![]() |
நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் உலகின் ஏதோ ஒரு மூலையில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்: ஒரு ஆணும், இன்னொரு ஆணும் அல்லது ஒரு பெண்ணும். இன்னொரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டிருப்பர். அல்லது இன்னொரு பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக டுவிட் செய்து கொண்டிருப்பார். அல்லது நாம் இருவரும் நண்பர்களாகவே இருப்போம் என ஓர் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ முடிவெடுத்துக் கொண்டிருப்பர். அல்லது நம் சேர்ந்து வாழ்தலை இன்றோடு முடித்துக்கொள்வோம் என்ற இருவர் தத்தம் வீடுகள் நோக்கிச் செல்வர். அல்லது ஒரு பெண் தன் நண்பனுக்கு வாடகைத் தாயாக இருக்க முன்வருவதாக வாக்குறுதிப் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொண்டிருப்பாள். 'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்' என்று ஆண் பெண் ஏற்றுக்கொண்டு, 'ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள், 'ஆண்டவரின் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்'' என்று சொன்ன மனிதக் குடும்பம் கடந்து வந்த பாதையை நினைக்கும்போது, குடும்பம் என்ற நிறுவனம் இன்று தேவையற்ற சுமையாக, அல்லது தேவைக்கேற்ற சுகமாகப் பார்க்கும் நிலையில் வந்து நிற்கிறது. பால்குடி பருவத்தில் தாய் என்னும் திராட்சைச் செடியிலிருந்து உறவுநிலை மாறத் தொடங்குகிறது குழந்தைக்கு. ஒரு உறவிலிருந்து அடுத்த உறவுக்கு மாறும் பாதைதான் இந்தப் பருவம். அந்தக் குழந்தையே 'நிறைவு பெற்ற குழந்தை'; என்று அழைக்கப்படுகிறது. ஏன்? ஒரு குழந்தை அதிக நாள் பால் குடித்தது என்றால் அது பிற்காலத்தில் அடுத்தவர்களை சார்ந்தே நிற்கும் அல்லது அடுத்தவர்களைக் கேட்டே முடிவெடுக்கும் மனிதராக உருப்பெறுகிறது. குறைந்த நாளே பால் குடித்தது என்றால், அடிப்படையிலேயே பாதுகாப்பற்ற, யாரிடமும் ஒட்டிக்கொள்ளாத, தன்னை மட்டுமே மையப்படுத்துகின்ற மனிதராக உருப்பெறுகிறது. சாமுவேலின் தாய் தன் குழந்தையை ஒரு நிறைவுபெற்ற குழந்தையாக ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்ய விழைகிறாள். இயேசுவின் பெற்றோர்களின் நிலை மிகவும் கடினமானதாக இருக்கிறது. இது மரியாவின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. இருந்தாலும், தாங்கள் செய்ய வேண்டிய வேலையைச் சரியாகச் செய்கிறார்கள். முதன் முதலாக இயேசுவை எருசலேமுக்கு அழைத்து வந்து அவருக்கு அந்த நகரையும், ஆலயத்தையும் அறிமுகம் செய்கின்றனர். காணாமல்போன இயேசுவைக் கண்டுபிடித்தபின் அவரைக் கடிந்துகொள்ளும் மரியா இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவுடன் மௌனம் காக்கிறார்: 'இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.' இவ்வாறாக, பெற்றோர்கள் தங்கள் வாழ்வின் சூழல்கள் வெள்வேறாக இருந்தாலும் தங்களின் தாராள உள்ளத்தாலும், தியாகத்தாலும் தங்கள் குழந்தைகளைத் தயாராக்குகின்றனர். இப்படியான குடும்பமாக இன்றைய நம் குடும்பங்கள் இருப்பதில்லை. கணவன்-மனைவி சண்டை, திருமணத்திற்குப் புறம்பே உறவு, அவ்வுறவைத் தக்க வைக்க தன் துணையையும், பிள்ளைகளையும் கொல்லும் நிலை, குடும்ப வன்முறை, மணமுறிவு, உடைந்த குடும்பங்கள் என நிறைய எடுத்துக்காட்டுகளை நாம் அன்றாடம் செய்தித்தாள்களிலும், மற்ற ஊடகங்களிலும் பார்க்கிறோம். நம் குடும்பமும் இந்த ஒரு இக்கட்டான நிலையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. தங்கள் குழந்தைகள்மேல் பொறுப்புணர்வு குறைந்த பெற்றோர்களையும், தங்கள் பெற்றோர்களை மதிக்காத குழந்தைகளையும்தான் இன்று நாம் அதிகம் பார்க்கிறோம். ஆக, பெற்றோர்களைப் போலவே பிள்ளைகளும் இருக்கிறார்கள், இயங்குகிறார்கள். ஒரு சமூகத்தின் வளர்ச்சியின் அளவுகோலாக இருப்பது குடும்பமே. இந்தப் பின்புலத்தில் திருக்குடும்பம் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது. இன்று நாம் நம் இருப்பில் இருக்க நம் குடும்பங்கள் காரணமாக இருப்பதுபோல, நம் குழந்தைகளின் இருப்பு இருக்க நம் குடும்பங்கள் காரணமாக இருத்தல் வேண்டும். அன்னாவின் தியாக உள்ளம், எல்கானாவின் மனைவியை மதிக்கும் குணம், சாமுவேலின் நீடித்த அர்ப்பணம், யோசேப்பின் தேடல், மரியாளின் ஏக்கம், இயேசுவின் பணித்தெளிவு ஆகிய அனைத்தும் நம் குடும்பங்களுக்கும் ஊக்கம் தருவனவாக. இன்றைய நாளில் நம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, நம் உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் அனைவரையும் எண்ணிப்பார்த்து இவர்களின் இருப்பிற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். இவர்களே நம் ஒவ்வொருவரின் வேர்கள். குழந்தையரைத் தந்தையர்களாக, தாயார்களாகக் கனவு கண்டவர்களும், அந்தக் கனவுகளை நனவுகளாக்கியவர்களும் இவர்களே! |