Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி

                    ஆண்டு A  
                                                    புனித வியாழன்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 பாஸ்கா இராவுணவு பற்றிய விதிமுறைகள்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 1-8, 11-14

எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்: அவர்கள் இம்மாதம் பத்தாம் நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.

ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும்.

ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ண வேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும். நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து, விரைவாக உண்ணுங்கள். இது "ஆண்டவரின் பாஸ்கா". ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது. இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறைதோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 1 கொரி 10: 16) Mp3
=================================================================================
 பல்லவி: கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதே.

12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி

15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. 16 ஆண்டவரே, நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். பல்லவி

17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி


இரண்டாம் வாசகம்

அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, "இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்றார்.

அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, "இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார்.

ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா!  "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்கிறார் ஆண்டவர்.அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15

பாஸ்கா விழா தொடங்க இருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது.

இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.

சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், "ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?" என்று கேட்டார்.

இயேசு மறுமொழியாக, "நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்துகொள்வாய்" என்றார். பேதுரு அவரிடம், `"நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்"" என்றார்.

இயேசு அவரைப் பார்த்து, "நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை" என்றார்.

அப்போது சீமோன் பேதுரு, "அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்" என்றார்.

இயேசு அவரிடம், "குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மை யாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை" என்றார்.

தம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் "உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை" என்றார். அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: `"நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் "போதகர்" என்றும் "ஆண்டவர்" என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்" என்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
I விடுதலைப் பயணம் 12: 1-8, 11-14
II 1கொரிந்தியர் 11: 23-26
III யோவான் 13: 1-15

போதியுங்கள்; தேவைபட்டால் வார்த்தையைப் பயன்படுத்துங்கள்

நிகழ்வு


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் தோன்றிய மிகப்பெரிய மறைப்பணியாளர் டாசன் ட்ரோட்மன் (Dawson Trotman) என்பவர். பல நாடுகளுக்குச் சென்று ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து வந்த இவர், ஒருமுறை தைவானில் உள்ள பழங்குடி மக்கள் நடுவில் நற்செய்தி அறிவிக்கச் சென்றார். இவர் அந்த மக்கள் இருந்த இடத்திற்குச் சென்ற நேரம், மழை பெய்து, வழியெங்கும் ஒரே சேறும் சகதியுமாய் இருந்தன. இதையெல்லாம் பொருள்படுத்தாமல், இவர் அந்த மக்கள் நடுவில் சென்று நற்செய்தி அறிவித்தார். இவர் அங்கு நற்செய்தி அறிவிக்கச் செல்லும்போது, தன்னோடு ஓர் உள்ளூர்வாசியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு சென்றார்.

இவர் அந்தப் பழங்குடி மக்களிடம் நற்செய்தி அறிவித்துவிட்டுச் சென்ற சில நாள்களுக்குப் பின், அவரை அந்த மக்களிடம் கூட்டிவந்த உள்ளூர்வாசியிடம் ஒரு பழங்குடி மனிதர், "டாசன் ட்ரோட்மனைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த உள்ளூர்வாசி சிறிதும் தாமதியாமல், "டாசன் ட்ரோட்மன் மிகவும் தாழ்ச்சியுடையவர்" என்றார். "எதை வைத்து இப்படிச் சொல்கின்றீர்கள்?" என்று அந்த மனிதர் மீண்டுமாகக் கேட்டபொழுது, உள்ளூர்வாசி இவ்வாறு சொன்னார்: "டாசன் ட்ரோட்மன் இங்கு வந்தபொழுது, வழியெங்கும் ஒரே சேறும் சகதியுமாய் இருந்தன. இதனால் அவரும் நானும் அதற்குள்தான் நடந்துவரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சேறும் சகதியுமாய் இருந்த பகுதியைக் கடந்து வந்ததும், ஒரு நீரோடை வந்தது, அதில் அவருடைய காலணிகளை மட்டுமல்ல, என்னுடைய காலணிகளையும் கழுவினார். இத்தனைக்கும் நான் அவரை எவ்வளவோ தடுத்தபோதும்கூட, அவர் என்னுடைய காலணிகளைக் கழுவினார். இதனால்தான் நான் அவரை மிகவும் தாழ்ச்சியுடையவர் என்று சொல்கிறேன்."

ஒரு சாதாரண மனிதருடைய காலணிகளைக் கழுவுவது எளிதான செயலல்ல; ஆனால் டாசன் ட்ரோட்மன் அத்தகைய செயலைச் செய்தார். இவ்வாறு அவர் தன்னுடைய வாழ்வால் இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார். இன்றைய நாளில் இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவியதை நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவிய நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது, இந்த நிகழ்வு இயேசு ஏற்படுத்திய நற்கருணைக்கும் அவர் கொடுத்த அன்புக் கட்டளைக்கும் எப்படி அடிநாதமாக இருக்கின்றது என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீடர்கள்

இந்த நாள் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் மிக முக்கியமான நாள். ஏனெனில், இந்த நாளில் இயேசு நற்கருணையையும் குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்; இந்த நாளில்தான் இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவினார்; இந்த நாளில்தான் இயேசு தன் சீடர்களுள் ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டார். இப்படிப்பட்ட நாளில், நாம் நற்செய்தியாகப் படிக்கக்கேட்ட பகுதியில், இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவுவதைக் குறித்துத்தான் வாசிக்கின்றோம். அப்படியானால் இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியது எவ்வளவு முக்கியமான ஒரு நிகழ்வு என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளை ஏன் கழுவவேண்டும் என்ற கேள்வி எழலாம். இதற்குக் நாம், இதற்கு முன்பு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இதற்கு முன்பு (லூக் 22: 24) இயேசுவின் சீடர்கள் தங்களுக்குள் பெரியவராக எண்ணப்படவேண்டியவர் யார் என்பது பற்றிய விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இதனால் இயேசு, தன்னுடைய சீடர்கள் தனக்குப் பின்பு, தான் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து ஆற்றவேண்டியவர்கள்... அவர்கள் இப்படி யார் பெரியவராக எண்ணப்பட வேண்டும் என்ற விவாதத்தில் ஈடுபடுவது நல்லதில்லை என்பதால், அவர் அவர்களுடைய காலடிகளைக் கழுவி, பெரியவர் என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் கற்பிக்கின்றார்.

அன்று சீடர்கள்தான் தங்களுக்குள் பெரியவராக எண்ணப்படவேண்டியவர் யார் என்று விவாதத்தில் ஈடுபட்டார்கள் என்று இல்லை. இன்றைக்கும் நம்முடைய பங்கு அமைப்பில், குடும்பங்களில் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் நடைபெறுகின்றது. மிகவும் கேவலான அரசியலும் நடக்கின்றது. இப்படிப்பட்ட வேளைகளில் ஈடுபடுவர், பெரியவர் யார் என்பதற்கு இயேசு அளிக்கின்ற விளக்கத்தினை நன்கு உணரவேண்டும்.

தாழ்ச்சியோடு சீடர்களின் காலடிகளைக் கழுவிய இயேசு

இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவினார் என்றால், அது எவ்வளவு பெரிய செயல் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். வீட்டிற்கு வருகின்ற விருந்தினருடைய காலடிகளைக் கழுவுகின்ற வழக்கம் யூதர்களின் நடுவில் இருந்தாலும் (லூக் 7: 44), இப்படிப்பட்ட வேலையினை அடிமைகள்தான் செய்துவந்தனர் (1 சாமு 25: 41). இயேசு தன்னை ஓர் அடிமை போன்று பாவித்து அல்லது அடிமையின் வடிவை (பிலி 2: 7) எடுத்துத் தன்னுடைய சீடர்களுடைய காலடிகளைக் கழுவுகின்றார். அப்படியானால் இயேசுவின் உள்ளத்தில் எவ்வளவு தாழ்ச்சி இருந்திருந்தால், அவர் இவ்வளவு இறங்கித் தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியிருப்பார் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளலாம். இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில், உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகின்றவர் உங்கள் தொண்டராகவும் உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகின்றவர் உங்கள் பணியாளராகவும் இருக்கட்டும் (மத் 20: 26-28) என்று சொல்லி வந்தார். இங்கு அவர் தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவுவதன் வழியாக, அதை வாழ்ந்து காட்டவும் செய்கின்றார்.

அன்பானவர்களால் மட்டும்தான் தாழ்ச்சியாக இருக்க முடியும்

இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவிட்டு, "ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கின்றீர்கள்" என்று கூறுகின்றார். இதுதான் நாம் வாழ்ந்து காட்டவேண்டிய பாடமாக இருக்கின்றது. ஆம், ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவவேண்டும் என்றால் அல்லது தொண்டு செய்யவேண்டும் என்றால், அதற்கு அவருடைய உள்ளத்தில் அன்பு இருக்கவேண்டும். இயேசுவுக்குச் சீடர்களிடத்தில் (எல்லாரிடமும்) அன்பு இருந்தது (யோவா 13: 34). அந்த அன்பின் மிகுதியால், அவர் சீடர்களின் காலடிகளைக் கழுவினார். நமக்கு அடுத்தவரிடம் அன்பு இருந்தால்தான், அவர்களுக்குத் தொண்டும் பணிவிடையும் செய்யவேண்டும்.

இப்படி நாம் அடுத்தவருக்குத் தொண்டும் பணிவிடையும் செய்வதற்குத் தேவையான அன்பினை, இயேசு ஏற்படுத்தி, நாம் உட்கொள்கின்ற நற்கருணையால் மட்டும்தான் தரமுடியும். வேறு விதமாகச் சொல்லவேண்டும் என்றால், நாம் உட்கின்ற நற்கருணை நற்கருணை நம்மை அடுத்தவரிடம் அன்பு கொள்ளச் செய்து, அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தூண்டவேண்டும். இல்லையென்றால் நாம் உட்கின்ற நற்கருணையால் பயனொன்றும் இல்லை.

ஆகையால், இயேசு தன் சீடர்கள்மீதுகொண்ட அன்பினால், அடிமை போன்று தன்னைத் தாழ்த்திக்கொண்டு, அவர்களுடைய காலடிகளைக் கழுவியது போன்று, நாமும் உள்ளார்ந்த அன்பினால் நம்மைத் தாழ்த்திக்கொண்டு, அடுத்திருப்பவருக்குத் தொண்டும் பணிவிடையும் செய்யத் தயாராவோம். அதற்கான ஆற்றலை நாம் உட்கொள்ளும் நற்கருணை தரவேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

சிந்தனை

"போதியுங்கள். தேவைப்பட்டால் வார்த்தையைப் பயன்படுத்துங்கள் (Preach the Gospel at all times and if necessary use words) என்பார் அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ். ஆகையால், இயேசு தன்னுடைய வார்த்தையால் மட்டுமல்ல, செயலாலும் போதித்தது போன்று, நாமும் நம்முடைய செயல்களால் இயேசுவுக்குச் சான்று பகர்வோம். மேலும் நாம் செய்யக்கூடிய தொண்டுகளாலும் பணிவிடையாலும் நாம் உட்கொளும் நம் ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திருஇரத்தத்திற்கு நற்கருணைக்கு அர்த்தம் தருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இயேசு - "குருத்துவம்" மற்றும் "நற்கருணை" ஏற்படுத்திய நாள்

ஆண்டவரின் இராவுணவு

ஆண்டவர் இயேசு நற்கருணை, குருத்துவம், அன்புக் கட்டளை என்னும் மூன்றையும் ஏற்படுத்திய சிறப்பான ஓர் இரவை இன்று கொண்டாடுகிறோம்.

இயேசு தமது தன்மதிப்பை, மாண்பை ஒப்புக்கொடுத்தார்: மனித ஆளுமையின் இன்னொரு பரிமாணம் தன் மதிப்பு. ஒவ்வொரு மனிதருக்கும் தன்னைப் பற்றிய மதிப்பு, மாண்பு இருக்கிறது. தன்னைப் பிறர் மதிக்க வேண்டும், மாண்புடன் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அத்துடன், அந்த மாண்பு மீறப்படும்போது வருந்துகிறோம், கோபம் கொள்கிறோம்..

இயேசுவும் தன் மதிப்பு மிக்கவராக இருந்தார். தலைமைக் குருவின் காவலன் அவரைக் கன்னத்தில் அறைந்தபோது, அதைத் தட்டிக்கேட்டார் (யோவா 18:22-23). ஆனாலும், அவர் தன் சீடர்களின் கால்களைக் கழுவ முன் வந்தார். "நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே, ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" (யோவா 13:14) என்றார். "தம்மைத் தாழ்த்துகிறவர், உயர்த்தப்படுவார்" என்று அவரே மொழிந்ததற்கேற்ப, தன்னை அவர் தாழ்த்திக்கொண்டார். அவருடைய தாழ்ச்சியைப் பவுலடியார் இவ்வாறு புகழ்கிறார்: "சாவை ஏற்குமளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்குமளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்" (பிலி 2:8). ஆகவேதான், கடவுள் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். "அவர் இறைமகனாயிருந்தும் துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்" (எபி 5:8-9) என்று எபிரேயர் திருமடல் அவரது கீழ்ப்படிதலைப் புகழ்கிறது..

கீழ்ப்படிதலில், தாழ்த்திக் கொள்வதில் நாம் நம் ஆணவத்தை, அகந்தையை, இறுமாப்பை இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கிறோம். இயேசு நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகிறார். அவர் அடிமையின் தன்மை பூண்டு, சீடர்களின் கால்களைக் கழுவிய நிகழ்வை நினைவுகூரும் இன்று, நாமும் நம் ஆணவத்தை, பெருமையை, இறுமாப்பை இறைவனுக்கு ஒப்புக்கொடுப்போமாக!
மன்றாட்டு:
எங்களுக்காக உம்மை முழுதும் ஒப்புக்கொடுத்த இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் உமது உடல், மனம், ஆன்மா, உணர்வுகள், இவற்றோடு உமது தன் மதிப்பையும், மாண்பையும்; இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து, முற்றிலும் இறைவனுக்கு உகந்தவராக வாழ்ந்ததுபோல, நாங்களும் முற்றிலும் உமக்கே சொந்தமானவர்களாய் வாழ்வோமாக ! எங்கள் தான்மையை, தன்னலத்தை, அகந்தையை ஒப்புக்கொடுத்து, பிறருக்குப் பணிவிடை செய்து வாழ்வோமாக! ஆமென்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி

முன்னுரை:
இன்றைய வழிபாட்டுக் கொண்டாட்டத்திற்கு அன்புடனே வரவேற்கின்றோம்.
இன்றைய வழிபாட்டில் நாம் மூன்று மறைப்பேருண்மைகளை நினைவு கூர்கின்றோம்.

திவ்விய நற்கருணையை இயேசு ஏற்படுத்தியது.
குருத்துவத்தை ஏற்படுத்தியது.
சகோதர அன்புக் கட்டளையைக் கொடுத்தது.

இந்த மறைப்பேருண்மைகளை நினைவுகூர்ந்து கொண்டாட இன்றைய நாளின் வாசகங்களும், செபங்களும், பாடல்களும், திருச்சடங்குகளும் நமக்கு பெரிதும் உதவுகின்றன.

இன்றைய வழிபாடு நான்கு பிரிவுகளைக் கெண்டது.
 தொடக்கச் சடங்கும், இறைவார்த்தை வழிபாடும்
 பாதம் கழுவுதல்
 நற்கருணைக் கொண்டாட்டம் (நன்றி வழிபாடு)
 நற்கருணை இடமாற்றப்பவனி

முதலில் தொடக்கச் சடங்கும், இறைவார்த்தை வழிபாடும்

திருவருட்சாதனங்களின் மையமான நற்கருணையை ஏற்படுத்தியது இந்த நாளில் தான். "உலகம் முடியும் வரை உங்களோடு இருப்பேன்" என்று வாக்களித்த இறைவன், அப்பத்தையும், இரசத்தையும் தன்னுடைய உடலாக, குருதியாக மாற்றி நமக்கு உணவாக, பானமாக தந்து நம்மோடு ஒன்றாக கலந்து வாழ்கின்றார்.

இந்த திருவருட்சாதனம் உலகம் முடியும் மட்டும் நிலைத்திருக்க "இதை என் நினைவாக செய்யுங்கள்" என்று கூறி இச்செயலை தொடர தம் திருத்தூதர்களை குருகுலமாக ஏற்படுத்தி, குருத்துவம் என்ற திருவருட்சாதனத்தை ஏற்படுத்தி ஆசீர்வதிக்கின்றார். எனவே மகிழ்வுடனே இப்பலியில் கலந்து கொண்டு செபிப்போம். நம்முடைய குருக்களுக்காக செபிப்போம். இறை அழைத்தல் பெருகிட அறுவடையின் ஆண்டவரை மன்றாடுவோம். நற்கருணையில் இறைபிரசன்னம் மெய்யாகவே உள்ளதை உறுதிப்படுத்திட, விசுவாசத்தை அதிகரிக்க கேட்போம். நற்கருணையின் மெய்யான பிரசன்னத்திற்கு விளைவிக்கப்படுகின்ற அவசங்கைகளுக்கு இறைவனது இரக்கத்தை கேட்போம். பக்தியுடனே பலியிலே பங்கேற்போம்.


(ஆண்டவரே இரக்கமாயிரும் பாடலுக்குப் பின்னர் சொல்ல வேண்டியது)

நற்கருணை, குருத்துவம் ஆகிய மிகப் பெரிய இரு திருவருட்சாதனங்களைத் தந்த இறைவனை நன்றியோடு புகழ்ந்து துதிக்க, ஆலய மணிகள் ஒலிக்க, "உன்னதங்களிலே" என்ற வானவர் கீதத்தை மகிழ்வுடனே பாடிப் போற்றுவோம்.

(வாசகங்களுக்கு முன்னுரை)

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இருந்து, நாம் நினைத்து கொண்டாடிவரும், பாஸ்கா விழாவின் விளக்கம் விடுதலை பயண நூலில் இருந்து முதல் வாசகமாக தரப்பட்டுள்ளது. நற்கருணையை தகுந்த முறையில் உட்கொள்ள பவுல் அடிகளார் கொரிந்து நகர் மக்களுக்கு சொன்ன அறிவுரையை இரண்டாவது வாசகமாகவும், நற்செய்தியில் இராவுணவின் போது நிகழ்ந்த நிகழ்வினை, யோவான் தன்னுடைய நற்செய்தியில் பதிவு செய்ததை கேட்க உள்ளோம்.
திறந்த மனத்துடன் வாசகங்களுக்கு செவிமடுத்து, உள்ளத்தில் தங்க வைத்து, அசை போட்டு வாழ்வாக்க வரம் கேட்டு மன்றாடுவோம்.

(மறையுரைக்குப் பின்னர்)

"தம் சொல்லால் எல்லாம் படைத்தார்" இறைவன். "தம் செயலால் எல்லாம் சொன்னார்" இறைவன். நான் முன்மாதிரிகை காட்டினேன். "நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்", எனக் கூறிய கிறிஸ்து தன் அன்பினை நிறைவாக காட்டிட, சீடர்களின் பாதங்களை தொட்டுக் கழுவி, தன் உடன் பங்காளிகள் என்பதனை உணர்த்தினார். நம்மிடையே உள்ள எந்த வேறுபாடும், நம்முடைய ஒற்றுமையை குலைத்திடக் கூடாது. நம்மை பிரிவின் சக்திகள் அடிமைப்படுத்தி விடக் கூடாது. இத்தகைய உணர்வுகளை நம்மிலே விதைத்திட, நம் மத்தியில் உள்ள 12 பேருக்கு, குரு பாதங்களை அடையாள முறையில் கழுவி தனது அன்பினை வெளிக்காட்டுகின்றார். நாமும் மனங்களை தூய்மையாக்கி, வேற்றுமைகளை வேரறுத்து, ஒற்றுமையின் அடையாளங்களாக வாழ்ந்திட உறுதியெடுத்து அமைதியாக பங்கேற்போம்.


மன்றாட்டுக்கள்:

திருஅவை அன்பர்கள் தங்களது அர்ப்பணத்தை அறிந்து புதுப்பித்து, ஆவியின் துணையோடு பயணிக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பந்தியிலே பக்தியுடனே பங்கேற்கும் நாங்கள், பந்தியின் பண்புகளை வாழ்விலும் கடைப்பிடித்து, எல்லாரும் இன்புற்றிருக்க வழி செய்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாஸ்கா திருவிருந்து தரும் புதிய அன்பு உடன்படிக்கையை, வாழ்விலே கடைப்பிடித்து, அன்பிற்கு சாட்சிகளாக வாழ்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாதத்தை தொட்டு கழுவுமளவுக்கு, உம்மை தாழ்த்தி பணிவிடை செய்தது போல நாங்களும், பணிவிடை செய்வதிலே ஆர்வம், அக்கறை, ஈடுபாடு கொண்டிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பணிவும் தெய்வ பக்தியும் கொண்ட ஆட்சியாளர்களையும் அரசியல்வாதிகளையும் நாடு பெற்று, நல்லாட்சியைக் கண்டிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


(மன்றாட்டுக்குப் பின்னர்)

இன்றைய நாளில் நாம் காணமுடியாத அன்பர்களுக்கும், நம்முடைய அன்பினை வெளிப்படுத்திட திருச்சபை நம்மை அழைக்கின்றது. பசிப்பிணியினால் வாடும் மாந்தர்களுக்கு உதவிட, சிறப்பு காணிக்கை எடுக்கப்படுகின்றது. சின்னஞ்சிறியவர்களுக்கு உதவிடும் போது எனக்கே உதவுகின்றீர்கள் என்ற அழைப்பை ஏற்று, தாராளமாக உதவிட முன்வருவோம். அப்பொழுது என் மகிழ்ச்சியில் கலந்து கொள் என்ற இறைவாக்கு நம்மிலே நிறைவு பெறும். நற்கருணை கொண்டாட்டம் தொடர்கின்றது. தன்பணி தொடர இறைவன் புனிதப்படுத்திய குருக்கள், பலி நிறைவேற்றுகின்றார்கள். பக்தியுடனே பங்கேற்போம். அப்ப, இரசத்தோடு நம்மையும் ஒப்புக் கொடுப்போம்.


(நற்கருணை உட்கொண்ட பின்னர்)

அன்பின் அருட்சாதனமாகிய நற்கருணை, பவனியாக அலங்கரிக்கப்பட்ட புதிய பீடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றது. "என்னோடு விழித்திருந்து செபியுங்கள்" என்ற இறைமகனின் அழைப்பின் குரல் கேட்டு, அவருக்காய் நேரம் ஒதுக்கி அவரோடு இருப்போம். ஆராதனைக்கு வைக்கப்பட்ட பின்னர், பாடகர் குழுவினர் மாண்புயர் என்ற கீதத்தை பாடும் போது, நாமும் இணைந்து பாடுவோம். திருச்சபையின் பரிபூரண பலன் பெறுவோம். இறையாசீர் நிறைவாய் கிடைக்கப் பெறுவோம். பின்னர் பீடம் வெறுமையாக்கப்பட்டு, அலங்காரங்கள் அகற்றப்படும். புனிதர்களின் உருவங்கள் மறைத்து வைக்கப்படும்.

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!