செபமாலை அன்னை வரலாறு
செபமாலையின் அடிப்படையாக, அதில் முதலிடம்
வகிக்கும் ஜெபங்கள் கர்த்தர் கற்பித்த ஜெபமும் மங்கள
வார்த்தை ஜெபமுமே. இந்த இரண்டு ஜெபங்களும் தான்
விசுவாசிகளின் முதல் பக்தி முயற்சியாயிருந்தன. இவைதான்
அப்போஸ்தலர்கள் காலம் முதல் இன்று வரை உபயோகத்தில் இருந்தும்
வருகின்றன . இவையே விசுவாசிகளின் முதல் ஜெபம் என்று
ஐயத்திற்கு இடமின்றி கூறலாம்
ஆயினும் 1214ஆம் ஆண்டில் தான் ஜெபமாலையை இன்று நாம்
கொண்டிருக்கும் வடிவத்திலும் முறைப்படியும் தாயாகிய
திருச்சபை பெற்றுக் கொண்டது .ஆல்பிஜென்ஸ் என்ற பதிதத்தைப்
பின் சென்றவர்களையும் ,பாவங்களில் உழன்றவர்களையும் மனந்திருப்பும்
வல்லமையுள்ள கருவியாக அர்ச்.சுவாமிநாதர் தேவதாயிடமிருந்து
இதைப் பெற்று திருச்சபைக்கு அளித்தார்
(ஆல்பிஜென்ஸ் பதிதம்: நன்மைக்கொரு கடவுள் தீமைக்கொரு
கடவுள் உண்டு என்றும் , இயேசு ஒரு மனிதன் மட்டுமே என்றும்
இன்னும் பல தவறுகளைக் கொண்ட பதிதக் கொள்கை )
அர்ச் . சாமிநாதர் எவ்வாறு ஜெபமாளையைப் பெற்றுக்
கொண்டார் என்பதை முத்திப்பேறு பெற்ற ஆலன் ரோச் என்பவர்
எழுதியுள்ள ' செபமாலையின் மகிமை ' என்ற நூலில் காணலாம்
. ஆல்பிஜென்சியர் மனந்திரும்புவதர்க்கு இடையூறாக இருந்தது
மக்களின் பாவங்களே என்பதை உணர்ந்த அர்ச் சாமிநாதர் ,
தூலுஸ் என்ற பட்டணத்தினருகில் இருந்த ஒரு காட்டுக்குள்
சென்று மூன்று நாள் இரவும் பகலும் இடைவிடாது மன்றாடினார்
. அம்மூன்று நாளும் அவர் தேவ கோபத்தை அமர்த்துவதற்காக
கடின தவ முயற்சிகளைச் செய்வதும் அழுது மன்றாடுவதுமாகவே
இருந்தார் . சாட்டையால் அவர் தம்மையே எவ்வாறு அடித்துக்
கொண்டாரென்றால், அவருடைய உடல் புண்ணாகி இறுதியில் மயக்கமுற்று
விழுந்தார்
அப்போது தேவ அன்னை, மூன்று சம்மனசுக்களுடன் அவருக்குத்
தோன்றினார்கள்,
" சாமிநாதா ! எந்த ஆயுதத்தைக் கொண்டு உலகத்தைச்
சீர்திருத்த பரிசுத்த தமத்திருத்துவம் விரும்புகிறது
என்பதை அறிவாயா ? " என்று கேட்டார்கள்
அதற்கு அவர் மறுமொழியாக "ஓ என் அன்னையே ! என்னைவிட இது
உங்களுக்கே மிக நன்றாகத் தெரியும் . ஏனென்றால் உம்
திருக்குமாரனான இயேசுவுக்குப் பின் எங்கள் இரட்சணிய கருவியாய்
நீங்களல்லவா இருக்கின்றீர்கள் " என்று கூறினார்
இதற்குப் பதிலுரையாக தேவ அன்னை
"இந்த வகையான போராட்டத்தில் கபிரியேல் தூதர் கூறிய மங்கள
வார்த்தை தான் வெற்றி தரும் கருவியாக உள்ளது. புதிய ஏற்பாட்டின்
அடித்தளக் கல் அதுவே. எனவே இந்த கடினபட்ட ஆத்துமாக்களை
அணுகி அவர்களைக் கடவுள் பக்கம் திருப்ப வேண்டுமானால்,
என்னுடைய ஜெபமாலையைப் பிரசங்கி " என்று கூறினார்கள்
அர்ச் சாமிநாதர் எழுந்தார். ஆறுதல் பெற்றார். அந்தப்
பிரதேசத்தில் உள்ள மக்களை மனந்திருப்பும் ஆவலால் பற்றி
எரிந்தவராய் நேரே பட்டணத்திலுள்ள மேற்றிராசன ஆலயத்துக்குச்
சென்றார். உடனே கண்காணா தேவ தூதர்கள் மக்களைக் கூட்டுவதற்காக
ஆலய மணிகளை ஒலிக்கச் செய்தார்கள். மக்கள் திரண்டனர்.
சாமிநாதர் பிரசங்கிக்க ஆரம்பித்தார்
அவர் பிரசங்கிக்க ஆரம்பித்ததும் ஒரு பயங்கர புயற்காற்று
எழும்பியது. பூமி குலுங்கியது. கதிரவன் மங்கியது.
பெரிய இடி முழக்கமும் மின்னலும் காணப்பட்டன. எல்லாரும்
மிகவும் அஞ்சினார்கள். அவ்வாலயத்தின் ஒரு முக்கிய இடத்தில்
வைக்கப்பட்டிருந்த மாதாவின் படத்தைப் பார்த்த அம்மக்கள்
முன்னை விட அதிகம் பயந்தார்கள். மாதாவின் அந்தப் படம்
மும்முறை வான் நோக்கித் தன் கரத்தை உயர்த்தி, அவர்கள்
மனந்திருந்தி வாழ்க்கையைத் திருத்தி அமைத்து தேவ அன்னையின்
பாதுகாப்பைத் தேடாவிட்டால் அவர்களைத் தண்டிக்குமாறு
தேவ நீதியை அழைத்தது
இயற்கைக்கு மேலான இந்நிகழ்ச்சிகளின் மூலமாய் ஜெபமாலை
ஜெபமாலை என்னும் புதிய பக்தி முயற்சியைப் பரப்பவும் அதை
மிகப் பரவலாக அறியச் செய்யவும் இறைவன் சித்தங்கொண்டார்.
இறுதியில் அர்ச் சாமிநாதரின் வேண்டுதலால் புயல் அமர்ந்தது.
அவர் தம் பிரசங்கத்தைத் தொடர்ந்தார். ஜெபமலையின்
முக்கியத்துவத்தையும் பலனையும் அவர் எவ்வளவு உருக்கமுடனும்
வலிமையுடனும் விவரித்துக் கூறினாரென்றால், ஏறக்குறைய
லூயிஸ் நகர வாசிகள் அனைவரும் ஜெபமாலையை ஏற்றுக்கொண்டனர்
தங்கள் தவறான கருத்துகளை மாற்றிக் கொண்டனர் வெகு துரிதத்தில்
பட்டணத்தில் ஒரு பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. மக்கள்
கிறிஸ்தவ வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள். தங்கள் பழைய
துர்பழக்கங்களை விட்டு விட்டார்கள்
"செபமாலையின் ரகசியம் " =அர்ச்
லூயிஸ் மரிய மோன்போர்ட்
அன்னை மரியாள் தூய தோமினிக் மற்றும் வாழ்ததப்பட்ட ஆலன்
ரோச் வழியாக வாக்களித்த செபமாலையின் 15 வாக்குறுதிகள்.
1. செபமாலை செபிப்பவர்கள் எனது மக்கள். எனது ஒரே மகன்
இயேசுவின் சகோதர சகோதரிகளாயிருப்பர்.
2. செபமாலை செபித்து அதன் வழியாக நீங்கள் கேட்பதெல்லாம்
பெற்றுக் கொள்வீர்கள்.
3. செபமாலையின் மீது பக்தியுள்ள ஆன்மாக்களை உத்தரிக்கிற
நிலையில் வேதனையினின்று மீட்பேன்.
4. செபமாலையை உண்மையுடன் செபிப்பவர் இவ்வுலக
வாழ்விலும், இறக்கின்ற வேளையிலும் இறைவனின் ஒளியையும்,
அவரது திருவருளின் பெருக்கினையும் அடைவர். இறக்கும்
வேளையில் விண்ணகத்தில் தூயோர் துய்க்கும் பேரின்பத்திலும்
பங்கு பெறுவர்.
5. மறை உண்மைகளை சிந்தித்துப் பக்திப் பற்றுடன் செபமாலை
செபிப்பவன் அகால மரணத்திற்கு ஆளாக மாட்டான். இறைவன்
அவனைத் தண்டிக்க மாட்டார். அருள் நிலையில் வாழ்ந்து
விண்ணக வாழ்விற்குத் தகுதி பெறுவான்.
6. செபமாலை செபிப்பவர் தூய வாழ்விலும், நற்செயல்களிலும்
வளர்வர். செபமாலை உலகப் பற்றுதல்களிலிருந்தும், அதன்
நிலையற்ற பொருள்களிலிருந்தும் ஆன்மாவை விடுவித்து விண்ணகத்தை
நோக்கி அதனை உயர்த்துகிறது.
7.செபமாலை செபிப்போர்க்குச் சிறப்பான பாதுகாப்பையும்,
மாபெரும் அருள் வரங்களையும் வாக்களிங்கிறேன்.
8. செபமாலை நரகத்திற்க்கு எதிரான கவசம் இது தீமைகளை அழிக்கிறது.
9. செபமாலையின் மீது உண்மையான பக்தி கொண்டிருப்பவன்
திருச்சபையின் திருவருட் சாதனங்களை பெறாமல் சாகான்.
10. செபமாலை பக்தியைப் பரப்புகிறவர்கள் என்னிடமிருந்து
தங்கள் தேவைகளில் உதவி பெறுவர்.
11. செபமாலை பரப்புகிறவர்களுக்கு அவர்கள்
வாழ்நாளிலும், இறக்கும் வேளையிலும் விண்ணக நீதிமன்றம்
முழுவதும் அவர்களுக்காக பரிந்து பேச எனது இறைமகனிடமிருந்து
அனுமதி பெற்றுள்ளேன்.
12. செபமாலையை விடாமல் தொடர்ந்து செபிப்பவர்கள் சில
விசேச வரங்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.
13. செபமாலையின் வழியாக தங்களை என்னிடம் ஒப்படைக்கிறவர்கள்
அழிவுறமாட்டார்கள்.
14. என் செபமாலையின் உண்மை புதல்வர்களாய் இருப்பவர்கள்
பரலோகத்தில் மிகுந்த மகிமை அடைவார்கள்.
15. என் செபமாலை மேல் பக்தி கொண்டிருப்பது மோட்சம்
செல்வதற்க்கு ஒரு பெரிய உறுதிப்பாடாகும்.
==============================================
புகழ் மாலை
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத்
தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத்
தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்சிஷ்ட மரியாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
கன்னியர்களில் உத்தமபுனித கன்னிகையே *
புனித ஜெபமாலை அன்னையே
கபிரியேல் தூதரால் அருள் நிறைந்த மரியே என்று வாழ்த்தி
வணங்கப்பட்ட ஜெபமாலை அன்னையே
இறைவனுடைய அன்னை என்று எலிசபெத்தம்மாளால் புகழ்ந்து அழைக்கப்பட்ட
ஜெபமாலை அன்னையே
ஜெபமாலைத் தியானத்தினால் உம்மைப் போற்றுவது நலமென்று
மறைநூல் அறிஞரான புனித பெனவெந்தூரால் அறிவிக்கப்பட்ட
செபமாலை அன்னையே
இந்த உத்தம ஜெபத்தால் எல்லாரும் எல்லா நன்மைகளையும்
உமது வழியாய் அடையாளம் என்று அவரால் அறிவிக்கப்பட்ட ஜெபமாலை
அன்னையே
விண்ணுலகில் உள்ள தூதருக்கு இத்துதி மிகவும் உவப்பானதாய்
இருக்கத் தகுதியுள்ள ஜெபமாலை அன்னையே
இறைச்சந்நிதிக்கு மிகவும் உகந்ததும் சிறப்பான பேறுள்ளதுமான
தியானத்தைக் கொண்ட ஜெபமாலை அன்னையே
தாவீது மன்னர் பத்து நரம்புள்ள வீணையால் இறைவனை
வாழ்த்தியது போல ஜெபமாலை என்னும் தூய கருவியால் துதிக்கப்படுகின்ற
ஜெபமாலை அன்னையே
இஸ்ரயேல் மைந்தர் 150 இராகமுள்ளதாய் அமைத்த ஓர் இசைக்கருவி
செபமாலைக்கு அடையாளம் என மறை வல்லுனரால் அறிவிக்கப்பட்ட
ஜெபமாலை அன்னையே
இந்த 150 இராகங்களும் ஜெபமாலையின் 150 மணிகளுக்கு ஒப்பானவை
என்பதால் மகிமை பெற்ற செபமாலை அன்னையே
பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் கேடயமாக கைக்கொள்ளும்படி
அருளப்பட்ட ஜெபமாலை அன்னையே
இதன் பக்தியைக் கொண்டிருப்பவர்களுக்கு ஞான ஒளியாய் விளங்குகிற
செபமாலை அன்னையே
செபமாலைப் பக்தியாய் இருந்த உமது தாசரைக் காப்பாற்ற பகைவரைத்
தோற்கடித்த செபமாலை அன்னையே
ஜெபமாலை பக்தியை அறிக்கையிடும்படி புனித தோமினிக்கு என்ற
சாமி நாதருக்குக் கட்டளையிட்ட ஜெபமாலை அன்னையே
ஜெபமாலையை எப்போதும் பக்தியுடன் செபித்தவர்களுக்கு எண்ணிலடங்கா
புதுமைகளைச் செய்தருளிய செபமாலை அன்னையே
பக்தியோடு செபமாலையைத் தியானிப்போருக்கு நிரம்ப அருள்பாலிக்கும்
செபமாலை அன்னையே
செபமாலைத் தியானத்தை முழுப் பக்தியோடு செய்தல் விண்ணுலக
பாதைக்கு ஓர் ஏணி என்று காண்பித்தருளிய செபமாலை அன்னையே
இறைத் திருவுரைப்படி இடைவிடாது செபிப்பதற்கு இது ஓர்
உன்னத வழியாய் விளங்கச் செய்த செபமாலை அன்னையே
துறவியர் எப்போதும் இச்செபத்தினால் உம்மைத் துதிப்பதினால்
உமது ஆதரவை அடையச் செய்கிற செபமாலை அன்னையே
குடும்பங்களில் அன்றாடம் செபமாலை செய்து உம்மை மன்றாடுவோர்
தங்கள் நிலமைக்கு ஏற்ற பலன்களைப் பெறச் செய்தருளும் செபமாலை
அன்னையே
மெய்யான செபத்தியானங்களுடைய ஒளியாகிய செபமாலை அன்னையே
விசுவாசிகளுக்குப் பாங்கான நல் வழியாகிய ஜெபமாலை அன்னையே
எல்லா நன்மைகளுக்கும் ஊற்றாகிய செபமாலை அன்னையே
மறை பொருட்களையெல்லாம் நிறைவாய்க் கொண்டிருக்கிற செபமாலை
அன்னையே
புனிதர் அனைவருடைய மணிமுடியாகிய செபமாலை அன்னையே
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்
புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்
புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்
புருவையாகிய இயேசுவே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
செபிப்போமாக..
ஆண்டவரே வானதூதர் அறிவித்ததால் உம்திருமகன் இயேசுக்கிறிஸ்து
மனிதரானதை அறிந்திருக்கிற நாங்கள் அவருடைய பாடுகளினாலும்
சிலுவையினாலும் உயிர்த்தெழுதலின் மகிமையை அடைவோமாக.
செபமாலை அன்னை எங்களுக்காகப் பரிந்து பேசுவதால் இந்த
வரத்தை எங்கள் உள்ளத்தில் பொழிந்தருள வேண்டுமென எங்கள்
ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்
|
|