|
|
27
மார்ச் 2019 |
|
|
தவக்காலம்
3ம் வாரம் புதன்- 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி
நடங்கள்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1,5-9
மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இப்பொழுது இஸ்ரயேலரே!
கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள், முறைமைகளின்படி
ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய
ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள்.
நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும்
உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்.
எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் அவற்றைப்
பின்பற்ற வேண்டும். நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே
மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும்.
இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம்
ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர்.
நாம் குரல் எழுப்பும்போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு
உள்ளார். அவரைப்போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக்
கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை
உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும்
முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? கவனமாய் இருங்கள்;
உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்துபோகாதபடி உங்கள்
இதயங்களில் காத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள்
பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக்
கூறுங்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா:147: 12-13. 15-16. 19 (பல்லவி: 12a)
=================================================================================
பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக.
12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள
உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி
15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு
மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. 16 அவர் வெண்கம்பளிபோல் பனியைப்
பொழியச் செய்கின்றார்; சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகின்றார்.
பல்லவி
19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும்
நீதி நெறிகளையும் அறிவிக்கின்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 6: 63b, 68b
ஆண்டவரே! நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக்
கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில்
பெரியவர்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "திருச்சட்டத்தையோ
இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்;
அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும்
நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக
உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே
மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார்.
இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில்
பெரியவர் எனக் கருதப்படுவார்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
கற்றுக் கொடுப்பதை சரியாக செய்பவரே பெரியவர் என அழைக்கப்படுவார்.
கற்றுக் கொடுப்பவர் தாம் கற்றுக் கொடுப்பவற்றை தாம் முதலிலே
வாழ்ந்து பார்த்து, பின்னர் கற்றுக் கொடுக்க முற்படும் போதே அது
கேட்போருக்கு நிறைந்த பலனை விளைவிக்கும் என்பது உண்மையாகின்றது.
தன்னிடம் இனிப்பு அதிகமாக சாப்பிடும் மாணவனை அழைத்து வந்து அவனுக்கு
அறிவுரை சொல்லக் கேட்ட தாயிடம் ஒருவார கால அனுமதி வேண்டும் என
கேட்டு, தன்னிடம் மாற்றத்தை வரவழைத்துக் கொண்டு பின்னர் போதனையை
செய்தார் என மகாத்மா வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. அவர் இன்றும்
பெரியவராக கருதப்படுகின்றார்.
வாழ்ந்து பார்த்து போதிப்பவர்களே உயர்ந்தவர்கள். வார்த்தை ஜாலத்தில்
வறட்டு கௌரவத்தோடு 'போதனை மற்றவர்களுக்குத் தான்',
'எனக்கில்லை' என்பவர்கள் ஒரு விதத்தில் விபச்சாரர்களே. இவர்கள்
தொழிலாய் போதனையை செய்ய முற்படும் போது சிறியவர்களே.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
நற்செய்தி வாசகம்
கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில்
பெரியவர்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19
சொல்லில் வீரர்களாக அல்ல, செயல்வீரர்களாக
வாழுவோம்.
முன்பொரு காலத்தில் ரோமாபுரியை ரெகுலஸ் என்ற மன்னன் ஆண்டுவந்தான்.
ஒருமுறை அவன் கார்தேஜ் நாட்டினரோடு (தற்போதைய துனிசியா)
போர்தொடுக்கச் சென்றபோது, அந்நாட்டுப் படைவீரர்களால்
சிறைபிடிக்கப்பட்டான்.
அவர்கள் மன்னன் ரெகுலசிடம், "நீ உன்னுடைய நாட்டவரிடம் சென்று,
கார்தேஜ் இனத்தவராகிய எங்களோடு இனிமேல் போர்தொடுக்காமல், அமைதி
வழியில் நடப்போம் என்ற வாக்குறுதியோடு வந்தால், உன்னை விடுதலைசெய்து
அனுப்புவோம். அதேநேரத்தில் உங்கள் நாட்டவர் எங்களோடு
போர்தொடுப்பதாக இருக்கிறார்கள் என்ற வாக்குறுதியோடு வந்தால்,
உன்னை சிரச்சேதம் செய்திடுவோம்" என்று சொல்லி அனுப்பினார்கள்.
மன்னன் ரெகுலஸ் இச்செய்தியை தன் நாட்டவரிடம் சொன்னபோது அவர்கள்,
அவரிடம், "இன்னும் ஒருசில நாட்களில் நாம் கார்தேஜை எளிதாக
வெற்றிகொண்டுவிடலாம். அதனால் அந்நாட்டவரின் வார்த்தைகளுக்கு அஞ்சி,
அங்கே போகவேண்டாம்" என்று அறிவுறுத்தினார்கள்.
ஆனால் மன்னனோ அவர்களிடம், "நான் கட்டயாம் அவர்களிடத்தில்
சென்று, நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் வாக்குதியைக்
காப்பாற்றவேண்டும். ஏனென்றால் நான் ஒரு உரோமையன். உரோமையன்
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவான்" என்று சொல்லி மன்னன்
ரெகுலஸ், கார்தேஜ் நாட்டவரிடம் சென்று, சிரச்சேதம் செய்ய தன்னை
அனுமதித்தான்.
"சொன்ன சொல்லின்படி வாழ்தல் என்பதைவிட மிகச்சிறந்த பேறு
வேறெதுவும் இல்லை" என்பர் நம் முன்னோர்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, நாம் இறைவார்த்தையை
போதிக்கும் போதனையாளர்களாக மட்டும் நின்றுவிடாமல், அதன்படி
வாழ்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். இயேசு
சொல்கிறார், "இக்கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி, அவ்வாறே மக்களுக்குக்
கற்பிக்கின்றவர் விண்ணரசில் மிகச்சிறியவர் எனக் கருதப்படுவார்.
இவையனைத்தையும் கடைபிடித்துக் கற்பிக்கின்றவரோ விண்ணரசில் மிகப்பெரியவர்
எனக் கருதப்படுவார்" என்கிறார்.
ஆகவே, நாம் ஒவ்வொருவரும் போதனையாளர்களாக மட்டும் நின்றுவிடாமல்,
வாழ்ந்து கற்பிக்கின்றவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான்
இறைவனின் பார்வையில் நாம் பெரியவர்களாக இருக்கமுடியும்.
இன்றைக்கு நம் மத்தியில் ஏராளமான போதனையாளர்கள்/போதகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் தாங்கள் போதிப்பதை வாழ்ந்துகாட்டும் போதகர்கள் இருக்கிறார்களா
என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. நம்முடைய முன்னாள் திருத்தந்தை
இரண்டாம் யோவான் பவுல் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார்,
"மக்கள் இன்றைக்கு போதனையாளர்களைவிட, சாட்சிய வாழ்வு வாழ்பவர்களையே
அதிகம் நம்புகிறார்கள். ஒருவேளை போதகர்களை மக்கள் நம்புகிறார்கள்
என்றால், அவர்கள் சாட்சிய வாழ்வு வாழ்கிறார்கள் என்று அர்த்தம்"
என்றார். ஆம் வாழ்ந்துகாட்டுபவர்களையே மக்கள் அதிகம் நம்புகிறார்கள்.
நற்செய்தி நூல்களில் ஆண்டவர் இயேசுவுக்கும் பரிசேயர்கள், மறைநூல்
அறிஞர்கள் மற்றும் திருச்சட்ட அறிஞர்களுக்கும் இடையே அடிக்கடி
பிரச்சனை ஏற்படக் காரணம் இயேசு அவர்களின் போலித்தனத்தைத்
சுட்டிகாட்டியதனால்தான். இயேசு அவர்களைப் பார்த்துச் சொல்வார்,
"இவர்கள் சொல்வார்கள், செயலில் காட்டமாட்டார்கள்" (மத் 23:3)
என்று. மாறாக ஆண்டவர் இயேசுதான் போதித்ததை வாழ்வாக்கினார்,
வாழ்வாக்கினத்தைப் போதித்தார். அதனால்தான் இன்றைக்கும் நாம்
அவருடைய வழியில் நடக்கும் மக்களாக இருக்கின்றோம்.
எனவே, நாம் இயேசுவைப் போன்று வாழ்வதைப் போதிப்போம். போதிப்பதை
வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
இணைச்சட்டம் 4: 1, 5-9
இஸ்ரயேலரே! கேளுங்கள்!
நிகழ்வு
அது ஓர் அழகிய கிராமம். அக்கிராமத்தில் சந்தனம் என்றொரு பெரியவர்
இருந்தார். அவர் நல்லொழுக்கம் நிரம்பியவர்; பல நூல்களைக் கற்றுத்
தேர்ந்தவர். அது மட்டுமல்லாமல், தான் கற்ற நூல்களை அக்கிராமத்துச்
சிறுவர்களுக்குக் கூறி, அவர்களை நல்வழிப்படுத்தி வந்தார். அதனால்
அக்கிராமத்தில் அவருக்கு நல்ல பெயரும் புகழும் இருந்தது.
சந்தனம் என்ற அந்தப் பெரியவருக்கு முகிலன் என்றொரு பேரன் இருந்தான்.
அவன் தாத்தாவின் பேச்சைக் கேட்பதில்லை. "இந்த கிழம் வாயில் வந்ததையெல்லாம்
உளறும்... வயதாகிவிட்டாலே பெருந்தொல்லைதான்" என்று அவன் தன்
தாத்தாவை இழிவாக நினைத்தான். ஒருநாள் உச்சி வெயில் மண்டையைப்
பிளப்பது போன்று காய்ந்து கொண்டிருந்தது. முகிலனுக்கு
கோலிக்குண்டு ஆடுவதென்றால் கொள்ளை விருப்பம். அவனுடைய நண்பர்கள்
அனைவரும் அவனுடைய வீட்டிற்கு வந்து, "வாடா முகிலா!
கோலிக்குண்டு விளையாடப் போகலாம்" என்று அழைத்தனர். முகிலனோ
அவர்களுடன் புறப்படத் தயாரானான். அப்பொழுது அவனுடைய தாத்தா அவனைப்
பார்த்து, "முகிலா! வெளியே வெயில் நெருப்புப்போல்
கொதித்திக்கிறது... இப்பொழுது வெளியில் செல்லாதே... மாலையில்
வெயில் தணியும், அப்பொழுது செல்" என்று கூறினார். முகிலனோ அவர்
பேச்சை மதிக்காமல் நண்பர்களுடன் கோலிக்குண்டு விளையாட
சென்றான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேரம் போவதே தெரியாமல்
வெயிலில் நீண்ட நேரம் விளையாடினான் முகிலன். பின்பு வீட்டிற்கு
திம்பினான். வீட்டில் நுழைந்தவுடன் படுக்கையில் படுத்துவிட்டான்.
அவனது தாய் 'முகிலா! சாப்பிட வா!" என அன்போடு அழைக்க, அவன் பதில்
ஏதும் பேசாமல் திரும்பிப் படுத்தான். அவனது தாய் அவனருகில்
சென்று, அவனது உடலைத் தொட்டுப் பார்த்தபொழுது அவனுடைய உடல் அனலாய்
கொதித்தது. பிறகு தாத்தாவை அழைத்து, "முகிலனை மருத்துவரிடம் அழைத்து
செல்லுங்கள்" என்றாள். மருத்துவர் அவனைப் பரிசோதித்துவிட்டு,
"கடுமையான காய்ச்சல் வந்துள்ளது" என்றார்.
முகிலனின் முகம் சிவந்திருந்தது. மருத்துவர் சில மாத்திரைகளை
எழுதிக் கொடுத்து, "இதைக் கொடுங்கள் சரியாகி விடும்" என்றார்.
பிறகு முகிலனும் தாத்தாவும் வீட்டிற்குத் திரும்பினர். அப்பொழுது
முகிலன் தன் தாத்தாவைப் பார்த்து, "தாத்தா! நீங்கள் அறிவிலும்
வயதிலும் அனுபவத்திலும் எத்துணைப் பெரியவர்! நீங்கள் கூறியதை
கேட்காமல் நான் வெயிலில் சென்று விளையாடியதால்தான் எனக்கு
காய்ச்சல் வந்துள்ளது... இனிமேல் உங்களை போன்ற மேன்மக்கள்
கூறும் சொற்களை கேட்பேன்" என்றான். முகிலனிடமிருந்து இப்படிப்பட்ட
வார்த்தைகளைக் கேட்டதும் சந்தனம் தத்தா அவனை அன்போடு அணைத்துக்
கொண்டார்.
மூத்தோர் சொல் அமிர்தம் போன்றது. அதைவிடவும் உயர்ந்தது ஆண்டவருடைய
வாயிலிருந்து வெளிப்படும் சொல். அத்தகைய இறைவனின் சொல்லுக்கு
நாம் ஒவ்வொருவரும் செவிமடுத்து வாழ்ந்தோமெனில் அவரிடமிர்ந்து
ஏராளமான ஆசியைப் பெறுவோம் என்று இணைச்சட்ட நூலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய முதல் வாசகம் எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக்
குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவனின் சொல்கேட்டு நடந்தால் வாக்களிக்கப்பட்ட நாட்டினை உரிமைப்பேறாகப்
பெறமுடியும்
முதல் வாசகத்தில் மோசே மக்களிடம், "நான் உங்களுக்குக் கற்பிக்கும்
நியமங்கள் மற்றும் கட்டளைகளின் படி நடந்தால், ஆண்டவர் வாக்களித்த
நாட்டினை உரிமைப் பேறாகப் பெறுவீர்கள்" என்கின்றார். தன்னுடைய
கட்டளைகளின் நடப்போர் வாழ்வுபெறுவர் (லேவி 18:5) என்று சொன்ன
இறைவன், இங்கு மோசே வழியாக யாராரெல்லாம் தன்னுடைய குரலுக்குச்
செவிமடுத்து, அதன்படி வாழ்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட
நாட்டினை உரிமைப் பேறாகப் பெறுவார்கள் என்கின்றார். ஏனெனில்
தூய பவுல் கூறுவது இறைவனின் சொல்லைக் கேட்டால்தான் அவர்மீது நம்பிக்கை
ஏற்படும் (உரோ 10:17) அந்த நம்பிக்கையை வாழ்வாக்கினால்தான் ஒருவர்
இறைவனிடமிருந்து ஆசியைப் பெறமுடியும்.
இறைவனின் சொல்கேட்டு நடப்போர் மக்களினங்களுக்கு முன்பாகச்
சான்றாக இருப்பர்
முதல் வாசகத்தின் வாயிலாக மோசே மக்களுக்குக் கூறுகின்ற இரண்டாவது
செய்தி, இறைவனின் சொல்கேட்டு நடக்கின்றபோது அவர்கள் - இஸ்ரயேல்
மக்கள் - மற்ற மக்களுக்கு சான்றாக இருப்பார்கள் என்பதாகும். காரணம்,
இறைவார்த்தையைக் கருத்தூன்றிக் கேட்கும் எவரையும் அவ்வார்த்தை
சும்மா இருக்கவிடாது, மாறாக அவரை உலகிற்கு உப்பாக், ஒளியாக
மாற்றி, இறைவனுக்குப் பெருமை சேர்க்கச் செய்யும் (மத்5:16). அதுபோன்றுதான்
இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி இஸ்ரயேல் மக்கள் நடப்பார்கள்
எனில், அவர்கள் புறவினத்தாருக்கு முன்பாக இறைவனுக்குச் சான்றாக
இருப்பார்கள் என்கிறார் மோசே.
இறைவனின் சொல்கேட்கும் எவரும் அடுத்தவருக்கு அவர்தம் பிள்ளைகளுக்கு
- எடுத்துக்கூறவேண்டும்
முதல் வாசகத்தின் வழியாக மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கூறுகின்ற
மூன்றாவது செய்தி, அவர்கள் கேட்ட இறைவார்த்தையை அவர்களது
பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் எடுத்துக்கூறவேண்டும் என்பதாகும்.
இது இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமல்ல, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவருக்கும்
பொருத்தும். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் நற்செய்தி அறிவிக்கவேண்டியதன்
முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆண்டவரின் வார்த்தையை எல்லா மக்களுக்கும்
எடுத்துரைப்போம் (மாற்16:15)
சிந்தனை
'ஆண்டவரது கட்டளைகளையும் நியமங்களையும் முறைமைகளையும் கடைப்பிடி.
அப்பொழுது நீ வாழ்வாய்' (இச 30: 16) என்கிறது இறைவார்த்தை. ஆகவே,
நாம் இறைவனின் கட்டளையைக் கடைப்பிடித்து, அதை மற்றவர்களும் கடைபிடிக்கும்படி
கற்பித்து, அவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
மத்தேயு 5: 17-19
அழிப்பதற்கு அல்ல, நிறைவேற்றவே
நிகழ்வு
வட்ட மேசை மாநாடு முடிந்து காந்தியடிகள் இந்தியாவிற்குத்
திரும்பியிருந்த சமயம். அப்பொழுது அவரைச் சந்தித்தார் இர்வின்
பிரபு. அவர் காந்தியிடம், "மகாத்மா, சக மனிதனாக நான் உம்மிடம்
கேட்கின்றேன்... உங்களது நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு
எந்த வகையில் நான் உதவலாம்?" என்று கேட்டார். உடனே காந்தியடிகள்
தன் அறையில் இருந்த விவிலியத்தை எடுத்து, மத்தேயு நற்செய்தியின்
ஐந்தாம் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, "இர்வின் பிரபு, எங்களது
நாடும் உங்களது நாடும் ஏன் உலகமே பிரச்சினையின்றி வாழ இயேசு மலைப்பொழிவில்
சொன்னதை நாம் கடைபிடித்தாலே போதும். எல்லாப் பிரச்சினைகளும் ஓய்ந்து
அமைதி கிடைத்துவிடும்" என்று பதில் சொன்னார்.
இறைவார்த்தை/ இயேசுவின் வார்த்தை வல்லமை நிறைந்த வார்த்தை.
விண்ணும் மண்ணும் அழிந்துபோகுமுன் நிறைவேறக்கூடக்கூடிய
வார்த்தை. அவ்வார்த்தைகளை நாம் வாசிப்பது மட்டுமல்லாமல்,
வாழ்வாக்கினோம் எனில் விண்ணுலகில் பெரியவர் ஆவோம் என்பது உறுதி.
இறைவாக்குகளையும் திருச்சட்டத்தையும் நிறைவேற்ற வந்த இயேசு
இயேசு தன்னுடைய பணியை மக்களுக்குச் செய்தபோது, பரிசேயர்களும்
மறைநூல் அறிஞர்களும் அவர்மீது அடிக்கடி வைத்த குற்றச்சாற்று,
'இவர் சட்டத்தை மீறுகிறார்' என்பதாகும் (மத் 3:2). பரிசேயர்களும்
மறைநூல் அறிஞர்களும் சொல்வது போன்று இயேசு திருச்சட்டத்தை
மீறினாரா? என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில்,
சட்டங்கள் என்று அவர்கள் சொன்னது ஆண்டவருடைய திருச்சட்டமல்ல,
மனிதக் கட்டளைகளும் மரபுகளும்தான் (மாற் 7: 7-8). இவற்றை அவர்கள்
கோட்பாடுகளாகக் கற்பித்து வந்தார்கள். இவை அறிவுக்கு ஒவ்வாதவையாகவும்
சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய சுமையாகவும் இருந்தன (மத் 23:4)
அதனால்தான் இயேசு அவற்றை மீறுகின்றார்; அவற்றுக்கு எதிராகத் தன்னுடைய
கண்டனத்தைப் பதிவுசெய்கின்றார். ஆனால், அவர் திருச்சட்டத்தையோ
இறைவாக்குகளையோ மீறாமல் கடைப்பிடித்து வந்தார். "காலம்
நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை
மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தன் மகனைப் பெண்ணிடம்
பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்"
(கலா 4:4-5) என்று தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில்
கூறுகின்ற வார்த்தைகளில் இதை வாசித்து அறியலாம்.
இன்னும் சொல்லப்போனால், இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்
திருச்சட்டத்திற்கும் இறைவாக்குக்கும் ஏற்பவே வாழ்ந்துவந்தார்.
அதனால்தான் தந்தையாம் கடவுள், "இவரே என்னுடைய அன்பார்ந்த மைந்தர்.
இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (மத் 3:17, 17:5) என்கின்றார்.
ஆதலால், இயேசு திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வந்தார்
என எண்ணாமல், அவற்றை நிறைவேற்ற வந்தார் என்ற தெளிவினைப்
பெற்றுக்கொண்டு, நாமும் அவற்றை நிறைவேற்றுபவர்களாக இருக்கவேண்டும்.
திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் ஏன் நிறைவேற்றவேண்டும்?
இயேசு, தன்னுடைய வாழ்வு முழுவதும் திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும்
நிறைவேற்றினார் என்றும் அவர் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும்
அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் சிந்தித்துப் பார்த்தோம்.
இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழலாம். "நாம் ஏன் திருச்சட்டத்தையும்
இறைவாக்குகளையும் நிறைவேற்றவேண்டும்?" என்பதுதான் அந்தக்
கேள்வி
திருச்சட்டத்தை ஒவ்வொருவரும் நிறைவேற்றுவதற்கு மிக காரணம், அது
மனிதருக்கு நிறைவையும் புத்துயிரையும் அளிக்கின்றது (திபா
19:7) அது மட்டுமல்லாமல் அது மனிதருக்கு இன்பம் தரக்கூடியதாக
இருக்கின்றது. (திபா 119:92) ஆகவே, இத்தகைய திருச்சட்டத்தையும்
இறைவாக்குகளையும் ஒவ்வொருவரும் இயேசுவைப் போன்று நிறைவேற்றி
வாழ்வது தேவையான ஒன்று.
திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து வாழ்வோர் விண்ணரசில் பெரியவர்
நற்செய்தி வாசகத்தில் இயேசு எல்லாவற்றையும் சொல்லிவிட்டுச்
சொல்லக்கூடிய வார்த்தைகள்தான், "இவையனைத்தையும் கடைபிடித்துக்
கற்பிக்கின்றவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்" என்பதாகும்.
திருச்சட்டமும் இறைவாக்கும் மகிழ்ச்சியையும் புத்துயிரையும் அளிக்கின்றது
என்றால், அவற்றைக் கேட்பதோடோ அல்லது அவற்றைக் கற்பிப்பதோடோ
நின்றுவிடக்கூடாது. மாறாக, அவற்றைக் கடைப்பிடித்துக் கற்பிக்கவேண்டும்.
அப்பொழுதுதான் ஒருவர் விண்ணரசில் பெரியவர் ஆகமுடியும். ஆகவே,
நாம் திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் கடைப்பிடித்து வாழ
முயற்சி செய்வோம். அதன்வழியாக இறைவன் தரும் மேலான ஆசியைப்
பெற்றுக்கொள்வோம்.
சிந்தனை
'உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக'
என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும்
நிறைவுபெறுகிறது' என்பார் தூய பவுல் (கலா 5:1). ஆகவே, திருச்சட்டத்தின்
நிறைவாகிய இறை மனித அன்பை நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் கடைப்பிடித்து
வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
சொல்லில் வீரர்களாக அல்ல, செயல்வீரர்களாக
வாழுவோம்.
முன்பொரு காலத்தில் ரோமாபுரியை ரெகுலஸ் என்ற மன்னன் ஆண்டுவந்தான்.
ஒருமுறை அவன் கார்தேஜ் நாட்டினரோடு (தற்போதைய துனிசியா)
போர்தொடுக்கச் சென்றபோது, அந்நாட்டுப் படைவீரர்களால்
சிறைபிடிக்கப்பட்டான்.
அவர்கள் மன்னன் ரெகுலசிடம், "நீ உன்னுடைய நாட்டவரிடம் சென்று,
கார்தேஜ் இனத்தவராகிய எங்களோடு இனிமேல் போர்தொடுக்காமல், அமைதி
வழியில் நடப்போம் என்ற வாக்குறுதியோடு வந்தால், உன்னை விடுதலைசெய்து
அனுப்புவோம். அதேநேரத்தில் உங்கள் நாட்டவர் எங்களோடு
போர்தொடுப்பதாக இருக்கிறார்கள் என்ற வாக்குறுதியோடு வந்தால்,
உன்னை சிரச்சேதம் செய்திடுவோம்" என்று சொல்லி அனுப்பினார்கள்.
மன்னன் ரெகுலஸ் இச்செய்தியை தன் நாட்டவரிடம் சொன்னபோது அவர்கள்,
அவரிடம், "இன்னும் ஒருசில நாட்களில் நாம் கார்தேஜை எளிதாக
வெற்றிகொண்டுவிடலாம். அதனால் அந்நாட்டவரின் வார்த்தைகளுக்கு அஞ்சி,
அங்கே போகவேண்டாம்" என்று அறிவுறுத்தினார்கள்.
ஆனால் மன்னனோ அவர்களிடம், "நான் கட்டயாம் அவர்களிடத்தில்
சென்று, நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் வாக்குதியைக்
காப்பாற்றவேண்டும். ஏனென்றால் நான் ஒரு உரோமையன். உரோமையன்
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவான்" என்று சொல்லி மன்னன்
ரெகுலஸ், கார்தேஜ் நாட்டவரிடம் சென்று, சிரச்சேதம் செய்ய தன்னை
அனுமதித்தான்.
"சொன்ன சொல்லின்படி வாழ்தல் என்பதைவிட மிகச்சிறந்த பேறு
வேறெதுவும் இல்லை" என்பர் நம் முன்னோர்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, நாம் இறைவார்த்தையை
போதிக்கும் போதனையாளர்களாக மட்டும் நின்றுவிடாமல், அதன்படி
வாழ்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். இயேசு
சொல்கிறார், "இக்கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி, அவ்வாறே மக்களுக்குக்
கற்பிக்கின்றவர் விண்ணரசில் மிகச்சிறியவர் எனக் கருதப்படுவார்.
இவையனைத்தையும் கடைபிடித்துக் கற்பிக்கின்றவரோ விண்ணரசில் மிகப்பெரியவர்
எனக் கருதப்படுவார்" என்கிறார்.
ஆகவே, நாம் ஒவ்வொருவரும் போதனையாளர்களாக மட்டும் நின்றுவிடாமல்,
வாழ்ந்து கற்பிக்கின்றவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான்
இறைவனின் பார்வையில் நாம் பெரியவர்களாக இருக்கமுடியும்.
இன்றைக்கு நம் மத்தியில் ஏராளமான போதனையாளர்கள்/போதகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் தாங்கள் போதிப்பதை வாழ்ந்துகாட்டும் போதகர்கள் இருக்கிறார்களா
என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. நம்முடைய முன்னாள் திருத்தந்தை
இரண்டாம் யோவான் பவுல் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார்,
"மக்கள் இன்றைக்கு போதனையாளர்களைவிட, சாட்சிய வாழ்வு வாழ்பவர்களையே
அதிகம் நம்புகிறார்கள். ஒருவேளை போதகர்களை மக்கள் நம்புகிறார்கள்
என்றால், அவர்கள் சாட்சிய வாழ்வு வாழ்கிறார்கள் என்று அர்த்தம்"
என்றார். ஆம் வாழ்ந்துகாட்டுபவர்களையே மக்கள் அதிகம் நம்புகிறார்கள்.
நற்செய்தி நூல்களில் ஆண்டவர் இயேசுவுக்கும் பரிசேயர்கள், மறைநூல்
அறிஞர்கள் மற்றும் திருச்சட்ட அறிஞர்களுக்கும் இடையே அடிக்கடி
பிரச்சனை ஏற்படக் காரணம் இயேசு அவர்களின் போலித்தனத்தைத்
சுட்டிகாட்டியதனால்தான். இயேசு அவர்களைப் பார்த்துச் சொல்வார்,
"இவர்கள் சொல்வார்கள், செயலில் காட்டமாட்டார்கள்" (மத் 23:3)
என்று. மாறாக ஆண்டவர் இயேசுதான் போதித்ததை வாழ்வாக்கினார்,
வாழ்வாக்கினத்தைப் போதித்தார். அதனால்தான் இன்றைக்கும் நாம்
அவருடைய வழியில் நடக்கும் மக்களாக இருக்கின்றோம்.
எனவே, நாம் இயேசுவைப் போன்று வாழ்வதைப் போதிப்போம். போதிப்பதை
வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|