Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                         01  டிசம்பர் 2019  
                                         திருவருகைக்காலம் 1ம்  ஞாயிறு - 1ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்றுசேர்க்கிறார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5

யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி: இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து, `புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம்; அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்' என்பார்கள்.

ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும். அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளைக் கருக்கு அரிவாள்களாகவும் அடித்துக்கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1) Mp3
=================================================================================
 பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1 `ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி

4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி

6 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்; உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! 7 உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உன் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!" பல்லவி

8 உன்னுள் சமாதானம் நிலவுவதாக!'' என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். 9 நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். பல்லவி



================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
  நமது மீட்பு மிக அண்மையில் உள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-14

சகோதரர் சகோதரிகளே, இறுதிக்காலம் இதுவே என அறிந்துகொள்ளுங்கள்; உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது. இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்வோமாக!

பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்துகொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காம வெறி, சண்டைச் சச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 85: 7

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
விழிப்பாயிருங்கள்; ஆயத்தமாயிருங்கள்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 37-44


அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிடமகன் வருகையின் போதும் இருக்கும்.

வெள்ளப்பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள்.

அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப் படுவார். இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.

விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

திருவருகைக் கால முதல் ஞாயிறு வேகமாக ஒடும் மனிதர்கள் இன்று விவேகமானவர்களா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது. துரித கதியில் இயங்குகின்றவர்கள், உறவுகளை உதறிவிட்டே செல்கின்றனர். நில், கவனி, செல் என்பது சாலை விதி மட்டுமல்ல, வாழ்க்கை பயணத்திற்கும் பொருந்தும்.



 1 SUN: FIRST SUNDAY OF ADVENT

Is 2: 1-5 / Ps 122: 1-2. 3-4. 4-5. 6-7. 8-9/ Rom 13: 11-14/ Mt 24: 37-44

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்! விழித்திடு! தனித்திரு! பசித்திரு!

ஆண்டவருடைய இரண்டாம் வருகையோ மிகவும் அருகில் உள்ளது. விழிப்பாயிரு!

உன்னைக் குறித்தும் உன் சமூகத்தை குறித்தும். உன்னை படைத்து காத்து வரும் உன் கடவுளின் அரும் பெரும் செயல்களை குறித்தும் விழிப்பாய் இருங்கள்!


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 
I எசாயா 2: 1-5

II உரோமையர் 13: 11-14

III மத்தேயு 24: 37-44


ஆண்டவர் வருகின்றார்... அணியமாய் இருங்கள்


நிகழ்வு


முன்பொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவரிடத்தில் விகடகவி ஒருவர் இருந்தார். அந்த விகடகவி அரசருக்கு நெருங்கிய நண்பராக வேறு இருந்தார். இரண்டுபேரும் பலவற்றைக் குறித்துப் பேசி மகிழ்வார்கள், கலந்துரையாடுவார்கள். இப்படியிருக்கையில் ஒருநாள் விகடகவி ஒரு முட்டாள்தனமான ஒரு செய்தியை அரசரிடம் சொன்னார். அதைக் கேட்டு அரசருக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை. இப்படியொரு முட்டாள்தனமான செய்தியை என் வாழ்நாளில் இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டதே இல்லை... உண்மையில் நீர் பெரிய முட்டாள் என்று சொல்லி, அரசர் விகடகவியிடம் ஒரு கோலைக் கொடுத்துவிட்டுச் சொன்னார்: உம்மைவிடப் பெரிய முட்டாளை எப்பொழுது நீர் பார்க்கின்றீரோ, அப்பொழுது அவரிடம் இந்தக் கோலைக் கொடுத்துவிடும். இப்படிச் சொல்லிவிட்டு அரசர் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.


இதற்குப் பின்பு விகடகவி தன்னைவிடப் பெரிய முட்டாளைத் தேடித் பார்க்கத் தொடங்கினார். நாள்கள் மாதங்களாகி, மாதங்கள் ஆண்டுகளானதே ஒழிய, அவரால் தன்னைவிடப் பெரிய முட்டாளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு நடுவில் அரசருக்கு வயதாகிக்கொண்டே போனது. ஒருநாள் அவர் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் விழுந்தார். அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவர் நீண்ட நாள்களுக்கு உயிர்வாழமாட்டார் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் அரசர் அரண்மனையில் இருந்த முக்கியமானவர்களை அழைத்து, அவர்களிடம் இறுதியாக ஒருசில வார்த்தைகளைப் பேச விரும்பினார். இதைத் தொடர்ந்து செய்தி அரண்மனையில் இருந்த முக்கியமானவர்களுக்குச் சொல்லப்பட்டு, அவர்கள் அனைவரும் அரசருக்கு முன்பாக வந்து கூடினார்கள். அவர்களோடு விகடகவியும் அங்கு வந்து நின்றார்.


அப்பொழுது அரசர் அவர்களிடம், அன்பார்ந்தவர்களே! நானொரு நீண்ட பயணம் மேற்கொள்ளப் போகிறேன். இந்தப் பயணத்திற்குப் பின்னால் நான் உங்களைப் பார்ப்பானே என்றுகூட எனக்குத் தெரியாது. அதனால்தான் உங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று உங்களைக் கூப்பிட்டேன் என்றார். இதைக் கேட்டு எல்லாரும் கண்ணீர் வடித்து அழுதார்கள். பின்னர் விகடகவி அரசரிடம், அரசே! உங்களிடம் ஒருசில வாத்தைகள் பேசவேண்டும்... வழக்கமாக நீங்கள் எந்தவொரு நாட்டிற்குப் பயணம் செய்தாலும் உங்களுடைய தூதரை அந்நாட்டு அரசரிடம் அனுப்பி, தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வீர்கள்தானே...! இப்பொழுது நீங்கள் சந்திக்கப்போவதோ அரசருக்கெல்லாம் அரசர்! அவரோடு தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டீர்களா...? அவரைச் சந்திப்பதற்கு நீங்கள் அணியமாகிவிட்டீர்களா...? என்றார். அரசருடைய முகத்தில் பெரிய ஏமாற்றம் தெரிந்தது. உடனே விகடகவி அவரிடம், அரசருக்கெல்லாம் அரசரைச் சந்திக்கப்போகும்போது எந்தவோர் ஏற்பாடும் செய்யாமல் போகும் நீங்கள்தான் மிகப்பெரிய முட்டாள். இதோ இந்தக் கோலைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றார். அரசர் அப்படியே அதிர்ந்து போனார்.


இந்த நிகழ்வில் வருகின்ற, அரசருக்கெல்லாம் அரசரான ஆண்டவரைச் சந்திக்க அணியமில்லாமல் (ஆயத்தமாக இல்லாமல்) இருக்கும் அரசரைப் போன்றுதான் பலரும் ஆண்டவரைச் சந்திப்பதற்கு அணியமில்லாமல் இருக்கின்றார்கள். இந்நிலையில், இன்றைய இறைவார்த்தை ஆண்டவரின் வருகைக்காக அணியமாக இருக்கவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. நாம் எப்படி அணியமாக இருப்பது என்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.


ஆண்டவரை மறந்து, உலக வாழ்க்கையில் மூழ்கிப்போகும் மக்கள்


திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தில், இயேசு மானிடமகனுடைய வருகையின்போது என்னென்ன நடக்கும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். அதற்காக அவர் கையில் எடுக்கும் அடையாளம் அல்லது எடுத்துக்காட்டுதான் நோவா. நோவாவின் காலத்தில் மக்கள் உண்டும் குடித்தும் தீமையில் வீழ்ந்தும் கிடந்தார்கள் (தொநூ 6:5). நோவாவோ வரப்போகின்ற கேட்டினைக் குறித்து மக்களிடம் எடுத்துச் சொன்னார் (2 பேது 2:5). அப்படியிருந்தும் மக்கள் அவருடைய குரலைக் கேளாமல், தீமையில் வீழ்ந்துகிடந்ததால், வெள்ளப்பெருக்கினால் அழிந்துபோனார்கள்.


இன்றைக்கும் கூட பலர் நோவாவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போன்று, "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்" என்று வாழும் காலத்தில் எல்லாவற்றையும் அனுபவித்துவிடவேண்டும் என்ற நோக்கில் மேலுலகு சார்ந்த வாழ்க்கை வாழாமல், மண்ணுலகு சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகையோர் புனித பவுல் சொல்கின்ற, இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்" (கொலோ 3: 2) என்ற சொற்களைத் தங்களுடைய சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்பது நல்லது.


எடுத்துக்கொள்ளப்படுதலும் விட்டுவிடப்படுதலும்


ஆண்டவர் இயேசு மானிடமகனுடைய வருகையின்போது என்ன நடக்கும் என்பதை விளக்கப் பயன்படுத்தும் இரண்டாவது அடையாளம்தான் "எடுத்துக்கொள்ளப்படுதலும்... விட்டுவிடப்படுதலும்" ஆகும். இதனை நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்றால், கடவுளுக்கு ஏற்புடையவராய் வாழ்ந்து வந்த நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பேழைக்குள் சென்றதால் அல்லது எடுத்துக்கொள்ளப்பட்டதால், அழிவிலிருந்து காக்கப்பட்டார்கள். அதைப்போன்று யாரெல்லாம் கடவுளுக்கு ஏற்புடையவற்றை நாடி, அவர் வழியில் நடக்கின்றார்களோ அவர்களெல்லாம் அழிவிலிருந்து காக்கப்படுவார்கள் அல்லது எடுத்துக்கொள்ளப்படுவார்கள்(மத் 24: 31).


அதே நேரத்தில் நோவாவின் காலத்தில் வாழ்ந்து வந்த மக்களைப் போன்று யாரெல்லாம் சிற்றின்ப நாட்டங்களிலும் தீமையிலும் வீழ்ந்து, தங்களுடைய வாழ்வைத் தொலைத்துக்கொள்கின்றார்களோ அவர்கள் அந்த மக்களைப் போன்று அழிவிற்கும் தண்டனைத் தீர்ப்புக்கும் உள்ளாவர்கள் (மத் 24:2; 2 பேது 3:10) என்பது உறுதி. நாம் எடுத்துக்கொள்ளப்படப் போகின்றோமா? அல்லது விட்டுவிடப்போகிறோமா?. நாம் அழிவிலிருந்தும் ஆபத்திலிருந்தும் காப்பாற்றப்படுவதற்கு அல்லது எடுத்துக்கொள்ளப்படுவதற்கு என்ன செய்யலாம் என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.


அணியமாய் இருப்போம்


இயேசு கிறிஸ்து, மானிட மகனுடைய வருகையைக் குறித்துப் பேசுகின்றபோது பயன்படுத்துகின்ற மூன்றாவது எடுத்துக்காட்டு, வீட்டு உரிமையாளரும் திருடனும் ஆகும். திருடன் எப்பொழுது வருவான் என்று யாருக்கும் தெரியாது. அதனால் திருடனிடமிருந்து தன்னுடைய உடைமைகளைப் பாதுகாக்க நினைக்கும் வீட்டு உரிமையாளர் எப்பொழுதும் அணியமாக (ஆயத்தமாக) இருக்கவேண்டும். அதுபோன்றுதான் மானிடமகன் எப்பொழுது வருவார் என்று தந்தை ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது (மத் 24: 36). அப்படியானால், எவர் ஒருவர் எல்லாச் சூழ்நிலையிலும் கடவுளுக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவராகின்றாரோ (கொலோ 1:10) அவரே கடவுடமிருந்து ஆசியையும் மேலே "எடுத்துக்கொள்ளப்பட்டு" விண்ணகத்தில் நிலையான இன்பத்தைப் பெறுவார். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.



நாம் எப்பொழுதும் அணியமாய் இருந்து, ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து, அவருக்கு ஏற்புடையவர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.



சிந்தனை


"ஆண்டவரைத் தேடுங்கள். நீங்கள் வாழ்வடைவீர்கள்" (ஆமோ 5:4) என்பார் ஆமோஸ் இறைவாக்கினர். ஆகையால், நாம் உலக நாட்டங்களில் மூழ்கிப்போய் அழிந்துபோகாமல், ஆண்டவரைத் தேடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 


=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================

புதிய திருவழிபாட்டு ஆண்டைத் தொடங்கவும், பிறக்க இருக்கும் இறை மகனின் வரவை எதிர்நோக்கவும், அதற்கு நம்மை தயார்படுத்தவும் இன்றைய திருவருகைக்கால முதலாம் ஞாயிறு நம்மை அழைக்கின்றது. திருவருகைக் காலத்தில் நாம் வழக்கமாக செய்வது, பீடத்தில் ஏற்றப்படும் நான்கு வண்ண மெழுகுதிரிகள் தான். இந்த முதல் வாரத்தில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி நமக்கு வெளிப்படுத்துவது எதிர்நோக்கு எனும் மாண்பினைத் தான். எதிர்நோக்கு என்பதற்கும் எதிர்பார்ப்பு என்பதற்கும் பெரியதொரு வித்தியாசம் உண்டு. எதிர்பார்ப்பு என்பது நம்பிக்கை அற்ற காத்திருப்பு. எதிர்நோக்கு என்பது உறுதியான நம்பிக்கை கொண்ட காத்திருப்பு. எனவே இறைமகன் இயேசு பிறப்பார் என்பதும் பாவத்தளையிலிருந்து நம்மை மீட்டெடுப்பார் என்ற எதிர்நோக்குடன் காத்திருப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம் என்று அடிமை வாழ்வில் சிக்குண்ட மக்களுக்கு எசாயா வாக்கினர் இறைவாக்கு உரைப்பதை காண்கின்றோம். ஆண்டவரின் ஒளி ஏற்றப்படும்போது அடிமை என்னும் இருள் அகற்றப்படுகின்றது. நாமும் ஆண்டவரின் ஒளியை நமக்குள் ஏற்றி, நாம் அடிமைப்பட்டுள்ள செயல்களில் இருந்து விடுபட்டு இறை ஒளியில் நடப்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், "ஆண்டவரின் வருகைக்காக உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள், விழிப்பாயிருங்கள்" என்கிறார் இயேசு கிறிஸ்து.

இலக்கினை உன் கண்முன் நிறுத்து
அதை அடைய நேரிய வழியில்
உன் கால்களை செலுத்து.
மனிதனுக்குரிய மாண்பை செலுத்து
மனங்குளிர நல் அன்பைக் கொடுத்து.

இவையே இறைவன் நம்மிடம் எதிர்நோக்குபவை. இவை நம்முள் இருந்தால் அழிக்கப்பட்ட மக்களிடையே இறைவனால் காப்பாற்றப்பட்ட நோவா போல நாமும் அக்கிரமமான உலகத்தில் அமைதியுடன் மீட்கப்படுவோம் என்ற எதிர் நோக்குடன் இப்பலியில் பங்கேற்போம்.



=================================================================================
இறைமக்களின் மன்றாட்டுகள்
=================================================================================

1. ஆண்டவரின் ஒளியில் நடக்க அழைப்பவரே இறைவா!
எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, திருஅவை பணியாளர்கள் இறை ஒளியில் நடக்கவும், மக்களை இறையாட்சிப் பாதையில் நடத்திச் செல்லவும், பாவ இருளை மனதில் அகற்றி, ஆண்டவரின் ஒளியில் நடைபோடவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. ஆயத்தமாய் இருங்கள் என்றவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், பணிபுரியும் அரசு அதிகாரிகள், தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு மக்களுக்கு சேவை செய்யவே என்பதை மனதில் கொண்டு, நாடும் மக்களும் வளர்ச்சி அடைய தேவையான திட்டங்களை செயல்படுத்தவும், மக்களை பிரித்தாளும் போக்கினை விட்டொழித்து நலம் தரும் ஆட்சி செய்ய நல்லறிவு தரவேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. எதிர்நோக்கோடு வாழ கற்று தருபவரே எம் இறைவா!
எம் நாட்டில், எம் பகுதியில் தனிமை, நோய், வன்முறை போன்ற காரணங்களால் வாழ்வில் நம்பிக்கை இழந்து வாடும் சகோதர சகோதரிகள் உம் மீது நம்பிக்கையில் உறுதிப்படவு, பசியற்ற கல்வி பெற்ற உலகை எம் எதிர்நோக்காக கொண்டு, ஒருவர் மற்றவருக்கு உதவும் மனப்பான்மை தரவேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. இயற்கையை நேசிக்கச் செய்பவரே எம் இறைவா!
நீர் தந்தமைக்காக மழைக்காக நன்றி. எம் பகுதியில் வேளாண்மை சிறப்படையவும், நீர்நிலைகள் மாசடையாமல் காக்கப்படவும், மக்கள் விழிப்புணர்வுடன் நீரை பயன்படுத்தவும், விளைச்சலுக்கு ஏற்ற காலச் சூழ்நிலையை தந்து ஆசீர்வதிக்கவும், குடும்ப அமைதி, சந்தோஷம் பெருகவும், கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உமது அருளால் பெற்று மகிழவும் வரம் அருள வேண்டுமென்று உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.




முன்னுரை

திருவருகைக்காலத்தின் முதலாம் ஞாயிறு.

கத்தோலிக்கர்களுக்கு இது புத்தாண்டு தொடக்க நாள். புதிய வழிபாட்டு ஆண்டுக் காலத்தின் முதலாம் நாள்.

அனைவருக்கும் அன்பார்ந்த வாழ்த்து சொல்லி வரவேற்கின்றோம். இந்த நாளும், வரும் ஆண்டும் உங்கள் ஆன்ம வாழ்வுக்கு நலம் சேர்க்கும் நல்லாண்டாக அமைய வாழ்த்துகின்றோம்.

விழிப்பாய் இருக்க, ஆயத்தமாய் இருக்க விடுக்கப்படும் காலம் இது. ஆண்டவரின் இரண்டாம் வருகை உண்டு என்று நம்பும் நாம், அக்காலத்தை எதிர்நோக்கி விழிப்பாய் இருப்பது அவசியமானது.

விழிப்பாய் இருக்கும் நாம், பகலிலே நடப்பது போல நடந்து கொள்ள வேண்டும். இருளின் ஆட்சிக்குரிய செயல்களை களைந்து, ஓளியின் மக்களுக்குரிய செயல்களை செய்து வரவேண்டும். இதுவே சாட்சியமான வாழ்வாகும்.

இத்தகைய உணர்வுகளுடன் பயணிக்க வரம் கேட்டு பலியிலே பங்கேற்போம். பயன்பெறுவோம்.



மன்றாட்டு

திருத்தந்தையையும், உடன் பணியாற்றுகின்ற அனைவரையும் ஆசீர்வதித்தருளும். ஆவியின் அருளால் மக்களின் நலன் கருதியெடுக்கும் முன்முயற்சிகளில் நிறைந்த பலன் பெற்றிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

புதியதாக வெளியிடப்பட்டுள்ள "மகிழ்வின் நற்செய்தி" என்ற மடல் விடுக்கும் அழைப்பினையேற்று எழுச்சிமிக்க புதிய இறையாட்சி சமூகம் அமைய அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

புதிய வழிபாட்டு ஆண்டுக்கால நாட்கள் இறையருள் பொழியும் நாட்களாக அமைய முந்தமுந்த உம்மை தேடிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாரும் இயேசுவே வாரும் என்றழைக்கின்ற இக்காலக்கட்டத்தில், ஓளியின் செயல்களின் வழி வாழ்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!