Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர்கள் அனைவரின் பெருவிழா

    திருப்பலி முன்னுரை

    நாளாந்த வாசகம்    
புனித மிக்க மனிதர்களாக வாழ வரம் வேண்டி வந்திருக்கும் நல் இதயங்களே!
இறைவனுக்காக....
இயலாதவர்களுக்காக...
அயலாருக்காக...
ஆதரவற்றவருக்காக....
எளியோருக்காக...
ஏதுமில்லாதவர்களுக்காக...
வறியோருக்காக...
வாழ்விழந்தோருக்காக....
திக்கற்றவர்களுக்காக....
தீவிரவாதிகளுக்காக....
தங்கள் பணியை அர்பணித்து
சோதனைகளை...  சாதனைகளாக...
இருளை... ஒளியாக...
துன்பத்தை...  இன்பமாக...
தோல்வியை...  வெற்றியாக...
ஏற்று நடந்த நல்ல மனிதர்களே புனிதர்கள்.

இன்றும் நம் நலனுக்காகவும், நாம் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டியாகவும், இருக்கின்றார்கள்.
தன்னலமற்று தியாக தீபங்களாக, இறைவனுக்கு நெருக்கமான உறவு கொண்டு வாழ்ந்து மறைந்த இவர்களை தூயவர்களாக புனிதர்களாக நினைவு கூர்ந்து விழா எடுத்து மகிழ்கின்றோம்.
கடவுளின் அன்பை உணர்ந்து வாழ்ந்து அவரின் மதிப்பீடுகளை வாழ்வாக்கிய, புனிதர்களின் வாழ்க்கை முறையை நாமும் பின்பற்றி, இயேசுவின் சாட்சிகளாக வாழ்ந்திட அருள் வேண்டி, இத்தெய்வீகத் திருப்பலியில் இணைந்திடுவோம்.
 
இறைவேண்டல்  

1 என்றும் வாழும் இறைவா!
திருச்சபைக்கு நீர் வழங்கியுள்ள புனிதர்களையெல்லாம் ஒரே விழாவில் கொண்டாடுகின்ற பெருமகிழ்ச்சியை எங்களுக்கு இன்று அளித்திருக்கின்றீர். திருவுளப்படி வாழ்ந்து, பேறுபெற்றவர்களாய் இருக்கிற இப்புனிதர்களின் திருக்கூட்டத்தோடு இணைந்து உம்மைப் போற்றுகின்றோம். இப்புனிதர்களின் வாழ்க்கையைப் வாழ்வாக்கி நடக்க,எங்கள் திருத்தந்தை ஆயர்கள், குருக்கள் துறவியர் இறைமக்கள் அனைவருக்கும் புனிதர்களுடைய வேண்டுதல் என்றும் துணைநிற்கச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2."மண்முகத்தே மழையைப் பொழிபவரும், வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே" என்ற இறைவா!
நீர் அழகுற படைத்த இயற்கையை நாங்கள் சுயநலத்தால் அழித்து, சுற்றுச்சூழலையும் பாழ்படுத்தி வருகின்றோம். அதனால், பருவநிலைகளும் மாறி, வானம் பொய்த்து, நீரின்றி வறண்ட நிலையிலிருக்கின்றது. இறைவா, எங்களின் தவறுகள், பாவங்களை மன்னித்து, தக்க காலத்தில் மழையைத் தந்து, நிலம் செழித்திடவும், குடிநீர் பற்றாக்குறை நீங்கிடவும் அருள்பொழிய வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

3." என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன், மதிப்பு மிக்கவன், நான் உன்மேல் அன்பு கூர்கிறேன்" என்ற இறைவா!
உம் திருமுன் கூடியுள்ள  நாங்கள் உமது பார்வையில் மதிப்புக்குரியவர்களாக இருக்கிறோம் என்ற உள்ளார்ந்த நிறைவுடன், வாழ்வின் கடமைகளை, செவ்வனே நிறைவேற்றக்கூடிய, இலட்சியங்களில் தொடர்ந்து பயணிக்கக்கூடிய திடமான, வலிமையான மனதினைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

4."தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல், நான் உங்களைத் தேற்றுவேன்" என்ற இறைவா!
வாழ்வில் ஆதரவற்று, துணையின்றி, தவிக்கும் மக்களின் மனத்துயரை, கண்ணீரை கண்ணோக்கும். அவர்களின் மனத்துயரை மாற்றிட, ஆறுதல், அளித்து, ஊக்கப்படுத்தி, தேற்றி, புனிதமான பாதையில் பயணிக்க உமதருள் தந்தருள வேண்டுமென்று, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

5."வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்" என்ற இறைவா!
பொறுமை இன்று எங்களிடம் காணாமற் போய்விட்டது. எதையும் காத்திருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு, பொறுமையில்லாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் குடும்பங்களிலும் பணித்தளத்திலும், எங்கள் விசுவாச வாழ்விலும் பொறுமையிழந்து, எரிச்சல்பட்டு, நிம்மதியின்றி வாழும் மனநிலையை மாற்றி, பொறுமை என்னும் உன்னத பண்பினைப் பெற்று, புனிதமிகு வாழ்க்கை வாழ்ந்திட, வரமருள, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

6." ஒரு சொல் ஒரு கொடையை விட மேலானது" என்ற இறைவா!
நாங்கள் பேசுகின்ற வார்த்தைகள், பலரை காயப்படுத்துவதாக, கண்ணீரில் ஆழ்த்துவதாக அமையாமல், பலரும் பயன்பெறக்கூடிய புனிதமான பண்பான, கனிவான, ஊக்கம் தரக்கூடிய வார்த்தைகளாக அமைந்திடவும், இனிய சொற்களால், பல இதயங்களை இதமாக்கி, இன்பத்தை கொடுக்கவும், தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்கவும், எங்கள் நாவினை பயன்படுத்திட ஆற்றல் தந்தருள வேண்டுமென்று, இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
 
மறையுரை சிந்தனை
அன்னை தெரசாவின் சகோதரி ஆகா. ஜனவரி 04.1970 அன்று, தனது தங்கை ஆக்னசஸ் என்ற அன்னை தெரசாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
"அம்மாவின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது. கடைசியாக ஒரு முறை உன்னைப் பார்க்க விரும்புகிறார்!" வாசித்ததும் கலங்கிப் போன அன்னை, துறவு நிலைத் தடுத்தாலும் புறப்படத் தயாரானார். என் அம்மா தானே, என் பணி வாழ்வில் முதன்மைக் குரு சாவை நெருங்கும் குருவைப் பார்ப்பது சீடரின் கடமையல்லவா? முடிவெடுத்தபடி அல்பேனிய அரசின் அனுமதி வேண்டினார்.

அந்த அல்பேனிய அரசு எச்சரிக்கை ஒன்றை வைத்தது. " இங்கே உங்கள் தாயாரைப் பார்க்க வரலாம். எந்தத் தடையுமில்லை. ஆனால்.... இங்கு வந்த பிறகு உங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவோம். என்ற செய்தி உறுதி கிடையாது." நிபந்தனையைக் கேட்டு அதிர்ந்து போன கனத்த இதயத்தோடு பயணத்தை ரத்து செய்துவிட்டார். அம்மாவுக்காகப் பிரார்த்தனை செய்துவிட்டு வழக்கமான வேலைகளில் இறங்கி விட்டார்.


அதன் பிறகு எட்டாண்டுகள் கழித்து அல்பேனிய அரசே அன்னைக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைப்பு விடுத்தது. 1978 மார்ச் 28, அன்று அன்னை தனது சொந்த ஊரான ஸ்காப்ஜேயில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பே அவரது சகோதரி ஆகாவும் அம்மாவும் இறந்து போயிருந்தனர். ஆயிரக்கணக்கான அனாதைகளுக்கு ஆதரவாய் வாழ்ந்தவர் அனாதை அனுபவம் பெற்றார்.

ஆண்டவருக்காக ஏழைகளுக்காக நாம் வாழும் காலத்திலேயே நாளும் பொழுதும் வாழ்ந்து மரித்த அன்னை இன்று புனித தெரசாவாக உலகமே போற்றிப் புகழ்கின்றது.
நாமும் அன்னை தெரசாவிடம் நமது விண்ணப்பங்களை எடுத்து வைப்போம் அவர் நமக்காய் ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசுவார். புனிதர்கள் உறவைத் தொடர புனிதர்களின் விழா நாளில் சிறப்பாக செபிப்போம்.

திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில் திருச்சபையால் வந்திக்கப்பட்ட புனிதர்கள் அனைவரும் வேத சாட்சிகளே. வேதசாட்சிகளிலும் அனைவரது விழாக்களும் தனித்தனியாக கொண்டாடப்படுவதில்லை. வேதசாட்சிகளைத் தவிர ஏராளமான புனிதர்களும் மோட்சத்தில் புனிதர்களாக பேரின்ப பாக்கியம் அனுபவித்து வருகிறார்கள்.

இன்று நாம் மோட்சத்தில் இருக்கும் புனிதர் அனைவரையும் நினைவு கூர்கிறோம். அவர்களது மகிமையையும், மாட்சிமையையும் திருச்சபை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. புனிதர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்ல, என்ன முடியாத வேறு நீதிமான்களையும் நாம் காண்கிறோம். அவர்கள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் வாழ்ந்தவர்கள். அவர்கள் கடவுளைப் புகழ்கிறார்கள். கடவுளுடைய செம்மறியானவரையும் அவர்கள் வாழ்த்துகிறார்கள்.

"இறப்புக்குப்பின் நிலைவாழ்வு ஒன்று உண்டு" என்பது கிறிஸ்தவத்தின் தொன்மை வாய்ந்த நம்பிக்கைகளுள் ஒன்றாகும். அதன்படி உலக வாழ்வில் மேற்கொள்ளப்பட்ட செயல்களின்படி ஒருவருக்குத் தீர்ப்பு வழங்கப்படும். விண்ணகக் கொடையை உடனடியாகப் பெறுவது என்பது எதிர்பார்ப்பாகும். அதன்படி புதுவாழ்வு பெற்ற புனிதர் கூட்டத்தை தம் காட்சியில் கண்ட திருத்தூதர் யோவான் விவரிப்பதை முதல் வாசகம் எடுத்துக் கூறுகிறது

வானகத் தந்தை தூயவராய் இருக்கிறார். எனவேதான் விண்ணக தூதரணி அவரை எப்போதும்" தூயவர்" எனப் புகழ்ந்தேத்துகிறது. நமது தந்தை எப்படியோ நாமும் அப்படியே இருக்க வேண்டும். அப்போது தான் வானகத் தந்தையின் உரிமைப் பிள்ளைகள் நாம் என்ற பேறு, நமக்கு என்றும் நிலைக்கும். தொடக்க முதல் முடிவு வரை தூய்மையயே நமது நிலைப்பாடு என வாழத் தூண்டுகிறது இன்றைய இரண்டாவது வாசகம்.

புனிதமிக்க நம் சகோதரர்களுடன் நாமும் கூடி மகிழ்வோம். நம்மோடு வாழ்ந்து மறைந்ததால் அவர்களுடன் நாம் தொடர்பு கொண்டிருக்கிறோம்.

மோட்சத்திலிருக்கும் புனிதர்களுடன் தேவபயத்துடன் வாழ்வதுடன் கடவுளது கட்டளைகளை அனுசரித்து நடக்க வேண்டும். எளிய மனத்தோராய் சாந்த குணம், வேதனைகளில் பொறுமை, நீதி, அனுதாபம், கற்பு, துன்பங்களில் சகிப்பு என்னும் புண்ணியங்களை அனுசரிக்க வேண்டும். நமது உழைப்புகளிலும் பிரச்சனைகளிலும் இயேசுவிடமே இளைப்பாற்றி காணவேண்டும்.

"கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை'' (யோவான் 1:18). ஆனால் நம்மிடையே மனிதர்களாகப் பிறந்து புனிதர்களாக மாறியவர்களின் வழியாகத்தான் இறைவன் தமது மாட்சியை வெளிப்படுத்திக்கொண்டுள்ளார்.

"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்'' (மத்தேயு 16:24) என்ற இறைமகன் வாக்குக்கு சாட்சியாக வாழ்ந்தவர்கள் புனிதர்கள்.

இயேசுவின் சீடரான தூய இராயப்பர் (பேதுரு) தொடங்கி இந்தியாவின் முதல் புனிதையான தூய அல்போன்சம்மா வரை மேற்கண்ட இறைவார்த்தையாக வாழ்ந்து மறைந்தார்கள்; புனிதர்களாக நம்மோடு இன்றும் வாழ்கிறார்கள்; நமக்காக செபிக்கிறார்கள்; நமக்காக பரிந்துபேசி அரும் அடையாளங்களை நமக்கு வழங்கிக் கொண்டுள்ளார்கள். தன் வாழ்நாளெல்லாம் செபத்திலேயே கழித்த தூய தெரசாள் இறப்பதற்கு முன்பு, "என் பணி இனிமேல்தான் ஆரம்பமாகிறது'' என்று கூறி விண்ணகத்தில் உலக மக்களுக்காகப் பரிந்து பேசி செபிக்கப் போவதாக அறிவித்துச் சென்றாள்.

புனிதர்கள் "தங்களது வலிமையால் நற்பெயர் பெற்றார்கள். தங்களது அறிவுக்கூர்மையால் அறிவுரை வழங்கினார்கள்; இறை வாக்குகளை எடுத்துரைத்தார்கள். தங்கள் அறிவுரையாலும் சட்டம் பற்றிய அறிவுக் கூர்மையாலும் மக்களை நடத்தினார்கள். நற்பயிற்சியின் சொற்களில் ஞானிகளாய் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் வழி மரபில் மாட்சி பெற்றார்கள். தங்கள் வாழ்நாளில் பெருமை அடைந்தார்கள். அவர்களுள் சிலர் புகழ் விளங்கும்படி தங்கள் பெயரை விட்டுச் சென்றார்கள். அவர்களின் வழி மரபு என்றும் நிலைத்தோங்கும். அவர்களின் மாட்சி அழிக்கப்படாது. அவர்களுடைய உடல்கள் அமைதியாய் அடக்கம் செய்யப்பட்டன.

அவர்களுடைய பெயர் தலைமுறை தலைமுறைக்கும் வாழ்ந்தோங்கும். மக்கள் அவர்களுடைய ஞானத்தை எடுத்துரைப்பார்கள். அவர்களது புகழைச் சபையார் பறைசாற்றுவார் (சீராக் 44:1-15)'' என்ற தூய சீராக்கின் ஞான உரையைக் கண்ணோக்குகின்றபோது, நம் வாழ்வில் தீய எண்ணங்கள், உலக இச்சைகள், சிற்றின்பங்கள் போன்றவற்றில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அவர்கள் நமக்காக வாழ்ந்தார்கள் என்பது புலனாகிறது. அவர்களின் மேன்மையை நாம் நினைக்க, சிந்திக்க வேண்டியுள்ளது.

"என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்'' (மத்தேயு 16:25) என்ற இறைமகன் இயேசுவின் வாக்குக்கு உண்மை சாட்சியாக நின்ற அன்னை மரியாள், தூய சூசையப்பர், தூய இராயப்பர், தூய அந்தோணியார், தூய செபஸ்தியார், தூய சின்னப்பர், தூய அருளப்பர், தூய தெரசாள், தூய அல்போன்சம்மாள் போன்றோர்களின் பெயரைச் சொல்லி "எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்'' என்று அவர்களிடம் செபங்கள் மூலமாக கேட்கின்றபோது, நம் தேவைகளை நிறைவேற்றவும், நம்மை பீடித்திருக்கின்ற நோய்களை, துன்பங்களை நீக்குவதற்காகவும் இறைவனிடம் நாள்தோறும் பரிந்து பேசுகிறார்கள்.

"விண்ணகத்தில் புனிதர்கள் தங்களிடம் இறை மக்களின் செபங்கள் வரும்போது, கிறிஸ்துவின் அரியணை முன் இந்த செபக் காணிக்கையையே தூபமாக அர்ப்பணிக்கிறார்கள்'' (திரு.வெளி:5-8).

கடவுளை வழிபடுகிற நாம், அவரோடு நெருங்கிய உறவு கொண்டு நமக்காக பரிந்து பேசுகிற புனிதர்களுக்கு வணக்கம் செலுத்துவது நமது கடமை.

" புனிதம்" அல்லது" புனிதர்" எனபதை எபிரேய மொழியில்" குவதோஸ்" என்றும், கிரேக்க மொழியில்" ஆகியோன்" என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு பிரித்தெடுக்கப்பட்ட" அல்லது" வேறுபடுத்தப்பட்ட" என வார்த்தையளவில் பொருள் கொள்ளப்படுகிறது. கிறிஸ்தவர்கள், புனிதம் என்பது கடவுளையும், அவரை வழிபட பயன்படுத்தப்படும் பொருட்களையும், இடங்களையும் மட்டும் சார்ந்ததாக கருதி வந்தனர். பின்னர், மிகக் குறிப்பாக, இயேசுவுக்காக இரத்தம் சிந்தி உயிர் துறந்த அனைவரையுமே தொடக்ககால திருச்சபை புனிதர்கள் என்றே அழைத்துள்ளது. .இதை புனித பேதுருவின் முதல் திருமுகத்திலே நாம் காணலாம்." புனிதர்கள் யார்? " என்று நாம் ஒவ்வொருவருமே நம்மில் கேட்டுப் பார்க்கின்றபோது, கிடைக்கின்ற பதில்," புனிதர்கள் இறைவனின் திருவுளப்படி தங்கள் வாழ்வை அவருக்காகவே, அனைத்தையும் துறந்து, அர்ப்பணித்தவர்கள்." என்பதுவே. ஆம்; புனிதர்கள் வாழ்வு நமக்குக் கற்றுத் தரக்கூடியதும் அதுவே. இறைமகன் இன்றைய நற்சய்தியில் போதித்தவை அனைத்தும்" நான் எதற்காக வந்திருக்கின்றேன், எனது பணி யாருக்காக... என்னைப் பின்பற்ற விரும்புகிறவர்களும் இவற்றின்வழி வாழ வேண்டுமென்பதையும்" மிகத் தெளிவாக கூறுகின்றார். இம்மலைப்பொழிவை வாழ்வாக்கியவர்களே இன்று நாம் போற்றிக் கொண்டாடும் புனிதர்கள். யாருமே பிறக்கும் போதே புனிதர்களாகப் பிறப்பதில்லை. அவர்களும், நம்மைப் போல சாதாரண மனிதர்களாக பிறந்தவர்கள்தான். நம்மைப் போல நிறை, குறை உடையவர்கள்தான். ஆனால், தங்கள் வாழ்வை இறைதிருவுளம் உணர்ந்து, இறைவார்த்தையின்படி வாழ்ந்து, இறைவனுக்காகவும், பிறருக்காகவும் அனைத்தையும் துறந்து, வாழ்ந்து, மரித்து, இறைபாதம் சேர்ந்து, அவரை முகமுகமாய் தரிசிக்கும் பேற்றினை பரிசாக பெற்றுக் கொண்டவர்கள்.

புனிதர்கள் வணக்கம் கடவுளுக்கு எதிரானதல்ல. அவர்கள் வழியாக நாம் இன்னும் கிறிஸ்தவ வாழ்வை அர்த்தமுள்ளதாக்க துணைபுரியும் விழா என்று எண்ணுதலே சிறந்தது.

நமது வாழ்க்கைக்க

இறைவனின் அழைப்பைப் பெற்று அனைத்தையும் துறந்து இயேசுவைப் பின் தொடர்ந்தவர்கள்.

நமக்கு முன்மாதிரியாக திகழ்பவர்கள். நாம் இறை நம்பிக்கையில் வளர துணைபுரிபவர்கள்.

ஜெபம், தவம், தியானம் இவற்றால் ஆழ்ந்த இறையனுபவத்தை பிறரோடு பகிர்ந்து கொண்டவர்கள்.

இறை வார்த்தையின்படி வாழ்ந்தவர்கள்.

கடவுளின் அரசை நம் நடுவில் நிலை நிறுத்தியவர்கள்.


நமது வாழ்க்கையின் வழிகாட்டிகள்.


புனிதர்கள் வாழ்க்கையை சிந்திப்போம்...
அவர்கள் தடம் பதித்த பாதையில் நாமும் தடம் பதித்து நடக்க நாள் தோறும் முயல்வோம்.

 அமைதியின் கருவி ஜெபமாலையை  ஆன்மீக ஆயுதம் ஜெபமாலையை
இயேசு என்னும் மந்திரத்தை சொல்லிச் சொல்லி வாழ்வுறவே செய்தாயே செய்தாயே வாழ்வுறவே செய்தாயே!