(கத்தோலிக்கத் திருஅவையில் மரியாளின் தூய இதயப் பக்தி)
கத்தோலிக்க திருஅவையில் புனிதர்கள் மீதான பக்தியானது
தனியிடத்தினைப் பெறுகிறது. அதிலும் சிறப்பாக இறைவனின்
தாயாகிய புனித அன்னை மரியாள் மீதான பக்தியானது தனிக்கவனத்தையும்
சிறப்பினையும் பெறுகிறது.
ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவினைத் தொடர்ந்து
வருகின்ற வெள்ளிகிழமையில் அவரின் திருஇதயப் பெருவிழாவாகத்
திருஅவையில் சிறப்பிக்கப்படுகிறது. அதற்கு அடுத்த நாளை
அன்னை மரியாளின் மாசற்ற இதயத்தின் நினைவாகத் திருஅவை
கடைப்பிடிக்கிறது. இத்தகைய வழக்கத்தினை திருத்தந்தை
6ம் பவுல் 1969ம் ஆண்டு முதல் திருஅவையில் அறிமுகம்
செய்து வைத்தார். அன்று முதல் திருஅவையின் வழிபாட்டில்
இந்நாள் மரியாளின் மாசற்ற இதயத்தின் நினைவு நாளாக
நினைவு கூரப்படுகிறது.
🌷விவிலியப் பின்னணி:
லூக்கா நற்செய்தியானது மரியாள் பல விடயங்களை தன் உள்ளத்தில்
வைத்துச் சிந்தித்து வந்தாள் என்று பறைசாற்றுகிறது. மரியாள்
தனது பாடலில் "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப்
பெருமைப்டுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கிறது" (லூக் 1:47) என்று இறைவனின்
நன்மைத்தனங்களை தனது உள்ளத்திலும் மனதிலும் நிறுத்தி
பெருமையுற்றாள். அவ்வாறு இயேசுவின் பிறப்பின்போது அவர்களைச்
சந்திக்க வந்த இடையர்கள் தங்களுக்கு சொன்னவாறு அனைத்தும்
நிகழ்ந்திருந்தன என்று கூறியபோது மரியாள் இந்நிகழ்ச்சிகளையெல்லாம்
தன் உள்ளத்திலிருத்தி சிந்தித்துக் கொண்டிருந்தாள் என்று
நற்செய்தியில் கூறப்படுகிறது (காண்க லூக் 2:17-19). இயேசு
எருசலேம் ஆலயத்திற்கு பாஸ்கா விழாவிற்காக தனது
பெற்றோருடன் சென்ற வேளையில் காணமற்போய் மீண்டும் கண்டு
பிடிக்கப்பட்ட வேளையில் நடந்த சம்பங்களைக்குறித்து நற்செய்தி
கூறுகின்றபோது அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம்
தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார் (லூக் 2:51)
என்று பறைசாற்றுகிறது. "தூய உள்ளத்தோர் கடவுளைக்
காண்போர்" என்பதற்கொப்ப தனது தூய மாசற்ற இதயத்தினால்
தேவதாய் இறைச்சித்தத்தை அறிந்து அதற்கு தன்னை அர்ப்பணித்துக்
கொண்டார்.
🌷வரலாற்றில் ஓர் நிகழ்வு:
வரலாற்றில் 1917ம் ஆண்டில் அன்னை மரியாள் போத்துக்கல்
பாத்திமா பதியில் லூசியா, பிரான்சிஸ், ஜெசிந்தா என்கிற
மூன்று சிறுவர்களுக்கு தொடர்ச்சியாக ஆறு தடவைகள்
காட்சி அளித்தார். ஜுலையில் இடம்பெற்ற மூன்றாவது
காட்சியில் அன்னையவள் "எனது மாசற்ற இதயத்தை இப்புவிதனில்
நிறுவுவேன். அதனை வணங்குவோரை நரக தண்டனையிலிருந்து
விடுவித்தருள்வேன். மேலும் எனது மாசற்ற இதயம் வெற்றி
கொள்ளும் ரஷ்யா மனமாற்றத்தைப் பெற்றுக்கொள்ளும்" என்று
அவர்களிடம் கூறினார். அவர் உரைத்தவாறே திருத்தந்தை
12ம் பயஸ் 07.07.1952ல் ரஷ்யாவையும், திருத்தந்தை 2ம்
யோன் பவுல் 25.03.1984ல் உலக நாடுகள் முழுவதையும் அன்னையின்
மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுத்தார்கள். ரஷ்யாவின்
மனமாற்றமும் சாத்தியமானது.
🌷திருஅவை வரலாற்றில் மரியாளின் மாசற்ற இதயப்பக்தி:
அன்னை மரியாளின் தூய மாசற்ற இதயத்திற்கான பக்தியினை
வளர்த்தெடுப்பதில் ஆரம்பத்தில் பணியாற்றிவர்களாக 13ம்
நூற்றாண்டில் வாழ்ந்த ஜேர்மனி நாட்டு புனிதராகிய
மெட்டில்டா (Machtilde of Hackeborn 1298) சுவீடன்
நாட்டு புனிதராகிய பிரிஜட் (1373) ஆகியோர் முக்கிய இடத்தினைப்
பெறுகின்றார்கள். இவர்களைத் தொடர்ந்து 15ம்
நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலியின் பிரான்சிஸ்கன் துறவியாகிய
புனித சியன்னா பெர்னார்தினோ (1444) மரியாளின் கன்னிமை
குன்றா இதயம் குறித்த சிந்தனையை பரவலாக்கினார். இவர்களின்
வழியில் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்ஸ் நாட்டு
புனிதராகிய ஜோன் யட்ஸ் (Jonh Eudes - 1680) என்பவர் கன்னி
மரியாளின் மாசற்ற இதயம் குறித்ததான பக்தியினை வளர்த்தெடுப்பதில்
பெரும் பங்காற்றினார். அவரால் எழுதப்பட்ட இறைவேண்டல்களும்
நூல்களும் இயேசுவின் திருஇதயம் மற்றும் மரியாளின் மாசற்ற
இதயப் பக்திகளுக்கான வளர்ச்சியின் வாய்க்கால்களாக
மாறின. 'அதிசயமான இதயம்' (Le Coeur Admirable de la
Tres Sainte Mere de Dieu) என்கிற அவரது நூலின்
விளைவாக கி.பி. 1648ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் மரியாளின்
மாசற்ற இதயத்திற்கான விழா சிறப்பிக்கப்பட்டது. அதுவே
காலப்போக்கில் பிரான்ஸ் நாடு முழுவதுமாகப் பரவியது.
18ம் நூற்றாண்டின் இறுதியில் 1899ல் இத்தாலியின் பலர்மோ
மறைமாவட்டத்தில் மரியாளின் மாசற்ற இதய விழாவினைக்
கொண்டாட திருத்தந்தை 6ம் பயஸ் அனுமதி நல்கினார். 19ம்
நூற்றாண்டில் 12.07.1855ல் மரியாளின் மாசற்ற இதயத்திற்கான
திருப்பலி மற்றும் திருப்புகழ்மாலை இறைவேண்டலுக்கான அனுமதியினை
திருஅவையின் திருவழிபாட்டுப் பேராயம் வழங்கியது. 20ம்
நூற்றாண்டில் 1944ம் ஆண்டு திருத்தந்தை 12ம் பயஸ் இவ்விழாவினை
திருஅவையின் திருவழிபாட்டு நாட்காட்டியில் இணைத்து ஆவணித்திங்கள்
22ம் நாள் சிறப்பிக்க அனுமதி வழங்கினார். தொடர்ந்து
2ம் வத்திக்கான் பேரவையின் பின்னரான திருவழிபாட்டு
சீர்திருத்தத்தில் திருத்தந்தை 6ம் பவுல் இவ்விழாவினை
இயேசுவின் தூய இதயப் பெருவிழாவிற்கு அடுத்து வருகின்ற
நாள் நினைவுகூரும் வண்ணம் மாற்றியமைத்தார். அதுவே இன்று
வரையிலும் தொடர்கிறது.
🌷அன்னை மரியாளின் மாசற்ற இதய விழாவின் செய்தி:
'அன்னையைப் போலொரு தெய்வமில்லை என்கிற கவி வரிகள் உரைப்பது
போன்று இவ்வுலகில் அன்னைக்கு நிகர் அன்னைதான். அவளுக்கு
மாற்றீடு கிடையாது. அன்னையின் அன்பினை அவ்வளவு எளிதாக
வார்த்தைகளில் வடித்திட முடியாது. அவள் தன் சோகங்களை
மூடி மறைத்து உள்ளே வைத்துவிட்டு தன் குழந்தைகளின் மகிழ்வில்
திருப்தி காண்பவள். அவ்வாறே அன்னை மரியாள் தன்னை வருத்திய
ஏழு சோக வாள்களை தன் மாசற்ற இதயத்தில் தாங்கிக்கொண்டு
புவி மாந்தரின் மீட்புக்காக நலவாழ்விற்காக என்றும் தன்
மகனின் தூய இதயத்திடம் பரிந்து பேசுபவளாக நம்மத்தியில்
திகழ்கின்றாள்.
பாவிகளாகிய புவிமாந்தரை அன்புடன் அரவணைத்து வாழ்வு நல்கிடக்
காத்திருக்கும் மரியாளின் மாசற்ற இதயத்தினை நம்பிக்கை
நிறைந்த உள்ளத்துடன் நாடுவோம்.
மரியாளின் இதயம் திரு இதயமே! பாவிகள் எங்களுக்காய் உம்
மகனிடம் வேண்டிக்கொள்ளும். ஆமென்
ஆமென் ஆமென்
வழங்குபவர் அருள்பணியாளர் அகஸ்தீன்
நவரத்தினம் |
|