![]() |
குடும்பச் செபம் ஓவ்வொரு நாளும் எங்களைப் பாதுகாத்து வரும், இரக்கத்தின், அன்பின், அருளின் ஊற்றாகிய இறைவா! உமது முன்னிலையில் ஒன்றாக எங்களைக் கூட்டி, உமக்குப் புகழ் அஞ்சலி செலுத்த, உங்களுக்கு ஒவ்வொரு நாளும் வாய்ப்புக்களை வழங்கி வருவதற்காய், உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் குடும்பத்தில் உமது திருக்குடும்பத்தை ஏற்படுத்தி, அதில் என்றும் நீரே தலைவராக இருந்து, எங்களை வழிநடத்தி வருவதற்காய், நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். காலையும் மாலையும், இரவும் பகலும், நேற்றும் இன்றும், என்றும், உமது தூய ஆவியின் வரங்களால் எங்களை நிரப்பி, எங்களை தூய ஆவியின் தூண்டுதலின்படி, வழிநடத்தி வருவதற்காய் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். உமது கரங்களில் எங்களைப் பொறித்து வைத்து, கண்ணின் மணிபோல் ஒவ்வொரு நாளும் பாதுகாத்து வருகின்றீர். அதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். எம் குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். எங்கள் அனைவரையும் உமது பொற்பாதத்தில் ஒப்படைக்கிறோம். நீர் எங்களை நிறைவாக ஆசீர்வதித்தருளும். இன்றுபோல் என்றும் வாழ, உமது அன்பில் நாளும் மகிழ்ச்சியுடன் வாழ, எங்களுக்கு வரம் தாரும். எங்களது தொழில் துறைகள், விவசாய நிலங்கள், அதில் பயிரிட்டிருக்கின்ற பயிர்வகைகள் அனைத்தையும், நீர் கண்நோக்கியருளும். எங்களது மகிழ்ச்சியில் நாளும் கலந்து கொள்ளும். எம் வீட்டு உயிரினங்கள் அனைத்தையும், உமது கரத்தால் தொட்டு ஆசீர்வதித்தருளும். எங்களது உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தருளும். நாங்கள் செய்கின்ற தொழில் நிறைவைக் காண உதவியருளும். உமது சித்தத்தை உணர்ந்து, உமக்கேற்ற குடும்பமாக வாழ அருள் புரியும். ஆமென். குடும்பத்தை ஒப்புக் கொடுக்கும் செபம் எங்கள் அன்பு இயேசுவே! நிறைவாழ்வை நோக்கிப் பயணம் செய்யும் நாங்கள், எங்கள் குடும்பத்தில் அன்புறவை வளர்த்து, இதயங்கள் இணைகின்ற இனிய குடும்பமாக வாழ, எங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றோம். நீரே எங்கள் குடும்பத்தின் தலைவராகவும், உற்ற நண்பராகவும் இருந்து, எங்களுக்கு வாழ்வளித்து வழிநடத்தி வருகின்றீர். அதற்காக உமக்கு நன்றி கூறி உம்மைப் போற்றுகின்றோம். திருக் குடும்பக் காவலரே, எங்கள் வாழ்வின் இன்ப துன்ப வேளைகளில், உம்மை விட்டு விலகாமல், உம்மையே உறுதியாய் பற்றிக் கொண்டு வாழ்ந்திட, எங்களுக்கு அருள் தாரும். நாங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றிக் கொள்வதால் வளர்ச்சி காணவும், ஒருவரை ஒருவர் மதிப்பதால் நிறைவு பெறவும், பரிவுடன் செவிமடுப்பதால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் விழைகின்றோம். மனம் திறந்த உரையாடல் வழியாக, முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், மன்னித்து வாழ்வதில் மகிழ்ச்சி பெறவும், இணைந்து எங்கள் வாழ்வைத் திட்டமிடுவதால், உயர்வடையவும் ஆசிக்கின்றோம். எங்கள் குடும்ப வாழ்வில் வரும் இன்பதுன்பங்களைச் சந்திக்க, உமது ஆற்றல் எங்களுக்கு உண்டு என்று உறுதியாக நம்புகின்றோம். நாங்கள் சேர்ந்து செபிப்பதில் உமது பிரசன்னத்தை உணரவும், ஒருவர் ஒருவரிடம் உமது சாயலைக் காணவும், எங்கள் தியாக வாழ்வில் உமது அன்பை வெளிப்படுத்தவும், எங்களுக்கு அருள் புரியும். எங்கள் பெற்றோர்களுக்கு, தங்கள் அர்ப்பணத்தின் பயனாக நிறைவைத் தந்தருளும். குழுந்தைகளும், சிறுவர்களும், தேவையான அன்பும் அரவணைப்பும் பெற்று, பண்பும் அறிவும் கொண்டவர்களாக வளர, அருள் புரியும். இளைஞர்கள், இளம்பெண்கள், பயனுள்ள குறிக்கோள்களை வளர்த்து, தங்கள் ஆற்றலை நெறிப்படுத்தத் துணைபுரியும். எங்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்து, இவ்வுலகை விட்டுப்பிரிந்த எங்கள் உறவினர்களுக்கு நிறை வாழ்வைத் அளித்தருளும். பல்வேறு இன்னல்களால் குடும்பத்தில் தவிக்கின்ற குடும்பங்களை, உமது பராமரிப்பிற்குக் கையளிக்கின்றோம். நோயுற்றோர், முதியோர், வறுமையில் வாடுவோர், கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என வாக்களிக்கின்றோம். சமூகநலனில் ஆர்வம் கொண்ட நல்லுள்ளங்கள், எங்கள் குடும்பத்தில் உருவாக எங்களை அர்ச்சித்தருளும். அன்பு, உண்மை, நீதி, சமாதானம், ஆகிய மதிப்பீடுகளுடன் வாழ்ந்து, உமது இறையாட்சிக்கு நாங்கள் சாட்சிகளாக வாழ அருள் புரியும். ஆமென். பாடல் இதுவரை செய்த செயல்களுக்காக இறைவா உமக்கு நன்றி உவர் நிலமாக இருந்த என்னை விளை நிலமாக மாற்றிய உம்மை - 2 அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் - 2 நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி - 2 தனிமரமாக வளர்ந்த என்னை பழுமரமாக சிறப்பித்த உம்மை - 2 திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் - 2 இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி 2 ![]() புதுமணத் தம்பதியர் செபம்! மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்; நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன் என்று ஒசேயா (2:19-20) இறைவாக்கினர் வாயிலாக உரைத்த எம் தாயும் தந்தையுமான இறைவா! உம்மை போற்றுகின்றோம். இயேசு மரி சூசை வழியாக இம்மண்ணுலகில் அமைத்த திருக்குடும்பத்தைப்போல இன்று எங்கள் வழியாக ஓர் திருக்குடும்பத்தை ஏற்படுத்துகின்றமைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். "மனிதன் தனிமையான இருப்பது நன்றன்று, அவனுக்கு உற்ற துணையை உருவாக்குவேன்" என்று சொல்லி, உலகில் திருக்குடும்பத்தை ஏற்படுத்திய இறைவா, இன்று எங்களை ஒருவர் மற்றவருக்கு உற்ற துணையாக கொடுத்தமைக்காகவும் நன்றி செலுத்துகின்றோம். எங்களுக்கு ஒருவர் மற்றவர் வழியாக ஏராளமான உறவுகளையும் கொடுத்தமைக்காக நன்றி செலுத்துகின்றோம். இக்குடும்ப உறவுகளை எம் வாழ்வின் சிறந்த கொடையாக ஏற்று, திருமணம் குறித்த திருச்சபையின் படிப்பினைகளை உணர்ந்து வாழ்ந்திட உம் ஞானத்தை எமக்கு அளித்தருளும். எம் திருமண வாழ்வில் மகிழ்ந்திருக்க, நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, குறை நிறைகளோடு மற்றவரை ஏற்றுக்கொண்டு அன்பு செய்ய நிறைவான அருளினைத்தர வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென். |