Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   25  மார்ச் 2019  
                                 கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா              
=================================================================================
முதல் வாசகம்  
கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா
=================================================================================
இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b

அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: "உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்" என்றார்.

அதற்கு ஆகாசு, "நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்" என்றார். அதற்கு எசாயா: "தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?

ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்" என்று கூறினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:40: 6-7a. 7b-8. 9. 10 (பல்லவி: 7a,8a காண்க) Mp3
=================================================================================
 பல்லவி: இறைவா, இதோ உம் திருவுளம் நிறைவேற்ற நான் வருகின்றேன்.

6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7a எனவே, 'இதோ வருகின்றேன்.' பல்லவி 7b என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். பல்லவி

9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். பல்லவி

10 உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை. பல்லவி


இரண்டாம் வாசகம்

என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 4-10


சகோதரர் சகோதரிகளே, காளைகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது. அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, "பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.

எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, `இதோ வருகின்றேன்.' என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது" என்கிறார். திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், "நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம்போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல" என்று அவர் முதலில் கூறுகிறார்.

பின்னர் "உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்" என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கி விடுகிறார். இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதன் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 1: 14ab

அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.

அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார்.

வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார். பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

யாருடைய சித்தம் நிறைவேற்ற உள்ளோம்.

நம்முடைய விருப்பு வெறுப்புக்கு ஆளாகி நாம் நம்முடைய தேவைகளை நிறைவு செய்து மண்ணுலக மாந்தர்களைப் போல வாழ்ந்து வருவேமானால், நாம் நம்முடைய பாவத்திலேயே மடிந்து போவோம் என்பது தான் உண்மை.

அவருடைய சித்தம் நிறைவேற்றவே நாம் படைக்கப்பட்டு உள்ளோம். தேர்வு செய்யப்பட்டு இருக்கிறோம்.

அன்னை மரியாள் நமக்கு இதனைத் தான் உணர்த்தி நிற்கின்றார்கள்.

தன் வாழ்வில் இதனை தெளிவுற அறிவுறுத்தினார்கள். உம் திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன் என்று சொல்லி, இறுதி வரை சென்று மகனையே பலியாக்கி கொடுக்கின்றார்கள்.

இறுதி வரை நின்று மீட்பை தேடிக் கொள்வோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  இன்று அன்னையாம் திருச்சபை ஆண்டவர் இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்புப் பெருவிழாவக் கொண்டாடுகின்றது.

இந்த உலகத்தில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி இருகிறார்கள்; எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிறப்பைக் குறித்து முன்னறிவிக்கப்படவில்லை. அவர்களின் பிறப்பைக் குறித்து யாருக்கும் முன்னதாகச் சொல்லப்படவில்லை. இயேசுவின் பிறப்பைக் குறித்துத்தான் முன்னறிவிக்கப்பட்டது; அவரது பிறப்பைக் குறித்துதான் இறைவாக்காகச் சொல்லப்பட்டது. அப்படிப் பார்க்கும்போது இயேசு எந்தளவுக்கு மற்ற எல்லாரையும்விட பெரியவர்; உயர்ந்தவர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இயேசுவின் பிறப்பைப் குறித்து பல இடங்களில் இறைவாக்கின் வழியாக முன்னறிவிக்கப்பட்டாலும், அதில் ஒருசில இடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. எனவே நாம் அவற்றைக் குறித்து சிறது ஆழமாகச் சிந்தித்துப் பார்த்து, இன்றைய இறைவார்த்தை நமக்குக்கூறும் உண்மை என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் பிறப்பைப் குறித்து முன்னறிவிக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தொடக்க நூல் 3:15. இப்பகுதியில் கடவுள், தன்னுடைய வார்த்தையைக் கடைபிடிக்காமல் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ட ஆதிப் பெற்றோர்களான ஆதாமையும், ஏவாளையும், அதற்குக் காரணமாக இருந்த பாம்பையும் தண்டிக்கிறார். அப்படித் தண்டிக்கும்போது அவர் வாயிலிந்து வரக்கூடிய ஒரு இறைவாக்குதான் "உனக்கும் பெண்ணுக்கும், உன்வித்துக்கும், அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன், அவள் வித்து உந்தலையை காயப்படுத்தும், நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்பதாகும். இப்பகுதி இயேசுவின் பிறப்பைப் பற்றி நேரடியாகச் சொல்லாவிட்டாலும், இயேசுவின் பிறப்பால் தீமைகள்/ பாவங்கள் வேரோடு அழிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது.

இயேசுவின் பிறப்பைப் குறித்து முன்னறிவிக்கப்பட்ட பகுதியில் இரண்டாவது முக்கியமான பகுதி எசாயா புத்தகம் 7:14 (இன்றைய முதல் வாசகம்). இப்பகுதியில் எசாயா இறைவாக்கினர் ஆகாசு மன்னனிடம், கடவுளைப் பார்த்து அடையாளம் ஒன்றைக் கேள் என்று கேட்கச் சொல்கிறார். அதற்கு அவன் அடையாளம் கேட்பது என்பது கடவுளைச் சோதிப்பதற்குச் சமம் என்று நினைத்து, கேட்க மறுத்துவிடுகிறான். இறுதியில் கடவுளே அவனுக்கு ஓர் அடையாளத்தைத் தருகிறார். அதுதான், "கருவுற்றிருக்கும் இளம்பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவள் இம்மானுவேல் என்று பெயரிடுவர்" என்பதாகும். இங்கே இயேசு யாரிடம் பிறப்பார் என்பது பற்றிச் சொல்லப்படுகிறது.

இயேசுவின் பிறப்பைக் குறித்து முன்னறிவிக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது பகுதி மீக்கா புத்தகம் 5:2. அதில் "நீயோ எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே, யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய், ஆயினும் இஸ்ரயேலை என்சார்பாக ஆளப்போகிறவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்" என்று சொல்லப்படுகிறது. இதில் இயேசு எந்த இடத்தில் பிறப்பால் என்று சொல்லப்படுகின்றது. ஆக, மேலே சொல்லப்பட்ட இந்த மூன்று இறைவாக்குப் பகுதிகளும் இயேசு என்பவர் யார்? அவர் எங்கே, யாரிடம் பிறப்பார், என்ன செய்யப்போகிறார்? என்பது முதற்கொண்டு எல்லாவற்றையும் மிகத் தெளிவாகச் சொல்கிறது.

கடவுள் பாவம் செய்த தன்னுடைய மக்கள் அப்படியே அழிந்துபோகட்டும் என்று விட்டுவிடவில்லை, மாறாக அவர்களுக்கு மீட்பை வழங்குவேன் என்று வாக்களிக்கின்றார். வாக்களித்தை நிறைவேற்றவும் செய்கின்றார். ஆதலால்தான் இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்து பிறப்பு முன்னறிவிப்புப் பெருவிழா கடவுள் வாக்குறுதி மாறாதவர் என்பதை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைகிறது (எபிரேயர் 13:8).

இன்றைக்கு மனிதர்களாகிய நாம் காலையில் ஒன்றைச் சொல்கிறோம். மாலையில் அதற்கு முற்றிலும் எதிராகப் வேறொன்றைப் பேசுகின்றோம். ஆனால், கடவுள் அப்படியல்ல. அவர் சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர், வாக்குறுதி மாறாதவர்.

செவ்விந்திய பழங்குடி மக்களிடம் நிலவும் ஒரு புராதனக் கதை.

செவ்விந்தியப் பழங்குடி மக்களில் இருக்கக்கூடிய ஆண்கள் தங்களுடைய புஜபலத்தை நிரூபிப்பதற்காக ஊருக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய செங்குத்துப் பாறையின்மேல் ஏறுவதுண்டு. அப்படி ஒருவன் தன்னுடைய புஜபலத்தை நிரூபிப்பதற்காக செங்குத்துப் பாறையின் மீது ஏறினான். தொடக்கத்தில் அவன் ஒருசில இடங்களில் சறுக்கினாலும், இறுதியில் அவன் வெற்றிகரமாக செங்குத்துப் பாறையின் உச்சியை அடைந்தான்.
அவன் தான் செங்குத்துப் பாறையின் உச்சியை வெற்றிகரமாக அடைந்துவிட்டேன் என்பதை மகிழ்ந்து, ஆர்ப்பரித்து கீழே இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தினான். அப்பொழுது அவனுக்குப் பக்கத்தில் பாம்புச் சத்தம் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே அவனுடைய காலுக்குப் பக்கத்தில் ஒரு பாம்பானது பசியால் துடித்துக் கொண்டிருந்தது. அது அவனிடம், "நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். தயவுசெய்து என்னைக நீ கீழே இறக்கிவிட்டுவிடு, இல்லையென்றால் நான் இங்கேயே உணவு கிடைக்காமல், பசியால் செத்து மடிந்துவிடுவேன்" என்றது. அதற்கு அவனோ, "அதெல்லாம் முடியாது, பாம்பைக் குறித்து நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் வஞ்சகம் நிறைந்தவர்கள், கொடிய விஷமுள்ளவர்கள். ஆதலால் உன்னை நான் காப்பாற்ற மாட்டேன்" என்றுசொல்லி மறுத்தான்.

பாம்பு மறுபடியும், மறுபடியும் அவனைக் கெஞ்சிக் கேட்டதால், அவன் வேறுவழியில்லாமல் பாம்பை தன்னுடைய தோல் பையில்போட்டு, கீழே கொண்டுசென்றான். பாம்பு அவனை ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருந்தது. அவன் பூமியை அடைந்ததும், அவன் தன்னுடைய பையைத் திறந்து, பாம்பைக் இறக்கிவிட்டான். அப்போது அந்தப் பாம்பு அவனைக் கடித்துவிட்டு, புதருக்குள் ஓடியது.

அப்போது அவன் அந்தப் பாம்பிடம், "என்னைக் கடிக்கமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்படிக் கடித்துவிட்டுச் வாக்குறுதியை மீறிவிட்டுச் செல்கிறாயே. இது என்ன நியாயம்?" என்று கேட்டான். அதற்கு அந்தப் பாம்பு, "நான் மட்டுமா வாக்குறுதியை மீறுகிறேன். மனிதர்களாகிய நீங்களும்கூடத் தான் வாக்குறுதியை மீறுகிறீர்கள். இதில் என்னை மட்டும் ஏன் குறை சொல்கிறீர்கள்" என்று சொல்லிவிட்டு புதருக்குள் ஓடி மறைந்தது.

பாம்பு தான் கொடுத்த வாக்குறுதியை மீறியதால், இன்றைக்கும்கூட செவ்விந்தியப் பழங்குடி மக்களிடம் 'பாம்பிடம் மிகக் கவனமாக இருக்கவேண்டும்" என்று எச்சரிக்கை உணர்வு இருக்கிறது.

மனிதர்களாகிய நாம் எப்போதும் கொடுத்த வாக்குறிதியை மீறக்கூடியவர்கள் என்பதை இந்த நிகழ்வு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. மனிதர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதியிலிருந்து மாறலாம். ஆனால், கடவுள் அப்படியல்ல. அவர் வாக்குறுதி மாறாதவர்.

இந்த விழா நமக்கு உணர்த்தும் இன்னொரு உண்மை. கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறவேண்டும் என்றால், நாம் அவருடைய திட்டத்திற்கு ஒத்துழைக்கவேண்டும் என்பதாகும். நற்செய்தியில் அன்னை மரியாள், வானதூதர் கபிரியேல் தன்னிடம் இறைவனின் மீட்புத் திட்டத்தைப் பற்றிச் சொன்னபோது, இது எப்படி நிகழும்? என்று கேட்டாலும், இறுதியில் எல்லாம் உணர்த்தப்பட பின், 'இதோ ஆண்டவரின் அடிமை, உமது சொற்படி நிகழட்டும்" என்று கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேற தன்னையே இறைவனின் கரங்களில் கையளிக்கிறார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்திலும் இயேசு இறைவனின் திட்டம் நிறைவேற தன்னையே கையளிப்பதைப் குறித்து வாசிக்கின்றோம். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இறைவனின் திட்டம் இந்த மண்ணுலகில் நிறைவேற நம்மையே நாம் கையளிக்க வேண்டும்.

எனவே அன்பினியவர்களே! கிறிஸ்துவின் பிறப்பு முன்னறிவிப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் இறைவன் வாக்குறுதி மாறாதவர் என்பதை நம்பி ஏற்றுக்கொள்வோம். அதேவேளையில், அவருடைய திட்டம் நிறைவேற அன்னை மரியாவைப் போன்று, ஆண்டவர் இயேசுவைப் போன்று இறைவனின் கரங்களில் நம்மையே நாம் ஒப்புக்கொடுப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன விழா (மார்ச் 25)

நிகழ்வு

பிரபல ஆங்கில எழுத்தாளரான ஜே. மாரூஸ் (J. Maurus) என்பவர் சொல்லக்கூடிய ஒரு கதை.

ஒருமுறை வானத்தில் நீண்ட நேரமாக வட்டமடித்துக் கொண்டிருந்த கழுகு ஒன்று ஒரு குடிசையின் வெளிமுற்றத்தில் தூக்கிக்கொண்டிருந்த சிறு குழந்தையையைக் கண்டது. உடனே அது வேகமாகச் சென்று, தன்னுடைய இரண்டு கால்களுக்கும் இடையே அந்தக் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு மேலே பறந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் அந்தக் குழந்தையை கழுகிடமிருந்து காப்பாற்றுவதற்கு எவ்வளோ முயற்சித்தார்கள். ஆனால் அந்தக் கழுகு குழந்தையை தூக்கிக்கொண்டு ஊருக்கு வெளியே இருந்த மலையில் உள்ள தன்னுடைய கூட்டினில் போய் வைத்துக்கொண்டது.

குழந்தையை மீட்பதற்காக அந்த ஊரில் இருந்த நாட்டாமை மலையேற முயற்சி செய்தார். ஆனால் சிறுது தூரத்திலேயே அவர் கால்கள் வலிக்கிறது என்று சொல்லிக்கொண்டு கீழே இறங்கிவிட்டார். அவருக்குப் பின் அந்த ஊரில் இருந்த ஓர் ஆடு மேய்க்கும் இளைஞன் தான் மலையேறுவதில் கெட்டிக்காரன் சொல்லிவிட்டு மலையேறினான். மலையில் பாதிதூரம் ஏறிய அந்த ஆடுமேய்க்கும் இளைஞன் இனிமேலும் தன்னால் மலையேற முடியாது என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டான். இறுதியாக ஒரு சாதாரண ஏழைப் பெண்மணி மலைமீது ஏறத் தொடங்கினாள். செங்குத்தாக உயர்ந்து நின்ற அந்த மலையில் மிகவும் கஷ்டப்பட்டு ஏறி, மலைமேல் இருந்த கழுகின் கூட்டினை அடைந்தார். அங்கே இருந்த கழுகை ஒரு கம்பால் அடித்து விரட்டிவிட்டு, குழந்தையை கையோடு தூக்கிக்கொண்டு கீழே வந்தார்.

அங்கே கூடியிருந்த மக்களுக்கு எல்லாம் ஆச்சரியம். "எப்படி உன்னால் மட்டும் முடிந்தது?" என்று எல்லாரும் அவளைக் கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, "அது என்னுடைய குழந்தை" என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தாள்.

தாயானவள் தன்னுடைய பிள்ளைக்காக எதையும் செய்வாள், ஏன் தன்னுடைய உயிரையும் தருவாள். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

வரலாற்றுப் பின்புலம்

இன்று நாம் வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னதை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். தொடக்கத்தில் இவ்விழா 'இயேசுவின் மனித அவதாரப் பெருவிழா' என்று கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர்தான் இன்று நாம் வழங்கும் இப்பெயரால் அழைக்கப்பட்டது.

வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன இந்த நிகழ்வு ஒரு சாதாரண நிகழ்வு கிடையாது. அது மனித வரலாற்றையே மாற்றிப்போட்ட நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் மரியாள் சொன்ன ஆம் என்ற ஒற்றைச் சொல்லால்தான் 'வார்த்தை வடிவான கடவுளால் நம்மிடையே குடிகொள்ள முடிந்தது' (யோவா 1:14); மீட்பு இந்த உலகிற்கு வந்தது. ஆகையால் இந்த நிகழ்வின் முக்கியத்துவதை முதலில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கபிரியேல் அதிதூதர் மரியாளிடம், "அருள்மிகப்பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!" என்று சொன்னவுடன், இவ்வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் மரியாள் கலங்குகிறார். இதைக் குறித்து தூய பெர்னார்டின் இவ்வாறு கூறுவார், "மரியாளிடம் வானதூதர் 'உலகத்திலேயே நீதான் மிகப்பெரிய பாவி' என்று சொல்லியிருந்தால்கூட அவள் ஏற்றிருப்பாள். ஆனால் அவரோ அருள்மிகப்பெற்றவரே என்று சொன்னதால்தான் மரியாள் கலங்குகிறார். காரணம் தாழ்ச்சி நிறைந்த உள்ளம் இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டு கலங்கத்தான் செய்யும்".

தொடர்ந்து வானதூதர் மரியாவிடம், "இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராய் இருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்று சொன்னபோது, மரியாள், "இது எப்படி நிகழும்?", நான் கன்னி ஆயிற்றே!" என்கிறார். மரியாள் இப்படிக் கேட்பதில் அர்த்தமில்லாமல் இல்லை. ஏனென்றால் விவிலியத்தில் வயது முதிர்ந்தோர் கருவுற்று குழந்தையைப் பெற்ற நிகழ்வு இருக்கிறது. ஆனால் கன்னி ஒருத்தி கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்த நிகழ்வு இல்லை. அதனால் மரியாள் அப்படிக் கேட்கிறார். மரியாளுடைய கேள்வியின் ஆழத்தைப் புரிந்துகொண்ட வானதூதர், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்" என்று சொன்னபிறகு மரியாள், "நான் ஆண்டவரின் அடிமை. உமது சொற்படி எனக்கு நிகழட்டும்" என்கிறார். உடனே தூய ஆவியார் அவர்மீது இறங்கி வர இயேசுவை கருத்தரிக்கிறார்.

ஆகவே, மரியாள் 'ஆம்' என்று சொன்ன அந்த ஒரு சொல்லில் மீட்பு இந்த மண்ணுலகிற்கு வந்துவிட்டது என நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆதிபெற்றோரான ஆதாமும் ஏவாளும் கடவுளின் கட்டளையை மறுத்ததால் பாவம் இந்த மண்ணுலகில் நுழைந்தது. அந்தப் பாவத்தை மரியாள் தான் சொன்ன ஆம் என்ற சொல்லினால் விரட்டியடிக்கிறார். வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன இந்த நிகழ்வு கி.பி. 431 ஆம் ஆண்டிற்குப் பிறகு இன்றுவரை விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மரியாளுக்கு வானதூதர் கபிரியேல் மங்கள வார்த்தை சொன்ன விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இறைத்திருவுளத்திற்கு பணிந்து நடத்தல்

நாம் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள், எனவே நாம் ஒவ்வொருவரும் நம்முடைய விருப்பத்தின்படி அல்ல, இறைவிருப்பத்தின் படி நடக்கவேண்டும். இதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார். ஆனால் பல நேரங்களில் இந்த உண்மையை மறந்து, நாம் நம்முடைய விருப்பத்தின்படி தான்தோன்றித் தனமாக வாழ்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஆனால் இன்று நாம் நினைவுகூறும் மரியா தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து நடந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆண்டவரின் தூதர் மரியாவிடம் இறைவிருப்பத்தை எடுத்துச் சொன்னபோது, தொடக்கத்தில் தயங்கினாலும் எல்லாவற்றையும் உணர்ந்துகொண்டு, 'உமது வார்த்தையின் படியே ஆகட்டும்' என்று சொல்லி மரியாள் தன்னுடைய வாழ்வின் இறுதிக்கட்டம் வரை இறை விருப்பத்தின்படியே நடக்கின்றார். இறை விருப்பத்தின் நடப்பதனால் தனக்கு எத்தகைய துன்பம் வரும் என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். இருந்தாலும் அவர் எல்லாத் துன்பங்களையும் சவால்களை மனத்துணிவோடு எதிர்கொண்டார்.

இன்று நாம் இறைவனின் திருவுளத்திற்கு பணிந்து நடக்கின்றோமா? அல்லது இறைவன் நம் வழியாய் செயலாற்ற நாம் கருவியை விளங்குகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். யோவான் நற்செய்தி 6:38 ல் இயேசு கூறுவார், "ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். இயேசுவிடம், அன்னை மரியாவிடம் விளங்கிய இத்தகைய மனநிலையை நமதாக்குவோம்.

தாழ்ச்சியோடு வாழ்தல்

'தாழ்நிலையில் இருப்போரை ஆண்டவர் உயர்த்துகிறார்' (லூக் 1:53) என்று மரியாள் இறைவனை நோக்கி பாடல் பாடுவார். இப்பாடல் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ மரியாவுக்கு நன்றாகவே பொருந்துகிறது. மரியாள் தாழ்ச்சியோடு வாழ்ந்தார். அதனால்தான் ஆண்டவர் அவரைத் தேடி வந்தார். மரியாள் ஆண்டவர் இயேசுவைப் பெற்றெடுத்த பின்னும் அவர் தாழ்ச்சியோடுதான் வாழ்ந்தார். அதனால்தான் அவர் எங்கோ இருந்த எலிசபெத்தைத் தேடிச் சென்று உதவுகிறார்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் தாழ்ச்சியோடு இருக்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நான் பெரியவன், மெத்தப் படித்தவன், எல்லாம் தெரிந்தவன் என்ற ஆணவத்தில், அகங்காரத்தில் அலைகிறோம். இத்தகைய மனநிலையை மாற்றிக்கொண்டு நாம் தாழ்ச்சியை ஆடையாக அணிந்துகொண்டு வாழ்வவேண்டும். இயேசு கூறுவார், "தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்படுவர், தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்படுவர்" (மத் 23:12). ஆகவே, மரியன்னைக்கு விழா எடுக்கும் இந்த நல்ல நாளில், அவரிடம் விளங்கிய தாழ்ச்சியை, இறை விருப்பத்திற்கு பணிந்து வாழும் பண்பை நமதாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பு பெருவிழா

உம் சொற்படியே

நாளை 'கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழாவை' (மங்கள வார்த்தை திருநாள்) கொண்டாடுகிறோம்.

இந்த நாள் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

அ. கடவுளின் மீட்பிற்கு மனித உதவி தேவை

'மங்கள வார்த்தை திருநாள்' கடவுளின் ஆற்றலுக்கே சவால் விடுகிறது. எப்படி? கடவுள் எல்லாம் வல்லவர் என்றால், மனிதர்களின் துணையில்லாமல் அவர்களை மீட்டிருக்கலாமே? எதற்காக மனுக்குலத்தின் உதவியை நாட வேண்டும்? கடவுளின் மீட்புத்திட்டம் மனிதரின் உதவியில்லாமல் நிறைவேற முடியாது. கடவுள் தனக்கு உதவி செய்ய வேண்டி தன் தூதரை அனுப்புகின்றார். கடவுள் மரியாளை நோக்கி நீட்டிய கைதான் கபிரியேல்.

ஆ. கடவுள் சாதாரணவை(வர்)களின் கடவுள்

இன்று நாம் நம்மைவிட பெரிய நிலையில் இருப்பவர்களின் உதவியைத்தான் அதிகம் நாடுகிறோம். பொருளாதாரத்தில், பதவியில், அதிகாரத்தில் நம்மைவிட பெரிய நிலையில் இருப்பவர்களின் துணையை நாடுவதற்கு எத்தனையோ வகையில் முயற்சி செய்கிறோம். ஆனால், கடவுளின் அணுகுமுறை வித்தியாசமானதாக இருக்கிறது. எருசலேம் என்ற நகரத்தையும், நகர்வாழ் நங்கையரையும் நாடிச் செல்லாமல், நாசரேத்தை நாடிவருகிறார்.

இ. மாஸ்டர் பிளான் (Master Plan) அல்ல மாஸ்டர்ஸ் பிளான் (Master's Plan)

நம்ம வாழ்வில் நாம போடும் மாஸ்டர் பிளான் தோல்வியாகத்தான் போகும். படைப்பின் தொடக்கத்தில் மாஸ்டர்ஸ் பிளானை (கடவுளின் பிளானை) கண்டுகொள்ளாமல், தாங்களாகவே ஒரு மாஸ்டர் பிளான் போடுகின்றனர் ஆதாமும், ஏவாளும். விளைவு பாவம் வந்து சேர்கிறது. ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்படுகிறார்கள். செபதேயுவின் மக்கள் இயேசுவிடம் வந்து வலப்புறம், இடப்புறம் இடம் கேட்டதும் மாஸ்டர் பிளான்தான். யூதாசு தலைமைச்சங்கத்திடம் சென்று பேரம் பேசியதும் மாஸ்டர் பிளான்தான். ஆனால், இவை எல்லாமே தோல்வியில் முடிகின்றன. மாஸ்டர்ஸ் பிளான் மட்டும்தான் வெற்றி பெறுகிறது. மேலும், மாஸ்டர்ஸ் பிளானை விடுத்து நாம் நம் மாஸ்டர் பிளானை வைத்துக்கொண்டு நிற்கும்போது அது நிறைவேறாமல் போனால் ஏமாற்றமும், விரக்தியும் நம் கன்னத்தில் அறைகின்றன. மரியாள் தன் பிளானைப் பற்றி கவலைப்படவே இல்லை. 'இதோ நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்' என்று தன் பிளானைக் கிழித்துப் போட்டுவிட்டு, மாஸ்டர்ஸ் பிளானை கையில் எடுத்துக்கொள்கின்றார்.

நிற்க.

கடவுளின் முதல் 'ஆமென்' உலகை படைத்தது.

மரியாளின் இறுதி 'ஆமென்' புதிய உலகம் உருவாக வழி வகுத்தது.

காலங்கள் உம்முடையன.
யுகங்களும் உம்முடையன.

உம்சொற்படியே நிகழட்டும் - இன்றும், என்றும்.

இதுவே மனுக்குலத்திற்கு மங்களமான செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
உம் சொற்படியே

நாளை 'கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழாவை' (மங்கள வார்த்தை திருநாள்) கொண்டாடுகிறோம்.

இந்த நாள் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

அ. கடவுளின் மீட்பிற்கு மனித உதவி தேவை

'மங்கள வார்த்தை திருநாள்' கடவுளின் ஆற்றலுக்கே சவால் விடுகிறது. எப்படி? கடவுள் எல்லாம் வல்லவர் என்றால், மனிதர்களின் துணையில்லாமல் அவர்களை மீட்டிருக்கலாமே? எதற்காக மனுக்குலத்தின் உதவியை நாட வேண்டும்? கடவுளின் மீட்புத்திட்டம் மனிதரின் உதவியில்லாமல் நிறைவேற முடியாது. கடவுள் தனக்கு உதவி செய்ய வேண்டி தன் தூதரை அனுப்புகின்றார். கடவுள் மரியாளை நோக்கி நீட்டிய கைதான் கபிரியேல்.

ஆ. கடவுள் சாதாரணவை(வர்)களின் கடவுள்

இன்று நாம் நம்மைவிட பெரிய நிலையில் இருப்பவர்களின் உதவியைத்தான் அதிகம் நாடுகிறோம். பொருளாதாரத்தில், பதவியில், அதிகாரத்தில் நம்மைவிட பெரிய நிலையில் இருப்பவர்களின் துணையை நாடுவதற்கு எத்தனையோ வகையில் முயற்சி செய்கிறோம். ஆனால், கடவுளின் அணுகுமுறை வித்தியாசமானதாக இருக்கிறது. எருசலேம் என்ற நகரத்தையும், நகர்வாழ் நங்கையரையும் நாடிச் செல்லாமல், நாசரேத்தை நாடிவருகிறார்.

இ. மாஸ்டர் பிளான் (Master Plan) அல்ல மாஸ்டர்ஸ் பிளான் (Master's Plan)

நம்ம வாழ்வில் நாம போடும் மாஸ்டர் பிளான் தோல்வியாகத்தான் போகும். படைப்பின் தொடக்கத்தில் மாஸ்டர்ஸ் பிளானை (கடவுளின் பிளானை) கண்டுகொள்ளாமல், தாங்களாகவே ஒரு மாஸ்டர் பிளான் போடுகின்றனர் ஆதாமும், ஏவாளும். விளைவு பாவம் வந்து சேர்கிறது. ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்படுகிறார்கள். செபதேயுவின் மக்கள் இயேசுவிடம் வந்து வலப்புறம், இடப்புறம் இடம் கேட்டதும் மாஸ்டர் பிளான்தான். யூதாசு தலைமைச்சங்கத்திடம் சென்று பேரம் பேசியதும் மாஸ்டர் பிளான்தான். ஆனால், இவை எல்லாமே தோல்வியில் முடிகின்றன. மாஸ்டர்ஸ் பிளான் மட்டும்தான் வெற்றி பெறுகிறது. மேலும், மாஸ்டர்ஸ் பிளானை விடுத்து நாம் நம் மாஸ்டர் பிளானை வைத்துக்கொண்டு நிற்கும்போது அது நிறைவேறாமல் போனால் ஏமாற்றமும், விரக்தியும் நம் கன்னத்தில் அறைகின்றன. மரியாள் தன் பிளானைப் பற்றி கவலைப்படவே இல்லை. 'இதோ நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்' என்று தன் பிளானைக் கிழித்துப் போட்டுவிட்டு, மாஸ்டர்ஸ் பிளானை கையில் எடுத்துக்கொள்கின்றார்.

நிற்க.

கடவுளின் முதல் 'ஆமென்' உலகை படைத்தது.

மரியாளின் இறுதி 'ஆமென்' புதிய உலகம் உருவாக வழி வகுத்தது.

காலங்கள் உம்முடையன.

யுகங்களும் உம்முடையன.

உம்சொற்படியே நிகழட்டும் - இன்றும், என்றும்.

இதுவே மனுக்குலத்திற்கு மங்களமான செய்தி.

- Rev. Fr. Yesu Karunanidhi

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================
எசாயா 49: 8-15

மறவாத இறைவன்

நிகழ்வு

ஒரு குடும்பத்தில் தந்தை, தாய், அவர்களுடைய ஒரே ஒரு மகள் என்று மூவர் இருந்தனர். அன்பு நிரம்பி வழிந்த இந்தக் குடும்பத்தில் தாய் திடீரென இறந்துபோனாள். இதனை மற்ற இருவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள். அப்படியிருந்தும்கூட அவர்களால் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இப்படியிருக்கையில் ஒருநாள் இரவு, தந்தை மகளை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, தூக்கம் வராமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார். அப்பொழுது மின்சாரம் தடைபட்டது. உடனே மகள் அச்சம் கொண்டவளாய் தன் தந்தையைப் பார்த்து, "அப்பா! இந்த இருட்டிலும் நீ என்னை அன்பு செய்கின்றாயா...?" என்றாள். அவள் இப்படிக் கேட்ட வேளையில், தந்தை ரேடியத்தில் செய்யப்பட்டு, வீட்டுச் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த திரு இருதய ஆண்டவரின் சுரூபத்தைப் பார்த்தார். அது அந்த இருட்டில் அவ்வளவு பிரகாசமாக மின்னியது.

அதைப் பார்த்துவிட்டுத் தந்தை தன் மகளிடம், "சுற்றிலும் எவ்வளவுதான் இருட்டாக திரு இருதய ஆண்டவர் ஒளி கொடுக்கத் தவறியதில்லை... நம்மை அன்பு செய்யவும் தவறியதில்லை. அதுபோன்று சுற்றிலும் இருட்டாக இருந்தாலும், நானும் உன்னை அன்பு செய்ய மறப்பதில்லை" என்றார்.


இருளோ, இடரோ, இன்னாலோ எதுவுமே நம்மை ஆண்டவருடைய அன்பிலிருந்து பிரித்துவிட முடியாது. ஏனென்றால், நம் இறைவன் என்றுமே மாறாத, நம்மை மறவாத இறைவன். இன்றைய முதல் வாசகம் இறைவன் நம்மை ஒருபொழுதும் மறப்பதில்லை என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மறவாத இறைவன்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகமானது, பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டு, அடிமைகளாக வாழ்ந்து யூத மக்களுக்கு ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக நம்பிக்கைச் செய்தியை வழங்குவதாக இருக்கின்றது.

யூதேயாவில் இருந்த மக்கள் ஆண்டவருடைய கட்டளையின் படி நடக்காமல், பிற தெய்வங்களை வழிபட்டு வந்ததால், பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்டு, அடிமைகளைப் போன்று வாழ்ந்து வந்தார். இதனால் அவர்கள் கடவுள் தங்களை கைநெகிழ்ந்து விட்டார் என்றும் மறந்துவிட்டார் என்றும் புலம்பினார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக, "பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும் நான் உன்னை மறக்கவே மாட்டேன்" என்று ஆறுதலின் செய்தியை கூறுகின்றார்.

ஆம், இறைவன் நாம் தவறுசெய்கின்றபொழுது, தண்டித்துத் திருத்தலாம் அதற்காக அவர் நம்மை மறந்துவிட்டார் என்று பொருள் கிடையாது. யூதேயாவில் இருந்தவர்கள் பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டதுகூட தண்டித்துத் திருத்தப்படுவே என்று உறுதியாகச் சொல்லலாம்.

தகுந்த வேளையில் பதிலளித்த இறைவன்

இறைவன் இஸ்ரயேல் மக்களை மறக்கவும் இல்லை; அவர்களைக் கைநெகிழவும் இல்லை என்று கூறிய இன்றைய முதல் வாசகம், இன்னொரு முக்கியமான செய்தியையும் எடுத்துக்கூறுகின்றது. அது என்னவெனில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு அளிக்கும் நலமான வாழ்வு ஆகும். இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் இதற்குச் சான்று பகர்வதாக இருக்கின்றது.

இஸ்ரயேல் மக்கள் இழந்த தங்களுடைய நாட்டை மீட்டும் நிலைநாட்டுவர் என்றும், பாழடைந்து கிடக்கும் சொத்துக்கள் அவர்களை வந்தடையும் என்றும், சிறைப்பட்டோர் வெளியே புறப்படுவர் என்றும்,, இருளில் இருப்போர் வெளியே வருவர் என்றும் ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்கு நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைத் தருகின்றார். யூதேயாவில் வாழ்ந்தோர் பாபிலோனியப் படையெடுப்பின்பொழுது இழந்தவை பல. அவையெல்லாம் மீட்கப்படும் என்று ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக வாக்குறுதி தருவது உண்மையில் இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கையூட்டியிருக்கும் என்றுதான் சொல்லவேண்டும்.

இன்றும்கூட நாம் நம்முடைய தீயச் செயல்களால் ஆண்டவரை விட்டு வெகுதொலையிருக்கின்றோம். இப்படிப்பட்ட நிலையில் நாம், தவற்றை உணர்ந்து வருந்திய ஊதாரி மைந்தனைப் போன்று, இஸ்ரயேல் மக்களை போன்று நம்முடைய தவற்றை உணர்ந்து, அவரிடம் திரும்பி வந்தால். அவர் நமக்கு எல்லாவிதமான ஆசியையும் தருவார் என்பது உறுதி.

சிந்தனை

"உன்னைக் கைநெகிழவும் மாட்டேன்; கைவிடவும் மாட்டேன்" (யோசு 1:5) என்று யோசுவாவைப் பார்த்துக் கூறுவார் ஆண்டவர். ஆகையால், நம்மைக் கைவிடாத, மறவாத இறைவனுக்கு நாம் என்றும் உண்மையுள்ளவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 6
=================================================================================
யோவான் 5: 17-30

இன்றும் செயலாற்றும் கடவுள்

நிகழ்வு

மாவீரர் நெப்போலியன் எகிப்து நாட்டோடு போர்தொடுத்துவிட்டு, தன்னுடைய படைவீரர்களோடு இரவுநேரத்தில் பிரான்சு நாட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். வழியில் இவருடைய படைவீரர்கள் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று தர்க்கம் செய்துகொண்டு வந்தார்கள். ஒரு சாரார் கடவுள் இல்லவே இல்லை என்றும் இன்னொரு சாரார் கடவுள் இருக்கின்றார் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் நெப்போலியன் அமைதியாகக் கேட்டுக்கொண்டு வந்தார்.

அப்பொழுது ஒரு படைவீரர் நெப்போலியனிடம் வந்து, "கடவுள் இருக்கின்றாரா, இல்லையா. இது குறித்து உங்களுடைய பதிலைச் சொல்லுங்கள்" என்றார். உடனே நெப்போலியன், வானத்தைச் சுட்டிக்காட்டிவிட்டு, "அதோ தெரிகின்றனவே நிலவும் விண்மீன்களும். அவற்றையெல்லாம் யார் உண்டாக்கினார் என்று சொல்லமுடியுமா?" என்றார். படைவீரர் எதுவும் பேசமால் அமைதியாக இருந்தார். நெப்போலியன் தொடர்ந்து பேசினார்: "மேலே உள்ள நிலவையும் விண்மீன்களையும் யாவையும் மனிதரால் உண்டாக்கியிருக்க முடியாது! அப்படியானால் அவற்றைக் கடவுள்தானே உண்டாக்கியிருக்கவேண்டும்! எனவே, கடவுள் இருக்கின்றார்; அவர் இன்றைக்கும் செயலாற்றிக்கொண்டிருக்கின்றார்."

ஆம், கடவுள் இருக்கின்றார்; அவர் இன்றைக்கும் செயலாற்றிக்கொண்டிருக்கின்றார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, தந்தைக் கடவுள் இன்றும் செயலாற்றுகின்றார் என்று கூறுகின்றார். இது யூதர்கள் நடுவில் எத்தகைய எதிர்வினையை ஆற்றுகின்றது, இதன்வழியாக இயேசு நமக்குச் சொல்லக்கூடிய செய்தி என்ன என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

யூதர்களோடு வாக்குவாதம்

நேற்றைய நற்செய்தியில் (யோவா 5: 1-17) இயேசு முப்பத்தெட்டு ஆண்டுகளாய்ப் படுத்த படுக்கையாய்க் கிடந்த உடல்நலம் குன்றியவரை நலப்படுத்துவார். அந்நாள் ஓர் ஓய்வுநாள் என்பதால், யூதர்கள் அவரைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். அதோடு நின்றுவிடாமல், அந்த மனிதரை நலப்படுத்திய இயேசுவிடம் வந்து, அவரை எப்படி ஓய்வுநாளில் நலப்படுத்தலாம் என்று அவரோடு வாக்குவாதம் செய்வார்கள். அவர்கள் இயேசுவோடு வாக்குவாதம் செய்வதுதான் இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்றது. ஓய்வுநாளில் எப்படி உடல்நலமாற்றவரை நலப்படுத்தலாம் என்று கேட்ட யூதர்களுக்கு இயேசு என்ன மறுமொழி கூறினார் என்பதைக் குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

இன்றும் செயலாற்றும் தந்தைக் கடவுள்

தன்னிடம் வாக்குவாதம் செய்ய வந்த யூதர்களிடம் இயேசு, "என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகின்றேன்" என்ற வரிகளோடு தொடங்குகின்றார். ஆண்டவராகிய கடவுள் தான் செய்த வேலையை முடித்திருந்து, ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார் (தொநூ 2:2) என்று திருவிவிலியம் சான்று பகர்கின்றது. கடவுள் ஏழாம் நாள் ஓய்ந்திருந்தால் என்றால், அவர் எந்த வேலையும் செய்யாமல் இருந்தார் என்று பொருளல்ல; தான் படைத்த உலகை உய்வித்துக்கொண்டிருந்தார் என்பதுதான் பொருள். நற்செய்தியில் இயேசு சொல்கின்ற வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், கடவுள் ஏழாம் நாளிலும்கூட தான் படைத்த உலகை உய்விப்பதன் வழியாக செயலாற்றிக் கொண்டிருந்தார். அதைத்தான் இயேசு, என் தந்தை இன்றும் செயலாற்றுகின்றார்; நானும் செயலாற்றுகிறேன் என்று கூறுகின்றார்.

யூதர்கள், கடவுள் இன்றும் செயலாற்றுகின்றார் என்பதை விட்டுவிட்டார்கள்; ஆனால், இயேசு, கடவுளைத் தந்தை என்று சொன்னதைப் பிடித்துக்கொண்டு, அது எப்படி, கடவுளைத் தந்தை என்று சொல்வது... இது மிகப்பெரிய குற்றம் (லேவி 24: 15-16) என்று அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்கள்.

நம்பினோருக்கு நிலைவாழ்வு

யூதர்கள், இயேசு எப்படி கடவுளைத் தந்தை என்று சொல்லலாம் என்று கேள்வி கேட்டதும், இயேசு அவர்களிடம், தனக்கும் தந்தைக்கும் உள்ள உறவைப் பற்றியும் தன்னுடைய வார்த்தையைக் கேட்டு, தன்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர் என்பது பற்றியும் எடுத்துக்கூறுகின்றார்.

ஆம், நற்செய்தியாளர் யோவான் தன்னுடைய நற்செய்தியின் தொடக்கத்தில் சொல்வது போன்று, வாக்கு என்னும் இயேசு தொடக்கத்திலிருந்தே இருந்தார்; அவர் கடவுளோடு இருந்தார்; கடவுளாகவும் இருந்தார். அப்படிப்பட்டவர் கடவுளைத் தந்தை என்று சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது என்பதுதான் புரியவில்லை. ஆகையால், நாம் இயேசுவின்மீது நம்பிக்கை வைப்பதன் வழியாக அவரை அனுப்பிய தந்தைக் கடவுளிடம் நம்பிக்கை வைக்கின்றோம் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், இயேசுவின் வழியில் நடப்போம்.

சிந்தனை

"இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கின்றேன்" (மத் 20: 28). என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்மோடு இருக்கும், நம் நடுவில் செயலாற்றும், இயேசுவின்மீதும் தந்தைக் கடவுள்மீதும் நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!