• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

தவக்கால சிந்தனைகள் - 09

  மாபரன் இயேசுவுக்கு சீமோனின் உதவி...  


பாருங்கள் ஆண்டவர் இயேசுவுக்கு கூட மனித உதவி தேவைப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கசையடிபட்டு உடலின் தசைகள் கிழிந்து உடையோடு ஒட்டியிருக்கிறது. இப்போதாவது அவரை சும்மா சிலுவை சுமக்க விடவில்லை. அவர்களது கொலைவெறி தீர்ந்தபாடில்லை. அவரைப் பார்க்கும் போதெல்லாம் அடித்துக்கொண்டே இருக்கவேண்டும் போல் அவர்களுக்கு தோன்றுகிறது.
சவுக்கால் அடித்துக்கொண்டே சிலுவை சுமக்க வைக்கிறார்கள்.

அனைவருக்கும் வலுவூட்டும் தேவன் முற்றிலுமாக வலு இழந்திருக்கிறார். இருந்தாலும் எங்கிருந்தாவது வலுவை வரவழைத்துக் கொண்டு சிலுவை சுமக்க முயற்சி செய்கிறார். ஏற்கனவே ஒரு முறைவிழுந்துவிட்டார். அவர்களுக்கு ஒரு ஐயம்.

"இவன் கல்வாரி செல்லும் வரை தாங்குவானா? நாம் இவனை சிலுவையில் அல்லவா அறைந்து கொல்ல வேண்டும்  "என்ற எண்ணத்தில் சும்மா வந்த சீமோனை பிடித்து இயேசு சுவாமியின் சிலுவையை சுமக்க கட்டாயப்படுத்தி அவரை சுமக்க வைக்கிறார்கள்.

சும்மா பார்க்க வந்த சீமோனுக்கு திவ்ய இயேசுவின் சிலுவை பரிசாக கிடைக்கிறது. அவர் இயேசுவின் சிலுவையை சுமந்ததால் சரித்திரத்தில் அவருக்கு இடம்.

எல்லா ஆலயங்களிலும் எல்லா புனிதர்களின் சுரூபங்கள் இருப்பதில்லை. ஆனால் எல்லா ஆலயங்களிலும் இந்த சீமோன் இருப்பார்..

ஆண்டவருக்கு உதவி செய்தால்.. அதுவும் அவர் சிலுவைப்பாடுகளில் பங்கேற்றால் அதற்கு எத்தகைய மகிமை என்பதற்கு சீரேனே ஊராரான சீமோன்தான் மிகச்சிறந்த உதாரணம்..

சிலுவை.. திருச்சிலுவை.. யாருக்கு எப்போது எப்படி கொடுக்கப்படும் என்று தெறியாது. ஆனால் கொடுக்கப்படும் நேரத்தில் என் சிலுவையை நான் சுமக்க மாட்டேன் என்று பயந்து ஓடுவது ஒரு கிறிஸ்தவனுக்கு அழகல்ல. ஆகவே எந்த சிலுவையாக இருந்தாலும் அதை சுமக்க ஆண்டவராகிய இயேசுவிடமே தைரியத்தையும், சக்தியையும் வாங்கிக்கொண்டு அவர் சிலுவையை நாம் சுமந்தே ஆக வேண்டும். 

"என்னை பின் செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்து நாள்தோறும் தன் சிலுவையை தூக்கிகொண்டு என்னைப் பின் செல்லட்டும்" என்ற இயேசு சுவாமியின் வார்த்தையை இதயத்தில் தாங்கினாலே போதும் வலிமை தன்னால் வந்துவிடும்.

ஆண்டவர் தரும் சிலுவைகளை மனமுவந்து சுமப்போம்..

சரி இன்னொரு கருத்தும் இங்கு நம் தேவன் சொல்லுகிறார். அதுதான் பிறருக்கு நம் உதவி தேவைப்படும்போது கண்டிப்பாக நாம் அவர்களுக்கு உதவி செய்தே ஆகவேண்டும். இங்கு சூழ்நிலை முக்கியமில்லை. அடுத்தவர் என்ன நினைப்பார் என்பதும் முக்கியமல்ல. இது போன்ற ஒரு சூழ்நிலையில் உதவி செய்யாமல் நழுவுவதும் மிகப்பெறிய பாவம்தான். அது பொருள் உதவியாக இருக்கலாம். உடல் உதவியாக இருக்கலாம். நல்ல ஆறுதல் வார்த்தையாக கூட இருக்கலாம்.

சில வேளைகளில் நம்மைத்தேடி உதவி செய்ய வாய்ப்புகள் வரும். சில வேளைகளில் நாம் தேடி உதவி செய்யவேண்டும். எது எப்படி இருந்தாலும் நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வோமா?



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்