• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

தவக்கால சிந்தனைகள் - 24

     


நம் இயேசு தெய்வத்தை சிலுவையில் அறைகிறார்கள்...

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்...

இயேசு தெய்வத்தின் இரத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்தவர்கள் இப்போது மொத்தமாக எடுக்கிறார்கள்..

தான் படைத்த பூமி கெட்டு குட்டிச்சுவராகியதால் அதை தன் உதிரத்தால் அர்ச்சித்து பூமியை சுத்தப்படுத்துகிறார் நம் தேவன்...

நேற்று இரவிலிருந்து தண்ணீர் கூட குடிக்காததால் தொண்டை வரண்டுவிட்டது.. சாப்பிடாததால் வயிறு ஒட்டிவிட்டது..சாட்டையால் அடித்தும், முள்முடி சூட்டி அடித்ததாலும் நம் தேவனின் திருஇரத்தம் வடிந்து கொண்டே இருக்கிறது. இது போதாதென்று அவர் அனுபவித்த இரகசிய வேதனைகளால் உடலெங்கும் காயங்கள் (15 வாதைகள்)

இதுவும் போதாதென்று நம் தெய்வத்தை ஒரு பலி ஆட்டை தூக்குவதுபோல் தூக்கி சிலுவையின் மீது போடுகிறார்கள் கல் நெஞ்சக்காரர்கள் (நாமும்தான் பல நேரங்களில்). கரங்களை விரித்தும், கால்களை ஒடுக்கியும் மூன்று ஆணிகளால் நம் பரமனை சிலுவையில் அடித்து அடக்குகிறார்கள். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பிதாவின் சித்தத்திற்காக தன்னையே முழுவதும் அர்ப்பணிக்கிறார்; தன்னை சிலுவையில் அறைய முழுவதும் ஒத்துழைக்கிறார் இந்த தன்னிகரற்ற தேவன். நம் தலைவர்..

"ஆன்மாவைக்கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்லுபவர்களுக்கு அஞ்சாதீர்கள்" என்றார். இப்போது அவரும் அஞ்சவில்லை.. எப்போதும் தான் சொல்வதை கடைபிடித்துக் காட்டுவார்..வாழ்ந்தும் காட்டுவார்..

உலகையே அடக்கி தன் பாதத்தின் கீழ் வைத்தவர்... நமக்காக தன்னை மூன்று ஆணிகளால் அடக்கி சிலுவையில் அறைய சம்மதிக்கிறார்.

உனக்காக நான் இதையும் செய்வேன். ஏன் அதற்கு மேலும் செய்வேன்..

எனக்காக நீ இதுவரை என்ன செய்திருக்கிறாய்..?

குறைந்த பட்சம் நீ பாவம் செய்வதை மட்டுமாவது நிறுத்த மாட்டாயா?

என்று நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்..

புனித தொன்போஸ்கோ இளைஞர்களைப்பார்த்து கூறிய அறிவுரை வார்த்தைகள்

"இளைஞர்களே ! நீங்கள் நீங்கள் ஆடுங்கள் .பாடுங்கள்.
விளையாடுங்கள்; மகிழ்ச்சியாய் இருங்கள் ஆனால் பாவம் மட்டும் செய்யாதீர்கள்"

புனித தொன்போஸ்கோவின் அன்புச் சீடர் புனித தொமினிக் சாவியோவின் வார்த்தை ,

"பாவம் செய்வதைவிட சாவதே மேல் "

எத்தனையோ புனிதர்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.

உதாரணம் : புனித மரிய கொரைற்றி..

தன் கற்பை காப்பாற்ற உடலில் பதினெட்டு கத்திகுத்திகள் வாங்கி மரித்தார்கள்..

பாவம் இதுதானே நம்மை ஆண்டவரிடமிருந்து பிரிக்கின்றது. நம்முடைய நீசப் பாவத்திற்காகத்தானே மாசில்லா செம்மரி இரத்தம் சிந்தியது.. இவ்வளவு அறிந்தும் நமக்கு ஏன் பாவத்தின் மீது வெறுப்பு வர மறுக்கிறது.. வரவேண்டும்..
பாவத்தின் மீது வெறுப்பு வரவேண்டும்..

நரகத்தை குறித்த பயம் வர வேண்டும்..

உண்மையிலேயே நம் அனைவரும் நன்றாக யோசித்து இந்தக் கேள்விக்கு பதில் சொல்லனும்.. நாம் யாரிடம் அதிகமாக பொய் சொல்லுகிறோம்..?

கடவுளிடம்...
கடவுளிடம் மட்டும்..

ஆண்டவரே உம்மை நான் நேசிக்கிறேன்..
உமக்காக நான் என்னையே தருவேன்.. என் இதயத்தில் நீ மட்டும்தான் இருக்கிறாய்.. உனக்காக நான் எதையும் இழப்பேன் என்னையும் இழப்பேன்..

அப்புறம் ஏன் நம்மோடு இருப்பவர்களை, வாழ்பவர்களை நேசிப்பதில்லை..
நம் அயலாரை நேசிக்கவில்லை.. பணத்திற்காக சொத்திற்காக நம் சகோதரர்களை பகைக்கிறோம். பாவம் என்ற அற்ப சுகத்திற்காக மது, போதையை ஏன் நாட வேண்டும்? ஆன்மாவை நரகத்தில் ஆழ்த்தும் மோக பாவங்களை ஏன் செய்ய வேண்டும்.. ?திருட்டுத்தனமாக, ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமின்றி ஏன் ஒருவரை ஒருவர் ஏமாற்ற வேண்டும்? ஏன் நடிக்க வேண்டும்..?
தான் மட்டும் வாழ்ந்தால் போதும்; தன் சுகம்தான் பெரிது என்று ஏன் அலைகின்றோம்.. ஒருவரை ஒருவர் கஷ்ட்டப்படுத்தி அதில் மகிழ்கிறோம். நாம் நம்மையே ஆராய்ந்து பார்த்தால் நாம் இயேசு சுவாமியின் வார்த்தைகள் எதையுமே கடைபிடிப்பதில்லை.. கடைபிடிப்பதுபோல் நடித்துக்கொண்டிருக்கிறோம். அல்லது கடைபிடிப்பதாக பொய் சொல்கின்றோம்.

கடவுள் முன்னால் "பாவம் என்றொரு விஷத்தால் நான் பாதகம் செய்தேன் இறைவா" என்று உருகி உருகி பாடிவிட்டு மீண்டும் மீண்டும் அதையேதானே செய்கிறோம்.

நம் உள்ளத்தில் உள்ளவைகளை யாரிடம் வேண்டுமானாலும் மறைக்கலாம்.. தன் சிறு பார்வையால் அகத்தை ஊடுறுவி பார்க்கும் நம் ஆண்டவரை யாராலும் ஏமாற்ற முடியாது..

"உனக்காக நான் எதையும் செய்வேன்.. ஆனால் நீ எனக்காக யாவையும் செய்வேன் என்று சொல்லுவாய்...
ஆனால் செய்ய மாட்டாய். அப்படியே செய்தாலும் அடிமண்ணில்லாத பாறையின் மேல் விழுந்த விதைகள் போலும், முட்செடிகள் நடுவே விழுந்த விதைகள் போலும் அல்லவா உன் விசுவாசம் உறுதியில்லாமல்.. உயிரில்லாமல். இருக்கிறது"

"நீ நேசிப்பது இந்த உலகத்தை என்று எனக்கு நன்றாக தெறியும்.. உலகத்தை வெறுக்காமல் என்னை நேசிக்க முடியாது..உன்னால் இந்த உலகத்தை விட முடியாது "

"ஆண்டவரே ! நீர் கூறுவது உண்மைதான். உலகத்தையும் அதைச் சார்ந்த பாவத்தையும் என்னால் விடமுடியவில்லைதான். ஆலயம் வந்து உமக்கு நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்து விடுகிறேன். ஆனால் கடைபிடிப்பதில்லை. உலகம் என்னை தன் வசம் இழுக்கிறது.. நான் ஊனுடல் பலவீனத்தால் திரும்ப திரும்ப பாவத்தில் விழுகிறேன்.

இனி ஒரு வழி.. ஒரே வழிதான் இருக்கிறது. உம்மோடு சிலுவையில் அறையப்படுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.

எங்களை அனுதினமும் சிலுவை சுமக்க சொன்னீர். நாங்கள் எங்கள் ஆன்மாக்களை காத்துக்கொள்வதற்காக ஒரு படி மேலே போய் உம்மோடு சிலுவையில் அறையப்படவே யாசிக்கிறோம்; ஆசிக்கிறோம்..

உம் சிலுவையில் "ஜெபம், தவம், பரிகாரம் " என்ற ஆணிகளால் என்னை அறைந்து விடும்.

அப்போதுதான் பொய் சொல்லாமல் உண்மையிலே சொல்வேன், "என் இனிய இயேசுவே ! உம்மை நான் நேசிக்கிறேன்" என்று.

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி...எங்கள் பெயரில் தயவாயிரும்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்