• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

அன்னை மரியா வணக்கமாத வரலாறு!

  வழங்குபவர் மரியின் ஊழியர் சபையின் அருள்பணியாளர் அமல்ராஜ்  


செபமாலை வழியாக நாம் அன்னை மரியாவின் உதவியை நாடுவோம்.
(திருத்தந்தை பிரான்சிஸ்)

இறைத்திட்டத்தை நிபந்தனையற்ற தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதால், மரியாவைப் படைப்புகள் அனைத்திற்கும் மேலானவராக கடவுள் உயர்த்தியுள்ளார். இயேசு கிறிஸ்துவைக் குறித்த உண்மையைப் புரிந்துகொள்ள, நாம் மரியாவிடம் செல்வது தேவையாக இருக்கிறது. (திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்)

+++++++++++++++++++++++

🌷வணக்கமாத வரலாறு

கத்தோலிக்கத் திருஅவை, ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தை அன்னை மரியாவுக்கென சிறப்பாக அர்ப்பணித்து, செபமாலை செபித்து, அந்த அன்னையை மகிமைப்படுத்தி வருகிறது.

1. ஏன் மே மாதம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது?

கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு, மே மாதம் மிகவும் புகழ்பெற்ற வணக்க மாதம், அதாவது, தூய கன்னி மரியாளின் நினைவாக சிறப்பு பக்தி முயற்சிகள் செய்யப்படும் ஆண்டின் சிறப்புமிக்கதொரு மாதம் ஆகும். அது ஏன்? எப்படி மே மாதம் கன்னி மரியாளுக்கான சிறப்பு மிக்கதொரு மாதமாக மாறியது? எவ்வாறு, மே மாதமானது கன்னி மரியாளுடன் தொடர்புபடுத்தப்பட்டது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

பண்டைய கிரேக்க மற்றும், உரோமை கலாச்சாரத்தில் மே மாதமானது கருவுறுதல் மற்றும் வசந்த காலத்துடன் இணைக்கப்பட்ட ரோமானிய மற்றுகம் கிரேக்க தெய்வங்களான ஆர்ட்டெமிஸ் (Artemis) மற்றும் ஃப்ளோரா (Flora) போன்ற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக இருந்தது. இதுவே, பிற்காலத்தில் வசந்த காலத்தின் புதிய பருவத்தை நினைவுகூரும் பிற ஐரோப்பிய சடங்குகளுடன் இணைந்து, பல மேற்கத்திய கலாச்சாரங்களில், மே மாதத்தை புது வாழ்வு (new life) மற்றும் தாய்மையோடு (fertility) இணைத்துப் பார்க்கும் வழக்கம் தோன்றியது. எனவேதான், இன்றும் "அன்னையர் தினத்தை மே மாதத்தில் நாம் கொண்டாடுகின்றோம்.

மே மாதம் ஐரோப்பிய நாடுகளில் வசந்த காலம் அதாவது மலர்கள் பூத்துக் குலுங்கும் மாதம். இந்த வசந்த காலத்தில் மகப்பேறுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் நாம் "அன்னையர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். அதேவேளையில் பெண்களுக்குள் பேறு பெற்றவளும் இறைவனின் தாயுமான அன்னை மரியாளுக்கு இந்த மே மாதத்தை அர்ப்பணித்துச் சிறப்பிக்கவும் கிறிஸ்தவர்கள் விரும்பினார்கள்.

திருச்சபையின் ஆரம்பகாலத்தில், ஒவ்வோர் ஆண்டும் மே 15-ஆம் தேதி அன்று கன்னி மரியாவுக்கு பெரியதொரு விழா கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் 18-ஆம் நூற்றாண்டு வரை மே மாதமானது கன்னி மரியாளுடன் எந்தவொரு குறிப்பிட்ட தொடர்பையும் பெற்றிருக்கவில்லை.

கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் கூற்றுப்படி, மே மாத மரியன்னை பக்தி அதன் தற்போதைய வடிவத்தில் உரோமை நகரில் தோன்றியது. அதாவது, உரோமில் இருந்த இயேசு சபையைச் சேர்ந்த தந்தை லடோமியா (Fr.Latomia), மாணவர்களிடையே துரோகத்தையும் ஒழுக்கக்கேட்டையும் கண்டு அதற்குப் பரிகாரமாக, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மே மாதத்தை மரியாளுக்கு அர்ப்பணித்துச் செபித்திட ஒரு சபதம் செய்தார். உரோமை நகரில் இருந்துவந்த இந்த நடைமுறை, மற்ற நாடுகளில் இருந்த இயேசு சபை கல்லூரிகளுக்கும் பரவியது, பின்னர் இந்நடைமுறையானது கத்தோலிக்கத் திருச்சபை எங்கும் பரவியது எனலாம்.

மேலும், மரியாளுக்கென்று ஒரு மாதத்தை அர்ப்பணிப்பது அவரைச் சிறப்பிப்பதென்பது ஒரு புதிய பாரம்பரியம் அல்ல, ஏனெனில் Tricesimum என்று அழைக்கப்படும் மரியாளுக்கு 30 நாட்களை அர்ப்பணித்து செபிக்கும் பாரம்பரியமும் ஒரு காலத்தில் திருச்சபையின் வழக்கதில் இருந்தது என்றும், இது "Lady Month" என்று அழைக்கப்பட்டதாகவும் மரியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

இத்தகைய பாரம்பரியத்தைப் பின்பற்றியே, திருஅவையின் அனைத்து ஆலயங்களிலும் அன்னை மரியாவுக்கு மே மாதத்தில் சிறப்பு வணக்கம் செலுத்த 1815-ல் திருத்தந்தை 7-வது பத்திநாதர் அனுமதி அளித்தார்.

அவரைத் தொடர்ந்து, 1945 ஆம் ஆண்டில், திருத்தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் மே 31-ஆம் தேதி அன்னை மரியாள் என்றும் அரசி என்னும் விழாவை நிறுவி மே மாதத்தை மரியாளின் மாதமாக உறுதிப்படுத்தினார்.

இரண்டாவது வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பிறகு, இந்த விழாவானது ஆகஸ்ட் 22-க்கு மாற்றப்பட்டது, அதே நேரத்தில் மே 31-ஆம் தேதியானது மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்திக்கும் விழாவாக மாறியது.

இத்தகைய மாண்பும் மகத்துவமும் மிக்க மரியாளுக்கான மே மாதக் கொண்டாட்டமானது பாரம்பரியம் நிறைந்த ஒன்றாகும் மற்றும், நமது தாயைக் கௌரவிப்பதற்கான ஆண்டின் அழகான நேரமும் ஆகும்.

🌷2. மரியன்னை பக்தி: வரையறை மற்றும் அதன் தனிச் சிறப்புகள்

மரியன்னை பக்தி பற்றி இன்றும் பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. எனவே, இதைப் பற்றிய கத்தோலிக்கத் திருச்சபையின் படிப்பினையை நாம் தெரிந்துகொள்ள வேனண்டும்.

மரியன்னை பக்தியானது இறைவனை வழிபடுவதிலிருந்து வேறுபடுகின்றது: இதை இறையியலாளர்கள் மூன்று கிரேக்க சொல்லாடலைப் பயன்படுத்துகிறார்கள். அந்த மூன்று கிரேக்க சொல்லாடல்கள்: hyperdulia, ordinary dulia மற்றும் latria.

அதாவது, ஹைபர்தூலியா (hyperdulia) என்ற கிரேக்க சொல், மரியாளின் சிறப்பு வணக்கத்தை குறிக்கிறது, இது மற்ற புனிதர்களுக்கான சாதாரண தூலியாவை (ordinary dulia) விட பெரியது, ஆனால் முற்றிலும் கடவுளுக்கே உரித்தான லாத்ரியாவைப் (latria) போன்றதல்ல என்று திருச்சபையானது மரியன்னை வணக்கத்தை வரையறை செய்கின்றது.

இவ்வரையறையின்படி, மரியாவுக்கான விசுவாசிகளுடைய வணக்கமானது மற்ற புனிதர்களிடம் அவர்கள் கொண்ட பக்தியைவிட உயர்ந்தது என்றாலும், கடவுளுக்கு ஒதுக்கப்பட்ட ஆராதனையைவிட இது தாழ்ந்ததாகும், அதிலிருந்து இது வேறுபடுகிறது. "வணக்கம்" என்ற சொல் கடவுளைப் படைப்பாளராகவும் உலகனைத்தின் இறைவனாகவும் ஒப்புக்கொண்டு மனிதன் கடவுளுக்கு அளிக்கும் வழிபாட்டின் வடிவத்தைக் குறிக்கிறது. ஆனால், மரியன்னை வணக்கத்தில் விசுவாசிகள் மரியாவை "கடவுளின் தாய்" என்று அழைத்து, மிக உயர்ந்த கவுரவத்தை அவளுக்கு வழங்குவதை பற்றிச் சிந்திக்கும்போது, தெய்வீக நபர்களுக்கு நிகரான வணக்கத்தை அவர்கள் இன்னும் வழங்கவில்லை எனலாம். மரியன்னை வணக்கத்திற்கும் மூவொரு இறைவனுடைய ஆராதனை வழிபாட்டிற்கும் இடையில் எல்லையற்ற இடைவெளி உள்ளது. அதாவது, புனித கன்னி மரியாளை வணங்கும்பொழுது சில சமயங்களில் கடவுளுடைய வழிபாட்டில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்களை நமக்கு நினைவுபடுத்தினாலும், அது முற்றிலும் மாறுபட்ட அர்த்தத்தையும் மதிப்பையும் கொண்டுள்ளது. இவ்வாறு மரியாளுக்கான விசுவாசிகளுடைய அன்பானது கடவுளுக்கான அவர்களுடைய அன்பிலிருந்து வேறுபடுகின்றது.

அதேநேரத்தில், மரியாள் பக்திக்கும், கடவுளுக்கு வழங்கப்படும் வழிபாட்டிற்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பும் உள்ளது: உண்மையில், மரியன்னை பக்தியானது மூவொரு இறைவனுக்கான ஆராதனைக்கு வழிவகுக்கிறது என்றும், திருத்தந்தை இரண்டாவது யோவான் பவுல் அவர்கள் தனது மரியியல் சிந்தனையில் கூறுகின்றார்.

மரியன்னை பக்தியானது திருச்சபையின் தாய் மற்றும் மனிதகுலத்தின் தாயான அவளைப் பிள்ளைக்குரியதொரு அன்போடு கிறிஸ்தவ மக்கள் தங்கள் தாயாக நினைத்து, அவளுடைய பரிந்துரையை வேண்டுவதற்கும், விண்ணக மகிழ்வினுடைய நம்பிக்கையில் இப்பூவுலக வாழ்விற்குத் தேவையான செல்வங்களைப் பெறுவதற்கும் நம்பிக்கையினால் அவர்களை ஊக்குவிக்கின்றது. எனவேதான், இரண்டாவது வத்திக்கான் திருச்சங்கமானது, புனித கன்னி மரியாள் மீதான பக்தி பற்றிக் கூறுகையில், "திருச்சபையில் என்றும் இருந்துள்ள இவ்வணக்கம் உண்மையிலேயே தனிப்பட்டது; மனிதரான வாக்குக்கும் தந்தைக்கும் தூய ஆவியார்க்கும் நாம் அளிக்கும் ஆராதனையிலிருந்து உள்ளியல்பிலேயே இது வேறுபட்டது (இறைத்திட்டத்தில் திருச்சபை, எண்66) என்றுகூறி, திருச்சபையின் பிள்ளைகள் அனைவரும் இத்தூய கன்னியின் வணக்கத்தை, சிறப்பாய்ப் பொதுவழிபாட்டு வணக்கத்தைப் பெருமனத்துடன் போற்றிப் பேணிவளர்க்க வேண்டும்; பல நூற்றாண்டுகளாய்த் திருச்சபையின் ஆசிரியம் போற்றிவரும் மரியன்னை பக்தி முயற்சிகளையும் பழக்க வழக்கங்களையும் மிகவாய் மதிக்க வேண்டும் என்று அனைத்துக் கிறிஸ்தவர்களையும் அன்போடு அழைக்கின்றது. (இறைத்திட்டத்தில் திருச்சபை, எண், 67).

🌷3. மரியாள் பக்தியின் சிறப்புகள் மற்றும் புதிய கோணங்கள்.

மரியன்னை பக்தி என்றவுடன், பல நேரங்களில் நாம் செபமாலை சொல்வது, மரியன்னை திருத்தலங்களுக்கு திருயாத்திரை செல்வது மற்றும் அன்னை மரியாளின் உருவம் தாங்கிய சப்பரங்களை அலங்கரித்து அதைப் பவனியாக எடுத்துச் செல்வதை மட்டுமே வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால், இவைகள் மட்டுமே உண்மையான மரியாள் பக்தி முயற்சிகள் அல்ல. இவைகளையும் கடந்து அன்னை மரியாள் பக்தியை பயனுள்ள ஓர் ஆன்மீக செயலாக நாம் மாற்றவேண்டும் என்று அன்னையாம் திருச்சபை விரும்புகின்றது. மேலும் அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் 6-ஆம் பவுல் தன்னுடைய Maralis Cultus என்கின்ற மரியியல் போதனையில் குறிப்பிடுகின்றார்.

💥முதலாவதாக, அனைத்து கிறிஸ்தவர்களும் மரியாள் பற்றிய விவிலிய அறிவைப் பெற வேண்டும். அதாவது விவிலியத்தில் அன்னை மரியாளைப் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது, அதற்கான விளக்கங்கள் என்ன என்பதை திருச்சபைத் தந்தையர்கள் மற்றும் திருச்சபையின் ஆசிரியத்தின் துணைகொண்டு புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

💥இரண்டாவதாக, திருச்சபையின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் மரியன்னையினுடைய பெருவிழாக்கள், விழாக்கள் மற்றும் மரியாள் கோட்பாடுகள் பற்றிய வரலாறு, இறையியல் மற்றும் அதன் அர்த்தங்களைப் புரிந்துகொள்ள முயற்சிகள் எடுக்க வேண்டும்.

💥மூன்றாவதாக, திருச்சபைகளுக்கு இடையே, ஓர் இணைப்பாளராக மரியாள் செயல்பட வேண்டும் என்ற ஆர்வத்தோடு, இந்த மே மாதத்தில் அனைத்து திருச்சபைகளையும் இணைத்து அன்னை மரியாள் திருச்சபை என்னும் ஒரு குடும்பத்தின் தாயாக இருந்து அனைத்து திருச்சபைகளையும் இணைக்கின்ற ஒரு கருவியாக எவ்வாறு செயல்பட முடியும் என்கின்ற கோணத்தில் சிந்திக்க வேண்டும்.

💥நான்காவதாக, மானுடவியல் கோணத்தில் மரியாள் எவ்வாறு இன்றைக்கு உள்ள மனித சமுதாயத்திற்கு ஒருமாதிரியாக விளங்க முடியும், மரியியல் ஆன்மீகமானது எவ்வாறெல்லாம் மானுட சமுதாயத்தை வளப்படுத்த முடியும் என்கிற கோணத்தில் மரியியலை சமூகவியல், பெண்ணியம், விடுதலை ஆன்மீகமும், தலித்தியம், அரசியல் அறிவியல் மற்றும் மனித உளவியல் போன்ற மற்ற துறைகளோடு இணைத்துச் சிந்திக்க வேண்டும்.

இறைத்திட்டத்தை நிபந்தனையற்ற தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதால், மரியாவைப் படைப்புகள் அனைத்திற்கும் மேலானவராக கடவுள் உயர்த்தியுள்ளார். இயேசு கிறிஸ்துவைக் குறித்த உண்மையைப் புரிந்துகொள்ள, நாம் மரியாவிடம் செல்வது தேவையாக இருக்கிறது என்ற முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டின் வார்த்தைகளை மனத்தில்கொண்டு, மரியன்னையின் பிள்ளைகளாய், அவளுடைய சகோதர சகோதரிகளாக இயேசுவை அணுகுவோம்.

பல்வேறு பாதிப்பினால் வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் அனைவருக்கும், மரியா, நமது நம்பிக்கையாகத் திகழ்கிறார். தீய சக்திகளுக்கு எதிரான போரில் கிறிஸ்தவர்களுக்கு அவர் உதவி செய்கிறார்.

செபமாலை வழியாக நாம் அன்னையின் உதவியை நாடுவோம் என்று அறிவுறுத்தும், நமது திருத்தந்தை பிரான்சிஸ், அவர்களின் அழைப்பை ஏற்று தனித்தனியாகவோ குடும்பமாக இணைந்தோ ஒவ்வொரு நாளும் இந்த செபமாலையைச் சொல்லுவோம்.

மனித வரலாற்றில் பல இக்கட்டான நேரங்களில் நமக்குத் துணையாக இருந்து தனது மகனிடம் நமக்காகப் பரிந்து பேசி நம்மைப் பாதுகாத்த அந்த அன்னை இம்முறையும் நம்மை நிச்சயம் பாதுகாப்பார் என்கின்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு அன்னை மரியாளிடம் செபிப்போம். மரியே வாழ்க!

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்