Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   28  மார்ச் 2019  
                          தவக்காலம் 3ம் வாரம் வியாழன்- 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28

ஆண்டவர் கூறியது: நான் இஸ்ரயேலுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.

அவர்களோ செவிசாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை. பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்.

உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை; கவனிக்கவில்லை; முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.

நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்; அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்; அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள். தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:95: 1-2. 6-7a. 7b-9 (பல்லவி: 8b,7b காண்க)
=================================================================================
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.

1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7a அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். பல்லவி

7b இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! 8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி

 
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவே 2: 12-13

'இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்,' என்கிறார் ஆண்டவர்.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 14-23

ஒரு நாள் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார். கூட்டத்தினர் வியந்து நின்றனர்.

அவர்களுள் சிலர், "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்றனர்.

வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.

இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்?

ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள்.

நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!

வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக்கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார். என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

பேச்சிலே ஆற்றல் இருக்கின்றது இயேசுவுக்கு.
இதனை ஒருவர் எப்படி பெற்றுக் கொள்ள முடியும்.
நல்லது செய்ய முற்படும் மனிதர்கள் எல்லாரும் தன்னிடம் கணம் இல்லாததால், பயமில்லாமல் தனிவோடு பேச இயலுகின்றது.
இத்தகையவர்கள் நல்லது செய்ய முற்படும் மனிதர்கள் உண்மையுள்ளவர்களாய் இருப்பதால் உண்மை அவர்களை இத்தகைய மனவுறுதி கொண்டவர்களாக மாற்றுகின்றது என்பதுவே உண்மை.
இதனைத் தானோ அன்றே 'உண்மை உங்களை விடுவிக்கும். உண்மையின் ஆவியானவர் உங்களை வழிநடத்துவார்' என்றார் இயேசு.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 14-23

பணிவாழ்வில் விமர்சனங்கள்

மிருனாள் சென் என்ற பிரபல இந்திய எழுத்தாளரது சிறுகதைதான் "ஒரு நாள்" என்ற சிறுகதை. அந்த சிறுகதையில் இடம்பெறும் ஒரு நிகழ்வு.

கல்கத்தாவில் இருக்கக்கூடிய ஒரு பாரம்பரியமான குடும்பம். அந்தக் குடும்பத்தாரின் பிழைப்பு குடும்பத்தில் இருக்கும் ஒரு இளம்பெண்ணின் வருமானத்தை நம்பியே ஓடுகிறது. அவள் நகரத்தில் இருக்கக்கூடிய நிறுவனம் ஒன்றில் அதிகாலையிலே வேலைக்குச் சென்று, இரவில்தான் திரும்புவாள்.

ஒருநாள் அவள் வேலைக்குச் சென்று, இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால், வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் 'ஒருமாதிரி' பேசத்தொடங்கிவிட்டார்கள். இளம்பெண்ணின் அண்ணன் தன்னுடைய தங்கைக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என எண்ணிக் கலங்கி, அவள் வழக்கமாகப் போகும் பாதையில் எல்லாம் போய்த் திரும்பி வந்தான். அதற்குள் செய்தி அக்கம்பக்கத்து வீட்டாருக்குத் தெரியவரவே, அவர்களும் தங்கள் வாய்க்கு வந்ததெல்லாம் பேசத் தொடங்கினார்கள்.

இரவு நீண்டநேரத்திற்குப் பிறகுத்தான் அந்த இளம்பெண் வீட்டுக்குத் திரும்பினாள். அப்போது வீட்டுமுற்றத்தில் இருந்த தந்தையானவர், "யாரோடு ஊர் சுற்றிவிட்டு இப்படி தாமதமாக வருகிறாய்?" என்றுகேட்டு அதட்டினார். அவளின் அண்ணனோ தன்னுடைய பங்குக்கு அவளைக் கேள்விகளால் துளைத்தான்.

அப்போது அந்த இளம்பெண், "நான் காலதாமதமாக வந்ததற்கு இவ்வளவு காரணத்தை அடுக்குகிறீர்களே, உண்மையில் நான் என்னோடு பணிபுரியும் சக பணியாளர் ஒருவரது தந்தையின் இறப்புக்குப் போய்விட்டுதான் வருகிறேன்" என்று சொன்னதும் அவர்கள் அமைதி காத்தார்கள்.

ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமலே விமர்சனம் செய்யும் நமது மனநிலையை கடுமையாக பகடி செய்வதாக இந்தச் சிறுகதை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பேய்பிடித்து, பேச்சிழந்த ஒருவரைக் குணப்படுத்துகிறார். அதைப்பார்த்த பரிசேயக் கட்சியினர், "இவர் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார்" என்று விமர்சனம் செய்கிறார்கள். இயேசு கிறிஸ்து தூயஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டு பேய்களை ஓட்டுகிறார் என்பது விவிலியம் கற்றுத்தரும் உண்மை. ஆனால் அது புரியாமல் இயேசு பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்ற பரிசேயர்களின் வாதம்தான் நகைப்புக்கு உரியதாக இருக்கின்றது.

நம்முடைய வாழ்விலும் பல நேரங்களில் இதுபோன்ற காரியங்கள் நடக்கலாம். ஒருவரைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் நாம் விமர்சித்திருக்கலாம். அல்லது நாமே பிறரது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கலாம். இது கால் ஊனமுற்றவன், நன்றாக ஓடுபவனை விமர்சனம் செய்வதுபோன்று இருக்கிறது. நம்மிடத்தில் தவறை வைத்துக்கொண்டு, பிறரைக் குறைசொல்வதும்/ விமர்சிப்பதும் அர்த்தமில்லாத ஒரு காரியம்.

இத்தகைய தருணங்களில் நாம் ஆண்டவர் இயேசுவைப் போன்று செயல்பட அழைக்கப்படுகிறோம். பரிசேயர்கள் இயேசுவை பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்று விமர்சனம் செய்கிறபோது அவர் "தனக்கெதிராக பிளவுபடும் எந்த அரசும் நிலைக்காது என்று சொல்லிவிட்டு முடிப்பார் 'நான் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஒட்டுகிறேன் என்றால், நீங்கள் யாரைக்கொண்டு பேய்களை ஒட்டுகிறீர்கள்" என்று.

ஆகவே இயேசுவைப் போன்று நாம் ஒவ்வொருவரும் நம்மீது சுமத்தப்படும் தேவையற்ற விமர்சனங்களை சரியான விதத்தில் எதிர்கொள்வோம். இறைவனுக்கு உகந்த வழியில் நடந்து, அவரது அருளை நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 14-23

பிறரைப் பற்றி இழிவாகப் பேசும் மனிதர்கள்

முன்பொரு காலத்தில் மலைநாட்டை வேங்கையன் என்றொரு மன்னன் ஆண்டு வந்தான். அவனிடமிருந்த ஒரு கெட்ட குணம். பிறரைப் பற்றி இழிவாகப் பேசுவதுதான்.

ஒருநாள் அவனுடைய அரசபைக்கு துறவி ஒருவர் வருகை புரிந்தார். அவருடைய தோற்றம் மற்றும் நடை உடையைப் பார்த்துவிட்டு அவன், "ஆளைப் பார்த்தால் எருமை மாடு மாதிரி இருக்கிறார், நடையும் எருமை மாடு மாதிரி இருக்கிறது" என்று நகைப்பாகப் பேசினான். அரசனுடைய வார்த்தைகள் துறவியின் காதில் விழுந்தன. ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல், அவனுக்கு முன்பாக பணிந்து வணங்கினார். இது அரசனுக்கு ஆச்சரியாமாக இருந்தது. நாமோ அவரை எருமை மாடு என்று இழிவாகப் பேசுகிறோம். அவரோ நம்மைப் பார்த்து வணங்குகிறாரோ, ஒருவேளை அவர் நம்மைப் பார்த்து பயந்துவிட்டாரா' என்று மனதிற்குள்ளாகவே அவன் யோசிக்கத் தொடங்கினான்.

அவன் தன்னுடைய ஆர்வத்தை அடக்க முடியாமல் துறவியைப் பார்த்து, "சுவாமி! நீங்கள் எதற்காக என்னைப் பார்த்து வணங்கினீர்கள், அதற்கான காரணத்தைத் நான் தெரிந்துகொள்ளலாமா? என்று கேட்டான். அதற்கு துறவி, "நம்மைப் பற்றி நாம் என்ன என்ன நினைக்கிறோமா அப்படியேதான் பிறரையும் நினைப்போம், பார்ப்போம். நான் எனக்குள் கடவுள் குடிகொண்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதுபோன்றுதான் உங்களுக்குள்ளும் கடவுள் குடிகொண்டு இருப்பதாக நினைத்தேன். அதனால்தான் உங்களைப் பார்த்து வணங்கினேன்" என்றார். துறவியின் வார்த்தைகள் அரசனை செவிலில் அறைந்தது போன்று இருந்தது. "துறவியாகிய தன்னை எருமை மாடு என்று அழைத்ததால், நீயும் எருமை மாடுதான்" என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவருடைய வார்த்தைகள். துறவியின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அறிந்த அரசன் தெரியாமல் அப்படிப் பேசிவிட்டேன் என்று அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டான்.

பிறரை இழிவாகப் பேசுகின்ற ஒருவன், ஒருநாள் தானும் இழிவாகப் பேசப்படுவான் என்ற உண்மையை இந்தக் கதையானது நமக்கு நினைவுபடுத்துகிறது.

நற்செய்தி வாசகத்தில் பல்வேறு வல்ல செயல்களையும், அரும் அடையாளங்களையும் செய்து வந்த ஆண்டவர் இயேசுவை பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்று பரிசேயர்கள் விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு இயேசு எத்தகைய பதிலைத் தந்தார் என்பதுதான் இன்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டியதொன்றாக இருக்கின்றது.

ஒருவரை எந்த விதத்திலும் வெற்றிகொள்ள முடியாதவர்கள், அவரைப் பற்றி இழிவாகப் பேசி, அவருடைய பெயரைக் கெடுப்பார்கள். அதுதான் நிறைய நேரங்கில் நடக்கும். இயேசுவின் வாழ்விலும் இதுதான் நடந்தது. இயேசுவை எந்த விதத்திலும் வெற்றிகொள்ள முடியாத பரிசேயக் கூட்டம் அவருடைய பெயரைக் கெடுக்கும் விதமாக, அவர் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் பேய்களை ஓட்டுகிறார் என்று இழிவாகப் பேசுகிறார்கள். இப்படிப் பேசுகின்ற பரிசேயர்களுக்கு இயேசு சரியான பதிலைக் கொடுக்கின்றார்.

இயேசு அவர்களுக்குக் கொடுத்த முதலாவது பதில், "நான் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஒட்டுகிறேன் என்றால், நீங்கள் யாரைக் கொண்டு பேய்களை ஒட்டுகிறீர்கள்?" என்பதாகும். இப்படிப்பட்ட ஒரு பதிலை சிறிதும் எதிர்பார்த்திராத பரிசேயக் கூட்டம் நிச்சயமாக திகைத்திருக்கும், என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கும். இயேசு அவர்களுக்கு அளித்த இரண்டாவது பதில், "தனக்கு எதிராக பிளவுபட்டுப் போகும் எந்த அரசும் நிலைத்து நிற்காது" என்பதாகும். ஆம், இயேசு பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்றால், தீய ஆவியின் ஆதிக்கம் எப்படி நிலைத்து நிற்கும் என்பதுதான் இயேசுவின் வாதமாக இருக்கின்றது. இயேசு இப்படிப் பதில் சொன்னதும், அவருக்கு எதிராகப் பேசியவர்கள் ஒன்றும் பேசமுடியாமல் வாய் பொத்தி நிற்கிறார்கள்.

இயேசுவுக்கு நிகழ்ந்தது போன்று பல நேரங்களில் நமக்கும் நிகழலாம். நம்மைப் பிடிக்காத சிலர் நம்மை வீழ்த்துவதற்காக எப்படியெல்லாமோ விமர்சிக்கலாம். அத்தகைய தருணங்களில் நாம் இயேசுவைப் போன்று முன்மதியோடு செயல்படவேண்டும் என்பதுதான் இன்றைய நாளில் இயேசு நமக்குத் தரும் செய்தியாக இருகின்றது. பொய்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒருசிலர் நம்மை விமர்சிக்கலாம். அத்தகைய தருணங்களில் நாம் அவற்றுக்கு பயந்து ஒடுங்கிப் போய்விட்டால் அதனால் பாதிக்கப்படப் போவது என்னமோ நாம்தான். நம்மீது சுமத்தப்படும் விமர்சனங்களை இயேசு எப்படி விவேகத்தோடு எதிர்கொண்டாரோ, அது போன்று நாமும் விவேகத்தோடு எதிர்கொள்ளவேண்டும். அப்போதுதான் நாம் இறைப்பணியை துணிச்சலோடு செய்ய முடியும்; அன்றாட வாழ்க்கையை பயமில்லாமல் வாழ முடியும்.

எனவே, நாம் இயேசுவைப் போன்று நம்மீது சுமத்தப்படும் தேவையற்ற விமர்சனங்களை துணிச்சலோடும் விவேகத்தோடும் எதிர்கொள்வோம்; இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
லூக்கா 11: 14-23

விமர்சனங்களைக் கடந்து செல்லுங்கள்...

நிகழ்வு

தன்னுடைய மானசீகக் குருவிடம் ஒருவர் கேட்டார், "என்னைப் பலரும் அவமானப் படுத்துகிறார்கள்... நான் என்ன செய்வது?". குரு சொன்னார், "அவற்றைப் பொருட்படுத்தாதீர்கள்." உடனே அவர், "என்னால் முடியவில்லையே!" என்றார். "அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்" என்றார் குரு. "அதுவும் முடியவில்லை" என்று அந்த மனிதர் சொல்ல, குரு அவரிடம், "சரி. அப்படியானால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள்" என்றார். "குருவே! அதுவும் முடியவில்லை" என்றார் அந்த மனிதர்.

சிறிதுநேரம் பொறுமையாக இருந்துவிட்டு குரு சொன்னார், "அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை... கடக்க முடியவில்லை... கண்டு சிரிக்க முடியவில்லை என்றால், அந்த அவமானங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர் என்று அர்த்தம்."

பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவராக இருக்கட்டும் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் தங்கள்மீது அபாண்டமாகச் சுமத்தப்படும் விமர்சனங்களை பொருட்படுத்தாமல், கடந்து செல்ல கற்றுக்கொள்ளவேண்டும். அப்படியில்லாது, எல்லாவிதமான விமர்சனங்களையும் செவியில் வாங்கிக்கொண்டு, அவற்றைப் பற்றியே நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அவர்கள் வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது.

பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டிய இயேசு

நற்செய்தி வாசகத்தில், இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டுகின்றார். இயேசு செய்த இந்த அருமடையாளம் இரண்டுவிதமான எதிர்வினைகளை ஆற்றுகின்றது. ஒன்று, மக்களை வியந்து நிற்கச் செய்கின்றது. இன்று, பரிசேயர்களை, இயேசு பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுவதாக விமர்சிக்க வைக்கின்றது. இயேசு தன்னை அவ்வாறு விமர்சித்தவர்களுக்கு என்ன பதிலளிக்கின்றார் என்பதை இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

யார் இந்த பெயல்செபூல்?

இயேசு, பேச்சிழந்த மனிதரிடமிருந்து பேயை ஓட்டியவுடன், அங்கிருந்த ஒருசிலர், "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்று சொல்கிறீர்களே... யார் இந்த பெயல்செபூல்? எனத் தெரிந்துகொள்வது நல்லது. பெயல்செபூப் அல்லது பெயல்செபூல் என்பது எக்ரோனின் தெய்வம். இதைப் பற்றிய குறிப்பு அரசர்கள் இரண்டாம் நூல், முதல் அதிகாரத்தில் இடம்பெறுகின்றது.

ஒருசமயம் சமாரியாவில் அரசனாக இருந்த அகசியா, மாடியிலிருந்து கீழே விழுந்தபோது, தன் தூதர்களிடம், "நீங்கள் எக்ரோனின் தெய்வமாகிய பெயல்செபூபிடம் சென்று, இக்காயம் குணமடையுமா?" என்று கேட்டுவரச் சொல்கின்றான். அவர்களும் அவ்வாறு செல்லும்போது, ஆண்டவரின் தூதர் எலியா இறைவாக்கினரிடம், "இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லையென்றா? பெயல்செபூபிடம் குறிகேட்கப் போகிறீர்கள்?" என்று அகசியாவின் தூதர்களிடம் சொல்லச் சொல்லிவிட்டு... "நீ படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்... அப்படியே செத்துப் போவாய் என்று சொல்" என்று அகசியாவின் தூதர்களிடம் சொல்லச் சொல்லுமாறு ஆண்டவரின் தூதர் எலியா இறைவாக்கினரிடம் சொல்கின்றார். உடனே எலியா இறைவாக்கினர் ஆண்டவரின் தூதர் தன்னிடம் சொன்னதை அவர்களிடம் சொல்ல, அவர்கள் அகசியாவிடம் சென்று, எல்லாவற்றையும் சொல்கிறார்கள். இதன்பிறகு நடந்து பெரும்கதை (2 அர 1: 1-6)

இங்கு இடம்பெறும் பெயல்செபூப் அல்லது பெயல்செபூலுக்கு ஒருவிதமான ஒருசக்தி இருந்ததாக மக்கள் நம்பினார்கள். இப்படிப்பட்ட புறவினத்துத் தெய்வத்தைத்தான் இயேசுவோடு ஒப்பிட்டுப் பேசுகின்றது பரிசேயக்கூட்டம். இதைத்தொடர்ந்துதான் இயேசு, தன்னைப் பெயல்செபூலோடு ஒப்பிட்டுப் பேசுபவர்களுக்கு பதில் தருகின்றார்.

இயேசு தன்னை விமர்சித்தவர்களுக்கு அளித்த பதில்

'பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்' என்று சொன்னவர்களுக்கு இயேசு மூன்று விதமான பதிலைச் சொல்லி அவர்களுடைய வாயை அடிக்கின்றார். 'தனக்கெதிராகப் பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும்'. இதுதான் இயேசு தன்னை விமர்சித்தவர்களுக்குத் தரும் முதலாவது பதிலாகும். உண்மையை உடைத்துச் சொல்லவேண்டுமென்றால், இந்த உலகில் இருக்கின்ற யாரும், அழிந்துபோகவேண்டும் என்று விரும்பமாட்டார்கள்... வாழவேண்டும் என்றுதான் விரும்புவார்கள்... அப்படியிருக்கும்போது தீமையின் மொத்த உருவாகிய சாத்தான் எப்படி அது அழிந்துபோக விரும்பும்?. ஒருபோதும் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்பதால், தன்னை விமர்சித்தவர்களின் கூற்றில் ஓர் ஒழுங்கு இல்லை என்கின்றார் இயேசு.

'நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஒட்டுகிறேன் என்றால், உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு போய் ஓட்டுகிறார்கள்?' இது தன்னை விமர்சித்தவர்களுக்கு இயேசு அளிக்கும் இரண்டாவது பதிலாக இருக்கின்றது. இயேசு வாழ்ந்த காலத்திலும் சரி, அதற்கு முன்பும் சரி பலரும் பேய்களை ஓட்டிவந்தனர். அவர்களை எல்லாம் குறை சொல்லாத, விமர்சிக்காத பரிசேயக் கூட்டம் இயேசுவை மட்டும் விமர்சிக்கின்றது என்றால், அங்கு எவ்வளவு வன்மம் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். 'வலியவரை அவரை விட வலியவர்தான் வெல்ல முடியும்' இது இயேசு அளிக்கும் மூன்றாவது பதிலாக இருக்கின்றது. இந்த உலகத்தில் வலிமையானது சாத்தான் (!) எனில், அதை விரட்டும் இயேசு வலியவர்தானே!... இவ்வாறு பரிசேயர்கள் அவர்கள் வாதத்தாலேயே, இயேசு சாத்தானை விடப் பெரியவர் என்கிறார்கள். அப்படியும் அவர்கள் இயேசுவை இறைமகன் என ஏற்றுக்கொள்ளாமல், தொடர்ந்து விமர்சித்து வந்தார்கள். அதனால்தான் இயேசுவும் அர்த்தமில்லாமல் விமர்சிக்கும் பரிசேயர்களை நிராகரித்தும் சில சமயங்களில் கண்டும் காணாமலும் கடந்தும் சென்றார்.

சிந்தனை

இயேசுவை, அவர் வாழ்ந்த காலத்தில் பலரும் பலவிதமாக விமர்சித்தார்கள். அவற்றையெல்லாம் அவர் நிராகரித்துக் கடந்து போய்க்கொண்டே இருந்தார். அதற்கும் முதன்மையான காரணம், அவர்மீது மக்கள் வைத்த விமர்சனங்கள் எல்லாம், பொய்யானவை; பொறாமையால் வைக்கப்பட்டவை. நம்மீதும் பல சமயங்களில் பொய்யான விமர்சனங்கள் வைக்கப்படலாம். அவற்றை இயேசுவைப் போன்று கண்டு கொள்ளாமல் கடந்து போவதே நல்லது.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று விமர்சனங்களைக் கையாளக் கற்றுக்கொள்வோம்; எப்பொழுதும் இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
எரேமியா 7: 23-28

கீழ்ப்படிதலைவிட சிறந்த பலியில்லை

நிகழ்வு

ஒரு சமயம் போர்முனையில் இருந்த வீரர்களிடம் படைத்தலைவர், "இன்றைய போரில் மிகச் சிறந்த வீரன் யார்?" என்றார். "தன் உயிரைப் பணயம் வைத்து இன்னொரு வீரனைக் காப்பாற்றிய ஜார்ஜ்தான் சிறந்த வீரன்" என்றான் ஒருவன். "இல்லை இல்லை... நம் நாட்டைக் காக்கத் துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் தாங்கி மடிந்தானே அல்போன்ஸ்... அன்தான் சிறந்த வீரன்" என்றான் மற்றொருவன். "கால்களை இழந்து மயக்க நிலையிலும் நமது நாடு வாழ்க என முழங்கினானே சார்லஸ்... அவனே சிறந்த வீரன்" என்றான் இன்னொருவன்.

எல்லாரும் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த படைத்தளபதி அவர்களிடம், "போர்க்களத்தில் ஒரு வீரனின் உயிர் போவதும் ஒருவரை ஒருவர் பாதுகாப்பதும் உறுப்புகளை இழப்பதும் சகஜம். ஆனால், நம் வீரன் ஒருவனை எதிரி நாட்டு வீரன் வெட்டுவதற்காக வாளை ஓங்கும்பொழுது, போர்நிறுத்த முரசு அறையப்பட்டதும், ஓங்கிய கையை அப்படியே கீழே போட்டு, தன் படைத்தளபதியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தானே ஒரு வீரன்... அவன் நமது எதிரியாக இருந்தாலும், அவனே சிறந்த வீரன்" என்றார்.

ஒரு போர்வீரனுக்கு அழகு அவன் போர்விதிமுறையைக் கடைபிடிப்பது, அது போன்று கடவுளின் பிள்ளைகளுக்கு அழகு, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வது. இந்த உண்மையை எடுத்துச் சொல்லும் இன்றயை முதல் வாசகத்தைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிப்பதால் அவரின் பிள்ளைகளாகும் பேறு கிடைக்கும்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், "என் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாக இருப்பீர்கள்" என்கின்றார். ஆண்டவராகிய கடவுளுக்கு, அவருடைய கட்டளையைக் கடைபிடிப்பதன் மூலம் இஸ்ரயேலர் மக்களாக இருப்பது என்பது எத்துணை உயர்ந்த பேறு! அது யாருக்குமே கிடைக்காத பேறு! அப்படிப்பட்ட பேறு இஸ்ரயேல் மக்களுக்குக் கிடைத்தது. அத்தகைய பேற்றினை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்களா? இல்லையா? என்பதை இதன் பின்பகுதியில் சிந்தித்துப் பார்ப்போம்

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேலரை தன்னுடைய மக்களாக அழைப்பது, நற்செய்தியில் இயேசு, யாராரெல்லாம் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகிறார்களோ, அவர்களெல்லாம் தன்னுடைய சகோதர சகோதரிகளும் தாயும் ஆவார் (மாற் 3: 35) என்று கூறுவதைப் போன்று இருக்கின்றது. இவ்விரண்டு பகுதிகளிலிருந்தும் அதாவது கடவுள் இஸ்ரயேலரை மக்கள் என அழைப்பதிலிருந்தும் இயேசு, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களைத் தன்னுடைய சகோதர, சகோதரியாகவும் தாயாகவும் அழைப்பத்திலிருந்தும் ஒன்று தெளிவாகின்றது. அது என்னவெனில், யாராரெல்லாம் கடவுளின் குரல்கேட்டு, அதன்படி நடக்கின்றார்களோ, அவர்களெல்லாம் மக்களாக மாறுகின்றார்கள்.

கடவுளின் கட்டளைப்படி நடக்காத இஸ்ரயேல் மக்கள்

கடவுள் கட்டளைப்படி நடந்தால் இஸ்ரயேலர் கடவுளின் மக்களாவர் என்று பார்த்தோம். ஆனால், அவர்களோ கடவுளின் கட்டளைப்படி நடக்கவில்லை. மாறாக, தங்களுடைய தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள். அது மட்டுமல்லாமல், கடவுள் தன்னுடைய அடியார்களை இஸ்ரயேல் மக்களிடம் அனுப்பியபோதும், அவர்களுக்குச் செவிசாய்க்காமல், பிடிவாதம் கொண்ட, திருந்தாத மக்களாக மாறினார்கள். இதனால் அவர்கள் கடவுளின் மக்களாக அழைக்கப்படும் தகுதியற்றுப் போனார்கள்.

சாமுவேல் முதல் நூலில், சாமுவேல் சவுலைப் பார்த்து இவ்வாறு சொல்வார், "ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரிபலிகள் பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது. கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது." (1சாமு 15:22) சாமுவேல் கூறுகின்ற இவ்வார்த்தைகள் ஆழமாக சிந்தித்துப் பார்க்கப்படவேண்டியை. இஸ்ரயேல் மக்கள் தாங்கள் செலுத்தும் பலியானது கடவுளுக்குப் பிடிக்கும் அதுவே அவருடைய மக்களாக இருப்பதற்குப் போதுமானதாக இருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால், ஆண்டவரோ சாமுவேலின் வழியாக, பலியை விட கீழ்ப்படிதல் உயர்ந்தது என்று உரக்கச் சொல்கின்றார்.

ஆகவே, கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதைவிட மேலான பலி எதுவும் இல்லை என்ற உண்மையை உணர்ந்து, நாம் ஒவ்வொருவரும் அவருடைய கட்டளையைக் கடைப்பிடித்து, அவருடைய மக்களாக மாறுவது நல்லது.

சிந்தனை

'உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பார் இறைவன் (ஒசே 6:6). ஆகவே, இறைவனுக்குப் பிடித்தமான பலியான இரக்கத்தை, அன்பை, மன்னிப்பை நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!