" ஆடுகளைப்போல நாம் அனைவரும் வழி தவறி அலைந்தோம், கால் போன
வழியே ஒவ்வொருவரும் போனோம்:
நம் அனைவருடைய அக்கிரமங்களையும் ஆண்டவர் அவர் மேல் சுமத்தினார்.
அவர் கொடுமையாய் நடத்தப்பட்டார்; தாழ்மையாய் அதைத் தாங்கிக்
கொண்டார்; அவர் வாய் கூட திறக்கவில்லை;
கொல்வதற்காக இழுத்துச் செல்லப்படும் ஆட்டுக் குட்டிபோலும், மயிர்
கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறியாடு போலும் அவர்
வாய் திறக்கவில்லை."
இசையாஸ் (ஏசாயா) 53 : 6-7
இந்த உலகத்தில் நாம் செய்த தவறுகளுக்காக, நம்முடைய குற்றங்குறைகளுக்காக,
நம்முடைய பாவங்களுக்காக தன்னைத் தண்டித்துக்கொண்ட கடவுளை எங்கேயாவது
பார்க்க முடியுமா?
இந்த உலகத்தில் நம் கண்கள் முன்பாக நிறைய கடவுள் காட்டப்படுகிறார்கள்;
நிறைய மக்கள் வணங்கும் நிறைய கடவுள்களைப் பார்க்கிறோம்..
அந்தக் கடவுள்கள் எல்லாம் தீயவனை, தீமையை , அக்கிரமம் செய்தவனை
தண்டிக்கும் கடவுளாகத்தான் பார்க்கிறோம்..
அந்தக் கடவுள்கள் மகா வல்லமை படைத்த கடவுள்களாக, ஆயுதம்
தாங்கிய கடவுள்களாக, பெரிய அவதாரங்கள் எடுத்த கடவுள்களாக மிகப்
பிரமாண்டமாக காட்டப்படுகிறார்கள்..
அதே போல் இந்த உலகத்தில் வாழ்ந்த வல்லமை படைத்த அரசர்களை எடுத்துக்கொண்டாலும்
எதிரிகளைக் கொன்று குவித்து நாடுகளை கைப்பற்றிய அரசர்களாகத்தான்
வாழ்ந்தார்கள், அதே போல் தீமை செய்தவனுக்கு, தப்பு செய்தவனுக்கு
பல விதமான தண்டனைகளை நிறைவேற்றி அவர்களைக் கொன்று குவித்த அரசர்களைத்தான்
நாம் பார்த்திருக்கிறோம்.. மாபெரும் வல்லமை படைத்த, மாபெரும்
சாம்ராஜ்ஜியதை ஆட்சி செய்த சக்தி வாய்ந்த பெரிய இராஜாக்களைத்தான்
நாம் பார்த்திருக்கிறோம்..
இந்த உலகத்தில் மட்டும் அல்ல எந்த உலகத்திலும் பார்க்க முடியாத
ஒரே கடவுள் நம் கடவுள்தான்; அரசர்களுக்கெல்லாம் அரசரும் நம்
அரசர் மட்டும்தான்..
சர்வ சக்தி படைத்த கடவுளாய் இருந்தும்; சர்வ வல்லமை படைத்த
கடவுளாய் இருந்தும் சக்தியற்றவராக நிற்கிறார்; மூவுலக அரசராய்
இருந்தும் நாதியற்றவராக இருக்கிறார்..
இராஜ்ஜகளின் இராஜாவாக இருந்தும் இங்கே ஒரு பூஜ்ஜியமாக
நிற்கிறார்..
ஒன்றுமே இல்லாதவராக, தனக்காக ஒருவர் கூட இல்லாதவராக
காட்சியளிக்கிறார்..
பரிசுத்தர்க்கெல்லாம் பரிசுத்தர் ஒரு பாவியின் கோலம்
பூண்டிருக்கிறார்;
கோடிக்கணக்கான சம்மனசுக்கள் ஊழியம் செய்யும், மேலும் செய்ய
ஏங்கும் வான் படைகளின் ஆண்டவர் இங்கே ஒரு நிராயுதபானியாக
தனித்து நிற்கிறார்..
எப்படி இருக்கிறாராம்..?
"கொல்வதற்காக இழுத்துச் செல்லப்படும் ஆட்டுக் குட்டிபோலும்,
மயிர் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறியாடு போலும்
அவர் வாய் திறக்கவில்லை.
" நான் ஒரு நிரபராதி, என்னிடம் எந்த தப்பும் இல்லை, நான்
யாருக்கும் தீமை செய்ததில்லை, நன்மையே செய்திருக்கிறேன்
என்று தன் சார்பாகக் கூட வாதாடாமல் அமைதியாய் நிற்கிறார்..
குற்றமற்றவர் குற்றவாளிகள் முன் குற்றவாளியாக நிற்கிறார்..
தன்னை அடிப்பாருக்கும், தன் தாடையை பிய்ப்போருக்கும் தன்னை
பலவாரு துன்புறுத்துபவர்களுக்கும் ஒரு எதிர்ப்பும் காட்டாமல்,
முகம் சுழிக்காமல் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்..
சர்வ வல்லமை படைத்தவர்கள் தன்னுடைய வல்லமை முழுவதும் காட்டுவது
பெரிய விசயமல்ல.. அது பெரிய வீரமும் அல்ல..
சர்வ அதிகாரம் உள்ளவர் அல்லது அதிக பண பலம் அல்லது படை பலம்
உள்ளவர் தன்னுடைய அதிகாரத்தை காட்டுவது பெரிய விசயம் அல்ல..
ஆனால் சர்வ ஆற்றல் படைத்திருந்தும்; சர்வ அதிகாரம் ஒவ்வொரு
படைப்பின் மீதும் கொண்டிருந்தும் எதையுமே காட்டாமல் அடங்கி,
ஒடுங்கி ஒரு அடிமைபோல் அந்த இடத்தில் இருப்பது எவ்வளவு பெரிய
பொறுமை; எத்தகைய தாழ்ச்சி? எத்தகைய வீரம்?
இவையெல்லாம் யாருக்காக?
அதற்கும் இசையாஸ் விடை தருகிறார்...
" ஆடுகளைப்போல நாம் அனைவரும் வழி தவறி அலைந்தோம், கால் போன
வழியே ஒவ்வொருவரும் போனோம்:
நம் அனைவருடைய அக்கிரமங்களையும் ஆண்டவர் அவர் மேல்
சுமத்தினார்".
நம்முடைய அக்கிரமங்கள் முழுவதையும் நம் நேச பிதா தன் நேச
குமாரரின் மேல் சுமத்துகிறார்..
அவர் இவ்வளவு கொடுமையாக, இழிவாக நடத்தப்பட்டது நமக்காக அல்லவா?
"அவர் கொடுமையாய் நடத்தப்பட்டார்; தாழ்மையாய் அதைத் தாங்கிக்
கொண்டார்; அவர் வாய் கூட திறக்கவில்லை"
இந்த ஒரு சிந்தனையே நம்மை மனம் மாறச் செய்யாதா? அவரோடு நம்மை
ஒன்றிணைக்காதா? அவர் பரிசுத்தத்தோடு நாமும் பரிசுத்தமாக அவரோடு
இணைக்கப்பட மாட்டோமா?
அவருடைய இத்தனைப் பாடுகளுக்கும் நாம் அவருக்கு ஆறுதல் கொடுக்க
விரும்பினோம் என்றால் அது நம் மனமாற்றத்தை தவிர வேறு
வழியில்லை..
அதை செய்ய நாம் தயாரா?
எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி.. தயவாயிரும்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க ! |
|