Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   25  மார்ச் 2019  
                        தவக்காலம் 3ம் வாரம் திங்கள்- 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது.

அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-15

அந்நாள்களில் சிரியா மன்னனின் படைத் தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில் அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார்.

அவர் வலிமைமிக்க வீரர்; ஆனால் தொழுநோயாளி. சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்றபொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக்கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள்.

அவள் தன் தலைவியை நோக்கி, "என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்" என்றாள்.

எனவே நாமான் தம் தலைவனிடம் சென்று, "இஸ்ரயேல் நாட்டைச் சார்ந்த சிறுமி இன்னின்னவாறு கூறுகின்றாள்" என்று அவனுக்குத் தெரிவித்தார்.

அப்பொழுது சிரியா மன்னர், "சென்று வாரும். நான் இஸ்ரயேல் அரசனுக்கு மடல் தருகிறேன்" என்றார்.

எனவே நாமான் ஏறத்தாழ நானூறு கிலோ வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுகளையும், பத்துப் பட்டாடைகளையும் எடுத்துக்கொண்டு பயணமானார். அவர் இஸ்ரயேல் அரசனிடம் அம்மடலைக் கொடுத்தார்.

அதில் "இத்துடன், என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்புகிறேன். அவனது தொழுநோயை நீர் குணமாக்க வேண்டும்" என்று எழுதப் பட்டிருந்தது.

இஸ்ரயேல் அரசன் அம்மடலைப் படித்தவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "நானென்ன கடவுளா? உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் என்னால் இயலுமா? சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழுநோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே! என்னோடு போரிட அவன் வாய்ப்புத் தேடுவதைப் பார்த்தீர்களா!" என்று கூறினான்.

கடவுளின் அடியவரான எலிசா இஸ்ரயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்ட செய்தியைக் கேள்வியுற்று அவனிடம் ஆள் அனுப்பி, "நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும்" என்று சொன்னார்.

அவ்வாறே நாமான் தம் குதிரைகளுடனும் தேருடனும் எலிசா வீட்டு வாயில்முன் வந்து நின்றார். எலிசா, "நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும்" என்று ஆள் அனுப்பிச் சொல்லச் சொன்னார்.

எனவே, நாமான் சினமுற்று வெளியேறினார். அப்பொழுது அவர், "அவர் என்னிடம் வந்து, என் அருகில் நின்று, தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவியழைத்து, தொழுநோய் கண்ட இடத்தின்மேல் தம் கையை அசைத்துக் குணப்படுத்துவாரென்று நான் எண்ணியிருந்தேன். அபானா, பர்பார் என்ற தமஸ்கு நதிகள் இஸ்ரயேலில் உள்ள ஆறுகள் அனைத்தையும்விட மேலானவை அல்லவா? அவற்றில் மூழ்கி நான் நலமடைய முடியாதா?" என்று கூறி ஆத்திரமாய்த் திரும்பிச் செல்லலானார்.

அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி அவரிடம், "எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறி இருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, `மூழ்கி எழும்; நலமடைவீர்' என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன?" என்றனர்.

எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறு பிள்ளையின் உடலைப்போல் மாறினது.

பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, "இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்துகொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளும்" என்றார்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:42: 1. 2.; 43: 3. 4 (பல்லவி: திபா 42: 2a)
=================================================================================
 பல்லவி: என் நெஞ்சம் உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது.

42:1 கலைமான் நீரேடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. பல்லவி

42: 2 என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்? பல்லவி 43: 3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். பல்லவி

43: 4 அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். பல்லவி
 
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 130: 5.7

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். ஆண்டவரிடமே உள்ளது பேரன்பு; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எலியா, எலிசா என்பவர்களைப் போல் இயேசுவும் யூதர்களுக்கென்று மட்டும் அனுப்பப்படவில்லை.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 24-30

இயேசு நாசரேத்துக்கு வந்திருந்தபோது தொழுகைக்கூடத்தில் மக்களை நோக்கிக் கூறியது: "நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.

உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.

மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது."

தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
  புறக்கணிப்பும், ஏற்றுக்கொள்ளலும்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர். ஒருமுறை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தன்னுடைய சொகுசு காரிலே சாலைவழியாகப் போய்கொண்டிருந்தார். அப்போது வழியில் இரயில் கடந்து செல்வதன் பொருட்டு, கதவுகள் (Railwya Gate) பூட்டப்பட்டிருந்தன. இதனால் இவர் வண்டியை ஒரு ஓராமாக நிறுத்திவிட்டு, வெளியே வந்து, இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தார்.

அந்நேரத்தில் எம்.ஜி.ஆர். பயணம் செய்யும் செகுசுக் கார்தான் அங்கே இருப்பது என்பதை அறிந்த மக்கள் ஓடிவந்து அந்தக் காரை முற்றுகையிட்டார்கள். காருக்கு உள்ளே அவர் இருக்கிறாரா? என்று பார்த்துவிட்டு, அவர் இல்லையென்று தெரிந்ததும் சுற்றும், முற்றும் பார்த்தார்கள். மக்கள் தன்னைத்தான் தேடுகிறார்கள் என்பதை அறிந்துகொண்ட எம்.ஜி.ஆர் அவர்களிடம், "யார் வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "நாங்கள் எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்க்கவேண்டும்" என்றார்கள்.

தான்தான் எம்.ஜி.ஆர் என்பதைக்கூட மக்கள் அறிந்துகொள்ளவில்லையே என்று சூழ்நிலையைப் புரிந்துகொண்ட அவர், காரில் இருந்த தொப்பியையும், கண்ணாடியையும் எடுத்துமாட்டினார். இப்போது மக்கள் அனைவரும், "ஐய்! எம்.ஜி.ஆர் என்று ஆர்பரித்து மகிழ்ந்தார்கள். உடனே அவர் அவர்களிடம், "நீங்கள் கார், கண்ணாடி, தொப்பி இவற்றுக்கு மதிப்பளிக்கிறீர்களா? இல்லை எனக்கு மதிப்பளிக்கிறீர்களா? என்று கேட்டதும் அவர்கள் அமைதியானார்கள்.

எம்.ஜி.ஆர் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைத்த மக்கள் அவர் அத்தகைய அடையாளங்களுடன் இல்லாது இருப்பதைப் பார்த்துவிட்டு, அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அவரை முழுவதுமாகப் புறக்கணிக்கிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும்கூட ஆண்டவர் இயேசுவை "இவர் தச்சர் மகன் தானே?" என்று சொல்லிப் புறக்கணிக்கிறார்கள். அதனால்தான் இயேசு, "இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை" என்ற வேதனை நிறைந்த சொற்களை உதிர்க்கிறார்.

நமது அன்றாட வாழ்க்கையிலும் இத்தகைய புறக்கணிப்பு நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சமுதாயத்தின் கடைநிலையில் இருக்கக்கூடிய ஒருவர் வாழ்க்கையில் சாதித்துவிட்டால், "இவர் என்ன பெரிதாகச் சாதித்துவிட்டார்?" என்று உதாசினப்படுத்துகின்றோம் அல்லது நம்மோடு வாழக்கூடிய ஒருவரே உயர்ந்த பதவிகளை வகிக்கும்போது, "இவன் ஏதாவது இலஞ்சம் கொடுத்து இந்தப் பதவியைப் பெற்றிருப்பான்" என்று உதாசினப்படுத்துகின்றோம். இப்படிப்பட்ட உதாசினங்களுக்கும், புறக்கணிப்புகளுக்கும் அடிப்படைப் காரணமாக இருப்பது பொறாமை மட்டும்தான்.

பொறாமைதான் ஒருவரின் வளர்ச்சியைக் கண்டு மற்றவரை சஞ்சலப்படச் செய்கிறது. பொறாமைதான் ஒருவரை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுகிறது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் பிறரைப் பற்றி நம்மிடம் இருக்கக்கூடிய முன்சார்பு எண்ணங்கள், பொறாமைக் குணம் போன்றவற்றைக் களைந்துவிட்டு அவரை முழுமையாக ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.

கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "ஒரு குழந்தையின் கண்கொண்டு இந்த உலகத்தைப் பார்க்கவேண்டும்" என்று. ஆம், குழந்தையானது இந்த உலகத்தை அப்படியே பார்க்கும். அது ஒருபோதும் முன்சார்பு எண்ணத்தோடு பார்க்காது, பொறாமைக் கண்கொண்டு இந்த உலகத்தைப் பார்க்காது.

ஆகவே, இயேசுவின் சீடர்களாக இருக்ககூடிய நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் இருக்கும் குறுகிய எண்ணம், முன்சார்பு எண்ணம், பொறமைக் குணம் போன்றவற்றைக் களைந்துவிட்டு, அடுத்த மனிதர்களிடம் இருக்கும் நல்ல பண்புகளை பாராட்டும் மனதைப் பெற்று வாழ்வோம். அதோடு மட்டுமல்லாமல் ஒரு குழந்தையின் கண்கொண்டு மனிதர்களை, இந்த உலகினைப் பார்க்கப் பழகுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!