• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திருமண முன்னுரை

  திருமண திருப்பலி முன்னுரை.4  

இதயங்களின் சங்கமமே திருமணம்.

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே....
இன்று திருமணம் என்னும் அருள் சாதனத்தை பெற வந்திருக்கக்கூடிய இவர்களுக்காக ஜெபிக்க வருகை தந்துள்ள உறவுகளுக்கும் பெற்றோருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறேன்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

அன்பும் அறமும் தான் இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும் என்கிறார் திருவள்ளுவர்.

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சந் தாங் கலந்தனவே
குறுந்தொகை 40


ஒரு தலைவன் தலைவியிடம் கூறுகிறான். உன்னுடைய அம்மா யாரோ? என்னுடைய அம்மா யாரோ? அவர்களிடையே இதற்குமுன் எந்த உறவும் இல்லை. அதை போலவே உன்னுடைய அப்பாவிற்கும் என்னுடைய அப்பாவிற்கும் இடையே எந்த உறவும் இல்லை. ஏன் நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ? நமக்குள்ளும் இதற்கு முன் எந்த உறவும் இல்லை. எனினும் நாம் இருவரும் கணவன் மனைவியான பின் நம்முடைய அன்பு நெஞ்சங்கள் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன.

வானிலிருந்து மண்ணில் விழும் மழைத்துளிகள் செம்மண்ணில் கலந்து விட்டால் அதன்பின் தண்ணீரையும் செந்நிறத்தையும் பிரித்து காண இயலாது.அவ்வாறே நம்முடைய அன்பு நெஞ்சங்களை பிரிக்க இயலா விதத்தில் தாமாக கலந்துவிட்டன.

இதயங்களின் சங்கமமே திருமணம். கணவன் தன்னையே மனைவிக்கும். மனைவி தன்னையே கணவனுக்கும் கையளிக்கும் போது தான் இதயங்கள் சங்கமமாகின்றன.

திருமணம் என்பது மணமக்களிடையே நிகழும் ஒப்பந்தம் அல்ல அவர்களிடையே உருவாகும் ஒரு நிலையான உடன்படிக்கை.

ஒப்பந்தம் பொருள்களைச் சார்ந்து.
உடன்படிக்கை மனிதர்களை சார்ந்தது.
ஒப்பந்தத்தின் நோக்கம் பொருட்களை மாற்றிக் கொள்வது.
உடன்படிக்கையின் நோக்கமோ இதயத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஒப்பந்தம் வியாபார நோக்கம் உடையது. லாப நஷ்ட கணக்கு பார்ப்பது.
உடன்படிக்கையே தன்னலம் அற்றது. புனிதமானது.

விவிலியம் காட்டும் இறைவன் உடன்படிக்கையின் இறைவன். இறைவன் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்து கொண்டதுபோல இன்று கணவன்-மனைவியாக நீங்கள் இருவரும் ஒருவர் மற்றவரோடு உடன்படிக்கை செய்து கொள்கிறீர்கள்.
நீங்கள் செய்து கொள்ளுகின்ற உடன்படிக்கையை என்றும் சரி என்றும் சரி உடைத்தல் ஆகாது....

இன்று திருஅவையின் முன்னிலையில் அனைவர் சாட்சியாக இன்று இணைகின்ற நீங்கள் இருவரும் உங்கள் வாழ்வின் இறுதி மட்டும் இணைந்திருக்க வேண்டும். விவிலியத்தில் அருட்சாதனங்கள் செய்துகொண்ட தோபித்து சாராவும் கடவுளிடத்தில் எங்கள் முதுமையிலும் கூட நாங்கள் இருவரும் இப்போது போல எப்போதும் இணைந்திருக்க வேண்டும் என மன்றாடினார்கள். இன்று உறவுகளாகிய நாங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் இன்று போல் என்றும் இணைந்திருந்து திராட்சை கொடி போல கனிகள் தந்து இச்சமூகத்தில் நல்ல ஒரு முன்மாதிரியான குடும்பமாக நீங்கள் திகழ வேண்டும் என இன்றைய நாளில் நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம். நீங்களும் உங்களது வாழ்வில் இன்று போல் என்றும் மகிழ்வாக ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து உங்களிடம் இருக்கக்கூடிய அனைத்தையும் உங்களிடையே பகிர்ந்து கொண்டு, உறவுகளோடு இணைந்து என்றும் மகிழ்வாக இச்சமூகத்தில் திகழ்ந்திட உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் ஏற்றுக் கொள்ளும் உறுதியை உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நினைவு கூறுங்கள். எல்லா அருளும் நிறைந்த இறைவன் உங்களை தன் அருளால் நிறைத்து காத்து வழிநடத்துவார். அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய். உங்களது வாழ்க்கை என்னும் பயணத்தை இனிதாக இறைவன் முன்னிலையில் துவங்குங்கள். உங்களிடம் இந்நற்செயலை துவங்கும் இறைவன் உங்களை காத்து வழி நடத்துவாராக.... என ஆசீர் வேண்டி இப்பலியில் இணைவோம்.




வேண்டுதல்கள்

இன்பம் பொங்கிடும் இந்த நல்ல நாளிலே இனிய நல்வேளையிலே இத்; திருமண விழா இனிதே நடைபெற, அன்பு உள்ளங்கள் (மணமகன் பெயர்) (மணமகள் பெயர்), இறையருளால் தமது இல்லற வாழ்வை இனிதே தொடங்க இறைவன் ஆசி; பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


வானவில்லுக்கு ஏழு வண்ணங்கள் உண்டு. இனிய சுவையில் ஆறு வகை உண்டு. அந்த வகையில் எமது குடும்பத்தின் வானவில்லாக அறு சுவை சேர்க்கும் நறுமணமாக இன்று மணம் வீசும் இந்த திருமண விழா செல்வங்களை 16 வளங்களும் பெற்று வாழ்கவென நாமும் வாழ்த்தும் இவ்வேளையில், இறைவனும் தன் திருக்கர ஆசிரை மலர்மாரியாக பொழிய வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



ஒன்றித்து வாழ்வது எத்துணை நன்று எத்துணை இனியது என்பதற்கேற்ப இத்தம்பதிகளோடு என்றென்றும் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பு நிறைந்த பெற்றோர்கள், சகோதரங்கள், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவர்களுடன் என்றும் இணைந்து தங்கள் உறவில் மென்மேலும் பலம் பெற இறைவன் ஆசி பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


ஒரு பங்கின் வளர்ச்சி அந்த பங்கை வழிநடத்திக் கொண்டிருக்கும் பங்கு தந்தையரின் நோக்கிலும் வாக்கிலும் அடங்கியுள்ளது என்று கூறுவார்கள். அந்த வகையில் நமது பங்கை சிறப்பாக வழிநடத்தி இன்றைய நாளில் எமக்காக திருப்பலி நிறைவேற்றி ஜெபித்து எம் அன்பு பிள்ளைகளை ஆசீர்வதித்த எம் அருட்தந்தை (பெயர்)க்கும் இறைவன் ஆசி பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்