" ஆனால் நம் பாவங்களுக்காக அவர் காயப்பட்டார், நம் அக்கிரமங்களுக்காகவே
அவர் நொறுக்கப்பட்டார்; நம்மை நலமாக்கும் தண்டனை அவர் மேல்
விழுந்தது, அவருடைய காயங்களால் நாம் குணமானோம்".
இசையாஸ் ஆகமம் 53 : 5
இசையாஸ் (ஏசாயா) ஆகமத்தில் ஒரு சிறப்பு அம்சத்தைப் பார்க்க
முடிகிறது. நமது நான்கு நற்செய்தியாளர்களும் ஆண்டவரைக்
கொடுமைப்படுத்தியது, சிலுவையில் அறைந்தது யூதர்களும், சேவகர்களும்
என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இசையாஸ் இறைவாக்கினரோ
ஆண்டவரை அவமானப்படுத்தியது, அடித்தது, சிலுவையில் அறைந்தது
நாம் என்று குறிப்பிடுகிறார். இது எவ்வளவு சிறந்த நிதர்சனமான
உண்மை.
நாம் எப்போதுமே ஆண்டவருடைய திருப்பாடுகளை தியானிக்கும்போது யூதர்கள்,
தலைமைக்குருக்கள், பரிசேயர், சதுசேயர் மற்றும் போர்வீரர்கள் நம்
ஆண்டவரை எப்படியெல்லாம் துன்புறுத்தியுள்ளனர். அடித்தனர்; உதைத்தனர்;
முள்முடி சூட்டினர். "ஐயோ பாவம் இயேசு", என்று உச்சுக்
கொட்டிக்கொண்டேதான் பாடுகளை தியானிப்போம். நான் அந்த இடத்தில்
இருந்திருந்தால் அப்படி செய்திருப்பேன் இப்படி செய்திருப்பேன்
என்று பெருமை பேசுவோம்..
ஆனால் ஆண்டவருடைய பாடுகளில் மறைந்திருக்கும் மறு பகுதியை
தியானிக்க மறந்துவிடுவோம்..
அந்த கூட்டத்தில் நாமும்தான் இருந்தோம் என்பதை மறந்து
விடுவோம்..
ஆண்டவருக்கு அத்தனை கொடுமைகளை செய்ததும் நாமும் தான் என்ற சிந்தனை
நமக்கு எழாது.
நாம் எப்போதெல்லாம் பாவத்தில் விழுகிறோமோ, பாவத்தில்
வாழ்கிறோமோ, அதில் உழல்கிறோமோ, பிறரை துன்புறுத்துகிறோமோ, பிறருக்கு
உதவி செய்யாமல் நகர்கிறோமோ, விசுவாசத்தை மறுதலிக்கிறோமோ, கடமைகளை,
அந்தஸ்துக்கு உரிய கடமைகளை செய்யாமல் இருக்கிறோமோ, கடவுளின் சாயலை,
பாவனையை, இயல்பை எப்போதெல்லாம் இழக்கிறோமோ அப்போதெல்லாம் அவர்கள்
செய்தது அனைத்தையும் ஏன் அதற்கு மேலும் நம் ஆண்டவருக்கு நாம்
செய்கிறோம் என்பதுதான் உண்மை.
இதை நம் ஆண்டவரே பல புனிதர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்;
சொல்லியிருக்கிறார். புனிதர்கள் வரலாறுகளில் நாம் பார்க்க
முடியும்..
ஏன் புனித இராயப்பரிடம் கூட வேறு ஒரு காரணத்திற்காக
சொல்லியிருக்கிறார்..
அவர் வேத சாட்சிய மரணத்திற்கு பயந்து செல்லும் போது ஆண்டவர்
சிலுவையுடன் காட்சி அளித்தார்.
" ஆண்டவரே எங்கு செல்கிறீர்? " என்று அவர் கேட்ட போது,
" மறுபடியும் சிலுவையில் அறையப்பட போகிறேன் " என்பார்..
முத்திப்பேறு பெற்ற ஆலன் ரோச் என்ற குருவானவர் திருப்பலி
நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது காட்சி கொடுத்து,
" ஏன் என்னை மறுபடியும் சிலுவையில் அறைகிறாய்" என்றார்.
இப்படி பல சம்பவங்கள் உள்ளது.. இவை எல்லாவற்றிக்கும் மேலாக, ஒரு
புனிதையிடம் ஆண்டவர் இப்படிச் சொல்லுவார்,
" ஒரே ஒரு பாவி மனம் திரும்புவதாக இருந்தால் நான் சிலுவையில்
பட்ட அத்தனை வேதனைகளையும் மறுபடியும் பட நான் தயாராக
இருக்கிறேன்" என்பார்..
எப்பேர்பட்ட வார்த்தை.. எத்தகைய பேரன்பு..
இசையாஸ் இறைவாக்கினர் எழுதியிருப்பது எத்தனை உண்மை..
எப்படிச் சொல்லுகிறார் பாருங்கள்..
"நம் பாவங்களுக்காக அவர் காயப்பட்டார்"
" நம் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்"
" நம்மை நலமாக்கும் தண்டனை அவர் மேல் விழுந்தது"
" அவருடைய காயங்களால் நாம் குணமானோம்".
நாம் எதிலிருந்து குணமானோம்? பாவத்திலிருந்து குணமானோம்..
பைபிளை விட சிறந்த அப்டேட் புத்தகம் இந்த உலகில் எங்கும்
இல்லை..
கி.பி. 400 -களில் வாசித்தாலும் அவர்களுக்கு பொருந்தும்..
கி.பி. 1500- களில் வாசித்தாலும் அவர்களுக்கு பொருந்தும்
இப்போது வாசித்தாலும் நமக்குப் பொருந்தும்..
இன்னும் 10,000 ஆண்டுகளுக்குப் பின் வாழ்பவர்கள் வாசித்தால்
அவர்களுக்கும் பொருந்தும்..
இது தானாகவே அப்டேட் ஆகிவிடும் (ளுநடக-ரினயவநன hழடல டிழழம)..
நம்மை நலமாக்கும் தண்டனையை இன்னும் நாம் நம் ஆண்டவர்
இயேசுவுக்கு நாம் கொடுக்கப்போகிறோமா?
அவருடைய காயங்களால் நாம் உண்மையிலியே முழுவதும் குணமாகி
விட்டோமா?
நாம் நம்முடைய பாவங்களிலிருந்து உடனடியாக விடுபட்டால்தான்
ஆண்டவரின் சிலுவைப் பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்படும்..
நாம் ஆண்டவர் தொடர்ந்து துன்பப்படுவதும் அல்லது துன்பப்படாமல்
இருப்பதும் நம் கையில்தான் உள்ளது..
ஆண்டவருடையை சிலுவையையும், முள்முடியையும் அவரிடமிருந்து
வாங்கி எரிய நமக்கு சம்மதமா?
நாம் உடனடியாக மனம் திரும்ப தயாரா?
எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி.. தயவாயிரும்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !
|
|