![]() |
![]() |
![]() |
இறைவனின் பிரியத்தை நிறைவு செய்ய வந்திருக்கும் பிரியங்களே!
நம் விருப்பப்படி நடந்து கொண்டிருக்கும் நாம், இன்றைய
திருவழிபாட்டில் இறை விருப்பப்படி நடக்க அழைக்கப்பட்டு
இருக்கின்றோம் .
தந்தையின் விருப்பம் எல்லாவற்றுக்கும் இயேசு மட்டுமல்ல, அன்னை மரியும் தந்தை
சூசையும் நிறைவு செய்து வாழ்ந்த செய்தி இன்று நமது செவிக்கு விருந்தாக வருகின்றது.
மங்கலமொழிக்கு அடிபணிந்தவர் அன்னை மரியா. மரியாவை இகழ்ச்சி மொழிக்கு ஆளாக்காமல்
தள்ளிவிட நினைத்தவர் தந்தை
சூசை. இறை விருப்பத்தை நோக்கமாய் கொண்டு வாழத்
துடித்தவர்களை, தூய ஆவி இழுத்து பிடித்து சங்கடங்களைத் தள்ளிவிட்டார். அவமானங்களை
வெகுமானங்களாய் மாற்றி விட்டார்.
வழக்கமான தன்னலமும், தகாதசெயல்களும் வேறு திசைக்கு நம் மனதை வேகமாக இழுக்கத்தான்
செய்யும். வருத்தமும் துன்பமும் வலையை விரிக்கத்தான் செய்யும்.
இவைகளுக்கு நடுவே என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படி எல்லாம் நிகழட்டும் என
மனதார சொல்லவேண்டும்.
அன்பு, உண்மை, நீதி, மனித மாண்பு, ஒற்றுமை மண்ணில் செழிக்க வழி கோலவேண்டும்.
ஒடுக்கப்பட்டோருடன் நம்மை இணைக்க வேண்டும். இழிவான அடக்குமுறைகளைத் தடுக்கவேண்டும்.
நமக்கும் சமூகத்திற்கும் நலம் தருவனவற்றை ஆயிரம் சங்கடங்கள்
சூழ்ந்தாலும் மங்காத
உறுதியுடன் செய்யவேண்டும்.
நல்ல தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவது மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ அருள்
தரும் திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
இறைவேண்டல்
1. தந்தைக்கு பிரியமானதைச் செய்ய அருள் தரும் இறைவா!
கடவுள் நம்முடன் இருக்கிறார் இந்த ஆறுதல் தரும் செய்தியை மக்கள் எப்போதும் சந்தேகமற
நம்பி,
துன்பத்திலும் துயரத்திலும் இறைவிருப்பப்படி விசுவாசத்தில் வளர, திருத்தூதப்
பணியாளர்கள்
திருப்பணிபுரிய ஆற்றல் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம் .
2. நற்பணிபுரிவோருக்கு அருள் தரும் இறைவா!
மக்களை சலிப்படையச் செய்யாமல், போட்டி பொறாமைக்கு இடம் தராமல் கோபம், தன்னலம்,
இவைகளை அகற்றி, எல்லா மக்களும் வளமாக வாழ வழிகாட்டும் பாதையே இறைவன் விருப்பம் என
உணர்ந்து, நாடுகளின் தலைவர்கள் நற்பணிபுரிய அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம் .
3. உமது திருவுளத்தை நிறைவு செய்வோரை நேசிக்கும் இறைவா!
நிலையற்றதும் சந்தேகத்துக்கு உரியதுமான
சூழ்நிலையில், சரியானவற்றையும் உமக்கு
உகந்தவற்றையும் கண்டு கொள்ளவும், நம்பிகைக்கு உரியோராய் உம்மைப் பின் தொடரவும்,
எமக்கு
வழிகாட்டும் எமது பங்குத்தந்தை ஆவியின் ஒன்றிப்பை, அமைதியின் பிணப்பைப்
பெற்றுக் கொள்ளத்
துணை புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்
.
4. எங்கும் எப்போதும் உமது திருவுளத்திற்குப் பணிந்து நடக்க அருள் தரும் இறைவா!
சங்கடங்கள் பலவற்றால் நிறைந்துள்ள எங்கள் வாழ்வை பொருள் நிறைந்ததாக மாற்றும். உமது
திருவுளத்தை எங்கள் அன்றாட வாழ்வில் பின்பற்றி சந்தோஷமாக வாழ உமதருள் வேண்டுமென்று,
இறைவா உம்மை மன்றாடுகிறோம்
.
5. கலங்கியவர்களின் விண்ணப்பங்களுக்கு செவிசாய்க்கும் இறைவா!
கண்கலங்கி உம்மை நோக்கி இங்கே திருப்பலி கூவியழைப்போரின் விண்ணப்பங்களை
கேட்டருளும்.
விதவைகள், ஆதரவு இழந்தவர்கள், பல்வேறு இழப்புகளை சந்தித்து மனநிம்மதி
இழ்ந்தவர்கள்,
நோயுற்றோர், முதியோர் அனைவரும் உமது பிறப்பு விழாவை சிறப்பாகக்
கொண்டாட அருள் புரிய
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்
.
மறையுரை சிந்தனை
இதோ ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் இனிய இல்லறத்தைத் தொடங்கினார்கள்.
தொடக்கத்தில் எல்லாமே நன்றாக, மகிழ்ச்சியாக இருந்தது. ஆண்டுகள் ஒன்றிரண்டு கடந்தும்
பிள்ளைப்பேறு வாய்க்காததால் சற்றுக் குழப்பமும், தவிப்பும், ஏமாற்றமும் ஏற்பட்டன. இது முதல் அதிர்ச்சி!
இரண்டாவது அதிர்ச்சி ஒரு நோயின் மூலம் வந்தது. கணவனுக்குத் தீராத நோய்! எவ்வளவோ
பணம் செலவழித்தும் நீண்ட காலம் சிகிச்சை தந்தும் நோய் தீர்ந்தபாடில்லை. குழந்தைப்
பேறும் இல்லாமல், கணவனின் கொடிய நோயும் தீராமல் ஆண்டுகள் பல கடக்கிற சூழலில், ஒரு
குடும்பத்தின் " இறுக்கம்" எப்படி இருந்திருக்கும் என்பது நமக்குத் தெரியும். ஓயாத
இருமல்! ஒழியாத இளைப்பு!
இரவு பகல் பாராத களைப்பு- கணவனுக்கு! தினமும் பத்தியச்
சாப்பாடு சமைத்தல், அதையே தனது சாப்பாடாகவும் ஆக்கிக் கொள்ளுதல், கணவன்
உறங்காதபோதெல்லாம் விழித்திருத்தல்
- இதே வாடிக்கை மனைவிக்கு!
ஆனாலும் அவர்கள் ஒரேயடியாகச் சலித்துக் கொள்ளவில்லை! கடவுளையும் கண்டவர்களையும்
காணாதவர்களையும் சபித்துவிடவில்லை!
இன்றளவும் வாழ்கிறார்கள் மகிழ்ச்சியாக! ஆகிவிட்டன ஆண்டுகள் இருபத்தைந்து! ஆனாலும்
தொடர்கிறார்கள் இனிய இல்லறத்தை, ஒருவர் மற்றவருக்குக் குழந்தையாகி! திருமணத்தன்று
இதையெல்லாம் எதிர்பார்த்தார்களா? இல்லை! பெண் பார்த்தபோதும் மாப்பிள்ளை
பார்த்தபோதும் இவர்களின் வாழ்க்கை இப்படித்தான் அமையும் என்று
கனவு கண்டார்களா?
இல்லை! இல்லற வாழ்வை வாழ்கிறபோது இடையில் வருகின்ற துணைக்கொடைகளாக
ஏற்றுக்கொண்டார்கள், துன்ப துயரம் அனைத்தையும்!
அதே சமயத்தில் சிறிய கருத்து
மாற்றங்களையும் பெரிய கருத்துமோதல்களாக மாற்றிக்கொண்டு, ஆண்டுகள் பலவாக
அவதிப்படுவோரும் உண்டு.
சின்னஞ்சிறு பிரச்சனைகளையும் பாரமான சிலுவைகளாக்கிக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தையே
ஒரு சிலுவைப் பாதையாக்கிக் கொண்டு "கிடைக்குமா விடுதலை?" என்று ஏங்குவோரும் உண்டு.
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வீம்பு பேசிக்கொண்டும் வம்பு பண்ணிக்கொண்டும்,
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் புண்படுத்திக்கொண்டும் புகார் கூறிக்கொண்டும்,
இனிய இல்லறத்தை எரிநரகமாக மாற்றிக்கொண்டு எதற்கெடுத்தாலும்
"எரிந்து எரிந்து" விழுந்து கொண்டும் இருப்போரும் உண்டு. இவர்கள் எல்லோரும்
தங்களின் பிள்ளைகள் நலம் பற்றியோ, வளம் பற்றியோ, எதிர்காலம் பற்றியோ கவலைப்படுவதே
கிடையாது. கணவன் மனைவிக்கிடையே இருக்கிற முரண்பாட்டைத்தான் எப்போதும் கண்முன்
கொண்டும் கருத்தில் வைத்தும் மோதிக்கொண்டிருப்பார்கள்.
சிறிதளவு பொறுமையும்,
கடுகளவு
தியாகமும் இருந்தாலே, இவர்களால் எவ்வளவோ சாதிக்க இயலும். இத்தகைய பொறுமையையும் தியாக
உணர்வையும் ஒரு மனைவியிடமும், ஒரு தாயிடமும் கண்டபோது மெய்சிலிர்த்துப் போனோம்....
கண்கண்ட கணவனுடன் இனிய தாம்பத்திய
உறவு! அந்த அன்பின் பகிர்வால் இனிய மழலையின்
வரவு!
சலனமற்ற அவர்களின் இல்லற வாழ்வில் அதன் பின்னர் ஓர்
அதிர்வு! கணவனுக்கு வந்த
புற்றுநோயால் குலைந்தது அவர்களின்
மகிழ்வு!
தொடக்கத்தில் அந்த மனைவிக்கு அது பேரதிரச்சியாக இருந்தாலும் போகப்போக அதை ஏற்றுக்
கொண்டதால் திரும்பியது ஓரளவுக்கு
நிறைவு!
இன்பத்திலும், துன்பத்திலும், நலத்திலும், நோயிலும், உறவிலும், பிரிவிலும்
இணைபிரியாது இருப்போம் என்று, அன்று அவர்கள் கொடுத்த வாக்கு திருமண நாளில் செய்த அந்த
உடன்படிக்கை இதயத்தில் ஆழப் பதிந்துவிட்டதால், அவர்களின்
உறவு சரிவு காணவில்லை!
அவர்களது அன்பில் அணு அளவேனும் இருக்கவில்லை
முறிவு! அந்தப் பெண்ணின் பொறுமையும்,
தியாக உணர்வும், பிரமாணிக்கம் தவறாத சேவையும் அந்தக் கணவனின் உயிரைக் கொஞ்சம்
கொஞ்சமாக மீட்டு வந்தது எனலாம். மருத்துவமனையில் ஒருநாள் அவர் தன் நோயாளிக்
கணவனுக்குக் கொஞ்சம் உணவூட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று புரையேறி, உட்சென்ற
உணவு
வெளியேறி, வாந்தியாக வந்து விழுந்தபோது முகம் சுளிக்காமல், எவ்வித அருவெறுப்பும்
காட்டாமல் கையேந்தி அதை வாங்கிக் கொண்டார்; சுத்தப்படுத்தினார்; சேவையைத்
தொடர்ந்தார் அந்த அன்பு மனைவி. இதை போல ஆயிரம் தியாகச் சம்பவங்கள். இதற்கெல்லாம்
அடிப்படைக் காரணம் அவர்களுக்குள் வேரூன்றி இருந்த அசைக்க இயலாத அன்பு.
ஓர் ஊரில் ஒரு தம்பதியினர்! இந்தக் கணவன் மனைவிக்குள் எல்லாமே ஏகாம் பொருத்தம்.
இருவரும் எகனைக்கு மொகனை! ஏட்டிக்கு போட்டி! தவளை தண்ணீருக்கு இழுக்க எலி
மேட்டிற்கு இழுக்குமாமே! அப்படிப்பட்ட ரகம். இருவரும் மனம் ஒன்றிச் செய்கிற ஒரே
காரியம்: சண்டை போடுவதுதான். கணவனுக்குக் கத்தரிக்காய் என்றால் ரொம்ப விருப்பம்.
வீட்டுத்தோட்டத்தில் ஒருநாள் கத்தரி விதைகளை தூவி விட்டுப் போனான். மனைவிக்கு
கனகாம்பரப் பூ என்றால் ஓவர் பிரியம். அதே தோட்டத்தில் கனகாம்பர விதைகளை தூவி
விட்டுப் போனாள். ஒருவர் செய்தது மற்றவருக்குத் தெரியாது. இருவரும் விதைகள்
முளைவிட்டுச் செடியாக வளரக் காத்திருந்தார்கள். அவ்விதமே செடிகள் வளர்ந்தன. ஒருநாள்
காலை கணவன் தோட்டத்திற்குப் போனான். நாம் கத்தரியை விதைக்க வேறென்னவோ
விளைந்திருக்கிறதே என்றெண்ணி, முளைத்திருந்த கனகாம்பரச் செடிகளையெல்லாம் பிடுங்கி
எறிந்துவிட்டுப் போனான். அடுத்த நாள் தோட்டத்திற்குச் சென்ற தர்ம பத்தினி நாம்
கனகாம்பரத்தை விதைக்க வேறென்னவோ முளைத்திருக்கிறதே என்றெண்ணி கத்தரிச்
செடிகளையெல்லாம் கத்தரித்துத் தூக்கி எறிந்துவிட்டுப் போனாள். ஆக மொத்தத்தில்
தோட்டம் மொட்டையானதுதான் மிச்சம்! மொட்டை ஆனது தோட்டம் மட்டும்தானா? இருவரின்
மனங்களும் அல்லவா!
திருமண வயது நிரம்பிய இளைஞன் வினோத், அரசு அலுவலகம் ஒன்றில் உயர்ந்த வேலையில்
இருந்தான். அதே அலுவலகத்தில் பணி செய்த இளம்பெண் ஒருவரை இவனுக்கு மிகவே பிடித்தது.
தன் பெற்றோரிடம் அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டான். அவரது
பெற்றோர் அதற்கு சிறிதும் சம்மதிக்கவில்லை. பெற்றோர் விருப்பம் எதுவோ அதை
ஏற்றுக்கொள்கிறேன் என்று வினோத் சொல்லி விட்டான். பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது.
பெற்றோர் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள் பெற்றோருக்குப் பிடித்துவிட்டது. ஆனால்
மகனுக்கு பிடிக்கவில்லை. இருப்பினும் இப்போது அந்தப் பெண்ணை மணம்முடிக்க
சம்மதித்தான் மகன்.
"என் பெற்றோர் விரும்புவதை நான் செய்வேன். அப்போது என் வாழ்வில்
வரும் சங்கடங்களை அவர்கள் நீக்கி விடுவார்கள்" என்றான்.
குடும்பங்களில், அலுவலகங்களில், பணித்தளங்களில் செய்யும் செயல்களில் கருத்து
மோதல்களை தவிர்த்து, விட்டுக் கொடுத்து ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு வாழும்போது
இறைத் திருவுளம் நிறைவேற்ற முன்வருகின்றோம். அப்போது வியத்தகு வெற்றியை
சந்திக்கின்றோம் .
பெற்றோரின் விருப்பத்தை பிள்ளைகள்
நிறைவு செய்யும்போது மகிழ்வை சந்திக்கின்றார்கள்.
அன்பு சமாதானம் நிம்மதி நிலவுகின்றது.
குடும்பத்தில் தாய் கணவனுக்கு, பிள்ளைகளுக்கு உகந்தவற்றை செய்வதுபோல, கணவன் மனைவி
பிள்ளைகளுக்கு உகந்தவற்றைச் செய்யும்போதும், ஒருவர் ஒருவரின் பிரியங்களை
நிறைவேற்றுகிறோம். அப்போது நமது குடும்பங்களில் இறைசித்தம் நிறைவேறுகிறது.
இறைசித்தம் நிறைவேற நமது குடும்ப அமைப்பில் எழுகின்ற விரிசல்கள், நமது அலுவலக
உயரதிகாரிகள் நடுவே ஏற்படுகின்ற மோதல்கள், விருப்பு, வெறுப்பு, தன்னலம், ஆணவம்,
பதவிசுகம், பணவீக்கம், பொருளாதார
ஏற்றத்தாழ்வு, அடக்குமுறை, இவைகளைக் களைய முன்வர
வேண்டும். அதற்கான முயற்சிகளை கிறிஸ்மஸ் தயாரிப்பாக இப்போதே செய்ய ஆரம்பிப்போம்.
இறைவனின் திருவுளத்தைப் பற்றிக் கொண்டு வாழும் போது, ஈடு இணையற்ற மகிழ்ச்சி வரப்
போகும் கிறிஸ்மஸ் பரிசாக நிரந்தரமாக நம்மோடு தங்கும்..
" யோசேப்பே, தாவீதின் மகனே, உன் மனைவி மரியாவை ஏற்றுக் கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில்
அவள் கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான்" . ஆண்டவரின் தூதர் பணித்தவாறு தம் மனைவியை
ஏற்றுக் கொண்டார். மரியாவும் யோசேப்பும் கடவுளின் விருப்பப்படி நடக்கத் தங்களை
கையளித்தனர். இன்று உயர்ந்த பேரின்ப மகிழ்வை அனுபவிக்கின்றனர்.
எப்பொழுதெல்லாம் இறைவனின் திருவுளத்தை நமது செயல் வளம் ஆக்குகின்றோமோ, அப்பொழுது
எல்லாம் நாமும் பேரின்ப மகிழ்வை அனுபவிப்போம். அதையே கிறிஸ்து பிறப்புப் பெருவிழாப்
பரிசாக பெற்று மகிழ்வோம்.