(அடுத்த ஸ்தலங்களுக்கு போகும் முன்..)
"பல பேர் அவரைக் கண்டு திடுக்கிட்டார்கள்- அவரது தோற்றம் அவ்வளவு
சீர்குலைந்திருந்தது, மனித சாயலே அவரிடம் இல்லை- மனிதர்கள் வடிவே
அவரிடம் காணப்படவில்லை"
இசையாஸ் 52 : 14
நம்முடைய நான்கு நற்செய்தியாளர்களும் ஆண்டவருடைய திருப்பாடுகளை
முழுமையாக எழுதவில்லை என்றே சொல்லலாம். ஆண்டவருடைய பாடுகள் ஒவ்வொரு
நற்செய்தியிலும் இரண்டு அல்லது இரண்டரைத் தாள்கள்தான் உள்ளது.
அதிலும் விசாரணை அலைக்கழிப்பு என்று பாதி சென்றுவிடும். ஆண்டவருடை
பாடுகளின் துயரம் ஒரு பக்கம் அளவிற்குக் கூட சொல்லப்படவில்லை.
ஆனால் ஆண்டவருடைய திருப்பாடுகளின் அகோரம் பைபிளில் இன்னொரு இடத்தில்
சொல்லப்பட்டுள்ளது. அதுதான் இசையாஸ் (ஏசாயா) ஆகமம்.
நாம் ஆண்டவருடைய பாடுகளை முழுமையாக தியானிக்க வேண்டுமென்றால்
நான்கு நற்செய்தியோடு சேர்த்து இசையாஸ் ஆகமத்தையும் தியானிக்க
வேண்டும். அப்போதுதான் ஆண்டவருடைய பாடுகள் முழுமையாகும்.
ஆண்டருடைய பாடுகள் குறித்து மேலே சொல்லப்பட்ட வார்த்தைகளை ஒரு
நாள் என்ன ஒரு வாரம் முழுவதும் தியானிக்கலாம். தியானித்தால் ஆண்டவரின்
பாடுகளின் பின்னே உள்ள வேதனையும் அகோரமும் நம் கண் முன்னே
விரியும்..
" பல பேர் அவரைக் கண்டு திடுக்கிட்டார்கள்"
மனிதர்கள் திடுக்கிடும் அளவுக்கு அவர் இருந்தார் என்றால் எப்படி
இருந்திருப்பார்? இத்தனைக்கும் பாடுகளின் பெரிய வாதனையான
சிலுவையில் நம் தெய்வம் இன்னும் அரையப்படவில்லை.
அதற்கு முன்பே இப்படி சொல்லப்பட்டால்..
பெரிய வியாழன் இரவு அவர் பிடிபட்டதிலிருந்து வெள்ளி காலை பத்து
மணிக்குள் எவ்வளவு கொடுமையான வேதனையை அவர் அனுபவித்திருக்க
வேண்டும். அவரை கைது செய்ததிலிருந்து எந்த அளவுக்கு அவர்கள்
அவரை சித்திரவதை செய்திருக்க வேண்டும்..
அதாவது ஒரு கொடூர கொலைகார கூட்டத்தின் மத்தியில் சிக்கிய ஒரு
அப்பாவியை அந்த கொடூர கூட்டம் எப்படியெல்லாம் நடத்தியிருக்கும்.
அதுவும் எதிரிகளை கொன்று குவிக்கும் சிப்பாய்கள்; பிடிபட்ட எதிரிகளை
கொடூரமாக வதைத்தெடுக்கும் சிப்பாய்கள்; அந்த எதிரிகளை சித்திரவதை
செய்து அதில் மகிழ்ச்சியடையும் சிப்பாய்கள்; இவர்கள் மத்தியில்
அல்லவா? நம் கடவுள் மாட்டிக் கொண்டார்..
என்னவெல்லாம் செய்திருக்கக் கூடும்?
1. அவர்களுக்குத் தோனும்போதெல்லாம் ஆண்டவரை அடித்திருக்க
வேண்டும்.. அதுவும் பலவிதமாக.. உடலின் பல பாகங்களில்.
2. அவரை வித விதமான வழிகளில் அவருக்கு வேதனை உண்டாக்கி துன்பப்படுத்தியிருக்க
வேண்டும்..
3. அவரை மிகக் கேவலமாக, தரக்குறைவாக நடத்தியிருக்க வேண்டும்..
கண்டிப்பாக ஆண்டவருடைய பதினைந்து வாதைகளை இங்கே அவர்கள்
நிறைவேற்றியிருக்க வேண்டும்..
4. அரச உத்தரவுப்படி கொடுக்கப்பட வேண்டிய தண்டனைகள் தவிர்த்து
அதாவது கசையடி மற்றும் சிலுவை மரணம் தவிர்த்து என்னவெல்லாமோ
அவருக்கு தண்டனைகள், இன்னல்கள் வேதனை கொடுக்க முடியுமோ அத்தனையும்
கொடுத்து மகிழ்ந்திருக்க வேண்டும்.
5. "அவர்தான் இந்த உலகத்தில் உள்ள மனிதர்களில் மிகவும் ஈனமான,
சபிக்கப்பட்ட பிறவி" என்று யூதர்களும், போர்வீரர்களும் கருதியதால்
அவரை மிகவும் கீழ்த்தரமாக, தரக்குறைவாக நடத்தியதுமன்றி இதுபோன்ற
ஆட்களுக்கு செய்யக்கூடிய மிகவும் தரக்குறைவான தண்டணைகளைக்
கொடுத்து அவர்கள் மகிழ்ந்திருக்க வேண்டும்..
அடுத்த வரிகளைப் பாருங்கள்..
"அவரது தோற்றம் அவ்வளவு சீர்குலைந்திருந்தது"
அவரது தோற்றம் அவ்வளவு சீர்குலைந்திருந்தது என்றால் அவரது உடல்
என்ன பாடுபட்டிருக்கும். அவர் உடலை அவர்கள் என்னவெல்லாம்
செய்திருப்பார்கள்; எப்படியெல்லாம் குத்தி, அடித்து, இழுத்து,
சுட்டு, தாடியைப் பிடுங்கி, தலை முடியைப் பிடிங்கி இழுத்து அடித்து
வதைத்திருக்க வேண்டும். அருவருக்க விதத்தில் அவரை நடத்தியிருக்க
வேண்டும்..
இவையெல்லாம் பொறுமைமாக தாங்கிக்கொண்டிருந்தார் என்றால் அவருடைய
பொறுமை எப்பேர்பட்ட பொறுமையாக இருந்திருக்க வேண்டும்..
அடுத்த வரிகளைப்பாருங்கள்;
மனித சாயலே அவரிடம் இல்லை- மனிதர்கள் வடிவே அவரிடம் காணப்படவில்லை
இந்த வரிகள் மிகவும் தியானிக்கப்பட வேண்டியவை..
மனித சாயலே அவரிடம் இல்லையென்றால் அவர் முகத்தை அவர் உடலை அவர்கள்
எப்படி வதைத்திருக்க வேண்டும்?
அது வதை அல்ல சித்திரவதை..
அதுவும் தொடர்ச்சியான சித்திரவதைகள்..
சிங்கங்களுக்கு மத்தியில் சிக்கிய ஆட்டுக்குட்டியாக.. அதுவும்
கத்தாக செம்மறி ஆட்டுக்குட்டியாய் நம்மைப் படைத்த நம் ஆண்டவர்
இயேசு.
இன்னும் அந்த வாதைகளை விவரிக்க வேண்டும் என்றால் இது போன்ற வேதனைகளை
தாங்குவதற்குப் பதிலாக அவர் நான்கு முறைகள் சிலுவையில் அரையப்பட்டிருக்கலாம்.
அந்த வேதனைகளை விட இந்த வேதனைகள் கொடிது.
வேண்டுமென்றால் ரோமானியர்கள் தங்களிடம் பிடிபட்ட கைதிகளை எப்படியெல்லாம்
சித்திரவதை செய்வார்கள் என்று வரலாறுகளில் தேடி வாசியுங்கள்..
அவர்களாவது அரசியல் கைதிகள்; கொஞ்சமாவது டீசண்டான தண்டனைகள்
கொடுத்திருக்கலாம்..
ஈனப்பிறவி, சாவுக்குரியவன் என்று அவமானச் சிலுவைச்சாவை எதிர்
நோக்கியிருக்கும் ஒரு கைதியை அவர்கள் எவ்வளவு கேவலமாக நடத்தியிருக்க
வேண்டும்; வதைத்திருக்க வேண்டும்?
அதுதான் அவர் முகத்தில் மனித சாயலே இல்லாமல் போனது..
ஆண்டவருடைய பாடுகள் முழுவதையும் ஒரு நான்கு பைபிள்களாக
போட்டாலும் அது முழுமை அடையாது..
அதன் ஆழம்; கனாகணம் மிகவும் அதிகம்..
இப்படிப்பட்ட கொடூர வாதைகளுக்கு தன்னை கையளித்தார் என்றால் அவர்
மனுக்குலத்தின் மீது வைத்துள்ள நேசம் எந்த அளவுக்கு உயர்ந்தாக
இருக்க வேண்டும்..
இத்தனை வாதைகளையும் யாருக்காக அனுபவித்தார்?
எந்த கடவுளாவது மனிதனை மீட்க தானும் ஒரு மனிதனாகி அந்த மனிதன்
தன் பாவங்களுக்காக அனுபவிக்க வேண்டிய பாடுகளை தான் பட்டு அவனை
மீட்டதாக உலகில் எங்கேயாவது; எந்த மதத்திலாவது கேள்விப்பட்டதுண்டா?
அதுதான் நம் கடவுள்; நம் இயேசு ஆண்டவர்.
அவருடைய திருப்பாடுகளின் வலி, வேதனை அதிலும் அவர் கடைப்பிடித்த
நிதானம், பொறுமை மிகவும் அசாத்தியமானது..
அவர் பட்ட அத்தனைப் பாடுகளையும் நாம் இன்னும் விரயமாக்கி பாவத்திற்கு
மேல் பாவம் செய்து அவரை இன்னும் அதே நிலையிலேயே
வைத்திருக்கிறோம் என்பது கசப்பான உண்மை..
அத்தனைப் பாடுகளையும் நம்மை நித்திய அழிவான நரகத்திலிருந்து
மீட்க அவர் பட்டார்..
ஆனால் நாம் அவரின் இரத்தத்தையும், அவர் கொடுத்த தேவ திரவிய அனுமானங்களையும்,
ஏன் அவரையுமே புறக்கணித்து இன்னும் நரகத்திற்கு செல்லும்
பாதையிலேயே பயணம் செய்துகொண்டு இருக்கிறோம்..
நம்முடைய பாவ பாதை மாறுமா? பயணம் மோட்சத்தை நோக்கி திரும்புமா?
நாம் மனம் திருந்துவோமா? முதலில் நாம் பாவத்தில்தான் இருக்கிறோம்
என்பதை உணர்வோமா?
இயேசு தெய்வத்தின் பாடுகளை தியானித்தால் மட்டும் போதாது..
அதை பயனுள்ளதாக்க வேண்டும்..
செய்வோமா?
எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி.. தயவாயிரும்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !
|
|