Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 தவக்கால சிந்தனைகள் -1

   தவக்காலம் ஏன் ?  
 
இது வெறும் 40 நாட்கள் மட்டும் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ நம்மை அழைக்கும் காலம் அல்ல. வருடத்தின் 365 நாட்களும் நல்ல கிறிஸ்தவர்களாக ஆண்டவர் இயேசு சுவாமிக்கு மிகவும் பிரியமான பிள்ளைகளாக வாழ்வதற்கு நம்மை நாமே தயாரிக்கும் காலம். அதற்குத் தேவையான முயற்சியும், பயிற்சியும் எடுக்கும் காலம்தான் தவக்காலம். அதே போல் ஆண்டவர் இயேசு சுவாமியின் திருப்பாடுகள் தவக்காலங்களில் மட்டுமல்ல எப்போதும் தியானிக்கப்பட வேண்டும். தவக்காலங்களில் இன்னும் அதிகமாக ஆழமாக தியானிக்கப்பட வேண்டும்...

40 நாட்கள் நான் நல்லவனாக, நல்லவளாக வாழ்வேன். பயனற்ற வார்த்தைகள், தீய பேச்சுகள் பேசமாட்டேன். தவம் செய்வேன்; பரிகாரம் செய்வேன், அதிகமாக ஒறுத்தல் முயற்சிகள் (பாத்திமா சிறுமிகள் புனித ஜெசிந்தா, புனித பிரான்ஸிஸ், லூசியா மற்றும் புனித குழந்தை தெரசம்மாள் போல) செய்வேன், ஆண்களில் பலர் புகைக்க மாட்டேன், 40 நாட்கள் குடிக்கமாட்டேன், பெண்களில் பலர் T.V. சீரியல்கள் பார்க்க மாட்டேன் (???), பொதுவாக தொலைக்காட்சியில் சினிமா, சினிமா பாடல்கள் பார்க்க மாட்டேன், 40 நாட்கள் மாமிசம் சாப்பிடாமல் இருப்பது, புலன்களை அடக்குவது, சண்டைச்சச்சரவுகள் செய்யாமல் இருப்பது என்று இருந்துவிட்டு ஈஸ்டருக்கு அப்புறம் முன்னைவிட அதிகமாக அனைத்து காரியங்களையும் செய்வேன் ( நல்ல T.V. சீரியல் (???), நல்ல சினிமா (?), நல்ல சினிமா பாடல்களுக்கு (???) தவக்காலத்திற்குப் பின் விதிவிலக்கு கொடுத்துவிடலாம். மற்ற கெட்ட பழக்கங்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும்) என்றால் இந்த தவக்காலமே நமக்கு தேவையில்லை.

மாற்றங்கள் வேண்டும், முன்னேற்றம் வேண்டும் இறைவனை நோக்கி தவக்காலத்தில் எடுத்த நல்ல முடிவுகள் பின்பற்றப்பட வேண்டும். ஆண்டவரை நோக்கி ஒரு ஸ்டெப்பாவது எடுத்து வைக்க வேண்டும். எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிடப்படக்கூடாது. எல்லா நாளுமே நாம் நன்றாக இருந்துவிட்டால் தவக்காலங்களில் கஷ்ட்டங்கள் இருக்காது.

நாம் இன்னும் பலவிதமான Pollution ( பாவங்கள்) களை மனதிற்குள் வைத்துக்கொண்டு அதோடுதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

அதை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு அவைகளை வெளியேற்ற வேண்டும். உள்ளத்தில் இருக்கும் நாற்றங்கள் வெளியேற வேண்டும். உள்ளத்தை நன்றாக கொத்தி பாத்திகட்டி மனம் வீசும் மலர் உள்ள செடிகளை விதைக்க வேண்டும். அவைகள் வளர்ந்து மனம் வீசும் மலர்கள் அங்கே பூக்கும். நம் ஒவ்வொருவர் உள்ளமும் குழந்தைகள் உள்ளமாக மாறினால் குழந்தைகள் சிரிப்பை கேட்டு பூக்கள் பூப்பதுபோல் நம் உள்ளத்திலும் ஒவ்வொரு முறையும் பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கும்.

இதற்கு ஆண்டவர் இயேசு சுவாமியின் திருப்பாடுகள் நமக்கு உதவும். நம் பாவங்களுக்காக சிலுவை சுமந்து தன் கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி நம்மை மீட்டு இரட்சித்த ஆண்டவர் இயேசு சுவாமிக்காய் நாமும் நம் பாவங்களை முழுமையாக விட்டு விடுவோம். ஞானஸ்தான வழிபாட்டில் நம்மிடம் குருவானவரால் கேட்கப்படும் கேள்வியை இப்போது நம் சேசு சுவாமி நம்மைப்பார்த்து கேட்கிறார்,

பசாசையும், அவன் கிரியைகளையும், அவன் ஆரவாரங்களையும் முழு மனதோடு விட்டுவிடுகிறாயா?

ஆண்டவருக்கு நாம் என்ன பதில் சொல்ல இருக்கிறோம்...

இயேசு சுவாமியின் உயிருள்ள வார்த்தையான என்னைப் பின் செல் என்ற வார்த்தைக்கு உடனே கீழ்படிந்து எதைப்பற்றியும் யோசிக்காமல் தந்தையையும், வலைகளையும் விட்டு பின் சென்ற புனித சந்தியாகப்பர் (பெரிய யாக்கோபு), புனித அருளப்பரைப்போல் நாமும் இந்த உலகக்கவர்ச்சி மாயைகளை யோசிக்காமல் தூக்கி எரிந்துவிட்டு நம் ஆண்டவர் இயேசு சுவாமியை முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு வலிமையோடும் பின் செல்ல தயாராய் இருக்கிறோமா? சிந்திப்போம்...

அதற்காக இந்த தவக்காலத்தில் நம்மை தயாரிப்போம், பயிற்ச்சி எடுப்போம். அதை செயல்படுத்துவோம். 365 நாட்களும் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்