மனிதரிடம் உள்ளதெல்லாம் கடவுளிடமிருந்து பெற்றதே.(1கொரி:4:7)
அவருடைய நிறைவிலிருந்தே
நாம்அருளைப் பெற்றுள்ளோம். (அரு: 1:17)
இதுவே ஆதித்திருச்சபையின் நம்பிக்கை. கிறிஸ்துவே
நிறைவான அருள். அந்த நிறைவான அருளை கன்னிமரியா கருத்தாங்கியுள்ளார்.
எனவே மரியாவும் நிறையருள் பெற்றவரே என4ம்இ 5ம் நூற்றாண்டு
விசுவாசிகள் நம்பினர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் உதித்தது,
உல்கத்தா லத்தீன் மொழி பெயர்ப்பு. இதைச் செய்தவர் புனித எரோணிமுஸ்.
அவர் தம் சமகாலத் திருச்சபையை மனதில் கொண்டு (கிராத்சியா பிளேனா) என்ற
இலத்தீன் சொற்களுக்கு "அருள் நிறைந்தவளே" என்று பொருள்
கொடுத்தார். எனவே நாம் மரியாவை அருள் நிறைந்தவளே என்று அழைக்கலாம்.
அருள் என்பது தமிழ் இலக்கியத்தில் அன்பின் கனியென அழைக்கப்படுகின்றது.
பெற்றெடுக்கும் பிள்ளை, கணவன் மனைவியின் அன்பினில் விழைந்தகனி.
அன்பென்னும் விதை முளைத்து வளர்ந்து செடியாகி, மரமாகி
பூத்துக்காய்த்துக் குழைந்தையாகக் கனிகிறது. முதற்கனிகள் எவ்வாறு
கடவுளின் கொடையோ, அதுபோல் குழந்தைகள் அருட்கனிகள். அன்பினில் விழைந்த
சேவைகளும் அருட்கனிகளாகவே கருதப்படுகின்றன.
அருள் ஆங்கில அகராதியில் மகிழ்வு, இன்பம், யோகம், நன்மை என்று
பொருள்படுகின்றது. (ஆதி:6:8, யாத்:33:12, எரே:31:2)
ஆபிரகாம், மோயீசன், தாவீது, சாலமோன், இசையாஸ்
முதலானவர்கள் இறைவனின் தயவு அல்லது அருள் பெற்றவர்கள். இவர்களிடம்
நீதிமானுக்குரிய பண்புகள் காணப்படுகின்றன. (மத்1:9). இவர்கள்
பிரமாணிக்கம் (பழ:3:4), தாழ்ச்சி (3:34), (யாக:4:6), நல்லறிவு, ஞானம் (பழ:13:15)
ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டவர்கள். இந்த
வரிசையில் இவர்களைவிட மேலான வரங்களைப் பெற்றவராக வருபவர் மரியா.
அவர்தாமே இறைவனினின் தயவைப் பெற்றவராகப் பாடுகிறார். (லூக்:1:46).
மோயீசனுக்குப்பின் யோசுவாவையும்,
சவுலுக்குப்பின் தாவீதையும், எலியாசுக்குப்பின் எலிசேயுவையும் இன்னும்
பல்வேறு இறைவாக்கினர்களையும் அனுப்பக்காரணமாய் இருந்தது, இறைவனின்
இரக்கமே. மக்களைக் காப்பாற்றுவதும்
இறைவனின் பிரமாணிக்கமுள்ள எல்லையில்லா இரக்கத்தின் பொருட்டே. இதே
பிரமாணிக்கத்தின் பின்னணியிலேயே இறைவன் மரியாவையும் தெரிவு செய்தார்.
மரியாவை இறைவன் தெரிவு செய்த விதத்தை பழமொழி
விபரிக்கின்றது: ஆண்டவர் தம் வழிகளின்
தொடக்கத்திலேயே, ஆதியில் எதையும் படைக்குமுன்னரே, என்னை உரிமை
கொண்டிருந்தார். ஆதியில் பூமி உண்டாகுமுன்னமே நித்தியந் தொட்டு நான்
ஏற்படுத்தப்பட்டிருக்கின்றேன்... நானே குன்றுகளுக்கு முன்னமே
பிறப்பிக்கப்பட்டிருந்தேன் (பழ:8:22-23,26). இவ்வாறு மரியா தெரிவு
செய்யப்பட்ட காரணத்தினால் அவர்முன் குறித்து வைக்கப்பட்டார்.
தகுதியுடைய மரியாவை அழைக்க, இறைவன் திருவுளம்
கொண்டார். திட்டமிட்டபடி அவரை அழைத்தார். காலம் நிறைவேறிய போது, கடவுள்
தம் மகனை பெண்ணிடம் பிறக்கச் செய்ய, 6ம் மாதத்திலே கபிரியேல் என்னும்
வானதூதரை கலிலேயாவிலுள்ள நசரேத்து என்னும் ஊரில் இருந்த கன்னியிடம்
அனுப்பினார்... அவள் பெயர் மரியாள். அவளது இல்லம் சென்று அருள்
நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே என்றார். அஞ்சாதீர் கடவுளின் அருளை
அடைந்துள்ளீர். இதோ உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர்.
அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். (லூக்:1:26-32)
இவ்வாறு முழுவிபரத்தையும் சொல்லி தம் பணிக்கு
அழைப்பித்த அவரை, இறைவன் தம் பணிக்கு ஏற்புடையவர் ஆக்கினார். மிகுந்த
வலியுடன் அரும் பெரும் செயல்கள்பல புரிந்துள்ளார். இதனால், எல்லோரும்
பேறுடையாள் என்று போற்றுமளவுக்கு உயர்வு பெற்று இறைமாட்சியில் பங்கு
பெறச் செய்தார்.
மரியாவுக்கு கிடைத்த இந்தமாட்சியைக் காட்சியில்
கண்ட புனித அருளப்பர் படம் பிடித்துக் காட்டுகிறார்.
விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது.
பெண்ணொருத்தி காணக காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்.
நிலவின்மேல் நின்றுகொண்டிருந்தாள். பன்னிரு விண்மீன்களை முடியாகச்
சூடியிருந்தாள். (தி.வெ: 12:1)
தந்தையின் மாட்சியில் ஆட்சி செய்யும் இயேசுவைப்போல் மரியாவும்,
விண்ணரசியாக முடி சூட்டப்பட்டு அரியணையில் அமர்த்தப்பட்டார். அவருடைய
பரிந்துரைக்கு அளவுக்கு அதிக பலனுண்டு. உமது மன்றாட்டைக்கேட்ட எவரும்
உலகில் கைவிடப்பட்டதாக ஒருபோதும் சொல்லக் கேள்விப்பட்டதில்லை.
எனவே, அருள் நிறைந்தவளே! என்று ஒவ்வொருமுறையும்
அழைக்கும்பொழுதும், நாம் இறைவனின்
ஆசீரைப் பெறுகின்றோம். எவ்வாறெனில், நாம்
அவரது திருமுன் பரிசுத்தரும், மாசற்றவருமாய் இருக்குமாறு உலகம்
உருவாகுமுன்னரே, அவர் நம்மை கிறீஸ்துவுக்குள் தெரிந்து கொண்டார். அவர்
தம் திருவுள விருப்பத்திற்பேற்ப தம் அன்பு மகனுக்குள் நமக்கருளிய
அருளின் மாட்சிமை புகழ் பெற்று விளங்க, இயேசுக்கிறீஸ்துவின் வழயாகவே
நம்மை தம் பிள்ளைகளாக்கிக் கொள்ள, அன்பினால் நம்மை முன்குறித்து
வைத்தார். அந்த அன்பு மகனாலே... இறைவனின் அருள் வளத்திற்கேற்ப நாம்
மீட்படைகின்றோம்.
இந்த அருளில் நாளுக்கு நாள் கிறீஸ்துவுடன் நெருங்கி வளருகிறோம்.
இயேசுக்கிறீஸ்துவின் அருளிலும் அவரை அறியச் செய்யும் அறிவிலும்
முதிர்ச்சியடைகிறோம். (உரோ:3:18) ஓர் அருளிலிருந்து மற்றொரு அருளுக்கு
படிப்படியாக அடியெடுத்து வைக்கின்றோம். உடலிலும் உள்ளத்திலும் மனிதன்
வளர்வதுபோன்று ஆன்மீகத்திலும் நாளுக்கு நாள் வளர்கின்றான்.
இன்றைய உலகில் ஒவ்வொருவரும் சொல்லமுடியாத
வேதனையால் துன்புறலாம். அன்னையுடன் இணைந்திருப்பவனுக்கு
ஆண்டவர் வாக்குறுதி அளிக்கின்றார். "நான் தரும்
அருள் உனக்குப் போதும்" (2கொரி:12:9) இதையே அன்னை உச்சரித்து நமக்கு
ஊக்கமும் உறுதியும் ஊட்டுகின்றார்.
எனவே, அன்னையின் அனபிலும், இரக்கத்திலும்,
வேண்டுதலிலும் நம்பிக்கை கொண்டு "அருள் நிறைந்தவளே" என்றழைத்துக்கொண்டு
அவரை அணுகிச் செல்வோமெனில், அவர் நம்மை
இரக்கத்தின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்வார். "தக்க வேளையில்
உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், இரக்கத்தைப் பெறவும், இறையருளின்
அரியணையை அணுகிச் செல்லவும் துணிவைப் பெற்றுத் தருவார்".(எபி:4:16)
அன்னையின் பெயரை உச்சரித்துக்கொண்டு இத்தகைய
துணிவுடன் அருளின் அரியணையை அணுகிச் செல்வோமெனில்,
அவர் நம்மை எல்லா வல்லமைகளாலும் நிரப்ப வல்லவர்.
எந்தச்சூழ்நிலையிலும், எப்பொழுதும் தேவையானதெல்லாம் போதுமான அளவில்
நம்மிடம் இருக்கச் செய்வார். அத்தோடு எந்நற்செயலையும் செய்வதற்குத்
தேவையான பொருள் நம்மிடம் மிகுதியாகவே இருக்கச் செய்வார். (2கொரி:9:8)
|