"அவரை வேதனையிலாழ்த்தி நொறுக்க ஆண்டவர் விரும்பினார். தம்மையே
பாவத்திற்காக அவர் பலியாக்கினால், பெரியதொரு சந்ததியைக் கண்டு
நீடுவாழ்வார்: ஆண்டவரின் திருவுளம் அவர் கையால் நிறைவேறும்."
இசையால் 53 : 10
தன்னுடைய ஒரே குமாரனை வேதனையில் ஆழ்த்தி அவரை நொறுக்க
விரும்பினார்..
இந்த ஒரு வரியில் ஆண்டவரின் ஒட்டு மொத்த பாடுகளும் இருக்கிறது..
நம்முடைய பாவத்திற்காக அவரை அடிக்கவில்லை.. 'நொறுக்கினார்'..
இது எவ்வளவு பெரிய வார்த்தை
பாவம் ஒரு பக்கம்;
பழி ஒரு பக்கம்..
பாவம் செய்தவர்கள் நாம். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நாம். அடித்து
நொறுக்கப்பட வேண்டியவர்கள் நாம்..
ஆனால் இங்கே ஒரு விந்தை அரங்கேறுகிறது.. நம்மைத் தண்டிக்காமல்
கடவுள் தன்னையே தண்டித்துக் கொள்கிறார்..
புதுவிதமான நூதன தண்டனையை நமக்கு தருகிறார் நம் பரமன்..
தான் படைத்த படைப்புகளுக்காக, அவர்கள் செய்த குற்றங்களுக்காக
தான் அவர்களை தண்டிக்க வேண்டியது இருக்க அப்படிச் செய்யாமல் தன்னையே
தண்டித்துக் கொள்ளும் ஒரு கடவுளை இந்த உலகம் எப்போதாவது, எங்கேயாவது
பார்த்தது உண்டா?
இது ஒருவித விந்தையான அன்பு; வினோதமான அன்பு; விண்ணையும்
தாண்டும் அன்பு ; கடலின் ஆழத்தை தாண்டும் அன்பு; அளப்பரிய அன்பு;
அடுத்த வரிகளைப் பார்ப்போம்..
"தம்மையே பாவத்திற்காக அவர் பலியாக்கினால், பெரியதொரு சந்ததியைக்
கண்டு நீடுவாழ்வார்.."
தம்மையே அவர் நம் பாவத்திற்காக பலியாக்கினால் பெரியதொரு சந்ததியை
கண்டு அவர் நீடு வாழ்வார்.
யார் பெரியதொரு சந்ததி?
இவர்கள்தான் மோட்சம் செல்லும் பெரியதொரு சந்ததி..
ஆண்டவர் இயேசு தன் விலையேறப் பெற்ற திருஇரத்தத்தை சிந்தி மீட்டதுதான்
இந்த பெரியதொரு மாபெரும் சந்ததி..
"இந்த பெரியதொரு சந்ததியை கண்டு நீடு வாழ்வார் "
ஏற்கனவே துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள், அகரமும், நகரமுமான
கடவுள், எப்போதும் எல்லா காலத்திலும் நீடு வாழும் கடவுளுக்கு "
நீடு வாழ்வார்" என்ற வார்த்தை கொஞ்சமும் பொருந்தாது..
இந்த பெரியதொரு சந்ததியை கண்டு அந்த சந்தோசத்தில் அவர் 'நீடு
வாழ்வார்' என்பதுதான் சரி.
ஆண்டவர் இயேசுவின் திருப்பாடுகளால் மீட்கப்பட்ட இந்த பெரிய சந்ததிதான்
ஆண்டவருக்கு மகிழ்ச்சிதரும் சந்ததி..
நம் நேசப்பிதாவின் சொந்த வீடான மோட்சம் செல்லும் இந்த பெரிய சந்ததியில்
நீங்களும், நானும் இருக்க ஆசைப்படுகிறோமா?
அந்த மோட்சத்தை சொந்தமாக்குவதற்காகத்தானே நமக்கு இந்த
மனிதப்பிறவி கொடுக்கப்பட்டுள்ளது..
அதற்குன்டான சோதனை ஓட்டம்தானே மனித வாழ்க்கை..
புனித சின்னப்பர் சொல்லியது போல இந்த ஓட்டத்தை வெற்றியுடன்
நிறைவு செய்ய வேண்டும்..
வெற்றிக்கனி என்னும் ' மோட்சத்தை ' பறிப்பதற்காகவே இந்த
வாழ்க்கையை நாம் வாழ வேண்டும்...
நம் குற்றங்களுக்காக தன்னை நொறுக்கி நம்மை மீட்ட நம் நேச இயேசு
சுவாமிக்காக நம்முடைய அன்றாட சிலுவைகளை பொறுமையோடு சுமந்து நம்
ஆண்டவரைப் பின் சென்று வெற்றிக்கனி என்னும் மோட்சத்தை பறிக்க
சொந்தமாக்க நாம் தயாரா?
எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்..
இயேசுவுக்கே புகழ்!
மரியாயே வாழ்க!
|
|