|
ஆண்டு A |
|
தவக்காலம்
1ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
முதல் பெற்றோரைப் படைத்ததும் அவர்களின் பாவமும்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 7-9; 3: 1-7
ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன்
நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.
ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத்
தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு
அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும்,
தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு
ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.
ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம்
பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம்,
"கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது
என்றது உண்மையா?" என்று கேட்டது. பெண் பாம்பிடம்,"தோட்டத்தில்
இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். ஆனால்
"தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது;
அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள் என்று கடவுள்
சொன்னார்," என்றாள்.
பாம்பு பெண்ணிடம்,"நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள்
அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள்
கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத்
தெரியும்" என்றது.
அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும்
அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண்
அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும்
கொடுத்தாள். அவனும் உண்டான். அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும்
திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர்.
ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 51: 1-2, 3-4a, 10-11, 12+15 (பல்லவி: திபா 51:1a)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம்
செய்தோம்.
1கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப
என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என்
பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி
3ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும்
என் மனக்கண்முன் நிற்கின்றது.
4aஉமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது
செய்தேன். - பல்லவி
10கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும்
ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
11உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை
என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி
12உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ
மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
15என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய்
உமக்குப் புகழ் சாற்றிடும். - பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
பாவம் பெருகிய இடத்தில் அருள் அணைகடந்து பெருக்கெடுத்தது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
5: 12-19
சகோதரர் சகோதரிகளே,
ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப்
பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம்
செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. திருச்சட்டம்
தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது
அது பாவமாகக் கருதப்படவில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில்
இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை.
எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று; இந்த ஆதாம்
வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.
ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில்,
ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும்
இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும்
பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. இந்த அருள்கொடையின் விளைவு
வேறு, அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு. எவ்வாறெனில்,
ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை.
பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள்கொடையாக
வந்த விடுதலை.
மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி
செலுத்தினதென்றால், அருள் பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும்
கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்துகொண்டவர்கள்
வாழ்வு பெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய்
நம்பலாம் அன்றோ?
ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய்
அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும்
வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின்
கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால்
பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
அல்லது
குறுகிய வாசகம்
பாவம் பெருகிய இடத்தில் அருள் அணைகடந்து பெருக்கெடுத்தது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
5: 12,17-19
சகோதரர் சகோதரிகளே,
ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப்
பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம்
செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.
மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி
செலுத்தினதென்றால் அருள் பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும்
கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்துகொண்டவர்கள்
வாழ்வு பெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய்
நம்பலாம் அன்றோ?
ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய்
அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும்
வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின்
கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால்
பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(மத் 4: 4b)
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும்
வாழ்வர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு நாற்பது நாள் நோன்பிருக்கிறார்; சோதிக்கப்படுகிறார்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-11
அக்காலத்தில்
இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலைநிலத்திற்குத் தூய
ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் இரவும்
பகலும் நோன்பிருந்தார். அதன்பின் பசியுற்றார். சோதிக்கிறவன்
அவரை அணுகி,"நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக்
கட்டளையிடும்" என்றான். அவர் மறுமொழியாக," "மனிதர் அப்பத்தினால்
மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்
என மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார்.
பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது.
கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,"நீர் இறைமகன் என்றால்
கீழே குதியும்; "கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்.
உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத்
தாங்கிக் கொள்வார்கள் என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்று
அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம்," "உன் கடவுளாகிய ஆண்டவரைச்
சோதிக்க வேண்டாம் எனவும் எழுதியுள்ளதே" என்று சொன்னார்.
மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச்
சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக்
காட்டி, அவரிடம்,"நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என்னை வணங்கினால்,
இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்" என்றது. அப்பொழுது இயேசு
அதனைப் பார்த்து,"அகன்று போ, சாத்தானே, "உன் கடவுளாகிய ஆண்டவரை
வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் என்றும் மறைநூலில் எழுதியுள்ளது"
என்றார்.
பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப்
பணிவிடை செய்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
I தொடக்கநூல் 2: 7-9; 3: 1-7
II உரோமையர் 5: 12-19
III மத்தேயு 4: 1-11
ஆண்டவரில் நிலைத்திருப்பவர் அசைவுறார்
நிகழ்வு
அது ஒரு கடற்கரைக் கிராமம். அந்தக் கிராமத்தில் பெரியதொரு
கலங்கரை விளக்கு இருந்தது. அதைப் பெரியவர் ஒருவர்
பன்னெடுங்காலமாகக் காவல்காத்து வந்தார். ஒருநாள் இரவில் கடலில்
பெரும்புயல் ஏற்பட்டு, கடற்கரையோரத்தில் இருந்த
வீடுகளையெல்லாம் சேதப்படுத்தியது.
இதையடுத்து வந்த நாளில் கலங்கரை விளக்கைத் காவல் காத்து வந்த
பெரியவர் ஊருக்குள் வந்தார். அவரைப் பார்த்ததும், ஊருக்குள்
அவருக்குத் தெரிந்த ஒருசிலர் அவரிடம், "நேற்று இரவு வீசிய
பெரும் புயலில் இங்கிருந்த பல வீடுகள் இடிந்து விழுந்து
தரைமட்டமாகிவிட்டன... கலங்கரை விளக்குகூட இடிந்து விழுந்து
விட்டதாகக் கேள்விப்போட்டோம். அது உண்மையா?" என்றனர். அதற்கு
அந்தப் பெரியவர், "இந்தப் புயலுக்கெல்லாம் கலங்கரை விளக்கு
இடிந்து விழுந்துவிடுமா என்ன...? கலங்கரை விளக்கின் அடித்தளம்
மிகவும் உறுதியாக இருக்கின்றது. அதை எந்தவொரு புயற்காற்றாலும்
அடித்து வீழ்த்திவிட முடியாது" என்று உறுதியாகச் சொன்னார்.
எப்படி கலங்கரை விளக்கின் அடித்தளம் உறுதியாக இருந்தததால்,
புயற்காற்றினால் ஒன்றும் செய்யமுடியாமல் போனதோ, அப்படி
ஆண்டவரின் மக்களாகிய நாம், அவரில் உறுதியாக இருந்தால்,
நம்முடைய வாழ்க்கையில் வரும் சோதனையோ, துன்பமோ... எதுவும்
நம்மை ஒன்றும் செய்ய முடியாது. தவக்காலத்தின் முதல் ஞாயிறான
இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நம்முடைய வாழ்வில்
வரும் சோதனைகளை நாம் எப்படி வெற்றிகொள்வது என்ற செய்தியை
நமக்கு எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
உடல்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான சோதனை
நற்செய்தியில், ஆண்டவர் இயேசு பாலை நிலத்தில் நாற்பது நாள்கள்
இரவும் பகலும் நோன்பிருந்து பசியாய் இருக்கின்றார்.
இத்தகையதொரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அலகை அவரைச்
சோதிக்கின்றது.
மனிதர்களுக்கு வரக்கூடிய பெரும்பாலான சோதனைகள், அடிப்படைத்
தேவைகளில் முதன்மையாக இருக்கக்கூடிய உணவு தொடர்பான
சோதனைகள்தான். இந்தச் சோதனைக்கு ஆதாம் ஏவாள் தொடங்கி,
இஸ்ரயேல் மக்கள் வரை பலர் வீழ்ந்திருக்கின்றார்கள்; ஆனால்,
இயேசு இந்தச் சோதனையில் விழவில்லை. இத்தனைக்கும் அவரால் கற்களை
அப்பமாக மாற்றி உண்ணமுடியும் என்றாலும்கூட, அந்தச் சோதனையில்
வீழ்ந்துவிடாமல், "மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக,
கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்" (இச 8:3) என்ற
இறைவார்த்தையின்மூலம் சாத்தனை முறியடிக்கின்றார். நமக்கும் இது
போன்ற சோதனைகள் வரலாம். ஏனென்றால், புனித பவுல் உரோமையருக்கு
எழுதிய திருமடலில் கூறுவதுபோல, கிறிஸ்துவின் அன்பிலிருந்து
நம்மைப் உணவும் அதுதொடர்பாக வரும் பட்டினியும் பிரிக்கக்கூடும்
(உரோ 8: 35). இத்தகைய வேளைகளில் நாம் சோதனையில்
வீழ்ந்துவிடாமல், இறைவனில் உறுதியாக இருப்பது நல்லது.
நம்முடைய விருப்பு வெறுப்பிற்கேற்ப இறைவனை வளைத்துக்கொள்ளும்
சோதனை
ஒரு மனிதர் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கின்ற
சோதனையை வென்றுவிட்டால், அவருக்கு வருகின்ற அடுத்த சோதனை
அதிகாரம் தொடர்பான சோதனை. இதனை வேறு வார்த்தைகளில்
சொல்லவேண்டும் என்றால், தன்னுடைய விருப்பு வெறுப்பிற்கேற்ப
கடவுளையும் மக்களையும் வளைத்துக் கொள்கின்ற சோதனை என்று
சொல்லலாம். இது எப்படி என்று பார்ப்போம்.
இயேசு தனக்கு வந்த உணவு தொடர்பான சோதனையை வெற்றிகொண்டதும்,
சாத்தான் அவரை எருசலேம் திருநகருக்குக் கூட்டிச் சென்று,
திருப்பாடல் 91: 11-12 ஐ மேற்கோள் காட்டி, கோயிலிலிருந்து கீழே
குதிக்கச் சொல்கின்றது. இதன்மூலம் இறைவனைத் தன்னுடைய
விருப்பத்திற்கு ஏற்ப இழுக்குமாறு இயேசுவைத் தூண்டுகின்றது.
இயேசு அவ்வாறு செய்யாமல், "உன் கடவுளாகிய ஆண்டவரைச்
சோதிக்கவேண்டாம்" (இச 6:16) என்று சொல்லி அந்தச் சோதனையையும்
முறியடிக்கின்றார். ஒருசிலர் இருக்கின்றார்கள், இவர்கள்
தங்களிடம் அதிகாரம் இருக்கின்றது, செல்வாக்கு இருக்கின்றது
என்பதற்காக இறைவனிடம், "இறைவா! எனக்கு இதைச் செய்யும்... அதைச்
செய்யும்" சொல்லி, அவரைத் தங்களுடைய விரும்பத்திற்கேற்ப
இழுப்பார்கள். மனிதர்களையும் அவர்கள் இவ்வாறே செய்யச்
சொல்வார்கள்; ஆனால், இயேசு இறைவார்த்தையில், "உமது கால்கள்
கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத்
தாங்கிக்கொள்வார்கள் என்று சொல்லப்பட்டிருந்தாலும், தன்னிடம்
அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக அதைத் தவறாகப்
பயன்படுத்தாமல், வேறோர் இறைவார்த்தையால் சாத்தானை
வெற்றிகொள்கின்றார்.
"உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே" (விப
20:7) என்கிறார் ஆண்டவர். இவ்வார்த்தையை நாம் எப்பொழுதும்
நம்முடைய மனக்கண் முன் வைத்து, அதிகாரம் தருகின்ற போதை என்னும்
சோதனையில் வீழ்ந்துவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
இலகுவாக முன்னேறுவதற்கான சோதனை
உணவு மற்றும் அதிகாரம் தொடர்பான சோதனைகளை இயேசு முறியடித்ததும்
குறுக்கு வழியில் அல்லது இலகுவான வழியில் முன்னேறுவதற்கான
சோதனையை அலகை தன் கையில் எடுக்கின்றது. அது என்ன இலகுவாக
முன்னேறுவதற்கான சோதனை என்பதைப் பார்ப்போம்.
தீர்ப்புக்குள்ளாகி இருந்த இவ்வுலகை (யோவா 12:31) இயேசு
தன்னுடைய பாடுகள், சிலுவைச் சாவின் வழியாக மீட்கவேண்டும் (பிலி
2: 9-11) என்பது இறைவனின் திட்டம்; ஆனால், சாத்தான் இயேசுவை
ஓர் உயர்ந்த மலைக்குக் கூட்டிக்கொண்டு சென்று, அரசுகளைக்
காட்டி, தன்னை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினால்
எல்லாவற்றையும் தருவதாகச் சொல்கின்றது. பாடுகள் என்பது கடினமான
பாதை; சாத்தானை வணங்குவது மிகவும் இலகுவான பாதை. மிகவும்
இலகுவான பாதை என்பதற்காக இயேசு சாத்தானை வணங்காமல், கடினமான
பாதையான பாடுகளின் பாதையைத் தேர்ந்தெடுத்து, இயேசு சாத்தானின்
சோதனையை முறியடிக்கின்றார்.
நம்முடைய வாழ்க்கையிலும் இலகுவான பாதையைத் தேர்ந்தெடுத்து
அல்லது குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து முன்னேறுவதற்கான சோதனை
வரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் அந்தச் சோதனையில்
வீழ்ந்துவிடாமல், இயேசுவைப் போன்று ஆண்டவரில் உறுதியாக
இருந்து, அதனை வெற்றிகொள்வது நல்லது.
இங்கோர் உண்மையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில்,
நமக்குக் வருகின்ற சோதனைகள் எங்கிருந்தோ வருபவை அல்ல; நம்மைச்
சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்தும் பொருள்களிடமிருந்தே
வரும். இவற்றில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
இடைக்காலத்தில் வாழ்ந்தவர் மார்கோ போலோ. உலகமெங்கும்
சுற்றிவந்தவரான இவர் குறிப்பிடுகின்ற ஒரு செய்தி. லோப் என்ற
பாலைநிலத்தில் யாராவது நடந்துசென்றால், பின்னாலிருந்து அவருடைய
நண்பரோ அல்லது அவருக்கு அறிமுகமான ஒருவரோ அழைப்பது போன்று
இருக்குமாம். அவர் அந்தக் குரலுக்குச் செவிமடுத்து,
அதன்பின்னால் சென்றால் அழிவுதான் ஏற்படும். ஏனெனில்
சாத்தான்தான் அவரை ஏமாற்றுவதற்காக அவரை அவருடைய நண்பர்
அழைப்பது போன்று அழைக்குமாம்.
நமக்கும் நாம் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்தும்
பொருள்களிடமிருந்துமே சோதனைகள் வரும். அவற்றில் நாம்
வீழ்ந்துவிடாமல், ஆண்டவரில், அவருடைய வார்த்தையில்
நிலைத்திருந்து சோதனையை வெற்றிகொள்வது நல்லது. ஏனெனில்,
சோதனைகளை வெற்றிகொள்கின்றவர் வாழ்க்கையில் வெற்றிகொள்கின்றார்.
ஏன், எல்லாவற்றிலும் வெற்றி கொள்கின்றார்.
சிந்தனை
"தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால்
சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர் (எபி 2: 18)
என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நம்முடைய
வாழ்க்கையில் சோதனை வருகின்றபொழுது, அதில் நாம் வீழ்ந்திடாது,
இயேசுவில் உறுதியாக இருந்து வெற்றிகொள்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
தவக்காலத்தின் முதல் ஞாயிறு ஆண்டு 1
கீழ்ப்படிவோம்; கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவோம்!
(தொநூ 2: 7-9; 3: 1-7; உரோ 5: 12-19; மத் 4: 11)
கீழ்ப்படிவோம்; கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவோம்!
முதலில் கீழ்ப்படி; அப்புறம் போகலாம்
"பண்ணை நிலத்தைப் பார்த்துக்கொள்" என்று தன் தந்தையால்
அனுப்பப்பட்ட இளைஞன் ஒருவன், வேறு வழியில்லாமல் அங்கே
சென்றான். அங்கு அவன் யாருக்கும் தெரியாமல், மறைவான ஓர்
இடத்தில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக
அவனுடைய தந்தை அங்கு வந்தார்.
அவரைப் பார்த்ததும் என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பித்
தவித்த அவன் நிலைமையைச் சமாளிப்பதற்காக, "அப்பா! பக்கத்து
ஊரில் சர்க்கஸ் போட்டிருக்கின்றார்களாம்! இன்று இரவு நாம்
இருவரும் அங்கே போய் வரலாமா?" என்றான். இதற்கு அவனுடைய தந்தை,
"சர்க்கஸ் போவதெல்லாம் இருக்கட்டும். முதலில் சிகரெட்
பிடிப்பதை நிறுத்து. அதன்பிறகு சர்க்கஸ் போகலாம்" என்றார்.
மிகப்பெரிய மறைப்போதகரான சார்லஸ் ஸ்பெர்ஜன் (Charles Spurgeon)
என்பவரின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வு
கீழ்ப்படிந்து நடந்து நடப்பதன் முக்கியத்துவத்தை நமக்கு
உணர்த்துகின்றது. சார்லஸ் ஸ்பெர்ஜியன் தன் தந்தைக்குக்
கீழ்ப்படியாதால், அவரால் சர்க்கஸ் பார்க்கப் போக முடியவில்லை.
நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் நடந்தால், அவருக்கு
ஏற்புடையவர் ஆகமுடியாது; அவரிடமிருந்து ஆசிகளையும் பெற
முடியாது. தவக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம்
வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளுக்குக்
கீழ்ப்படிபவர்களாலேயே அவருக்கு ஏற்புடையவர் ஆக முடியும் என்ற
சிந்தனையைத் தருகின்றது. நாம் எப்படிக் கடவுளுக்குக்
கீழ்ப்படிந்து நடப்பது என்பது குறித்துச் சிந்திப்போம்.
கீழ்ப்படியாமையால் வந்த சாவு
ஆஸ்கர் வைல்ட் (Oscar Wilde) என்ற அறிஞர், "அடிப்படையில்
மனிதன் யாருக்கும் கீழ்ப்படியாதவன்" என்று குறிப்பிடுவார். இதை
எண்பிக்கும் வகையில் இன்றைய வாசகத்தில் ஆதாமும் ஏவாளும்
நடந்துகொள்கின்றார்கள்.
மனிதனைத் தம் உருவிலும் சாயலிலும் படைத்த கடவுள், அவனிடம்,
"தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம்
போல் உண்ணலாம். ஆனால், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான
மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே: ஏனெனில், அதிலிருந்து நீ
உண்ணும் நாளில் சாகவே சாவாய்" (தொநூ 2: 16, 17) என்கிறார்.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது (திபா 19: 7). அதனால்
மனிதன் கடவுளின் ஒழுங்குமுறைப் படி, நன்மை தீமை அறிவதற்கு
ஏதுவான மரத்திலிருந்து உண்ணாமல் இருந்திருக்கலாம். அவனோ,
பொய்யனாகிய சாத்தானின் வார்த்தைகளை நம்பி, விலக்கப்பட்ட
மரத்தின் கனியை உண்டு பாவம் செய்கின்றான்.
மனிதன் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் பாவம்
செய்ததால் ஆன்மிக இறப்பு (எபே 2:11) உடல் இறப்பு, நெருப்பு
ஏரியில் எறியப்படுதல் என்ற இரண்டாம் இறப்பு ஆகிய மூன்றுவிதமான
இறப்புக்கு ஆளாகின்றான். முதல் இறப்பு எனப்படும் ஆன்மிக இறப்பு
அவனைக் கடவுளை விட்டு வெகு தொலைவில் கொண்டு சென்றது. இரண்டாவது
இறப்பு எனப்படும் உடல் இறப்பு அழியாமைக்கென்று படைக்கப்பட்ட
மனிதனை (சாஞா 2:23) அழிவுக்குரியதாக்கியது. மூன்றாவது இறப்பு
அவனை நெருப்பு ஏரிக்குள் விழ வைத்து, என்றென்றும் துன்பப்பட
வைத்தது. இவையெல்லாம் மனிதன், நம்பிக்கைக்குரியவரான ஆண்டவரின்
வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், பொய்யனும், சூழ்ச்சி
மிக்கவனுமாகிய சாத்தானின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து
நடந்தாலேயே ஏற்பட்டது.
கீழ்ப்படிதலால் வந்த வாழ்வு
ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் எல்லாரும் பாவிகளாகி, சாவுக்கு
உள்ளான போதும், கடவுள் மனிதர்களை அப்படியே
புறந்தள்ளிவிடவில்லை. மாறாக, அவர்களை மீட்கத் தம் ஒரே மகனை
அனுப்பத் திருவுளமானார். அவர் இறைமகனாக இருந்தும், துன்பங்கள்
வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார் (எபி 5:8).
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசு சாத்தானால் சோதிக்கப்படுவதைப்
பற்றிக் கூறுகின்றது. இதில் அவர் சாத்தானுக்குக்
கீழ்ப்படியாமல், ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை பற்றி
வாசிக்கின்றோம். ஏறக்குறைய முதல் பெற்றோருக்கு வந்த சோதனையைப்
போன்றுதான் இயேசுவுக்குச் சோதனை வந்தது. நாற்பது நாள்கள்
இரவும் நோன்பிருந்த இயேசு, சாத்தான் சொன்னது போன்று கற்களை
அப்பமாக்கி உண்டிருக்கலாம். ஆனால், அவர் தந்தை தனக்குக்
கொடுத்த திட்டத்தின்படி பாடுகளின் வழியாகத்தான் இவ்வுலகிற்கு
மீட்பு வழங்க விரும்பினாரே ஒழிய, சாத்தானின் வார்த்தையைக்
கேட்டு, குறுக்கு வழியில் இவ்வுலகிற்கு மீட்பு வழங்க முன்வர
வில்லை.
முதல் பெற்றோர், விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டால்,
கடவுளைப் போன்று நன்மை தீமையை அறியலாம் என்று சாத்தனுக்குக்
கீழ்ப்படிந்து மரத்தின் கனியை உண்டனர். இயேசுவோ சாத்தானை
நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினால், உலக அரசுகள்
கிடைக்கும் என்ற போதும், அதற்குக் கீழ்ப்படியாமல், அல்லது
குறுக்கு வழியில் உலக அரசுகளை அடையாமல், தந்தைக் கீழ்ப்படிந்து
அவற்றை அடைகின்றார் (பிலி 2: 10). இவ்வாறு அவர் இன்றைய
இரண்டாம் வாசகத்தின் இறுதியில் நாம் வாசிப்பது போல், முதல்
பெற்றோர் தங்கள் கீழ்ப்படியாமையால் தண்டனைத் தீர்ப்பை
வருவித்துக் கொண்டபோது, இயேசு கிறிஸ்து தன்னுடைய
கீழ்ப்படிதலால் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பைப் பெற்றுத்
தந்தது மட்டுமல்லாமல், பலரும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆகக்
காரணமானார்.
தூயதோர் உள்ளத்தைக் கேட்போம்
கடவுள் நமக்கு தம் ஒரே மகன் வழியாக வாழ்வளித்திருக்கும்போது,
புனித பவுல் சொல்வது போன்று, நாம் மேலுலகு சார்ந்தவற்றையே நாட
வேண்டும் (கொலோ 3:1). ஆனால், நமக்குள் இருக்கும் தீவினை
நம்மைப் பாவம் செய்யத் தூண்டிக் கொண்டே இருக்கின்றது. அதனால்
இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 51 இல்
அதன் ஆசிரியர் தாவீது பாடுவதுபோல், "தூயதோர் உள்ளத்தை
என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும்
ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்" என்று நாம் கடவுளிடம் கேட்க
வேண்டும்.
இஸ்ரயேலின் மன்னராக இருந்த தாவீது, ஆண்டவருக்கு
ஏற்புடையவற்றைச் செய்து, அவரது நெஞ்சத்திற்கு உகந்தவராய்
இருந்தார். எப்போது அவர் உரியாவின் மனைவியோடு பாவம்
செய்கின்றாரோ, அப்போதே அவர் ஆண்டவரை விட்டு விலகிப் போகிறார்.
தாவீது செய்த இப்பாவத்தை இறைவாக்கினர் நாத்தான் மூலம் ஆண்டவர்
அவரிடம் எடுத்துச் சொன்னபோது, தாவீது தன் பாவத்தை உணர்ந்து
மனம் வருந்தி அழுகின்றார். அப்போது பாடப்பட்ட திருப்பாடல்தான்
இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 51.
இதில் தாவீது பாடியபோல, நாம் ஆண்டவரிடம் தூயதோர் உள்ளத்தைத்
தருமாறு கேட்டு, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது, நாம்
கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக முடியும்.
சிந்தனைக்கு:
அன்பு ஆணிவேர். கீழ்ப்படிதல் அதன் கனி" என்பார் மேத்யூ ஹென்றி
என்ற எழுத்தாளர். நாம் கடவுள்மீது அன்பு கொண்டிருக்கின்றோம்
என்பதை அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன்மூலம்
வெளிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
திருப்பலி முன்னுரை
இவ்வுலக ஆசைகளில் சிக்கிக் கொள்ளாமல் வாழவும், அலகையின்
சோதனைக்கு ஆட்படாமல் நம்மை தப்புவிக்கவும், இறைவன் திருமுன்
பணிவோம் என்பதை எடுத்துக் கூறும் தவக்காலம் 01ஆம் ஞாயிறு
திருப்பலி கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இறைப்பாதையில் பயணிக்கும் போது பல்வேறு சோதனைகளும்,
தடைக்கற்களும் எதிர்ப்படவே செய்யும். இறைமகனுக்கே அலகை சவால்
விடுத்தது என்றால் புல்லைப் போன்ற மனிதர்கள் நாம்
எம்மாத்திரம்? எனவே பேராசையே சாவுக்கு அடிகோலும் என்பதை
அறிந்து கொள்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில், நம் முதல் பெற்றோர் பாம்பினால்
சோதிக்கப்பட்டதை தொடக்கநூல் வார்த்தைகள் எடுத்தியம்புகின்றது.
அனைத்து வளங்களையும் இன்ப வனத்தில் அனுபவிக்க இறைவன் தந்தார்.
இதை விட பெரியது ஒன்று உள்ளது என்ற அலகையின் ஆசை
வார்த்தைகளுக்கு ஏவாள் அடிபணிந்து பாவத்திற்கு வழியமைத்து
விட்டாள். வஞ்சகம் வெற்றி பெற்றது. இக்காலத்திலும் வஞ்சகமும்
பேராசையுமே பல்வேறு கலகங்களுக்கும் சாவுக்கும் காரணமாயுள்ளது.
போதுமென்ற மனம் கொள்வோம். பரமனின் அன்பைப் பெறுவோம்.
இன்றைய நற்செய்தியில், இயேசு பாலைவனத்தில் சாத்தானால்
சோதிக்கப்பட்டதை மத்தேயு நற்செய்தி எடுத்துரைக்கின்றது.
நாற்பது நாட்கள் நோன்பிருந்து, பாலைவன வெயிலில் வாடிய
இயேசுவுக்கு அடிப்படை தேவையான உணவின் ஆசை, பின் உலக அரசு என
சாத்தான் ஆசை காட்டுகிறது. இறை பயம் மறந்த ஏவாள்
வஞ்சிக்கப்பட்டாள். இறை துணையோடு இயேசு வெற்றி பெற்றார்.
சோதனைகளின் போது இறைவனையும் அவரது வார்த்தைகளையும் பற்றிக்
கொண்டு ஒரு மனிதன் வழியாய் வந்த பாவத்தை, சாவினை இயேசு வெற்றி
கொண்டதைப் போல நாமும் சோதனைகளை மேற்கொள்ள, இத்தவக்காலத்தில்
ஜெபித்து பலியில் பங்கேற்போம்.
இறைமக்களின் மன்றாட்டுகள்
1. ஆண்டவர் ஒருவருக்கே பணி செய் என்றவரே எம் இறைவா!
எம் திரு அவையை வழிநடத்தும் திரு அவைத் தலைவர், பணியாளர்கள்
ஆண்டவருக்கு பணி செய்யவே வந்தோம் என்பதை முழுமனதோடு செய்யவும்,
ஆடம்பரமான, இவ்வுலக காரியங்களை கைக்கொள்ளாமல் நற்செய்திப்
பணியால் சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும் வரமருள வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. பாலைவனத்தை பசுமையாய் மாற்றுபவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் தலைவர்கள், அதிகாரிகள் நாட்டின் வளத்தன்மையை
சிதைக்காமல், போராட்டத்தை தூண்டாமல், இயற்கையைச் சிதைத்து,
பசுமையை பாலைவனம் ஆக்காமல், மக்களின் அமைதியுடன், மகிழ்வுடன்
வாழ தேவையான திட்டங்களைத் தீட்டவும், பாகுபாடின்றி
செயல்படுத்தவும் ஞானம் தர வே வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாய்ச்சொல்
ஒவ்வொன்றாலும் வாழ்வர் என்றவரே எம் இறைவா!
உணவு, பாதுகாப்பு மற்றும் தன் மதிப்புக்கான எங்கள் வாழ்க்கை
தேடல்களில், அலகையின் வழியைத் தேர்ந்தெடுக்காமல், நீதி,
நேர்மையோடு இறைவழியில் சாதிக்க வரமருள வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. சாவை அகற்றி வாழ்வளிக்க வந்தவரே எம் இறைவா!
எம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களுக்கு நல்ல விலை
கிடைத்து, வேளாண் பொருளாதாரம் ஏற்றம் பெறவும், குடும்ப அமைதி,
மகிழ்ச்சி பெருகவும், தேர்வைச் சந்திக்கும் மாணவர்கள் சிறந்த
ஞானத்தோடு தேர்வு எழுதி வெற்றி பெறவும், வேலைவாய்ப்பு,
திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உம் அருளால் பெற்று
மகிழவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
|
|