திரும்பி வாருங்கள்
"உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி
வாருங்கள்" (யோவேல் 2:12) என, இறைவனின் இதயத்திலிருந்து எழும்
வார்த்தைகளை யோவேல் இறைவாக்கினர் எடுத்துரைப்பதிலிருந்து இந்த
தவக்காலப் பயணத்தை நாம் துவக்குகிறோம். எத்தனையோ முறை இறைவனின்
இந்த அழைப்புக்கு நாம் சாக்குபோக்குச் சொல்லி விலகிப் போயிருக்கலாம்,
ஆனால், இப்போது இறைவனிடம் திரும்பி வரவேண்டிய நேரம் வந்துள்ளது.
நம் முழுவாழ்வையும் ஈடுபடுத்தி, முன்னோக்கிச் செல்லவேண்டிய நம்
வீடு குறித்தும், இறைவனுடன் நம் உறவு குறித்தும் சிந்திக்க
வேண்டிய காலம், இத்தவக்காலம். நாம் ஆற்றும் சிறு சிறு தியாகங்களை
மட்டும் இத்தவக்காலம் எதிர்பார்க்கவில்லை, மாறாக, நம் இதயம் எதை
நோக்கிச் செல்கிறது என்பதை தெளிவாகக் கண்டுகொள்வதையும் எதிர்பார்க்கிறது.
நம் வாழ்வெனும் கப்பல் நம்மை நோக்கியா, அல்லது, இறைவனை
நோக்கியா நம்மை இட்டுச் செல்கிறது என்பதை சிந்திப்போம். இறைவனுக்கு
இயைந்த வகையில் நாம் வாழ்கிறோமா, அல்லது, நம்மை பிறர் புகழ
வேண்டும் என வாழ்கிறோமா? உறுதியற்ற இதயத்தோடு, காலை முன்வைப்பது
பின்னர், பின்வாங்குவதுமாக இருக்கிறோமா? இறைவனைக் கொஞ்சமும்,
உலகை கொஞ்சமுமாக அங்குமில்லாமல், இங்குமில்லாமல் இருக்கிறோமா?
நம் வெளிவேட நிலைகள் குறித்து மகிழ்ச்சியடைகிறோமா, அல்லது, நம்
பொய்மை நிலைகளைக் களைய முயல்கிறோமா?
தவக்காலப்பயணம் என்பது அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை நோக்கி
கடந்து செல்லும் பயணம். தங்கள் பூமிக்கு திரும்ப இறைவனின் மக்கள்
எடுத்துக்கொண்ட 40 ஆண்டுகளைக் குறிப்பதாக, இந்த நாற்பது நாள்
பயணம் உள்ளது. அன்றைய மக்கள், எகிப்திலிருந்து புறப்பட்ட
பாதையின்போது, அந்நாட்டிற்கே திரும்பிச் செல்வதற்கும், சிலை
வழிபாட்டுக்கும் உரிய சோதனைகளைச் சந்தித்தனர். அதேபோல், இறைவனை
நோக்கிச் செல்லும் நம் பாதையில், நாம் பற்றிக்கொண்டிருக்கும்
பாவச்செயல்களால் தடைகளைச் சந்திக்கிறோம். நம் பயணம் தடையின்றி
தொடர வேண்டுமெனில், சரியான பாதை குறித்த பொய்த்தோற்றங்கள் களையப்படவேண்டும்.
இதற்கு இறைவார்த்தை நமக்கு உதவுகின்றது. காணாமற்போன மகன் தன்
தந்தையிடம் திரும்பி வரும் நேரமிது. தந்தையை விட்டு தூர விலகிச்சென்று,
இன்று, வெறுங்கையராகவும், இதயத்தில் மகிழ்ச்சியற்றவராகவும்
நிற்கிறோம். நடைபயில முயலும் சிறு குழந்தைபோல் நாம் நம்
வாழ்வில் பலமுறை விழுகிறோம். அப்போதெல்லாம், ஒரு தந்தையைப்போல்,
நம்மை மன்னித்து தூக்கிவிடுகிறார் இறைவன். அந்த மன்னிப்பைப்
பெற, நம் பாவ அறிக்கைத் தேவைப்படுகின்றது. அதுவே நமது முதலடி.
குணம் பெற்ற பத்து தொழுநோயாளர்களுள், இயேசுவுக்கு நன்றியுரைக்க
வந்த ஒரு தொழுநோயாளர்போல், நாமும் இயேசுவை அணுகி குணம்பெறுவதோடு
அவரால் மீட்கப்படவும் முன்வருவோம். ஏனெனில், நம் பாவப்பிடிகளிலிருந்து
நம்மால் மட்டும் தனியாக வெளிவந்துவிட முடியாது, இயேசு எனும் மருத்துவர்
நமக்குத் தேவை.
மீண்டுமொருமுறை, நாம் தூய ஆவியாரிடம் திரும்பிவர அழைப்புப்
பெற்றுள்ளோம். நம் நெற்றியிலிருக்கும் சாம்பல், நாம் மண்ணாயிருக்கிறோம்,
மண்ணுக்கேத் திரும்புவோம், என்பதை நினைவூட்டுகின்றது. இந்த மண்ணின்
மீதுதான் இறைவன் தன் வாழ்வின் ஆவியை ஊதினார். ஆகவே, நாம் இந்த
மண்ணை நாடி ஓடாமல், அதாவது, இன்றிருந்து நாளை அழிந்துபோகும்
பொருட்களை நாடாமல், வாழ்வை வழங்கவல்லவரான தூய ஆவியாரை நோக்கிச்
செல்வோம்.
அன்பு சகோதரர்களே சகோதரிகளே, இறைவனை நோக்கிச்செல்லும் நம் பயணம்
இயலக்கூடியதே, ஏனெனில், முதலில் அவரே நம்மை நோக்கி வந்துள்ளார்.
நம்மைக் கைவிட அல்ல, மாறாக, நம் பயணத்தில் உடன் வரவே அவர் கீழிறங்கி
வந்தார். அவர் நம் கரம் பற்றி நம்மை இந்த பயணத்தில் அழைத்துச்
செல்ல அவரை அனுமதிப்போம்.
நம் பாதையில் இறைவனோடு ஒப்புரவாக வேண்டிய தேவை உள்ளது. இது நம்
சக்தியைச் சார்ந்தது அல்ல. இறைவன் எடுத்துவைக்கும் முதலடியோடு
அது துவங்குகிறது. அதாவது, அதற்குரிய அருளை அவரே வழங்குகிறார்.
நாம் கடவுளிடம் திரும்பிச்செல்வது என்பது, அவரும், அவரின் கருணையும்,
நமக்கு எவ்வளவு தேவை என்பதை நாம் ஏற்றுக்கொள்வதைச் சார்ந்தது.
சாம்பலை நெற்றியில் வாங்க நாம் தலை குனிகிறோம்.
இத்தவக்காலத்தின் இறுதியில் இதைவிட கீழாகக் குனிந்து, நம்
சகோதர, சகோதரிகளின் கால்களை கழுவ உள்ளோம். ஆம், மற்றவர்களை
நோக்கி தாழ்ச்சியுடன் உள்ளும் புறமும் குனிந்து இறங்கிவர
உதவுகிறது தவக்காலம். ஏனெனில், மீட்பு என்பது, மகிமையில்
மேலேறிச் செல்வதல்ல, மாறாக, அன்பில் கீழிறங்கி வருவதாகும்.
இத்தவக்காலத்தில் இயேசுவின் சிலுவையின்முன் நின்று, அவரின்
காயங்கள் குறித்து தியானிப்போம். அந்த காயங்களாலேயே நாம்
குணப்படுத்தப்பட்டோம். அந்த காயங்கள் வழியாக, தன் முடிவற்ற
கருணையுடன் இயேசு, நமக்காகக் காத்திருக்கிறார்.
அன்புகூரப்படுவதில் கிட்டும் மகிழ்வைக் கண்டுகொள்ள, நாம்
இறைவனிடம் திரும்பி வருமாறு அவரே நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
|
|