Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                  30  மார்ச் 2019  
                  தவக்காலம் 3ம் வாரம்   சனிக்கிழமை்- 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் (6: 1-6)

'வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார். இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பிவிடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம். நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப் பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்" என்கிறார்கள்.

எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே! அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்றுவிட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது. உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:51: 1-2. 16-17. 18-19ab (பல்லவி: ஓசே 6: 6)
=================================================================================
பல்லவி: பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன்.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்.
-பல்லவி

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை.
-பல்லவி

18 சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!
19யb அப்பொழுது எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர்.
-பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
95: 7b, 8b காண்க

'உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்,' என்கிறார் ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (18: 9-14)

அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: 'இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர்.

ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: 'கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.' ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு, 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார்."

இயேசு, 'பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  ஓசேயா 6: 1-6

கடவுளுக்கு ஏற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே

நிகழ்வு

அது ஒரு சாதாரண கிராமம். அக்கிராமத்தில் இருந்த தொடக்கப்பள்ளியில் சாந்தம் என்ற மாணவன் ஐந்தாம் வகுப்புப் படித்து வந்தான். ஒருநாள் சாந்தம் சோகமாக இருப்பதைக் கண்ட ஆசிரியர் அவனிடம் காரணத்தைக் கேட்டார். அதற்கு பதிலளித்த சாந்தம், தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும் அந்த தவறைக் காரணமாக காட்டி அவனின் நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறினான்.

செய்த தவறை உணர்ந்த சாந்தம் தன் நண்பர்களை எண்ணி ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர் சாந்தத்திற்கு உதவி செய்ய நினைத்தார். அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர், ஒரு 100 ரூபாய் நோட்டை கையில் வைத்து, "இது யாருக்கு வேண்டும்?" என்று மாணவர்களிடம் கேட்டார். துள்ளி எழுந்த மாணவர்கள் அனைவரும் தங்களுடைய கைகளை உயர்த்தினர். மாணவர்களின் செய்கையை பார்த்த ஆசிரியர், அந்த நோட்டை கைகளால் கசக்கி, "இப்பொழுது இந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும்?" என கேட்டார். அப்பொழுதும் மாணவர்கள் கைகளை தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர். இம்முறை ரூபாய் நோட்டினை காலில் மிதித்த ஆசிரியர் மாணவர்களிடம் அதே கேள்வியைக் கேட்டார். மாணவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வகுப்பிலிருந்த அனைவருக்கும் அந்த 100 ரூபாய் வேண்டும் என்பதுபோல் கையை இறக்காமல் நின்றனர்.

கையில் ரூபாய் நோட்டை எடுத்த ஆசிரியர், "இந்த 100 ரூபாய் நோட்டு அழுக்காக இருந்தாலும் கசங்கி இருந்தாலும் அதன் மதிப்பு குறைவதில்லை. அதேபோல் சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் நம் மதிப்பை குறைத்துவிடாது. ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு, அவன் தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே அவன் மன்னிக்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த வகுப்பில் படிக்கும் சாந்தம் என்ற மாணவன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு தவறை செய்துவிட்டான். அத்தவறு ரூபாய் நோட்டின்மேல் பட்டிருக்கும் அழுக்கை போன்றது, அதனால் சாந்தத்தின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே, தெரியாமல் செய்த தவறுக்காக சாந்தத்தை ஒதுக்காமல் அவனுடன் சேர்ந்து பழகுங்கள் என ஆசிரியர் கூறினார். ஆசிரியர் இவ்வாறு கூறியதைக் தொடர்ந்து சக மாணவர்கள் சாந்தத்திடம் மன்னிப்புகேட்டு அவனைத் தங்களுடன் சேர்த்து கொண்டனர்.

தவறு செய்த ஒருவன் தன்னுடைய தவறை உணர்வது மிகப்பெரிய ஒரு காரியம். அப்படித் தவறை உணர்ந்து, ஆண்டவரிடம் திரும்பிவருவது என்பது எல்லாப் பலிகளையும் விட உயர்ந்தது என்று இன்றைய முதல் வாசகம் எடுத்துக்கூறுகின்றது. எனவே, நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

பலியை அல்ல, இரக்கத்தை விரும்பும் இறைவன்

இறைவாக்கினர் ஓசேயா நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேல் மக்கள் தன்னிடம் திரும்பி வரவேண்டும், அதுவும் தங்களுடைய குற்றத்தை உணர்ந்து, முழு உள்ளத்துடன் திரும்பி வரவேண்டும் என்ற அழைப்பினைத் விடுக்கின்றார். அவர்களோ தாங்கள் மனம்மாறிவிட்டோம் என்பதைப் போலியாக வெளிப்படுத்துகிறார்கள். குறிப்பாக எலி பலிகளையும் பிற பலிகளையும் செலுத்தி தாங்கள் மனம்மாறியவர்கள் போன்று காட்டிக்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், ஒருகுறிப்பிட்ட காலத்திற்கு அவர் மனம்மாறியவர்கள் வாழ்ந்தார்கள் அல்லது காட்டிக்கொண்டார்கள். அதன்பிறகு அவர்கள் பழைய பாவ வாழ்விற்கே திரும்பினார்கள். இதைத்தான் கடவுள் "உங்கள் அன்பு கால நேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட மறைந்து போகின்றதே!" என்ற வார்த்தைகளில் குறிப்பிடுகின்றார்.

ஆண்டவர் விரும்பிய மனமாற்றம் எது?

ஆண்டவராக கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னது, உண்மையான மனமாற்றம் என்பது வெளியடையாளங்களில் இல்லை. அது தவறை உணர்ந்து திருந்துவதிலும் (திபா 51:17) தன்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதிலும் (1 சாமு 15:22) அடங்கியிருக்கிறது என்பதாகும். இதை இஸ்ரயேல் மக்கள் சரியாகவே உணரவில்லை. அதனால்தான் அவர்கள் உண்மையான கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இல்லாமல், வேற்று தெய்வத்தை வழிபட்டு வந்தார்கள்.

அன்று இஸ்ரயேல் மக்கள் செய்த தவற்றினைத்தான் இன்று பலர் வழிபாடு என்ற பெயரில் செய்துகொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களைப் பார்த்துத்தான் இறைவன் கூறுகின்றார், "ஒருவன் தன்னை ஒடுக்கிக் கொள்ளும் நாளையா உண்ணா நோன்பின் நாளாகத் தெரிந்துகொள்வது?" (எசா 58:6) ஆகையால், கடவுளுக்கு ஏற்ற பலி, வழிபடு நொறுங்கிய உள்ளமே என உணர்ந்து, அவரிடம் திரும்பி வருவது சிறந்தது.

சிந்தனை

'மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்' (லூக் 15: 10) என்பார் இயேசு. ஆகவே, தவற்றை உணர்ந்து ஆண்டவரிடம் திரும்பி வந்து அவரோடு ஒப்புரவாகுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 18: 9-14

மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்

நிகழ்வு

ஒரு சமயம் பிரபல அமெரிக்க நிறுவனம் ஓர் இயந்திரத்தை ஜப்பானுக்கு அனுப்பியது. ஒரு மாதம் கழித்து, ஜப்பானிலிருந்து, "இயந்திரம் சரியாக இயங்கவில்லை. உடனே அதைச் சரி செய்ய ஒரு நபரை அனுப்பவும்" என்று செய்தி வந்தது.

உடனே அந்த இயந்திரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஓர் இளைஞரை ஜப்பானுக்கு அனுப்பியது. அந்த இளைஞரைக் கண்டதும், அவர் இயந்திரத்தைப் பார்க்கும்முன் ஜப்பானிய நிறுவனம், "நீங்கள் அனுப்பியவர் இளைஞர். ஒரு பெரியவரை, அனுபவம் உள்ளவரை அனுப்பவும்" என்று செய்தி அனுப்பியது. அமெரிக்க நிறுவனம் அதற்குப் பதிலுக்கு, "அந்த இளைஞரே இயந்திரத்தின் எல்லாவிதமான பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார். ஏனெனில் அதை உருவாக்கியவரே அவர்தான்" என்று செய்தி அனுப்பியது.

நிறைய நேரங்களில் மனிதர்களை அவர்களின் (வெளிப்)புறத்தைப் பார்த்து மதிப்பிடுகின்றோம். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கின்றது மனிதர்களை அவர்களுடைய வெளிப்புறத்தை வைத்து அல்ல, ஆண்டவரைப் போன்று அகத்தை வைத்து மதிப்பிடவேண்டும் என்பதையும் இறைவனிடமிருந்து ஆசிபெற ஒருவர் எத்தகைய மனநிலையோடு இறைவனிடம் மன்றாடவேண்டும் என்பதையும் இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது. நாம் அது குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

தான் நேர்மையானவர் என்று காட்டிக்கொண்ட பரிசேயர்

நற்செய்தி வாசகத்தில் இயேசு, தாங்கள் நேர்மையானவர்கள் என்றும் மற்றவர் இழிவானவர்கள் என்றும் இகழ்ந்து ஒதுக்கிய பரிசேயர்களைப் பற்றி ஓர் உவமையைச் சொல்கின்றார். இயேசு சொல்லும் உவமையில் வரும் பரிசேயர், "நான் கொள்ளையர், நேர்மையற்றவர், விபசாரர், வரிதண்டுபவர் இவர்களைப் போன்று இல்லாதது பற்றி உமக்கு செலுத்துகிறேன்" என்று சொல்லி இறைவனிடம் வேண்டுகின்றார். இறைவேண்டல் என்பது இறைவனின் அருளுக்காகவும் தயவுக்காகவும் மனம் ஒன்றி வேண்டக்கூடியது. ஆனால், இந்தப் பரிசேயர் இறைவனிடம் வேண்டச் சென்றுவிட்டு, அங்கு தன்னை நேர்மையாளர் போன்றும் அடுத்தவரை இழிவானர் போன்றும் காட்டிக்கொள்கின்றார். பரிசேயர்களின் இத்தகைய இழிவான போக்கினை இயேசு பல இடங்களில் (லூக்கா 11: 39-54; மத் 23: 1-11) தோலுரித்துக் காட்டுகின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் அப்படித்தான் தோலுரித்துக் காட்டுகின்றார்.

இறைவேண்டல் என்ற பெயரில் சுய தம்பட்டம் செய்த பரிசேயர்

பரிசேயர், இறைவேண்டல் செய்வதற்காக ஆலயத்திற்கு வந்திருந்தார். ஆனால், அவர் செய்ததெல்லாம் இறைவேண்டல் அல்ல, சுய தம்பட்டம்தான். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், மக்களுடைய பாராட்டைப் பெறுவதற்காக எல்லாவற்றையும் செய்துவந்த பரிசேயர்கள் (மத் 6:5; 23:14) இறைவனிடம் வந்து, 'நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன்' என்று சொல்லிக்கொண்டிருக்கின்றார். குறிப்பாக ஆண்டுக்கு ஒருமுறை நோன்பிருக்கும் வழக்கத்தை (லேவி 16:29) வாரத்திற்கு இருமுறை செய்தார்; பத்திலொரு பங்கை காணிக்கையாகச் செலுத்தினார் (மத் 23: 33) இவற்றையெல்லாம் அவர் உள்ளார்ந்த விதமாய்ச் செய்யவில்லை, மற்றவர்களை தங்களைப் பாராட்டவேண்டும் என்பதற்காகவே செய்தார். அத்தகைய வழக்கம் இறைவனிடம் வேண்டும்போதும் தொடர்ந்தது என்பதுதான் இதிலுள்ள வேடிக்கை. அதனாலேயே அவருடைய இறைவேண்டல் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

தாழ்ச்சியோடு வேண்டிய வரிதண்டுபவரிடம் மன்றாட்டு கேட்கப்படல்

தன்னை நேர்மையாளராகக் காட்டிக்கொண்ட பரிசேயருக்கு முற்றிலும் மாறாக, வரிதண்டுபவர், வானத்தை அண்ணார்ந்து பார்க்கக்கூடத் துணியாமல், தன் மார்பில் அடித்துக்கொண்டு இறைவனிடம் மன்றாடுகின்றார். அதனால் அவருடைய மன்றாட்டுக் கேட்கப்படுகின்றது.

பரிசேயருடைய இறைவேண்டலுக்கும் வரிதண்டுபவருடைய இறைவேண்டலுக்கும் இடையே இருந்த வித்தியாசம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் மனத் தாழ்ச்சி (லூக் 14:1) பரிசேயர் தன்னை நேர்மையாளர், பெரியவர் என்று காட்டிக் கொள்ள விழைந்தபோது, வரிந்தண்டுபவரோ தன்னைப் பாவி, ஒன்றுமில்லாதவன் என்று உணர்ந்து மன்றாடினார். அதனால்தான் அவருடைய மன்றாட்டு இறைவனால் கேட்கப்பட்டது. இதன் மூலம் நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடு நான் வாழ்கிறேன்" (எசா 57:15) என்று இறைவாக்கினர் எசாயா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கு நிறைவேறுகின்றது.

சிந்தனை

'மனிதர் பார்ப்போது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்' (1 16:7) என்று கடவுள் சாமுவேலிடம் கூறுவார். நம்முடைய வெளிவேடம் சக மனிதர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், ஆண்டவருக்கு எல்லாம் தெரியும். ஆகவே, நம்முடைய வாழ்க்கையிலிருந்து வெளிவேடத்தை அகற்றிவிட்டு உள்ளத்தில் தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
ஜெபம் என்பது வார்த்தை ஜோடனை அல்ல, உணர்வுகளின் தொகுப்பு


ஓர் ஊரில் ஜெகதீஸ் என்ற ஒரு தொழிலாளி இருந்தான். அவன் தன்னுடைய குடும்பத்திற்காக அல்லும், பகலும் உழைத்து வந்தான். அதனால் அவனுக்கு ஜெபிப்பதற்கு என்று தனியாக நேரமே கிடைக்கவில்லை.

இருந்தபோதும் அவன் வேலைக்குச் செல்லும்போது போகிற வழியில் ஒரு சிறிய கோவில் இருந்தது. அந்த கோவிலுக்கு முன்பாக அமைதியாக ஒரு நிமிடம் கண்களை மூடி, "இறைவா! நான்தான் ஜெகதீஸ் வந்திருக்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் செல்வான். அதேபோன்று வேலைக்குப் போய்விட்டு, இரவில் வீடு திரும்பும்போதும் கோவிலுக்கு முன்பாக ஒருநிமிடம் அமைதியாக நின்று, "இறைவா! நான்தான் ஜெகதீஸ் வந்திருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு வீடு திரும்புவான்.

இது பல நாட்கள், மாதங்கள் நடந்தது. ஒருநாள் அவன் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனால் எங்கும் நகரமுடியவில்லை.

அன்று இரவு நேரம் வந்தது. 'வழக்கமாக தான் வேலைக்குப் போய்விட்டு வீடு திரும்பும்போது இறைவனின் கோவிலுக்கு முன்பாக ஒரு நிமிடம் அமைதியாக நின்று விட்டு வருவேனே, இன்றைக்கு அது முடியாமல் போய்விட்டதே' என்று வருந்தினான்.  அந்நேரத்தில் யாரோ ஒருவர் முணுமுணுக்கும் குரல் ஒன்று கேட்டது. அந்தக் குரல், "ஜெகதீஸ்! நான்தான் இறைவன் வந்திருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு மறைந்தது. அப்போதுதான் அவன் உணர்ந்தான் தன்னைச் சந்திக்க கடவுள்/இறைவன் வந்திருக்கிறார் என்று.

ஜெபம் என்பது வார்த்தைகளை அடுக்கிகொண்டே போவது அல்ல, மாறாக உணர்வுகளை/ உறவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இடம் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கிறது.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் உண்மையான ஜெபம் எது? என்பது பற்றிச் சொல்லப்படுகிறது. ஆண்டவர் இயேசு கூறும் பரிசேயர் மற்றும் வரிதண்டுவோர் உவமையில் பரிசேயரோ கோவிலுக்குச் சென்று, தான் செய்ததையெல்லாம் பட்டியலிடுகிறார். மாறாக வரிதண்டுபவரோ வானத்தை அண்ணார்ந்து பார்க்கக்கூடத் துணியாமல் 'இறைவா! நான் ஒரு பாவி' என்று இறைவனிடம் மன்றாடுகிறார். இறுதியில் வரிதண்டுபவரின் ஜெபமே இறைவனுக்கு ஏற்புடைய ஒன்றாக மாறுகிறது.

ஆகவே. நாம் ஜெபம் என்ற பெயரில் வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போகாமல்; நமது 'சாதனைகளை'ப் பட்டியலிடாமல் தாழ்மையான உள்ளத்தோடு, இறைவனிடம் உருக்கமாக மன்றாடினாலே போதும், அதுவே ஒப்பற்ற ஜெபமாக இருக்கும் என்று இயேசு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

பல நேரங்களில் நாமும்கூட நற்செய்தியில் வரும் பரிசேயரைப் போன்று வார்த்தைகளை அடுக்கிகொண்டே போவதுதான் ஜெபம் என்று நினைக்கிறோம். இது ஒரு தவறான பார்வை.

திருப்பாடல் 51:17 ல் வாசிக்கின்றோம், "கடவுளுக்கு ஏற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே, கடவுளே! நொறுங்கிய, குற்றம் உணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை" என்று. ஆகவே இறைவனிடம் ஜெபிக்கின்றபோது தாழ்ச்சியை ஆடையாக அணிந்துகொண்டு ஜெபித்தோம் என்றால் அது இறைவனுக்கு உகந்த ஜெபமாக மாறிவிடும். அதைத்தான் ஆண்டவர் இயேசு நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார், "தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்படுவர், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்படுவர்" என்று.

ஆகவே இயேசுவின் சீடர்களாக வாழக்கூடிய நாம் ஒவ்வொருவரும் ஜெபத்தின் ஆழமான அர்த்தத்தை உணர்ந்துகொண்டு ஜெபிப்போம். அதோடு தாழ்ச்சியை நமது உள்ளத்தில் தாங்கிவாழ்வோம். இறைவனால் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டு, நிறைவான வாழ்வைப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
உண்மையான செபம் எது?

பக்தியுள்ள யூதர் காலை, மதியம், மாலை என மூன்றுவேளைகள் செபம் செய்வார். அதுவும் ஆலயத்திற்கு வந்து செபிப்பது சிறந்த அருளைப்பெற்றுத்தரும் என்பதால், ஆலயத்திற்கு வந்து பலர் செபித்தனர். யூதச்சட்டம் ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாளன்று மட்டும் நோன்பிருக்க அறிவுறுத்தியது. ஆனால், சிலர் கடவுளின் அருளை சிறப்பாகப் பெறுவதற்காக வாரம் இருமுறை திங்களும், வியாழனும் நோன்பிருந்தனர். இந்த இரண்டு நாட்களும்தான் யெருசலேமில், மக்கள் பொருட்களை வாங்க சந்தைகளில் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு கொடுக்க வேண்டுமென்று இணைச்சட்டம்(14:22), கூறுவதன் அடிப்படையில், யூதர்கள் இதைப்பின்பற்றினர். இந்தப்பாரம்பரிய முறைகளை பரிசேயர்கள் மக்கள் பார்க்க வேண்டுமென்பதற்காக செய்தார்கள். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆலயத்திற்கு வந்து செபித்தார்கள், தாங்கள் நோன்பிருப்பது தெரியவேண்டும் என்பதற்காக, தங்கள் முகத்தை வெள்ளையாக்கிக்கொண்டு சந்தைவெளிகளில் நடந்தார்கள், அதேபோல கொடுக்கத்தேவையில்லாத பொருட்களிலும் பத்திலொரு பங்கைக்கொடுத்தார்கள்.

இன்றைய நற்செய்தியில், பரிசேயர் மற்றும் வரிதண்டுபவர் ஆலயத்தில் நின்று செபிக்கிறார்கள். பரிசேயர் சொன்னது அனைத்தையும் உண்மையிலே அவன் கடைப்பிடித்தான். பரிசேயர், தான் செய்யாததை அங்கே ஆலயத்தின் முன்நின்று சொல்லவில்லை. தினமும் செபித்தான், வாரம் இருமுறை நோன்பிருந்தான் மற்றும் பத்தில் ஒரு பங்கு கடவுளுக்குக்கொடுத்தான். ஆனால், செபம் என்பது தான் செய்வதை சொல்வது அல்ல, தன்னைப்புகழுவது அல்ல, அல்லது தன்னை மற்றவரோடு ஒப்பிடுவது அல்ல. மாறாக, செபம் என்பது கடவுளைப்புகழ்வது, கடவுளோடு நெருங்கிவர அவர் துணைநாடுவது, நிறைவாழ்வை நோக்கிய தொடர்பயணம், என்பதை பரிசேயர் மறந்துவிடுகிறார். செபம் என்பது கடவுளுக்கும் எனக்கும் உள்ள தனிப்பட்ட உறவு. அதில் நான் மற்றவர்களை விமர்சனம் செய்வரோ, மற்றவர்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதோ சரியானது அல்ல. செபத்தில் நான் கடவுளிடம் என்னுடைய வாழ்வு பற்றிப்பேச வேண்டும். நான் சரிசெய்ய நினைப்பவற்றை கடவுளிடம் சொல்ல வேண்டும். அதற்கான அருளை நான் கடவுளிடம் கேட்டுப்பெற வேண்டுமேயொழிய, மற்றவர்களைப்பற்றி கடவுளிடம் குறைகூறுதல் சரியான செபம் அல்ல.

செபம் கடவுளிடம் நம்மைப்பற்றிப் பேசுவதாக இருக்க வேண்டும். நம்முடைய பெருமைகளையோ, திறமைகளையோ, மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்புகழ்வதாகவோ இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் அது செபம் அல்ல. அந்த செபம் கடவுள் முன்னிலையில் கேட்கப்படாது. மாறாக, செபம் என்பது நம்மைப்பற்றி, நாம் இன்னும் விசுவாச வாழ்வில் போக வேண்டிய தூரம் பற்றி, நம்முடைய பலவீனங்களை வெல்வதற்கான கடவுளின் அருளைப்பெறுவது பற்றியதாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான செபமாக இருக்க முடியும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!