" ஆதலால் பலபேரை அவருக்கு நாம் பங்காகத் தருவோம், அவரும் வல்லவர்களோடு
கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வார்; ஏனெனில் சாவுக்குத்
தன் ஆன்மாவைக் கையளித்தார்.
பாவிகளுள் ஒருவனாய்க் கருதப்பட்டார்; ஆயினும் பலருடைய பாவத்தைத்
தாமே சுமந்துகொண்டு பாவிகளுக்காகப் பரிந்து பேசினார்".
இசையாஸ் 53:12
இசையாஸ் ஆகமத்தின் கடைப் பகுதிக்கு வந்துவிட்டோம்..
"ஆதலால் பலபேரை அவருக்கு நாம் பங்காகத் தருவோம்"..
இந்த பலபேர்தான் ஆண்டவர் இயேசுவில் விசுவாசம் கொண்டவர்கள்..
அவர் வார்த்தைகளை நம்பினவர்கள், அவர் புரிந்த செயலை விசுவசித்தவர்கள்,
அவர்தான் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன் என்று விசுவசித்தவர்கள்..
அவரை விசுவசித்தவர்கள் மட்டுமே அன்றும் இன்றும் என்றும் அவர்
சிந்திய திருஇரத்தத்தால் மீட்படைந்தார்கள்; மீட்படைவார்கள்; இனியும்
மீட்படைந்து கொண்டே இருப்பார்கள்..
அவர்களுக்கு மட்டுமே ஆண்டவர் அன்று கல்வாரியில் சிந்திய அவர்
திருஇரத்தம் பலன் அளிக்கும்; மீட்பு அளிக்கும்..
"விசுவசித்தவர்கள் மீட்படைவார்கள்; விசுவசியாதவனுக்குத் தண்டணை
கிடைக்கும்" என்று பைபிளில் இருக்கும் வசனம் இவ்வாறு
நிறைவேறுகிறது..
இந்த தண்டனை பெறும் விசுவசியாதவர்களை நினைத்துதான் அன்று நம்
ஆண்டவர் கெத்சமெனித் தோட்டத்தில் மிகுந்த வருத்தத்தோடும், பயத்தோடும்
இரத்த வியர்வை சிந்தினார்..
அவர் பாடுகளைக் குறித்த அச்சத்தைவிட இந்த அச்சமே ஆண்டவருக்கு
மிகப்பெரிய வியாகுலமாய் , ஈட்டியாய் அவர் இருதயத்தைக் குத்தி
கிழித்தது.
மனிதன் மேல் கொண்ட பேரன்பால் கடவுளாகிய நானே மனிதனாக பிறந்து,
மக்களோடு வாழ்ந்து, எண்ணற்ற அற்புதங்கள் செய்து, முடிவில் இந்த
மனுக்குலத்திற்காகவே சொல்லொன்னாப் பாடுகள் பட்டு இரத்தம்
சிந்தி மரிக்கப் போகிறேன், ஆனால் பல பேர் இப்போதும், வருங்காலத்திலும்
என்னை விசுவசிக்காமல் நரகத்திற்கு செல்லப் போகிறார்களே"
என்றுதான் மிகவும் வருத்தமடைந்தார்..
விசுவசித்தவர்களுக்கு கிடைக்கும் மகிமையும், மோட்சமுமே கீழே உள்ள
இந்த வார்த்தைகள்..
"அவரும் வல்லவர்களோடு கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக்
கொள்வார்;"
இதில் ஏன் "கொள்ளைப் பொருள்" என்ற வார்த்தை உவமானமாக
பயன்படுத்தப்படுகிறது..?
உழைக்காமல் கிடைக்கும் பொருள் அது..
யாருக்குமே உழைக்காமல் ஒரு பொருள் கிடைத்தால் அந்த
மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது..
அதுவும் அந்தப் பொருள் விலை மதிப்பிடமுடியாத பெரிய பொக்கிஷமாக
(புதையலாக)இருந்தால் அந்த மகிழ்ச்சிக்கு அளவு உண்டா?
நம்மவர்களுக்கு இலவசமாக ரேசன் கடைகளில் கிடைக்கும் பொருளே
இவ்வளவு மகிழ்ச்சி தருகிறதென்றால் "கொள்ளைப் பொருள்" எவ்வளவு
மகிழ்ச்சி தரும்?
அதானால்தான் பைபிளில் நிறைய இடங்களில் உவமானமாக "கொள்ளைப்
பொருள்" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
மோட்சம் கடவுளின் சொத்து; அவர் வாழும் இடம்; அவருக்கு
சொந்தமானவர்கள், அவருக்கு பிரமானிக்கமானவர்கள்; அவர் பிள்ளைகள்
அவரோடு மகிழ்ச்சியாக வாழ அவர் பார்த்துப் பார்த்து படைத்த
இடம்..
நாம் நம்முடைய பாவத்தால் அதை இழந்தோம்.. அதை நமக்கு
மீட்டுக்கொடுக்க கடவுளே மனிதனாகப் பிறந்து நாம் பட வேண்டிய
துன்பங்களைப் பட்டு நமக்காக அவரே சம்பாதித்து நமக்கு அதை ஒரு
"கொள்ளைப் பொருளாக" கொடுத்து இருக்கிறார்.
இதில் நம்முடைய உழைப்பு கடுகளவு கூட இல்லை.. நம் சார்பாக
உழைத்தவர் நம் இயேசு ஆண்டவர்..
அதற்கு அவர் கொடுத்த விலை..
"ஏனெனில் சாவுக்குத் தன் ஆன்மாவைக் கையளித்தார்.
பாவிகளுள் ஒருவனாய்க் கருதப்பட்டார்; ஆயினும் பலருடைய
பாவத்தைத் தாமே சுமந்துகொண்டு பாவிகளுக்காகப் பரிந்து
பேசினார்".
பாவிகளுள் ஒருவராகக் கருதப்பட்டார்; நம்முடைய பாவங்களை அவர்
தோலில் சுமந்தார், முக்கியமாக சாவுக்கு தன்னை கையளித்தார்..
இது மிகவும் முக்கியமானது..
தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு வேறில்லை
என்று சொன்னார்; தகுதியற்ற நம்மை நண்பர்கள் என்று அழைத்தார்..
நம்மை "நரகம்" என்னும் நித்திய சாவிலிருந்து காப்பாற்றி
"நித்திய ஜீவியம்" "நிலை வாழ்வு" என்ற மோட்சத்தை நமக்குத் தர
அவர் தன்னை தற்காலிக சாவுக்கு கையளித்தார்..
ஆனால் நாம் இப்போது கொஞ்சமாவது உழைக்காமல் இந்த " கொள்ளைப்
பொருளை" பெற முடியாது..
ஏன்? ஏற்கனவே நமக்கு இலவசமாக பல பொருட்கள்
கொடுக்கப்பட்டிருக்கிறது?
ஞானஸ்தானம், உறுதி பூசுதல், திவ்ய நற்கருணை, பாவசங்கீர்த்தனம்,
நோயில் பூசுதல் மற்றும் திவ்ய பலி பூசை, திருச்செபமாலை,
உத்தரியம் மேலும் கடவுள் நமக்கு கொடுக்கும் துன்பச் சிலுவைகள்
..
இவைகளை நாம் சரியாகப் பயன்படுத்தி கொஞ்சம் உழைத்தால் போதும்
நமக்கு பெரிய கொள்ளைப் பொருளான மோட்சம் உறுதி..
நாம் மோட்சம் செல்ல அந்தக் கதவைத் திறக்க இரண்டு சாவிகள் போட
வேண்டியிருக்கிறது..
முதல் சாவியை முற்றிலும் இலவசமாக நம் ஆண்டவர் இயேசு போட்டு
ஏற்கனவே அடைப்பட்டிருந்த மோட்சத்தை திறந்து விட்டுவிட்டார்..
இரண்டாவது நாம் போட வேண்டிய சாவிதான் நாம் சம்பாதிக்க வேண்டிய
பேறுபலன்கள் மற்றும் புண்ணியங்கள்.. அதற்குத்தான் இந்த மனித
வாழ்க்கை (துன்பங்கள் நிறைந்த) நம் ஒவ்வொருவருக்கும்
கொடுக்கப்பட்டுள்ளது..
இந்த வாழ்க்கையை நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
கடவுள் எவ்வளதுதான் அற்புதங்கள் செய்தாலும்
முனுமுனுத்துக்கொண்டே இருந்து அத்தனையையும் அன்று வீணாக்கிய
இஸ்ராயேல் மக்கள் போல நாம் வாழப் போகிறோமா?
அல்லது உச்சி முதல் உள்ளங்கால் வரை துளைத்து எடுத்தும்;
சிலுவையில் வேதனையில் விளிம்பில் துவண்டு மரணத்திற்கு மிக
அருகாமையில் இருக்கும்போதும் அத்தனையும் அமைந்த மனதோடு ஏற்றுக்
கொண்டு அந்த சூழ்நிலையிலும் நமக்காக பரிந்து பேசிய நம் ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவைப் போல் வாழ இருக்கிறோமா?
"ஆயினும் பலருடைய பாவத்தைத் தாமே சுமந்துகொண்டு பாவிகளுக்காகப்
பரிந்து பேசினார்"
எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி.. தயவாயிரும்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !
|
|