வாழ்க!
வாழ்க என்பது மரியாதைக்குரிய சொல். காலை அல்ல மாலை பொதுவான
வணக்கத்தைக் குறிக்கிறது. இதற்கு இணையான எபிரேயச் சொல் " சலோம்" . இதையே அராபிய
மொழியில் சலாம் என முகமதிய நண்பர்கள் சொல்வர். எபிரேயர் ஒருவர் மற்றொருவரை
முதன்முதல் சந்திக்கும் பொழுதும், அவரிடமிருந்து விடைபெற்றுச் செல்லும்
பொழுதும் இதைப் பயன்படுத்துவர். இல்லத்திலும் பணித்தளங்களிலும், வழிபாட்டுத்
தலங்களிலும், தெருவிலும் எங்கு சந்தித்தாலும் " சலோம்" என்றே, எபிரேயர் வாழ்த்தி
வரவேற்று வழியனுப்பி வைப்பர். நம்முடைய பண்பாட்டிலே வணங்கவும், வாழ்த்தவும்,
பாராட்டவும், ஆசீர்கூறவும், ஆசீர்வதிக்கவும் பல சொற்தொடர்கள் உள்ளன. வணக்கம்,
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நீடுழி வாழ்க, பதினாறும் பெற்றுப் பல்லாண்டு
வாழ்க, இன்றுபோல் என்றும் வாழ்க, வாழ்க வளமுடன், நீ உடல் உள்ள சுகத்துடன்
பாதுகாப்பாக இருப்பாயாக, இறைவன் உன்னை ஆசீர்வதிப்பாராக இத்தனையும் உள்ளடக்கியதே
" சலோம்" .
இதை நன்கறிய எபிரேயர் சலோம் கூறும் முறையை உற்று நோக்குவோம். நீங்கள் இஸ்ராயேல்
மக்களுக்கு ஆசி கூறுவேண்டிய முறை. ஆண்டவர் உனக்கு ஆசீர் வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திரு முகத்தை உன்மேல் ஒளிரச் செய்து, உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திரு முகத்தை உன்பக்கம் திருப்பி, உனக்கு அமைதி (சலோம்) அருள்வாராக!
(எண்: 6:23-26) இவ்வண்ணம் வாழ்த்துவதிலே ஆசீரும், ஆசீரிலே வாழ்த்துதலும்
அடங்கி உள்ளது. எனவே சலோம் சொல்லும்போது வாழ்துகின்றார்கள் அல்லது ஆசீர்
கூறுகின்றார்கள்.
சலோம் என்று ஆசீர் கூறப்படும் பொழுதும், பலவிதமான வானக நலன்கள் அருளப்படுகின்றன.
இறுதியில் சலோம் இறைவாக்கினரால் வாக்களிக்கப்பட்ட மெசியாவையே வழங்குகின்றது.
அவர் இறுதிக்காலத்தின் நிலையான, நிறைவான சமாதானத்தை நிறுவுகின்றார். (ஓசே: 2:20 -
ஆமோஸ்: 9:13) இச் செயலால் அமைதியின் இளவரசர் என்று அழைக்கப்படுகின்றார். அவரே
மெசியா. ஆதலால் முடிவில்லாத சமாதானத்தைக் கொடையாக அளிக்கின்றார். இசை: 9:5-6).
உலகின் இறுதி எல்லை வரை மக்களை அச்சமின்றி வாழ வழி வகுக்கின்றார். அவரே
சமாதானத்தின் ஊற்றாக விளங்குகின்றார். (மிக்::5:4
- எபே:2:14). அவைகளுக்குள்
அமைதி குடி கொள்ளச் செய்கிறார் (இசை:2:2 -11:1 32:15-20)0 தன்னுடைய
துன்பத்தையே ஒரு கருவியாகப் பயன்படுத்தி சமாதானம் செய்கிறார். (ஆதி:53:5-57:9).
அமைதியை ஆற்றுப் பெருக்குப்போல ஓடச் செய்கின்றார். (இசை:66:19 -42:18). அவரே
அமைதியின் நற்செய்தியானார் (நாகூம் :1:15).
இந்த நற்செய்தியே கன்னிமரியாவுக்கு அறிவிக்கப்படுகிறது. அருள் நிறைந்தவளே வாழ்க!
என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்க என மரியா வாழ்த்தப்படுவதற்குச் சரியான
காரணம் இல்லாமல் இல்லை. ஒருவரிடம் உதவி கேட்டுச் செல்லும் பொழுது, அவருக்கு
பிரியமுடன் நடந்து கொள்வதுதான் மரபு. முதன் முதலில் செலுத்தவேண்டிய வணக்கம்
அவருக்கு விருப்பமான முறையில் அமைந்திருக்கவேண்டும். இங்கு இறைவன் தாம்
தேர்ந்தெடுத்த மக்களின் மீட்புக்காக சுதந்திரப் படைப்பான மரியாவிடம் சலுகை பெற
வருகின்றார். அவர் ஆம் என்றோ, அல்லது இல்லை என்றோ பதிலளித்திருக்கலாம். ஆம் என்ற
பதிலையே வடிவமைக்கின்ற சரியான வாழ்த்துரையை தேர்ந்து,
தெரிந்து
பயன்படுத்தியுள்ளார்
வானதூதர்.
இதுபோன்ற வாழ்த்து ஒன்று ஆபிரகாமுக்குக் கூறப்பட்டது (ஆதி:17:1). வாரிசே இல்லை
என்ற அவருக்கு வாக்குறுதியின் மகன் பிறந்தார். மோயீசனுக்கு முட்புதரில் தோன்றி
அழைப்பு விடுத்தார். இஸ்ராயேலின் மீட்புப் பணிக்கு தலைமை தாங்கும் பேறு பெற்றவர்
(யாத்:3:2). கிதெயோனுக்கு தோன்றி அவரை வாழ்த்தினார். அவர்தம் மக்களுக்கு
வரவிருந்த மாபெரும் இடர் நீக்கும் கருவியானார். (நீதி 13:3). சக்கரியாவை
வழிபாட்டில் சந்தித்து ஆசிர் அருளினார். இயேசுவின் முன்னோடியான ஸ்நாபக அருளப்பர்
தோன்றினார். (லூக்:1:11). வாழ்த்துரையைப் பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரத்தைப்
பெறுகின்றனர்.
ஆனால் மரியா மட்டும் வாழ்த்துரையைப் பெற்றதனால் சலுகை அடையவில்லை. ஏனெனில் அவர்
ஏற்கனவே அருளைப் பெற்றுவிட்டார். ஆண்டவர் உம்முடனே ஆகையால் வானதூதர் கபிரியல்
வாழ்கவென வாழ்த்தி தனக்கு சலுகையைத் தேடிக் கொண்டார். மாபெரும்
மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை ஏற்க வைத்தோம், அவருடைய இசைவைப் பெற்றோம் எனப் பெருமிதம் கொண்டார்.
ஆவியானவரும் அவரை வாழ்த்தினார். தம் ஆற்றலை உலகிற்குப் பறை சாற்ற தகுதியான
கருவியாகும் சம்மதத்தைப் பெற்றார். தந்தையாகிய இறைவன் பாசம் பொங்கப் பாராட்டினார்.
அவரது அன்பின் அன்பின் மீட்பை அகிலம் அனுபவிக்கச் செய்ய, எப்பொழுதும் துணை
நிற்பதற்கான வாக்குறுதியைப் பெற்றார்.
இன்னும் பாலன் இயேசு பிறந்ததும் வானதூதர் தாயையும் குழந்தையையும் வணங்கி
வாழ்த்தினர். வரங்கள் பல பெற்றனர். இடையர்களும் வானதூதர்களும் வணங்குகின்ற
குழந்தையைப் பெற்ற தாயைப் போற்றினர். இதில் அவர்களது நன்மனது வெளிப்பட்டது. அதற்குப் பரிசாக தம் தயவைக் காட்டி மீட்பை இறைவன் உறுதிப்படுத்தினார். சிமியோன்
குழந்தையைக் சையில் ஏந்தி அதைப் பெற்றெடுத்த தாயை வியந்து பாராட்டினார்.
வழிவழியாக எதிர்பார்த்திருந்த மீட்பைக் கண்டு அக்களித்தார். " என்னை அமைதியாகப்
போகவிடும்" என மெய்மறந்து பாடினார். (லூக்:2:39,32) " உம்மைப் பெற்று
பாலூட்டி
வளர்த்த தாய் பேறுடையாள்" என்றார் ஒரு பெண்மணி. அவள் அதனினும் பேறுடையாள் என
அறிவிக்கப்பட்டார். (லூக்:11:2728)
இது போன்று அன்னையை " வாழ்க" என்று வாழ்த்திய யாவரும் ஏதாவது ஒரு வரத்தைப்
பெற்றிருக்கின்றனர். ஏனெனில் அன்னையைப் புகழ்கின்றவர், ஆண்டவர் இயேசுவையே
புகழ்கின்றனர். மனு உருவான வார்த்தைக்கு உடல் கொடுத்ததால், இறைமகன் இயேசுவுக்கே
தாயானார். இரண்டாம் ஆளாகிய இறைசுதனுக்கு தாயாகி, இறைவனுக்கே தாயானார். எனவே நாம்
இறைவனையே புகழ்கின்றோம். செபமாலையில் அன்னையைப் புகழ்ந்து ஆண்டவர்க்கு
புகழுரைப்பவர்க்கு என்ன கைமாறு என அறிவுறுத்தப்படுகின்றது.
எனவே வாழ்த்து அல்லது சமாதானம் ஒரு பாரம்பரியம். இப் பாரம்பரியத்தை இஸ்ராயேல்
சமுதாய, சமய, அரசியல் கலாச்சாரம் போற்றி வளர்த்திருக்கின்றது. இப்பழக்கத்தை
முழுமையாக ஏற்றுக் கொண்டாள் கன்னிமரியா. இதன் விளைவாக இப்பாரம்பரியம்
முழுப்பொருள் பெறுகின்றது. அவர் அதை தமக்குரிய தனிப்பாங்கில் பயன்படுத்தியுள்ளார்.
தமக்கு மட்டுமன்று தம்மைப்போன்ற மற்ற மனிதருக்கும் பயனளிக்கும் விதத்தில்
அதற்கு புதுப்பொலிவுட்டினார்.
தம் உறவினளான எலிசபேத் கருவுற்றிருக்கின்றாள் என அறிந்தார். விரைவிலேயே அவரது
இல்லம் சென்று அவரை வாழ்த்துகின்றார். (லூக்: 1:40) இறைமகனின் தாயென்று மிக
உயர்ந்த பதவியில் நிறுத்தப்பட்ட வேளையில், மாமரி வாழ்த்துகின்றார். உயர்நிலையில்
இருந்து அடிமட்டத்தில் இருப்பவர்களை வாழ்த்துவது பாராட்டுக்குரியது. அவரது
வாழ்த்து எலிசபேத்தையும், அவரது குழந்தையையும் பரிசுத்த ஆவியால் நிரப்புகிறது (லூக:
1:41) எனவே அன்னையின் அன்பின் வெளிப்பாடான வாழ்த்து, ஓர்அருள் அடையாளமானது.
அருள் வடிவான அவருடைய சொல்லும், செயலுமே அருள் அடையாளமானது. அவர் கூறும்
சமாதானம், அருளை அள்ளிக் கொடுத்தது.
உதாரணமாக உதிரப்பெருக்கினால் 12 ஆண்டாக உருக்குலைந்து போன பெண் இயேசுவின்
ஆடையின் விளிம்பைத் தொட்டாள். " மகளே உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று,
சமாதானமாய்ப் போ" (மாற்:5:34) என்று வாழ்த்தி இயேசு அவளை நலமுடன் வாழ
வைக்கின்றார். தொடர்ந்து அவருடைய பாதங்களைக் தன் கண்ணீரால் கழுவி, கூந்தலால்
துடைத்த பெண்ணிடம், உன் விசுவாசம் உன்னை மீட்டது, சமாதானமாய்ப் போ" (லூக்:
7:50) என்றார். பாதங்களைக் கழுவியவளின் பாவங்களை கழுவி புதிய படைப்பாக்கியுள்ளார்.
சமாதானமெனும் வாழ்த்து, அருள் வழங்கும் அருட்சாதனமாக உயர்ந்தது.
இந்த அருள் செறிந்த வார்த்தையைக் கொண்டு, அப்போஸ்தலரை வாழ்த்தினார். உயிர்த்த
பின், தாம் அவர்களுக்கு தோன்றியபோதெல்லாம், " உங்களுக்கு சமாதானம்" என்று
ஆசீரளித்தார். (அரு:20:21
- லூக்:24:26 - மத்:28:9). இதே சமாதானத்தை உச்சரிதே,
மீட்பெனும் மாபெரும் கொடையைப் பெறச் செய்தார். இதே சமாதானத்தை தம் நினைவுப்
பரிசாக அப்போஸ்தலரிடம் விட்டுச் சென்றார். " சமாதானத்தை உங்களுக்கு விட்டுச்
செல்கிறேன், என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்கு
அளிக்கும் சமாதானமோ, உலகம் தரும் சமாதானம் போல் அன்று" என்றார். (அரு:14:27).
இதே சமாதானத்தை பாஸ்கு திரு நிகழ்ச்சிக்குமுன், அப்போஸ்தலர் செல்லும் இடமெல்லாம்
அறிவிக்கக் கட்டளையிட்டார். நீங்கள் எந்த வீட்டுக்குப் போனாலும், முதலில்
இவ்வீட்டுக்கு சமாதானம் என்று வாழ்த்துங்கள். சமாதானத்குரியவர் அங்கிருந்தால்,
உங்கள் சமாதானம் அவனிடம் தங்கும். இல்லையேல் அது உங்களிடம் திரும்பி
வந்துவிடும். (லூக்:10:5-6 மத்:10:12) எனவே, சமாதானம் தங்குவதும், தங்காததும்,
அதைப் பெறுபவருடைய தகுதியிலேயே அடங்கியுள்ளது.
இந்தத் தகுதியை எதுவென நாம் அறியவேண்டும். தாயும் தனையனும்
எவ்வளவு
இணைந்துள்ளார்கள் என்றால், தாய்க்குப் பாடும் தாலாட்டு தனையனையே சென்றடைகின்றது.
ஆண்டவரைப் புகழ்வதே, அருளடையும் வழி. (சங்:46:1-7). ஆனால் இவ் வாழ்த்து
மந்திரவாதியின் மந்திரம் போல, பல விந்தைகளைப் புரிவதில்லை. ஏனெனில் என்னை
நோக்கி "ஆண்டவரே ஆண்டவரே" எனச் சொல்பவன் எல்லாம், விண்ணரசு சேரமாட்டான்.
வானகதிலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான். (மத்:7:22) எனப்
பொழிந்துள்ளார் இயேசு.
திருவுளம் என இறைவாக்குகளும் திருச்சட்டமும் உரைப்பது இதுவே. பிறர் உங்களுக்கு
செய்ய வேண்டுமென விரும்புகின்றவற்றை, நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள். (மத்:7:12).
அயலவருக்கு நான் செய்வதெல்லாம் அவர்கள் நமக்கு செய்வார்கள். பிறரை நாம்திட்டினால், வஞ்சித்தால், ஏமாற்றினால் அவர்களும் அவற்றை நமக்குச் செய்வர். பதிலாக, அவர்களை
மதித்து மனமுவந்து வாழ்த்தினால், அவர்களும் நம்மை வாழ்த்திப் பாராட்டுவர்.
இதனால்தான் " வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்"
என்று சொல்லுகிறோம். இக்கண்ணோட்டத்தில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளே அவர்களுக்கு
தீர்ப்பாய் அமையும்.
இதை முற்றிலும் உணர்ந்த மரியாள் மக்களுக்கு மாதிரி காட்டியுள்ளார்.
துவக்கத்தில் குறிப்பிட்டது போல, அவரே முதலில் எலிசபேத்தை வாழ்த்தினார் (லூக்1:40). இந்நற்செய்தியை கானாவூர் திருமணவிழாவிலும் பார்க்கிறோம். அவரே முன் முயற்சி
எடுத்து தம்பதியரை ஆசீர்வதிக்கிறார். அங்கு இறைமாட்சியின் ஆசீர் பொங்கி
வழிந்தது.
வாழ்த்து பாரம்பரியங்களை? நன்கு ஆய்ந்து அறிந்து போதித்தவர் புனித
சின்னப்பர். முதலில் போதிப்பவறையே அவர் பின்பற்றுகிறார். நம் தந்தையாகிய
கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசுக் கிறீஸ்துவிடமிருந்தும், அருளும்
சமாதானமும் உண்டாகுக.(1கொரி:1:3). தொடர்ந்து ஒன்றுபட்டு வாழுங்கள். சமாதானமாய்
இருங்கள். அப்போது அன்புக்கும், சமாதானத்துக்கும் ஊற்றாகிய கடவுள் உங்களோடு
இருப்பார்.(2கொரி:13:11). இவ்வாறு தொடர்பு கொள்ளும் பொழுதெல்லாம், மக்களை
வாழ்த்தி மாதிரி காட்டியுள்ளார். பாரம்பரியத்திலும் புகுத்துகின்றார். தனது
பழக்கத்தைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை வழங்குகிறார். பரிசுத்த முத்தம்
கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். (1கொரி:16:20, 2கொரி:13:12, றோமர்:16:14)
என அன்புடனும் பாசத்துடனும் பணிக்கிறார்.
இவ்வாறு ஆண்டவருக்கு செலுத்தும் நன்றியும், நம் வாழ்த்துக்கூறும் வாழ்வும்,
பிறருக்கு வாழ்த்துக் கூறி அருள்பெற்றுக் கொடுக்கும்போது, நாம் அருள் அடையாளமாக
மாறுகிறோம். அவர்களும் பதிலுக்கு வாழ்த்துச் சொல்லி நம்மை அருள் பெறச்
செய்யும்போது, மிகச் சிறந்த ஒரு பரிமாற்றம் ஏற்படுகின்றது. இப்பரிமாற்றம்
செபமாலையில் வாழ்கவென அன்னை வழியாக, ஆண்டவரை வாழ்த்தும்போது நிகழ்கிறது. ஒருவர்
ஒருவருக்கு அருள் கொடுத்து ஒன்றிணையும் தருணத்தில் இறைவன் நம்மில்
சங்கமிக்கிறார். அப்பொழுது ஆண்டவர் உம்முடனே என்ற அடுத்த வாழ்த்து உதிக்கின்றது.