Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  மங்கள வார்த்தைகள்

இயேசுவும் ஆசீர் பெற்றவரே

                                
    
வயிற்றின் கனி என்பதைப்பற்றி தெரிந்து கொண்ட எமக்கு, அன்னைமரி வானளாவ உயர்ந்த ஆலயத்திலும் மேன்மையான ஆலயமென நமக்கு உணர்த்தியது. உடன்படிக்கைப் பேழையைப்போல, மனுவுருவான வார்த்தையைத் தாங்கியதால்  அர்ச்சிக்கப்பட்ட ஆலயமானார் என்பதை உணர்த்தியது. அந்த வண்ணமிகு ஆலயத்தில், வானவரும் வணங்கும் வள்ளல் இயேசு குடி கொண்டார்.

இதுவரை அந்த ஆலயத்தைப் புகழ்ந்த நாம், இப்பொழுது அதன் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் இயேசுவைப் புகழ்வோம்.


இங்கு இயேசுவும் ஆசி பெற்றவரே என்ற குறிப்பிடப்பட்டுள்ளது. "ஆசீர் பெற்றவர்" என்பது எயுலோகோமினாஸ்" என்பதன் மொழியாக்கம். எயு என்றால் நல்லவை. போகோ என்றால் சொல்லுதல். எனவே இவ்வார்த்தைக்கு நல்லவையைச் சொல்லுதல் அல்லது புகழ்தல் என்று பொருள். இப்புகழ் இயேசுவைச் சென்றடைகிறது. இதுவுரையுள்ள தொடர்கள் அன்னையைப் புகழ்ந்தன. ஆம்மொழியின் உச்சக்கட்டமாக ஆண்டவர் இயேசுவின் புகழ் அமைந்துள்ளது. ஆகவே செபமலர்களால் அன்னையுடன் தொடுத்த மாலையை நாம் இங்கு இயேசுவுக்கே அணிவிக்கின்றோம். இவவகைப் புகழை நாம் இயேசுவின் திருவடிகளில் காணிக்கையாக்குகிறோம் என நாம் இவண் காண்போம்.

முதன் முதலில் இப்பெயரைச் சூட்டுமாறு கபிரியல் தூதர் ஏற்கனவே அன்னைக்கு அறிவுறுத்தியிருந்தார். உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப்பெறுவீர். அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். அவர் மேன்மை மிக்கவராயிருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் என்றென்றும் அரசாள்வார். அவருடைய ஆட்சிக்கு முடிவேயிராது. (லூக்.1:31-33). இப்பகுதி இயேசு என்னும் பெயர் வானத்திலிருந்து வந்தது என்றும், இப்பெயர் தம் அன்பு மகனுக்கு கனிவோடு சூட்டியது என்றும், பொருள் செறிந்து, அருள் மிகுந்து விளங்கிய பெயர் என்றும், பூமியில் உயர்வை என்றும் பெற்றிருந்தது என்றும் தெரிகிறது.

உயர்வைக் குறிக்கும் உன்னதமானது இயேசுவின் பெயரென புனித சின்னப்பர் பின்னர் உரைத்தார். "கடவுள் அவரை எல்லோருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிட, இயேசுக்கிறீஸ்து ஆண்டவர் என்று, தந்தையாகிய கடவுளுடைய மகிமைக்காக எல்லா நாவுமே அறிக்கையிடும். (பிலிப்: 2:9-11) எல்லா மக்களும் தெண்டனிட்டு வணங்கி போற்றி, போற்றி என இடைவிடாது புகழ்பாடக் கூடிய பெயரின் உட்பொருளை விளங்கவேண்டும்.

இப்பெயருக்கு இணையான எபிரேயப் பெயர்களில் இருபெயர்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை. இசையாஸ் யோசுவா: இரண்டிற்கும் ஆண்டவரின் மீட்பு என்று பொருள். இவை இரண்டும் உணர்த்தும் உண்மைகளைத் தனித் தனியே தருகின்றோம்.

இசையாஸ்
என்ற பெயர் கடவுளைத் தொலைவில் நிறுத்துகின்றது.
    -  தூயவர், தூயவர், தூயவர்: பாவியாகிய மனிதனுக்கு அப்பாற்பட்டவர். (6:1-6)
      எனினும் அவர் மனிதர்கள் மத்தியில் மனிதனுக்குள்ளே வாழும் இம்மானுவேல்.
       (7:14)

     - அவர் ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி,
        ஆண்டவரின் மேல் அச்சம்(11:2) அனைத்தும் அருள்பவர்.

    -  தம் உள்ளங்கைகளிலே இறைமக்கள் பொறித்து வைத்துள்ளார். (49:16)

     - தாய் தன் குழந்தையை மறந்தாலும், தாம் ஒருபோதும் நம்மை மறக்காதவர்.
       (49:15).

     - அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம்முடைய துன்பங்களைச்
        சுமந்து கொண்டு நம் குற்றங்களுக்காகக் காயப்பட்டார்.

     - நம் அக்கிரமங்களுக்காக நொறுக்கப்பட்டவர். (53:4-5) என இறைவனை நம்
        கண்முன் நிறுத்துகின்றது இசையாஸ் பெயர்.

யோசுவா:
    -   மோயிசனைப்போல இஸ்ராயேலைத் தலைமை தாங்கி வழி நடத்தியவர்.
         (எண்: 27:18-23: உபா:34:9)

     -   இறைவனின் திருவுளத்தை நெறிப்படுத்தியவர்.

     -   வளமை பெற்ற மிகப்பெரிய மனிதர், போரில் வல்லவர், (யாத்: 17:8-12)

     -   தேர்ந்தெடுத்த மக்களின் பகைவர்களைப் பழிவாங்கியவர். (சீரா:46:1-8)

     -    இஸ்ராயேலுக்கு உரிமைச் சொத்தாகிய மீட்பை வழங்கியவர்.

     -    வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்தில் இஸ்ராயேலைக் குடிகொள்ளச்
           செய்தவர். (யோசு: 24:29-30: நீதிபதி:2:8-9)

     -   அவர்களுக்கு அரணாகவும் பலத்த கோட்டையாகவும் ( 1மக்; 2:55: 11)          
       (எண்: 7:107) இருந்தார். பகைவர்கள் முன் இறையாட்சியை விளங்கச் செய்தார்.

யோசுவாவைப்போல இயேசுவும் நமக்காக எதிரியிடம் போரிட வல்லவரென இப்பெயர் இயம்புகின்றது.

இப்பெயருக்கு பேய்களும் அஞ்சுகின்றது. "ஆண்டவரே உமது பெயரைச் சொன்னால் பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன. (லூக்:10:17). இப்பெயரை உச்சரிப்பவர்களுக்கு ஆண்டவர் மாபெரும் ஆற்றல்களை வழங்கியுள்ளார். "வானத்திலிருந்து சாத்தான் மின்னைலைப்போலக் கீழே விழும். பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் உங்களால் வெல்லக்கூடும். எதுவும் உங்களுக்குத் தீமை விளைவிக்காது" (லூக்:10:18-19) என்றுரைத்து இயேசுவின் பெயருக்குள்ளிருக்கும் ஆற்றலை வெளிக் கொணர்கின்றார்.

இயேசுவின் பெயரை உச்சரித்தால் நோய்கள் குணமாகும். கோவிலின் அழகு வாயிலில் அமர்ந்திருந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார் கால் ஊனமுற்றவர் ஒருவர். ஆலயத்திற்குச் சென்று கொண்டிருக்கும் இராயப்பரையும், அருளப்பரையும் கண்டு வேண்டினார். இராயப்பர் அவரிடம் வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை. என்னிடமுள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நசரேத்தூர் இயேசுவின் பெயரால் எழுந்து நடந்திடும். (அப்.பணி: 3:1-6) என்றதும் அவர் நடந்திட்டார். அப்போஸ்தலரிடம் ஆண்டவருடைய பெயர் எவ்வளவு வலிமையுடன் செயல்பட்டிருக்கிறதென்பதை இது சித்தரிக்கின்றது.

வலிமையுடன் செயலாற்றும் இப்பெயர் தன்நலத்தையன்றி பிறர் நலத்தையே போதிக்கின்றது. "நானோ ஆடுகள் உயிர் பெறும்படி வந்தேன். நல்ல ஆயன் நானே. ஆடுகளுக்காகத் தன்னுயிரையே கொடுப்பான். நானாகவே என்னுயிரைக் கையளிக்கின்றேன். (அரு: 10:10-19) இவ்வுண்மையை நன்குணர்ந்து புனித சின்னப்பர் "என்னை நேசித்தார். தன்னை முற்றலும் எனக்காகக் கையளித்தார்" (கலா:2:20) என்றார். இதை தன்வாழ்வில் அனுபவபூர்வமாக உணர்ந்தவர் வோன்கோபர். இரண்டாம் உலகப்போரில் எவ்வித குற்றமுமின்றி சிறைத்தண்டனையை அனுபவித்து உணர்ந்தவர் வோன்கோபர். அவர் "மற்றவருக்காக வாழ்ந்தவர் இயேசுக்கிறிஸ்து" என்று கூறி இயேசுவின் பெயருக்குப் புதிய பொருள் கொடுத்தார்.

மற்றவருக்காக வாழ்ந்த இயேசுவின் பெயருக்கு நண்பன் என்றும் பொருள். தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லை. நான் உங்களுக்கு கட்டளையிட்டதெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள். ஊங்களை நான் ஊழியர் என்று சொல்லேன், ஏனெனில் தலைவன் செய்வது இன்னதென்று ஊழியனுக்குத் தெரியாது. ஆனால் உங்களை நண்பர்கள் என்றேன்.(15:13-15) நட்புக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் இயேசு. நண்பன் உயிரைக் கொடுப்பான். ஆனால் அதை எடுக்கமாட்டான். கிறிஸ்துவும் உயிரைக் கொடுத்து நம்முயிரைக் காத்த நண்பர் என எண்பித்தார்.

தன் சுயநலத்தை வெல்ல நண்பனாக இருக்க இயலாது. இயேசுவின் பெயருக்கு வென்றவர் என்றும் பொருள். இயேசு தம் ஆசைகளை வென்றவர். பாவத்தை வென்றவர் பசாசை வென்றவர். சாவை வென்றவர். இவற்றை இவண் முறையே காண்போம்.

இயேசு தன்னை வென்றவர் என்பதை அவருடைய செயல்பாட்டில் காண்கிறோம். எந்த ஒரு மனிதனையும் உண்மையாக அறிய வேண்டுமெனில் அவன் பசியோடு இருக்கும்பொழுது நோக்கவேண்டும். பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும் என்பார்கள். யாக்கோபின் சகோதரன் ஏசாயு பசிபோக்க தன்னுடைய பிறப்புரிமையைப் பறிகொடுத்தார். இயேசு 40 நாள் இரவு பகலாக உண்ணா நோன்பிருக்கின்றார். எப்படிப்பட்ட பசியென எல்லோராலும் யூகிக்கமுடியும். தண்ணீரை இரசமாக மாற்றமுடியுமெனில், கல்லையும் அப்பமாக்கமுடியும். ஆனால் மனிதன் இறை வார்த்தையினால் (உபா:8:4) உயிர் வாழ்கின்றானென்று சொல்லி தன் அனைத்து உணர்வுகளையும் வென்றவெரெனக் காண்பித்தார்.

இன்றைய உலகிலே மண்ணாசைக்கு அடிமையாகாதவர் கிடையாது. ஒரு மண்வெட்டி அளவு அதிகம் வரப்பை வெட்டினால் தலையையே வெட்டிவிடுவார்கள் மனிதர்கள். காஸ்மீர் இந்தியாவுக்கா, பாகிஸ்தானுக்கா என்பது ஐந்தாண்டுகாலப் பிரச்சனை. இந்தச் சூழ்நிலையில் உலகையே உனக்குத் தருகின்றேன், என்னைத் தெண்டனிட்டு வணங்கு என்றது சாத்தான். "அப்பாலே போ சாத்தானே" என்று சொல்லி இயேசு சாத்தானை வென்றார்.

அரசியல் தரப்பில் இன்று எத்தனையோ கொலைகள் நடக்கின்றன என்றால் அதற்குக் காரணம் பதவி ஆசைதான். அப்பங்களை வயிறாற உண்டபின் யூத மக்கள் இவர்தான் நம் அரசர். இவரை அரசராகப் பெற்றால், நாம் உழைக்கவேண்டிய தேவையில்லையெனக் கருதி, அவரைப் பிடித்துக் கோண்டுபோய் அரசராக்க முயன்றனர். (அரு: 6:15). அவர் அவர்களிடமிருந்து தப்பித்து எளிமையான தன் வழியே சென்று பதவி ஆசையுள்ளவரகக்குச் சாட்டையடி கொடுத்தார்.

எல்லோருக்கும் சோதனைகள் உண்டு. சில வேளைகளில் மிக நெருக்கமானவர் வழியாகவும் அவைகள் வரலாம். எருசலேமில் மூப்பர் தலைமைக் குருக்களால் கொல்லப்படவேண்டும், மூன்றாம் நாள் உயிர்த்தெழவேண்டும். இதுவே தம் இலச்சியப்பாதையில் நிகழ்வென என்றார் இயேசு. இராயப்பர் இது உமக்கு நேராது, நடக்கவும் விடமாட்டேன் என்றார். நெருக்கமானவராயினும், தடையைப் படியாக மாற்றும் பொருட்டு, "பின்னாலே போ சாத்தானே" என்று சொல்லி தன் சோதனையை வென்றார்.

இயேசு பெண்ணாசையை வென்றவர். சதுசேயர்களுக்கு உயிர்ப்பில் நம்பிக்கை கிடையாது. லவிட் திருமணத்தின்படி, கணவன் பிள்ளையின்றி இருந்தால், அவரின் சகோதரன் அவளை மணந்து, அவளுக்கு பிள்ளையைப் பிறக்கச் செய்யவேண்டும். இந்த முறைப்படி ஏழு சசோதரர்கள் ஒருத்தியை மணந்தனர். இறந்தனர். விண்ணகத்தில் அவள் எவருக்கு மனைவியாய் இருப்பாளென்று கேட்டனர். இயேசு விண்ணக வாழ்வை வாழ்கின்றவர். பெண் கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. (மத்:22:23-33) விண்ணக வாழ்வை மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், பெண்ணாசை கொள்வதில்லையென உறுதிபடக் கூறினார்.

இயேசு பாவத்தையும் வென்றவரென புனித சின்னப்பர் விபரிக்கின்றார். அவர் பாவம் தவிர மற்றதனைத்திலும் நம்மைப்போல வாழ்ந்தார் என்றார். (எபி:4:15). கிறிஸ்துவும் மக்களுக்குச் சவால் விட்டார். "என்னிடத்தில் பாவமுண்டென உங்களுக்கு யார் எண்பிக்கக்கூடும்" என்றார். (அரு:8:46) மேலும் தன் குற்றமற்ற தன்மையை வெளியிடுகின்றார். "நான் எப்பொழுதும் வெளிப்படையாகப் பேசினேன். நான் பேசியது தவறானால், எது எனச் சுட்டிக்காட்டு: இல்லையேல் ஏன் என்னை அடிக்கிறாய்" (அரு:18:23) எனக்கேட்டார். இவ்வாறு தாம் குற்றமற்றவரென இயேசு தெளிவாகப் பேசினார்.

பசாசையும் வென்றவர் இயேசு. கெரசேனர் நாட்டில் கல்லறையினின்று வெளியேறிய ஒருவன், எவருக்கும் அடங்காதவனாய் கட்டிய சங்கிலியை உடைத்தெறிந்து கொண்டிருந்தான். அவன் பெயர் படை. ஏனெனில் ஏராளமான பேய்கள் அவனுக்குள் புகுந்திருந்தன. இவ்வளவு பேய்களும் அவனகத்தே இருந்து கொண்டிருந்து, இயேசுவின் பெயருக்கு அஞ்சி அவர் காலடியில் வந்து வீழ்ந்து, "எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்" என்று எதிர்த்தன. பின் தங்களைப் பன்றிக்குள் அனுப்புமாறு வேண்டின. அவை கட்டளையிடவே அவைகள் பன்றிக்குள் புகுந்தன. கடலுக்குள் மாய்ந்து கிடந்தன. (மாற்: 5:1-20)

இயேசு சாவை வென்றவர். இலாசர் இறந்து நான்கு நாட்களாகி விட்டது. அவருக்காக மார்த்தாளும் மரியாளும் கண்ணீர் உகுத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். இயேசுவுக்குச் செய்தி சொல்லப்படுகிறது. அவரும் உடனே அங்கு வந்து, "இலாசரே! வெளியே வா" என்றார். இலாசர் கல்லறையினின்று வெளியே வந்தார். இலாசர் உயிர் பெற்ற நிகழ்வு சாவின்மீது இயேசு கொண்டிருந்த அதிகாரத்தை அறிவித்தது.

இதைவிட இயேசு மேலாக இயேசு தம் மரணத்தை வென்றார். இயேசுவின் உடலை நிக்கோதேமுவின் கல்லறையில் அடக்கம் செய்தனர். கல்லறைக்கு முத்திரையிட்டனர். காவலரை நிறுத்தினர். ஆனால் மூன்றாம் நாள் நில நடுக்கம் ஏற்படடது. கல்லறையின் வாயில் திறக்கப்பட்டது. இயேசு உயிருடன் வெளியே வந்தார். வெளியே வந்த இயேசு தம் சாவையே வெற்றி கொண்டவரென உலகிற்கு அறிவித்தார்.

இயேசு என்னும் பெயருக்குள் அடங்கியிருக்கும் பொருள் ஏராளமெனக் கண்டோம். இப்பெயர் அருள்நிறை செபத்திலும் வருகிறது. இன்று செபமென்று பல பெயர்களைச் சொல்லுகிறார்கள். அதற்கு எண்ணற்ற பலன்களையும் இணைக்கிறார்கள். ஆனால் வானத்திலிருந்து வந்த இப்பெயரைச் சொன்னாலே நாம் எண்ணற்ற பலன்களையடைந்து அகிலத்தை வெல்ல முடியுமன்றோ? எனவே செபமாலையை பொருளுணர்ந்து மனம் பொருந்தி சொல்வோமெனில், அத்தனை பலன்களும் நம்மை வந்தடையும்.
           இயேசு என்னும் பெயரைச் சொல்லி மீட்படைபோம்.

 
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா! இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா!!