• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

தவக்கால சிந்தனைகள் - 30

  " தாகமாயிருக்கிறது" அருளப்பர் 19 : 28  


நம் ஆண்டவரின் இந்த வார்த்தை அவரிடமிருந்து எப்போது வருகிறது?

பின்பு எல்லாம் நிறைவேறியது என்று அறிந்த இயேசு,

" தாகமாயிருக்கிறது" என்றார்..

என்னவெல்லாம் நிறைவேறியது? எல்லாமே நிறைவேறிவிட்டது..

கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும். அதுவும் ஒரு தரித்திரனாக பிறக்க வேண்டும். தரித்திர வாழ்க்கை வாழ வேண்டும். 30 ஆண்டுகள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ வேண்டும். தந்தைக்குப்பின் அல்லது தந்தையோடும் அவரும் பாடுபட்டு உழைத்து அவரும் உண்ண வேண்டும். தாய்க்கும் கொடுக்க வேண்டும்.. இது தவிர ஜெபதவபரிகார வாழ்க்கை..

சகல மகிமையையும் துறந்து, கோடிக்கணக்கான சம்மனசுக்களின் சேவையைத் துறந்து, மூவுலகையும் ஆளுகின்ற அதிகாரத்தை துறந்து, குறைவில்லா மகிழ்ச்சி, சந்தோசம், உவகை, உன்னதம் என சகலத்தையும் துறந்து, ஒரு பெண்ணின் கருவறைக்குள் தன்னை அடக்கி, சகலத்திற்கும் அந்த அவர் படைத்த சிருஷ்ட்டியான அந்த பெண்ணையே நம்பியிருக்க வேண்டும், அவர் வயிற்றில் பத்து மாதம் வசித்து பிறந்த பின்னும் அவர் படைத்த படைப்புக்களான அந்த பெற்றோர்களால் போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு 33 ஆண்டுகள் இந்த பாவம் நிறைந்த உலகில் பரிசுத்த பரமன் வாழ வேண்டும் என்றால் அது எளிதான காரியமா?

மூன்று ஆண்டுகள் காடுகள், மேடுகள், மலைகள், கடல் புறங்கள், சமவெளிகள் என்று உண்ணாமல், உறங்காமல் நற்செய்தி அறிவித்து, பல புதுமைகள் செய்து அதாவது நல்லது மட்டுமே செய்து வழ்ந்திருந்தாலும் கடைசியில் அவர் படைத்த படைப்புக்களான பாவிகளால் புறக்கனிக்கப்பட்டு அவர்கள் கைகளால் அடி, உதை, திட்டு, உமிழ்தல், நிந்தை, அவமானம் எல்லாம் அனுபவித்து மிகக் கேவலமான சிலுவைச்சாவை சுவைத்துக் கொண்டிருக்கும்போது அவரிடமிருந்து இந்த வார்த்தைகள் வருகிறது,
" தாகமாயிருக்கிறது" - என்று.

அதுதான் அவர் கடவுள் என்பதைக் காட்டுகிறது..

கடவுளுடைய அன்பை எதனாலும் அளவிட முடியாது. எத்தனை சமுத்திரங்களை இணைத்தாலும், எத்தனை ஆகாயங்களை இணைத்தாலும், அனைத்து கோள்களையும், அண்டவெளிகளை இணைத்தாலும் அப்போதும் கடவுள் அன்பு மட்டுமே பெரிதாக இருக்கும்..

இதற்கு என்ன காரணம்?

நாம் அதிகமாக துன்புறும் போது, அல்லது தொடர்ந்து கஷ்ட்டங்கள் நம்மை வாட்டி வதைக்கும் போது, பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் போது, அதிலிருந்து விடுதலையோ அல்லது கொஞ்சம் நிம்மதி கிடைத்தாலும் நம்மிடம் இருந்து ஒரு வார்த்தை வெளியே வரும்,

ஆளை விடுங்கடா சாமி

இங்கே சாமியே ஒரு சாதாரன ஆசாமியாகி அனைத்தையும் தாங்கி துன்பத்தில் விளிம்பில் அதுவும் மரிக்கப்போகும் நிலையில் கூட, அதுவும் அவருக்கு பிதா கொடுத்த அத்தனை வேலைகளையும் வெற்றிகரமாக முடித்தும் கூட அந்த வார்த்தை வருகிறது என்றால் அவர் மனுக்குலத்தின் மீது வைத்த அளப்பரிய அன்பை அளவிட அளவுகோல் ஏது?

இப்போதுதான் நாம் ஒன்றை எண்ணிப்பார்க்க வேண்டும்..

ஆண்டவருடைய பாடுகளுக்கெல்லாம் ஒரு விடை ஒரே விடை என்ன?

ஆன்மாக்களைக் காப்பாற்ற வேண்டும்..

எதிலிருந்து காப்பாற்ற வேண்டும்?

நரகத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்.

நரகத்திலிருந்து ஏன் காப்பாற்ற வேண்டும்?

அது கடவுள் இல்லாத இடம். பிசாசுக்கள் வாழும் இடம் மட்டும் அல்ல. அவைகள் தண்டனை பெறும் இடம். இந்த அவியாத நெருப்பில், முடிவில்லா நித்திய நெருப்பில் இருந்து மனிதர்களைக் காப்பாற்ற வேண்டும்..

ஏன் இவைகளிலிருந்து ஆன்மாக்கள் காப்பாற்றப்பட வேண்டும்?

ஆன்மா யாருடைய சாயல்? யாருடைய பாவனை? யாருடைய இயல்பு?

கடவுளுடைய சாயல், பாவனை, இயல்பு

தன்னுடைய சாயலாகவும், பாவனையாகவும் படைக்கப்பட்ட மனிதனை கடவுளால் நரகத்தில் வைத்துப்பார்க்க முடியவில்லை..

ஒருவன் தன்னுடைய ஆன்மாவின் மகிமையை உணர்ந்துவிட்டால், அதன் விலையேறப்பெற்ற மதிப்பை உணர்ந்துவிட்டால் அவனால் ஒரு அற்ப பாவம் கூட செய்ய முடியாது.

பாவம் அவனுக்கு மிகப்பெரிய அசிங்கம் போல் காட்சியளிக்கும்..

நாம் ஒன்றும் சாதாரன பிறவிகள் அல்ல.. சம்மனசுக்களை விட சற்று தாழ்ந்த பிறவிகள்தான். நம்மால் சம்மனசுக்கள் அளவிற்கு கூட போக முடியும், பயணம் செய்ய முடியும்.

இன்றைய காலகட்டங்களில் நம் ஆன்மாவைப் பற்றி சிந்திக்க நமக்கு நேரமில்லை. நாம் பாவம் செய்கிறோம் என்ற உறுத்தல் கூட நம்மிடம் இருப்பதில்லை. அந்த அளவுக்கு பேயின் சாயலான அகங்காரத்தை நாம் வைத்திருக்கிறோம்.

ஒரு மனிதன் பாவம் செய்கிறான் என்றால் அவனிடம் அகங்காரம் இருக்கிறது என்று அர்த்தம்..

அகங்காரம் இல்லாமல் யாராலும் பாவம் செய்ய முடியாது..

நாம் நம்மையும் உணர்வதில்லை, கடவுளின் அன்பையும் உணர்வதில்லை..

நம் நேச ஆண்டவர் இயேசு கிறிஸ்து இத்தனையையும் அனுபவித்த பின்பும் அதிலிருந்து விடுபட மனமில்லாமல் ஆன்மாக்கள் மேல் கொண்ட தாகத்தால் பற்றி எரிந்தவராய் கூறுகிறார்,

" தாகமாயிருக்கிறது " என்று

நாம் யார்? எந்த நிலையில் இருக்கிறோம்? என்று உணர்வோமா?

மனம் வருந்துவோமா? மனம் திருந்துவோமா? நம்முடைய வாழ்க்கைப்பாதையை மாற்றுவோமா?

இதையெல்லாம் விட்டுவிட்டு..

ஆண்டவருடைய பாடுகளை உருகி உருகி தியானித்து தவக்காலத்தை நிறைவு செய்தால் அத்னால் துளி அளவு கூட பயன் இல்லை..

" தாகமாயிருக்கிறது " என்று சொல்லும் நம் பரிசுத்த கல்வாரி நாயகனுக்கு நாம் சொல்லும் பதில் என்ன?

"ஆண்டவரே உம் பாடுகள் போதும், நான் மனம் திரும்புகிறேன்"

என்று சொல்ல தயாரா?

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி.. தயவாயிரும்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்