திருமண திருப்பலி முன்னுரை 7 |
பிரியமானவர்களே! வாழ்வும் வழியுமானவரை வணங்கி வாழ்த்துகின்றோம். வாழ்த்தும், செபமும், ஆசீரும் அருள வந்துள்ள உங்கள் யாவரையும் கரம் கூப்பி வரவேற்கின்றோம். இனியதொரு நாளாக, இன்பத் திருவிழாவாக, இருமனங்கள் இணையும் இல்லறத் திருவிழாவிற்கு எம்மோடு இணைந்து, இணையில்லா இறைப்பலிக்கு வந்துள்ள உங்கள் யாவரையும் காண்பதிலே மகிழ்வு காண்கின்றோம். விண்ணகத்தின் ஆசீர் இம்மண்ணகத்திலே உங்கள் வழியாக, இந்த மணமக்களுக்குக் கிடைக்கப்பெற இறைமக்களாக நீங்கள் யாவரும் இணைந்தே வந்திருப்பது எம்மவருக்குப் பெருமையே. ஆண்டவரின் செயல் இது; ஆண்டவராலேயே இது நிகழ்ந்துள்ளது; ஆண்டவரே ஆசீர் வழங்குகின்றார். ஆண்டவரின் அன்னை கன்னிமரியாளின் பரிந்துரையோடும், புனித வளனாரின் நிறை ஞானத்தோடும் நடந்தேறும் இம்மணவிழா உங்கள் யாவரின் பிரசன்னத்தால் நிறைவு காண்கின்றது. வாழ்வும் அவர் கொடையே, வாழ்வின் நலன்களும் அவர் அருளே; வாழ்வின் திட்டமும் அவர் சித்தமே. இறைச் சித்தத்திற்கு பணிந்து, இணைந்து இல்லறத்தைத் தொடங்கும் இம்மணமக்களை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்க செபிப்போம் இப்பலியில். இணைவோம் இறைநம்பிக்கையுடனே! இறைமக்களின் மன்றாட்டுகள் 1. திரு அவையை வழிநடத்தும் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் தங்களது அர்ப்பணத்தில் இறுதிமட்டும் உறுதியாய் இருந்து உம் பணியாற்ற வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 2. இறையருள் பொழிபவரே எம் இறைவா! நாட்டை ஆள்வோர் நேர்மை, உண்மை, நீதியின்வழி நடந்திடவும், மக்களை வழிநடத்திடவும் வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 3. ஆசீர் அருளும் இறைவா! மண உறவு வாழ்விலே தம்பதியராக இணைந்துள்ள திரு. - திருமதி. - தம்பதியர் உம் அன்புக்கு சாட்சிகளாய் வாழ்ந்து, அதன் பயனாய் நீர் தரும் பரிசான மக்கட்செல்வத்தை பெற்று வாழ்ந்திட வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 4. வழிநடத்தும் இறைவா! திரு. - திருமதி. தம்பதியர் தங்களது பிரமாணிக்கத்தில் உண்மையாய் வாழ்ந்து, ஒருவரையொருவர் புரிந்து, ஏற்று, அன்பு செய்து பயணிக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 5. நலன்களின் நாயகனே இறைவா! மங்களகரமான இத்திருவழிபாட்டை நடத்தி, செபித்து, ஆசீர்வதிக்கும் குருக்கள், துறவியர் மற்றும் உறவுகளுக்கு பரிபூரண நலன்களைப் பொழிந்து, காத்து வழிநடத்திட வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 6. நிறைவின் நாயகனே இறைவா! இம்மணவிழாவில் பங்கேற்கும் தம்பதியர் யாவரும் தங்களது வார்த்தைப்பாட்டைப் புதுப்பித்துக் கொள்ளவும், மணவாழ்விற்கு ஆயத்தப்படும் இளையவர்களின் மனம்விரும்பும் காரியத்தை தேவரீர் ஆசீர்வதித்து அருளவும் வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம். திருவிருந்துக்குப் பின் தம்பதியராக இணைந்து சொல்ல வேண்டிய செபம் எங்கள் மூதாதையரின் இறைவா, போற்றி! உமது பெயர் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் போற்றி! வானங்களும் உம் படைப்பு அனைத்தும் எக்காலமும் உம்மைப் போற்றுக! நீர் ஆதாமைப் படைத்தீர்; அவருடைய மனைவி ஏவாளை அவருக்குத் துணையாகவும் ஆதரவாகவும் உண்டாக்கினீர். அவர்கள் இருவரிடமிருந்தும் மனித இனம் தோன்றியது. மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்ததொரு துணையை உருவாக்குவோம் என்று உரைத்தீர்.✠ இப்பொழுது இவர்களை நான் வாழ்க்கைத் துணைவராக / வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்வது இச்சையின் பொருட்டன்று, நேர்மையான நோக்கத்தோடுதான். எங்கள்மீது இரக்கம் காட்டும்; நாங்கள் இருவரும் முதுமை அடையும்வரை இணைபிரியாது வாழச் செய்யும். ஆமென், ஆமென் |