Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     Year C  
                                            * தவக்காலம் 1ம் ஞாயிறு* - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினத்தின் விசுவாச அறிக்கை.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 4-10

மோசே மக்களை நோக்கிக் கூறியது: முதற்பலன் நிறைந்த கூடையை குரு உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார்.
நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால் அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார்.
எகிப்தியர் எங்களை ஒடுக்கினர்; துன்புறுத்தினர்; கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர். அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார். தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டி வந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார்.
எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற் பலனைக் கொண்டுவந்துள்ளேன் என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 91: 1-2. 10-11. 12-13. 14-15 (பல்லவி: 15b) Mp3
=================================================================================
 பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும், ஆண்டவரே.
1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 2 ஆண்டவரை நோக்கி, 'நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். பல்லவி

10 தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. 11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். பல்லவி

12 உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்.

13 சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன் பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். பல்லவி

14 'அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்.

15 அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன். அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்'. பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 கிறிஸ்துவில் விசுவசிக்கிறவனுக்குரிய விசுவாச அறிக்கை.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 8-13

சகோதரர் சகோதரிகளே, மறைநூலில் சொல்லியிருப்பது இதுவே: "வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது." இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும்.
ஏனெனில், 'இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்.
இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், "அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்" என்பது மறைநூல் கூற்று.
இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். "ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்" என்று எழுதியுள்ளது அல்லவா?
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மத் 4: 4b
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

பாலைநிலத்திற்கு இயேசு அழைத்துச் செல்லப்பட்டார்; சோதிக்கப்பட்டார்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-13

அக்காலத்தில் இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றைவிட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன்பின் அவர் பசியுற்றார்.
அப்பொழுது அலகை அவரிடம், "நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்" என்றது.
அதனிடம் இயேசு மறுமொழியாக, " மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை' என மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார்.
பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் அவருக்குக் காட்டி, அவரிடம், "இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்" என்றது.
இயேசு அதனிடம் மறுமொழியாக, " உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக' என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்றார்.
பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, "நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; 'உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்' என்றும் 'உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது" என்றது.
இயேசு அதனிடம் மறுமொழியாக, "உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் என்றும் சொல்லியுள்ளதே" என்றார்.
அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்த பின்பு, ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
(இணைச்சட்டம் 26: 4-10; உரோமையர் 10: 8-13; லூக்கா 4: 1-13)
இயேசுவின் வழியில் சோதனைகளை வெல்வோம்!

நிகழ்வு

புதிதாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த ஓர் உயரதிகாரிக்கு, அரசியலில் பெரும்புள்ளியாக இருந்த ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில், "நீங்கள் மட்டும் பெரியமனது வைத்து இந்த பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால், உங்களுக்குப் பெருந்தொகை சன்மானமாகக் கிடைக்கும்"என்று எழுதப்பட்டிருந்தது. உயரதிகாரி ஒரு கணம் யோசித்தார். தன்னுடைய செயலரைக் கூப்பிட்டு, "இது குறித்து என்ன செய்வது?"என்று கேட்டார். அதற்கு அவருடைய செயலர், "ஒரு சிறு கையெழுத்துதானே ஐயா!... போட்டுவிடுங்கள்... நீங்கள் கையெழுத்து போடுவது யாருக்குத் தெரியப்போகிறது?..."என்றார்.

"யாருக்குத் தெரியப்போகிறது என்று சொல்லாதே... உனக்கும் எனக்கும் மேலே உள்ள ஆண்டவனுக்கும் தெரியும்... அதனால் இந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போடமாட்டேன்"என்று சொல்லி, அதனை அந்தப் பெரும்புள்ளிக்கே திருப்பி அனுப்பிவிட்டார் அந்த உயர் அதிகாரி.

'சிறு தவறுதானே, யாருக்கு என்ன தெரியப்போகிறது' என்று சோதனையில் விழுந்துவிடாமல், அந்த சோதனையை வெற்றிக்கொண்ட உயரதிகாரிபோல், நம்முடைய வாழ்க்கையில் வரும் சோதனைகளில் விழுந்துவிடாமல், வெற்றிகொள்ள வேண்டும் என்று தவக்காலத்தின் முதல் ஞாயிறு நமக்கு அழைப்புத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசு ஏன் சோதிக்கப்படவேண்டும்?

நற்செய்தியில், இயேசு அலகையினால் சோதிக்கப்பட்டதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு இறைமகன், தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆள். அப்படியிருந்தும் அவர் எதற்காக அலகையினால் சோதிக்கப்பட்டார் என்ற கேள்வி எழலாம். இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, நம்மைப் போன்று அவரும் சோதனைக்குத் தப்பவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்காக. இரண்டு, நாம் சோதனையை எதிர்கொள்கின்றபோது, அதிலிருந்து எப்படி வெளிவரவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக (எபி 2: 17,18). இவ்விரு காரணங்களுக்காக அவர் சோதிக்கப்பட்டார். ஆனால், அவர் சோதிக்கப்பட்டாலும் சோதனையை வெற்றிகொண்டார் (மாற் 1: 13). நாம் நமக்கு வருகின்ற சோதனைகளை எப்படி வெற்றிகொள்வது? அதற்கு இயேசு எப்படி நமக்கு முன்மாதிரியாக இருக்கின்றார் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

கொடைகளை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதற்காக வரும் சோதனை

இயேசுவுக்கு வந்த முதல் சோதனை, அவருடைய வல்லமையை அவருடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்தும்படி வந்தது. இயேசு நாற்பது நாட்கள் நோன்பிருந்ததால், பசியுற்றார். இப்படியொரு தருணத்திற்காகக் காத்திருந்த அலகை, அவரை அவருடைய வல்லமையைப் பயன்படுத்தி, கற்களை அப்பமாக்கி உண்ணும்படி சொல்கின்றது. இயேசு அவ்வாறு செய்யாமல், "மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கிறார்" என்ற இறைவார்த்தையை (இச 8:3) எடுத்துச் சொல்லி சோதனையை முறியடிக்கின்றார்.

இயேசு தன்னுடைய பணிவாழ்வில் வந்த எல்லாத் தருணங்களிலும் தனது வல்லமையை தந்தைக் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்பப் பயன்படுத்தினாரே ஒழிய, தன்னுடைய விருப்பத்திற்குப் பயன்படுத்தவில்லை (யோவா 8:29). இன்றைய நற்செய்தியிலும் அவர் அலகையால் சோதிக்கப்பட்டபோது, தன்னுடைய வல்லமைப் பயன்படுத்தி கற்களை அப்பமாக மாற்றி உண்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், இறைவார்த்தை இனிமையானது (திபா 119:103) அதுவே வாழ்வளிக்கும் உணவு என்று அலகையை வெற்றி கொள்கின்றார். நமக்கும் இதுபோன்ற அதாவது பொதுநன்மைக்குக் (1கொரி 12:7) கொடுக்கப்பட்ட கொடைகளை சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கான சோதனைகள் வரலாம். அதனை இயேசுவைப் போன்று இறைவார்த்தையின் துணைகொண்டு வெற்றிகொள்வதே சிறப்பானது.

குறுக்குவழியில் முன்னேறுவதற்கான சோதனை

இயேசுவுக்கு வந்த இரண்டாவது சோதனை, குறுக்கு வழியில் - பாடுகள் இன்றி - மாட்சி அடைவதற்கான சோதனையாக இருந்தது. அலகை இயேசுவிடம், "நீர் என்னை வணங்கினால் உலக அரசுகள் அனைத்தும் உம்முடையதாகும்" என்கின்றது. உலக அரசுகள் அனைத்தையும் பெற சாத்தானை வணங்கினால் போதும் என்பது குறுக்கு வழி, இயேசு அலகை சொன்னதைக் கேட்டு, குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காமல் பாடுகள் நிறைந்த வழியைத் தேர்ந்து சோதனையை முறியடிக்கின்றார் (யோவா 12: 23-33)

இங்கு ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். தந்தைக் கடவுள் அவருடைய அன்பு மகனாகிய இயேசுவுக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்திருந்தார் (திபா 2: 7-8). ஆனால், அந்த அதிகாரத்தை, இயேசு தன்னுடைய பாடுகளின் வழியாக அடையவேண்டும் என்பது இறைத்திருவுளம். இது ஒன்றும் தெரியாத (!) அலகை இயேசுவிடம் குறுக்கு வழியை முன்மொழிகின்றது. இயேசுவோ, "உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்குப் பணிந்து நட"என்ற இறைவர்த்தையைச் சொல்லி, அலகையின் சோதனையை முறியடிக்கின்றார். நம்முடைய வாழ்விலும் குறுக்கு வழியில் முன்னேறுவதற்கான சோதனைகள் வரலாம். அவற்றையெல்லாம் இயேசுவைப் போன்று முறியடித்து, வெற்றிகொள்வது நல்லது.

விரும்பு வெறுப்புக்கு ஏற்றாற்போல் கடவுளை வளைகின்ற சோதனை

இயேசுவுக்கு வந்த மூன்றாவது சோதனை, தன்னுடைய விருப்பு வெறுப்பிற்கு ஏற்றாற்போல் கடவுளை வளைக்கின்ற சோதனையாகும். அலகை இயேசுவிடம், "உம் கால் கல்லில் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வர்"என்று சொல்லி எருசலேம் திருக்கோவிலின் உச்சியிலிருந்து குதித்தச் சொல்கிறது. இயேசு இறைவார்த்தையில் இப்படி இருக்கின்றது என்பதாலோ, அலகை சொல்கிறது என்பதலா மேலிருந்து கீழே குதிக்கவில்லை. இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இயேசு தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல் இறைவார்த்தையைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை, மாறாக, "உங்கள் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்"(இச 6:16) என்று சொல்லி அலகையின் சோதனையை முறியடிக்கின்றார்.

இதற்கு முற்றிலும் மாறாக இஸ்ரயேல் மக்கள் மாசாவில் தண்ணீர்வேண்டும் என்று கடவுளைச் சோதித்தார்கள்; அவரைத் தங்களுடைய விருப்பதற்கு இழுத்தார்கள் (விப 17: 1-7). கடவுளுக்குத் தெரியும் தன் மக்களுக்கு எப்போது என்ன கொடுக்கவேண்டும் என்று, அது புரிந்துகொள்ளாமல் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராகவும் மோசேக்கு எதிராகவும் செயல்பட்டது வியப்பாக இருக்கின்றது.

பல நேரங்களில் நாமும்கூட இஸ்ரயேல் மக்களைப் போன்று கடவுளை நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப வளைக்கும் தவறைச் செய்கின்றோம், அதனால் சோதனையில் விழுகின்றோம். நாம் அவர்களைப் போன்று அல்லாமல், இயேசுவைப் போன்று இறைத்திருவுளத்திற்குப் பணிந்து, சோதனையை வெற்றிகொள்வது நல்லது.

சிந்தனை

'நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும்' (யாக் 1:2) என்பார் தூய யாக்கோபு. நம்முடைய வாழ்க்கையில் நாம் சோதிக்கப்படும்போது, சோதனைகளில் விழுந்துவிடாமல், இயேசுவைப் போன்று இறைவார்த்தையின் துணைகொண்டு, இறுதிவரை மனவுறுதியோடு இருந்து வெற்றிகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 
சோதனைகளை இறைவனின் துணையால் வெல்வோம்

சீனாவில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஜென் துறவி ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து, மெய்ஞானத்தை அடைய முயற்சி செய்துகொண்டிருந்தார்.

அந்த ஜென் துறவியிடத்தில் ஒரு வயதான பெண்மணி வேலைபார்த்து வந்தார். துறவிக்கு பணிவிடை செய்வதும், அவர் இருந்த இடத்தை தூய்மையாக வைத்திருப்பதுமே அந்தப் பெண்மணியின் வேலையாக இருந்தது. ஒருநாள் அந்த வயதான பெண்மணிக்கு 'துறவி உண்மையிலே தவம் புரிகிறாரா?' என்று சோதித்துப் பார்க்க விரும்பினார். அதனால் ஓர் இளம்பெண்ணை அழைத்து, துறவியை அவளுடைய மாயவலையில் வீழ்த்தும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி அந்த இளம்பெண்ணும் ஓர் இரவில் துறவி இருந்த இடத்திற்குச் சென்று, தன் இனிய குரலால் அவரை அழைத்தாள். இதனை சற்றும் எதிர்பாராத துறவி, கடும் சினம்கொண்டு மூலையில் கிடந்த தடியால் அந்த இளம்பெண்ணை விரட்டி, விரட்டி அடித்தார். இதனால் அவள் அலறியடித்துக்கொண்டு ஓடினாள்.

எல்லாவற்றையும் ஜன்னல் ஓரமாக இருந்து பார்த்துக்கொண்டிருந்த வயதான பெண்மணி, துறவி உண்மையிலே கடுந்தவம் புரிகிறார்; அவரை எப்படிப்பட்ட சோதனையும் வீழ்த்திவிட முடியாது என்பதை உணர்ந்துகொண்டு, அவருக்கு இன்னும் சிறப்பாக பணிவிடை புரிந்துவந்தார்.

மன உறுதியுடன் இருந்தால் நமக்கு வரும் எப்படிப்பட்ட சோதனையையும் வெற்றிகொள்ளலாம் என்பதை மேலே சொல்லப்பட்ட கதையானது நமக்கு எடுத்துரைக்கிறது. அருளின் காலமான தவக்காலத்தை நாம் தொடங்கி இருக்கிறோம். இக்காலத்தில் நாம் இறைவனோடு நெருங்கிய உறவில் வளரவேண்டும் என்றும், நம் அயலாரோடு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று திருச்சபை நம்மை அழைக்கிறது. அதற்கு ஏற்றதுபோல இன்றைய நாளின் வாசகங்கள் "இறைவனின் துணையால் சோதனைகளை வெல்வோம்" என்றதொரு சிந்தனையை நமக்கு வழங்குகின்றன.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பாலைவனத்தில் சாத்தானால் மூன்றுமுறை சோதிக்கப்படுகிறார். ஆனால் அவரோ இறைவார்த்தையின் துணைகொண்டு சாத்தானை விரட்டி அடிக்கின்றார்.

இங்கே நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய காரியம் 'சாத்தானே வேதம் ஓதும்' என்ற சொல்லிற்கிணங்க இறைமகனாகிய இயேசுவை சோதனையின் வழியாக வெல்வதற்கு சாத்தானே இறைவார்த்தையை மேற்கோள்காட்டுகிறது. ஆனால் இயேசுவோ சாத்தானின் வார்த்தைகளைக் கேட்டு மயங்கிவிடாமல் இறைவார்த்தையின் துணைகொண்டு, அதாவது "மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை, மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கிறார்"(இச 8:3); உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணிசெய்வாயாக" (விப 23:25); உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்"(இச 6:16) என்ற இறைவார்தைகளைச் சொல்லி சாத்தானை விரட்டுகிறார்.

ஆக, இயேசு தனக்கு வந்த சோதனைகளை எல்லாம் இறைவார்த்தையின் துணைகொண்டு வெற்றிகொண்டதுபோல நாமும் நமக்கு வரும் சோதனைகளை இறைவனின் துணையால் வெற்றிகொள்ளலாம் என்பதே இயேசு நமக்குக் கற்பிக்கும் பாடமாக இருக்கிறது.
இன்றைய முதல்வாசகத்தில் மோசே இஸ்ரயேல் மக்களைப் பார்த்து அறிவுரையாகக் கூறுவார், "நிரந்தரக் குடியற்ற அரேமியரான நீங்கள் எகிப்தில் குடியேறியபோது மன்னனால் அடிமை வேலைக்கு உட்படுத்தப்பட்டீர்கள்; கொடுமைப்படுத்தப்பட்டீர்கள். அப்போது நீங்கள் கடவுளை நோக்கி மன்றாடியபோது, அவர் உங்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்து, பாலும் தேனும் பொழியக்கூடிய கானான் தேசத்திற்கு அழைத்துச் சென்றார். ஆகவே இவ்வளவு அற்புதங்களையும், அதிசயங்களையும் உனக்குச் செய்த உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கித் தொழுவாய்"என்கிறார். (இச 26: 4-10).

இங்கே இஸ்ரயேல் மக்கள் கடவுளை நோக்கி மன்றாடியபோது, அபயக்குரல் எழுப்பியபோது கடவுள் அவர்களுடைய குரலுக்கு செவிசாய்த்தார் என்று படிக்கின்றோம். ஆம், துன்பவேளையில் இறைவனை நோக்கி நாம் மன்றாடும்போது இறைவன் நமக்கு அருள்பாலிப்பார் என்பது எவ்வளவு ஆழமான உண்மை.

உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில்கூட பவுலடியார் அதே கருத்தை வலியுறுத்திக் கூறுவார். "அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார்; ஆண்டவர் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்"என்கிறார். எனவே நாம் துன்பவேளையில்; சோதனை வேளையில் இறைவனை நோக்கி மன்றாடுவோம். இறைவன் அளிக்கும் அருளையும், பாதுகாப்பையும் பெற்று மகிழ்வோம்.

ஒரு கிராமத்து மக்கள், தங்களுடைய ஊருக்குப் பக்கத்தில் இருந்த சதுப்புநிலக் காடுகளில் இருந்த ராட்சத கழுகுகளால் பெரும் அவஸ்தைக்கு உள்ளானார்கள். ராட்சதப் பறவைகள் ஊருக்குள் புகுந்து, அங்கே இருந்த குழந்தைகளைத் தூக்கிக்கொண்டுபோய் கொன்றுதின்றன. மக்கள் எவ்வளோ முயற்சி செய்தும் அவர்களால் அந்த ராட்சத கழுகுகளை விரட்டியடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஒவ்வொருநாளும் பயத்திலே வாழ்ந்துவந்தார்கள்.

இந்த நேரத்தில் அவ்வூருக்கு தேவதூதன்போல் ஓர் இளைஞன் வெள்ளைக் குதிரையிலே வந்தான். அவன் மக்களின் பிரச்சனைக் கேட்டுவிட்டு, 'நான் உங்களுக்கு உதவி புரிகிறேன்' என்றுசொல்லி களத்தில் இறங்கினான். ராட்சதக் கழுகுகள் ஊருக்குள் வரும்போது மறைந்திருந்து, தான் வைத்திருந்த அம்புகளால் அதனை விரட்டியடிக்கப் பார்த்தான். ஆனால் அந்தப் பறவைகளோ அம்பைவிட வேகமாகப் பறந்து தப்பிச்சென்றன. இதனால் அவன் பெரிதும் குழப்பமுற்று ஊரின் மையத்திலிருந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்து இறைவனிடம் ஜெபித்தான்.
ஒருசில மணிநேரங்கள் இறைவனிடம் ஜெபித்துவிட்டு, புத்துணர்வு பெற்றவனாய் மக்களை எல்லாம் ஒன்றாக அழைத்தான். அவர்கள் அனைவரும் ஆலமரத்திற்குக் கீழேவந்து ஒன்று கூடினர். அப்போது அவன், "இப்போது நாம் அனைவரும் சேர்ந்து இறைவனின் பெயரை சத்தமாக உச்சரித்துக் கொண்டே, நம்மிடம் இருக்கும் ஜால்ராக்கள், முரசுகள் அத்தனையையும் வைத்துக்கொண்டு சத்தம் எழுப்பப் போகிறோம். இந்த சத்தத்தைக் கேட்டு, ராட்சதப் பறவைகள் அலறியடித்துக் கொண்டு ஓடும்"என்று தான் வைத்திருந்த திட்டத்தை மக்களிடம் சொல்ல, எல்லாரும் அதற்கு சரி என்று சொல்லி, இறைவனின் திருப்பெயரைச் சொல்லிக்கொண்டே முரசுகொட்ட ஆரம்பித்தனர்.
மக்களின் சத்தமும், முரசுச் சத்தமும் விண்ணை முட்டியது. இதுவரைக்கும் இப்படிப்பட்ட சத்தத்தைக் கேட்டு பழக்கப்படாத ராட்சதக் கழுகுகள் அலறியடித்துக்கொண்டு பறந்தன. அதன்பிறகு அந்த ராட்சதப் பறவைகள் ஊர்பக்கமே வரவில்லை. ஊர் மக்களெல்லாம் தங்கள் ஊருக்கு தேவதூதன் போன்று வந்த அந்த இளைஞனைப் புகழ்ந்துபாடினர். ஆனால் அந்த இளைஞனோ, "இது என்னால் நிறைவேறிய காரியமல்ல, இறைவனால் நிறைவேறிய காரியம். ஆதலால் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்"என்று சொல்லிவிட்டு அந்த ஊர் மக்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.

இறைவனின் திருப்பெயரை கூவி அழைக்கும்போது நாம் எப்படிப்பட்ட துன்பம்/ சோதனையிலிருந்து விடுதலை பெறலாம் என்பதை இந்த கதையானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

ஆகவே இன்றைய வாசகங்கள் கூறுவதுபோல "அவரை (இறைவனை) நோக்கி மன்றாடுவோம். எல்லா ஆபத்திலிருந்து விடுதலை பெறுவோம்.

சோதனைகளை எப்படி வெற்றிகொள்வது என்பது பற்றி சிந்தித்துப் பார்க்கும் இவ்வேளையில் சோதனைகள் கடவுளால் அனுப்பப் படுவதில்லை, மாறாக நமக்கு நாமே வருவித்துக்கொண்டது என்பதை நாம் புரித்துகொள்ளவேண்டும். பல நேரங்களில் "இறைவா என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?" என்று கடவுளைப் பார்த்து முறையிடுகிறோம். இது தவறான ஒரு கருத்து.
தூய பவுல் கொருந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுவார், "உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்: சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்: அதிலிருந்து விடுபட வழி செய்வார்" என்பார். (1கொரிந்தியர் 10:13). எனவே இறைவன் நமக்கு சோதனையிலிருந்து விடுபட ஆறுதலை, வல்லமையைத் தருவாரே ஒழியே, அவர் ஒருபோதும் நம்மைச் சோதிக்க மாட்டார். என்ற உண்மையை உணர்ந்து வாழுவோம்..

அமெரிக்க விம்பிள்டன் போட்டிகளில் பல சாதனைகளை நிகழ்த்தி, தன்னிகரற்ற வீரராக விளங்கியவர் ஆர்தர் அஷே (Arthar Ashe). ஒருமுறை அவருக்கு நடந்த சிகிச்சையின்போது தவறுதலாக எயிட்ஸ் நோய் தாக்கப்பட்ட ஒருவரின் இரத்தம் செலுத்தப்பட்டதால், மரணத்தின் விளிம்பிற்கே சென்று விட்டார்.

அப்போது அவரைப் பார்க்க வந்த அவருடைய தீவிர ரசிகர் ஒருவர், "கடவுள் ஏன் உங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு நோயைத் தந்தார்? ஏன் உங்களை இப்படியெல்லாம் சோதிக்கிறார்?"என்று கேட்டார்/ அதற்கு அவர், "நான் எத்தனையோ முறை விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறேன். அப்போது எல்லாம் நான் கடவுளைப் பார்த்து, கடவுளே எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சாம்பியன் பட்டங்களைத் தருகிறாய் என்று கேட்கவில்லை. அப்படியிருக்கும்போது நோய்வாய்ப்பட்டு கிடக்கும் இந்த நேரத்தில் கடவுளிடம் 'கடவுளே எனக்கு ஏன் இந்த கொடிய நோயைத் தந்தாய் என்று கேட்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது" என்று சொன்னதும் அவருடைய ரசிகர் அமைதியானார்.
ஆம், கடவுள் நமக்கு நல்லது செய்யும்போது நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவதில்லை. அப்படி இருக்கும்போது சோதனை நேரத்தில் கடவுளிடம் 'கடவுளே என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறாய்' என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்.

ஆகவே சோதனை நேரத்தில் கடவுளை பழித்துப் பேசாமல், ஆண்டவர் இயேசுவைப் போன்று இறைவனின் துணையால் சோதனையை வெற்றிகொள்வோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Palayamkottai, Fr. Maria Antonyraj.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
நம்பிக்கை(யால்) அறிக்கை


இணைச் சட்டம் 26:4-10
உரோமையர் 10:8-13
லூக்கா 4:1-13

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோனில் புதிய செயலி (ஆப்) ஒன்றை நிறுவும்போது, கூகுள் ப்ளேஸ்டோர் அல்லது ஐடியுன்ஸ் ஸ்டோர் நமக்கு ஒரு ஃபார்மைத் தந்து, 'ஏற்றுக்கொள்கிறேன்' அல்லது 'நிராகரிக்கிறேன்' என்ற தெரிவுகளை முன்வைக்கிறது. 'ஏற்றுக்கொள்கிறேன்' என்று டச் செய்தவுடன் செயலி நம் ஃபோனுக்குள் வருகிறது. புதிய மின்னஞ்சல் முகவரி, புதிய டுவிட்டர் அல்லது வாட்ஸ்ஆப் அல்லது ஃபேஸ்புக் கணக்குகளைத் தொடங்கும்போதும் நாம் இத்தகைய ஃபார்ம்களை வாசிக்காமல் 'ஏற்றுக்கொள்கிறோம்.' எல்லாம் ஒன்றும் நடக்காது என்ற நம்பிக்கையால்தான். இல்லையா? வங்கியில் நாம் இடும் கையெழுத்து, புதிய கணக்கு அல்லது புதிய வைப்பு நிதி, அல்லது வரி விலக்கு படிவங்களில் நாம் இடும் கையெழுத்துக்கள் அனைத்தும் நம்பிக்கையால்தான்!

திருமணத்தில் கணவனும், மனைவியும், 'இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாயிருந்து' என்று சொல்லும் வாக்குறுதியும், அருள்பணி நிலை ஏற்கும் இனியவர், 'இதோ! வருகிறேன்!' என்று சொல்லும் முன்வருதலும், 'இறைவனின் துணையால் விரும்புகிறேன்' என்று சொல்வதும், 'வாக்களிக்கிறேன்' என்று வாக்குறுதி கூறுவதும் நம்பிக்கையால்தான்.

ஆக, நம் அன்றாட வாழ்வில் சாதாரண செயலியை பதிவிறக்கம் செய்வதிலிருந்து, வாழ்க்கைத் தெரிவுகள் வரை நிறைய நிலைகளில் நாம் 'ஆம்' என்று அறிக்கை செய்கின்றோம். இந்த ஆம் என்ற வார்த்தையின் பின்னால் இருப்பது 'நம்பிக்கை.' என்ற அந்த ஒற்றைச் சொல். மேலும், இவ்வாக்குறுதிகள் பெரும்பானவற்றை நாம் கடைப்பிடிக்கவும் செய்கிறோம். நாம் 'ஆம். ஏற்றுக்கொள்கிறேன்' என்று அறிக்கையிடும்போது, அந்த அறிக்கை நமக்கு சில உரிமைகளைப் பெற்றுத்தருகிறது. செயலியைப் பயன்படுத்தி எல்லாரோடும் உரையாடுவதே அவ்வுரிமை. அதே போல, திருமணத்திலும், துறவறத்திலும் உரிமைகள் உண்டு. உரிமைகளோடு சேர்ந்து கடமைகள் இருந்தாலும், உரிமைகள் இவ்வறிக்கை வழியாக நமக்குக் கொடையாகக் கிடைக்கின்றன.

ஆக, மனிதர்கள்மேல் நாம் நம்பிக்கை கொண்டு செய்யும் அறிக்கைகளே நமக்கு இவ்வளவு உரிமைகளைப் பெற்றுத்தருகிறது என்றால், கடவுள்மேல் நாம் நம்பிக்கை கொண்டு செய்யும் அறிக்கைகள் நமக்கு இன்னும் உரிமைகளைப் பெற்றுத்தரும் என்ற செய்தியைத் தருகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. நம்பிக்கையால் நாம் அறிக்கையிடும்போது நம் நம்பிக்கை தொடர் வலுப்பெறுகிறது.

இன்றைய முதல் வாசகம் (காண். இச 26:4-10), இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற வாரங்களின் திருவிழா அல்லது முதற்கனிகள் திருவிழாவின் பின்புலத்தில் அமைந்திருக்கிறது. இந்த நாளில்தான் இஸ்ரயேல் மக்கள், கடவுள் தங்களுக்குக் கொடையாக வழங்கிய நிலத்திற்காகவும், அவரின் சட்டத்திற்காகவும், சீனாய் மலையில் அவர் தங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்காகவும் நன்றிகூறுகின்றனர். தன் நிலத்தின் பலன்களையும் கனிகளையும் ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு வருகின்ற இனியவர் ஆலயத்தின் முகப்பில் அவற்றை வைக்க வேண்டும். ஆலயத்தில் இருக்கும் குரு அக்கூடையை எடுத்துக்கொண்டு போய் பீடத்தின்முன் வைப்பார். அந்த நேரத்தில், இந்த இனியவர் பின்வரும் நம்பிக்கை அறிக்கையைச் செய்ய வேண்டும்: 'நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு ... இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன்.' கடவுள் இஸ்ரயேல் மக்களை ஒரு இனமாக, நாடாக உருவாக்கிய மூன்று நிகழ்வுகள் இந்த அறிக்கையில் அடிக்கோடிடப்படுகின்றன: ஒன்று, 'நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை' அல்லது 'நாடோடியான தந்தை' - இது ஆபிரகாமையும் மற்ற குலமுதல்வர்களையும் குறிக்கிறது. இவர்கள் நாடோடிகளாக இருந்தனர். இவர்களைக் கடவுள் தெரிந்துகொள்கிறார். இரண்டு, விடுதலைப் பயணம். எகிப்தில் பாரவோனுக்கு அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை மோசேயின் தலைமையில் விடுவிக்கும் கடவுள், பல அருஞ்செயல்களை நிகழ்த்தி, தம் வலிய புயத்தால் அவர்களை வழிநடத்துகின்றார். மூன்று, பாலும் தேனும் பொழியும் நாடு. இஸ்ரயேல் மக்களின் மூதாதையருக்கு நிலத்தை வாக்களித்த கடவுள், பாலும் தேனும் பொழியும் நாட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கே அவர்களைக் குடியேற்றுகின்றார்.

ஆக, முதற்கனிகளை ஆண்டவராகிய கடவுளுக்கு அர்ப்பணிக்கு அவரின் இல்லம் வரும் இனியவர் இந்த நம்பிக்கை அறிக்கை சொல்லும்போது, அல்லது கடவுள்மேல் கொண்ட நம்பிக்கையால் அறிக்கையிடும்போது, தன் இருப்பும், தன் இயக்கமும் கடவுளின் கொடை அல்லது கடவுள்தந்த உரிமை என்பதை அறிக்கையிடுகிறார். ஆக, சாதாரண நாடோடி இனத்தை ஒரு இனமாக, நாடாகக் கட்டி எழுப்பியது ஆண்டவரின் அருளே. அவரின் அருளே இவர்களைத் தெரிவு செய்து, விடுதலை செய்து, நாட்டில் குடியமர்த்தியது. எனவே, முதற்கனிகளை ஆண்டவருக்குப் படைக்க வந்த இஸ்ரயேல் மக்கள் கடவுள் தந்த உரிமைகளை நினைவுகூர்ந்து இவ்வறிக்கை செய்தனர்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். உரோ 10:8-13), 'மீட்பு எல்லாருக்கும் உரியது' என்று பவுல் இறையியலாக்கம் செய்யும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் எப்படி மீட்பு பெறுகிறார்? என்ற கேள்விக்கு பவுல் இரண்டு வழிகளைச் சொல்கின்றார். ஒன்று, 'இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிடுதல். இரண்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நம்புதல். இங்கே, வாயார அறிக்கையிடுதலும், உள்ளார நம்புவதலும் இணைந்தே செல்கின்றன.

முதலில், 'இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிடுதல். இதைப் பவுலின் சமகாலத்துச் சூழலில் புரிந்துகொள்ள வேண்டும். இயேசுவின் சமகாலத்தவரைப் பொறுத்தமட்டில், குறிப்பாக அவரை எதிர்த்தவர்களைப் பொறுத்தமட்டில், அவர் ஒரு தோல்வி, அவர் ஒரு குற்றவாளி, உரோமையர்களால் சிலுவையில் அறையப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட ஒரு குற்றவாளி. இந்தப் பின்புலத்தில், 'இயேசுவே ஆண்டவர்' என பொதுவான இடத்தில் அறிக்கையிடுவது நம்பிக்கையாளருக்கு அவ்வளவு எளிய காரியம் அல்ல. ஏனெனில், 'குற்றவாளி' எனக் கருதப்படும் ஒருவரை, 'ஆண்டவர்' (அதாவது, 'கடவுள்') என எப்படி அறிக்கையிட முடியும்? யூதர்கள் தங்களுக்கு யாவே தவிர வேறு ஆண்டவர் இல்லை என நம்பினர். ஆக, அவர்கள் இந்த அறிக்கையை எதிர்ப்பார்கள். புறவினத்தார்கள் - குறிப்பாக, உரோமையர்கள் - தங்களுக்கு சீசரே ஆண்டவர் என நம்பினர். அவர்களும் இந்த அறிக்கையை எதிர்ப்பார்கள். இவ்வாறாக, அறிக்கையிடும் நம்பிக்கையாளர் அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேரிடும். இந்த அறிக்கைக்காக அவர் தண்டிக்கவும் கொலைசெய்யவும் படலாம். துணிச்சல் கொண்டிருக்கும் ஒருவரே இவ்வறிக்கை செய்ய முடியும். இரண்டாவதாக, இறந்த இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என மனதார நம்புதல். மனது என்பது மூளை செயலாற்றும் இடம் என்றும், மனிதர்கள் முடிவுகளையும், தெரிவுகளையும் எடுக்கும் இடம் என்று கருதப்பட்டது. ஆக, ஒருவர் தன் முழு அறிவாற்றலோடு இயேசுவின் உயிர்ப்பை நம்ப வேண்டும். மேலும், அவரின் இத்தெரிவு அவரின் வாழ்க்கையின் போக்கையும் மாற்ற வேண்டும்.

இவ்வாறாக, இயேசுவை நம்பி, அந்த நம்பிக்கையால் அறிக்கையிடும்போது, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப தன் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ளும்போது, மீட்பு என்னும் உரிமையைப் பெற்றுக்கொள்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 4:1-13), இயேசுவின் சோதனைகளை லூக்கா பதிவின்படி வாசிக்கின்றோம். யோர்தானில் திருமுழுக்கு பெற்று தூய ஆவியால் நிரப்பப் பெற்ற இயேசு, அதே தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இயேசுவின் பணிவாழ்வுத் தொடக்கத்திற்கு முன் இந்த இரண்டு முக்கியான நிகழ்வுகள் அவரின் வாழ்வில் நடக்கின்றன: ஒன்று, அவரின் திருமுழுக்கு. இரண்டு, அவரின் பாலைவனச் சோதனைகள். திருமுழுக்கு நிகழ்வில், வானத்திலிருந்து (கடவுளின்) குரல், 'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' (காண். லூக் 3:22) என்று ஒலிக்கிறது. இவ்வாறாக, தான் யார் என்பதையும், தன்னுடன் கடவுள் என்னும் தன் தந்தை இருக்கிறார் என்பதையும் இயேசு இந்த நிகழ்வில் அனுபவிக்கிறார். இந்த அனுபவத்தை அவர் நம்பிக்கை அறிக்கை செய்ய வேண்டும். அல்லது தன் தந்தையாகிய கடவுள்மேல் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் ஒரு அறிக்கை செய்ய வேண்டும்.

இயேசுவின் நம்பிக்கை அறிக்கையைத்தான் நாம் அவரின் பாலைவனச் சோதனைகள் நிகழ்வில் வாசிக்கிறோம். கடவுளின் திட்டங்களையும் நோக்கங்களையும் சீர்குலைக்க நினைக்கும் அலகை மூன்று நிலைகளில் இயேசுவைச் சோதிக்கிறது. கடவுளின் பணிகளை இயேசுவைச் செய்யவிடாமல் தடுக்கும் அலகையின் முயற்சியே இது.

முதலில், அலகை, 'கல் அப்பமாகும்படி கட்டளையிடும்' என்று இயேசுவுக்குச் சவால்விடுகிறது. ஒருவேளை இயேசு கல்லை அப்பமாக்கியிருந்தால், தன் பசியைத் தீர்த்துக்கொள்ள, அல்லது தன்னலத்திற்காக கடவுளின் வல்லசெயலாற்றும் கொடையைப் பயன்படுத்தியதுபோல ஆகிவிடும். 'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல ...' (காண். இச 8:3) என்று மறைநூல் வாக்கைச் சுட்டிக்காட்டி, இயேசு சவாலை மறுக்கிறார். இவ்வாறாக, இயேசு, தன்னுடைய ஆற்றலைக் கடவுளின் திருவுளத்திற்காகவும், கடவுளின் நோக்கங்களுக்காகவுமே பயன்படுத்துவேன் என்று தெளிவாக அறிக்கையிடுகின்றார்.

இரண்டாவது சோதனையில், அலகை, இயேசு தன்னை வணங்கினால் உலகின்மேல் முழு அதிகாரத்தையும் வழங்குவதாகச் சொல்கிறது. இங்கே, இயேசு தன் தலைவர் யார் என்பதைத் தெரிவு செய்ய வேண்டும் - அலகையா? கடவுளா? யாருக்குப் பணிவது? மறைநூலை மறுபடி மேற்கோள் காட்டும் இயேசு - 'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக!' (காண். இச 6:13) - அவரின் தெரிவு கடவுள் மட்டுமே என்று அறிக்கையிடுகின்றார்.

இறுதிச் சோதனை கடவுளின் பெயர் தங்கியிருக்கும் எருசலேம் ஆலயத்தின் உச்சியில் நடைபெறுகிறது. அலகை, இப்போது தானே மறைநூலை மேற்கோள் காட்டி - 'உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு ... அவர்கள் தாங்கிக்கொள்வார்கள்' (காண். திபா 91:11-12) - இயேசு, கடவுள் மேல் உள்ள நம்பிக்கையைச் சோதிக்கும் பொருட்டு, அவரை உச்சியிலிருந்து கீழே குதிக்குமாறு சோதிக்கிறது. மறைநூலில் தான் சொன்ன வார்த்தைக்குக்குக் கடவுள் பிரமாணிக்கமாக இருக்கிறாரா என்று பார்! என்று இயேசுவிடம் சொல்வதாக அமைகிறது இச்சோதனை. இயேசுவின் மனத்தில் சந்தேகத் துளியை விதைக்க நினைக்கிறது அலகை. ஏனெனில், இந்த நம்பிக்கையால்தான் இயேசு தன் வாழ்வின் பணி, பாடுகள், மற்றும் இறப்பை எதிர்கொள்ளவேண்டும். 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' (காண். இச 6:16) என்று சொல்லி, கடவுள்மேல் தான் கொண்டுள்ள நம்பிக்கையில் சந்தேகம் இல்லை என்றும் உறுதிகூறுகிறார் இயேசு.

இம்மூன்று சோதனைகள் வழியாக, இயேசு, கடவுளின் பணியைச் செய்யவிடாமல் தடுக்க முயற்சி செய்தது அலகை. ஆனால், கடவுள் மேல் தான் கொண்டிருக்கிற நம்பிக்கையில், தன் நிலைப்பாட்டை அறிக்கையிடுகிறார் இயேசு. இவற்றின் வழியாக இயேசு தன் நம்பிக்கை, அர்ப்பணம், மற்றும் மனவுறுதியைத் தெளிவுபடுத்துகிறார். இயேசுவின் இந்த நம்பிக்கை அறிக்கை அவரின் பொதுவாழ்வைத் தொடங்க உரிமையளிக்கிறது. இயேசுவும் தன் பணியை உடனே தொடங்குகிறார் (காண். லூக் 4:14-15).

இவ்வாறாக, முதல் வாசகத்தில், இஸ்ரயேலர் இனியவர் ஒருவர், முதற்கனிகள் திருநாளில் கடவுள்மேல் கொண்ட நம்பிக்கையால் தான் பெற்ற கொடைகளுக்காக அவர்மேல் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார். இரண்டாம் வாசகத்தில், ஒருவர் இயேசுவின் மேல் கொண்ட நம்பிக்கையால் செய்யும் அறிக்கை அவருக்குக் கடவுளின் மீட்பைப் பெற்றுத் தருகிறது. நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் தந்தையின்மேல் கொண்டுள்ள நம்பிக்கையால் தன் நிலைப்பாட்டை அறிக்கையிடுகின்றார். ஆக, நம்பிக்கை அறிக்கையும், நம்பிக்கையால் அறிக்கையிடுதலும் இம்மூன்று வாசகங்களிலும் இணைந்தே செல்கின்றன.

நாம் இன்று நம் நம்பிக்கையை அல்லது நம் நம்பிக்கையால் எப்படி அறிக்கையிடுவது?

1. ஒரே மனநிலை - கூடை நிறையும்போதும், வயிறு பசிக்கும்போதும்

இன்றைய இறைவாக்கு வழிபாடு இரண்டு வகை மனநிலைகளைப் பிரதிபலிக்கிறது. நாம் முதல் வாசகத்தில் சந்திக்கும் இஸ்ரயேலர் இனியவர் பெரிய கூடையில் முதற்கனிகள் நிறையக் கடவுளின் முன்னிலையில் நிற்கிறார். நற்செய்தி வாசகத்தில் ஒன்றுமே இல்லாத பாலைநிலை வெறுமையில் பசித்த வயிறாய் இயேசு இருக்கிறார். இந்த இரண்டுபேருமே கடவுளை நம்புகின்றனர். அந்த நம்பிக்கையில் அவரைப் பற்றியும், அவரின் அருஞ்செயல்கள் பற்றியும் அறிக்கையிடுகின்றனர். ஆக, நம் கைகள் நிறைய விளைச்சலும், நிலத்தின் பலனும் இருந்தாலும், நம் மனநிலை ஒன்றாக இருக்க வேண்டும். அந்த மனநிலை நம் நம்பிக்கையால் வடிவம் பெற வேண்டும். நம் கைகள் நிறையப் பலன் இருக்கும்போது கடவுளை நம்புவதும், அவரைப் பற்றி அறிக்கையிடுவதும் எளிது. ஆனால், வயிறு பசித்திருக்கும்போது மிகக் கடினம். ஏனெனில், 'பசி வந்தால் (இறைப்)பற்றும் போய்விடும்!' இதையே கண்ணதாசன், 'கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன். உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா. இதை உணர்ந்துகொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா!' என்கிறார்.

2. ஒரே மனநிலை - ஆலயத்திலும் பாலைவனத்திலும்

முதல் வாசகத்தில் அறிக்கை ஆலயத்திலும், நற்செய்தி வாசகத்தில் அறிக்கை பாலைவனத்திலும் நடக்கிறது. ஆலயத்தில் எல்லாம் இனிமையாக இருக்கும். நம் மனம் ஒருமுகப்படும். அமைதியாக இருக்கும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம் நல்லதே நினைப்பார்கள். எல்லாரும் அருகிருப்பார்கள். ஆனால், பாலைவனம் அப்படியல்ல. அங்கே தனிமை இருக்கும். நம் மனம் அலைபாயும். நம்மைச் சுற்றி அலகை மட்டுமே இருக்கும். நம் வீழ்ச்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார் மிஸ்டர் அலகை. நாம் எந்த இடத்தில் இருந்தாலும் நம்பிக்கை அறிக்கை அவசியம்.

3. ஒரே மனநிலை - நம் வேர்களை நினைக்கும்போதும் நம் கிளையைப் பரப்பும்போதும்

முதல் வாசகத்தில் இஸ்ரயேலர் இனியவர் தன் வேர்களை நினைத்துப் பார்க்கிறார். தன் அப்பா ஒரு நாடோடி என்று சொல்வதன் வழியாக, இருக்க இடமற்ற, உண்ண உணவற்ற, உடுக்க உடையற்ற தன் நொறுங்குநிலையை ஒரே நொடியில் நினைத்துப்பார்க்கிறார். ஆக, இன்று கனிகள் கைகளை நிறைத்தாலும் ஒரு காலத்தில் தான் ஒரு வெறுமையே என்று உணர்கிறார். அதே போல, இயேசுவும் தான் பெற்ற திருமுழுக்கில் தன் வேர்களைப் பதித்து, இறையாட்சி என்ற இலக்கை நோக்கிக் கிளைபரப்புகிறார். இந்த இரண்டு நிலைகளிலும் நம்பிக்கை அறிக்கை நடந்தேறுகிறது.

இறுதியாக, இன்றைய இரண்டாம் வாசகம் சொல்வதுபோல, நாம் அறிக்கையிடும் எல்லா வார்த்தைகளும் - அது கடவுள்முன் என்றாலும், ஒருவர் மற்றவர்முன் என்றாலும், எனக்கு நானே என்றாலும் - செயல்வடிவம் பெற வேண்டும். நிறைவேற வேண்டும். அந்தச் செயலின் ஊற்று நம்பிக்கை. நம்பிக்கையே செயலாகும்போது, நம்பிக்கை என்ற சொல்லின் பொருள் புரியும். ஏனெனில், 'செயல்' என்பதே 'சொல்.

(Rev. Father: Yesu Karunanidhi)
(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)


=================================================================================
திருப்பலி முன்னுரை + மன்றாட்டுக்கள்:
=================================================================================
இறைஇயேசுவில் அன்பிற்குரியவர்களே,
இன்று தவக்காலம் முதலாம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.
இன்றைய நற்n;சய்தியில், இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதைக் காண்கின்றோம். உணவு, புகழ், ஆற்றல்; என மூன்று விதமான சோதனைகளுக்கு இறைமகனை உட்படுத்துகின்றது. இயேசு அச்சோதனைகளில் வீழ்ந்து விடாமல், தூய ஆவியின் துணையோடு, உறுதியோடு அனைத்தையும் வெல்கின்றார். நாமும் அத்தகைய சோதனைகளுக்கு ஆளாகின்றோம். முதலாவதாக, அழிந்து போகும் உணவிற்காக ஓடி ஓடி உழைத்திடும் நாம், அழியாத வாழ்வு தரும் இறைவனை பல தருணங்களில் மறந்து விடுகின்றோம். அவரது வாhத்தைகளை வாசிக்க, தியானிக்க நேரமின்றி வாழ்கின்றோம். இரண்டாவதாக, பணம், பதவி, புகழ் இவற்றிற்கு அடிமையானவர்களாக, அவற்றை அடைய பல பாவ வழிகளில் ஈடுபடுகின்றோம். மூன்றாவதாக, நமக்கு வேண்டியவை நிறைவேறாவிட்டால் இறைவனை பழிக்கின்றோம். அவருக்கு நிபந்தனை விதிக்கின்றோம். தொடக்கத்திலே இஸ்ரயேல் மக்கள் இறைவனை பாலைநிலத்தில் சோதித்து இறைவனின் சினத்திற்கும், தண்டனைக்கும் ஆளாகினர். அவர்களைப் போல நாமும் இறைவனை சோதித்தல் ஆகாது.
நாம் ஒவ்வொவரும் நம் சொந்தத் தீய நாட்டங்களின் பொருட்டே சோதிக்கப்படுகின்றோம். அதனால், இச்சோதனை இறைவனிடமிருந்து வருகிறது என யாரும் சொல்லலாகாது" என யாக்கோபு கூறுகின்றார். ஆதிப்பெற்றோரும் இதனாலேயே பாவத்தில் வீழ்ந்தனர். நாமும் அத்தகைய சோதனைகள் வரும்போது, அதிலே சோர்ந்து விடாமல், தளர்ந்து விடாமல், இறைமகனைப் போல், எத்தகைய நிலையிலும் உறுதியுடனிருப்போம். இறைவன் நமக்கு துணையிருக்கின்றார், உதவிடுவார் என்ற ஆழமான விசுசாச உணர்வினை, நம்பிக்கையினைப் பெற்றிட, தூய ஆவியின் ஆற்றல் வேண்டி, இக்கல்வாரிப் பலியில் இணைந்திடுவோம்.

மன்றாட்டுக்கள்:

" ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு"என்ற இறைவா,
உம் அன்பை, அரவணைப்பை உணர்ந்தவர்களாக, உம் அற்புதங்களையும், அதிசயங்களையும் உணர்ந்தவர்களாக, உம் பேரிரக்கத்தை உணர்ந்தவர்களாக, கொடுக்கப்பட்டுள்ள இக்காலத்தை பயன்படுத்தி, நாங்கள் எங்கள் பாவ வாழ்விலிருந்து விடுபட்டு, நீர் எங்களிலே பூரிப்படையும் மாந்தர்களாக வாழ்ந்திட, நாங்கள் எடுக்கும் முயற்சிகளில் உடனிருந்து, வெற்றி தருமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

" நீங்கள் என்னை தேர்ந்து கொள்ளவில்லை, நான்தான் உங்களை தேர்ந்து கொண்டேன்"என்ற தெய்வமே,
திருச்சபையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள். துறவறத்தார் அனைவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறையன்புப் பணிகளை, எவ்வித தடையுமின்றி, தடங்கலின்றி சிறப்பாகச் செய்திடவும், மக்களுக்கு நல்வழிகாட்டியாக, நன்முன்மாதிரியுள்ளவர்களாகவும் இருந்து, உம் இறையாட்சியை இத்தரணியிலே மலர்ந்திடச் செய்திட, அவர்களுக்கு நல்ல உடல், உள்ள நலன் தந்து, தூய ஆவியின் ஆற்றலைத் தந்து, அவர்களை உம் கண்ணின்மணி போல் காத்து வழிநடத்திட வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

" தாமே சோதனைக்குள்ளாகித் துன்பப்பட்டதனால், சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்"என்ற தெய்வமே,
எங்கள் வாழ்வில் பல சோதனைக்குள்ளாகிக் கொண்டு இருக்கின்றோம். அந்தச் சோதனைகளின்போது, உம்மை மறந்து, மறுத்து இறைநம்பிக்கையில் பின்வாங்கியவர்களாகி விடுகின்றோம். அன்று, ஆபிரகாமும், யோபுவும் சோதனைக்குள்ளான போதும், தங்கள் விசுவாசத்தில்; தளராதவர்களாக உறுதியுடனிருந்தார்கள். நாங்களும் இவர்களைப்போல, அலகையின் சோதனையில் வீழ்ந்திடாது, எங்கள் வலுவின்மையில் உமது வல்லமையைச் சிறந்தோங்கச் செய்து, என்றும் உம் மக்களாக வாழ்ந்திடக் கூடிய நன்மனதைத் தந்தருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்"என்ற தெய்வமே,
ஓவ்வொருவரும் பல விதமான பிரச்சனைகளில், வேதனைகளில் மனம் சோர்ந்தவர்களாக, வாழ்க்கையில் விரக்தியுற்றவர்களாக, நீர் தந்ந உயிர்மூச்சையும் அவர்களே நிறுத்திக் கொள்ள முடிவெடுக்கக் கூடியவர்களாக வாழ்வை இக்கட்டான நிலையில் நகர்த்தி வரும் மாந்தர்களின் மனப்பாரங்களை நீர்தாமே கண்ணோக்கி அவற்றிலிருந்து அவர்களை விடுவித்து, ஆறுதல் தந்து, அவர்கள் வாழ்வில் ஏற்றம் கண்டிட, மகிழ்வுடன் வாழ்வை வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

" உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று"என்ற தெயவமே,
புல்வேறு நோய்களினால் துன்புறும் மாந்தர்களை உம் பாதம் ஒப்புக் கொடுக்கின்றோம். அவர்கள் செய்த பாவங்களை நீர் அன்பு நிறைந்த உள்ளத்தால் மன்னித்து, அவர்களை உம் திருக்கரங்களால், தொட்டு குணப்படுத்தி. அவர்கள் தங்கள் விசுவாசத்தில் இன்னும் வேரூன்றியவர்களாக, உமக்கு என்றும் நன்றியறிந்தவர்களாக, நல்சாட்சிகளாக வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!