• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

தவக்கால சிந்தனைகள்  -16

  " இளந்தளிர் போல் அவர் வளர்ந்தார், வரண்ட நிலத்திலிருக்கும் வேர் போலத் துளிர்த்தார்"  


(இந்தப்பதிவில் ஒரு சிலருக்கு ஒரு சில செய்தியும் இருக்கிறது)

" இளந்தளிர் போல் அவர் வளர்ந்தார், வரண்ட நிலத்திலிருக்கும் வேர் போலத் துளிர்த்தார்"

இசையாஸ் 53 : 2

இந்த வார்த்தைகளில் ஆண்டவரின் உடல் வளர்ச்சியும், அவர் 33 ஆண்டுகளாக வாழ்ந்த வாழ்க்கையையும் காணலாம்..

மெல்லிய தேகமே அவர் தேகம்.. அவர் வாழ்ந்தது பரித்தியாக வாழ்க்கையே. வரண்ட நிலம் என்பது பாலைவனத்தைக் குறிக்கிறது..

அவர் வாழ்க்கை முழுவதும் ஜெப தவ பரிகார வாழ்க்கைதான் என்பதை வரண்ட நிலத்திலிருக்கும் துளிர் என்ற வார்த்தை விளக்குகிறது..

அவர் இரவெல்லாம் விழித்திருந்து ஜெபித்தார், தனிமையான இடங்களைத் தேடினார், அவருக்கு தலைசாய்க்கவும் இடமில்லை என்றெல்லாம் வேதாகமத்தில் பார்க்கிறோம்.

இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.. கைகளில் தூரிகை இருப்பவனெல்லாம் ஓவியனும் அல்ல, கையில் பேனா பிடித்தவர் எல்லாம் எழுத்தாளரும் அல்ல..

ஆண்டவருடைய சில பாடுபட்ட படங்களைப் பார்க்கும் போது நம் ஆண்டவரை ஒரு பயில்வான் போல வரைந்த ஒரு சில ஓவியங்களைப் பார்க்க முடிகிறது.. அதுபோன்ற உடல் இருந்தால்தான் இவ்வளவு இரத்ததையும் சிந்தி சிலுவையில் மரிக்க முடியுமா? அவர் உடலை வளர்க்கவா மனிதனாகப் பிறந்தார்?

மனவுறுதி ஒன்று போதும் எப்பேர்பட்ட வேதனையையும் தாங்குவதற்கும், அனுபவிப்பதற்கும் தனக்கு கொடுக்கப்பட்ட எல்லையை நோக்கி நகர்வதற்கும்.

தமிழகத்தில் தரம் தாழ்ந்து வரும் ஒரு கத்தோலிக்க பத்திரிக்கை மாதாவின் உடல் உருவத்தை குறித்து ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறது. அதில் மாதா ஒல்லியாக இல்லை குண்டாக இருந்தார்கள் என்று தன்னுடைய தரம் தாழ்ந்த எழுத்துக்களில் சொல்லியிருக்கிறது.. இது ரொம்ப முக்கியமான விசயமா? இது தேவையா? ஆன்மீகத்திற்கு எந்த வழியில் இது உதவும்? இதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு அக்கறை கிடையாது.

கடவுளால் சிருஷ்ட்டிக்கப்பட்ட ஞானம், அதுவும் கடவுளுக்காகவே சிருஷ்ட்டிக்கப்பட்ட ஞானம், கடவுளுக்காகவே தன்னை கையளித்த அர்ப்பணித்த ஞானம், கடவுளின் மீட்புத்திட்டத்திற்காக தன்னை கையளித்த (இணை மீட்பராக) ஞானம்; தன்னை கடவுளின் அடிமை என்று வெளிப்படுத்திய ஞானம், கடவுளின் திட்டத்திற்காக விரைந்து செயல்பட்ட ஞானம், ஜெப தவ பரிகாரங்களில் வாழ்ந்த ஞானம்; அவரைப் போய் குண்டாக இருந்தார்கள் என்று எழுதும் அளவுக்கு அந்த பத்திரிக்கைக்கு துணிச்சல் வந்திருக்கிறது.

'தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை' என்ற பழமொழி கூட அதற்கு மறந்துவிட்டது.

அடுத்து அது இப்படி எழுதும். ஆண்டவரும் உருவத்தில் ஒரு பயில்வான்தான். அப்பதான் அவரால இரத்தம் சிந்த முடியும், கல்வாரி வரை பயணம் செய்ய முடியும் என்று, அந்த தரம் தாழ்ந்து வரும் பத்திரிக்கையை குறித்து தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்..

சரி நாம் தியானத்திற்கு வருவோம்..

" அவரைப் பார்த்தோம், அவரிடம் அழகோ அமைப்போ இல்லை. கவர்ச்சியான தோற்றமும் இல்லை. இகழப்பட்டவர், மனிதரால் புறக்கனிக்கப்பட்டவர்; அவர் துன்புறும் மனிதனாய் துயரத்தில் வாழ்ந்தவராய் இருந்தார்.

கண்டோர் கண் மறைத்து அருவருக்கும் ஒரு மனிதனைப் போல், அவர் இகழப்பட்டார், நாம் அவரை மதிக்கவில்லை"

இந்த வரிகள் ஆண்டவரின் பாடுகளை ஒன்றுவிடாமல் விவரிக்கின்றது.

நேற்று பார்த்த வரிகளின் தொடர்ச்சியாக இருக்கிறது..

திடுக்கிடும் அளவிற்கு இருந்தார்; மனித சாயலே அவரிடம் இல்லை என்று நேற்று பார்த்தோம் இந்த வரிகளும் அதையே பிரதி பலிக்கின்றன என்றால் இதுவரை மனித சரித்திரத்தில் நம் இயேசு இரட்சகரை துன்புறுத்திய அளவுக்கு வேறு யாரையும் இந்த உலகம் துன்புறுத்தியதே இல்லை என்பதே உண்மை.

அதில் கடைசியாக வரும் வரி அன்றும் பொருந்தும்; இன்றும் பொருந்தும்.

" நாம் அவரை மதிக்கவில்லை"

அன்று அவரை யூதர்கள் மதிக்கவில்லை. தலமைக் குருக்கள் மதிக்கவில்லை. சேவகர்கள் மதிக்கவில்லை. ஏன்? ஏனென்றால் ஆண்டவர் யார்? இயேசு யார் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் இன்று அவரைப் பற்றி நமக்கு நன்றாக தெரிந்திருந்தும் நாம் மதிப்பதில்லை.

" திவ்ய நற்கருணையில் இருப்பது ஆண்டவர் இயேசு, நடுப்பூசைக்குப் பின் அது அப்பம் அல்ல ஆண்டவர், ஆண்டவர் அதில் ஆன்மாவோடும், உடலோடும், இரத்தத்தோடும் இருக்கிறார். முழு மனித சுவாபவத்தோடும், முழு தெய்வ சுபாவத்தோடும் இருக்கிறார்" என்று நன்றாகத் தெரிந்தும்............,

'இடது கையில் கொடுப்போம், வலது கையில் கொடுப்போம், நாவில் கேட்டாலும் கைகளில் திணிப்போம், சில இடங்களில் கன்னத்தில் அறைந்து கைகளில் கொடுப்போம்' என்றால் நீங்கள் ஆண்டவரை மதிக்காதவர்கள்தானே? விசுவாசம் இல்லாதவர்கள்தானே?

அதுபோல்தான் வாங்குபவர்களும்..

ஆண்டவருடைய பாடுகள் இன்னும் முடியவில்லை, அவர் அனுபவித்த அவசங்கைகளும் இன்னும் முடியவில்லை.. அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது..

இந்த உலகம் வாழ, அழிவிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. திவ்ய நற்கருணை ஆண்டவர் விசுவாசம் காப்பாற்றப்பட்டால், அது புதுப்பிக்கப்பட்டால், புதுப்பொழிவு அடைந்தால் இந்த உலகம் தப்பிக்கும், இல்லையென்றால் அது நாசமாக போய்விடும். யாராலயும் அதைக் காப்பாற்ற முடியாது..

யார் ஆண்டவரை மதிக்கிறார்களோ இல்லையோ..

நாம் மதிப்போமா?

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி.. தயவாயிரும்..

இயேசுவுக்கே புகழ் !
மரியாயே வாழ்க !
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்