லூர்து
மாதாவுக்கு செபம் அமலோற்பவ கன்னி மாதாவே, சொல்லொணா சோதிக்கதிர் வீச, சூரியன் ஒளி தாங்கிய சுத்த வெள்ளை உடை அணிந்து, தெய்வீக வடிவு அலங்காரத்தோடு அன்று எழுந்தருளி வந்து, தன்னந் தனிமையான லூர்து மலைக் கெபியில் காட்சி தரக் கருணை புரிந்த உமது கிருபாகடாட்சத்தை நினைத்தருளும். உமது திருக்குமாரன் உமக்கு கட்டளை யிட்டிருக்கிற மட்டற்ற வல்லமையையும் நினைவு கூர்ந்தருளும். புதுமையில் பிரபல்லியமான லுர்ர்து மலை மாதாவே! உமது பேறு பலன்களின் மீது நிறைந்த நம்பிக்கை வைத்து, உமது தயவு ஆதரவை அடைய இதோ ஓடி வந்தோம். உமது தரிசன வரலாறுகளின் உண்மையை உணர்ந்து ஸ்திரப்படுததின பரிசுத்த பாப்பானவரை உமது திருக்கரவல்லபத்தால் காத்தருளும். தேவ இரக்க நேச மனோகரம் அடங்கிய இரட்சணிய பொக்கிசங்களைத் திறந்து, அவைகளை எங்கள் மீது பொழிந்தருளும். உம்மை மன்றாடி கேட்கும் எங்கள் விண்ணப்பம் எதுவும் வீண்போக விடாதேயும். மாசற்ற கன்னிகையான லூர்து மலை மாதாவே தேவரீர் எங்கள் தாயரா கையால், எங்கள் மன்றாட்டுக்களை தயவாய்க் கேட்டருளும். ஆமென் லூர்து அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். லூர்து மாதாவுக்கு சிறிய நவநாள் - இறைவனின் தாயாகிய புனித கன்னிமரியாயின் தூய மாசில்லாத உற்பவம் துதிக்கப்படுவதாக. - எங்கள் லூர்து நாயகியே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். - எங்கள் மாதாவே எங்கள் பேரில் இரக்கமாயிரும். - எங்கள் லூர்து நாயகியே! பரிசுத்த திரித்துவத்தின் நேசத்திற்காகவும் மகிமைக்காகவும் - எங்களைக் குணப்படுத்தியருளும். - எங்கள் லூர்து நாயகியே! பாவிகள் மனந் திரும்புவதற்காக - எங்களைக் குணப்படுத்தியருளும். - வியாதிக்காரர்களின்ஆரோக்கியமே! - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். - கஸ்திப்படுகிறவர்களின் ஆதரவே! - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். - ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே! உம்மை மன்றாடுகிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். லூர்து மாதாவின் பெரிய நவநாள் செபம் பிதாவாகிய சர்வேகரனால் தெரிந்து கொள்ளப்பட்ட தூய மணியே, பரிசுத்த ஆவியின் திருஆலயமே, பிதாவின் கதனாகிய யேசுவின் தாயே, பக்தியிற் சிறந்த தூய பலிப்பீடமே, பாக்கியவதியான மகா கன்னிகையே பரலோ கத்தின் உன்னத வாசலே, பண்பின் ஒளியான விடியற்கால நட்சத்திரமே - வாழ்க! திருச்சிலுவையின் கீழ் இறைவனால்; எங்களுக்கு தாயாக உம்மை கையளிக்கப்பட்ட அன்னையை வாழ்க! தேவதூதன் கபிரியேல் சம்மனசானவர் மங்கள வார்த்தை சொல்லிய போது. தாழ்ச்சியுடன் கடவுளின் அடிமை. அவரது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது என்று உரைத்த கன்னிகையே வாழ்க! ஏவாளை ஏமாற்றிய பசாசின் ஆணவத்தையும், வல்லமையையும் அழித்து, அதன் தலையை மிதித்த மாதாவே, வாழ்க! பெண்களிலே, பாக்கியவதி என்று பேறுபெற்றவளான மாதாவே, வாழ்க! நீங்கள் என்றும் எங்களுக்குத் தாயாக இருக்ககடவீர். உங்கள் பிள்ளைகளாகிய எங்களை பசாசின் சோதனையிலிருந்து விடுவிப்பீர். நீதியின் பாதையில் எங்களை நடத்திச் செல்வீர். எங்களை பேரின்ப சமாதானத்தில் நிலைத்திருக்க வழிகாட்டுவீர். உமது திருக் குமாரனாகிய யேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசுவீர். எங்கள் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, நாங்கள் பரிசுத்த ஜீவியத்தில் நல்வாழ்வு வாழ அருள் புரிவீர். ஓ! உத்தம கன்னிகையே, உலக மாயையிலிருந்து நாங்கள் விடுதலை பெறவும். சத்திய திருமறையின்படி நடக்கவும், உமது உதவியை நாடுகின்றோம். எங்களை ஆதரியும். உமது திருக்குமாரன் போதித்த ஞான சத்தியங் களைக் கடைப்பிடிக்கவும். நீதியில் நிலைத்திருக் கவும், அவர் சிந்திய திரு இரத்தம் வீணாகாம லிருக்கவும், எங்களை பாதுகாத்தருளும்படி மன்றாடுகின்றோம். ஓ! அமல உற்பவ மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமேன் (1 பர : 1 அருள்: 1திரி) நவநாள் 1 ஆம் நாள் ஓ! மாசற்ற அமல கன்னிகையே! உமது புகழையும் நாமத்தையும் எங்கள் நாவு களிகூர்ந்து வாழ்த்துகிறது. பரிசுத்த அன்னையே உமது கிருபையும், உதவியும் ஆசிரும் எங்களுக்கு அருளும். புனித மாதாவே சத்துருக்களிடத்தி லிருந்து எங்களை தற்காத்தருளும். பரலோக பூலோக இராக்கினியே, கன்னியர்களுக்கு மேலான கன்னிகையே, பேரின்பரசமுள்ள மாதாவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும், என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்யும். சுதனா கிய உமது திருக்குமாரனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசியருளும். (மௌனமாக தேவையான வரங்களைக் கேட்கவும். ஜெபம், லூர்து மாதா பிராத்தனை) 2 ஆம் நாள் பரலோக பிதாவினால் தனது ஏக குமாரனுக்கு தாயாக தெரிந்து கொள்ளப்பட்ட அமலோற்பவ கன்னிகையே. உலக மக்கள் யாவருக்கும் ஆறுதல் அளித்தருளும். உம்மை நம்பி வந்துள்ளோம் கைவிடாதேயும். எங்களை புண்ணிய பாதையில் நடப்பித்தருளும், அவசரங்களில் உதவி புரியும். சகல துன்பங்களிலிருந்தும் விடுவித்தருளும் முக்கிய மாக பசாசின் வலையிலிருந்து காப்பற்றியருளும் நம்பிக்கையுடன் உம்மை அண்டி வந்துள்ளோம் ஆதரியும். (மௌனமாக தேவையான வரங்களைக் கேட்கவும். ஜெபம், லூர்து மாதா பிராத்தனை) 3 ஆம் நாள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் வார்த்தையானது மாமிசமாவதற்கு, தெரிந்து கொள்ளப்பட்ட புனித ஆலயமே, அழியா கேதுரு மரத்தால் செய்யப்பட்டதும் உள்ளும் புறமும் தங்க ரேக்கு பூசப்பட்ட உன்னத பெட்டியான அமல உற்பவியே! உம்மை அண்டி வந்தவர்களுக்கு ஆசி கூறும். உமது அமல உற்பவத்தால் பூலோகத்தை சுதந்தரித்துக் கொண்ட அன்னையே. எங்களை பரிசுத்தத்தில் வாழ வையும். நீரே பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பதை விசுவசிக்கிறோம். (மௌனமாக தேவையான வரங்களைக் கேட்கவும். ஜெபம் லூர்து மாதா பிராத்தனை) 4 ஆம்நாள் ஏக சுதனார் யேசுவுக்கு தாயாக நிர்ணயிக்கப்பட்ட மாதாவே! எங்கள் மீது இரக்கமாயிரும். நாங்கள் அறியாமையாலும் அகங்காரத்தாலும் செய்யும் பாவங்களை மன்னிக்கும் படியாக உமது திருக்குமாரனிடம் எங்களுக்காக பரிந்து பேசும். உலக வாழ்க்கையிலும், ஞான வாழ்க்கையிலும் எங்களுக்கு பாதுகாவலாயிருந்து எங்கள் ஆத்துமம் பழுதுபாடமல் வாழ துணைபுரியும். தங்கள் திருக்குமாரன் யேசுவை நீங்கள் வளர்த்தது போல எங்கள் குடும்பத்தையும் பிள்ளைகளையும் வளர்க்க எங்களுக்கு ஞான பலத்தைத் தாரும். (மௌனமாக தேவையான வரங்களைக் கேட்கவும். ஜெபம், லூர்து மாதா பிராத்தனை) 5ஆம்நாள் ஞானமுள்ள கன்னியே! ஏவாள் செய்த குற்றத்தால் ஏற்;பட்ட சாபத்தை உமது அமல உற்பவத்தாலும், நீர் ஈன்றெடுத்த திருக் குமாரனாலும் நீக்கப்பட, எங்களுக்கு இரட்சணியம் வருவித்த அன்னையை, வணக்கம் செய்து வாழ்த்துகின்றோம். தலைமுறை தலை முறையாக பெண்களில் பேறுபெற்றவள் என்று வாழ்த்தப்பட வல்லமை பெற்றவளே, மனுக்குலம் மாசுபடுவதற்கு முன் உம்மை சர்வேசுரன் தெரிந்து கொண்டார் என்பதை விசுவசிக்கின்றோம். எங்கள் விசுவாசம் பலன் அளிப்பதாக. (மௌனமாக தேவையான வரங்களைக் கேட்கவும். ஜெபம் லூர்து மாதா பிராத்தனை) 6 ஆம் நாள் அனுக்கிரகமும் கருணையும் நிறைந்த தாயே! வல்லபம் பொருந்திய கன்னிகையே! சர்வேசுரனது வலது பக்கத்தில் உன்னத சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மரியே! எங்கள் பேரில் கிருபை பாலித்தருளும். உங்களை எதிர்பார்த்து நிற்கும் நீசப்பாவியாகிய எங்களுக்குச் செவிசாயும். இன்றும், என்றும் பாராமுகமாய் இராதேயும். எங்களது பாவக்கறைகளை நீக்கி, வான் வீட்டை அடைய, சகல நன்மைகளைப் பெற துணைபுரியும். உமது வல்லமையின் மீது நம்பிக்கை கொள்கிறோம். (மௌனமாக தேவையான வரங்களைக் கேட்கவும். ஜெபம், லூர்து மாதா பிராத்தனை) 7 ஆம் நாள் உலகின் நித்திய ஒளியும், எங்கள் இரட்சகருமாகிய யேசுவை பெற்றெடுத்த மகா பரிசுத்த கன்னிகையே. உமது திருக்குமாரனின் இரட்சணிய வேலையை நிறைவேற்றவும். அவர் சிலுவையில் சிந்திய திரு இரத்தம் வீணாகா மலிருக்கவும். நீர் பன்முறை பலருக்கு காட்சி தந்து தபம், ஜெபம், சமாதானம் என்று உரைத்து பல புதுமைகளை செய்து வரும் தாயே, எங்களைக் கண்பாரும். எங்களுக்கு உதவி புரியும். நாங்கள் எதிர்பார்க்கும் நன்மைகளை அடைய அருள் புரியும். நாங்கள் உங்கள் மீது நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டிருக்கின்றோம். எங்களைக் கைவிடா தேயும். (மௌனமாக தேவையான வரங்களைக் கேட்கவும். ஜெபம், லூர்து மாதா பிராத்தனை) 8 ஆம் நாள் லூர்து கெபியில் காட்சியளித்த அன்னையே! ~நாமே அமல உற்பவம்| என்று ஆடு மேய்க்கும் சிறுமிக்கும் எடுத்துரைத்த கன்னியே, சூரிய ஒளி தாங்கி சுத்த வெண்ணாடை பூண்டு, தெய்வீக வடிவு அலங்காரத்தோடு எழுந்தருளிய அமலியே! எண்ணில்லா புதுமைகளைச் செய்து வரும் மாதாவே! எங்கள் மீது கிருபை பாலித்து பாவ மன்னிப்பை தந்தருளும். விசுவாசிகள் சத்தியத் திருமறையை விட்டகலாமலிருக்கவும், நாஸ்தீகக் கொள்கைகள் மறையவும், பசாசின் கொடுங்கோல் ஆட்சி ஒழியவும், நாங்கள் உம்மை நோக்கி வேண்டும் கருத்துகள் நிறைவேறவும் மன்றாடுகின்றோம். இதை கிறிஸ்துவின் வழியாக எங்களுக்குத் தந்தருளும். (மௌனமாக தேவையான வரங்களைக் கேட்கவும். ஜெபம், லூர்து மாதா பிராத்தனை) 9 ஆம் நாள் புதுமையில் பிரபலமான லூர்து மலை மாதாவே. உமது பேறுபலன்களின் மீது முழு நம்பிக்கை கொண்டு உமது அணையா ஆதரவை எதிர்பார்க்கும் எங்களை கைவிடா தோயும். எங்கள் மன்றாட்டை கேட்டருளும். திருச்சபையை பாதுகாரும், எவராலும் எதிர்க்க முடியாத உமது திருக்கரங்களின் வல்லமையால் அதை ஆதரித்தருளும். பாறைமீது கட்டிய சத்திய வீட்டிற்கு பழுது வராமல் பராமரித் தருளும். அதன் மக்களாகிய எங்களை ஆதரியும். மாசற்ற கன்னியாகிய லூர்து மலை மாதாவே. எங்கள் மன்றாட்டுகளை கேட்டு, புண்ணிய வழியில் எங்களை நடத்திச் செல்லும், எங்கள் மரண நேரத்தில் பேறுபலன்களை அளித்தருளும். உம்மையே நம்பி வாழும் எங்களுக்கு இரட்சணியம் தாரும். (மௌனமாக தேவையான வரங்களைக் கேட்கவும். ஜெபம், லூர்து மாதா பிராத்தனை) செபம் லூர்து மாதாவே, அமலோற்பவ கன்னிகையே, அனாதைகளின் அன்னையே உமது வல்லமையின் மீது நம்பிக்கை கொண்டு, உம்மிடம் அனுக்கிரகம் பெற அண்டி வந்துள்ளோம். ஓ! பரிசுத்த தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் கேட்டருளும். உமது பேரில் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், விசுவாசத்தையும், அன்பையும் ஆதாரமாகக் கொண்டு எங்கள் கஸ்ர நேரத்தில் கருணைபுரியும். உங்கள் தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் மீது திருப்பியருளும். இரக்கம் நிறைந்த மாதாவே, தேவரீரை வாழ்த்தி வணங்கும் எங்களுக்கு ஞான உதவியை அளித்தருளும். ஓ! அமல கன்னிகையே! நாங்கள் எங்கள் குற்றங்களை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, உம்மை அண்டி வருகிறோம். எங்களை உங்கள் மக்களாக ஏற்றருளும். களங்கமற்ற கன்னிகையே! வரப்பிரசாத்தின் வாசலே. புனித எலிசபெத்தம்மாள் வீட்டில் பிரவேசித்த போது, அவளுக்கு எத்தனை நன்மைகள் கிடைத்தனவோ, அது போல் உங்களை அண்டி வந்த எங்களுக்கும் எங்கள் குடும்பங்களுக்கும் ஞான பலத்தையும் உலக நீதி நன்மைகளையும் அளித்தருளும் பரிசுத்த தாயே! எங்களை, சகல இக்கட்டிலும் காத்தருளும். பிசாசின் வல்லமையிலிருந்து மீட்டருளும். மாசற்ற குழந்தையைப் பாதுகாரும் வாலிபர்களை இறைவழியை விட்டு தவறாமல் காத்து அறநெறியில் நடத்தியருளும். கன்னிப்பெண்கள் கற்பென்னும் புண்ணியத்தைக் காக்க துணைபுரியும். மாங்கல்யப் பெண்கள் பரிவிரதத் தன்மையில் வாழ பாதுகாத்தருளும். விதவைகளையும் கைவிடப்பட்டவர்களையும் ஆதரியும். தாய் தந்தையர்களுக்கு தக்க ஞானத்தை தந்து தற்காத்தருளும். குருக்களும் கன்னியர்களும் மதிமயங்காமலிருக்க வேண்டிக் கொள்ளும். பாவிகளாகிய எங்களைக் கைவிடாமல் பராமரித்தருளும். எங்கள் துன்ப நேரத்திலும், மரண நேரத்திலும், உங்கள் திருக்குமாரனிடம் பரிந்து பேசும். ஓ! திருத்துவத்தின் ஆலயமே, ஞான பாத்திரமே. பாவிகளின் அடைக்கலமே. நீர் மோட்சத்தில் அனுபவிக்கின்ற பேரின்பத்தை காணவும். நாங்கள் வான்வீட்டை அடையவும். உங்களை மன்றாடுகின்றோம். ஆமேன். (1பர: 1 அருள்: 1 திரி |