பொழுதே வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றேன்" என்றார்
அந்தப் பார்வையற்ற மனிதர். "சரி, இப்பொழுதுதே நீ உன்னுடைய
வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்; ஆனால், போகிறபொழுது இந்த
விளக்கை கையோடு கொண்டுசெல்; எதிரே வரக்கூடியவர்கள் உன்மீது
மோதாமல் இருப்பார்கள் அல்லவா" என்று ஒரு விளக்கை கையில்
கொடுத்து அனுப்பி வைத்தார் பார்வையற்றவரின் நண்பர்.
இதற்குப் பின்பு பார்வையற்றவர் தன்னுடைய நண்பர் தன் கையில்
கொடுத்த விளக்கை ஏந்திக்கொண்டு வீட்டை நோக்கி நடந்துவந்தார்.
வழியில் எதிரே வந்தவர் இவர்மீது மோத இவருக்குக் கடுமையான கோபம்
வந்தது. "நான்தான் கையில் விளக்கை ஏந்தி வருகிறேனே! பிறகு
எதற்கு என்மீது மோதினீர்கள்! பார்த்து வரக்கூடாதா...?" என்று
கத்தினார். உடனே எதிரில் வந்த மனிதர், "நீங்கள் கையில் விளக்கை
ஏந்தி என்ன புண்ணியம்! அது அணைந்து வெகுநேரமாகிவிட்டது போலும்"
என்று சொல்லிவிட்டுக் கடந்துபோய்விட்டார். பார்வையற்ற மனிதரோ
"விளக்கு அணைந்து வெகுநேரமாகிவிட்டது என்பதுகூடத் தெரியாமல்
நடந்து வந்திருக்கின்றேனே!" என்று வருத்தத்தோடு வீட்டிற்கு
வந்தார்.
மேலே உள்ள நிகழ்வில் வரும் பார்வையற்ற மனிதர் பார்வையில்லாமல்
இருந்தால், இடறி விழுந்தார்; ஆனால், பலர் பார்வையோடு
இருந்தாலும் வாழ்க்கையில் இடறி விழுகின்றவர்களாக
இருக்கின்றார்கள். தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம்
வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, உலகின் ஒளியான இயேசுவின்மீது
நம்பிக்கை வைத்து வாழ்ந்தால் நாம் பார்வைபெற்றவர்களாக
இருப்போம் என்ற செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கின்றது. அது
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பார்வையற்றவர் பார்வைபெறுதல்
நற்செய்தியில், இயேசு பிறவியிலேயே பார்வையற்ற மனிதருக்குப்
பார்வையளிக்கின்ற ஒரு நிகழ்வினைக் குறித்து வாசிக்கின்றோம்.
இயேசு, பார்வையற்ற மனிதருக்குப் பார்வையளிக்கின்ற இந்த நிகழ்வு
நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்துச்
சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பாக, இயேசுவுக்கும் அவருடைய
சீடர்களுக்கும் இடையே நடக்கின்ற உரையாடலைக் குறித்துச்
சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
இயேசுவின் சீடர்கள் பார்வையற்ற மனிதரைப் பார்த்தும், அவரிடம்,
இவர் இவ்வாறு பிறக்கக் காரணம் இவர் செய்த குற்றமா? இவர்
பெற்றோர் செய்த குற்றமா என்று கேட்கின்றார்கள். ஏனெனில்
விடுதலைப் பயணநூல், "ஆண்டவர், தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள்
மேலும், பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும் மூன்றாம் நான்காம்
தலைமுறை வரை தண்டித்துத் தீர்ப்பவர்" (விப 34:7) என்று
கூறுகின்றது. இதனாலேயே அவர்கள் இப்படியொரு கேள்வியை இயேசுவிடம்
கேட்கின்றார்கள்; ஆனால், இயேசு அவர்களிடம், "கடவுளின் செயல்
இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தார்" என்று
கூறுகின்றார்.
இங்கு கடவுளின் செயல் எது எனத் தெரிந்துகொள்ளவேண்டும். இதற்கு
நாம் இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறுகின்ற கீழ்காணும்
இறைவார்த்தையை இணைத்துச் சிந்தித்துப் பார்க்கவேண்டும் (எச 29:
18, 35:5, 42:7). இப்பகுதியில் மெசியா வருகின்றபொழுது
பார்வையற்றவர் பார்வைபெறுவர் என்று சொல்லப்பட்டிருக்கும்.
இயேசு நற்செய்தியில் வருகின்ற பார்வையற்ற மனிதருக்குப்
பார்வையளித்தன் மூலம், நான் மெசியா என்பதையும் நானே உலகின் ஒளி
(யோவா 8:12) என்பதையும் நிரூபிக்கின்றார். இயேசு பிறவிலேயே
பார்வையற்றவராய் இருந்த மனிதர்மீது இரங்கிப்
பார்வையளித்தன்மூலம் அவர் புறப்பார்வையைப் (கண்பார்வையைப்)
பெற்றுக்கொண்டார். பிறகு அவர் ஆண்டவர்மீது நம்பிக்கை
கொண்டதன்மூலம் (யோவா 9:38) அகப்பார்வையையும்
பெற்றுக்கொள்கின்றார்.
பார்வையோடு இருந்தவர்கள் பார்வையை இழத்தல்
பிறவிலேயே பார்வையற்ற மனிதர் ஆண்டவர் இயேசுவால்
புறப்பார்வையும் தன்னுடைய நம்பிக்கையினால் அகப்பார்வையையும்
பெற்றுக்கொண்டதைக் குறித்து சிந்தித்துப் பார்த்தோம்.
இப்பொழுது பார்வையோடு இருந்த பரிசேயர்கள் எப்படி
நடந்துகொண்டார்கள் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு பார்வையற்ற மனிதரை நலப்படுத்திய நாள் ஓர் ஓய்வுநாள்
என்பதால், ஓய்வுநாள் சட்டத்தை மீறிய ஒருவர் கடவுளிடமிருந்து
வந்திருக்க முடியாது என்றும் பாவியான ஒருவரால் பார்வையற்ற
மனிதருக்குப் பார்வையளிக்க முடியாது என்றும் இருவிதமாகப்
பேசிக்கொள்கின்றார்கள். இவ்வாறு அவர்கள் இயேசுவை மெசியா
என்றும் உலகின் ஒளி என்றும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.
மட்டுமல்லாமல், பார்வையற்றிருந்து பின்பு பார்வைபெற்ற
மனிதரையும் துன்புறுத்தத் தொடங்குகின்றார்கள்.
இயேசு மக்கள் நடுவில் பெற்ற பெயரையும் புகழையும்
செல்வாக்கையும் பரிசேயர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.
இதனால் அவர்கள் இயேசுவை மெசியா என நம்பி ஏற்றுக்கொள்ள
மறுத்தார்கள். இதன்பொருட்டே பார்வையோடு இருந்தும் அவர்கள்
பார்வையற்றவர்களாய் இருந்தார்கள். இறைவாக்கினர் எசாயா
கூறுவார், "கண்ணிருந்தும் குரடராய்" (எசா 43:8) என்று. அவருடைய
வார்த்தைகள் பரிசேயர்களுக்கு அப்படியே பொருந்திப் போவதாக
இருக்கின்றன.
பார்வை பெற என்ன செய்யவேண்டும்
பிறவிலேயே பார்வையற்ற மனிதர் பார்வை பெறுவதும் பார்வையோடு
இருந்த பரிசேயர்கள் "பார்வையற்றவர்களாய்ப்" போவதும் நமக்கு
என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்ப்பது
நல்லது. பார்வையற்ற மனிதர் பார்வை பெறுவதற்கும் பார்வையோடு
இருந்த பரிசேயர்கள் பார்வையற்றவர்களாய்ப் போவதற்கும்
"நம்பிக்கையே" காரணமாக இருக்கின்றது. பார்வையற்ற மனிதர்
இயேசுவை நம்பினார், அதனால் புறப்பார்வையோடு அகப்பார்வையும்
பெற்றார். பார்வையோடு இருந்த பரிசேயர்கள் இயேசுவை நம்பவில்லை,
அவரை ஏற்றுக்கொள்ளவுமில்லை. இதனால் அவர்கள் பார்வையோடு
இருந்தும் பார்வையற்றவர்களாய் ஆனார்கள்.
"கிறிஸ்தவர்கள்" என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் இயேசுவின்
மீது ஆழமான நம்பிக்கைகொண்டிருக்கின்றோமா? அல்லது பரிசேயர்களைப்
போன்று அவரை நம்பாமலும் ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கின்றோமா?
சிந்தித்துப் பார்ப்போம். "ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்"
(திபா 37:3) என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம்
இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, உலகின் ஒளியாம் அவர் வழியில்
பார்வையுள்ளவர்களாய் நடப்போம்.
சிந்தனை
"ரபூனி, நான் மீண்டும் பார்வைபெற வேண்டும்" (மாற் 10:51) என்று
நம்பிக்கையோடு கேட்ட பர்த்திமேயுக்கு இயேசு பார்வையளிப்பார்.
நாமும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தோமெனில்,
புறப்பார்வை பெற்றவர்களாக மட்டுமல்லாமல், அகப்பார்வை
பெற்றவர்களாகவும் இருப்போம்; இறைவனுக்கு உகந்த வழியிலும்
நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|