• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திருமணம்

     
  பிள்ளைகளை வளர்ப்பது என்பது ஒரு பெரிய கலை! Sr. Gnanaselvi (india)  

              பல குடும்பங்களில் குரங்குகள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. சந்தேகக் குரங்குகள் ஒரு கணவனின் மனத்தை ஆக்கிரமித்து விட்டால் அந்தக் குரங்குகளை அவன் வெளியேற்றாதவரை அவனுக்குப் பிரச்சினைகள்தான். இத்தகைய ஆசாமிகளுக்கு இருக்கும் அடுத்த பிரச்சினை குடிப்பிரச்சினை! குடியையும் விடமாட்டார்கள். மனைவிமேல் கொண்ட சந்தேகத்தையும் விடமாட்டார்கள். சுயமாகச் சிந்திக்க செயல்பட அந்தச் சாராயம் அவர்களை விடாது. இத்தகைய கணவர்களின் அடுத்த கட்டப் பிரச்சினை, மனைவியின் ஆளுமையை சுதந்திரத்தைப் பறிப்பது அல்லது கொச்சைப்படுத்துவதுதான்.

ஓரேயடியாக ஓவர் கண்ட்ரோல் பண்ணுவார்கள். தம் துணைவியாரை ஒரு மனிதப் பிறவியாகவே கருதவோ, நடத்தவோ மாட்டார்கள். இப்படிச் சந்தேகநோயும், குடிநோயும், துணைவியை நோகடிக்கும் நோயும் கொண்டிருக்கின்ற குடும்பத்தில் பிறக்கிற குழந்தைகள் எவ்வாறு வளரும்? அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தாய் நண்டும் மகள் நண்டும் பேசிக் கொண்டே நடந்துபோயின. திடீரென்று தாய் நண்டுக்குக் கோபம் வந்தது. நில்! என்று கத்தியது. மகள் நண்டு அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டது. " எவ்வளவு அசிங்கமாக நடக்கிறாய் என்று பார்" . மகள் நண்டுக்கு ஒன்றும் புரியவில்லை. " மற்ற எல்லாரையும் போல நீ ஏன் நடக்கக்கூடாது? மற்றவர்கள் நேரே முன்னோக்கி நடக்கிறார்கள். நீ ஏன் கோணலாக நடக்கின்றாய்?" என்று கர்ஐpத்தது தாய் நண்டு.

மகள் நண்டு சிரித்தது. " ஏன் சிரிக்கிறாய்?" " அம்மா இவ்வாறு நடக்க நீதானே எனக்குக் கற்றுக் கொடுத்தாய்? உன்னைப் பின்பற்றி நானும் அப்படியே நடக்கிறேன். அப்புறம் ஏன் என்னைத் திட்டுகிறாய்?" மகள் நண்டு சொல்வது உண்மை என்று தாய் நண்டு புரிந்து கொண்டு மவுனம் சாதித்தது. நடக்காத கதை! பேசாத நண்டு! ஆனால் அது சொல்லாமல் சொல்கிறது ஓர் உண்மையை. என்ன அது?

பிள்ளைகளின் நடத்தைக்கும் பெற்றோரின் நடத்தைக்கும் அசாத்திய ஒற்றுமை உண்டு. தாயைப் போல பிள்ளை! நூலைப் போல சேலை! அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான் என்பன போன்ற சொல்வடைகள் உணர்த்துவது என்ன? பெற்றேரைப் போலத்தான் பிள்ளைகளும் இருப்பார்கள். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்? அப்பனை அப்படியே உரிச்சு வச்சிருக்கான்! மூக்கு முழியைப் பாரு. அப்படியே ஆத்தா மாதிரி! என்று அத்தைகளும் மாமாக்களும் ஊர் பேர் தெரியாத சுற்றங்களும் உச்சிமோந்து உளறி விட்டுப் போவது வெறும் தோற்றத்தைப் பற்றி மட்டுமல்ல. அதன் உள்ளே ஊறிக்கிடக்கும் குணங்களையும் பற்றித்தான்!

பிள்ளைகளை வளர்ப்பது என்பது ஒரு பெரிய கலை! அது ஒரு கடினமான காரியம்! அது அவ்வளவு எளிதான செயல் அல்ல. என்றெல்லாம் புலம்பும் பெற்றோர்கள் தமது பேச்சும் செயல்பாடுகளும் பழக்க வழக்கங்களும், அந்தக் குழந்தையின் வளர்ச்சிக்கு எவ்வளவு இடையூறாக உள்ளன என்பதை மட்டும் உணர்வதே இல்லை.

தாயொருத்தி தன் எட்டு வயது மகள் மாலாவை கடற்கரைக்கு ஒரு நாள் அழைத்துச் சென்றாள். " அம்மா நான் மணலில் விளையாடப் போறேன்" . " வேண்டாம். உடைந்த பீங்கான் கிடக்கும். காலில் குத்திடும்" . கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு மாலா மீண்டும் கேட்டாள். " அம்மா அதோ அந்தக் குழந்தைகளோடு ஓடிப்பிடிச்சு விளையாடப் போறேம்மா" . " வேண்டாம் நீ காணாமல் போயிடுவே" . சிறிது நேரம் பேசாமல் இருந்த மாலா மீண்டும் கேட்டாள். " அம்மா கடல்நீரை ஒரே ஒருமுறை தொட்டுட்டு வர்றேம்மா" . " என்ன முட்டாள் பிள்ளை நீ? ஜலதோஷம் பிடிக்காதா?"

அந்த வழியாகச் சுண்டல் வியாபாரி ஒருவன் சென்றான். வாங்கித் தரும்படித் தாயை வேண்டினாள் மாலா. " இதையெல்லாம் சாப்பிட்டா இரவு ஒழுங்காச் சாப்பிடமாட்டே" . சிறிது நேரத்தில் ஐஸ்கிரீம் " சும்மா இருக்க மாட்டே? ஐஸ்கிரீம் தொண்டைக்கு நல்லதில்ல" . சிறுமி மாலா அழத்தொடங்கினாள்.

சொல்ற பேச்சைக் கேக்கவே மாங்டேங்குறா. இப்படிப்பட்ட கெட்ட பிள்ளையை நீங்க எங்கேயாவது பார்த்திருக்கீங்களா? என்று போவோர் வருவோரிடம் எல்லாம் புகார் செய்து கொண்டிந்தாள் அந்தப் புண்ணியவதி தாய்! இந்தத் தாய் நமக்கு நல்ல எடுத்துக்காட்டு. எதற்கு? பிள்ளைகளை எப்படி வள்ர்க்கக்கூடாது என்பதற்கு!

பிள்ளைகளை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தவேண்டும். எந்த அளவுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதைப்பற்றிச் சிறிது கூட யோசிக்காமல், வீட்டிலும் வெளியிலும் இராணுவ ஆட்சி நடத்தும் சர்வாதிகாரிகளைப் போன்றவர்கள் இத்தகைய பெற்றோர்கள்.

பிள்ளைகளுக்கு ஓரளவுக்குக்கூட சுதந்திரமே தராதது முதல் பிரச்சினை!.
தம்மிடமுள்ள அச்சத்தையும் தயக்கத்தையும் குழப்பத்தையும் குழந்தைகளின்மேல் திணிப்பது இரண்டாவது பிரச்சினை! எப்போதும் எதிர்மறையாகவே நினைப்பதும், பேசுவதும், முடிவெடுப்பதும் மூன்றாவது பிரச்சினை! மக்கு, முட்டாள், சனியன், உருப்படாதது, ஆங்காரி, தண்டம் என்றெல்லாம் முன் தீர்மானம் செய்து அத்தகைய எண்ணங்களையே வெளிப்படுத்துவது நான்காவது பிரச்சினை! பிள்ளைகளிடம் இருக்கிற அல்லது இருப்பதாக அவர்கள் தீர்மானிக்கிற குற்றங்குறைகளை, பலவீனங்களை ஊரெல்லாம் தெருவெல்லாம் பக்கத்து வீட்டுக் கெல்லாம் தண்டோரா போட்டு அறிவிக்காத குறையாக முறையிடுவது ஐந்தாவது பிரச்சினை. இந்த ஐந்து பிரச்சினைகளின் குறியீடுதான் . நாம் வாசித்துக் கொண்டருக்கும் இந்த நிகழ்வின் தாய்.

இத்தகைய தவறான அணுகுமுறைகளும் செயல்பாடுகளும் சட்டதிட்டங்களும் சில விபரீதங்களைக்கூட வலிய கொண்டு வரலாம்.
கட்டுப்பாட்டில் வளர்ந்த குடும்பம் என்று பேரெடுக்க முடிவுசெய்து, முயற்சித்த ஒரு குடும்பம் இருந்தது. எல்லாரும் அமர்ந்து உணவு உண்ணும்போது பேசக்கூடாது என்று ஒரு கட்டுப்பாடு அங்கே.

ஒருநாள் குடும்பமே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இளைய பையன் ஜானி தந்தையிடம் ஏதோ சொல்ல விரும்பி அப்பா! என்றான். அதிகக் கெடுபிடிக்காரரான அத்தந்தை கண்கள் சிவக்கக் கோபத்துடன் சாப்பிடும்போது பேசக்கூடாது என்று தெரியாதா? அமைதியாகச் சாப்பிடு என்று உறுமினார். அமைதியாகச் சாப்பிடும்போது மீண்டும் பையன் தந்தையை அழைத்து ஏதோ சொல்ல விரும்பினான். இம்முறையும் தந்தை சினந்து அவனை அடக்கினார். சாப்பாடு முடிந்தது. தந்தை அமைதியாக ஜானியிடம் நீ கூற விரும்பியதை இப்போது சொல் என்றார். பயனில்லை அப்பா எல்லாம் முடிந்துவிட்டது. ஒரு கரப்பான் பூச்சியை சோற்றோடு சேர்த்து உயிரோடு நீங்கள் முழுங்கி விட்டீர்கள். அதைத் தடுக்கத்தான் வாயைத் திறந்தேன் என்றான் ஜானி. தந்தை மயங்கி வீழ்ந்தார். உரிய கட்டுப்பாடு! ஓரளவு கட்டுப்பாடு ! ஓவர் கட்டுப்பாடு! என மூன்று நிலைகளை வைத்துக் கொண்டால் ஓவர் கட்டுப்பாட்டின் விபரீதத்தை உணர்த்தவில்லையா இந்தக் கரப்பான் பூச்சி?

ஒரே குடும்பமாக வாழ்ந்த அண்ணன் - தம்பி குடும்பத்தினரில் தம்பிக்கு பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல ஆசை. அண்ணனிடம் சென்று அண்ணா! நான் தனிக்குடித்தனம் போகிறேன். என் பாகத்தைப் பிரித்துக் கொடுன்னு தம்பி கேட்க. அண்ணன் காரணத்தைக் கேட்டான். தம்பி " எனக்கு உன்மேல கோபம் இல்ல. அண்ணிதான் சரியில்லை னு" சொன்னான். " நான் அண்ணியிடம் சொல்லி உன்னை நல்லா கவனிக்கச் சொல்றேன். தயவுசெய்து போகாதே னு" அண்ணன் கேட்டுக் கொண்டான்.

அடுத்தநாள் சாப்பிடும்போது அண்ணி சாதம் போட்டு வழக்கமாக ஊற்றும் ஒரு கரண்டி நெய்க்கு பதிலாக இரண்டு கரண்டி நெய் ஊற்றினாள். சாப்பிட்டு முடிந்ததும் அண்ணனிடம் " நான் தனிக்குடித்தனம் போயத்;தான் ஆகணும். எனக்கே இரண்டு கரண்டி நெய் ஊற்றுகிற அண்ணி உனக்கு நாலு கரண்டி நெய் ஊற்றுவாள். ஆகமொத்தம் ஒருவேளைக்கு ஆறு கரண்டி நெய் செலவாகிறது. இப்படி செலவழித்தால் குடும்பம் உருப்படுமா? நான் தனிக்குடித்தனம் போய் சிக்கனமாய் இருக்கிறேன் -னான்" தம்பி.

மனவலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். நமக்கு உகந்ததையே தேடலாகாது. அடுத்தவர்களுடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள். உரோ.15.1,2.

புது மணமக்களை வாழ்த்திப் பேசும்போது ஒரு பெரியவர் சொன்னார். கணவனும் -மனைவியும் டூ இன் ஒன் போல வாழ வேண்டும். டூ இன் ஒன் சாதனத்துல ரேடியோ பாடும்போது ஒலி நாடாவிலிருந்நு சத்தம் வராது. டேப்பில் பாட்டு கேட்கும் போது ரேடியோ அமைதியாக இருக்கும். அதேபோல கணவன் பேசும்போது மனைவி கேட்கணும். மனைவி பேசும்போது கணவன் கேட்கணும். டூ இன் ஒன் -ல ரேடியோவும் டேப்ரிக்கார்டரும் ஒரே நேரத்துல பாடினால் அது பழுதடைந்துவிட்டது என்று பொருள். அதுபோல கணவனும் மனைவியும் ஒரே நேரத்துல பேசினால், குடும்பம் ரிப்பேர் ஆகி பலருடைய கேலிப் பேச்சுக்கு ஆளாக வேண்டி இருக்கும்.

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டு, அன்பு செய்து வாழும் திருமண வாழ்வுதான் முழுமையான மகிழ்ச்சியைத்தரும்.
நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன். அவற்றை உட்கொண்டேன். உம் சொற்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தன. என் உள்ளத்திற்கு உவகை அளித்தன. உம் பெயரே எனக்கு வழங்காலாயிற்று.எரேமி.15.16

குடும்பம்
பரந்த மனமும் அடுத்தவர்களை அவர்தம் குறைபாடுகளோடு ஏற்றுக்கொள்ளும் உள்ளமும் இருந்தால், தாம்பத்யம் என்பது போராட்டமாக இருக்காது. நீரோட்டமாக நீடிக்கும்.

கணவன் மனைவி உறவு என்பது அதிக உரிமைகளைக் கொண்டாடும் ஒன்றாக இருக்கிறது. ஒருவர்மீது மற்றொருவர் ஆதிக்கம் செலுத்த ஆசைப்படும் உறவாக உள்ளது. அதனாலேயே பல தம்பதிகள் வெகு விரைவில் சலித்துப் போகிறார்கள்.

நம் எல்லோர் வீடுகளிலும் அழைப்புமணியை அமைத்திருக்கின்றோம். கதவில்லாத வீடுகளுக்கு அழைப்புமணி அவசியமில்லை.

இவர்கள் (பெற்றோர்கள்) தங்கள் சிறகுகளால் மூடி மூடித் தங்கள் வாரிசுகளைக் காப்பாற்ற முனையும் பொழுதெல்லாம் அவர்கள் (பிள்ளைகள் ) பறக்கின்ற முனைப்பைத் தொலைத்துவிடுகிறார்கள்.

பெற்றோர்கள் எப்போது பார்த்தாலும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து தொலைந்துபோனால், தன் குழந்தைகளுடைய திறமைகளை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?

சனி ஞாயிறுகளில் வெளியே சென்று வருபவனுக்கு வீடே சொர்க்கமாகத் தோன்றும். அல்லது வீட்டை சொர்க்கமாக்கும் உபாயம் தெரியும்.

குழந்தையைப் பார்க்கின்ற போது நாம் ஒரு குழந்தையைப் போல் மாறிவிட வேண்டும். பூக்களுக்கு அருகே செல்கிறவன் தானும் ஒரு பூவாக மாறிவிட வேண்டும்.

சனி ஞாயிறுகளில் வெளியே சென்று வருபவனுக்கு வீடே சொர்க்கமாகத் தோன்றும். அல்லது வீட்டை சொர்க்கமாக்கும் உபாயம் தெரியும்.

குழந்தையைப் பார்க்கின்ற போது நாம் ஒரு குழந்தையைப் போல் மாறிவிட வேண்டும். பூக்களுக்கு அருகே செல்கிறவன் தானும் ஒரு பூவாக மாறிவிட வேண்டும்.





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலைய எமக்குத் தந்தாய்