• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

அருட்சாதனம்

                
16 வளங்கள் நிறைந்த திருப்பலி முன்னுரை + காணிக்கை மன்றாட்டு:  


                              அதிகாலை பனி போல, அழகான வாழ்க்கையின் அருமையான தருணம் இது. ஆயிரம் உறவுகள் அன்பாய் கூடிட, கோர்த்த மாலைகள் கழுத்தினில் மகிழ்ந்திட, ஆண்டவரின் அருள் பொங்கி வழிந்திடும் ஆனந்த கானம் இது. இந்த மகிழ்வென்னும் பொன்னாளிற்கு புதுப்பொலிவேற்ற வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என பல கருத்துக்கள் திருமணத்தைப் பற்றி நம்மிடையே பேசப்படுவதுண்டு. புனிதரும் வானதூதரும் இறையடியார்களும் இடைவிடாத இறை புகழ் பாடும் சொர்க்கத்தில் இரு உள்ளங்கள் இணையும் நாள் நிச்சயிக்கப்படுகின்றது. நல்லதை நினைத்து, நன்மை செய்து, நலன்களை மட்டும் விரும்பும் மனிதர்கள் வாழும் இந்நில உலக சொர்க்கத்தில் தங்களையும் இணைத்து, இறையருள் நாடும் மணமக்கள் ................... இருவருக்காக வேண்டுவோம். திருமணம் என்னும் அருட்சாதனத்தை மகிழ்வோடு பெற்று, அதன் பலனை தங்களின் வாழ்நாளில் வெளிப்படுத்த அருள் வேண்டும் இவர்களோடு இணைந்து செபிப்போம். ஆயிரங்காலத்துப் பயிரை அறுவடை செய்ய வேண்டும் என்ற இலக்கோடு தங்களது பயணத்தை தொடங்க இருக்கும் இவர்களுக்காக சிறப்பாக செபிப்போம். விவேகமுள்ள கணவன் மனைவி கடவுள் அளிக்கும் கொடை என்பதை உணர்ந்து இவர்கள் வாழ அருள் வேண்டுவோம். அன்பும் அறனும் கொண்ட இல்லற வாழ்க்கையை வாழ்ந்து பண்பையும் பயனையும் பல நூறு பெற்றிட இறையருள் இவர்கள் மீது சிறப்பாக பொழியப்பட ஆண்டவரின் ஆசீர் வேண்டி இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வரவேற்பு நடனம் கும்ப ஆரத்தி

மனங்களில் மகிழ்வும், முகந்தனில் செழிப்பும் கொண்டு அன்றலர்ந்த மலர் போல் அன்பு மணம் வீசும் உங்கள் அனைவரையும் ஆண்டவனின் அருள் இல்லத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். செல்வங்கள் கோடி சேர்த்து , இலக்குகளை அன்பால் கோர்த்து, வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட, தங்கள் வாழ்வை இறைவன் முன்னிலையில் இணைக்க விரும்பும் இரு உள்ளங்கள். இவ்விரு உள்ளங்களையும் அன்பால் இணைத்து ஆசீரால் நிரப்பக் காத்திருக்கும் இரு உறவு சொந்தங்கள். மணமக்களை வாழ்த்தி மகிழ வந்திருக்கும் உற்றம் சுற்றம். ஆயன் தம் மந்தையின் குரலை கேட்டு அதனை தேடி சென்று கண்டடைந்து மகிழ்வது போல, மந்தையாம் நமது மகிழ்வினில் பங்கேற்க அன்போடு வந்திருக்கும் பேரருட் பெருந்தகை ஆயர் ---------- அவர்கள், ஆக்கமுள்ள பணிகள் பல பங்கினில் மேற்கொண்டு ஆர்வமுடன் பணி செய்யும் பங்கின் பங்குத் தந்தை -------- அவர்கள். மற்றும் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்க வந்திருக்கும் ஏனைய குருக்கள் அருட்சகோதரிகள் இறைமக்கள் அனைவரையும் தமிழர் பண்பாட்டு வரவேற்பு முறையோடு வரவேற்க விரும்புகிறோம்.

மணத்தோடு மகிழ்வையும் தருவது சந்தனம். வீரத்திற்கும் வித்தியாசமான சிந்தனைக்கும் காரணமாய் இருப்பது குங்குமம். இத்தகைய இரு பெரும் நற்குணங்களைத் தன்னகத்தேக் கொண்ட சந்தனம் குங்குமம் கொண்டு திருப்பலி சிறப்புச் செய்ய வந்திருக்கும் ஆயர் அவர்களையும், ஏனைய குருக்களையும் மற்றும் இத்திருப்பலியில் பங்கேற்று மணமக்களுக்கு ஆண்டவரின் ஆசீரை அள்ளிப் பெற்றுத் தர ஆவலாய் காத்திருக்கும் உங்களையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

செழிப்பைத் தரும் மஞ்சள் நிற நூல் கொண்டு சுற்றிய நிறை குடம், அதில் தீமையை விரட்டும் மாவிலை, கரடும் முரடும், இனிமையும் சுவையும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்று அடையாளப்படுத்தும் முழுத் தேங்காய், இவை அனைத்தயும் உள்ளடக்கியது தான் கும்ப ஆரத்தி. இத்தகைய கும்ப ஆரத்தி எடுப்பது நிறைவையும் மகிழ்வையும் முழுமையாக ஒருவர் பெற வேண்டும் என்னும் நல்லெண்ண அடிப்படையில் தான். எனவே இன்று மணநாள் காண காத்திருக்கும் மணமக்களை வாழ்த்தி அவர்களுக்காக செபிக்க திருப்பலி நிறவேற்ற வந்திருக்கும் ஆயர் ....... அவர்களையும் குருக்கள் இறைமக்களாகிய உங்கள் அனைவரையும் மங்களகரமான கும்ப ஆரத்தி எடுத்து வரவேற்கிறோம்.

காணிக்கை மன்றாட்டு:
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று கூறி மணமக்களை வாழ்த்துவது நம்மரபு. பதினாறு என்பது பிள்ளைகள் அல்ல. பதினாறு வகை செல்வங்களையும் மணமக்கள் நிறைவாகப் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்பதே அதன் நோக்கம். எனவே இந்நேரத்தில் அந்த பதினாறு செல்வங்களையும் இவர்கள் பெற்றிட காணிக்கை மன்றாட்டின் வழி செபிப்போம்.

1; புகழ்; ( மஞ்சள் )
தோன்றின் புகழோடு தோன்றி, தன் குடும்ப வாழ்வால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இவர்கள் புகழைச் சேர்க்க வேண்டுகிறோம். எனவே அதன் அடையாளமாய் மங்கள நாட்களில் மகிழ்வினை சேர்க்கும் மஞ்சளினை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.

2. கல்வி: ( புத்தகம் )
கற்றனைத்தூறும் மணற்கேணியாய் இவர்களும் இவர் தம் வழிமரபினரும் கல்வியில் சிறந்து விளங்க அருள் வேண்டுகிறோம். எனவே கல்வியினை போதிக்கும் புத்தகத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.

3. ஆற்றல்; ( பலூன் )

என் அருள் உனக்குப் போதும் என்ற ஆண்டவரின் ஆசீர்வாதத்தைப் பெற்று இவர்கள் வாழ்நாளில் சாதனைகள் பல புரிய அருள் வேண்டுகிறோம். காற்றின் ஆற்றலால் உயர பறக்கும் பலூன் போல இவர்கள் வாழ்வு உயர்ந்திட அருள் வேண்டி இந்த பலூனை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.

4. வெற்றி : ( குங்குமம் )
எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற, வாகையினை சூடி இவர்கள்ம்வாழ்வைத் தொடர அருள் வேண்டுகிறோம். வெற்றியின் சின்னமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் இருக்கும் குங்குமத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.

5 . நல் அறிவு: ( ஒளி )
சிந்தித்து செயல்பட்டு சீரான முடிவுகளை எடுத்து பார் போற்ற இவர்கள் வாழ நல்ல அறிவுடன் செயல்பட அருள் வேண்டுகிறோம். இருளை அகற்றி ஒளி தரும் சுடர் போல இவர்கள் வாழ்வு மின்னிட ஒளியினை உம் பாதத்தில் உம் அர்ப்பணிக்கின்றோம்.

6 . நல் விதி: ( விவிலியம் )
விதியை மதியால் வெல்லலாம் என்பதை உணர்ந்து இவர்கள் செயல்பட அருள் வேண்டுகிறோம். உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு விவிலியம் என்பதை உணர்ந்து வாழ விவிலியத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.

7 . நன்மக்கள் : ( மலர் )
அன்பும் பண்பும் கொண்ட செல்வங்களை பிள்ளைகளாக பெற்று, சுற்றமும் நட்பும் சூழ எப்போதும் இணைந்து இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். மலர்ந்து மணம் பரப்பி பார்ப்போருக்கு மகிழ்வைத் தரும் மலர் போல இவர்கள் வாழ்வு மாற அருள் வேண்டி இம்மலரை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.

8 . பொன் : ( முத்துக்கள் )
செல்வ வளமும் நலமும் வாழ்வினில் நிறையப் பெற்று இவர்கள் செழிப்புடன் வாழ அருள் வேண்டுகிறோம். தோற்றத்தில் எளிமையாகவும், மதிப்பில் உயர்வாகவும் கிடைப்பதற்கு அரியதாகவும் இருக்கும் முத்துக்கள் போல இவர்கள் வாழ, அருள் வேண்டி இந்த முத்துக்களை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.

9 . நெல் : ( அரிசி காய் கறிகள் )
நிலத்தில் நல்ல விளைச்சலையும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் இவர்கள் காண அருள் வேண்டுகிறோம். உழுது பயிரிட்டு பசிக்கு உணவாகும் தானியங்கள் போல இவர்கள் வாழ்வு பிறருக்கும் பயன்பட அருள் வேண்டி இவ்வுணவுப் பொருட்களை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.

10 . நுகர்ச்சி : ( நறுமணப்பொருள் )
வாழ்க்கையில் வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் நுகர்ந்து அனுபவித்து மகிழ்வுடன் இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். நுகர்ந்ததும் மணம் தந்து மகிழ்வு தரும் நறுமணப்பொருள் போல இவர்கள் வாழ்வு அமைய நறுமணப் பொருள்களை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.

11 . அழகு :( புன்னகை )
அகத்தின் அழகினை முகத்தில் பிரதிபலிக்கும் நல்ல உள்ளங்களாக இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். புன்னகை ஒன்றே உடலையும் உள்ளத்தையும் அழகுபடுத்தும் என்பதை உணர்ந்து எப்போதும் புன்னகையுடன் இவர்கள் வாழ அருள் வேண்டி இந்த புன்னகை முகத்தை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.

12 . பெருமை : ( நீர் )

பெருமை கொண்டு வீழ்ந்து மடிவதை விட பொறுமை கொண்டு வாழ்ந்து காட்டலாம் என்று எண்ணி இவர்கள் சிறப்படைய அருள் வேண்டுகிறோம். தன்னால் தான் அனைவரும் செழிப்படைகின்றனர் என்ற பெருமை சிறிதும் இல்லாது பொறுமை கொண்டு, போகும் இடமெல்லாம் வளர்ச்சி அடையச்செய்யும் நீர் போல இவர்கள் வாழ்வு அமைய அருள் வேண்டி இந்நீரை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.

13. 14 . இளமை, துணிவு : ( வாழை )

என்றும் இளமை எதிலும் புதுமை என்பதை உடலளவில் மட்டுமல்லாது உள்ளத்தளவிலும் இவர்கள் பெற்றிட அருள் வேண்டுகிறோம். கணு முதல் காய் பழம் என அனைத்தும் மக்களின் பயன்பாட்டுக்கு தரும் வாழையைப் போல இவர்கள் வாழ்வு மாற துணிவுடன் இவர்கள் செயல்பட அருள் வேண்டி இவ்வாழையை உம் பாதம் ......

15. 16. நோயின்மை வாழ்நாள்: ( அப்பம் இரசம் )

நோய் நொடி இன்றி இன்பமாக நீடீய ஆயுளுடன் இவர்கள் வாழ அருள் வேண்டுகிறோம். அப்பத்தையும் இரசத்தையும் தனது உடலாகவும் இரத்தமாகவும் மாற்றிய இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்றி இவர்களும் உடல் உள்ள ஆன்மீக நலம் பெற அருள் வேண்டி இந்த அப்ப இரசத்தைஉம் பாதம் அர்ப்பணிக்கின்றோம்.

நன்றி மன்றாட்டு.
விண்ணும் மண்ணும் மகிழ்ந்திருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்து தனது திரு உடலையும் இரத்தத்தையும் நமக்கு உணவாகவும் பானமாகவும் கொடுத்து நம்மை திடப்படுத்தி ஆசீரால் நிரப்பி இருப்பதற்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்ற இயேசுவின் கட்டளையை சிரமேற்கொண்டு அர்ப்பண உணர்வோடு செயல்படும் ஆயர்.... இறைப்பணியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இச்சிறப்பு மிக்க நாளில் மணமக்களை வாழ்த்தி ஆசி கூறி தங்களின் மறையுரையால் நற்கருத்துக்களை போதித்து அவர்களுக்காக செபித்த அனைத்து அருட்பணியாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நனறிகள்.

அன்பாலும் பண்பாலும் இவர்களின் இல்லற வாழ்க்கையை நிறைத்து இவர்கள் இணைந்து வாழ இறைவனின் கருவிகளாக செயல்பட்ட இரு வீட்டாருக்கும் இறை முன்னிலையில் நன்றி கூறுகின்றோம்.

புதுமணத்தம்பதியரை வாழ்த்தி ஆசி கூறி, சுற்றம் சூழ வருகை தந்து, நலம் நாடும் அனைத்து உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்

இத்திருப்பலிக்கு மெருகேற்றி சிறப்பு செய்த பாடகற் குழுவினருக்கு எம் மனமார்ந்த நனறிகள். இல்லறா வாழ்க்கையை இனிதே தொடங்கியிருக்கும் இப்புதுமணத் தம்பதியினரை இறைவன் நிறைவாக ஆசீர்வதித்து உடனிருந்து ஊக்கம் தந்து நற்குணங்கள் பெற்று நலமுடன் வாழ தொடர்ந்து இவர்களுக்காக செபிப்போம்.
















1. இப்பொழுது திருமணத்தில் ஒன்றிணைந்த ,ப்பதிய மணமகனும் மணமகளும் தங்கள் இல்லற வாழ்வில் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் என்றும் வாழ்ந்திட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

2. உலகிலும் திருச்சபையிலும் அமைதி நிலவ வேண்டுமென்றும்,
திருச்சபையின் ஒற்றுமை மேன்மேலும் வளர வேண்டுமென்றும் ஆண்டவரே,
உம்மை மன்றாடுகிறோம்.

3. கானாவூர் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசியளித்தது போல், இம்
மணமக்களுக்கும் ஆசியளித்து , உம் அன்புக்கு அடையாளமாக
மக்களைப் பெற்று அவர்கள்என்றும் மகிந்திருக்கச் செய்ய வேண்டுமென்று
ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

4. இப்புதிய மணமக்கள் (பெயர்...) அமைக்கும் இல்லமும், மற்ற கிறிஸ்தவக்
குடும்பங்கள் அனைத்துமே தம் திருமண அருளில் என்றும் நிலைத்து
நிற்கவும், உம் திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாயத் திகழவும் வேண்டு
மென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!
புதுமணத் தம்பதியர் முருகனும் மியுரியாவும்
திருமணஉறவில் என்றுமே நிலைத்து நின்று
திருக்குடும்பம்போல் அன்பினில்
இன்று அருட்சாதனம் என்னும் அருட்சாதனத்தால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள இப் புதுமணத்தம்பதிகள் ( பெயர்) தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் முழுமையாக அர்ப்பணித்து, திருக்குடும்பத்தைப்போல அன்பிலும் பிரமாணிக்கத்திலும், மகிழ்ச்சிலும் சமாதானத்திலும் நிலைத்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் ஊற்றாகிய இறைவா!
இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப இவர்கள் அன்பிலும் புரிந்துணர்விலும் ஒருவரை ஒருவர் ஒன்றித்து வாழவும், இவ்வுலகில் தங்கள் கடமை எது என்பதை உணர்ந்து வாழவும் தூயஆவியின் கொடைகளால் நிரப்பி நீரே வழியும் ஒளியும் ஐPவனுமாய் இருந்து, வழி நடத்திடவும் வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

கருணைக்கடலே இறைவா!

அன்று கானாவூர் திருமணத்தை ஆசீர்வதித்து எவ்வித குறையும் ஏற்படாமல் கன்னிமரியாள் இறைமகன் கிறீதுவிடம் வேண்டிக் கொண்டதுபோல இப்புதுத்தம்பதியினரின் வாழ்க்கையிலும் கன்னிமரியாளின் உதவியாலும் வழிநடத்துதலாலும் இறைமகனின் ஆசீரையும் நிறைவாகப் பெறவும் அவர்கள் அன்பின் அடையாளமாக நன்மக்களைப் பெற்று, என்றும் மகிழ்ந்திருக்க உமது நிறைவான ஆசீரைப் பொழிந்திட வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் ஊற்றாகிய இறைவா!

(மணமக்கள் பெயர்) என்ற இம்மணமக்களின் இல்லறம் நல்லறமாக அமையவும் பெற்றோர் உற்றாருடன் அன்புறவுடன் வாழவும் இவர்களின் ஆன்ம உடல் நோய்களை அகற்றி இவர்கள் வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் பெற்று இன்புற வாழவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

அருளின் ஊற்றே இறைவா!

இந்த திருமணக் கொண்டாட்டத்தை முன்னின்று நடத்தும் இந்த அருட்பணி அடிகளார் தொடர்ந்தும் உமது பணியைச் சிறப்பாகப் புரிய ஆன்ம உடல் நலத்தை பெற்று உமது அன்பில் நிலைத்து வாழவும் இன்னும் இத் திருமணக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் தம்பதியர் அனைவரும், தங்கள் திருமண வார்த்தைப்பாட்டை மீண்டும் நினைவு கூர்ந்து அதைப் புதுப்பித்து, இறை அன்பிலும், பிறரன்பிலும் இயேசுவுக்குச் சாட்சியாக வாழும் வரத்தினை வழங்கிடவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

1) திருமணத்தில் தமை அர்ப்பணித்த
முருகன் மியுரியா தம்பதியர்
திருமண உறவில் நிலைத்து நின்று
அன்பு மகிழ்ச்சி சமாதானத்தை
இறைவழியில் அடைந்திடவும்
திருக்குடும்பம்போல் வாழ்ந்திடவும்
இறையவனே உமை வேண்டுகின்றோம்

2 கானாவூர் திருமணக் காட்சியிலே
தண்ணீரை ரசமாக மாற்றியதுபோல்,
இம்மணமக்கள் திருமண வாழ்வினிலே
அருள் அன்பு வளம் பெற்று மாறிடவும்
வல்லதேவன் ஆசீருருடன்
மக்களைப் பெற்று மகிழ்திருக்க
இறையவனே உமை வேண்டுகின்றோம்


3 இறைவன் இணைத்த இத் தம்பதியர்
தூயஆவி அருள் பெற்று
தம் கடமை தனைஉணர்ந்து
அன்பு வழி சென்றிடவும்
நீதி நேர்மை சமாதானம்
கருணையுடன் செயல்படவும்
இறையவனே வேண்டுகின்றோம்

4 தெய்வீக கொடைகள் ஏழும்
அருளுகின்ற தூயஆவியே
கல்வி ஞானம் தெய்வபயம்
ஒழுக்கத்திலும் இயேசு வளர்ந்ததுபோல்
பெற்றோர் தம் பிள்ளைகளை
இப்பண்புகளில் சிறந்தவராய்
உருவாக்க உமை வேண்டுகிறோம்

5 மங்களம் பல பல பெற்றிடவும்
மணமக்கள் மாண்புடன் வாழ்ந்திடவும்
இல்லம் நல்லறம் ஆகிடவும்
செல்வங்கள் பதினாறும் பெற்றிடவும்
இயேசு மரி சூசை ஆசிருடன் -இப்
புது வாழ்வு தொடங்கிடவும்
இறையவனே உமை இறைஞ்சுகின்றோம்




திருமண ஆண்டு விழாவில் செபம்
(திருமண ஆண்டு நிறைவு நாள், வெள்ளிவிழா, பொன்விழா)
பொன்விழா மன்றாட்டு

அன்று
பொன் - வெள்ளி தூபம் ஏந்தி
மூவிராசாக்கள்
உம் திருமுன் வந்து அர்ப்பணம் செய்தனர்.
இன்று
கையில் தீபம் ஏந்தி மலர் தூவி தூபம் காட்டி
இத் தம்பதியர்;
உம் திருமுன் மண்டியிட்டு பொன்விழாக்காணும் இந் நாளில் இந்நன்றித் திருப்பலியை ஒப்புக் கொடுப்போம்


தந்தை இறைவனே - தந்தை இறைவனே
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் - தந்தை இறைவனே

இன்றிந்த நன்னாளில்- பொன்விழாக்காணும்- இனிய தம்பதியர்
இறைவன் அருளிய - கொடைகளுக்காக - நன்றி நவில்கின்றனர்
இனிவரும் வாழ்விலும் - இறைஅன்பில் வாழ - உறுதி பகன்றிட
நிறைவாய் உமது - ஆசீரைத் தாரும் - அன்புத்தந்தையே

குடும்பக் கோவிலைக் - கட்டிக் காத்து வாழ்ந்த இத்தம்பதியரின்
மக்கள் மருமக்கள் - பேரப்பிள்ளைகளையும் - அறவழியில் வாழச்செய்து
அன்பென்னும் மொழியை - வாழ்வில் என்றும் - நிலையாய் கொள்ளவும்
உமது அருளை- நிறைவாய் இவர்க்குத் - தாரும் தந்தையே

கானாவூரில்- திருமணப்பந்தியில் - கனிரசம் அருளி
முதல் புதுமையை - ஆரம்பித்த - கருணைத் தெய்வமே
குடும்ப வாழ்வில் - பொன்விழாக் கண்டு - மகிழும் இவர்களை
உமது கரங்கள் - நீட்டி ஆசீர் - தாரும் இறைவனே

நன்றித் திருப்பலியில் - பங்கு கொண்ட- இறைகுலம் அனைவர்க்கும்
புனித பலியை - ஒப்புவிக்கும் - அருட்தந்தை அவர்கட்கும்
இறைவன் அருளும் - புனிதர் உறவும் - நிறைவாய் விளங்கிட
கிருபை நிறைந்த - உமது அருளைத் - தாரும் தந்தையே

எமது தாய்திரு- ஈழநாட்டில் - வாழும் மக்களின்
வாயிருந்தும் -பேசமுடியாத - அடிமைத்தனம் நீங்கி
நல்லுறவும் - சமத்துவமும் கொண்ட - மக்களாய் வாழ
நிறைவாய் உமது - அருளைத்தாரும் - தந்தை இறைவனே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலைய எமக்குத் தந்தாய்