இந்தத் தலைப்பு முன்னை அத்தியாயத்துக்கு விளக்கம்
அளிப்பதுபோல் இருக்கின்றது. மரியா பேரரிய புனிதையாகத்
திருச்சபையின்
வணக்கம் பெறக் காரணம், அவர்
இறைவனின் தாயாக
விளங்குவதுதான்.
இறைவனின் தாயானதற்கு காரணம்
அறிவோமென்றால், அவர் பேரரிய புனிதையென அழைக்கப்படுவதற்கான
விளக்கம் நமக்குக் கிடைக்கும். அவர் இயேசுவைப்
பெற்றெடுத்ததால் இயேசுவின்தாய். இயேசு
கடவுளும் மனிதனுமான
இயல்புடன் கூடிய ஒரு
இறையாளுமை உடையவர். ஓர்
இறையாளுமை
உடைய இயேசுவைப் பெற்றதால் அவரின் (கடவுளின்) தாயானார்.
எவ்வாறு மரியா
கடவுளின் தாயென்பதை இவண் காண்போம்.
இயேசு மனிதன் என்பதை அவருடைய
வாழ்வின் பல்வேறு
நிகழ்வுகளைக் கொண்டு
அறியலாம்.
அவர் மனிதனைப் போன்று
பிறந்தார்.
(லூக்: 2:1-20),
வாழ்ந்தார் (2:39-52),
உழைத்தார் (மாற்:6:3),
களைப்புற்றார் (அரு:4:6),
உண்டார் (அரு:21:13),
உறங்கினார் (மத்:8:24),
அன்பைத்தேடிச் சென்றார் (அரு:
11:5-9),
அன்பனுக்காக அழுதார் (அரு: 11:35).
இவ்வாறு மனித
வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பங்கு
பெற்ற அவர் (எபி:4:15), இருவகைத் தன்மையுடையவராகக் காட்சியளிக்கின்றார்.
கெத்சமெனித் தோட்டத்தில் தமக்கு
வரப்போகும் துன்பங்களை
முன்னுணர்ந்து மிகுந்த வேதனையை அனுபவிக்கின்றார்.
பாடுகளைப்
பற்றிச் சிந்திக்கையில் உடலில் இரத்தம்
வியர்த்தது. மனிதத் தன்மையால் பாடுகளைக் கண்டு அஞ்சி
நடுங்குகின்றார். ஆனால் அந்த அச்சம் அவரை வென்றுவிடவில்லை.
பதிலாக அவரின்
இறைத் தன்மை வெற்றி பெறுகின்றது. அதுவே
அவரைத் தயாரித்துப் பாடுகளைத் தழுவுவதற்கு அழைத்துச்
செல்கின்றது.
இவ்வாறு இரு இயல்புகள் இருந்தபோதிலும்,
அவை
ஒரே ஆளுமையில் சங்கமிக்கின்றன.
ஈரியல்புகள் ஓர் ஆளுமையில் இணைவு பெறுவதை புனித அருளப்பர்
புலப்படும்
அளவில் விவரிக்கின்றார். ஆதியிலே
வார்த்தை
இருந்தார். அந்த
வார்த்தை
கடவுளோடிருந்தார்.
அவ்வார்த்தை
கடவுளாயும் இருந்தார்.
கடவுளோடு கடவுளாக இருந்த
வார்த்தை
ஆவியும் உயிருமானவர்தான். அவர்தான் அன்று மண்ணுடலுக்கு
உயிரூட்டினார். இப்பொழுது அவர்தான் தன்னை உடலால்
போர்த்தினார். மனுமகன் ஆனார். நம்மோடு குடிகொண்டார். (அரு:1:1-14).
இவ்வுண்மையைக் கண்கூடாகக் கண்டறிந்த புனித அருளப்பர்
அதற்குச் சான்று பகர்கின்றார். ஆதிமுதல் இருந்தவரை நாங்கள்
கண்ணால் பார்த்தோம். காதால்
கேட்டோம், கையால் தொட்டோம். (அரு:1:1) புலன்களுக்கு எட்டாத
அவர் புறப்படும்
அளவுக்கு மறை வடிவில் தோன்றி ஒரே ஆளுமையில்
எங்களோடு எங்களாக வாழ்ந்ததைக் கண்டோம்.
அதற்குச் சாட்சியம்
அளிக்கின்றோம்" என்கிறார்.
மனித உருவெடுப்பவரே
இறைவனின் மகனென தாவீது அரசர் அன்றே உரைத்தார்.
நீரே என் மகன், இன்று உம்மை ஈன்றெடுத்தோம்.(சங்:2:7). இயேசுவின்
திருமுழுக்கின்போது "இவரே என் அன்பு மகன் இவருக்குச்
செவியாயுங்கள்" என
இறைத்தந்தை
ஆவியின் வழி அறிக்கையிட்டார்.
(மத்:3:17, மாற்:1:11).
இறைவனிடமிருந்து பிறந்து
இறைவனுக்கு உவப்பு அளிக்கும் வாழ்வு
வாழ்ந்தார். (லூக்:3:22). இம்மேற்கோள்களிலிருந்து
வரலாற்றில் வாழ்ந்த இயேசுவே
கடவுளின் மகன் எனத்
தெளிவாகின்றது.
வரலாற்றின் நாயகன் இயேசு, தம் வாய்மொழி
வழியாகவே தாமும் தந்தையும் ஒன்று என்று விளக்கியுள்ளார்.
(அரு: 10:29). தந்தையை எங்களுக்குக்
காட்டும் என்ற பிலிப்புவிடம் "என்னைக் கண்டவன், என் தந்தையைக்
கண்டான். நான் தந்தையினுள்ளும், தந்தை என்னுள்ளும் இருக்கிறதாக
நீ விசுவசிக்கிற தில்லையா?" (அரு:14:8-10) என்பதிலிருந்து
மனுமகனே கடவுள்,
கடவுளே மனுமகன் இயேசு என்பது ஐயத்திற்கு
இடமின்றி விளங்குகிறது. இந்தப் பிள்ளையில்
கடவுளாகவும், மனிதனாகவும் ஒரே ஆளுமையில் நின்று நிலவு
வது இயேசு என்று நாம் விளக்கினோம்.
எனவே கடவுளைப் பெற்றெடுத்த கன்னிமரியா
இறைவனின் தாயென அழைக்கப்படுவது
பொருத்தமானதே.
இந்த உண்மைகளைப் பரிசுத்த
ஆவியின் ஏவுதலால் நன்கு உணர்ந்ததாலே, எலிசபேத்து "என் ஆண்டவரின் தாய் என்னிடம்
வர நான்
வாய்ப்புப் பெற்றது எப்படி? என்று
அறிக்கையிட்டார். வியந்து
அன்னை போற்றினார். (லூக்: 1:43, சங்: 1:14).
இயேசு ஆண்டவர் என்ற சொல் அவர்
கடவுளென உரைப்பதற்கு விளக்கமாகும். அவர்
கடவுள் என்றால் அவரைக் கருவுற்றுப் பெற்றெடுத்து பேணி
வளர்த்தவர், கடவுளின்
தாய் (லூக்: 11:27) என்றும் நாம் சொல்ல
வேண்டும்.
குழந்தையைக் கரத்தில் ஏந்திக் குவலயம் முழுவதற்கும்
தாய்மைப் பேற்றைக் காண்பிப்பதே, ஒரு தாய்க்கு அழகு.
சூசையும் மரியாவும் பெத்லகேம் ஊருக்குச் சென்றனர். அவர்கள்
அங்கிருக்கும்போது, அவருக்குப் பேறுகாலம்
வந்தது. அவர் தலைப்பேறான
மகனைப் பெற்றெடுத்துத் துணிகளால் பொதிந்து முன்னிட்டியில்
கிடத்தினார். அவரே ஆண்டவராகிய
மெசியா (லூக்: 2:5-13) வென லூக்காஸ்
அறிவிக்கின்றார். வானகம் ஒரு மெசியாவை அனுப்பும்
என்ற எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறியது.
கடவுளின் மகனைப்
பெற்றெடுத்துக் கரத்தில் தாங்கிய அவர்
கடவுளின் தாயாகக்
காட்சியளிக்கின்றார்.
இந்தத் தாயும் சேயும் பிரிக்கமுடியாமல் இணைந்துள்ளனர்.
பாஸ்கா விழாவுக்கு எருசலேம் சென்றபோது, சிறுவன் இயேசுவைக்
காணவில்லை. அப்போது கன்றைப் பிரிந்த பசுபோல் கண்ணீர்
விட்டுக்
கதறும் நிலையிலிருந்தார். தாகங் கொண்ட மான்போல்
தாவி ஓடித் தேடினார். மூன்று நாட்களுக்குப் பின் அவரைக்
கோவிலில் கண்டு "மகனே, ஏன் எங்களுக்கு இப்படிச் செய்து
விட்டாயென" ஏக்கத்தோடு
கேட்டார். (லூக்: 2:39:59). இந்நிகழ்வு மரியா எந்த
அளவுக்கு இயேசுவின் மீது
பற்று
வைத்திருக்கிறாரெனக் காட்டுகின்றது.
அந்தப் பிள்ளைக்காக, சமுதாயத்தில் அவர் செய்யவேண்டிய பாரம்பரியக்
கடமைகளைச் சரிவரச் செய்தார். குழந்தை பிறந்த எட்டாவது
நாளில் அதற்கு இயேசு என்று பெயரிட்டனர். இச்சடங்கு, தேவாலயத்தில்
அன்னாள் முன்னிலையில் நடைபெறுகின்றது. அப்போது
சிமியோன், இவர் புறவினத்தாருக்கும் இருளகற்றும் ஒளி எனப் பாடுகிறார்.
தந்தையாகிய
இறைவனுக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்து
வாழ்வதே, ஒளியாகத் திகழ்வதெனக் காண்பித்தார்.
தாய் தன்னுடைய பிள்ளையைத் தன்னுயிரைக் கொடுத்தாவது
காப்பாற்றுவாள். இரண்டு
வயதில் குழந்தையைக் கொல்லத்
தேடுகிறான் ஏரோது அரசன். குழந்தை இயேசுவைக் காப்பாற்ற முயல்கின்ற
தாய் சிறந்ததோர் பாடத்தை நமக்குப் புகட்டுகின்றார். சோதனைகள்
இடம் பெறும் இடத்தில் நின்று எப்போதும் வெற்றி கொள்ள
முடியாது. அவ்விடத்தை விட்டகன்றே நாம் நம்மைக்
காப்பாற்றிக் கொள்ள முடியு மெனக்
கற்பித்தார். குழந்தையைத்
தூக்கிக் கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய்க் காப்பாற்றிக்
கொள்கின்றார். (மத்: 13:18)
கிறிஸ்தவர்களுக்கும் தாயெனக் காட்டுகிறார். "கிறிஸ்துவை உங்களில் உருவாக்கும்
வரை நான் பேறுகால வேதனை அனுபவிக்கின்றேன்.(கலா:
4:9) என்கிறார் புனித சின்னப்பர். இதுபோல கிறிஸ்துவுக்குள் அனைத்து மக்களையும் பெற்றெடுப்பதற்காக பேறுகால வேதனையை அனுபவித்தார்
அன்னை மரியா. அவர் கருவுற்றிருந்தார். பேறுகால வேதனைப்பட்டு
கடுந்துயருடன்
கதறினார். (தி.வெ: 12:2) சிலுவையில்
கிறிஸ்து உடலில் அனுபவித்த வேதனைகளை மரியா உள்ளத்தில் உணர்வுப்பூர்வமாக
சுமந்து துயருற்று அழுது கொண்டு நின்றார்.
வேதனையில் அழுதுகொண்டு
நின்ற மரியா திருச்சபையின் பிள்ளைகளைப்
பெற்றெடுத்தார். புனித அருளப்பரிடம் மரியாவைச்
சுட்டிக்காட்டி, "இதோ உன் தாய்" என்றார். மரியாவிடம் அருளப்பரைக்
காட்டி "இதோ உன் மகன்" என்றார். புனித அருளப்பர், இங்கு
உலகத் திருச்சபையின் உன்னத அடையாளமாக நின்று
கொண்டிருக்கிறார். (அரு:19:25:28) அவருக்கு அருளப்பட்ட
வாக்கு, திருச்சபைக்கு
அறிவிக்கப்பட்ட வாக்கு. எனவே இயேசு
திருச்சபையிடம் தேவதாய் அன்னையென
அறிவித்தார். தேவதாயும்
திருச்சபையை அங்கு பெற்றெடுத்தார்.
கானாவூர்த் திருமண விழாவில், தாம்
இறைவனின் தாயென்றும், மனிதர்களின் தாயென்றும் உணர்த்தியுள்ளார். மேலே இருக்கிறவர்கள்தான்
கீழே இறங்கி
வரவேண்டுமெனக் கருதிஇ முதலில் தம் மகன் இயேசுவிடம்
பேசி, அவர் கவனத்தை மணவீட்டார் பக்கம் திருப்புகின்றார்.
இதுபோல் தம் அன்புப் பிள்ளைகளாகிய மண்ணக மக்களின் கண்களை
இறைமகன் இயேசுவிடம் திருப்புகின்றார். இருவரும் தாய்
சொல்லிவிட்டார் தட்டக்கூடாதே என்ற நிலையில் இருக்கின்றனர்.
அன்னை தாயன்போடு செயல்படும் விதம் இவண் காணக்கூடியதாக இருக்கின்றது.
முதலில் இறைமகனிடமே செல்லுகின்றார். அவருடைய
பார்வையைத்தான் மக்கள் பக்கம் திருப்புகின்றார். அவரின் நேரடிக்
கண்காணிப்புக்கு பிரச்சனையைக் கொண்டு சென்றவுடன், அவர் இயல்பாக
செயல்படத் துவங்குவார். மக்கள் குறை களைவார் என்றெண்ணி, " அவர்களுக்கு இரசம் தீர்ந்து விட்டது" என்றார். அவரும் எபிரேயப்
பின்னணியில்
"இப்போது அதை ஏன் என்னிடம் சொல்லவேண்டும்? நேரம்
வரும்போது இயல்பாக நடக்குமே" என ஆதரவாகப் பதில் அளிக்கின்றார்.
இயேசுவின் நல்ல பதில் கிடைத்தவுடன் தாம் இயேசுவில்
பெற்றெடுத்த மக்களிடம்
வருகின்றார்.
அவர்களின் அவல நிலையை
நன்கு அறிந்துள்ளதை உணர்த்துகின்றார். தமக்காகக் கசிந்துருகுவதை
அன்னையின் முகத்தில் அவர்கள் காண்கின்றனர். அவரையே
நோக்கிப் பார்த்த, தம் குறை நீங்குமென, அவரில் தம் நம்பிக்கையை
வெளிப்படுத்துகின்றனர். அவர் பின்னே செல்கின்றனர். அன்னையும் என் பின்னே ஏன்
வருகிறீர்கள் அவரை அணுகிச் செல்லுங்கள்.
வெட்கமடைய மாட்டீர்கள். அவர் சொல்கிறபடி செய்யுங்கள்
வேண்டியதைப் பெறுவீர்கள் என்றார் . விரும்பிய மன்றாட்டு
நிறைவேறியது.
இவ்வாறு
இறைவனின் தாயாகவும், மனிதனின் தாயாகவும் செயல்பட்டு
மாபெரும்
அற்புதத்தைச் செய்துள்ளார். இச்செயல் இவர் எத்தகைய
சக்தி வாய்ந்தவரென வெளிப்படுத்துகின்றது. இதை
அறிந்த
திருச்சபை, செபமாலையில் மாமரியை
இறைவனின் அன்னை என்றழைப்பதில்
பெருமை கொள்கின்றது. அன்னையென்ற முறையில் அவர்கள் அவரிடம்
எதையும் கேட்கத் தயங்குவதில்லை. அப்படி விண்ணப்பங்களை
வைக்கும் முன்னால் பிள்ளைகள் அம்மா அம்மா என்று அன்பொழுக
அழைத்துக் கொண்டே கேட்கும். அவ்வாறே நாமும் செபமாலையில் அம்மா
அம்மாவென அழைத்துக் கொள்கிறோம். பின்னால் விண்ணப்பத்தை
வைக்கிறோம்.
அதற்கு இது முன்னுரையாகின்றது.
|
|