• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

தவக்கால சிந்தனைகள் - 27

  " என் இறைவா! என் இறைவா! ஏன் என்னை கை நெகிழ்ந்தீர்"  


மத்தேயு 27: 46

இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட 12 -ம் ஸ்தலத்தின் இன்னொரு சிந்தனை..

மூன்று ஆணிகளின் மத்தியில் நம் ஆண்டவர் இயேசுவின் உயிர் ஊசலாடுகிறது..

வானுக்கும் மண்ணுக்கும் அதிபதி, வானுக்கும் மண்ணுக்கும் மத்தியில் தொங்குகிறார்..

சம்மனசுக்களும், மோட்சவாசிகளும் தெண்டனிட்டு ஆராதிக்கும் மூவுலக அரசர் அவமானத்தின் சின்னமான சிலுவையில் எத்தனையோ அவமான, தூஷன வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு நாதியற்றவராய் தொங்குகிறார்.

சிலுவையோடு இணைக்கப்பட்டவராய் ஆணிகளில் தாங்குதலுக்கு உடலைக் கொடுத்தவராய் சொல்லொண்ணா வேதனையில் துவளுகிறார்..

சிலுவையில் கொஞ்சம் தலை சாய்க்கலாம் என்றால் முள்முடி குத்துகிறது. காலுக்கு கீழே இருக்கும் கட்டையில் கால் வைக்கலாம் என்றால் அதோடு கால் இணைத்து ஆணியால் அடிக்கப்பட்டதால் வலி எடுக்கிறது.

உடல் எடை முழுவதும் ஆணிகளில் தொங்குவதால் இரண்டு கைகளிலும், கால்களிலும் சதை கிழிந்து இரத்தம் கொட்டுகிறது..

சிலுவையில் கொஞ்சம் இளைப்பாறலாம் என்றால் சிலுவையில் படும் ஆண்டவரின் உடல் பகுதி அனைத்திலும் காயம் இருக்கிறது. பட்டதும் வலி எடுக்க ஆரம்பிக்கிறது. அவர் உடலில் காயம் இல்லாத பகுதி எது?

இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டு இருக்கிறது. 24 மணி நேரம் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காததால் தொண்டை வறண்டு விட்டது.

வயிற்றிலும் 24 மணி நேரத்திற்கும் மேலாக உணவு ஒன்றும் இல்லை.

அப்போதும் அவர் நினைக்கிறார். உணவும், நீரும் கொஞ்சம் நான் பருகியிருந்தேன் என்றால் இன்னும் கொஞ்சம் தாக்குப்பிடித்து இன்னும் கொஞ்சம் ஆன்மாக்களை மீட்டிருக்கலாம் என்று. அந்த சூழ்நிலையிலும் ஆன்மாக்கள் குறித்து கவலைப்படுகிறார்..

இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிர் பிரியப்போகிறது.. அதற்குள் தான் படும் அத்தனை வேதனைகளையும் தன் நேசப்பிதாவிடம் ஒப்புக் கொடுத்து எத்தனை ஆன்மாக்களை மீட்க முடியுமோ மீட்டு விடுவோம்..
என்று முயற்சி செய்கிறார்...

கொஞ்சம் ஆறுதல் தேடி மோட்சத்தை பார்க்கிறார். அப்பா முகத்தை பார்க்க முடியவில்லை. ஏனென்றால் மோட்சமும் அடைக்கப்பட்டு விட்டது. மோட்சத்திற்கு சொந்தக்காரருக்கே மோட்சம் அடைபட்டு விட்டது. அப்பாவின் முகத்தை பார்த்தாவது ஆறுதல் அடையலாம் என்றால் அதற்கும் வழியில்லை..

அந்த ஆறுதல் கூட பிதாவால் அவருக்கு கொடுக்க இயலவில்லை.. ஏனென்றால் மனுக்குலத்தின் பாவம் மிகக்கொடூரமாக இருக்கிறது.. அதாவது நமது பாவம்..

பாவத்திற்கு ஏற்றவாறு பரிகாரமும் மிகக்கொடூரமாக செய்ய வேண்டியிருக்கிறது..

மிகவும் வருத்தத்தோடும், வலியோடும் பிதாவும் அவர் முகத்தை திருப்பிக் கொண்டார்..

அப்போதுதான் அவர் தாங்கிக் கொண்டிருக்கும் அனைத்து வலிகளையும் தாண்டி மிகப்பெரிய வேதனை அவர் இருதயத்தில் ஈட்டியாக இறங்குகிறது..

அந்த வேதனையில்தான் தன்னையும் மீறி கதறுகிறார்..

" என் கடவுளே ! என் கடவுளே! ஏன் என்னை கை விட்டீர்"

அப்போது வந்த வார்த்தைதான் இது..

உடனே சுதாரித்துக் கொண்டு அதையும் பாவிகள் மனம் திருந்த அதாவது நாம் மனம் திரும்ப ஒப்புக் கொடுக்கிறார்..
ஏனென்றால் பிதா ஏதாவது செய்தால் அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று நம் ஆண்டவருக்குத் தெரியும்.

உயிர் பிரியும் நேரம் விட்டது..

" தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்"
என்று உரக்க கூறி உயிர் விடுகிறார்..

சொன்னதை செய்து விட்டார்..

இவையனைத்தும் யாருக்காக செய்தார்?

நமக்காக..

நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தை கடவுள் மனிதனாக பிறந்து செய்து முடித்துவிட்டார்..

மனிதர்கள் செய்த பாவத்திற்காக கடவுள் பரிகாரம் செய்யும்பொழுது மனிதர்களான நாம் நம்முடைய பாவத்திற்காக பரிகாரம் செய்ய
வேண்டாமா?

அதைத்தான் ஆண்டவர் இவ்வாறெல்லாம் குறிப்பிடுகிறார்..

" என்னைப் பின் செல்"

மத்தேயு 4 : 19

" என்னைப் பின் செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்து தன் சிலுவையை நாள்தோறும்
சுமந்து கொண்டு என்னைப் பின் தொடரட்டும்"

லூக்காஸ் 9 : 23

ஆண்டவர் பாவம் செய்யாமல் பட்ட பாடுகளில் பாவம் செய்யும் நாம் பங்கேற்க வேண்டாமா?

அவருக்கு ஆறுதல் கொடுக்க வேண்டாமா?

நாம் நம்முடைய பாவத்திற்கு பரிகாரம் செய்து மோட்சத்தை சொந்தமாக்க வேண்டாமா?

ஆண்டவருடைய பாடுகள் நமக்கு வீணாகாமல் கவனமாக பார்த்துக் கொள்வோம்..

நாம் மனமாற்றம் அடையாமல் ஆண்டவருடைய பாடுகளை உருகி உருகி தியானித்து ஒரு பயனும் இல்லை..

மனம்மாற, பாவத்தை விட நாம் தயாரா?

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி..
தயவாயிரும்..

இயேசுவுக்கே புகழ்!
மரியாயே வாழ்க!

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்