Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   26  மார்ச் 2019  
                        தவக்காலம் 3ம் வாரம் செவ்வாய்- 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 1: 2, 11-19

அந்நாள்களில் அசரியா நெருப்பின் நடுவில் எழுந்து நின்று உரத்த குரலில் பின்வருமாறு மன்றாடினார்: உமது பெயரை முன்னிட்டு எங்களை என்றும் கைவிட்டு விடாதீர்; உமது உடன்படிக்கையை முறித்து விடாதீர். உம் அன்பர் ஆபிரகாமை முன்னிட்டும், உம் ஊழியர் ஈசாக்கை முன்னிட்டும், உம் தூயவர் இஸ்ரயேலை முன்னிட்டும், உம் இரக்கம் எங்களைவிட்டு நீங்கச் செய்யாதீர். விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் அவர்களின் வழிமரபினரைப் பெருகச் செய்வதாக நீர் அவர்களுக்கு உறுதி அளித்தீர்.

ஆண்டவரே, எங்கள் பாவங்களால் மற்ற மக்களினங்களைவிட நாங்கள் எண்ணிக்கையில் குறைந்துவிட்டோம்; உலகெங்கும் இன்று தாழ்வடைந்தோம். இப்பொழுது எங்களுக்கு மன்னர் இல்லை, இறைவாக்கினர் இல்லை, தலைவர் இல்லை; எரிபலி இல்லை. எந்தப் பலியும் இல்லை; காணிக்கைப் பொருளோ தூபமோ இல்லை; உம் திருமுன் பலியிட்டு, உம் இரக்கத்தைப் பெற இடமே இல்லை.

ஆயினும், செம்மறிக்கடாக்கள், காளைகளால் அமைந்த எரிபலி போலும் பல்லாயிரம் கொழுத்த ஆட்டுக்குட்டிகளாலான பலிபோலும் நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவோமாக. அவ்வாறே எமது பலி இன்று உம் திருமுன் அமைவதாக; நாங்கள் முழுமையாக உம்மைப் பின்பற்றுவோமாக; ஏனெனில் உம்மில் நம்பிக்கை வைப்போர் வெட்கத்திற்கு ஆட்படமாட்டார்.

இப்பொழுது நாங்கள் முழு உள்ளத்துடன் உம்மைப் பின்பற்றுகிறோம். உமக்கு அஞ்சி, உம் முகத்தை நாடுகிறோம். எம்மை வெட்கத்துக்கு உள்ளாக்காதீர்; மாறாக, உம் பரிவிற்கு ஏற்பவும், இரக்கப் பெருக்கிற்கு ஏற்பவும் எங்களை நடத்தும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:25: 4-5ab. 6-7bc. 8-9 (பல்லவி: 6a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்.

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். 5ab உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7bc உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவே 2: 12-13

இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர்.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21-35

அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?" எனக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம் கூறியது: "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.

உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, 'என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்' என்றான்.

அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, 'நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, 'என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.

ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையில் அடைத்தான்.

அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றை எல்லாம் விளக்கிக் கூறினார்கள்.

அப்போது தலைவர் அவனை வரவழைத்து, 'பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?' என்று கேட்டார்.

அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

கடவுளின் அற்புத திட்டம், நாம் மன்னிப்பு பெற நாம் முதலில் அதனை பிறருக்கு வழங்கிட வேண்டும். பிறருக்கு கொடுக்கும் மன்னிப்பை பொறுத்தே, நம்முடைய மன்னிப்பு அடங்கியுள்ளது. மன்னிப்போம்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21-35

மன்னிப்பே மகத்தான மருந்து

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவிற்கும், ஜப்பானுக்கும் இடையே நடந்த போரில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டு ஜப்பானில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையின் காரணமாக அவர்கள் இருவரும் ஜப்பான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, தங்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஆண்டுகள் பல உருண்டோடின. 1995 ஆம் ஆண்டு ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இரண்டு இராணுவவீரர்களும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்டார், "நம்மை சிறைபிடித்து வைத்திருந்த அந்த ஜப்பான் நாட்டு இராணுவ வீரர்களை மன்னித்துவிட்டாயா? என்று. அதற்கு அவர், "இல்லை, இல்லை என்னால் அவர்களை அவ்வளவு சீக்கிரமாக மன்னிக்க முடியவில்லை" என்றார்.

உடனே கேள்வி கேட்டவர் மற்றவரிடம், "உன்னால் அவர்களை இன்னும் மன்னிக்க முடியவில்லையா, அப்படியானால் இன்னும் நீ அந்தச் சிறையில்தான் இருக்கிறாய்" என்று முடித்தார்.

ஆம், நமக்கெதிராக குற்றம் செய்தவர்களை மன்னிக்காதபோது, நாம் இன்னும் சிறையில்தான் இருக்கிறோம் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு அழகாக எடுத்துரைக்கிறது. நற்செய்தி வாசகத்தில் சீமோன் பேதுரு ஆண்டவர் இயேசுவிடம், "ஆண்டவரே! என்னுடைய சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் எனக்கெதிராக குற்றம் செய்தால், நான் அவர்களை எத்தனை முறை மன்னிப்பது, ஏழுமுறையா?" என்று கேட்கின்றார். அதற்கு இயேசு, "ஏழுமுறை அன்று, எழுபது முறை ஏழுமுறை" என்கிறார். அதாவது நாம் ஒவ்வொருவரும் நிபந்தனையற்ற முறையில் மன்னிக்கவேண்டும் என்பதுதான் இயேசு நமக்கு உணர்த்த விரும்பும் பாடமாக இருக்கின்றது.

தொடர்ந்து ஆண்டவர் இயேசு கூறும் மன்னிக்க மறுத்த பணியாளனின் உவமை நம்மை இன்னும் ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது. கடவுள் நம்மை கணக்கற்ற விதமாய் மன்னிக்கிறார். ஆனால் நாமோ நம்மோடு வாழும் சக மனிதர்கள் செய்யும் சாதாரண குற்றத்தையும் பெரிதுபடுத்தி, அவர்களை மன்னிக்காமலே இருக்கிறோம் என்பதை இவ்வுவமை வேதனையோடு பதிவுசெய்கிறது.

விவிலியம் முழுமைக்கும், குறிப்பாக திருப்பாடல் 130:4 ஆம் வசனத்தில் படிக்கின்றோம், "கடவுள் மன்னிப்பு அளிப்பவர்" என்று. ஆகவே கடவுள் நம்மை அளவுகடந்த விதமாய் மன்னிப்பது போன்று, நாமும் பிறரை மன்னிக்க வேண்டும். இன்றைய நற்செய்தியின் இறுதிப்பகுதியில் இயேசு சொல்வார், "உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர், சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால், விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்" என்று. எனவே நாம் பிறர் செய்த குற்றங்களை மன்னித்து, இறைவனுக்கு ஏற்ற மக்களாக வாழுவோம்.

இங்கே மன்னிப்பதன் வழியாக நடக்கக்கூடிய அற்புதங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பல ஆண்டுகளாக நமக்கு இருக்கக்கூடிய உடல், மனப்பிரச்சனைகள் எல்லாம் பிறரை மன்னிப்பதன் வழியாக காணாமல் போய்விடுகிறது. "எல்லாரையும் மனதார மன்னிப்பதே ஒருவர் அவருக்குக் கொடுத்துக் கொள்ளும் மிகப்பெரிய கொடை" என்பார் மாயா ஆஞ்சலோ என்ற எழுத்தாளர் (It's one of the greatest gifts you can give yourself, to forgive. Forgive everybody).

ஆகவே, கடவுள் எப்படி நம்மை அளவுகடந்த விதத்தில் மன்னிக்கிறாரோ, அதுபோன்று நாமும் பிறர்செய்யும் குற்றங்களை மன்னித்து, அவர்களை ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
தானியேல் (இணைப்பு) 1: 2, 11-19

நம்மைக் கைவிடாத இறைவன்

நிகழ்வு

ஒரு சமயம் கடலில் சென்றுகொண்டிருந்த ஒரு பெரிய கப்பல், திடிரென்று வீசிய பெரும் புயலில் சிக்கி, மூழ்கத் தொடங்கியது. அதில் பயணம் செய்த எல்லாரும் இறந்துவிட, ஒரே ஒருவன் மட்டும் எப்படியோ உயிர்பிழைத்து, அருகிலிருந்த தீவில் கரையேறினான். கரையேறிவன் இறைவனை நோக்கி இவ்வாறு வேண்டினான்: "இறைவா! இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு... ஆள் அரவமற்ற இத்தீவில் எத்தனை நாட்களுக்குத்தான் நான் தனியாக இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா?"

இப்படி அவன் இறைவனிடம் வேண்டிவிட்டு, 'ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும்' என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான். நாட்கள் மெல்ல நகர்ந்தன. தீவில் தன்னைக் காத்துக் கொள்ள, அங்கு கிடைத்த பொருட்கள் மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் போன்றவற்றைக்கொண்டு ஒரு சிறிய குடிசை கட்டினான். குடிசையில் தன்னுடன் கரை ஒதுங்கிய பொருட்கள் மற்றும் உடைமைகளைப் பத்திரப்படுத்திக் கொண்டு, அவனும் அங்கு தங்கிக்கொண்டான். நாட்கள் சென்றாலும், இறைவன்மீது அவனுக்கு இருந்த நம்பிக்கை மட்டும் குறையவே இல்லை. அவன் மீண்டும் மீண்டுமாக, 'எனக்குக் கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நிச்சயம் உதவுவார்' என்று உறுதியாக நம்பினான்.

ஒரு நாள் அவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், கண்ட காட்சி அவனை அதிர்ச்சிக்குள்ளாகியது. ஏனென்றால், அவன் தங்கியிருந்த குடிசை தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது; அதிலிருந்து வானுயரத்திற்கு புகை கிளம்பிக்கொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த அவனுடைய உடைமைகள் யாவும் தீக்கிரையாகியிருந்தன. இதனால் அவன் கடற்கரை மணலில் அழுது புரண்டு இறைவனை நோக்கி மன்றாடினான், "இறைவா! நீ என்னைக் காப்பாற்றவேண்டும் என்றுதானே உன்னிடம் மன்றாடினேன்... நீ என்னவென்றால் என்னோடு இருந்ததையும் பறித்துக் கொண்டாயே! இது தான் உன் நீதியோ?" இதற்குப் பின்பு அவன் கடற்கரை மணலில் படுத்து அப்படியே தூங்கிவிட்டான்.

மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் அவனை எழுப்பியது. அவன் கரை ஒதுங்கியிருந்த தீவை நோக்கி அது வந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. 'யாரோ ஒருவர் நம்மைக் காப்பாற்ற வருகிறார்' என்று அவன் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தான். சிறிதுநேரத்தில் அந்தக் கப்பல் அவனிருந்த தீவின் கரையில் வந்து நின்றது. அதனுள்ளே இருந்த கப்பல் சிப்பந்திகள் அவனைக் கப்பலில் ஏற்றுக்கொண்டு பயணத்தைத் தொடங்கினார்கள். வழியில் அவன் அவர்களிடம், "நான் இத்தீவில் மாட்டிக் கொண்டிருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "தீவில் ஏதோ பற்றி எரிந்து, புகை எழும்பியதைக் கண்டோம்... யாரோ தீவில் கரை ஒதுங்கிக் காப்பாற்ற வேண்டி தீ மூட்டுகிறார்கள் போலும் என்று நினைத்தோம்... அதனால்தான் இங்கு வந்தோம்" என்றார்கள் .

அப்பொழுதுதான் அவன், 'இந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால், நம் நிலை என்னவாகியிருக்கும்" என்று யோசிக்கத் தொடங்கினான். அவசரப்பட்டு இறைவனை திட்டியதை நினைத்து மிகவும் வருந்தினான். பிறகு 'நான் வணங்கும் இறைவன் என்னைக் கைவிடவில்லை' என்று இறைவனுக்கு நன்றிசெலுத்தத் தொடங்கினான்.

இறைவன் தன்னுடைய மக்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. அதற்கு இந்நிகழ்வு மிகச் சிறந்த சான்றாக இருக்கின்றது.

மூன்று இளைஞர்களைக் கைவிடாமல் காப்பாற்றிய இளைஞன்

தானியேல் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேலைச் சார்ந்த சாத்ராக்கு, மேசாக்கு, ஆபத்நெகோ அதாவது (அசாரியா) ஆகிய மூன்று இளைஞர்களும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் எழுப்பிய பொற்சிலையை வணங்க மறுத்ததால் தீக்குள் தூக்கிப் போடப்படுகிறார்கள். தீக்குள் தூக்கிப் போடப்பட்ட அவர்கள் மூவரும் அலறித் துடிக்காமல், ஆண்டவரைப் போற்றிப் புகழ்கின்றார்கள். அதைவிடவும் ஆண்டவரின் தூதர் அத்தீச்சூளைக்குள் சென்று, அவர்கள் மூவரையும் எந்தவொரு ஆபத்தும் இன்றிக் காப்பாற்றுகின்றார்.

உண்மையான இறைவனைத் தவிர (விப 20: 2-5) வேற்று தெய்வங்களை வழிபடமாட்டோம் என்று மூன்று இளைஞர்களும் உறுதியாக இருந்ததால், கடவுள் அவர்களை எந்தவொரு ஆபத்தும் இன்றிக் காப்பாற்றுக்கின்றார். நாமும் கடவுளுக்கு மிகவும் பிரமாணிக்கமாக இருக்கின்றபோது, அவர் நம்மை எல்லா விதமான துன்பத்திலிருந்தும் காப்பாற்றுவார் என்பது உறுதி.

சிந்தனை

'சாவின் இருள்சூழ்ப் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேரிட்டாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்' (திபா 23:4) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகவே நம்மைக் கைவிடாத, நமக்கு எந்த ஆபத்தும் வராமல் காத்திடும் இறைவனுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
மத்தேயு 18: 21-35

நிபந்தனையின்றி மன்னிப்போம்

நிகழ்வு

நகரில் பெரிய நிறுவனம் ஒன்று இருந்தது. அந்நிறுவனத்தின் தலைவர் தனக்கெதிராகப் பெரும் துரோகம் செய்து, பிறகு மனம் வருந்திய அலுவலர் ஒருவரை, யாரும் எதிர்பாராத விதமாக மன்னித்தார். ஒருசிலர் அவரிடம், "அது தனிப்பட்ட துரோகமே தவிர நிறுவனம் சார்ந்த துரோகமல்ல என்பதால்தான் மன்னித்தீர்களா?" என்று கேட்டபோது, அவர் சொன்னார், "நான் ஆயிரம் தவறுகள் செய்த பிறகும் என்னை நான் மன்னித்து அன்பு செய்கிறேன். ஒரு தவறுக்காக ஒருவரைத் தண்டிப்பது என்ன நியாயம்?".

எவ்வளவு அர்த்தம் நிறைய வார்த்தைகள் இவை. உண்மையில் நாம் நம்முடைய குற்றங்களை மன்னிக்கின்றபோது, தந்தைக் கடவுள் நம்முடைய குற்றங்களை மன்னிக்கின்றபோது, பிறர் செய்த குற்றங்களை மட்டும் மன்னியாது இருப்போமெனில், அது அவ்வளவு உவப்புடைய செயலல்ல.

எத்தனைமுறை மன்னிப்பது?

நற்செய்தி வாசகத்தில், பேதுரு, "என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கெதிராகப் பாவம்செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்?" என்றொரு கேள்வியோடு இயேசுவிடம் வருகின்றார்.

பேதுரு, இயேசுவிடம் கேட்ட கேள்வியைக் கொண்டு இரண்டு விடயங்களைப் புரிந்துகொள்ளலாம். ஒன்று, அவர் தன்னை நேர்மையாளர் போன்று காட்டிக்கொள்ள விழைகின்றார் என்பதாகும். ஏனெனில், தன் சகோதரர் சகோதரிகள் தனக்கெதிராகப் பாவம் செய்துவந்தால்... என்று சொல்லும் அவர், நான் என் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால்... என்பதைச் சொல்ல மறுக்கின்றார். இதனால்மூலம் அவர் தன்னை நேர்மையாளர் போன்று நிரூபிக்க முயல்வது அப்பட்டமாகத் தெரிகின்றது. இன்னொன்று, 'இத்தனை முறை மன்னிக்கலாமா?' என்று பேதுரு கணக்குப் போட்டு மன்னிக்க விழைக்கின்றார்.

பேதுரு இயேசுவிடம், 'ஏழுமுறை மன்னிக்கலாமா?' என்று கேட்டதற்கும் ஓர் அர்த்தம் இருக்கின்றது. அது என்னவெனில், யூத இரபிக்கள், 'தவறும் செய்யும் ஒருவரை மூன்றுமுறை மன்னிக்கலாம்' என்று சொல்லிவந்தனர். இதை உள்வாங்கிக்கொண்ட பேதுரு, பெருந்தன்மையாக (!) மூன்றோடு மூன்றைச் சேர்த்து, அதோடு இன்னும் ஒன்றைச் சேர்த்து, ஏழுமுறை மன்னிக்கலாமா? என்று கேட்கின்றார். உடனே இயேசு அவரிடம், "ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை" என்று சொல்லி நிபந்தனையின்றி மன்னிக்கச் சொல்கின்றார். இதை விளக்க இயேசு ஓர் உவமையையும் சொல்கின்றார்.

கடனாளியாக இருந்த பணியாளர்

இயேசு சொல்லும் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமையில் வரும் பணியாளர், அரசரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டிருக்கின்றார். பத்தாயிரம் தாலந்து என்பது ஒருவரின் இருபது ஆண்டுகால ஊதியம். (தோராயமாக ஒரு கோடி என்று வைத்துக்கொள்ளலாம்). இவ்வளவு பெரிய தொகைக்குக் கடன்பட்டிருந்த பணியாளர், அரசரிடம் கெஞ்சிக் கேட்டதும், அவருடைய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்கின்றார். அவ்வளவு பெரிய தொகையைத் தள்ளுபடி செய்கின்றார் எனில், அந்த அரசர்/ கடவுள் எவ்வளவு இரக்கமிகுந்தவராகவும் மன்னிப்பதில் தாரளமானவராகவும் இருந்திருப்பார் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளவேண்டும்.

கடன்கொடுத்தவரான பணியாளர்

அரசரிடமிருந்து அவ்வளவு பெரிய தொகைக்கான கடனைத் தள்ளுபடி பெற்ற பணியாளர், வெளிய வந்து, தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்ட பணியாளரின் கழுத்தைப் பிடித்து நெரித்து, கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு கேட்கின்றார். ஒரு தெனாரியம் என்றால், ஒருநாள் கூலி. அப்படியானால் ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாய் ஊதியமாக வைத்தாலும் நூறு நாட்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்தான் வரும். ஒரு கோடி ரூபாய் எங்கிருக்கின்றது, ஐம்பதாயிரம் ருபாய் எங்கிருக்கின்றது. அவ்வளவு பெரிய தொகைக்கான கடனைத் தள்ளுபடி பெற்ற பணியாளர், தன்னிடம் நூறு தெனாரியம் கடன் பட்ட பணியாளருடைய கடனைத் தள்ளுபடி செய்யாது வருத்தத்திற்கு உரியதாக இருக்கின்றது.

சிறையில் அடைபட்ட பணியாளர்

பத்தாயிரம் தாலந்து கடன்பட்டிருந்த பணியாளர், அவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடியாகப் பெற்றுவிட்டு, தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த ஒருவருடைய கடனைத் தள்ளுபடி செய்யாததைக் கேள்விப்பட்ட அரசர், அந்த பொல்லாத பணியாரைச் சிறையில் அடைக்கின்றார். அரசரிடமிருந்து தாரளமாக மன்னிப்பைப் பெற்றுக்கொண்டு, தன்னிடம் குறைவாகக் கடன்பட்ட ஒரு பணியாளரை மன்னிக்காமல் போனதால், கடன்தொகையைச் திருப்பிச் செலுத்தும்வரை சிறையில் அடைக்கப்படுகின்றார்.

உவமையில் வரும் இந்த பொல்லாத பணியாளரைப் போன்றுதான் பலரும் இறைவனிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக்கொண்டு, அடுத்தவரை மன்னிக்காமல் இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்தி, மன்னிக்கக் கற்றுக்கொள்வது நல்லது.

சிந்தனை

'மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்' என்பார் இயேசு (லுக் 6:37). ஆகவே, இறைவன் நம்மை மன்னிப்பது போன்று, ஒருவர் மற்றவரை மன்னிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
மன்னிப்பே மகத்தான மருந்து

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவிற்கும், ஜப்பானுக்கும் இடையே நடந்த போரில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டு ஜப்பானில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையின் காரணமாக அவர்கள் இருவரும் ஜப்பான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, தங்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஆண்டுகள் பல உருண்டோடின. 1995 ஆம் ஆண்டு ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இரண்டு இராணுவவீரர்களும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்டார், "நம்மை சிறைபிடித்து வைத்திருந்த அந்த ஜப்பான் நாட்டு இராணுவ வீரர்களை மன்னித்துவிட்டாயா? என்று. அதற்கு அவர், "இல்லை, இல்லை என்னால் அவர்களை அவ்வளவு சீக்கிரமாக மன்னிக்க முடியவில்லை" என்றார்.

உடனே கேள்வி கேட்டவர் மற்றவரிடம், "உன்னால் அவர்களை இன்னும் மன்னிக்க முடியவில்லையா, அப்படியானால் இன்னும் நீ அந்தச் சிறையில்தான் இருக்கிறாய்" என்று முடித்தார்.

ஆம், நமக்கெதிராக குற்றம் செய்தவர்களை மன்னிக்காதபோது, நாம் இன்னும் சிறையில்தான் இருக்கிறோம் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு அழகாக எடுத்துரைக்கிறது. நற்செய்தி வாசகத்தில் சீமோன் பேதுரு ஆண்டவர் இயேசுவிடம், "ஆண்டவரே! என்னுடைய சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் எனக்கெதிராக குற்றம் செய்தால், நான் அவர்களை எத்தனை முறை மன்னிப்பது, ஏழுமுறையா?" என்று கேட்கின்றார். அதற்கு இயேசு, "ஏழுமுறை அன்று, எழுபது முறை ஏழுமுறை" என்கிறார். அதாவது நாம் ஒவ்வொருவரும் நிபந்தனையற்ற முறையில் மன்னிக்கவேண்டும் என்பதுதான் இயேசு நமக்கு உணர்த்த விரும்பும் பாடமாக இருக்கின்றது.

தொடர்ந்து ஆண்டவர் இயேசு கூறும் மன்னிக்க மறுத்த பணியாளனின் உவமை நம்மை இன்னும் ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது. கடவுள் நம்மை கணக்கற்ற விதமாய் மன்னிக்கிறார். ஆனால் நாமோ நம்மோடு வாழும் சக மனிதர்கள் செய்யும் சாதாரண குற்றத்தையும் பெரிதுபடுத்தி, அவர்களை மன்னிக்காமலே இருக்கிறோம் என்பதை இவ்வுவமை வேதனையோடு பதிவுசெய்கிறது.

விவிலியம் முழுமைக்கும், குறிப்பாக திருப்பாடல் 130:4 ஆம் வசனத்தில் படிக்கின்றோம், "கடவுள் மன்னிப்பு அளிப்பவர்" என்று. ஆகவே கடவுள் நம்மை அளவுகடந்த விதமாய் மன்னிப்பது போன்று, நாமும் பிறரை மன்னிக்க வேண்டும். இன்றைய நற்செய்தியின் இறுதிப்பகுதியில் இயேசு சொல்வார், "உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர், சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால், விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்" என்று. எனவே நாம் பிறர் செய்த குற்றங்களை மன்னித்து, இறைவனுக்கு ஏற்ற மக்களாக வாழுவோம்.

இங்கே மன்னிப்பதன் வழியாக நடக்கக்கூடிய அற்புதங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பல ஆண்டுகளாக நமக்கு இருக்கக்கூடிய உடல், மனப்பிரச்சனைகள் எல்லாம் பிறரை மன்னிப்பதன் வழியாக காணாமல் போய்விடுகிறது. "எல்லாரையும் மனதார மன்னிப்பதே ஒருவர் அவருக்குக் கொடுத்துக் கொள்ளும் மிகப்பெரிய கொடை" என்பார் மாயா ஆஞ்சலோ என்ற எழுத்தாளர் (It's one of the greatest gifts you can give yourself, to forgive. Forgive everybody).

ஆகவே, கடவுள் எப்படி நம்மை அளவுகடந்த விதத்தில் மன்னிக்கிறாரோ, அதுபோன்று நாமும் பிறர்செய்யும் குற்றங்களை மன்னித்து, அவர்களை ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!