அருட்சகோதரி: பற்றீசியா |
குடும்பம் என்பது அன்பு உள்ளங்களின் சங்கமம். ஆழமான உறவுகளின் அர்ப்பணம். சமுதாய கட்டமைப்பின் அடிப்படையான ஓர் அங்கம். ஒரு கோவில். அங்கே இறைவன் பிரசன்னமாகிறார். குடும்பம் இறைவனால் அமைக்கப்பட்ட ஒரு தெய்வீக அமைப்பு. இன்றைய காலங்களில் வேலைப்பளு, மன அழுத்தம், சோர்வு, பரபரப்பு, அவசரம் என்று சதா ஓடிக்கொண்டேயிருக்கும் மனிதர்களுக்கு, குடும்பம் வெறும் துணி மாற்றும் அறைகளாக மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது. படைப்பு இஸ்ராயேல் மக்களின் விடுதலை வரலாறு, மீட்பின் வருகை என இம்மூன்று நிகழ்வுகளிலும் குடும்ப உறவு இழையோடி, நிற்கிறது. மேலும் ஆபிரகாம், சாரா, ஈசாக்கு, ரபேக்கா, யாக்கோபு, லேயா, ரேச்சல் என்ற முதுபெரும் தந்தையர்களின் குடும்பங்களும் தோபியா, சாரா என இணைத் திருமறையின் குடும்பமும், யோசேப்பு - மரியாள் என புதிய ஏற்பாட்டுக் குடும்பமும், குடும்ப உறவில் அன்பை, தியாகத்தை, பகிர்தலை, எதிர்நோக்கியிருத்தலை நமக்குக் கற்பிக்கின்றது. இயேசுவை நாம் சந்திக்க வேண்டுமானால், அங்கே அவரது குடும்பத்தையும் நாம் சந்திக்க வேண்டும். இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும், யோசேப்பையும், தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும், கண்டார்கள். (லூக்;: 2.16) அமைதி: இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளை லூக்கா நற்செய்தியாளர் தொகுக்கும்போது, ஒருவிதமான அமைதியை அடிநாதமாக எழுதுகின்றார். மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம், தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துக் கொண்ருந்தாள். (லூக்: 2-19) இயேசுவின் பிறப்பு, அவர்களை ஆழ்மன அமைதிக்கு அழைத்துச் செல்கின்றது. நம் குடும்பங்களில் இருக்க வேண்டியது இத்தகைய அமைதிதான். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் மிக நீண்ட பயணம், தன் ஆழ்மனதை நோக்கிய பயணம்தான். அமைதியில் திளைக்கும் குடும்பம்தான், வெற்றி பெற முடியும். எந்நேரமும் சண்டை சச்சரவுகளையும், எரிச்சலையும், சலசலப்பையும் கொண்டிருக்கும் குடும்பம், தோல்வியில்தான் முடியும். கற்களும், செங்கற்களும் கொண்டு, ஒரு அழகிய கட்டிடத்தைக் கட்டலாம். அதை இல்லமாக மாற்றுவது அமைதியான மனங்கள்தான். ஒழுங்கு: இதில் ஒழுங்கு என்பது ஒருவர் மற்றவரைக் கட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கும் வேகத்தையல்ல. மற்றவரின் நலன் காப்பதுதான் நோக்கம். வழியில் எச்சரிக்கைகள், வேகத்தடைகள் ளுபையெட இவைகள் எல்லாம் நம்மைக் கட்டுப்படுத்த அல்ல. நம் நலனுக்காய், நாம் பத்திரமாய் வீடு திரும்புவதற்கே. குடும்பத்தில் நிலவ வேண்டிய ஒழுங்கும், ஒழுக்கமும் அடக்கி ஆள அல்ல. பிறர் நலனுக்கே. பிறர் நலன் என்று வரும்போது, சடங்குகளையும், சம்பிரதாயங்களையும், தூக்கியெறியத் துணியவேண்டும். யோசேப்பு, மரியா கருவுற்றிருக்கிறார் என்று தெரிந்தும் ஏற்றுக்கொண்டபோது, யூத மரபை மீறத் துணிகின்றார். மரியா மற்றும் குழந்தையின் நலன் காக்கிறார். இறை நம்பிக்கை: இறை நம்பிக்கை, திருக்குடும்பத்தின் ஆணிவேராக இருந்ததுபோல, நம் வாழ்விலும் இருக்க வேண்டும். இறைவன் மையமாக இருக்கும் குடும்பமே இணைந்து நிற்கும். நம்மிடம் குறைவுபடுகின்ற வெறுமையை மற்றவரிடம் தேடும்போது வறுமையும், வெறுமையும் இணைந்து வெறுமையே மிஞ்சும். அந்த இடத்தில் இறைமையைத் தேடினோமென்றால் நம் குறைகள் நிறைவாகும். தேவ ஆவியால் நிரப்பப்பெற்று, கருவுற்று ஆண்டவர் யேசுவை குழந்தையாகப் பெற்ற மரியாவும், வளர்ப்புத் தந்தையாகத் தரப்பட்ட புனித சூசையப்பரும் குழந்தையாகத் தாலாட்டி, சீராட்டி கையில் எடுத்து ஏந்தி, ஏரோதிடம் தப்புவிக்க எகிப்துக்கு ஓடி, பின் திரும்ப ஜெருசலேமுக்கு வந்து, இறுதியாக நாசரேத்தில் அன்பால், பாசத்தால் உடல் வளர்ச்சி மட்டுமல்ல ஞானத்திலும், அறிவிலும் வளர்ந்து, 12 வயதில் ஜெருசலேமில் தவறவிட்டபோதும், ஏக்கத்தோடு இருவரும் தேடி கண்டடைந்த பின், 30 வயதுவரை வளர்த்து உருவாக்கி, மனித குலத்திற்காக தம்மகனை பலியாக அர்ப்பணித்த குடும்பம்தான் திருக்குடும்பம். குடும்பத்தின் வெற்றிக்கு அடித்தளம் கூட்டு முயற்சியும், விட்டுக் கொடுக்கும் மனநிலையுமாகும். இறை வார்த்தையை ஆழ்ந்து சிந்திக்கும் உள்ளம் தேவை. இறைமகன் பிரசன்னம் இருக்க இவர்களின் நிறையன்பும், நிறை மகிழ்ச்சியும் உன்னதமான அர்ப்பணமும், திருக்குடும்பத்தில் மிளிர்ந்தன. குடும்பத்தின் மையமாக இயேசுவை வைப்போம். மனித மாண்பை வளர்க்கும் இல்லமாக அன்பும், அரவணைப்பும் அக்கறையும், கரிசனையும் நிறைந்திருக்கும் குடும்பமாக இருக்க அருள் வேண்டுவோம். அன்பு ஒன்றே நம் குடும்பங்களை ஆளட்டும். அதற்கு திருக்குடும்பம் நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளி விளக்கு, என்பதை உணர்வோம். பீட்டர் ஒரு ஏழைக்குடியானவன். தினமும் நண்பகல் வேளையில் ஆலயத்திற்குச் செல்வதும், ஐந்து நிமிடங்களிலேயே வெளியே வருவதும், வழக்கம். நீண்ட நாட்களாகக் கண்காணித்துக் கொண்ருந்த உபதேசியார், ஒருநாள் அவனிடம் கேட்டார். " நீ யார். எதற்காகப் கோவிலுக்குப் போகிறாய்? என்ன செய்கிறாய்? பீட்டர் அமைதியாகச் சொன்னான். " கோவிலில் இயேசுவைப் பார்த்து, இயேசுவே! பீட்டர் வந்திருக்கிறேன். என்று சொல்லிவிட்டுத் திரும்புவேன்" என்றான். ஒருமுறை விபத்தில் அடிபட்டு, அரசாங்க மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான்;. அவன் அங்கு போன நாளிலிருந்து, அங்குள்ள சூழல், மகிழ்ச்சி நிரம்பியதாக மாறியது. பிறருக்க உதவுவதும், அவர்களுக்கு செவிமடுப்பதும், என எல்லோருக்கும் எல்லாமாகச் செயல்பட்டான். அங்கிருந்த தாதி ஒருவர், அவனிடம், " எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்? என்று கேட்டார். ஓ அதுவா. தினமும் என்னைப் பார்க்க வரும் என் நண்பரால்தான், என்றான் பீட்டர். " நண்பரா? எப்போது வருகிறார்? நான் ஒருநாளும் பார்த்ததில்லை" என்றார். தினமும் பகல் 12 மணிக்கு வருகிறார். என் கட்டிலருகே வந்து, " பீட்டர், இயேசு வந்திருக்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார், என்றான் பீட்டர். அழகே! நித்திய பேரழகே! மிக தாமதமாகவன்றோ உம்மை நான் கண்டு பிடித்திருக்கிறேன். கடைசியாகவன்றோ உம்மை அன்பு செய்திருக்கிறேன். (புனித அகுஸ்தீன்) நற்கருணையில் பிரசன்னமாய் இருக்கும் இயேசு, நம்மில் குடும்பத்தில் ஒருவராய் இருக்க வேண்டும். இதனை நாம் உணர வேண்டும். இயேசு நம் இல்லங்களை அரசாளட்டும், என்றும் இறைவன் நம்மோடு இருப்பாராக! |