• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திருநீற்றுப்புதன்

   கடவுளோடு ஒப்புரவாகுங்கள்  

  தன் மகன் இயேசுவின் வழியாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கிய கடவுள் இன்று நாம் அருளின் காலமான தவக்காலத்தைத் தொடங்கியிருக்கின்றோம். இன்றைய நாளில் நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளோடு ஒப்புரவாகவேண்டும் என்ற உயரிய அழைப்பினைத் தருகின்றது. நாம் ஏன் கடவுளோடு ஒப்புரவாகவேண்டும்? கடவுளோடு எப்படி ஒப்புரவாகுவது? கடவுளோடு ஒப்புரவாகுவதால் நாம் அடையும் நன்மைகள் என்ன? ஆகியவற்றைக் இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இவ்வாறு வாசிக்கின்றோம்: "உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள், கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்." ஆம், மனிதர்கள் தங்களுடைய கீழ்ப்படியாமையால் கடவுளோடு உள்ள உறவை முறித்துக்கொண்டார்கள். அப்படியிருந்தும், கடவுள் அவர்களுடைய குற்றங்களைப் பொருட்படுத்தாமல், தம் மகன் இயேசுவின் வழியாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொண்டார். அப்படியானால், நாம் ஒவ்வொருவரும் கடவுளோடு ஒப்புரவாக இருக்கவேண்டும் என்பதே அவர் நமக்குக் கொடுக்கப்படும் அழைப்பாக இருக்கின்றது.

கடவுளோடு எப்படி ஒப்புரவாகுவது என்பதற்கான பதிலை இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தில் இயேசு தருகின்றார். அறம் செய்தல், இறைவேண்டல் செய்தல், நோன்பிருத்தல், என்ற மூன்று முக்கியமான உண்மைகளைச் சொல்லும் இயேசு, இவற்றின்மூலம் நாம் கடவுளோடு ஒப்புரவாகலாம் என்று கூறுகின்றார். இங்கு ஒரு கேள்வி எழலாம். அது என்ன கேள்வி எனில், அறம் செய்தல், இறைவேண்டல் செய்தல், நோன்பிருத்தல் இவற்றின் மூலம் ஒருவர் எப்படிக் கடவுளோடு ஒப்புரவாக முடியும் என்பதுதான் அந்தக் கேள்வி.

திருத்தூதரான புனித யோவானின் கூற்றுப்படி (1யோவா 4: 20) மனிதரோடு ஒப்புரவாகாமல் அல்லது மனிதரை அன்பு செய்யாமல், கடவுளோடு ஒப்புரவாகுவதோ அல்லது கடவுளை அன்பு செய்யவோ முடியாது. மனிதரை அன்பு செய்வதற்கு ஒருவர் அறச்செயல்களைச் செய்தாகவேண்டும். இதைவிட மிக முக்கியமான செய்தி என்னவெனில், ஒருவர் சக மனிதரோடு ஒப்புரவாகவேண்டும் அல்லது அவரை அன்பு செய்யவேண்டும் என்றால், அதற்கு அவர் தன்னை முதலில் அன்பு செய்யவேண்டும். தன்னை அன்பு செய்கின்றவர் கட்டயாம் நோன்பிருந்தாக வேண்டும். எனவே, ஒருவர் கடவுளோடு ஒப்புரவாக வேண்டும் என்றால், அவர் தன்னோடும் பிறரோடும் ஒப்புரவாகவேண்டும். அதற்கு நோன்பும் அறச் செயலும் இறைவேண்டலும் தேவையானதாக இருக்கின்றன.

கடவுளிடமிருந்து பெற்ற அழைப்பை இழக்கவேண்டாம்


கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்ற சொன்ன புனித பவுல், அடுத்ததாகச் சொல்லக்கூடிய செய்தி, 'கடவுளிடமிருந்து பெற்ற அழைப்பை இழக்கவேண்டாம்' என்பதாகும். நாம் கடவுளிடமிருந்து பெற்ற அழைக்க இழக்கவேண்டாம் என்று பவுல் வலியுறுத்திக் கூறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கின்றது. அது என்னவெனில், மனிதர்களாகிய நாம் அனைவரும் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக இருக்க, அவர் பாவம் அறியாத தம் திருமகனை பாவநிலை ஏற்கச் செய்தார் என்பதாகும். இது கடவுளைப் பொருத்தமட்டில் ஒரு மிகப்பெரிய செயல் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், எவரும் தம் மகன் அல்லது மகள் தாழ்ந்துபோகவேண்டும் என்று விரும்புவதில்லை. ஆனால், கடவுள் பாவமே அறியாத தன் மகனைப் பாவநிலை ஏற்கச் செய்தார் எனில், அங்குதான் மேலான கடவுளின் அன்பு இருக்கின்றது. எனவே, இத்தகைய பேரன்பு மிக்க இறைவனிடமிருந்து வரும் என்னிடம் திரும்பி வாருங்கள் யோவே 2: 12,13) அல்லது ஒப்புரவாகுங்கள் என்ற அழைப்பினை நாம் இழந்துவிடவேண்டாம் என்பதுதான் பவுல் கூறும் செய்தியாக இருக்கின்றது.

இதுவே தகுந்த காலம்; இன்றே மீட்பு நாள்


இன்றைய இரண்டாவது வாசகத்தின் வழியாக புனித பவுல் நமக்குச் சொல்லும் மூன்றாவது முக்கியமான செய்தி, கடவுளோடு ஒப்புரவாகுவதற்கு இதுவே தகுந்த காலம்; இன்றே மீட்பு நாள் என்பதாகும். பலர் 'கடவுளோடு நாளை ஒப்புரவாகலாம் பிறகு ஒப்புரவாகலாம்' என்று இருப்பதுண்டு. இதனால் அவர்கள் கடவுளோடு ஒருபோதும் ஒப்புரவாகாமல் போகும் நிலைதான் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாகக் கொடுக்கும், 'இதுவே தகுந்த காலம். இன்றே மீட்பு நாள்' என்ற அழைப்பு நமது கவனத்திற்குரியது.

கடல் ஆமைகளிடம் ஒரு வித்தியாச வழக்கம் உண்டு. அவை முட்டையிடும்பொழுது கடலில் முட்டையிடாமல், நிலத்திற்கு வந்து, குழிகளைத் தோண்டி முட்டையிட்டு மூடிவிட்டுப் போய்விடும். குறிப்பிட்ட காலத்தில் அவை குஞ்சுகளாகப் பொறித்துவிடும். குஞ்சுகளாகப் பொறித்தபின் அவை நிலத்தில் தங்குவதில்லை. மாறாக, தங்களுடைய பெற்றோர் இருக்கும் கடலுக்கு வந்துவிடும். ஒருவேளை அவை நிலத்திலேயே இருந்தால், பறவைகளுக்கும் பிற உயிரினங்களுக்கும் இரையாகிவிடும் என்பதலேயே அவை இப்படிச் செய்யும்.

மனிதர்களாகிய நாமும்கூட இந்த மண்ணக இன்பமே போதும் என்று இருந்துவிடாமல், முடிவில்லா வாழ்வினைத் தரும் இறைவனைத் தேடிச் செல்லவேண்டும்; அவரோடு ஒப்புரவாகவேண்டும். அதுதான் இறைவனின் விரும்பமும்கூட. எனவே, நாம் கடவுளோடு ஒப்புரவாக இதுவே தகுந்த காலம் என்று நம்மை அன்பு செய்து, பிறரையும் அன்பு செய்து, அதன்மூலம் கடவுளையும் செய்து, அவரோடு ஒப்புரவாகுவோம்.

'என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது' (யோவா 15: 5) என்பார் இயேசு. ஆகையால், நாம் கடவுளோடு ஒப்புரவாகுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்