திருமண திருப்பலி முன்னுரை 7 |
வளமிகு குடும்பத்திற்கு வரம் வேண்டி வந்திருக்கின்ற அன்பு உறவுகளே! திருமணம் என்ற திருவருட்சாதனத்தின் மாண்பை சிறப்பிக்க விரும்புகிறது. இந்த சிறப்பு திருப்பலி வைபவத்திற்கு, நமது குடும்ப உறவினர்களே நம்மை இன்று அன்போடு அழைக்கிறார்கள். கணவர் மனைவியையும், மனைவி கணவரையும், பெற்றோர் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோரையும் உறவோடு வாருங்கள் என வரவேற்கிறார்கள். கடவுள் மனித குலத்துக்கு அளித்த மாபெரும் " பொக்கிஷம்" திருமணம் ... இந்த திருமணம் என்ற பொக்கிஷம், திருச்சபையின் திருவருட்சாதனத்தால் ஆணையும் பெண்ணையும் இணைத்து வைக்கிறது. இன்றைய நற்செய்தி இந்த பொக்கிஷத்தைப் போற்றிப் பாதுகாக்கும் திருவருட்சாசன வார்த்தைகளை நம் இதயத்தில் பொறித்து வைக்கிறது. உலக உறவுகளில் உயர்ந்த உறவு திருமண உறவு. அருட்சாதனங்கள் என்ற திருவருட்சாதனத்தால் அமைக்கப்பட்ட குடும்ப உறவில் புனிதம் கமழவேண்டும். அம்மா, அப்பா, மகன், மகள் என்ற உறவு அமைப்புகள் அன்பு, பண்பு, பாசம், ஒழுக்கம் என்ற அறநெறி வட்டத்துக்குள் புதிய புதிய வளையங்களால் இணைக்கப்பட்டு முடிவின்றி தொடரும் உறவு அமைப்பாகும். இந்த உறவு வளையங்களின் இணைப்பாளர் கிறிஸ்துவே! எனவே கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையே உள்ள உறவை பிரதிபலிப்பதாக இந்த குடும்ப உறவு வளையம் அமைய வேண்டும். குடும்ப உறவு சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட உறவு. இதில் பிளவின்றி இணைந்து வாழவேண்டியது கணவன் மனைவி கடமை. கடவுள் இணைத்தது மனிதன் பிரிப்பதற்கு அல்ல. நெருங்கிய உறவோடு இணைந்து வாழ்வதற்கே! கணவர் மனைவியையும், மனைவி கணவரையும் கண்ணின் இமையென, நகத்தின் சதையென ஒருவரை ஒருவர் மதித்துப் போற்றி குடும்ப உறவை பாதுகாக்க வேண்டும். பிரிந்து வாழும் தம்பதியரை சேர்த்து வைத்திட, சந்தேகங்களை தீர்த்து வைத்திட, மணவாழ்வின் சந்தோஷங்களை இன்னும் மிகுதியாக்கிட கடவுளின் அருள், தீர்த்தமாய் திருப்பலியில் தெளிக்கப்படுகிறது. அருளில் நனைந்து, பலியில் இணைந்து, நமது குடும்பம் என்ற குட்டித் திருச்சபையை கட்டிக்காத்திட வரம் கேட்டு செபிப்போம். நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் 1. வாழ்நாளெல்லாம் எங்களுக்கு ஆசி வழங்கும் ஆண்டவரே! எமக்கு உமது ஆசியை இவ்வுலகில் வழங்க நீர் தேர்ந்தெடுத்த திருச்சபைக்காகவும் திருத்தந்தைக்காகவும் செபிக்கிறோம். திருத்தந்தை 16ஆம் ஆசீர்வாதப்பர் உடல் உள்ள சுகத்துடன் பணியாற்றவும், அவரோடு இணைந்து பணியாற்றும் திருப்பணியாளர்கள் பணி சிறக்கவும் அருள் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 2. அனைவருடைய நலனுக்காக உழைப்போரை உருவாக்கும் இறைவா! எல்லா மக்களும் எல்லா நலனும் பெற்று வாழச் செய்யும் தலைவர்களை உருவாக்கி, எங்கள்நாட்டிற்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 3. இறையாட்சி பணி செய்வோரைத் அறிமுகப்படுத்திய தெய்வமே எம் இறைவா! உம்மைப் பற்றிய செய்தியை விளம்பரப்படுத்தும் எமது ஆன்மீகத் தந்தை, இறையாட்சிக்கு உழைக்க நீடிய ஆயுளையும், நோயற்ற வாழ்வையும், குறைவற்ற அருளையும் தந்து ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 4. மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று என அவனுக்குத் தகுந்த துணையைப் படைத்த இறைவா! அருட்சாதனங்கள் என்ற திருவருட்சாதனத்தால் இணைந்து வாழும் தம்பதியரிடையே எழும் கருத்து வேறுபாடுகளை அகற்றி, இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து வாழவேண்டுமென்று தாங்கள் அளித்த வாக்குறுதியின் மேன்மையை உணர்ந்து வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 5. கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என உரைத்த இறைவா! மணவிலக்கு இறைவனின் திட்டத்திற்கு, சட்டத்திற்கு முரணானது என்பதை உணர்ந்து, கணவன் மனைவியர் திருமணத்தின் உயரிய பண்புகளை அணிந்து, குடுமபத்தை சீரும் சிறப்பும் நிறைந்த பாதையில் நடத்தி, பிள்ளைச் செல்வங்களை ஒலிவக் கன்றென வளர்த்தெடுக்க அருள் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 6. திருமணங்களை தேசத்தை செழிக்கச் செய்யும் ஆயுதமாக மாற்றும் தெய்வமே! வரன் தடையால் வருந்துவோருக்கு நல்ல மணவாழ்வை கூடி வரச்செய்யவும், தங்களுக்குள் பொருத்தமில்லை என பிரிந்து வாழும் தம்பதியரை இணைத்து வைக்கவும், கணவன் மனைவியை நேசிக்கவும், மனைவி கணவரை நேசிக்கவும், அன்பு நிறைந்த தம்பதியரின் மணவாழ்வில் இன்னும் அதிகமாக மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், இதனால் தேசத்தை செழிக்கச் செய்யவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். |