• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திருமண முன்னுரை

  திருமண ஆண்டு விழா செபம்  


திருமண ஆண்டு விழா செபம்
(திருமண ஆண்டு நிறைவு நாள், வெள்ளிவிழா, பொன்விழா)
பொன்விழா மன்றாட்டு


அன்று
பொன் - வெள்ளி தூபம் ஏந்தி மூவிராசாக்கள்
உம் திருமுன் வந்து அர்ப்பணம் செய்தனர்.
இன்று
கையில் தீபம் ஏந்தி மலர் தூவி தூபம் காட்டி இத் தம்பதியர்;
உம் திருமுன் மண்டியிட்டு பொன்விழாக்காணும் இந் நாளில் இந்நன்றித் திருப்பலியை ஒப்புக் கொடுப்போம்



பிதா சுதன்

ஒளியாம் இறையே பாட்டு (பாடல் நேரத்தில் குத்துவிளக்கேற்றல்)

ஒளியாம் இறையே வாராய்
எளியோர் நெஞ்சம் தனிலே

(1)
விண்ணில் வாழும் விமலா
மண்ணில் வாழும் மாந்தர்
உம்மில் என்றும் வாழ - 2
எம்மில் எழுமே இறைவா
ஒளியே எழிலே வருக

(2)
நீரும் மழையும் முகிலால்
பூவும் கனியும் ஒளியால்
உயிரும் உருவும் உம்மால்
வளமும் வாழ்வும் உம்மால்


முன்னுரை

திருமண வெள்ளி(பொன்) விழாவைக் கொண்டாடும் தம்பதியரே! நீங்கள் திருமணத்திலே இணைக்கப்பட்டு இருபத்தைந்து (ஐம்பது) ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. கடந்த ஆண்டுகளிலே இறைவன் உங்களுக்குச் செய்த எண்ணற்ற நம்மைகளுக்கு நன்றி கூற அவர் முன் நிற்கின்றீர்கள். அன்புத்தந்தை உங்கள் இல்லற வாழ்க்கையை ஆசீர்வதித்து வளமாக்கியுள்ளார். நன்மக்களை உங்களுக்கு அருளியுள்ளார். நீங்களும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, மன ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்ததற்காகத் திருச்சபையின் பெயராலும் திருக்கூட்டத்தின் பெயராலும் உங்களை வாழ்த்துகிறேன். இறைவன் உங்கள்மேல் அன்புகூர்ந்து உங்களை இன்னும் நிறைவாய் ஆசீர்வதிக்கத் திருவுளம் கொண்டுள்ளார். இப்பெருநாளில் நல்ல இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய கடமையை உணர்வோம்.

அருள்வாக்கு எபே 5:19-20

உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம் பெறட்டும. உளமார இசைபாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசுக்கிறிதுவின் பெயரால் எல்லாவற்றிற்காவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள் வாக்கு.


உன்புகழைப் பாடுவது - என்
வாழ்வின் இன்பமையா
உன் அருளைப் போற்றுவது - என்
வாழ்வின் செல்வமையா.


துன்பத்திலும் இன்பத்திலும் - நல்
தந்தையாய் நீ இருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் - நல்
அன்னையாய் அருகிருப்பாய்
அன்பு என்னும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன்னின்று பிரியாமல் - நீ
என்றும் அணைத்திருப்பாய் - 2

பல்லுயிரைப் படைத்திருப்பாய் -நீ
என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் - நீ
என்னையும் ஏன் அழைத்தாய் - 2
அன்பினிற்கு அடைக்குந்தாழ் ஒன்று
இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன் - 2


வேண்டுதல்கள்

1. அன்புத் தந்தையே படைத்தாளும் பரமனே, உமது தெய்வீகத்திட்டப்படி, நாங்கள் அன்றொருநாள் உமது திருப்பீடத்தின் முன் திருமண ஒப்பந்தம் செய்து, ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வாக்களித்தோம். அருள்மிகுந்த அந்த இனிய நாளை நாங்கள் இப்பொழுதும் நினைவு கூர்ந்து, உமக்கு உளமார்ந்த நன்றி கூறுகின்றோம். இனிவரும் நாட்களிலும் உமது அன்பில் இன்னும் வளர அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. திருமண நாளன்று எங்கள் உள்ளத்தில் உருவான நோக்கப்படி நாங்கள் அன்றாட வாழ்க்கை நடத்த முயன்றுள்ளோம். ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாக, ஆதரவாக இருக்கவும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, நல்லெண்ணம் இழக்காமல், நம்பிக்கை தளராமல், அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ முயன்றுள்ளோம். எங்கள் தோல்விகள் அன்புக் குறைச்சல், சிறப்பாக எங்கள் அன்பு பரிமாற்றத்தில் குறைபாடுகள் அனைத்தையும் இன்று மன்னித்து மீண்டும் புதுப்பொலிவோடு உமது அன்பில் இன்னும் வளர அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நீர் எங்களுக்குத் தந்த குழந்தைகளுக்காக நன்றி கூறுகின்றோம.; . நசரேத்தின் திருக்குடும்ப வாழ்வை அவர்கள் இங்கு காணுமாறு எங்கள் சொல்லாலும் செயலாலும் அவர்களுக்கு வழிகாட்டிகளாய் தொடர்ந்து திகழ எங்களுக்கு உம் பரிசுத்த ஆவியைத் தந்தருள வேண்மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.சமுதாயத்தின் தேவைகளுக்கும் உதவக் கடமைப்பட்டுள்ளோம் என்று எம் திருமண நாளில் கற்பித்தீர். கிறிஸ்தவ திருமணத்தின் புனிதத்தைக் காப்பாற்ற நாங்கள் எப்பொழுதும் முனைந்து நிற்க அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. கிறிஸ்துவில் எங்கள் அன்பு முதிர்ச்சியடைவதாக பரிசுத்த ஆவியின் அருளால் எங்கள் குடும்பம் புனித வாழ்வுக்கு நல்ல வழிகாட்டியாய் அமைவதாக நண்பர்களோடு நாம் முதிர்வயதடைந்து மகிழ்வோமாக. அன்புத்தந்தையே, இந்நாளின் நன்மைகளுக்காகவும், இன்றுவரை எமக்களித்த கொடைகள் அனைத்திற்காகவும் எங்கள் ஆண்டவராகிய கிறஸ்து வழியாக நன்றி கூறுகின்றோம். அவரோடும் பரிசுத்த ஆவியோடும் என்றென்றும் ஒரே கடவுள் நீரே ஆமென்.


மன்றாடுவோமாக:

வாழ்வளிக்கும் வள்ளலே இறைவா! உமது திருவருளால் ( தம்பதியர் பெயர்கள்) .......................................................................என்ற உம் அடியார்கள் தங்கள் திருமண ஆண்டு விழாவை(வெள்ளிவிழாவை ஃ பொன் விழாவை) பெருமகிழ்வுடன் கொண்டாட அருள் புரிந்தீரே! இவர்களுக்கு இதுவரை நீர் செய்த வியத்தகு செயல்களுக்காக முழு உள்ளத்தோடு நன்றி கூறுகின்றோம். இனிவரும் நாட்களிலும் இவர்களுக்கு உமது அன்பையும், ஆசியையும், பாதுகாப்பையும், பராமரிப்பையும் என்றும் நிறைவாய்த் தருவீராக. இவர்கள் ஒருவரை ஒருவர் இன்னும் அதிகமாக அன்பு செய்யவும், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவைப் பிரதிபலிக்கும் கருவியாக விளங்கவும் வரம் தருவீராக. இவர்களையும், இவர்களது பிள்ளைகளையும், இக்குடும்பத்தினர் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. இவர்கள் திருமண அன்புறவில் நாளும் வளர்ந்து, இறையன்பிலும் பிறரன்பிலும் சிறந்து, மகிழ்வுடன் உமக்குச் சான்று பகர்வார்களாக. எங்கள் நல்ல ஆயராம் இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.


இதுவரை செய்த செயல்களுக்காக
இறைவா உமக்கு நன்றி

உவர் நிலமாக இருந்த என்னை
விளை நிலமாக மாற்றிய உம்மை - 2
அலைகடல் அலைந்து
ஓய்கின்ற வரையில் - 2
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி - 2

தனிமரமாக வளர்ந்த என்னை
பழுமரமாக சிறப்பித்த உம்மை - 2
திசைகளும் கோள்களும்
அசைகின்ற வரையில் - 2
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி 2

குடும்பச் செபம்

ஓவ்வொரு நாளும் எங்களைப் பாதுகாத்து வரும், இரக்கத்தின், அன்பின், அருளின் ஊற்றாகிய இறைவா! உமது முன்னிலையில் ஒன்றாக எங்களைக் கூட்டி, உமக்குப் புகழ் அஞ்சலி செலுத்த, உங்களுக்கு ஒவ்வொரு நாளும் வாய்ப்புக்களை வழங்கி வருவதற்காய், உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் குடும்பத்தில் உமது திருக்குடும்பத்தை ஏற்படுத்தி, அதில் என்றும் நீரே தலைவராக இருந்து, எங்களை வழிநடத்தி வருவதற்காய், நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

காலையும் மாலையும், இரவும் பகலும், நேற்றும் இன்றும், என்றும், உமது தூய ஆவியின் வரங்களால் எங்களை நிரப்பி, எங்களை தூய ஆவியின் தூண்டுதலின்படி, வழிநடத்தி வருவதற்காய் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். உமது கரங்களில் எங்களைப் பொறித்து வைத்து, கண்ணின் மணிபோல் ஒவ்வொரு நாளும் பாதுகாத்து வருகின்றீர். அதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். எம் குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

எங்கள் அனைவரையும் உமது பொற்பாதத்தில் ஒப்படைக்கிறோம். நீர் எங்களை நிறைவாக ஆசீர்வதித்தருளும். இன்றுபோல் என்றும் வாழ, உமது அன்பில் நாளும் மகிழ்ச்சியுடன் வாழ, எங்களுக்கு வரம் தாரும்.

எங்களது தொழில் துறைகள், விவசாய நிலங்கள், அதில் பயிரிட்டிருக்கின்ற பயிர்வகைகள் அனைத்தையும், நீர் கண்நோக்கியருளும். எங்களது மகிழ்ச்சியில் நாளும் கலந்து கொள்ளும். எம் வீட்டு உயிரினங்கள் அனைத்தையும், உமது கரத்தால் தொட்டு ஆசீர்வதித்தருளும். எங்களது உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தருளும். நாங்கள் செய்கின்ற தொழில் நிறைவைக் காண உதவியருளும். உமது சித்தத்தை உணர்ந்து, உமக்கேற்ற குடும்பமாக வாழ அருள் புரியும். ஆமென்.


குடும்பத்தை ஒப்புக் கொடுக்கும் செபம்

எங்கள் அன்பு இயேசுவே! நிறைவாழ்வை நோக்கிப் பயணம் செய்யும் நாங்கள், எங்கள் குடும்பத்தில் அன்புறவை வளர்த்து, இதயங்கள் இணைகின்ற இனிய குடும்பமாக வாழ, எங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றோம். நீரே எங்கள் குடும்பத்தின் தலைவராகவும், உற்ற நண்பராகவும் இருந்து, எங்களுக்கு வாழ்வளித்து வழிநடத்தி வருகின்றீர். அதற்காக உமக்கு நன்றி கூறி உம்மைப் போற்றுகின்றோம். திருக் குடும்பக் காவலரே, எங்கள் வாழ்வின் இன்ப துன்ப வேளைகளில், உம்மை விட்டு விலகாமல், உம்மையே உறுதியாய் பற்றிக் கொண்டு வாழ்ந்திட, எங்களுக்கு அருள் தாரும்.

நாங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றிக் கொள்வதால் வளர்ச்சி காணவும், ஒருவரை ஒருவர் மதிப்பதால் நிறைவு பெறவும், பரிவுடன் செவிமடுப்பதால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் விழைகின்றோம். மனம் திறந்த உரையாடல் வழியாக, முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், மன்னித்து வாழ்வதில் மகிழ்ச்சி பெறவும், இணைந்து எங்கள் வாழ்வைத் திட்டமிடுவதால், உயர்வடையவும் ஆசிக்கின்றோம்.

எங்கள் குடும்ப வாழ்வில் வரும் இன்பதுன்பங்களைச் சந்திக்க, உமது ஆற்றல் எங்களுக்கு உண்டு என்று உறுதியாக நம்புகின்றோம். நாங்கள் சேர்ந்து செபிப்பதில் உமது பிரசன்னத்தை உணரவும், ஒருவர் ஒருவரிடம் உமது சாயலைக் காணவும், எங்கள் தியாக வாழ்வில் உமது அன்பை வெளிப்படுத்தவும், எங்களுக்கு அருள் புரியும்.

எங்கள் பெற்றோர்களுக்கு, தங்கள் அர்ப்பணத்தின் பயனாக நிறைவைத் தந்தருளும். குழுந்தைகளும், சிறுவர்களும், தேவையான அன்பும் அரவணைப்பும் பெற்று, பண்பும் அறிவும் கொண்டவர்களாக வளர, அருள் புரியும். இளைஞர்கள், இளம்பெண்கள், பயனுள்ள குறிக்கோள்களை வளர்த்து, தங்கள் ஆற்றலை நெறிப்படுத்தத் துணைபுரியும். எங்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்து, இவ்வுலகை விட்டுப்பிரிந்த எங்கள் உறவினர்களுக்கு நிறை வாழ்வைத் அளித்தருளும்.

பல்வேறு இன்னல்களால் குடும்பத்தில் தவிக்கின்ற குடும்பங்களை, உமது பராமரிப்பிற்குக் கையளிக்கின்றோம். நோயுற்றோர், முதியோர், வறுமையில் வாடுவோர், கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என வாக்களிக்கின்றோம்.

சமூக நலனில் ஆர்வம் கொண்ட நல்லுள்ளங்கள், எங்கள் குடும்பத்தில் உருவாக எங்களை அர்ச்சித்தருளும். அன்பு, உண்மை, நீதி, சமாதானம், ஆகிய மதிப்பீடுகளுடன் வாழ்ந்து, உமது இறையாட்சிக்கு நாங்கள் சாட்சிகளாக வாழ அருள் புரியும். ஆமென்.





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்